பேட்டி, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை 20 நிமிட வாசிப்பு

அரசமைப்பில் நிச்சயம் பாஜக கை வைக்கும்: ப.சிதம்பரம் பேட்டி

சமஸ் | Samas
24 Jun 2022, 5:00 am
2

நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸ் அதனுடைய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெரிய சரிவை சந்தித்திருக்கும் இந்நாட்களில், அதனுடைய மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால வியூகங்களைப் பற்றி விவாதிப்பதற்காக உதய்ப்பூரில் அதன் வியூக வகுப்பாளர்கள் மாநாடு சமீபத்தில் கூடியது. இந்த மாநாட்டில், காங்கிரஸ் விவாதிப்பதற்கான வியூக அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவர், விவாதங்களிலும் முக்கியப் பங்கு வகித்தவர் ப.சிதம்பரம். வியூக அறிக்கையில் பேசப்பட்டிருந்தது என்ன? மாநாட்டில் என்னவெல்லாம் விவாதித்தார்கள்? இனி காங்கிரஸுடைய நகர்வுகள் எப்படி இருக்கும்? நம்முடன் பேசுகிறார் ப.சிதம்பரம். 

காங்கிரஸ் உள்ளபடியாக மறுசீரமைப்புக்குத் தயாராக இருக்கிறதா? ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் என்றால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகான இந்த எட்டு ஆண்டுகளில், காங்கிரஸின் மறுசீரமைப்பைப் பற்றி பேசாத தாராள அறிவுஜீவிகள் இந்தியாவில் இல்லை; முன்வைக்கப்படாத தீர்வுகள் இல்லை. இவை நீங்கலாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மூலம் சமீபத்தில் காங்கிரஸ் ஓர் ஆய்வறிக்கையைப் பெற்றது. இப்போது உங்கள் கட்சிக்குள்ளேயே விவாதித்திருக்கிறீர்கள். நடைமுறையில் எந்த மாற்றமுமே கட்சியில் தெரியவில்லை. உள்ளபடியாகவே மறுசீரமைப்புக்குத் தயாராகத்தான் இருக்கிறதா காங்கிரஸ்?

இதுவரைக்கும் மாற்றங்கள் நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். காரணம், பெரும் பகுதி காங்கிரஸ்காரர்கள் எந்த மாற்றமும் இல்லாமலேயே, இந்தக் கட்சி ஒரு தேர்தலில் தோல்வி அடையும்; அடுத்தத் தேர்தலில் தானாக வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இது 2022இல் பொருத்தமற்ற ஒரு நம்பிக்கை. கட்சியில் மாற்றம் நடந்ததால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்பதை நான் உட்பட பலர் இன்று தெளிவாக உணர்கிறோம். உதய்ப்பூரில் இந்த உணர்வு பரவலாக எதிரொலித்தது. மாற்றத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரசாந்த் கிஷோருடன் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம் என்ன? காங்கிரஸ் கட்சியிடமே இல்லாத அளவுக்கான சில பயன் மிக்கப் புள்ளிவிவரங்களை அவர் அளித்ததாக நீங்களேகூட ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள். காங்கிரஸுக்கு அவர் கொடுத்த பரிந்துரைகள் என்ன? ஏன் அவருடனான உறவு முறிந்தது?

பல அரசியல் கட்சிகளுக்கு அவர் கன்ஸல்டன்ட் ஆக இருந்திருக்கிறார். அவர் சொன்ன முறை, அவர் சொன்ன விதம், அவர் ஆதாரம் காட்டிய தரவுகள், புள்ளிவிவரங்கள் இவை எல்லாம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. ஆனால், புரட்சிகரமான பரிந்துரைகள், கருத்துகள் என்று எதையும் சொல்ல முடியாது.

உதய்ப்பூர் மாநாட்டில் நீங்கள் முன்வைத்த அறிக்கையின் சாராம்சமும், விவாதப் பொருளும் என்ன?

அந்த அறிக்கையில் ஆறு பகுதிகள் இருந்தன. ஒரு பகுதி பொருளாதாரக் கொள்கை தொடர்பானது. அந்தக் குழுவுக்கு நான் தலைமை வகித்தேன். காங்கிரஸால் 1991இல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை ஒரு புரட்சிகரமான மாற்றத்தை இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தியது. ஆனால், அதற்குப் பின் 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் இதைப் பேச வேண்டும். இதுதான் கட்சிக்குப் பொருளாதாரரீதியிலான என்னுடைய குழு கொடுத்த முக்கியமான பரிந்துரை. இதுபோல பல விஷயங்களையும் விவாதித்தோம். கட்சியில் அமைப்புரீதியாக மாறுதல்கள் வேண்டும் என்ற பரிந்துரை பரவலாகப் பேசப்பட்டது. உதாரணமாக, 2024 முதலாகத் தேர்தலில் நிற்க வயது உச்ச வரம்பை அமலாக்க வேண்டும்; கட்சி அமைப்புகளில் குறைந்தது 50% பதவிகளை 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்; ஒருவர் ஒரு பதவியைத்தான் வகிக்கலாம் இப்படி நிறைய விஷயங்கள். அவற்றில் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் கட்சிக்குள் இன்று பேசப்படும் பெரிய விமர்சனம் கட்சிக்குத் தலைமையைக் குறிவைக்கிறது. குறிப்பாக, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்திற்கு அன்றாடம் வருவதில்லை; கட்சித் தலைமையைத் தொடர்புகொள்வதில் தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்களுக்கே பெரிய சிரமம் இருக்கிறது; எந்த விஷயத்திலும் முடிவெடுப்பதில் தாமதம் நிலவுகிறது என்றெல்லாம் பேசப்படும் பல விஷயங்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய இடத்தில் காங்கிரஸ் தலைமை இருக்கிறதா?

நான் உள்பட எல்லோருமே தங்களுடைய பழைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஏனென்றால், கட்சியினுடைய செயல்பாடுகளில் மிகப் பெரிய குறைபாடுகள் இருந்ததால்தான் இரண்டு தேர்தல்களில் தோற்றோம். ஆனால், தோல்விகளுக்கான மொத்த பழிகளையும் ஒரு தனிநபர் மேல் போட முடியாது. தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது ராகுல் வேலையா என்ன? எங்கெங்கெல்லாமோ சறுக்கியிருக்கிறோமே! அரசியல் கட்சியில் எல்லாமே கூட்டுப் பொறுப்புதான்.

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? ராகுலே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா?

நேரு குடும்பத்திலிருந்துதான் அடுத்த தலைவர் வருவாரா, இல்லையா என்பதைக்கூட என்னால் சொல்ல முடியாது. வரலாம், வராமலும் போகலாம். ஆனால், ஒரு விஷயம். காங்கிரஸ் தலைவராக யார் வர வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; ஊடகங்களோ, எதிர்க்கட்சிகளோ, முக்கியமாக இன்றைய ஆளும்கட்சியான பாஜகவோ தீர்மானிக்க முடியாது. இரண்டு நாட்கள் தொகுதிக்குச் சென்றுவிட்டு இன்றுதான் சென்னை திரும்பினேன். எந்த ஊருக்குச் சென்றாலும், கட்சிக்கு நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ராகுல் காந்தி வர வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொருத்த அளவில் அவர்களுடைய உணர்வுதான் முக்கியம். யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதன் விளைவுகளைக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். விளைவுகள் நல்லபடி வந்தால் மகிழ்ச்சி.

காங்கிரஸில் ஐம்பது ஆண்டுகள் அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. அமைப்புரீதியாக, நாடு முழுக்கப் பயணித்திருக்கிறீர்கள். இந்த ஐம்பதாண்டுகளில் இந்திய அரசியல் பரப்பு எப்படி மாறி இருப்பதாக நினைக்கிறீர்கள்? காங்கிரஸ் எதை இழந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் இளைய சமுதாயம் ஒரு சித்தாந்தத்தின், கொள்கையின் அடிப்படையில், கட்சியில் சேருவதும் அரசியலில் ஈடுபடுவதும் இன்று அரிதாகிவிட்டது. ஒருகாலத்தில் சோஷலிஸம் என்ற ஒரு சொல் போதும். நான் உட்பட எவ்வளவு இளைஞர்கள் இடதுசாரி இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டோம்! இந்தத் தலைமுறையின் குணம் மாறியிருக்கிறது என்பதோடு, இந்தத் தலைமுறையை அப்படி ஈர்க்கும் ஒரு சொல் காங்கிரஸிடமும் இல்லை; எந்தக் கட்சியிடமும் இல்லை.

இங்கே இந்துத்வா என்ற ஒரு சொல்லை பாஜக வைத்திருக்கிறது, அதில் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அது பொல்லாத ஒரு தத்துவம்; விஷமான தத்துவம் என்று நான் நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி எந்தத் தத்துவத்தை, எந்த மையக் கருத்தை, எந்தச் சொல்லைக் கொண்டு, இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

உதய்ப்பூரில் நான் பரிந்துரைத்தது, ‘எல்லாருக்கும் வேலை!’

இந்தியாவில் இன்று 15-65 வயதுக்குட்பட்டவர்களில், அதாவது வேலை செய்யும் தகுதி மிக்கவர்களில், 40% பேர்தான் ஏதேனும் வேலை பார்க்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள். இது மிகக் குறைவான ஒரு விகிதம். அமெரிக்கா, சீனாவில் இந்த எண்ணிக்கை 60% ஆக இருக்கிறது.

இதன் விளைவு என்னவென்றால், இந்தியாவின் மொத்த உற்பத்தி ஏறத்தாழ 50% இதன் காரணமாகவே முடங்கியிருக்கிறது. ஆக, வேலையை முன்னிறுத்திப் பேச வேண்டும் என்பது என் கருத்து. பலரும் இப்படிப் பல கருத்துகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

உலகளாவிய உதாரணங்கள் ஒரு சித்தாந்த அரசியலை இன்னொரு சிந்தாந்த அரசியலால்தான் எதிர்கொள்ள முடியும் என்பதையே நமக்குச் சொல்கின்றன. இந்துத்துவம் போன்ற ஒரு தீவிரமான சித்தாந்த அரசியல் முழக்கத்தை, வேலை என்கிற நடைமுறை அரசியல் முழக்கம் கொண்டு எதிர்கொண்டுவிட முடியும் என்று நம்புகிறீர்களா?

சித்தாந்த அரசியலை சித்தாந்த அரசியலால்தான் வெல்ல முடியும் என்பதில் எனக்கு ஐயம் கிடையாது. கட்சிகளுடைய அடையாளத்தையே புதுப்பித்து வென்ற உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். பிரிட்டனில் தொழிலாளர் கட்சியுடைய பெயரையே புதிய தொழிலாளர் கட்சி என்று பெயர் மாற்றினாரே டோனி பிளேயர்! அதேபோல, வெள்ளையர்கள் பெரும்பான்மை நிறைந்த அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா இரண்டு தேர்தல்களை வென்றார். அவர் கையில், ஒரு மைய கருத்து இருந்தது. இன்றைய பாஜகவின் சித்தாந்தத்தை அகற்ற வேறு ஒன்று வேண்டும்; எல்லோரும் தேடுகிறார்கள். நான் வேலை என்று சொல்கிறேன். இவர்களுடைய பொருளாதாரத் தோல்விகளை அது மக்களுக்குப் பிரகடனப்படுத்தும்!

உதய்ப்பூர் மாநாட்டை ஒட்டிய உங்களுடைய கருத்துகளில் ஒன்று முக்கியமானதாக எனக்குப் பட்டது. காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்தில் இருந்து பழகிவிட்டதாலேயே கட்சி செயல்பாடு எனும் பண்பாடு என்பது கட்சியில் காணாமல் போய்விட்டது என்று கூறியிருந்தீர்கள். அதேபோல, ஆளுங்கட்சியாகவே இருந்துவிட்டதால் துடிப்பான எதிர்க்கட்சியாக எப்படிச் செயல்பட வேண்டும் என்ற பண்பையே அது மறந்துவிட்டதாகவும் கூறியிருந்தீர்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து என்னுடைய கேள்வியை நீட்டிக்கொள்கிறேன். எதிர்கட்சியாகவே இருந்து தோய்ந்துபோன கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இன்று ஸ்தம்பித்து நிற்கின்றன. உலகெங்கும் போராட்ட வடிவங்களும் மாறியிருக்கின்றன. இத்தகு சூழலில் காங்கிரஸுக்கு எப்படிப்பட்ட எதிர்க்கட்சிப் பண்பைக் கொடுக்கப்போகிறீர்கள், எத்தகுப் போராட்ட வடிவத்தை அது கையில் எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

போராட்டத்தின் வடிவமும் மக்களுடைய பண்பும் மாறியிருப்பதைப் பார்க்கிறோம். சமூகவலைதளங்கள் வழியாக, இணையம் வழியாக, சின்ன பத்திரிகைகள் வழியாக இன்று எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன. மக்கள் பேசுகிறார்கள். ஆனால், பெட்ரோல் நிலையங்களில் இந்த அரசை சபித்தபடி வண்டியில் பெட்ரோல் போட்டுச்செல்லும் அதே மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாங்கள் களத்தில் இறங்கி சாலையில் நின்று போராடினால், சும்மா பார்த்தபடி கடந்துபோகிறார்கள். கொதிக்கும் வெயிலில் கொடிகளோடு முந்நூறு பேர் நிற்கிறார்கள்; நமக்காகப் போராடுகிறார்கள்; ஒரு பத்து நிமிஷம் நாமும் அதில் பங்கேற்றுப் போகலாம் என்ற நிலை இன்று இல்லை. அது எப்படியாயினும் போராட்டங்கள் எதிர் அரசியல் செயல்பாட்டின் முக்கியமான அங்கம். எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிக்கான துடிப்போடு செயல்பட்டால்தான் ஒரு கட்சி பிற்பாடு ஆளுங்கட்சியாக வர முடியும்.

இதுவரையிலான வரலாற்றில், அரைக் கூட்டாட்சி அல்லது அரை ஒற்றையாட்சி என்று இந்திய அரசமைப்பைப் போலவே காங்கிரஸின் அரசியலும் இருந்திருக்கிறது. இப்போது பாஜக துருவ அரசியலைத் தேர்ந்தெடுத்துவிட்டது. முழுமையாக ஒற்றையாட்சி பக்கம் சாய்ந்திருப்பதோடு, இந்திய நாட்டையும் அது நோக்கி பாஜக இழுக்கிறது. அப்படியென்றால், சித்தாந்தரீதியாக அதை எதிர்கொள்ள காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. துருவ அரசியலில் நேர் எதிர் இடம்தான் அது. ஒற்றையாட்சி தன் இடம் என்று பாஜக தீர்மானித்தால், கூட்டாட்சி தன் இடம் என்று காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டும். ஒற்றைத்துவம் தன் வழி என்று பாஜக தீர்மானித்தால், பன்மைத்துவம் தன் வழி என்று காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டும். இந்தியா எனும் கருத்தைப் பாதுகாப்பதற்கு தார்மிகரீதியில் காங்கிரஸ் எடுக்க வேண்டிய நிலைப்பாடும் இதுவே. ஆனால், காங்கிரஸுக்கு இதில் குழப்பம் இருக்கிறதா? ஏன் கேட்கிறேன் என்றால், சமீபத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘இந்திய அரசமைப்பைக் கூட்டாட்சியை மையப்படுத்தியதாகத் திருத்த வேண்டும்’ என்று பேசியபோது, அவருக்கு எதிராகக் கடுமையாகப் பேசியதும், அவர் மீது தேச விரோதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசியது பாஜக இல்லை; அங்குள்ள காங்கிரஸ் தலைவர். மாநில அளவிலான பொறுப்புகளில் இருப்பவர்களே இப்படி இருக்கிறார்கள் என்றால், ராகுலோ, நீங்களோ பேசும் கூட்டாட்சிக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?    

இல்லை. உள்ளூர் அளவில் இப்படி யாராவது பேசலாம். கட்சித் தலைமை இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. மாநிலங்கள் இல்லாமல், மாநிலங்களுக்கான உரிய அதிகாரங்கள் இல்லாமல், கூட்டாட்சி இல்லாமல் இந்தியாவை நடத்த முடியாது; இந்தியா சின்னாபின்னமாகிவிடும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அதிகாரங்களும் மேலும் கூட்டப்படும். கூட்டாட்சியில் அக்கறை இல்லாத கட்சி அல்ல காங்கிரஸ். ராஜீவ் காலத்தில் மக்களவையில் 420 உறுப்பினர்களோடு சர்வ பலத்தோடு இருந்த காலத்தில்தான் அரசமைப்புச் சட்டத்தில் 73 – 74 ஆவது திருத்தங்களை அறிமுகப்படுத்தி, நரசிம்ம ராவ் காலத்தில் நிறைவேற்றினோம்; மாநிலங்கள் வழி உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொண்டுசென்றோம் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். கூடுதலாக நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசமைப்புச் சட்டம் மேலும் திருத்தப்பட்டு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு, இந்திய வரலாற்றில் நேருவுக்கு அடுத்து பெரிய அளவில் செல்வாக்கைச் செலுத்துகிறார் பிரதமர் மோடி. அரசியல் எதிரியாக அவருடைய பெரிய பலம், பலவீனம் என்று நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?

வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி அந்த வரிசைதான். ஆனால், நீங்கள் சொல்வதுபோல நாடு முழுவதும் மோடிக்குச் செல்வாக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாடு தழுவிய செல்வாக்கு என்பது காந்திக்குப் பொருந்துவது, நேருவுக்குப் பொருந்துவது. மோடியின் செல்வாக்கு இந்தி பேசும் அல்லது இந்தி சார்ந்த மொழிகள் பேசும் மாநிலங்களுக்கு உட்பட்டது. தனிமனிதர் எனும் முறையில் அவருக்கு ஈடாக இந்த மாநிலங்களில் ஆள் இல்லை என்பது உண்மை. ஆனால், தோற்கடிக்க முடியாதவர் அவர் என்று நான் நம்பவில்லை.

இந்தியா எனும் கருத்துக்கு பாஜக ஆட்சி ஏற்படுத்தி இருக்கக்கூடிய மிகப் பெரிய சேதம் என்று எதைச் சொல்வீர்கள்?

வரலாறு நிச்சயம் எழுதும், இந்திய மக்களை மதரீதியாக பிளந்ததுதான் பாஜக ஏற்படுத்திய மிகப் பெரிய சேதம், நாட்டுக்கு அது இழைத்த மிகப் பெரிய துரோகம். இந்துவல்லாத மதத்தினரை இரண்டாம் குடிமக்களாக அது நடத்த முற்படுவது பெரிய மோசம்.

நீங்கள் பிளவு அரசியல் தொடர்பில் பேசும்போது, மதரீதியோடு மட்டும் அது நிற்கவில்லை; இந்துக்கள் – இந்துக்கள் அல்லாதோர் என்பதோடு, இந்துக்களுக்குள்ளும் பிராமணர் – பிராமணரல்லாதோர்; தலித் – தலித்தல்லாதோர் என்று பிளவுகள் கூர்மை பெற்றிருக்கின்றன. இந்தப் பிளவுகளைத் தேர்தல் அரசியலால் மட்டும் எதிர்கொண்டுவிட முடியாது. பண்பாட்டுத் தளத்தில் எதிர்வினை வேண்டும். காங்கிரஸிடம் என்ன திட்டம் இருக்கிறது?

பண்பாட்டுத் தளத்தில் என்ன மாதிரியான காரியங்கள் செய்ய முடியும் என்று சொல்வதற்கு நான் அந்தத் துறையில் ஆழ்ந்த நிபுணனும் இல்லை; மாணவனும் இல்லை. ஆனால், இதையெல்லாமும் பொருளாதாரரீதியிலான தீர்வுகள் வழியாக எதிர்கொள்ள முடியும் என்று நம்பியே ‘வேலை!’ எனும் முழக்கத்தைச் சொன்னேன். அடுத்தது, சமத்துவம். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் என்று ஒன்று கிடையாது. ஆனால், ஏற்றத்தாழ்வுகள் இடையிலான இடைவெளி இந்தியாவில் ரொம்ப மோசமாக இருக்கிறது. 147 பேர் ஒரு ஆண்டுக்குள் ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடிக்குத் தங்களோட செல்வத்தைப் பெருக்கியிருக்கிறார்கள்; ஏறத்தாழ 23 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ‘இந்தியாதான் ஏற்றத்தாழ்வுகளை மிக மிக அதிகமாகக் கொண்ட நாடு’ என்று டாக்டர் பிக்கட்டி எழுதுகிறார். இதைக் குறைக்க வேண்டும். இந்த விவகாரத்தை மையப்படுத்திப் பேசும்போது பிளவரசியலுக்கு அது பதிலடி கொடுக்கும்.

நேரு காலத்திலிருந்து எடுத்துக்கொண்டால், மதரீதியான பிளவுகளை எதிர்கொள்ள காங்கிரஸ் தீவிரமான எதிர்வினைகளை ஆற்றுகிறது. சாதிப் பிளவுகளுக்கு எதிராக காங்கிரஸ் அப்படி எதிர்வினை ஆற்றியதாகச் சொல்ல முடியாது. இன்றைக்கு மோடி – ஷா காலத்தில் ‘பார்ப்பன பனியா கட்சி’ எனும் இடத்திலிருந்து பாஜக பெருமளவு மாறியிருக்கிறது; பல இடங்களில் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அது அடையாளபூர்வமானதா, உண்மையான அதிகாரமா என்பது தனி விஷயம். காங்கிரஸ் இதற்கெல்லாம் எந்த அளவுக்குக் கண் கொடுக்கிறது? குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரத்தையோ, பிராமணியத்தையோ காங்கிரஸ் உடைத்துப் பேசும் இடத்துக்கே வரவில்லையே?

பாஜக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது. கட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடம் தந்திருக்கிறார்கள்; நான் மறுக்கவில்லை; ஆட்சியில் உண்மையில் அதிகாரத்தில் தரவில்லை. ஆட்சியாளர்களில், அதிகாரிகளில் கேந்திரமான இடங்களில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று பாருங்கள். நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 20% பேர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; ஒரு முஸ்லிம் வேட்பாளரை பாஜக நிறுத்தவில்லை. இது நேரடியாக என்றால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான அதிகார மறுத்தல் என்பது மறைமுகமாக நடக்கிறது. ஓர் உதாரணம், மத்திய அரசின் ‘கேபினட் கமிட்டி அண்டு செக்யூரிட்டி கமிட்டி’களை எடுத்துக்கொள்ளுங்கள். பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஐந்து பேர் அதில் இருப்பார்கள்; நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் குழு. காங்கிரஸ் ஆட்சியில் யார் இருந்தார்கள்? நான் சொல்கிறேன். மன்மோகன் சிங், ஏ.கே.ஆன்டனி, சுசில்குமார் ஷிண்டே, சல்மான் குர்ஷித், ப.சிதம்பரம். ஐந்து பேரும் ஐந்து விரல்கள் மாதிரி. கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், உங்கள் மனதில் பன்மைத்துவ உணர்வு இருக்க வேண்டும். இன்றைக்கு அந்த இடங்களில் யார் இருக்கிறார்கள்?

தமிழ்நாட்டில் இன்று ஒரு கவனிக்கத்தக்க மாற்றம் நிகழ்கிறது. பாஜகவுக்கு எதிராக இந்தியா முழுக்க பல்வேறு கட்சிகளும் செயல்பட்டாலும், தமிழ்நாடு மட்டுமே சித்தாந்த அடிப்படையில் ஒரு மறு உள்ளடக்கத்தை உருவாக்க முற்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் திமுக, அதிமுகவும் மாறி மாறி ஆண்டதால், கிட்டத்தட்ட அவர்களிடமும் நடைமுறை அரசியல் பண்பு ஊறிவிட்டாலும், இப்போது சித்தாந்த அரசியல் நோக்கி திமுக நகர்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு முன்னெடுக்கும் பல விஷயங்களில் – ஓர் உதாரணத்துக்கு அர்ச்சகர்கள் நியமனம் - அபிராமணத்தன்மையைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் அப்படி ஒரு உள்ளடக்கத்தைச் சிந்திக்கிறதா?

உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன். திமுக அரசு பிராமணியத்தை எதிர்த்து ஒரு நிலையை உருவாக்குகிறது என்பதை நான் மறுக்கிறேன். பிராமணியம் எனும் சர்ச்சை முடிந்துவிட்டது. கலைஞருடைய முதல் ஆட்சியிலேயே அந்த சர்ச்சை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளற வேண்டியது இல்லை. திமுக என்ன ஒரு புதிய உத்தியைக் கையாளுகிறது என்றால், தன்னுடைய அணுகுமுறைக்கு ஒரு லேபில், ஒரு பிராண்டை உருவாக்குகிறது. திராவிட மாடல் என்பது ஒரு மார்க்கெட்டிங் உத்தி. அதில் தவறு  இல்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொல்கிறார், தெலங்கானா மாடல்; முன்பு மோடி சொன்னார் குஜராத் மாடல்; அது மாதிரி இது திராவிட மாடல். சில விஷயங்களில் பெரியார், அண்ணா போன்ற அதன் முன்னோடிகள் சொன்ன சில ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். கோயிலில் வரவு செலவு ஒழுங்காக நடக்கிறதா என்று ஒரு அரசு நிர்வாகரீதியாகக் கண்காணிப்பதுபோலத்தான் அது. ஆனால், பிராமணியத்தையோ, இந்து சமயத்தையோ எதிர்த்து எதையும் திமுக செய்திடவில்லை.   

இந்த இடத்தில் குறுக்கிட வேண்டும் என்று நினைக்கிறேன். பிராமணியம் சம்பந்தமான என்னுடைய கேள்வி பிராமணர்களை மையப்படுத்தியது இல்லை; மாறாக சனாதனத்தை மையப்படுத்தியது. அதாவது, அதிகாரப்படிநிலையாக்கம் கொண்டதாக நிறுவப்பட்டிருக்கும் நம்முடைய சாதிய அமைப்பையும் அதன் மேலாதிக்கப் பண்பையுமே நான் குறிப்பிடுறேன். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி நாடு முழுக்க மத அடிப்படைவாதமும் பிளவும் சமூகத்தில் ஊடுருவியிருக்கிறதோ, அப்படி பிராமணியமும் தலைவிரித்து ஆடுகிறது. யாராலும் இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். திமுக இதில் குறுக்கிடுகிறது. அப்படி காங்கிரஸுக்கு இதை எதிர்கொள்ள என்ன திட்டம் இருக்கிறது? காங்கிரஸ் இது தொடர்பில் பேசுவதே இல்லை; அது எப்போது பேசும்?

நீங்கள் சனாதனம் என்று சொல்லும்போது மதத்தை மட்டும் குறிப்பிடவில்லை; ஜாதியையும் குறிப்பிடுகிறீர்கள். ஆமாம். ஜாதியமும், மதவாதமும் சேர்ந்ததுதான் சனாதனம். ஆக சனாதனத்தை மீண்டும் பரப்புகிறார்கள் என்றால் அதை எதிர்க்கத்தான் வேண்டும்.

நீங்கள் அரசமைப்புச் சட்டத்தை அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசும் ஒருவர்; வழக்குரைஞரும்கூட. அரசமைப்புச் சட்டத்தில் பெரிய மாறுதல்கள் எதையுமே பண்ணாமலேதான் இன்றைக்கு மோடி அரசு ஜனநாயகத்தின் மீது பல தாக்குதல்களையும் நிகழ்த்தியிருக்கிறது அல்லது அப்படியான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. அப்படியென்றால், ஏற்கெனவே இருக்கக்கூடிய அமைப்புதான் இதற்கெல்லாம் இடம் கொடுத்திருக்கிறது. அப்படியென்றால், இவ்வளவு காலமும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என்பதை ஏற்கிறீர்களா?

பங்கு கிடையாது எங்களுக்கு. எங்களைப் பொருத்த அளவில் எல்லா ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். மூன்றிலே இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் நிச்சயமாக அரசமைப்பை மாற்றக்கூடிய ஒரு அரசுதான் இது. அந்தப் பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை என்பதால் கரையை அரிப்பதுபோல் அரிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் ஒரு அவைதான் இன்றைக்கு பல சட்டங்களையும் நிறைவேற்றுகிறது; ‘நிதி மசோதாக்கள்’ மாநிலங்களவை அதிகாரத்துக்குள் வராது; இதையே சாக்காக வைத்துக்கொண்டு எல்லா மசோதாக்களையும் ‘நிதி மசோதா’ என்கிற பெயரில் கொண்டுவந்து நிறைவேற்றுகிறார்கள். அப்புறம், நாடாளுமன்றம் இயற்றிய பல சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை. விவசாய சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் விரோதமானவை. தேர்தல் பத்திரம், பணமதிப்புநீக்க நடவடிக்கை, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து இப்படிப் பல நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. இவற்றையெல்லாம் எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறோம்; நீதிமன்றத்தில் நிலுவையில் நிற்கிறதே! நாங்கள் எதிர்த்து நிற்கிறோம்.

வரவிருக்கும் 2024 தேர்தலில் மீண்டும் ஒருவேளை பாஜக வென்று ஆட்சிக்கு வருமானால், இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அது கை வைக்கக்கூடும் என்கிற அச்சம் பலரிடம் இன்று உள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்படுமானால், அதை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை இந்திய அரசமைப்புக்கு எந்த அளவுக்கு இருக்கிறது; காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு இருக்கிறது; இந்தியச் சமூகத்துக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

மோடி ஒருமுறை பேசும்போது ‘ஜாதிதான் இந்தியத்தன்மை!’ என்று பேசினார். நான் உடனே ‘குடியுரிமைதான் இந்தியத்தன்மை!’ என்று மறுத்து எழுதினேன். இந்திய அரசமைப்பை ஏற்றுக்கொண்டவர்கள் எல்லாம் இந்தியர்கள்தான். இந்த அரசமைப்புதான் நம்மை, இந்தியாவைப் பிணைக்கிறது. ‘எல்லாரும் சமம்’ என்பதே அதன் அடிப்படை. இன்றைக்கு அந்த அரசமைப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அரசமைப்பில் பாஜக கை வைக்கும். அப்படியென்றால், அரசமைப்பைக் காக்கும் கடமை இந்த அரசமைப்பை நம்பும் ஒவ்வொருவருக்கும் உண்டு. இன்றைக்கு பல இடங்களில் பாஜகவைத் தோற்கடிக்கக்கூடிய நிலையில் மாநில கட்சிகள் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி வெல்லக்கூடிய இடங்களும் இருக்கின்றன. மாநிலக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கை கோத்து எதிர்த்தால்தான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்; காங்கிரஸ் துணையின்றி ஏனையோரும், ஏனையோர் துணையின்றி காங்கிரஸும் பாஜகவை வீழ்த்திட முடியாது என்பதே இன்றைய நிதர்சனம். அரசமைப்பைக் காப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் வீறுகொண்டு எழும் என்று நான் நம்புகிறேன்!

தொடர்புடைய இணைப்பு | இந்தப் பேட்டியின் காணொளி வடிவம்

https://www.youtube.com/watch?v=lg0AYauS9-Q

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Prabhakar Muthusamy   2 years ago

திரு. ப.சிதம்பரம் அவர்கள் அருஞ்சொல் -க்கு அளித்த பேட்டியில், ப.ஜ.க. நிச்சயம் அரசியல் சட்டத்தில் கைவைக்கும் என்று கூறியுள்ளார். அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த 26-01-1950 முதல் திரு.மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 64 ஆண்டுகளில் 98 முறை அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திரு. மோடி அவர்களின் 8 ஆண்டுகள் ஆட்சியில் 7 முறை அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. காலங்கள் மாறும்பொழுது தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வார்கள். இது ஜனநாயக நாடுகளில் நடைபெறும் ஒரு சாதாரண விஷயம் என்பது அரசியல் அறிந்த எல்லோருக்கும் தெரியும். "மோடி அரசியல் சட்டத்தில் கை வைப்பார்" என்பது அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றுவதற்காக, பயமுறுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களை உச்சநீதிமன்றம் செல்லாது எனக்கூறி ரத்து செய்துள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்புக்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் அந்த சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்படும். சமீபத்திய உதாரணம் - ஆதார் அட்டை அவசியம் என்ற சட்டம் 2018 - ல் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆகையால் அரசியல் சட்டத்தை யார் திருத்தினாலும் அது அரசியல் சட்டத்தின் framework - ஐ மீறுவதாக இருந்தால் அந்த சட்டம் செல்லாது. திரு. ப. சிதம்பரம் போன்றவர்களின் பேட்டி சாதாரணமானவர்களுக்கு அரசியல் கற்றுக்கொடும் படியாக இருக்கவேண்டுமேயன்றி உண்மைக்கு புறம்பானவற்றை மக்களுக்கு புகட்டுவதாக இருக்கக்கூடாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

மதங்களுக்கிடையிலும் ஒரு மதத்தினருக்குள்ளும் பிளவுகள் கூர்மைப் படுத்தப் படுவதற்கு பண்பாட்டு தளத்தில் சரியான எதிர்வினை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வாசிப்புச் சூழல்சாதியம்பட்டினிதேசிய அடையாளம்பத்திரிகை சுதந்திரம்பரிசோதனைகள்புதிய பொறுப்புகள்கல்லூரிகள்ராகுல் காந்தியின் இந்திய ஒருங்கிணைப்பு நடைப்பயணம்!கட்டுப்படாத மதவெறிகாது கேளாமைஉற்பத்தி வரிகேரளம்கிரிப்டோ கரன்சிஇந்து - இந்திய தேசியம்சிபாப்உயிர்கள்வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைஅரசமைப்புச்சட்ட அதிகார அமைப்புகள் எதிர் அரசமைப்புசநான்கு வர்ணங்கள்தொற்றுநோய்கள்சியாமா பிரசாத் முகர்ஜிபடுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்மொபைல்மூன்றாவது முறை பிரதமர்பெண் கைதிகள்பாசிஸம் - நாசிஸம்வழுக்கைக்குச் சிகிச்சைபன்னீர்செல்வத்தின் வீழ்ச்சிமூன்று தேர்தல் முடிவுகளும் சொல்வது என்ன?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!