கட்டுரை, ஆளுமைகள், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

அயோத்திதாசர்: அடுத்தகட்ட பயணம்

ஆசிரியர்
01 Dec 2023, 5:00 am
0

ண்டிதர் அயோத்திதாசருக்கு மணி மண்டபம் எழுப்பப்பட்டிருப்பதும், அவருக்குத் தமிழக அரசால் 'திராவிடப் பேரொளி' பட்டம் சூட்டப்பட்டிருப்பதும் முக்கியமான நகர்வு.

தலித் அறிவுஜீவிகள், அமைப்புகளின் நெடுநாள் சுட்டிக்காட்டல் / உரிமைகோரல் இதன் மூலம் நிறைவேறியிருக்கிறது. நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில், பிராமணியத்துக்கு எதிரான அரசியல் செயல்பாட்டில் அயோத்திதாசருடைய பங்களிப்பைத் திராவிட இயக்கம் அங்கீகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து அவர்களால் சுட்டப்பட்டுவந்தது. திமுக அரசு அதற்கு முகம் கொடுத்திருப்பது வரவேற்புக்குரிய விஷயம். மொழிப் போராட்டம் உள்பட திராவிட இயக்கத்தின் ஆரம்பக் கால முன்னகர்வுகள் எல்லாவற்றிலும்  தலித்துகள் பங்களிப்பு அதிகம். இந்நகர்வு அதற்குமான மரியாதையின் தொடக்கமாக இருந்தால் நல்லது.

அயோத்திதாசர் மண்டபத்தில், 'திராவிட இயக்க வரலாற்றின் தொடக்கப் புள்ளி' என்ற குறிப்பு இடம்பெற்றிருப்பதை நண்பர் ஏபிஆர் பகிர்ந்திருந்த புகைப்படம் வழியாக அறிந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். பொதுத் தளத்தில் அயோத்திதாசரை அப்படி முன்வைத்து எழுதப்பட்ட நூல், 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்'. 

அயோத்திதாசரிலிருந்துதான் அந்த நூலே ஆரம்பிக்கும். திராவிட இயக்க 5 முன்னோடிகளில் முதன்மையானவராக அயோத்திதாசரை அந்த நூல் சுட்டும். 'நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிடக் கட்சிகள் என்றே திராவிட இயக்க வரலாறு தொடங்குகிறது என்றாலும், அந்தச் சிந்தனை மரபுக்கு முன்னோடி என்று அயோத்திதாசரைக் கொண்டாடலாம்' என்பது நூலில் இடம்பெற்றுள்ள அவரைப் பற்றிய குறிப்பு.

நூல் வெளியான சமயத்தில் சிலர் இதை ஆச்சரியத்தோடு அணுகினர். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் நூல் - அதுவும் கலைஞர் வரலாற்றைப் பிரதானமாகப் பேசும் நூல் அயோத்திதாசரிலிருந்து ஆரம்பிக்கிறதே என்பதே அவர்களுடைய ஆச்சர்யத்துக்கான அடிப்படை. தவிர, 'திராவிட இயக்க முன்னோடிகள்' என்று தனி வரிசை நூல்களின்  தொகுப்பே திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அயோத்திதாசர் கிடையாது. நாங்கள் எங்கள் புத்தகத்தில் சேர்த்தோம். 

வரலாறு ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிதல்களைக் கொண்டுவந்து தரும் சமயத்தில், புதிய வரலாற்று நூல்கள் இத்தகு புதுப்பித்தலைக் கொண்டிருப்பது அவசியம் என்பது எங்கள் நிலைப்பாடாக இருந்தது. இதன் நிமித்தம் ஏதேனும் விமர்சனங்கள் வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நூலை வாசித்தவர்களில் முதன்மையானவர்; அவர்தான் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' நூலின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். முன்னதாக திராவிட இயக்க முன்னோடிகள் வரிசை நூல்களை என்னிடம் தந்தவரும் அவரே. 

புதிய நூலில், அயோத்திதாசர் சம்பந்தமான குறிப்பையும் திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவராக அவரைக் குறிப்பிட்டிருப்பதையும் பார்த்தவர், அதை ஆக்கபூர்வமான செயல்பாடாகக் குறிப்பிட்டார். "நல்ல காரியம் செய்தீர்கள்!" என்று மனதாரப் பாராட்டினார். உடன் இருந்த முன்னணித் தலைவர்களிடமும் இதைக் குறிப்பிட்டுப் பேசினார். திமுகவின் சிந்தாந்திகள் சிலரும் இதைக் குறிப்பிட்டு பேசினார்கள். கலைஞர் தன்னுடைய இறுதி ஆட்சிக் காலத்தில் அயோத்திதாசர் விஷயத்தில் ஆர்வம் காட்டலானார்; ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் அது அடுத்த கட்டம் நோக்கிப் பயணப்படுகிறது. இரண்டிலுமே விசிகவின் பங்களிப்பு நினைவில் கொள்ள வேண்டியது!

-சமஸ் முகநூல் பதிவு 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பூபேஷ் பகேல்குதிநாண் தட்டைச்சதைசமஸ் - தினமலர்மொபைல் செயலிகள்அரசியல் பிரதிநிதித்துவம்நார்சிஸ்ட்வடக்கு அயர்லாந்துஅராத்துஅரசு நிறுவனங்கள்இட்லிதேசியத் தேர்தல்சரணம்பேரரசுகள்பார்ப்பனியம்மாறுபட்ட கவிதைஇருண்டதெல்லாம் பேய்உலகின் முதல் பெண் துப்பறியும் இதழியலாளர்வ.சேதுராமன் கட்டுரைசுய மெச்சுதல்இந்தியா என்ன செய்ய வேண்டும்?ஔரங்ஸேப்பாலு மகேந்திரா ஆனந்த விகடன் பேட்டிபீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்இயற்பியலர்கள்சோழர் இன்றுதனித் தொகுதிகள்நேஷனலிஸம்இந்துஸ்தான்ஃபுளோரைடுஆர்பிஐ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!