கட்டுரை, அரசியல், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

மின் தட்டுப்பாடு: என்ன நடக்கிறது?

எஸ்.அப்துல் மஜீத்
10 May 2022, 5:00 am
0

கவனித்திருப்பீர்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு இல்லை. முக்கியமான காரணம், கடுமையான நிலக்கரித் தட்டுப்பாடு! 

பொதுவாக, கோடை காலங்களில் மக்களின் மின் பயன்பாடு அதிகரிக்கும். கோடை வெப்பத்தை சமாளிக்க வீடுகளில், அலுவலகங்களில் ஏசி அதிக நேரம் பயன்படுத்தப்படும். இதனால், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் மின் தேவை அதிகமாகும். ஆனால், தற்போது நிலக்கரித் தட்டுப்பாட்டால், வழக்கமான மின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக்கூட மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் நாடு உள்ளது. ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின்வெட்டு பல மணி நேரம் நீடிக்கிறது. 

மின்சாரமும் நிலக்கரியும்

இந்திய மின் உற்பத்தியில் 70% அனல் மின் நிலையங்கள் மூலம் நடக்கிறது. இந்தியாவில் 173 அனல் மின் நிலையங்கள் உள்ளன. சீரான மின் உற்பத்திக்கு குறைந்தபட்சம் 66.3 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் 13 நிலவரப்படி நம் கைவசம் இருந்தது 21.93 மில்லியன் டன். இது வழக்கமாக இருக்க வேண்டிய அளவில் 34% மட்டுமே. நாட்கள் நகரநகர அந்த இருப்பும் கரைந்தது.

ஏன் நிலக்கரிக்குத் தட்டுப்பாடு?

சென்ற ஆண்டு அக்டோபரிலும் இதேபோல் நிலக்கரித் தட்டுப்பாட்டை இந்தியா எதிர்கொண்டது. ஓடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக அங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதனால், அங்கு நிலக்கரி உற்பத்தி குறைந்தது. ஆனால், இந்தத் தடுப்பாடு தற்காலிகமானதுதான் என்றும் விரைவிலே சரியாகிவிடும் என்றும் ஒன்றிய அரசு கூறியது. நிலக்கரி இருப்பை உயர்த்துவது தொடர்பில் அது கவனம் செலுத்தவில்லை. இதுவே இந்தக் கோடையில் மக்கள் புழுங்க முக்கியமான காரணம் ஆனது.

இது தவிர வேறு சில பிரச்சினைகளும் நிலக்கரித் தட்டுப்பாடுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 2021 முதல் எட்டு மாதங்களில் மட்டும் இந்திய தொழிற்சாலைகளின் மின் பயன்பாடு 15% அளவுக்கு அதிகரித்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் நுகர்வு அதிகரிப்பது இயல்பானது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. 2019இல் மின் தேவை 106.6 பில்லியன் யுனிட்டாக இருந்தது. அது 2021இல் 124.2 பில்லியன் யுனிட்டாகவும், 2022இல் 132 பில்லியன் யுனிட்டாகவும் அதிகரித்தது. அதாவது மூன்று ஆண்டு இடைவெளியில் மின் தேவை 32 பில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்ப நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை.

இறக்குமதி சுமை

உலக அளவில் இந்தியா நிலக்கரி இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதன்மையாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா நிலக்கரி இறக்குமதி செய்கிறது. 2018-19 நிதி ஆண்டில் 235.35 மில்லியன் டன் அளவில் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இங்கே இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், சமீப ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும் முயற்சிகளில் இந்தியா இறங்கியது. குறிப்பாக, கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சர்வதேச அளவில் நிலக்கரிக்கான தேவை அதிகரித்ததால் அதன் விலை கடும் உயர்வைக் கண்டது. இதன் காரணமாக, இந்தியா அதன் நிலக்கரி இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்தது.

இந்தியா, 2021-22இல் 173 மில்லியன் டன் அளவிலே நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது. இதனால் மீதித் தேவையை உள்நாட்டில் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் பெய்த மழையின் காரணமாக, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டது.

என்ன திட்டம்?

சாத்தியமிக்க அனைத்து வழிகளிலும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, மின் உற்பத்தி நிறுவனங்கள் தவிர்த்து ஏனைய பயன்பாட்டுக்கு நிலக்கரி வழங்கப்படுவதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அடுத்ததாக, நிலக்கரி இறக்குமதியை மீண்டும் அதிகரிக்க இந்தியா முடிவுசெய்துள்ளது. தற்போதைய தட்டுப்பாட்டுச் சூழலை எதிர்கொள்ள நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கும்படி மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நிலக்கரி விலையானது 45% வரையில் அதிகரித்துள்ளது.

அரசின் அலட்சியம்

நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படுவது புதிய பிரச்சினை இல்லை. அவ்வப்போது, இதுபோல் நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டுள்ளது. முந்தைய அனுபவங்களிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் பிரச்சினை. கூடவே, நிர்வாகப் பொறுப்பின்மையும், அலட்சியமும். மின் துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சம் ஆகிய மூன்றுக்கும் இடையில் போதிய ஒருங்கிணைப்பும் இல்லாத காரணத்திலே நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம் ஆரம்ப நிலையிலேயே வெளியே தெரியவருவதில்லை. ஒவ்வொரு முறையும் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்போதுதான் இந்திய அரசு இயந்திரம் விழிக்கிறது. விளைவாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.


3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இருவேறு உலகம்சாவர்க்கர் அருஞ்சொல்பர்ஸாமானுடவியலாளர் எஸ்.ஜே. தம்பையாமூலதனச் செலவுஉபி தேர்தல் மட்டுமல்ல...ஹிஜாப்மழை குறைவுவிலைவாசி உயர்வுஅகாலி தளத்தின் பல்தேவ் சிங்சீருடைஅசோக்வர்த்தன் ஷெட்டி பேட்டிவ.ரங்காசாரி கட்டுரைஅண்ணாமலை அதிரடிமொழிபெயர்ப்புக் கலைகரன் தாப்பர் பேட்டிசினிமாபள்ளிக்கூடங்களில் ஹிஜாப்பத்திரிகாதர்மம் writer samasகல்விக் கொள்கைகரிசல் கதைகள்ashok vardhan shetty ias interviewதில்லி கலவர வழக்குகள்நாராயண் ரானேமயிர்தான் பிரச்சினையா?வீட்டுக்கடன் சலுகைகோட்சேமுரசொலி மாறன்கல்லீரல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!