கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு

நம்மை ஆள்வது பெரும்பான்மையா; சிறுபான்மையா?

ரவிக்குமார்
19 Nov 2022, 5:00 am
1

ந்திய ஜனநாயகமானது, தேர்தல் முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்பானது, வயது வந்தோருக்கான வாக்குரிமையை அளித்திருக்கிறது. ‘ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்பதுதான் அரசியல் சமத்துவத்தின் அடிப்படை என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்பது சட்டரீதியில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் நமது தேர்தல் முறையில், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ‘அதிக வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுகிறார்’ என்ற தேர்தல் முறையில் (எஃப்பிடிபி - FPTP) ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ அவர் வென்றதாக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக ஆகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக, பூஜ்ஜியமாக ஆகின்றன.

இப்படிப் பார்க்கும்போது, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற அம்பேத்கரின் கூற்று பொய்யாக்கப்படுகிறது. அவர் நினைத்த அரசியல் சமத்துவம் என்பது அதனால்தான் எட்டப்படாமலேயே தொலைதூரக் கனவாக உள்ளது. எனவேதான் இந்தியத் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்ற கோரிக்கை திரும்பத் திரும்ப பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சட்ட ஆணையத்தால் முன்வைக்கப்பட்ட சில ஆலோசனைகள் கவனத்துக்குரியவை. 

சிறுபான்மைக்கு வெற்றி

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் வென்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் தற்போதிருக்கும் நமது தேர்தல் முறை. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், பலசமயம் அது வென்வர் பெற்ற வாக்குகளைவிடக் கூடுதலாக இருப்பது உண்டு. எனவே, அந்தத் தொகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவர் வென்று அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. 'பெரும்பான்மைக்கு அதிகாரம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு இது எதிராக உள்ளது. 

இப்படி சிறுபான்மை அளவு வாக்குகளைக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஒன்றிரண்டு தொகுதிகளில் இருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்திவிடலாம். பல மாநிலங்களில் சுமார் 75% சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படிக் குறைந்த அளவு வாக்குகளில் வென்றவர்களாக இருக்கின்றனர். அவர்களில் பல பேர் 20%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. 2004இல் மக்களவையில் இடம்பெற்றிருந்த சுமார் 67% எம்பிக்கள் குறைந்த அளவு வாக்குகளில் வென்று வந்தவர்களாக இருந்தனர். 2009இல் 120 எம்பிக்கள் மட்டும்தான் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றிருந்தனர். 2014இல் 201 எம்பிக்கள் மட்டுமே 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். 

வெற்றி பெறுகிறவர் 50%க்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமது தேர்தல் முறையில் இல்லை. அதனால்தான் இந்த நிலைமை. ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மைப் பகுதியினரின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு சிறு தரப்பினரின் பிரதிநிதியாக மட்டுமே இருப்பதற்கு இது வழி வகுக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையையே இது தகர்த்துவிடுகிறது.

சாதி, மதப் பெரும்பான்மை

இப்போதுள்ள தேர்தல் முறை இன்னொரு ஆபத்துக்கும் இட்டுச்செல்கிறது. “ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றிபெற்றுவிடலாம்” என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது.

அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இது வழிவகுக்கிறது. ‘பரவலான மக்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளைத் தந்தாலே போதும்’ என அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கும் இதுவே காரணமாகிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கு இரண்டு விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

குறைந்தபட்சம் 50% வாக்குகள் வேண்டும்

முதல் யோசனை: இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்துவது. வெற்றி பெறுகிறவர்கள் எந்தெந்த தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலில் வந்துள்ள இரண்டு வேட்பாளர்களை மட்டும் வைத்து மீண்டும் ஒரு வாக்குப்பதிவை நடத்தி அதில் யார் 50%க்கு மேல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரை வெற்றிபெற்றவராக அறிவிப்பது.

பெரும்பாலான தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளில் வெல்லும் நிலை இருப்பதால் ஏறக்குறைய நாடு முழுமைக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டிய நிலை இதனால் ஏற்படும். எனவே, இது சாத்தியம் இல்லை என்கிற கருத்து எழலாம். அதனால் அதில் ஒரு தீர்வும் சொல்லப்பட்டது. இந்த முறையினால் ஏற்படும் காலம் மற்றும் பொருள் செலவைத் தடுக்க முதலிலேயே ஒவ்வொரு வாக்காளரிடத்திலும் மாற்று வாக்கு ஒன்றைச் செலுத்தும்படி கோருவது. எந்தெந்தத் தொகுதிகளில் மெஜாரிட்டி வாக்கு கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அந்த மாற்று வாக்குகளை எண்ணுவது என்பதுதான் அந்தத் தீர்வு. இயந்திர வாக்குப்பதிவு வந்துவிட்ட இன்றைய சூழலில் இது செலவு பிடிப்பதாகவோ, கால தாமதம் ஆவதாகவோ இருக்காது.

50%க்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வைக்கும் ஏற்பாடு குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் ஒருவர் வெற்றிபெறுவதைத் தடுப்பது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் பரந்த அளவிலான பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். சாதி, மத செல்வாக்கையும் அது கட்டுப்படுத்தும்.

அரசமைப்புச் சட்டத்தைப் புதிதாக எழுதுவதற்கென நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜக அரசால் அமைக்கப்பட்ட கமிஷனின் பார்வைக்கு இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அந்த கமிஷனில் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட துணைக் குழுவினால் அவை ஆராயப்பட்டன. அந்தக் குழுவின் தலைவராக ஆர்.கே.திரிவேதி இருந்தார். பி.ஏ.சங்மா, மோகன் தாரியா, என்.என்.வோரா, பேராசிரியர் ஆர்.பி.ஜெயின் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.

அந்தக் குழு “50%க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே ஒரு தொகுதியின் பிரதிநிதியாக வர வேண்டும். அதற்கேற்ப தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்” எனப் பரிந்துரைத்தது. 

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்படும் இன்னொரு பரிந்துரை: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதாகும். தேர்தலில் பதிவுசெய்யப்படும் எல்லா வாக்குகளுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமெனில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் உகந்தது என்ற வாதம் 1930ஆம் ஆண்டிலேயே ஜவஹர்லால் நேருவால் முன்வைக்கப்பட்டது. “பல்வேறு சமூகங்களின் அச்சத்தை நீக்கி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய வேண்டுமெனில் அதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே பொருத்தமானது” என அவர் கூறினார். அரசமைப்புச் சட்ட அவையில் மெஹ்பூப் அலி பேக் சாஹிப் பஹதூர், காஸி ஸையத் கரிமுதீன் ஆகிய இரு உறுப்பினர்கள்  “சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே சிறந்தது” என்று வாதிட்டனர். ஆனால், அது அங்கே ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற தேர்தல் முறையைப் பின்பற்றிய 89 நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிச் சென்றுவிட்டன. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது.

இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன. 1974இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மூலம் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் அதைப் பரிந்துரை செய்துள்ளது. 2003இல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் எம்பியாக இருந்த ஜி.எம்.பனத்வாலா விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை வலியுறுத்தி தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இந்தியச் சட்ட ஆணையமும் விகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென 1999இல் பரிந்துரைத்து விரிவான அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது.

விகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறை வேண்டும் என்பவர்கள் கடந்த 2014இல் நடைபெற்ற பொதுத் தேர்தலை உதாரணமாகக் காட்டுகிறார்கள். அதில் பதிவான வாக்குகளில் 31% வாக்குகளை பாஜக பெற்றது. அது இந்திய மக்கள்தொகையில் 14%தான். வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அது 20%தான் வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 69% பாஜகவுக்கு எதிராக இருந்தாலும் அக்கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தது. 

அது மட்டுமின்றி 2014 பொதுத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 20% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்பிகூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 27% வாக்குகளைப் பெற்றது. ஆனால், அதற்கும் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. ஒடிஷாவில் காங்கிரஸ் கட்சி 26% வாக்குகளைப் பெற்றது. அங்கு அக்கட்சிக்கு ஒரு எம்பியும் தேர்வாகவில்லை. வங்கத்தில் இடதுசாரி கூட்டணி 30% வாக்குகளைப் பெற்றபோதும் அதனால் இரண்டு எம்பி இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. 

இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தற்போதுள்ள தேர்தல் முறையில் மிகப்பெரிய கோளாறு உள்ளது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். இதனால்தான் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் இங்கே விகிதாச்சார தேர்தல் முறை வேண்டும் என வலியுறுத்தினார். முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி ‘2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20% வாக்குகளை வாங்கியிருந்தாலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதைப் பார்த்தபின் ஜெர்மனியில் இருப்பதைப் போல விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே இந்தியாவுக்கும் உகந்தது’ என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார். 

அம்பேத்கரின் மறுப்பு

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என அரசமைப்புச் சட்ட அவையில் குரல்கள் எழுந்தபோது அது எஸ்சி, எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்கிவிடும் என்பதற்காகவே அம்பேத்கர் அதை மறுத்தார். 1932இல் காந்தியோடு  போடப்பட்ட பூனா ஒப்பந்தத்தால் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு வென்றெடுக்கப்பட்ட அந்த அரசியல் உரிமையைக் கைவிட முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், பூனா ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த இரட்டை உறுப்பினர் தேர்தல் முறையை அம்பேத்கர் மறைந்ததுமே காங்கிரஸ் கட்சி ஒழித்துக்கட்டிவிட்டது. இந்தச் சூழலில் அம்பேதர் பேசியதைச் சுட்டிக்காட்டி இந்தச் சீர்திருத்தத்தை மறுக்க முடியாது. எனவே, தற்போதுள்ள நிலையைக் கவனத்தில் கொண்டே தேர்தல் சீர்திருத்தங்களை அணுக வேண்டும்.

ஆதரிக்கும் கட்சிகள்

முன்னாள் தேர்தல் ஆணையர்களும், இந்தியச் சட்ட ஆணையமும் மட்டுமல்ல இடதுசாரி கட்சிகளும், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இந்திய குடியரசுக் கட்சி, லோக் ஜனசக்தி, உள்ளிட்ட கட்சிகளும், திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பலவும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. 2008இல் இதற்கென துவக்கப்பட்ட ‘இந்தியாவில் தேர்தல் சீர்த்திருத்ததிற்கான பிரச்சார அமைப்புடன்’ (CERI) ஒன்றிணைந்து இக்கட்சிகள் இது தொடர்பாகக் கடந்த காலங்களில் பரப்புரையிலும் ஈடுபட்டன. 

பெரும்பான்மைவாதத்தைத் தடுக்குமா?

பெரும்பான்மை ஆட்சி என்பதை பெரும்பான்மைவாத ஆட்சியாக உருமாற்றிவிட முடியும் என்ற ஆபத்தை இந்தியா இன்று சந்தித்துவருகிறது. இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்கிற அரசியல் சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அது தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையால் நிறைவேற்றப்படாது. எனவேதான், 30% பிரதிநிதிகளை நேரடித் தேர்தல் மூலமாகவும் 70% பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்வுசெய்யக்கூடிய தேர்தல் முறை ஒன்றை இந்தியாவில் கொண்டுவர வேண்டுமென இக்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

செழிக்கும் வெறுப்பு

ப.சிதம்பரம் 18 Apr 2022

தேர்தல் ஜனநாயகம் முழுமையான பொருளில் செயல்பட வேண்டுமெனில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப விதிகளை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தையும் இந்திய ஒன்றிய அரசையும் இக்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

விகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறையில் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் பிரதிநிதிகள் பட்டியலில் எஸ்சி, எஸ்டி மக்களுக்குத் தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவதோடு அதில் 50% பெண்களாக இருக்க வேண்டும் என்பதையும் சட்டமாக்க வேண்டும் என அவை வலியுறுத்துகின்றன.

ஹிட்லரின் ஜெர்மனியும் மோடியின் இந்தியாவும் 

1932இல் ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் 33.1% வாக்குகளைப் பெற்றே ஹிட்லர் அந்நாட்டின் அதிபராக வந்தார். அதனால் ஏற்பட்ட அழிவைச் சந்தித்த அனுபவத்தில் 1949இல் அந்த நாட்டில் விகிதாச்சார தேர்தல் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது. தற்போது நரேந்திர மோடி 2014 பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் வெறும் 31% வாக்குகளையும், 2019இல் பதிவான வாக்குகளில் 37% வாக்குகளையும் மட்டுமே பெற்று இந்தியாவின் பிரதமராக வந்திருக்கிறார். அதன் விளைவுகளை நாடு சந்தித்துவருகிறது. ஜெர்மனியைப் போல இந்தியாவும் தனது தேர்தல் முறையை சீர்திருத்திக்கொள்ள இதைவிடப் பொருத்தமான நேரம் வேறொன்று இருக்க முடியாது! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஜெர்மனி தேர்தல் முறையிலிருந்து நாம் கற்க வேண்டியது என்ன?

கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?

செழிக்கும் வெறுப்பு

ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், கவிஞர், அரசியலர். விசிக பொதுச்செயலர். மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: manarkeni@gmail.com


4


1
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    7 months ago

பெரும்பான்மை இந்தியர்கள் இவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது.. ஆசுவாசத்தை தருகிறது.விரக்தி கொஞ்சம் குறைகிறது. எப்படி மாட்டிக் கொண்டிருக்கிறோம்! நிச்சயம் இப்போது ஆள்பவர்களும் அமைப்புகளும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்துக்கு வழி விட மாட்டார்கள். பொதுமக்கள் இதற்கு என்ன செய்ய முடியும்?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கடின உழைப்புசமஸ் - ஜெயலலிதாஎரிபொருள்கர்ப்ப காலம்நவீன விழுமியங்கள்கன்னையா குமார்ஷனா ஸ்வான் ‘கவுன்டவுன்’chennai rainநிகழ்நேரப் பதிவுகள்சர்வதேச மகளிர் தினம்உற்றுநோக்க ஒரு செய்திஆப்பிரிக்காதுறை நிபுணர்கள்கொழுப்பு மிக்க கல்லீரல் ஆபத்தானதா?சிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிஇயக்குநர் மணிரத்னம்ஆண்களை இப்படி அலையவிடலாமா?பத்திரிகாதர்மம்ஜார்ஜ் புஷ்வழிகாட்டிக்ரெடிட் கார்டுஜாக்கி அசேகாஇந்தியா என்ன செய்ய வேண்டும்?2ஜிநவீன அறிவியல்வருவாய் ஏய்ப்புதோள் வலிமோடி அரசுஅமெரிக்க அரசமைப்புச் சட்டம்உகந்த நேரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!