கட்டுரை, கலாச்சாரம், வரலாறு 10 நிமிட வாசிப்பு

பூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்

பிரேம்
14 Apr 2022, 5:00 am
2

சாதியும் மதமும் பண்பாட்டுத் தளங்களில் மட்டுமின்றி அரசியல் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. தமக்கான ‘அரசு’ கட்டமைப்பை உருவாக்கிக்கொள்கின்றன. இதனால், சனநாயகமும் சமத்துவமும் பரவலாக்கப்பட இயலாத நிலை உள்ளது. இத்தகைய நிலையில்தான் உழைக்கும் வர்க்கத்திற்கு, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு, சிறுபான்மையினருக்குச் சனநாயகத்தைப் பரவலாக்கிட, சமத்துவத்தை வென்றெடுத்திட, அதற்கு அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அமைப்பாய்த் திரண்டு போராட வேண்டியுள்ளது. யார்யாரெல்லாம் சனநாயகம் மறுக்கப்பட்டவர்களோ, சமத்துவம் மறுக்கப்பட்டவர்களோ, தொடர்ந்து நசுக்கப்பட்டுவரும், சுரண்டப்பட்டுவரும் பிரிவினரோ, அவர்கள் அனைவரையும் ஒரு கட்டமைப்புக்குள் அணிதிரட்ட வேண்டியுள்ளது! - தொல்.திருமாவளவன், ‘அமைப்பாய்த் திரள்வோம்’ (2018)

அமைப்பாய்த் திரள வேண்டியதின் தேவை, அமைப்பாய்த் திரள வேண்டியவர்கள் யார் என்பதை இதைவிடத் தெளிவாகவும், எளிமையாகவும்  சொல்லிவிட முடியாது. அமைப்பாய்த் திரளுதலின் பூர்வ வடிவம் பௌத்த சங்கம், அது தற்கால வடிவம் பெறும்போது புரட்சி பௌத்தமாக புதிய அரசியலாக இயக்கம் பெறுகிறது. அமைப்பாய்த் திரளுவது அரசியல் அழைப்பு மட்டுமல்ல, சனநாயகம், சமத்துவம் நோக்கிய இயக்கம் மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தில் ஒவ்வொருவரும் மனிதர்களாக மாற, தன்மதிப்புடைய மனிதர்களாக வாழ, மனித அடையாளம் பெறத் தேவையான அடிப்படைச் செயல்பாடு ஆகும்.   

இந்தியச் சமூகத்தின் பொருளாதார, அரசியல் தளத்தில் மட்டுமின்றி பண்பாடு, தனிமனித உளவியல், சிந்தனை முறை, அறிதல் முறை, அறிவியல் நோக்கு, அழகியல் உணர்வுகள், அற உணர்வுகள் அனைத்தையும் சாதி அடையாளமும், சாதிக் கட்டமைப்பும் தனக்கே உரிய முறையில் சிதைத்து ஊனப்படுத்தியுள்ளது. சாதி அமைப்பு உழைக்கும் மக்களையும் வாழ்வாதாரங்களை உற்பத்தி செய்யும் மக்கள் குழுக்களையும் தீண்டாமை, சமூக ஒதுக்கம் என்ற தண்டனை மூலம் மனித நிலைக்கு வெளியே உள்ளவர்களாக, மனித மதிப்பு அற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது. 

மனிதர்களாக வாழும் நம் மக்கள் மனித மாண்புடையவர்களாக வாழ்வதைத் தடுப்பதன் மூலம் சாதி காக்கும், சாதி போற்றும் மக்கள் குழுக்கள் மனிதத் தன்மையற்றவர்களாக மனிதத் தன்மைக்கு எதிரானவர்களாகத் தம்மை வைத்துக்கொண்டுள்ளனர். சாதி உளவியல் அவர்களை வன்முறையாளர்களாக, வன்முறையை நியாயப்படுத்துபவர்களாக மாற்றி வைத்துள்ளதால் அறிவுக்கும், அறிவியலுக்கும், உண்மைக்கும் எதிரானவர்களாகச் செயல்படுவதுடன் அதனைத் தம் பெருமிதமாகவும் அடையாளமாகவும் கொண்டாடும் பகுத்தறிவற்ற வாழ்வை வாழ வேண்டியுள்ளது.

ண்மைக்கும் அறிவுக்கும் எதிரான வாழ்வையும், வழக்காறுகளையும் அவர்களுக்குள் பதியவைத்து அதனைத் தொடர்ந்து பாதுகாத்துவரும் கொடுமையான பணியை நிறைவேற்றிவரும் நிறுவனம்தான் ‘இந்து மதம்’. இதற்கு எதிரான போராட்டம்தான் மனிதர்களாக மாறுவதற்கான போராட்டம், அந்தப் போராட்டம்தான் சனநாயகத்தையும் சமத்துவத்தையும் உருவாக்கி அளிக்கும் போராட்டம். வரலாற்றில் தொடர்ந்து நசுக்கப்பட்டுவரும், சுரண்டப்பட்டுவரும் மக்களின் அரசியல் அதனால்தான் அனைவரையும் மனிதர்களாக மாற்றுவதற்கான அரசியலாக உள்ளது. இந்திய வாழ்வின் அடிப்படையை மாற்றியமைக்கும் அரசியலாக ‘தலித் அரசியல்’ (பூர்வ பௌத்த அரசியல்) இருப்பதற்கான காரணமும் அதுதான். 

“சமத்துவத்திற்கும் சனநாயகத்திற்கும் எதிரான போக்குகளை எதிர்க்கும் வலுவில்லாமல்” இருப்பவர்களை மாற்றி சனநாயக, சமத்துவச் சக்திகளாக உருவாக்குவது; சமத்துவமும் சனநாயகமும் உருவாவதைத் தடுத்துப் பேரழிவைச் செய்துவரும் சக்திகளை ஆற்றலழித்து, அதிகாரமற்றவர்களாக மாற்றுவது; சமத்துவத்தையும் சனநாயகத்தையும் நேசிக்கும் மக்களை உருவாக்குவது எனப் பலகட்டப் பணிகளை, பலமடங்குச் சுமைகளைக் கொண்ட பணிகளைத் தன்னுள் அடக்கியுள்ளதால்தான் தலித் அரசியல் இந்தியாவில் உருவான எந்த நவீன அரசியல் இயக்கத்தைவிடவும், அமைப்பைவிடவும் உண்மை சார்ந்ததாக, பகுத்தறிவு, அறிவியல், மனித அறம், சமநீதி என்ற பெரும் விழுமியங்களைக் கொண்டதாக இருந்துவருகிறது.  

இதனை ஆசான் அயோத்திதாசர் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம்கொண்ட சாதி பேதமற்ற பௌத்தர்களின் அரசியல் என்கிறார். அண்ணல் அம்பேத்கா் சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம், சமநீதி கொண்ட ஆய்ந்தறிந்த “பேரறிவாளர்களின் அரசியல்” என்கிறார். 

“தன் சாதி, வர்க்கத்தின் நலனைத் தவிர வேறு எதையும் மதிக்காத பிராமணர்கள் (ஆதிக்கச் சாதியினர்) எத்தனை நூல்களைக் கற்றாலும் அவர்கள் அறிவுடையோராக, ஆய்ந்தறிந்தவர்களா ஆவதில்லை. அவர்கள் வெறும் கற்றறிந்தவர்கள்தான். கற்றறிதலும் ஆய்ந்தறிந்த அறிவினோர் ஆவதும் முற்றிலும் வேறுவேறானவை. தன் சாதி, தன் வர்க்கம் எனச் சிந்தித்து அதன் நலனுக்காக மட்டும் வாழும் ஒருவர் எப்பொழுதும் அறிவுடையோராக, அறிஞராக மாறுவதில்லை. அறிவுடையோர், ஆய்வறிவு கொண்டோர் விடுதலை உணர்வு கொண்டவராக, சாதி-வர்க்கத்தைக் கடந்து உண்மைகளை உரைப்பவராக இருக்க வேண்டும்” என்பது அம்பேத்கரின் வரைவிலக்கணம். 

இதனை வள்ளுவ மரபு “அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்னோய்போல் போற்றாக் கடை” என உரத்துச் சொல்கிறது. அதனால்தான் சனாதனமோ, இந்து மதமோ, பிராமணியமோ, சாதி காக்கும் மரபுகளோ அறிவுடையதாக இருப்பதும் இல்லை, ஆக முயல்வதும் இல்லை. 

ஏனெனில் சாதியும், வர்ண வேற்றுமைகளும் உண்மைக்கும் அறிவுக்கும் மாறானவை, பொய்யின் மீது கட்டப்பட்டவை. பொய்களின் மீது கட்டப்பட்டு, பொய்யை தெய்வீகமாக் கொண்டாடும் ஒரு சமூகம் அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானது, அறத்தைப் பற்றிப் பேசத் தகுதியற்றது. இந்த மெய்மொழியின் அடிப்படையில்தான் அம்பேத்கர் சனாதன, பிராமண, இந்துச் சமய மரபில் இதுவரை அறிஞர்கள் யாரும் உருவாகவில்லை என்று சொல்வதுடன் அவர்களால் உண்மையை, அறிவை, உயர் நெறிகளை உணரவோ, உரைக்கவோ முடியாது என்றும் நிறுவுகிறார். 

தாமே உருவாக்கிய பொய்களையே மெய்யெனக் கற்றுச் சொல்லும் மெய்யழிப்பு மரபைச் சார்ந்த சனாதன, இந்து மரபின் கற்றுச் சொல்லிகளை ‘எதிர்ப் புரட்சியாளர்கள்’ என்கிறார் பாபாசாகேப். அதாவது இந்தியாவின் சனநாயக, சமத்துவப் புரட்சியை உருவாக்கி, அற அரசியலாக இருந்த “பௌத்த சமூக அமைப்பையும், அரசியலையும் அழித்த, ஒடுக்கிய எதிர்ப்புரட்சியாளர்கள்” என்று விளக்குகிறார். அம்பேத்கரைப் பொறுத்தவரை “இந்தியாவில் புரட்சி புதியதில்லை, இந்தியாவில் இனிதான் சமூக, அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும் இல்லை.”

2500 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, பல நூற்றாண்டுகள் நிலவிய பௌத்தப் புரட்சியை மீண்டும் கண்டுணர்ந்து, மீட்டெடுத்தாலே போதும் நம் காலத்தின் விடுதலை அரசியல் உருவாகிவிடும். அதாவது, தற்போதுள்ள இந்து, பிராமண எதிர்ப்புரட்சிச் சக்திகளை ஆற்றல் ழித்து, அதிகாரம் அழித்து தொன்மையான பௌத்த வரலாற்றை மீட்டெடுத்தாலே இந்தியப் புரட்சி மெய்ப்பட்டு, இந்தியப் புதுவாழ்வு தொடங்கிவிடும். இந்தப் பூர்வ பௌத்த மரபைக் கண்டு சொன்ன, மாபெரும் மறுகண்டுபிடிப்பு செய்த அயோத்திதாசரின் ஆய்வை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் அம்பேத்கர்தான் புரட்சி பௌத்தத்தை உருவாக்கித் தருகிறார். 

“சமயத்தின் நோக்கம் என்பது, உலகின் தோற்றத்தை விளக்கிக்கொண்டிருப்பது. (ஆனால்) தம்மத்தின் நோக்கமோ உலகை மறுஉருவாக்கம் (புத்தாக்கம்) செய்வது!” (புத்தரும் அவரது தம்மமும்) என மார்க்சியத்தின் செயல்நிலை கொண்ட அரசியலாகத் தம் தம்மத்தை (புரட்சி பௌத்தம்) அம்பேத்கர் உருவாக்குகிறார். இதனை ‘இந்திய கம்யூனிஸம்’ என்றும் அதனை உருவாக்க பௌத்தமே சிறந்த வழி என்றும் முன்மொழிந்து சமத்துவச் சமூகத்தை அமைக்க மார்க்ஸியத்தைவிட ஆற்றல்கொண்ட மெய்யறிவு, கோட்பாடு பௌத்தம் எனவும் விளக்குகிறார். உலக வரலாற்றை ‘வர்க்கப் போர்களின் வரலாறு’ என்று மார்க்ஸியம் விளக்கியதை “இந்திய வரலாறு வர்ண சாதிகளுக்கு இடையிலான ஆதிக்கப் போர்களின் வரலாறு” எனவும் “இந்திய அரசியல் வரலாறு முழுமையுமே சாதியற்ற (புரட்சிகர) பௌத்தத்திற்கும் சாதி காக்கும் சனாதன - பிராமணியத்திற்கும் இடையிலான போர்களின் வரலாறு” என்றும் அடையாளப்படுத்துகிறார். 

“வரலாற்று அடிப்படையில் பிராமண இந்தியா, புத்த இந்தியா, இந்து இந்தியா என மூன்று இந்தியா இருந்துவந்துள்ளது, அவற்றிற்கெனத் தனித்தனியான பண்பாட்டு கட்டமைப்புகள் இருந்தன. பொதுவாகச் சொல்லப்படும் ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடு என ஒன்று எப்போதும் இருந்ததில்லை.

இஸ்லாமியர் நிலம் புகுவதற்கு முன் இந்திய வரலாறு என்பது பிராமணியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான வாழ்வா சாவா போர்களின் வரலாறுதான். உண்மையான இந்திய வரலாற்றை நான் இப்படித்தான் விளக்குவேன்: அது பௌத்த நிலத்தின் மீதான பிராமணியத்தின் ஆக்கிரமிப்புப் போர்களின் வரலாறு, அது பௌத்த அரசியலை பிராமணியம் அடக்கி வெற்றிகொண்ட வரலாறு” (இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) எனத் தெளிவுபடுத்தி இந்தியப் புரட்சியின் தொடக்கமும் அறவழி அடையாளமும் பௌத்தமே என்று நிறுகிறார்.

“கௌதம புத்தரே முதல் சமூகப் புரட்சியாளர், புரட்சியாளர்களில் ஆகச் சிறந்தவர். சமூகப் புரட்சி பற்றிய எந்த வரலாறும் அவரிடமிருந்தே தொடங்க வேண்டும். அவருடைய மாபெரும் சாதனைகளை மறைத்துவிட்டு எழுதப்படும் இந்தியாவின் சமூகச் சீர்திருத்தங்களின் எந்த வரலாறும் முழுமையானதாக இருக்காது” எனத் தன் அரசியல் முன்னோடியை அடையாளம் காட்டுகிறார் அம்பேத்கர். சமூகப் புரட்சியின் வரலாற்றுடன் பௌத்த வரலாற்றை இணைப்பதுடன் மட்டும் நில்லாது அதனை தீண்டாமைக்குட்படுத்தப்பட்ட மக்களின் வரலாற்றுடன் இணைத்து இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றைப் புலப்படுத்தி ‘பூர்வ பௌத்த’ அரசியலை நிறுவுகிறார். 

தமிழில் அயோத்திதாசர் தொடங்கி வைத்த வரலாற்று மீளுருவாக்கம் அம்பேத்கரிடம் இந்தியப் பெருநிலை அரசியலாக விரிவடைகிறது. “கி.பி. 400 ஆண்டு அளவில் தீண்டாமை தோன்றியிருக்கக்கூடும் என ஓரளவு நம்பிக்கையுடன் நாம் கூற முடியும். பிராமணியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான மேலாதிக்கப் போராட்டத்தின் விளைவாவே தீண்டாமை தோன்றியது. இந்தியாவின் வரலாற்றுப் போக்கையே மாற்றிய அமைந்த நிகழ்வுப் போக்கு இது… தோற்கடிக்கப்பட்ட பௌத்தர்களே தீண்டாமைக்குட்பட்ட மக்கள்” (தீண்டாமைக்குட்பட்ட மக்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டாமைக்குட்பட்டவர்களாக மாறினர், அம்பேத்கர் நூல் தொகுதி-7) என்ற கண்டறிதல் வழியாக பூர்வ பௌத்தர்கள் என்ற அயோத்திதாசரின் அடையாளப்படுத்தலை உறுதிப்படுத்திய அம்பேத்கர் விடுதலைக்கான அரசியலைப் புரட்சி பௌத்தமாக வளர்த்தெடுக்கிறார். 

அம்பேத்கர் தன் நினைவு தெரிந்த நாளிலிருந்து, சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே புத்தரின் சீடராகவே இருக்கிறார், அது உணர்வும் நம்பிக்கையும் இணைந்த பிணைப்பு. அந்த உணர்வும், நம்பிக்கையும் அறிவைத் தேடுவதற்கான ஆற்றலையும், ஓயாது தனது மக்களுக்காக உழைப்பதற்கான மனஉறுதியையும் அவருக்கு அளிக்கிறது. அவரை பௌத்தம் ஒரு பேரறிவாளராக, பெரும் கல்வியாளராக மாற்றியது மட்டுமல்ல, அந்த அறிவையும் அற்றலையும் தனது நலன்களுக்காக இன்றித் தம் மக்களுக்காவும், இந்தியச் சமூகத்தின் மீட்சிக்காகவும் அளித்துவிடும் ஈகத் திறனையும் அவருக்கு அளித்தது.

தனது அனுபவத்தைக் கொண்டே அவர் தம் மக்களுக்கும் விடுதலை அரசியலுக்கும் பௌத்தத்தை முன்மொழிந்து 1956இல் நிகழ்த்திய தம்ம ஏற்பை 1935இல் கூடச் செய்திருக்கலாம். ஆனால், அதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் நெடியது. 

அம்பேத்கர் 1952க்குப் பிறகு தன் மக்களின் நிலை பற்றிப் பெரிதும் துயருற்றார். சனாதன பிராமணியமும், முதலாளித்தவமும், தனிமனித வழிபாடும் இணையும்போது அடித்தள மக்கள் அடையும் துயரம் பற்றிய பெருங்கவலை அவரைக் கவிந்தது, பௌத்தம் நோக்கிய அவரது நகர்வு அதன் தொடர்ச்சியாக அமைந்தது. தன் மக்களைப் பெருந்துயரங்களின் நடுவில் விட்டுச்செல்ல மனமின்றி பேரறிவை நோக்கி வழிநடத்த விரும்பினார், அது நம்பிக்கை சார்ந்தோ, உள்ளொளி சார்ந்தோ அமையக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

இரண்டு உலகப் போர்களின் காலகட்டத்தில் தம் அரசியல் வாழ்வை நடத்திய அம்பேத்கர் பெரும் ஆராய்ச்சிக்குப் பின்தான் தம்மத்தை விடுதலைக்கான நெறியாக அறிவிக்கிறார், தன் மக்களுக்கான, விடுதலை விரும்பும் அனைவருக்குமான வாழ்வியல், அரசியல் முறையாக முன்மொழிகிறார். ஒரு வகையில் அவரே ஒரு புத்தராக மாறுகிறார். மக்கள் வெறுப்பே பேரரசியல் திட்டமாக மாறியுள்ள இன்றைய சூழலில், அடிப்படைவாத அடக்குமுறைகளே அரசியல் செயல்பாடாக முன்வைக்கப்படும் அறிவு மறுப்புக் காலகட்டத்தில் அண்ணலின் அறிவரசியல் முற்றிலும் புதிய அர்த்தம் பெறுகிறது, அது பூர்வ பௌத்தத்தில் தொடங்கி புரட்சி பௌத்தம்வழி தொடர்கிறது! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பிரேம்

பிரேம், கவிஞர். பேராசிரியர். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் பணியாற்றுகிறார். ‘சொல்லெரிந்த வனம்’, ‘நந்தன் நடந்த நான்காம் பாதை’, ‘புறாத்தோட்டம்’ உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: kpremananthan@gmail.com


2






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

As a democrat, I could welcome this article as a critique on Hinduism. But the content of this article seems vague & no validation can be expected from the society considering the current political dynamics. Additionally what Mr. Tirumavalavan MP can do for the welfare of the scheduled castes & OBC's by his parasite relationship with DMK & INC. Moreover no religion can be put as an alternate for Hinduism as the latter is claiming it as a way of life & Not a religion. Requesting all to accepting the reality & try to focus on positive social justice.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Anbarasu   2 years ago

சமத்துவம் என்பது காலம் காலமாக வேண்டுவதாக உள்ள சனாதன சூழலில் பூர்வ பௌத்தத்திற்கு திரும்புதல் எனும் சூழல் தொடங்கப்பட வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ஜிடிபி - வேலைவாய்ப்பு: எது நமது தேவை?முதல்வர் கடிதம்இது சுற்றுலா தலம்விளிம்புசிற்றிலக்கியங்கள்அமைதியாக ஒரு பாய்ச்சல்பற்கள் ஆட்டம்சித்தாந்தர் பிம்பம்ஆங்கிலவழிக் கல்விவரலாற்றுக் குறியீடுகள்இந்தியா கூட்டணிகழிவு மேலாண்மைஉயிரணுக்கள்ராஜாநோயாளிமழை குறைவுபொதுமுடக்கம்குரங்கு அம்மை வைரஸ்guhaரத்த ஓட்டம்சமூகச் சீர்திருத்தம்மூன்று தீர்க்கதரிசன விஷயங்கள்எம்.என்.ஸ்ரீனிவாஸ்ஆத்ம நிர்பார் பாரத்விஸ்வ மித்ரன்இபிடபிள்யுமாநிலங்கள் நகராட்சிகளாகின்றன!வரிச் சட்டம்பிறப்பு விகிதம்இந்தித் திணிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!