கட்டுரை, இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

எருமைக்குச் சமவுரிமை

இரவிச்சந்திரன்
21 Jan 2022, 4:59 am
5

ழுதைக்கு அடுத்து தமிழ்நாட்டின் அருகிவரும் உயிரினமாக எருமை ஆகிவிடுமோ என்ற கவலை எனக்கு உண்டு. குமரி தொடங்கி ஈரோடு வரை, எருமை என்பதும் மாடு என்பதும் வேறுவேறு. வட மாவட்டங்கள் மாதிரி எருமை, மாடு இரண்டும் ஒன்றல்ல. எருமைக்கு வெயிலில் நாக்குத் தள்ளும். (பசு) மாடு மழைக்கு ஒண்டும், நொண்டும்! 

இனப்பெருக்கத்துக்குத் தயாரானதும், ஒருவித திரவத்தை வெளிப்படுத்தும் எருமை. தாத்தா இதைக் கோழை என்று சொல்லுவார். எருமைக் கிடா வளர்ப்பவர்கள், அபூர்வமாக பக்கத்துக் கிராமங்களில் இருப்பார்கள். அவர்களிடம் இதைக் கொண்டு 'சேர்க்க' வேண்டும். அப்போதெல்லாம் விந்து வங்கியும் கிடையாது, செயற்கைக் கருத்தரித்தல் மையமும் கிடையாது. வீதி வீதியாக போஸ்டர் ஒட்டி, "உங்களுக்கும் ஒரு குழந்தை" என்று விளம்பரம் செய்யவும் இல்லை. 

எட்டாவது படிக்கையில் இந்த 'அரும்பணி' பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் தாத்தா. தமிழ்ப் படங்களில் இரண்டு ரோஜா முட்டிக்கொண்டதும் இயல்பாக நடக்கும் ஒரு காட்சிக்கு, மெனக்கெட்டு அந்த எருமையைக் கூட்டிச்செல்ல வேண்டும்.  எருமைகள் நடக்க நடக்க எளிதில் களைப்படைந்துவிடக் கூடியவை. வழியில் எதாவது குட்டையைப் பார்த்துவிட்டால்,  'ஸ்விம்மிங்' செய்து, 'சன் பாத்' எடுத்துவிட்டுத்தான் வரும். எருமையின் சிரமப் பரிகாரம் முடிந்து தேவத்தூர் நாச்சியப்ப கவுண்டர் தோட்டம் போய்ச் சேர 30 நிமிடமாகிவிடும்.

நாச்சியப்பன், ஒரு எருமைக்கிடா மற்றும் ஒரு மாட்டுக்காளை வைத்திருந்தார். ஒரு காக்கி டவுசர், வாயில் கணேஷ் பீடி இதுதான் அவரது அடையாளம். பின் கொசுவம் வைத்த அவரின் மனைவி, பால் கறந்துகொண்டிருந்தார். "தாத்தன் உங்கிட்ட குடுத்தாராக்கு... நல்லாருக்கறார... என்னமோ இங்கிட்டு காணா ரொம்ப நாளா, இன்னிக்கி லீவு உனக்கு... ஏந்தம்பி?!"

நான் தலையை மட்டும் ஆட்டிவிட்டு எருமையைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தேன். எருமைக்கு என்னதான் உள்ளார்ந்த விருப்பம் இருந்தாலும்(?) ஒரு கட்டாய வல்லுறவு மாதிரிதான் அவரின் ஏற்பாடு இருந்தது. முன்புறம் ஒரு தடுப்பு, பக்கவாட்டில் இரண்டு தடுப்பு கொண்ட ஓர் அமைப்புக்குள் எருமையை நிறுத்தினார். எருமைக் கிடாயை முதுகைத் தடவியபடி கூட்டிவந்தார். அது அதற்கும் ஒரு "ததிருனானா" மொமன்ட்தான். எருமையை முகர்ந்து பார்த்தது, நக்கியது - போர்பிளே - அப்புறம் சம்பவம் நடந்து முடிந்தது. 

ஒரு நிமிடம் கழித்து எருமைக் கயிற்றை என்னிடம் கொடுத்து, "நானு நாளைக்கு அந்த ஆசாரிகிட்ட மம்பட்டி வாங்க வர்றப்ப தோட்டத்துக்கு வர்றன்னு சொல்லிரு தாத்தன்கிட்ட" என்றார். எருமைக்கு மகிழ்ச்சியா இல்லை; பாரதிராஜா படம் மாதிரி வெள்ளைத் தேவதைகள் ஓடினார்களா என எனக்குத் தெரியவில்லை.

அடுத்து வயிறு பெருப்பதையும், கோழை நிற்பதையும் வைத்து சினை பிடித்துவிட்டது தாத்தாவுக்குத் தெரிந்துவிடும். சில மாத சிறப்புக் கவனிப்புக்கு பின், எருமை ஈற்றுக்கு ரெடியாகிவிடும். எருமைகள் நின்றுகொண்டே ஈனும். பனிக்குடம் உடைந்து, முன்னங்கால்கள் இரண்டோடு வெளிவந்து விழும் கன்று. சமயங்களில் தாத்தா கீழே விழும் முன்பே தாங்கிப் பிடித்துக்கொள்வதும் உண்டு. 

எருமைக்கு வென்னீர் குளியல், கன்றைக் குளிப்பாட்டுதல், கால் குழம்பைச் சரி செய்தல் அதற்கு எருமைக்காம்பைப் பிடித்துக்கொடுத்தல் - இப்படியான வேலைகள் நாக்குத் தள்ளி விடும். கன்று குடித்த மிச்ச சீம்பால் வீட்டில் கேக் கட்டிகளாய் இருக்கும் - நண்பர்கள் உறவினர்களுக்கும் உண்டு. அப்போதும் 1 மைல் தொலைவில் இருக்கும் அத்தைக்கு கொண்டுபோய் கொடுக்க ஒரு தூக்குவாளி - அதுவும் நானே!

நிற்க - தான் அரும்பாடு பட்டு பெற்றெடுத்ததையும், தான் சொல்வதையே கன்று கேட்க வேண்டும் என்றும் ஒரு நாளும் எருமை நினைத்ததில்லை. நம்மை மாதிரி - ஓனர்ஷிப்புக்கும், பேரன்டிங்குக்கும் வித்தியாசம் தெரியாத ஜென்மமா அது?

அக்டோபர்/நவம்பர் மாத மழைகளில் நிரம்பிக்கிடக்கும் குளங்கள். தும்பைச்செடிகளின் பனியில் நனையும் கால்கள், கற்றாழை வாசம், இயல்பாய் பெருகும் ஓடை, சட்டென கடக்கும் சிறு பாம்பு எல்லாவற்றையும் தாண்டி எருமையைக் குளிக்க வைக்க 'ஐயர் குளம்' கூட்டிசெல்வோம். சில வைணவக் கோயில்கள் இருப்பதால் பிராமண குடும்பங்கள் இருந்தன, இருக்கின்றன. நம் ஊர் காளி அவர்கள் புண்ணியத்தில் "காளியம்மன்" ஆகிவிட்டது. கரையில் நின்று தயங்கும் எருமை சட்டென நீரில் இறங்கி நீந்திவிடும். கரையில் வைத்து, தேங்காய்ச் சிராட்டியில் அதைத் தேய்ப்பது அதற்கு எதோ மல்டிஷவர் பாத் பீலிங் கொடுத்திருக்க வேண்டும்.  கொம்புக்கு பெயின்ட் அடித்து, கொசுவுக்குக் கற்பூரம் காட்டி ஓடவைப்பதோடு முடிந்துவிடும் மாட்டுப் பொங்கல்.

எருமைகள் பொங்கலை விரும்பிச் சாப்பிடுவதில்லை - டாக்டர் கு.கணேசன் கட்டுரையையும் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், நமக்கு முன்பே அதற்கு 'கார்போ ரிச் புட்' நல்லதல்ல என்று தெரிந்திருக்கிறது.

இப்போதெல்லாம், எருமைகளுக்கும் ஊசி மூலம் நடக்கிறது இனப்பெருக்கம். "தத்திருனான"வும் இல்லை, கிடா வாசமும் இல்லை. பாலைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முன் அம்மணமாய் நிற்கின்றன எருமைகள். மிஷின்களில் சிக்கி துவண்டுபோன காம்புகள். பிறந்தது எருமைக்கிடாவெனில் ஒப்பாரியும், கிடாரியெனில் குத்துப்பாட்டும் கேட்கின்றன விவசாய வீடுகளில். மனிதர்கள், தங்கள் இனத்தில் மட்டுமே பெண் பிள்ளைகள் வேண்டுவதில்லை.

பசு மாடுகளை சில நரிகள் அரசியலுக்காக தெய்வங்களாக்க முயற்சித்த பின், எருமையின் மவுசு குறைந்து போயிற்று. பாவமாய் நிற்கின்றன எருமைகள். ஒரு எருமையை வளர்க்க வேண்டும் சில காலத்திற்கு பின். 

பொங்கல், மாட்டுப் பொங்கல் எல்லாம் கொண்டாடியபோது எருமைகள் நினைவு ஆக்கிரமித்துக்கொண்டது. மனிதர்களை சமத்துவமாகப் பார்ப்பது மட்டும் இல்லை; மாடுகளையுகூட சமமாகப் பார்க்கக் கற்க வேண்டும் இந்தச் சமூகம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

6

6

1




பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Gokulraj N   11 months ago

மிகவும் ரசித்து படித்தேன். படிக்க படிக்க நானும் என் தாத்தனும் பசு மட்டினை இனச்சேர்க்கைக்கு 3கிமீ தூரம் ஓட்டிச் சென்ற நியாபகம் என்னை ஆனந்த படுத்தியது. 🥰

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Subadharman K R   2 years ago

மனிதர்கள், தங்கள் இனத்தில் மட்டுமே பெண் பிள்ளைகள் வேண்டுவதில்லை. 🔥

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Subbaian Saravanakumar   2 years ago

நம் மனதின் சிந்தனை - அருமை, அருமை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

MAHESHWARAN S   2 years ago

கட்டூரை அருமையாக உள்ளது...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rishihar Subash Chandran   2 years ago

நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்ட உண்மையான உணர்வுகள். கட்டுரை ஆசிரியருக்கு (வாசகருக்கு) என் நன்றிகள்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எதிர்மறைச் சித்திரங்கள்திட்டமிடா நகரமயமாக்கல்நீதிபதிகள் நியமனம்how to write covering letter for job applicationசோறுபி.ஏ.கிருஷ்ணன்சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாமதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரநேருஅசோக் வர்தன் ஷெட்டிஇது சுற்றுலா தலம்முக்கியமானவை எண்கள்இளைஞர் அணிகௌசிக் தேகா கட்டுரைரஜினிமனப்பாடக் கல்விஅத்திமரத்துக்கொல்லைசண்முநாதன் சமஸ்மூக்கு ஒழுகுதல்ஒலிப்பியல்உங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?பிரதமர்வினைச்சொல்எதேச்சதிகாரம்ராகுல் நடைப்பயணம் இதுவரை சாதித்தது என்ன?பஸ் பாஸ்லாபமின்மைகடற்கரைஉற்பத்தி நிறுவனம்தமிழ் ஒன்றே போதும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!