பேட்டி, புதையல் 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு தனியன்: ராம்நாத் கோயங்கா பேட்டி

சோட்டு கராடியா
21 Aug 2021, 8:03 pm
1

மிழிலும், தமிழுக்கு வெளியிலும் எழுதப்பட்ட, காலத்தால் அழிந்திடாத அரிதான கட்டுரைகள், பேட்டிகளை அதற்குரியவர்களின் அனுமதியைப் பெற்று, தமிழ் மக்களுக்குத் தந்திட ‘அருஞ்சொல்’ விழைகிறது. அப்படியான பேட்டிகளில் ஒன்றே இது.

இந்திய ஊடகத் துறையில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும’த்தை ஒரு சாம்ராஜ்ஜியத்தைப் போல உருவாக்கி, கட்டியாண்ட ராம்நாத் கோயங்கா ‘இந்தியா டுடே’ இதழுக்கு அளித்த பேட்டி. நெருக்கடிக் காலத்தில் இந்திராவுடனான யுத்தத்துக்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வருவதற்குப் பெரும் பங்காற்றினார் கோயங்கா. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பிரதமருக்கு மிகுந்த நெருக்கமானவராகவும் இருந்தார். அந்தக் காலகட்டத்தில், 1979-ல் அளிக்கப்பட்ட இந்தப் பேட்டியானது கோயங்காவையும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும’த்தையும் பற்றி அறிந்துகொள்ள மட்டும் அல்லாது அன்றைய இந்தியாவின் அரசியல் சூழலையும் அறிந்துகொள்ள உதவுகிறது. 

ராம்நாத் கோயங்கா, இந்த நாட்டின் மிகுந்த சர்ச்சைக்குரிய தினசரியின் அதிபர், இந்த மாதத் தொடக்கத்தில் 77-வது வயதை எட்டியுள்ளார். அவருடைய ஆங்கிலப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 10 பெரிய பதிப்புகளோடு நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் இந்திய நாளிதழாக இன்று திகழ்கிறது. வழக்கம்போலவே தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் உள்ள குடும்ப இல்லத்திலேயே இந்த ஆண்டும் கொண்டாடியிருக்கிறார் கோயங்கா. மகன் பகவன் தாஸ் கோயங்கா, மருமகள் சரோஜ் கோயங்காவுடன் சேர்ந்து வாழும் இல்லத்தில், ‘இந்தியா டுடே’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோட்டு கராடியாவுக்கு வெள்ளை வெளேரென்ற கதர் வேட்டி, குர்த்தா அணிந்து தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் பேட்டியளித்தார். 

பத்திரிகைகள் அனைத்தும் சேர்ந்து அரசுக்கு உத்வேகம் ஊட்டினால் அன்றி நாட்டில் மாற்றங்கள் தானாகவே ஏற்பட்டுவிடாது என்கிறார் கோயங்கா. என்ன செய்ய வேண்டும் என்று பத்திரிகைகளால்தான் அரசுகளுக்கு வழிகாட்ட முடியும் என்கிறார். நம்முடைய பத்திரிகையாளர்களும் ஊழல்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சிலரை ஒரு பாட்டில் விஸ்கிக்கு எளிதாக வாங்கிவிடலாம். அவர்களை நாம் மாற்றாவிட்டால், நாட்டை மாற்ற முடியாது என்றும் கூறுகிறார். 

எளிமையான தேவைகள், பழக்கவழக்கங்களைக் கொண்டவராகவே கோயங்கா இருக்கிறார். ஆனாலும், முன்கோபி. சில வேளைகளில் அவருடைய முகம் சிவக்கிறது. தன்னுடைய ஆற்றல் முழுவதையும் பத்திரிகை நிறுவனத்துக்காகவே செலவிடுகிறார். தன்னுடைய நிறுவனத்தில் 6,000 பேருக்கும் மேல் பணியாற்றினாலும் மிகச் சிலர்தான் அவருக்கு நெருக்கமான – விசுவாசமான ஊழியர்களாக இருக்கின்றனர் என்கிறார். பெரும்பாலும் தனிமையை விரும்புகிறார். தன்னுடைய நிறுவனத்துக்குச் சொந்தமான ஏதேனும் ஒரு விருந்தினர் இல்லத்தில்தான் ஆண்டில் பெரும்பாலான நாட்களைக் கழிக்கிறார். டெல்லியில் இருந்தாலும் மதறாஸில் இருந்தாலும் மிக நீண்ட சாப்பாட்டு மேஜையின் ஆரம்பத்தில் தனியொரு ஆளாக அமர்ந்து சாப்பிடுகிறார். நவீன காலப் பத்திரிகாதிபர்களைப் போல ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசம், அடிக்கடி ஜெட் விமானப் பயணம் என்று அவர் ஆடம்பரமாக வாழ்வதில்லை. ஆனால், உலகம் முழுவதிலும் உள்ள எந்தப் பத்திரிகாதிபருக்கும் அவர் ஆற்றலில், துணிச்சலில், தொலைநோக்கில் குறைந்தவர் அல்ல. கோயங்காவுடனான நேர்காணலின் சுருக்கம்: 

உங்களைப் பற்றி? 

இசை, திரைப்படம் இப்படி எந்தப் பொழுதுபோக்கும் பிடிக்காது. தொடர்ந்து வேலை செய்வதே என் பொழுதுபோக்கு. நீண்ட தூரம், நீண்ட நேரம் நடப்பது மிகவும் பிடிக்கும். அதிகாலையில் 4.30 மணிக்குக் கண்விழிப்பேன். ஐந்து மைல் தொலைவு நடப்பேன். மாலையிலும் இதையே செய்வேன். மது அருந்துவதில்லை. புகைபிடிப்பதில்லை. சாப்பிடும் உணவு எளிமையானது; சைவம்தான் சாப்பிடுவேன். பெரிய கார்களை விரும்புவதில்லை. என்னிடமுள்ள பெரிய கார் என்றாலே அது, பியட்தான். பெரும்பாலும் நானே ஓட்டுவேன். மிக நீண்ட தொலைவு என்றால் டிரைவரை உடன் அழைத்துச் செல்வேன். பொருளாதாரம் பற்றிய புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். நெருங்கிய நண்பர்கள் என்று மிகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களிலும் அதிகம் பேர் என்னுடைய நிறுவன ஊழியர்கள். பெரும்பாலும் தனித்தே இருக்கப் பிடிக்கும். இப்போது என்னுடைய குடும்பம் என்பது என்னுடைய மகனும் மருமகளும்தான். (இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்). 

உங்களுடைய இளமைப் பருவம் பற்றி?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். 1942-ல் ரயில்களுக்கும் ரயில் பாலங்களுக்கும் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தேன். அதற்காகக் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டேன். தென்னிந்தியாவில்தான் இவற்றைச் செய்தேன். எனக்காக அல்ல; நாட்டுக்காக. 

இந்தியப் பத்திரிகைகளைப் பற்றி? 

இந்தியாவில் இப்போதுள்ள செய்திப் பத்திரிகைகளில் பெரும்பாலானவை இப்போதைய முதலாளிகளின் கொள்ளுத்தாத்தா, தாத்தா அல்லது அப்பா ஆகியோரால் தொடங்கப்பட்டவை. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’வைத் தொடங்கியது இப்போதைய முதலாளிகள் அல்ல. இப்போது யார் வேண்டுமானாலும் அந்த வண்டியில் ஏறிக்கொள்ளலாம். ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையைத் தொடங்கியதும் இப்போதைய முதலாளிகள் அல்ல. ‘தி இந்து’ பத்திரிகையும் நூறு ஆண்டுகளுக்கு முன் நான்கு தேசபக்தர்களால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் என்னைத் தவிர சொந்தமாகப் பத்திரிகையைத் தொடங்கி, வளர்த்து, பெரிய சாம்ராஜ்யமாக மாற்றியது யாரும் இல்லை. 

உங்களுடைய வெற்றியைப் பற்றி? 

செய்தித்தாள் உரிமையாளருடைய மனதில் அச்சம் என்பது எப்போதும் குடியேறிவிடக் கூடாது. அந்தந்தச் சூழலுக்கேற்ப எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். எந்த ஒரு பத்திரிகை அதிபரும் அரசியலருக்குப் பயப்படக் கூடாது. அரசியலர்களுக்குத் தங்களுடைய நலன்தான் முக்கியம்; பத்திரிகையாளர்களுக்கு மக்களும் நாடும்தான் முக்கியம். 

அரசியலர்களும் அவர்கள் பங்கேற்கும் அரசுகளும் இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். செய்தித்தாள்கள் சமூக வாழ்க்கையின் நிரந்தர அம்சம். பத்திரிகையிலிருந்து கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும், தரத்தை உயர்த்த மீண்டும் பத்திரிகையின் வளர்ச்சிக்கே நான் முதலீடு செய்தேன். கடந்த 45 ஆண்டுகளில் மூன்றே மூன்று முறைதான் முதலீட்டாளர்களுக்கு லாப ஈவு (டிவிடெண்ட்) கொடுத்திருக்கிறேன். 

செய்தித்தாளை நடத்துவதை வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்கக் கூடாது, அதை ஒரு தவமாக கருதிச் செய்ய வேண்டும். மக்களுடைய நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற ஆவல் பத்திரிகைகளுக்கு இருக்க வேண்டும். வியாபார நோக்கமும், நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியமும் இணைந்தே இருக்க வேண்டும். வளமான வியாபார உத்தி இல்லாமல் பத்திரிகையை நடத்த முடியாது. 

தொழிலதிபர் ஜி.டி.பிர்லா எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். தொழில் துறை சம்பந்தமான அவருடைய கண்ணோட்டம் வேறு; என்னுடைய கண்ணோட்டம் வேறு. ‘தொழில் துறைதான் எல்லாமும், அதுவே முழு முதலானதும்’ என்று அவர் கருதுகிறார். ‘தொழிலைவிட சமூகத்துக்கான கடமை பெரிது’ என்று நான் நினைக்கிறேன். எந்தத் தொழிலாக இருந்தாலும் சமூகக் கடமையை நிறைவேற்றாமல் வெல்ல முடியாது. என்னுடைய பத்திரிகைகளை அந்த லட்சியத்துடன்தான் வளர்த்துவருகிறேன். 

எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தைப் பற்றி? 

எட்டாண்டுகளாகப் பத்திரிகையின் நிர்வாகத்திலோ அமைப்பிலோ என்னால் பெரிய மாறுதல்களைச் செய்ய முடியவில்லை. முதலாவது காரணம், என்னிடத்தில் போதிய பணம் இல்லை. மாறுதல்களைச் செய்யும் அளவுக்கு நவீன இயந்திரங்களும் என்னிடம் இல்லை. எனவே, தரத்தில் உயர்ந்த பத்திரிகையை அச்சிட முடியவில்லை. என்னிடம் பண வசதி குறைவாக இருப்பதால் நான் விரும்பிய தரத்தில், பத்திரிகையாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியவில்லை. அரசின் ஊழல்களை விசாரிக்கப் புலனாய்வுப் பத்திரிகையாளர்களையும் நியமிக்க முடியவில்லை. இப்போதோ அன்றாடம் ஒரு புலனாய்வுச் செய்தியாவது இல்லாமல் பத்திரிகை வரக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். விசாரணையே இல்லாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் சிறைகளில் வாடுவதைச் செய்தியாக அளித்திருக்கிறோம். நாட்டில் உள்ள பெரிய சிறைகளில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமலேயே 80,000 பேர் இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்கிறோம். பிரான்சிலிருந்து ரூ.2.5 கோடி செலவில் வெப் ஆஃப்செட் அச்சு இயந்திரம் வாங்கியிருக்கிறோம். இது பத்திரிகை அச்சாவதை விரைவுபடுத்துவதுடன் தரத்தையும் உயர்த்தும். நாட்டிலேயே மிகச் சிறந்த நாளிதழைக் கொடுக்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்நாளுக்குள் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவேதான், இப்போது இதில் வேகம் காட்டுகிறேன். 

வெளிநாட்டு ஆசிரியரைப் பற்றி? 

என்னுடைய பத்திரிகைகளின் தரத்தைக் கூட்ட உலகின் எந்த நாட்டிலிருந்தும் ஆசிரியர்களை நியமித்துக்கொள்வேன். இதற்காக நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர் ஆகியோரிடம் சொல்லி அனுமதி பெற்றிருக்கிறேன். ‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு ராஃபர்ட்டியை ஆசிரியராக நியமிக்க அவர்களே ஆட்சேபம் தெரிவிக்கவில்லை; மற்றவர்கள் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது? அவருடைய வருகையால் தங்களுக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுபவர்கள் முனகலாம்; அப்படிப்பட்டவர்கள் வேலைக்கே தகுதியற்றவர்கள். 

நிறுவன ஊழியர்களைப் பற்றி? 

அருண் சௌரிக்குப் பத்திரிகைத் துறையில் அனுபவம் போதாது என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஆனால், அவர் கற்றுக்கொள்ள விரும்புகிறார். எல்லா நியமனங்கள், இடமாறுதல்களுக்கும் அவரே பொறுப்பு. பத்திரிகை அலுவலகப் பணிகள் நடைபெறுவதை அவர் பார்த்துக்கொள்கிறார். முல்கோகர்தான் தலைமை ஆசிரியர். அவர் இல்லாதபட்சத்தில் அஜித் பட்டாசார்ஜி பொறுப்பு வகிப்பார். ஒவ்வொரு பத்திரிகை மையத்துக்கும் எனக்கு மூன்று, நான்கு அல்லது ஐந்து ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். பம்பாயில் நான்போரியாவை நியமித்திருக்கிறேன். பெங்களூரில் நரசிம்மனின் புதல்வரை அமர்த்தியிருக்கிறேன். குல்தீப் (நய்யார்) என்னுடைய அரசியல் நிருபர். உயர் பதவியில் இருக்கும் பத்திரிகையாளர்களிடம் மட்டும்தான் பேசுவேன். செய்தி ஆசிரியருக்கும் குறைவான அந்தஸ்தில் உள்ள பத்திரிகையாளர்களுடன் பேச மாட்டேன். அவர்கள் கும்பலாக இருக்கும்போதோ, மூத்த பத்திரிகையாளர் உடன் இருக்கும்போதோ மட்டும் பேசுவேன். மூத்த பத்திரிகையாளர்களை விட்டுவிட்டு இளையவர்களை அழைத்துப் பேசினால், அவர்களுக்கு மூத்தவர்கள் மீதுள்ள அச்சமும் மரியாதையும் குறைந்துவிடும் என்பதால் அப்படிப் பேச மாட்டேன். 

ஆசிரியரை நீக்கியது பற்றி? 

நெருக்கடிநிலையின்போது ஆசிரியர் பொறுப்பிலிருந்து முல்கோகர் கட்டாயமாக நீக்கப்பட்டபோது, வி.கே.நரசிம்மன் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆசிரியராக இருந்தார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்குத் தாற்காலிக ஆசிரியர் என்று அறிவித்துக்கொள்ள அவர் தனது பெயரைத் தந்தால் மாதம்தோறும் ரூ.1,000 தருகிறோம் என்று எழுத்துப் பூர்வமாகவே அவரிடம் தெரிவித்தோம். அவர் நேர்மையும் ஒழுக்கமும் மிக்கவர். நெருக்கடிநிலை விலக்கப்பட்ட பிறகு, நெருக்கடிநிலைக் காலத்தில் பழிவாங்கப்பட்டவர்களுக்குப் புது வாழ்வு தர வேண்டியது என்னுடைய கடமை. அதைச் செய்யாமல் போனால், நானொரு நம்பிக்கைத் துரோகி. நரசிம்மன் தன்னுடைய பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும், அப்படித் திரும்பினாலும் ரூ.1,000 தொடர்ந்து தரப்படும் என்று அவரிடம் கூறினோம். “கோயங்கா, உங்களுடைய நிலைமை எனக்கு நன்கு புரிகிறது. என்னைத் தலைமை ஆசிரியராக இடைக்காலத்தில் அறிவித்தீர்கள். இப்போது அந்த அந்தஸ்துக்குக் கீழே இன்னொருவரிடம் என்னால் வேலை பார்க்க முடியாது. அதே சமயம், ஒரு பத்திரிகைக்கு இரண்டு தலைமை ஆசிரியர்களும் இருக்க முடியாது” என்று நரசிம்மன் கூறினார். முல்கோகருடைய இடத்துக்கு, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வேலை பார்த்த இளநிலை நிருபரை நியமிக்க வேண்டும் என்று மேடம் (இந்திரா காந்தி) விரும்பினார். நான் மறுத்துவிட்டேன். எனவே, முல்கோகரை மீண்டும் தலைமை ஆசிரியராகக் கொண்டுவராவிட்டால் என்னைவிட இகழ்ச்சிக்குரியவன் வேறு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். (எனவே, எந்த ஆசிரியரையும் நான் நீக்கவில்லை). 

அரசியலர்களைப் பற்றி? 

எந்த அரசியலராலும் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்த முடியாது. காரணம், அவர்களால் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அரசியலர்கள் தொடங்கிய அனைத்துப் பத்திரிகைகளுமே மூடப்பட்டுவிட்டன; நேருவின் ‘நேஷனல் ஹெரால்டு’ உள்பட. பத்திரிகைகள் உங்களுடைய சொந்த சொத்து அல்ல. நீங்கள் பத்திரிகை அதிபராக இருந்தால் சொந்த நலனுக்காகவும் விளம்பரத்துக்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்தக் கூடாது!

நன்றி: ‘இந்தியா டுடே’, தமிழில்: சாரி

ம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது. 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

கோயங்கா இந்த நேர்காணலில் சொல்லியிருப்பது பெரும்பாலும் உண்மை என்பது அதை அடுத்து வந்த காலங்கள் உணர்த்தியுள்ளன. ஜனசங்கம் உறுப்பினர்களில் 42 சதவிகிதம் உண்மையான உறுப்பினர்கள் என்று அவர் சொன்னது, மிக விரைவில் ஒன்றிய அரசு அவர்களது கைகளுக்கு வரும் என்று கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளது. தனி ஒரு நபராக மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை கட்டி எழுப்பியது, நெருக்கடி நிலை காலத்தில் எல்லாம் வல்ல திருமதி காந்தி அவர்களின் அரசை எதிர்த்து நின்றதும், இன்றைய ஊடகர்கள் கோயங்கா அவர்களிடம் கற்க வேண்டிய பாடங்களாகும். அருண் ஷோரி கோயங்காவின் கண்டுபிடிப்புத்தான். இந்த நேர்காணலை தற்போது தமிழாக்கம் செய்து பிரசுரித்ததின் மூலம், ஊடகராக வர விரும்புவோருக்கு யார் ஆதர்சமாக இருக்கத் தகுந்தவர் என்பதை சுட்டியுள்ளீர்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மயிர்தான் பிரச்சினையா?கவலை தரும் நிதி நிர்வாகம்!பக்கங்களுக்குள் சிக்கித் திணறாத வரலாற்றுப் பெட்டகமவேலைப் பட்டியல்சர்தார் படேல்அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?அன்வர் ராஜாதிருவிழா1ஜி நெட்வொர்க்நிர்மலா சீதாராமன்ஆனந்த் நகர்11 பேர் விடுதலைஎதிர்வினைகள்பெரிய சவால்கள்வறுமைசொத்துரிமைஅப்பாகாஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டதுகவின்கேர்ப.திருமாவேலன்கடலை நன்கு அறிந்திருந்தார்கள் சோழர்கள்: விஜய் சகுஜடாலா டாலாதேவதைஆவணம்ராஜீவ் கொலை வழக்குசுயசார்புஆசிரியர் - மாணவர் பற்றாக்குறைவேலை இழப்பில் இருந்து மீள்வது எப்படி?தமிழில் அர்ச்சனைகார்போவுக்கு குட்பை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!