கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

இயான் ஜேக்: தனித்துவமான ஆளுமை

ராமச்சந்திர குஹா
10 Nov 2022, 5:00 am
0

புகழ் வாய்ந்த பலரை என்னுடைய வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்; அறிஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பொதுநலத் தொண்டர்கள் என்று அவர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள். அவர்கள் அனைவருமே சுயமரியாதை உணர்வு மிக்கவர்கள். இவர்களில் சிலர் தங்களுடைய திறமைகளை, சாதனைகளை வெளிப்படையாகப் பெருமைபடப் பேசுவர். மிகச் சிலர், தன்னடக்கத்துடன் தங்களுடைய பெருமையைப் பேசுவார்கள்; எப்படியோ சந்தித்த ஓரிரு நிமிஷங்களுக்கெல்லாம் தாங்கள் எப்படிப்பட்டவர் என்பதை எதிரிலிருப்பவர் உணரும்படிச் செய்துவிடுவார்கள். தாங்கள் மிகவும் முக்கியமானவர் என்ற எண்ணம் அவர்களுக்குள் எப்போதுமே இருக்கிறது. 

இவ்வாறு நான் சந்தித்துள்ள நூற்றுக்கணக்கான சாதனையாளர்களில் இரண்டு பேர் மட்டுமே தனித்தன்மை வாய்ந்தவர்கள். முதலாமவர், கிரிக்கெட் நட்சத்திரம் ஜி.ஆர்.விஸ்வநாத். இன்னொருவர் சில நாள்களுக்கு முன்னால் மறைந்த எழுத்தாளர் இயான் ஜேக்.

விஸ்வநாத்தைப் போலவே இயான் ஜேக்கும் தன்னுடைய துறையில் மிகச் சிறப்பானவராக இருந்தும், கண்ணியம் காத்தவர். அவருடைய தலைமுறையில் மிகச் சிறந்த எழுத்தாளராகவும் இலக்கியராகவும் திகழ்ந்தவர். அதேவேளையில், மிகவும் கருணையுள்ள மனிதராகவும் வாழ்ந்தார். அவருடைய எழுத்துகளைப் படிப்பது மிகவும் இன்பம் தரும். அவரைத் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பது மகிழத்தக்க நற்பேறு.

ஜேக்கின் பின்னணி

குடும்பப் பின்னணியால் ஸ்காட்லாந்தவர், சுபாவத்தால் பிரிட்டிஷ்காரர். இந்தியா மீது ஆர்வம் மிக்கவராக இருந்தார். ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழின் நிருபராக 1970களில் இந்தியா வந்தவர், மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தார். புத்தகப் பதிப்பாளர் ஊர்வசி புட்டாலியாவும், ஆவணப்படத் தயாரிப்பாளர் நஸ்ரின் முன்னி கபீரும் அவருக்கு நெருக்கமான இந்திய நண்பர்கள். அவருக்கு வங்காளத்தையும் வங்காளிகளையும் மிகவும் பிடிக்கும். இந்திய ரயில்களில் பயணித்து பல இந்திய நகரங்களுக்குச் செல்வதை விரும்பினார். ஆனால், கல்கத்தா மட்டுமே இந்தியாவில் வசிப்பதற்கு தான் அதிகம் விரும்பும் நகரம் என்று ஒரு முறை எழுதியிருக்கிறார்.

1990களின் பிற்பகுதியில் இயான் ஜேக், அவருடைய மனைவி லிண்டி ஷார்ப் ஆகியோருக்கு முன்னி கபீர்தான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்குப் பிறகு நாங்கள் லண்டன், பெங்களூரு மற்றும் பிற ஊர்களில் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் நீண்ட – தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்தும் இருந்தது.    

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது 2014 அக்டோபரில் அவரிடம் ஒரு கேள்வியைக் கடிதம் மூலம் கேட்டேன்: “பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி 1921இல் தொடங்கியபோது அவருடைய நோக்கத்தைச் சந்தேகித்தும் அவரை அர்ச்சித்தும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் வசைமாரிப் பொழிந்தபோது, ‘கிளாஸ்கோ ஹெரால்ட்’ என்ற பத்திரிகையில் மட்டும் நன்கு சிந்தித்தும், மிகுந்த நடுநிலையுடனும் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது; அது எந்த மாதிரியான நாளிதழ், கருத்து சுதந்திரம் மிக்கதா, இடதுசாரிகளுடையதா?” என்று கேட்டிருந்தேன்.

சாதாரணமான அந்தக் கேள்விக்கு, சிந்தனையில் நிலைத்து நிற்கக்கூடிய பதிலை இயான் ஜேக் எழுதினார், அதை அப்படியே பிரசுரிக்க விரும்புகிறேன். “ஹெரால்ட் பத்திரிகையில் நான் 1965இல் சேர்ந்தேன். அது மரபார்ந்த கருத்துகளை ஆதரிக்கும், மரபார்ந்த் தொழிலதிபர்களுக்கு ஆதரவான பத்திரிகை. விரைவாக தேய்ந்துவரும் நகரின் கடந்த கால தொழில் வளம் குறித்து பெருமை பேசும் குணம் கொண்டது. கப்பல் கட்டும் தொழில் குறித்து செய்தி தருவதற்காக மட்டும் ஒன்றல்ல - இரண்டு நிருபர்களைக் கொண்டது! அதற்கு தொழிற்சங்கங்களைப் பிடிக்காது. அந்தப் பத்திரிகையில் தலையங்கங்கள் எழுதிய இருவரில் ஒருவர் டோரி (கன்சர்வேடிவ் – மரபியக் கட்சி) கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்தவர் ஜார்ஜ் மெக்டொனால்ட் பிரேசர். அவர் ‘ஃபிளாஷ்மேன்’ என்ற பெயரில் தொடர் நாவல்களை எழுதி புகழும் பணமும் சேர்த்தார். பிரிட்டிஷ் பேரரசு குறித்து நகைச்சுவையாக எழுதப்பட்டாலும், அவை கடுமையான விமர்சனமாக இருக்கவில்லை.

“1921இல் பத்திரிகை வேறு விதமாக இருந்திருக்கலாம். அப்போது பத்திரிகை ஆசிரியராக இருந்தவர் சர். ராபர்ட் புரூஸ். பிரதமராக இருந்த லிபரல் கட்சித் தலைவர் டேவிட் லாயிட் ஜார்ஜுக்கு நெருக்கமான நண்பராக இருந்ததால், ‘சர்’ பட்டம் வாங்கியவர். ஆசிரியர் புரூஸ் உள்ளூர் விவகாரங்களைத்தான் எழுதுவார். வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்து எழுதும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிடுவார். ஆகவே, மற்ற யாரோ ஒருவர்தான் எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுத அவருக்குச் சிறிதளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பத்திரிகையின் நெறிமுறைகள் என்னவோ (இந்தியாவுக்கு) அனுதாபம் காட்டுவதாக இருந்திருக்காது!” 

இந்தத் தனிப்பட்ட கடிதம், பொது விஷயங்களை எழுதும்போது இயான் ஜேக் எப்படி நடுநிலையோடு இருப்பார் என்பதைக் காட்டுகிறது. தான் எழுதும் விஷயம் குறித்த ஆழ்ந்த ஞானம், சமூக – அரசியல் வரலாறுகளைக் கலந்து தரும் திறமை, தொழில்நுட்பங்கள் மீது ஈர்ப்பு, மனிதமனங்களின் தனிப்பட்ட போக்கு, உலகத்தோடு பிரிட்டனுக்கிருந்த அன்றைய சிக்கலான உறவு ஆகிய அனைத்தையும் நன்கு வெளிப்படுத்துவார் இயான் ஜேக்.

நண்பர்களின் புகழுரைகள்

அவருடன் நெருங்கிப் பணிபுரிந்த சகா - ஜான் லாயிட், ‘தி கார்டியன்’ பத்திரிகையில் நினைவஞ்சலிக் கட்டுரை எழுதியிருக்கிறார். “என்னுடைய சமகாலத்தவரான இயான் ஜேக், சாக்ரடீஸைப் போல உரையாடல் மூலம் கருத்துகளைத் தெரிவிப்பவர், “அதைப் பற்றிய தகவல் என்ன…” என்று கேட்டு, அதன் அடி ஆழம் வரை சென்று அலசி எழுதுவார். அவருடைய எழுத்து எப்போதும் கனிவான தொனியிலேயே இருக்கும். பிரிட்டனில் வேறு எந்தப் பத்திரிகையாளரும் அவருடைய நிலையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கவில்லை - இறக்கும் வரையில் அவர் எழுதினார்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

லாயிடின் நினைவஞ்சலிக் கட்டுரையைப் படித்துவிட்டு சில வாசகர்கள் எழுதினர், “சாட்டர்டே கார்டியனில் (சனிக்கிழமை பதிப்பு) முதலில் நாங்கள் தேடிப் படிப்பது இயான் ஜேக்கின் கட்டுரைகளைத்தான்” என்று.

“கார்டியனின் எழுத்தாளர்களிலேயே அவர்தான் மிகச் சிறந்தவர். மற்றவர்களால் நெருங்க முடியாத அளவுக்கு நல்ல தரத்தில் எழுதினார். ஆனால், அவரை அதிகம் எழுதவிடாமல் ஒளித்து வைப்பார்களோ என்ற எண்ணமே ஏற்படும். இணையதளத்தில் அவருடைய எழுத்துகள் அதிகம் வந்ததில்லை” என்று ஒரு வாசகர் நினைவுகூர்ந்துள்ளார். “அவர் கௌரவமானவர், நல்ல பண்புள்ளவர், எழுத்துத்திறமை அதிகம் வாய்க்கப்பெற்றவர்” என்று இன்னொருவர் புகழ்ந்திருக்கிறார்.

வேறொருவர் “அந்த வாசகரின் பாராட்டு என்னுடைய நண்பருக்கு (இயான் ஜேக்) மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆக்ஸ்போர்டு – கேம்பிரிட்ஜில் படித்த எழுத்தாளர்களைப் போல அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்பவர் அல்ல, எதை எழுதுவதாக இருந்தாலும் சொந்த அனுபவத்திலிருந்தே சொல்வார்” என்று  பாராட்டியிருக்கிறார். 

மிகச் சிறப்பான உரைநடையில் எழுதிய ஜேக், தன்னுடைய எழுத்து அவ்வளவு ஈர்ப்பானது என்ற நம்பிக்கையில்லாமலேயே இருந்தார் என்பது வினோதம். ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை எழுதுவதும், ‘கிராண்டா’ இதழுக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளில் எழுதுவதும், புத்தக விமர்சனங்களை வெளியிடும் ‘லண்டன் ரெவ்யூவு’க்கு எழுதுவதும் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மூன்று வெவ்வேறு தலைப்புகளில் பிரசுரமாகியுள்ளன. அதில் ஒன்று அற்புதமான ‘எ கன்ட்ரி ஃபார்மர்லி நேம்டு கிரேட் பிரிட்டன்’ (A country Formerly Named Great Britain). அடுத்தது இந்தியா குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘மொஃபசல் ஜங்ஷன்’ (Mofussil Junction).

ஒரேயொரு விஷயம் தொடர்பாக முழுப் புத்தகம் எழுத வேண்டும் என்ற பலருடைய கோரிக்கையை அவர் நீண்ட காலம் ஏற்கவேயில்லை. ரயில்வே குறித்து தனி புத்தகம் எழுதுமாறு பதிப்பாளர்கள் அவரைக் கெஞ்சினர். ஸ்காட்லாந்தில் வளர்ந்த இளமைக்காலம் குறித்து எழுதுமாறு நண்பர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர். அவருடைய வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் கிளைட் ஆறு மற்றும் அதன் சுற்று வட்டாரம் பற்றிய சமூக வரலாற்றை எழுதத் தொடங்கினார். அதில் இரண்டு அத்தியாயங்களை - திருத்தப்படாத நிலையிலேயே - படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவை மிகச் சிறப்பானவை. அவருடைய சொந்த நினைவுகளையும் வரலாற்றையும் தொழில்நுட்ப விவரங்களையும் பின்னிப் பிணைத்திருந்தார். நீராவி எஞ்ஜினைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் குறித்த சொற்சித்திரம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஜேக்கின் எழுத்து எப்படிப்பட்டது?

இயான் ஜேக்கின் எழுத்து எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். அவருடைய கட்டுரைகளைப் போலவே கடிதங்களும் தகவல்களைக் கொட்டுபவையாகவும், உள் மர்மங்களைத் தெரியப்படுத்துபவையாகவும் இருக்கும். கட்டுரைகளைவிட கடிதங்களில் தகவல்கள் ‘தாராளமாக’ இருக்கும். ஸ்காட்லாந்தவரான கார்டன் பிரௌன் பிரதமரானபோது, “அவர் எப்படி” என்று ஜேக்கைக் கேட்டேன். “எப்போது பேசினாலும் நிறையத் தகவல்களைக் கொட்டிக்கொண்டே இருப்பார், அதுதான் அவருடைய குணாதிசயம். ஒரு பிரதமராகப் பதவி வகிக்க இது அவசியமான தகுதியா என்பது வேறு; நினைத்தாலே பயத்தை ஏற்படுத்தும் சர்கோஸியைவிட இவர் பிரதமராக இருப்பதே மேல்” என்று பதில் எழுதியிருந்தார்.

சில ஆண்டுகள் கழித்து, அவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் இப்படிக் கேட்டிருந்தேன். “நான் சந்திக்கும் இளைஞர்களில் ஒரு பகுதியினர், மாவோவின் தீவிர அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் காந்தியை அளவுக்கு மீறி விமர்சிப்பவர்களாகவும் இருக்கின்றனர்; இன்னொரு பிரிவினரோ பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்து என்ற கருத்தை மையமாகக் கொண்ட வலுவான நாட்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர், அவர்களும் காந்தியைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். இன்றைய இளைஞர்களுக்கு ஏன் இப்படி தீவிரவாதமும் வன்முறையும் ஈர்ப்பாக இருக்கின்றன?” என்று கேட்டிருந்தேன்.

“நல்ல கேள்விதான், டெஸ்டோஸ்ட்ரோன் காரணமாக இருக்குமா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் வேட்டையாடியும் காடுகளில் உணவு சேகரித்தும் போராட்டத்துடன் வாழ்ந்துவந்தான். பிறகு அடிக்கடி ஏற்பட்ட போர்களில் பங்கேற்று போர் செய்யும் உணர்வுகளுக்கு வடிகால்களைக் கண்டான். இப்போது இவற்றுக்கெல்லாம் வழியில்லை என்பதால் சாதாரண மனித வாழ்க்கையிலேயே வன்செயல்களுக்கு வாய்ப்புள்ளதா என்று தேடுகின்றான். உடல் உழைப்பில்கூட பெரும் பகுதியை இப்போது பெண்கள்தான் அளிக்கின்றனர், ஆண்களுக்கு உடலுழைப்பு குறைந்துவிட்டது, வேலை என்று கிடைத்தாலும் அதுவும் உடலை வருத்திச் செய்யும் வேலைகளாக இல்லாததால் சிந்தனை இப்படியாகிறது” என்று பதில் அளித்தார்.

அவருக்கு நான் எழுதிய ஒரு கட்டுரையை 2008இல் அனுப்பியிருந்தேன். அதில் நோபல் விருது பெறும் எழுத்தாளர்கள், அதற்குப் பிறகு எழுதுவது வேகமாக வற்றிவிடுகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1913க்குப் பிறகு சிலாகிக்கும்படியாக எதையாவது எழுதினாரா? இந்தக் கேள்விக்கு உங்களுடைய கல்கத்தா பற்றிய சிந்தனைக் கட்டுரைகளில் பதில் அளியுங்கள்” என்று அவரைக் கேட்டிருந்தேன்.

இதற்குப் பதில் எழுதுவதற்கு முன்னால், இது தொடர்பான அவருடைய கருத்தை இப்படிப் பகிர்ந்துகொண்டார். “ஒருகட்டத்துக்கு மேல் எழுத்தாளர்கள் எழுதுவதையே நிறுத்திவிட வேண்டும் என்பதை நைபால் நிரூபிக்கிறார். ராத் இதில் விதிவிலக்கு; பெல்லோவும்கூட. எழுத்தாளர்கள், குறிப்பாக நாவலாசிரியர்கள் ‘இனி எழுதுவதற்கு எதுவும் இல்லை’ என்கிற அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள். எழுத்தாளனின் தொழில் எப்படிப்பட்டது என்றால் பணத்துக்காகவும் சுய கௌரவத்துக்காகவும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

நோபல் விருதுக்குப் பிறகு எழுத்தாளர்கள் ஒடுங்கிவிடுவதற்கு மூப்பும் ஒரு காரணம். எழுத்தில் வெற்றி தொடரும் வரை எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். (ஓரான்) பாமுக் இளைஞராக இருக்கிறார், கவனிக்க வேண்டும்” என்று பதில் எழுதினார்.

கதை எழுதுகிறவர்களுக்குப் பொருந்துவது, பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும். இந்தியாவிலும் பிரிட்டனிலும் பெரும்பாலான செய்தித்தாள் கட்டுரையாளர்கள் (ஆண்கள் மட்டுமில்லை) பெரும்பாலும் ஊதிப்பெருக்கியும், இப்படித்தான் எழுதுவார்கள் என்று ஊகிக்கும் அளவுக்கும் எழுதுகிறார்கள். இயான் ஜேக் அதில் விதிவிலக்கு. ‘கிளைட்’ பற்றிய புத்தகத்தை அவர் முடிக்கவில்லை என்றாலும் அவர் எழுதியுள்ள கட்டுரைத் தொகுப்பானது மிக விரிவானது, பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. ஆற்றல் மிக்க இளம் தொகுப்பாளர் (எடிட்டர்) இதை வெகு எளிதாக வரிசைப்படுத்தி, பல புத்தகங்களாக அடுத்தடுத்து வெளியிட்டுவிடலாம். அப்படிச் செய்யும்போது அவருடைய கடிதங்களையும் தொகுத்து, கடிதத் திரட்டாகவும் பல தொகுப்புகள் வெளியிட வேண்டும்.

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1

அதிகம் வாசிக்கப்பட்டவை

பணவீக்கம்குடியரசுமருத்துவக் கல்விதிராவிடம்சமூக – அரசியல் விவகாரம்நயி தலீம்கிண்டர் கார்டன் சேனைநிலக்கரி தட்டுப்பாடுமாதிரி பள்ளிகள்க.சுவாமிநாதன்கோம்பை அன்வர்ரத்னகிரிப்ராஸ்டேட் புற்றுநோய்இன்டர்வியூசென்னை மேயர்சமஸ் வடலூர்சியரா நூஜன்ட்காந்தி ஏன் தேவை என்பதற்கு 10 காரணங்கள்சிறிய மருத்துவமனைகள்கலைஞர் சண்முகநாதன் பேட்டிபொருளியல்பங்குச் சந்தைஉலக வர்த்தகம்வட மாநிலங்கள்கூட்டத்தொடர்டி.எம்.கிருஷ்ணா சமஸ்பாவப்பட்ட ஆண்அருந்ததி ராய் ஆசாதிவிவியன் போஸ்நீதிபதி ஜீவன் ரெட்டி குழு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!