கட்டுரை, அரசியல், கல்வி 7 நிமிட வாசிப்பு

கல்வியாளர்களுக்கு முதுகெலும்பு தேவை

ராமச்சந்திர குஹா
18 Oct 2022, 5:00 am
0

புகழ்பெற்ற ஐஐடி ஒன்றின் (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) இயக்குநரைக் கடந்த மாதத்தில் சந்தித்தேன். மிகச் சிறந்த விஞ்ஞானி என்பதுடன் அவர் திறமையான நிர்வாகியும் ஆவார். இப்போது எட்டு ஐஐடிகள் இயக்குநர்களே நியமிக்கப்படாமல் இயங்கும் தகவலை அவர் தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திலும் இதற்கு முன்னர் இயக்குநராக இருந்தவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது, அடுத்தவரைத் தேர்ந்தெடுக்க ஆள்தெரிவுக் குழுவும் நியமிக்கப்பட்டுவிட்டது, ஆனால் ஒன்றுக்குக்கூட குழு தெரிவு செய்தவரின் பெயரை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் குழுக்கள் தெரிவு செய்த நபர்கள் நியமிக்கப்படத் தகுதியானவர்கள்தானா என்பதை ‘நாக்பூர்’ (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) சரிபார்த்துக்கொண்டிருப்பதுதான்!

முன்னெப்போதும் இல்லாத தலையீடு

நாகபுரி என்ற பொருள்பொதிந்த வார்த்தையை, ஐஐடி இயக்குநர் எள்ளலுடன்தான் குறிப்பிட்டார். இருப்பினும் அவர் சொன்ன யாவற்றுக்கும் பின்னால் சோகமே படந்திருக்கிறது. உயர் கல்வியில் அரசியல் குறுக்கீடு என்பது மோடி அரசிடமிருந்து மட்டும் தொடங்கிவிடவில்லை என்பது அனுபவம் வாய்ந்த அந்த அறிவியலாளருக்கும் தெரியும். கடந்த கால அரசுகளும்கூட தங்களுக்கு வேண்டியவர்கள், உரிய பதவிகளில் நியமிக்கப்பட அக்கறை காட்டி இருக்கின்றன. ஒன்றிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவோ, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு உறுப்பினராகவோ இன்னாரைப் போடுங்கள் என்று கல்வியமைச்சர் உரிய அமைப்புகளிடம் பரிந்துரைக்கத் தவறியதில்லை. 

ஆயினும் இப்போதுதான் முதல் முறையாக, ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றையும் அரசியல் குறுக்கீடுகள் இவ்வளவு மோசமாக சூழ்ந்திருக்கின்றன. நிர்வாகத் தலைமைக்கு அறிவியல் அறிவும், நிர்வாகத்திறமையும் மட்டும் போதுமான தகுதிகளாக இப்போது இருக்கவில்லை; சங்கப் பரிவாரங்களின் கருத்தியல்களுக்கு இசைந்தவராகவும் இருப்பாரா என்று ஆராயப்படுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, அறிவுஜீவிகளுக்கு எதிரான மனப்போக்கு கொண்ட அரசுகளிலேயே உச்சமானது என்று 2015இல் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். ஐஐடி, ஐஐஎம் நிர்வாகப் பதவிகளுக்கான நிர்வாகிகள் தேர்வு என்பது இதில் அடையாள நடவடிக்கை மட்டுமே. இந்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் எப்படிச் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதைக்கூட தங்களுடைய விருப்பத்துக்கேற்ப தீவிரமாகக் கட்டுப்படுத்தும் நோக்கமே இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கிறது. 

நம்முடைய கல்வி நிலையங்களில் சுதந்திரமான சிந்தனையும் வெளிப்படையான விவாதங்களும் ஊக்குவிக்கப்படுவதில்லை, சில வேளைகளில் தடைகூட விதிக்கப்படுகிறது. பிரதமரும் பாஜகவும் கொண்டுள்ள சித்தாந்தங்களையும் அரசியல் செயல்திட்டங்களையும் ஏற்றுக்கொள்வார்களா என்பது மட்டுமே பார்க்கப்படுகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வு

சமீப காலமாக இந்திய அரசும், அரசியல் கட்சித் தொண்டர்களும் அறிவாளிகளின் சிந்தனைச் சுதந்திரம் – செயல்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது நிகழத்திவரும் தாக்குதல்களை டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை ஆசிரியர்களும் மாணவர்களும் ஆவணப்படுத்தி அட்டவணைகளைத் தயாரித்துள்ளனர். அவற்றை ஆறு வகையாகப் பிரித்து விளக்கமும் தந்துள்ளனர். அவை வருமாறு:

முதல் அட்டவணையானது, குறிப்பிட்ட மதக்குழுவின் சிந்தனைகளுக்கும் விருப்பு-வெறுப்புக்கும் அவமதிப்பாக இருக்கிறது என்று கருதக்கூடிய புத்தகங்கள் பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களிலிருந்தும் பொது விநியோகத்திலிருந்தும்கூட எப்படித் திரும்பப் பெறப்பட்டன என்று பேசுகிறது; இந்நூல்களின் பெயர்கள் – ஆசிரியர்கள் ஆகிய விவரங்கள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது அட்டவணையானது, கருத்தரங்குகளைப் பற்றியது. மாணவர்கள் அல்லது அந்தந்தப் பாடத்துறையினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகளை தொடர்புள்ள கல்லூரிகளின் நிர்வாகத்தினரால் அல்லது வலதுசாரி அரசியல் கட்சிகளின் தொண்டர்களால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது அல்லது ரத்துசெய்யப்பட்ட விவரங்கள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு 69 நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

விருதுகள் பல பெற்ற ஆவணப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்த்தன் தயாரித்து, ஆனால் திரையிடப்படாமல் 2014 டிசம்பரில் புணே நகரில் தடுக்கப்பட்ட திரைப்பட திரையிடல் சம்பவம் அவற்றில் ஒன்று. சமூகவியல் பேராசிரியர் எம்.என்.பாணினி அரசியல் சார்பற்றவர் என்றாலும், ஒருகாலத்தில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார் என்ற காரணத்துக்காகவே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2016 பிப்ரவரியில் அவர் நிகழ்த்தவிருந்த உரை தடுத்து நிறுத்தி பிறகு ரத்து செய்யப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், சண்டீகர் நகரில் ‘காந்திஜியும் சமூக ஒற்றுமையும்’ என்ற தலைப்பில் 2018 ஜனவரியில் நிகழ்த்திய உரை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தால் (ஏபிவிபி) பாதியிலேயே இடைமறித்து நிறுத்தப்பட்டது. இந்த அமைப்பு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாலும் யாரும் இதைத் தண்டிப்பதே இல்லை.

அரசுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளுக்காக அவதூறுச்சட்டப்படி அல்லது தேச விரோதச் செயல் சட்டப்படி குற்றவியல் வழக்குகளுக்கு உள்ளான பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல், மூன்றாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் உள்ள 37 நிகழ்வுகளும், ‘காஷ்மீர்’, ‘இந்துக் கடவுளர்களின் உருவங்கள்’, ‘குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா’ விவகாரங்கள் தொடர்பானவை.

நாலாவது அட்டவணையானது, இந்தியப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பானது. வலதுசாரி மாணவர் அமைப்பால் தாக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட காயத்தால் மரணம் அடைந்த உஜ்ஜையினி பேராசிரியர் பற்றிய துயரச் சம்பவம் அதில் ஒன்று; அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்ட அறிஞரான பேராசிரியர் எம்.எம்.கால்புர்கி, கர்நாடக மாநிலம், தார்வாடில் 2015இல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னொன்று; சம்ஸ்கிருதம் பயின்று பட்டம் பெற்றிருந்தாலும் காசி இந்து பல்கலைக்கழகத்தில் கற்பிக்க நியமிக்கப்பட்டவரை மாணவர்கள் புறக்கணித்து பலவந்தமாக இடமாறுதல் செய்யவைத்த சம்பவம் மற்றொன்று, அப்படிச் செய்யக் காரணம் அவர் முஸ்லிம் என்பது மட்டுமே!

ஐந்தாவது அட்டவணையானது, இன்னும் வித்தியாசமானது. நியமனம் பெற்றும் ஆசிரியப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுக்கப்பட்டு பதவி விலகச் செய்யப்பட்ட பேராசிரியர்கள், அறிஞர்கள் தொடர்பானது. இதற்கெல்லாம் காரணம் அரசியல் சார்புடன் தரப்பட்ட அழுத்தம் மட்டுமே. (இந்த 24இல் கட்டுரையாளனான அடியேனும் தொடர்புள்ள நிகழ்வு இருக்கிறது. ஆமதாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி தரப்பட்டும் பாஜக – ஏபிவிபி தந்த அழுத்தம் காரணமாக அதை என்னால் மேற்கொள்ள முடியவில்லை). 

ஆறாவது அட்டவணையானது, வெளிநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் இந்தியாவுக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டு, மாநாடுகளில் பேச முடியாமல் திரும்ப அனுப்பப்பட்டது தொடர்பானதாகும். இந்தச் சம்பவங்களில் தொடர்புள்ள வெளிநாட்டுப் பேராசிரியர்களும் அறிஞர்களும் தடுக்கப்பட்டதற்கான காரணங்களை வெளிப்படையாகக் கூறத் தயங்குவதால் இந்த அட்டவணையை முழுமையான விவரங்களுடன் தயாரிக்க முடியவில்லை. உண்மைகளைச் சொன்னால் எதிர்காலத்திலும் ‘விசா’ தரப்படாமல் தடுக்கப்பட்டுவிடுவோமோ என்றே பெரும்பாலானவர்கள் அஞ்சுகின்றனர். 

ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிரான இனவெறிச் சம்பவங்களை இதில் சேர்க்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வெளிநாட்டு அறிஞர்கள் இங்கே வரவேற்கப்படுவதில்லை என்பது புரியும். இது தொடர்பான விவரங்களை ‘தி வயர்’ இணையதளத்திலும் பேராசிரியர் நந்தினி சுந்தர் எழுதி ‘தி இந்தியா ஃபோரம்’ இணையதளத்தில் பதிப்பித்த கட்டுரையிலும் வாசிக்கலாம்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் மாண்பு

கல்வி நிலையங்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் தொடர்பாக அட்டவணை தயாரித்த டெல்லி பல்கலைக்கழக சமூகவியல் துறையினர், கட்சி சார்பு ஏதுமில்லாமல் பணிகளைச் செய்துள்ளனர். வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசால், முதல்வர் குறித்த கேலிச்சித்திரத்தைப் பகிர்ந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆசிரியர் துன்புறுத்தப்பட்டதும்கூட இதில் பட்டியலிட்டுள்ளது.  

இந்த ஆண்டு நான் படித்த டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நூறாவது ஆண்டு. ஆய்வு நோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும், பிற கருத்துகளையும் ஏற்கும் பக்குவத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தது டெல்லி பல்கலைக்கழகம்தான். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் படித்த பிறகு, ஆராய்ச்சிக்காக ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் கொல்கத்தாவில் உள்ள கல்விக்கூடத்தில் சேர்ந்தேன். பிறகு பெங்களூரு, கொல்கத்தா, புது தில்லி ஆகிய நகரங்களின் வெவ்வேறு கல்வி நிலையங்களில் பணியாற்றினேன். இந்திய பல்கலைக்கழகங்களுடனேயே எனது வாழ்க்கையும் தொழிலும் பின்னிப் பிணைந்திருக்கும் அக்கறையில் சொல்கிறேன் - கல்வி நிலையங்களின் சுதந்திரமான செயல்பாடுகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் எனக்குத் தாங்க முடியாத வேதனையையும் அச்சத்தையுமே ஏற்படுத்துகின்றன.

அரசு நிதியுதவியில் நடைபெறும் பல்கலைக்கழகங்கள் இப்படித் தாக்குதலில் பெரும் பகுதியைச் சுமக்க நேர்ந்தாலும், தனியார் பல்கலைக்கழகங்கள் இத்தகைய குறுக்கிடல்களுக்கு விதிவிலக்கானவை அல்ல. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பழிவாங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்களாகவே தங்கள் கல்வி நிறுவனத் துறைகளில் அறிவார்ந்த சுதந்திரச் செயல்களைக் கட்டுப்படுத்திவிடுகின்றனர். 

ஒரு தனியார் பல்கலைக்கழகமானது தன்னுடைய நிறுவனத்தின் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் சமூகவலைதளங்களில் எதைப் பதிவுசெய்கிறார்கள் என்பதைக்கூட இடைவிடாமல் கண்காணிக்கிறது. ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார். இப்படி சமாதானத்தை விலைக்கு வாங்க முற்படும் செயல்கள் சில வேளைகளில், சரணாகதி அடைவதில்தான் போய் முடியும்.

கல்வியாளர்களும் பொறுப்பாளிகள்

மாணவர், ஆசிரியர், ஆய்வாளர், நோக்கர் என்ற வகையில் ஐம்பது ஆண்டுகளாக இந்தியப் பல்கலைக்கழகங்களைத் தெரிந்துவைத்திருக்கிறேன். இப்போதுள்ளதைப் போல எந்தக் காலத்திலும் அது நோஞ்சானாகவும், உள் – வெளி மிரட்டல்களின் சுமைகளால் அழுத்தப்பட்டும், கட்டுண்டு கிடந்தது இல்லை. இந்திரா காந்தி நெருக்கடிநிலை அமல்படுத்திய காலத்துக்குப் பிறகு, கல்வி கற்பிக்கவும் – ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உகந்த சூழல் இப்போதுதான் நிலவவில்லை. அதேசமயம், இந்த நிலைக்காக முழுப் பழிகளையும் அரசு, ஆளுங்கட்சி மீது மீது மட்டும் நாம் சுமத்திவிட முடியாது. பல்கலைக்கழகங்களின் நிர்வாகிகள், துணைவேந்தர்கள், இயக்குநர்கள் ஆகியோரும்கூட இதற்குக் காரணம். அவர்கள் அரசுகளும் - ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக குண்டர்கள் விடுக்கும் மிரட்டல்களுக்குக்கூட எளிதாக இலக்காகிவிடுகின்றனர். 

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்றால் அதன் நிர்வாகிகளுக்கு ‘வளையாத முதுகெலும்புக்கு’ வழி செய்தால்தான் உண்டு!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

5

3




1

செலவுக் குறைப்புரஷ்யாநிலக்கரிநயி தலீம்வர்ணாசிரம தர்மம்ஜனதா தளம்நிதிநிலை அறிக்கை 2023-24டாடாதசைநார் வலிக்குத் தீர்வு என்ன?நான் அம்மா ஆகவில்லையேஸ்விக்கி ட்ரான்ஸியன்ட் ஃபெசிலிட்டிஅமிர்த காலம்கன்னியாகுமரிலிமிடட் எடிசன்சர்வாதிகார நாடுகள்பொருளாதார இறையாண்மைஜேம்ஸ் பால்ட்வின்அரசின் கடமைப.சிதம்பரம் பேட்டிராம் – ரஹீம் யாத்திரைதனியார்மயமாக்கல்திறந்தவெளிச் சிறைகுற்றவியல் சட்டங்கள்பொறியாளர் மு.இராமநாதன்மோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்உதயநிதி'நீதியரசர் எஸ்.அப்துல் நசீர்ப்ரெய்ன் டம்ப்கதைதெலுங்கரா பெரியார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!