கட்டுரை, வரலாறு, ஆளுமைகள், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

மண்டேலா, வின்னி: இணையற்ற இணையர்!

ராமச்சந்திர குஹா
12 Jul 2023, 5:00 am
1

தென்னாப்பிரிக்கா மீது எனக்கு நீண்ட காலமாகவே ஈர்ப்பு உண்டு, 1995இல் அங்கே குடியேறிவிடக்கூட நினைத்தேன். முதல் முறையாக அந்த நாட்டில் அப்போதுதான் எல்லா இனத்தவரும் வாக்களிக்க உரிமை பெற்ற பொதுத் தேர்தல் நடந்தது, நெல்சன் மண்டேலா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை அந்த நாடும், மக்களும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் என்னுள் மிகுந்தது. ஆனால், நான் விரும்பியபடி அங்கு சென்று பார்க்கவோ, குடியேறவோ எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அந்நாடு குறித்து படித்தும், பேசியும் தகவல்களைச் சேகரித்துவந்தேன்.

ஐந்து முறை அந்நாட்டுக்குச் சென்று திரும்பினேன். நண்பர்களைச் சந்திக்கவும், அந்நாட்டில் சுமார் இருபதாண்டுகளைக் கழித்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குறித்து அந்நாட்டு ஆவணக்காப்பகங்களில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று படிக்கவும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டேன்.

ஓர் இணையரின் கதை

தென்னாப்பிரிக்கா மீதும் அந்நாட்டு மக்கள் மீதும் எனக்கிருந்த ஆர்வத்தை சமீபத்தில் வாசித்த ஒரு புத்தகம் அதிகப்படுத்திவிட்டது. ‘வின்னி அண்ட் நெல்சன்’ (Winnie and Nelson) என்ற தலைப்பில் ஜானி ஸ்டெயின்பர்க் எழுதியது அந்தப் புத்தகம்; மிகவும் அலைக்கழிப்புக்கு உள்ளான அந்நாட்டு வரலாற்றை ஓர் இணையரின் வாழ்க்கைக் கதை மூலம் சுவையாகச் சொல்கிறார் ஆசிரியர். நிறவெறியையே கொள்கையாகக் கொண்ட அந்த வெள்ளை அரசின் செயல்களால் பல்வேறு சிக்கல்களும் மோதல்களும் நிரம்பிய வரலாற்றைக் கொண்ட அந்நாட்டை அருகிலிருந்து பார்ப்பதைப்போல உணரச் செய்கிறார். அவ்விருவரும் 1957இல் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதிலிருந்து கதை தொடர்கிறது. 

வின்னியினுடைய கலகலப்பான சுபாவமும் கிளர்ச்சியூட்டும் அழகும் நெல்சனை வேரற்ற மரம் போல காதலில் வீழ்த்திவிடுகிறது. வின்னியைவிட இருபதாண்டுகள் மூத்தவரான நெல்சன் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளும் பெற்றவர், இருப்பினும் வின்னியைத் தீவிரமாக விரும்பினார், உடன் சேர்த்துக்கொள்வதில் உறுதியாக இருந்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) கட்சியின் வளர்ந்துவரும் தலைவரான நெல்சனின் ஆளுமை, வின்னியை அப்படியே ஆக்கிரமித்துவிட்டது.

ஆழமான விவரிப்பு 

‘திருமணச் சித்திரம்’ என்ற துணைத் தலைப்பில் இருவரும் இணையரான கதையைச் சொல்கிறார் ஸ்டெயின்பர்க். இது மிகவும் துல்லியமான தகவல்களைக் கொண்டிருப்பதுடன் மிகையாகவோ குறையாகவோ இல்லாமல் மிதமான விவரணைகளுடன் இருக்கிறது. இருவருக்கும் இடையில் அடுத்த சில பத்தாண்டுகளில் உருவான உறவு நுட்பமாகவும், ஆணித்தரமாகவும் – அதேவேளையில் அன்றைய காலகட்டத்தின் அரசியல், சமூகப் பின்னணிகளுடனும் சொல்லப்பட்டிருக்கிறது.

நெல்சனும் வின்னியும் தெளிவான கதாபாத்திரங்களாக உலாவுகிறார்கள். அவர்களுடைய போராட்டங்கள், தியாகங்கள், எதிர்காலம் குறித்த அச்சங்கள், ஒவ்வொன்றையும் அவ்விருவரும் பார்த்த தனித்தனிக் கோணங்கள் மிக ஆழமாகவும் விரிவாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அவர்களுடைய தனி வாழ்விலும் பொது வாழ்விலும் உடன் வந்த மற்றவர்கள் பற்றியும் தேவைக்கேற்ப, மிகச் சிறப்பான தகவல்களைத் தருகிறார் ஸ்டெயின்பர்க்; நெல்சனின் தோழர்கள், சுதந்திரப் போராட்டத்தில் அவருக்குப் போட்டியாக வேறு அமைப்புகளில் செயல்பட்டவர்கள், வின்னியின் நண்பர்கள், அவருடனேயே எப்போதும் இருந்த கூட்டாளிகள், நிறவெறி அரசை நிர்வகித்த கொடூரமான குணம் கொண்ட அதிகாரிகள், நிறவெறி அரசுக்கு எதிரான இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட, ஆனால் பிற நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் (அவர்களில் ஏனுகா எஸ்.ரெட்டி குறிப்பிடத்தக்கவர், அவர் தென்னிந்தியாவில் பிறந்து படித்து ஐ.நா.வில் அதிகாரியாகப் பணியாற்றியவர்) என்று பலரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

நெல்சனின் குழந்தைகள் குறித்தும்கூட அக்கறை தந்து எழுதப்பட்டிருக்கிறது; நெல்சனின் அரசியல் – சமூக சூழ்நிலை காரணமாக அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பொது வாழ்வு காரணமாகவும் அதிக நேரம் பிரிந்திருக்க நேர்ந்ததாலும் குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாமல் இருந்துவிட்டார் நெல்சன். நெல்சன், வின்னி இருவரும் பரஸ்பரம் முரண்பட்ட தருணங்களை விவரிப்பதிலும் நூலாசிரியர் தவறவே இல்லை. 

நெல்சனும், வின்னி மடிகிசேலாவும் முதல் முறையாக சந்தித்து ஓராண்டுக்குப் பிறகு 1958இல் திருமணம் செய்துகொண்டனர். அடுத்தடுத்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தனர்; அந்தக் குழந்தைகள் வளர்வதைக்கூட பார்க்க முடியாமல் போய்விட்டது நெல்சனுக்கு. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாள்களுக்கெல்லாம் தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார் மண்டேலா, 1963இல் கைதுசெய்யப்பட்டார். மண்டேலாவைப் பொருத்தவரை அரசியல் முதலிடத்திலும் மண வாழ்க்கை இரண்டாம் இடத்திலும் இருந்தது. வின்னியும் குழந்தைகளும் அவரிடமிருந்து முழுதாகப் பிரிந்துவிட்டனர். 

மக்கள் தலைவர் வின்னி 

இந்தப் புத்தகம் முதல் பக்கம் தொடங்கி, முடிவு வரை கையில் எடுத்தால் கீழே வைக்காமல் படித்து முடிக்கும்படியாக விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார். அதில் மண்டேலாவின் 27 ஆண்டு சிறை வாழ்க்கை பற்றிய பகுதிகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. சிறையில் மண்டேலாவுக்கு வாய்த்த வாழ்க்கையும், ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் குழந்தைகளுடன் வின்னிக்கு ஏற்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களும் இருவருடைய கண்ணோட்டங்கள் வாயிலாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ராபன் தீவில் கடுமையான சிறைத் தண்டனையாக அளிக்கப்பட்ட கல் உடைக்கும் வேலையைச் செய்துகொண்டே, எதிர்கால அரசியல் உத்திகள் குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார் மண்டேலா.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் அன்றைக்கு இருந்த வெவ்வேறு கோஷ்டிகளைப் பற்றி நூலாசிரியர் விவரித்து எழுதியிருக்கிறார். வன்முறையை மிகவும் விரும்பிய கம்யூனிஸ்டுகளும், மிக மிக மென்மையான மிதவாதிகளும் அக்கட்சியில் இருந்தனர். மண்டேலா இவர்களுக்கு இடையில்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவின் சுதந்திரத்துக்காகப் போராடியது மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) மட்டுமல்ல, அனைத்து ஆப்பிரிக்க காங்கிரஸ் (பிஏசி) என்ற கட்சியும் உண்டு.

அந்தக் கட்சியின் தலைவர் ராபர்ட் சொபுக்வே மிகவும் கவர்ச்சிகரமான தலைவர். மண்டேலாவின் கட்சி வெள்ளைக்காரர்களையும் இந்தியர்களையும்கூட சேர்த்துக்கொண்டது; பிஏசி கட்சியோ, ‘இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆப்பிரிக்கர்கள் மட்டுமே’ என்ற எண்ணம் கொண்டிருந்தது. கட்சியின் சித்தாந்தத்தை சொபுக்வே மிக வலுவாக மக்களிடையே முன்வைத்தார், மண்டேலா அவரைப் போட்டியாளராகவும், சில சமயங்களில் தனக்கு ஆபத்தானவராகவும்கூட பார்த்திருக்கிறார்.

இதற்கிடையில் சொவேட்டோவில் வாழ்ந்த வின்னி, குழந்தை - குடும்பம் என்று வாழ்க்கையை நடத்துவதோடு நின்றுவிடாமல், பொது வாழ்வில் தனக்கென்று ஒரு பங்கை ஏற்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். குழந்தைகளை வளர்ப்பதற்கும் வருவாய் ஈட்ட வேலை தேடவும் மிகவும் அல்லல்பட்டார். மண்டேலாவின் மனைவி என்பதால் நிறவெறி அரசு அடிக்கடி அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்து துன்புறுத்திக்கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் மிகவும் அசாத்தியமான துணிச்சலோடு தன்னை மக்களுடைய தலைவராக வின்னியே அறிவித்துக்கொண்டார்; நாட்டின் விடுதலைக்காகச் சிறையில் வாடும் மண்டேலாவின் மனைவி என்ற வகையில் அவருடைய இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பும் பெற்றது. வின்னி எப்போதும் ரசனையுடன் உடை உடுத்துவார், நாடக பாணியில் பேசுவார், நடந்துகொள்வார், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து, அந்த இயக்கம் குறித்து உலகறியச் செய்தார்.

அதேசமயம், முரட்டு சுபாவம் உள்ள சில இளைஞர்கள் அவருக்கு நெருக்கமாக இருந்துகொண்டு மற்றவர்களை மிரட்டுவது, அடிப்பது, சில வேளைகளில் கொலைகூடச் செய்துவிடுவது என்று செயல்பட்டது கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்களாலேயே விரும்பப்படவில்லை. இந்த வன்செயல்களில் பெரும்பாலானவை வின்னிக்குத் தெரியாமல்தான் நடந்தன என்றாலும், சில அடிதடி விவகாரங்கள் அவருடைய ஆசியோடுதான் நடந்தன என்பதையும் மறுக்க முடியாமல் இருந்தது.

மண்டேலாவும் காந்தியும்

தென்னாப்பிரிக்காவை ஆண்ட நிறவெறி ஆட்சியாளர்கள், இனியும் தங்களுடைய கொடூர ஆட்சியைத் தொடர முடியாது என்ற முடிவுக்கு 1980களின் இறுதியில் வந்தனர். இந்த முட்டுக்கட்டை நிலையிலிருந்து மீள்வதற்காக சிறையில் இருந்த மண்டேலாவுடன் பேசத் தொடங்கினர். நிறவெறி அரசின் உளவுத் துறையைச் சேர்ந்த இரண்டு மூத்த வெள்ளை அதிகாரிகள் மண்டேலாவுடன் பல முறை பேசிவிட்டு ரகசிய அறிக்கை ஒன்றை மேலதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பினர்.

‘தான் நம்பிக்கை வைத்துள்ள அரசியல் கொள்கைகளைக் கைவிடவோ, தான் இருக்கும் இயக்கத்துக்கு துரோகம் செய்யவோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கவோ, உடன்படவோ தயாராக இல்லை இந்த மண்டேலா; அவருடைய ஆன்ம பலம் எதிராளிகளைக்கூட வீழ்த்திவிடுகிறது, எவ்வளவு கொடுமைகள் செய்தும் நம் மீது அவருக்கு வெறுப்பே இல்லை, இயல்பாகவே நல்ல கண்ணியத்துடனும் நேர்மையுடனும் நடந்துகொள்கிறார்’ என்று அறிக்கையில் விவரித்துள்ளனர்.

இதைப் படித்தபோது 1922இல் ஆமதாபாதில் தேசத்துரோக வழக்கில் மகாத்மா காந்திக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராபர்ட் புரூம்ஃபீல்ட் நினைவுக்கு வந்தது. “இதுவரை வழக்குகளில் நான் சந்தித்தவர்களைவிட அல்லது சந்திக்கப் போகிறவர்களைவிட நீங்கள் தனி ரகத்தைச் சேர்ந்தவர்; கோடிக்கணக்கான உங்கள் நாட்டு மக்கள் உங்களை மிகப் பெரிய தேசப் பற்றாளராகவும் பெரிய தலைவராகவும் கொண்டாடுகின்றனர்.  உங்களுடைய அரசியல் கருத்துகளை ஏற்காதவர்கள்கூட - மிக உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர், மேன்மையானவர், துறவியைப் போன்ற வாழ்க்கை வாழ்கிறவர் என்றே உயர்வாகக் கருதுகிறார்கள்” என்று குறிப்பிட்டார். அன்றைய பிரிட்டிஷ் சட்டப்படி அவருக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு கூறிய அவர், “நான் இங்கொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இந்தத் தீர்ப்புக்கு பிறகு ஏதேனும் நடந்து, பிரிட்டிஷ் அரசு உங்களுடைய தண்டனையைக் குறைத்தாலோ, விடுதலையே செய்தாலோ அதற்காக மகிழ்ச்சி அடையப் போகிறவர் என்னைவிட இன்னொருவர் இருக்கமாட்டார்” என்று நெகிழ்ந்துள்ளார்.

மண்டேலாவையும் காந்தியையும் சிறையில் தள்ளி, கொடுமைப்படுத்திய ஏகாதிபத்தியவாதிகளிடத்தில்கூட மனிதாபிமான உணர்வைத் தூண்டிவிடும்படி இருந்ததுதான் அவ்விருவரின் பேராள்மை.

மண்டேலாவும் வின்னியும்

இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு 1990 பிப்ரவரியில் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். நிற உணர்வற்ற, உண்மையான ஜனநாயக நாட்டை உருவாக்க விரும்புவதை - வின்னி பக்கத்தில் இருக்க - நிருபர்களிடம் அறிவித்தார் மண்டேலா. ஒரே அரசியல் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு நீண்ட காலம் காதலர்களாகவும் திகழ்ந்தவர்கள் மீண்டும் இணைந்த அந்தக் காட்சி அவர்களுக்குள் இருந்த நெருக்கத்துக்கு சாட்சி போல, ஆனால் பொய்யாகத் தோற்றம் அளித்தது. பிரிந்து வாழ்ந்த அந்த நீண்ட காலம் அவர்களுக்கிடையே சமரசம் செய்துகொள்ள முடியாதபடியான கருத்து வேற்றுமைகளையும் ஏற்படுத்திவிட்டது.

தான் சிறையிலிருந்த காலத்தில் வின்னி செய்த அல்லது செய்வதற்கு உடந்தையாக இருந்த செயல்கள் மண்டேலாவை மனதளவில் மிகவும் காயப்படுத்தியிருந்தன. அவருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பிற தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அவற்றில் தலையாயதாகத் தெரிந்தது மண்டேலாவுக்கு. வின்னியின் ஆதரவாளர்களாக இருந்த இளைஞர்கள் வன்செயல்களில் ஈடுபட்டுவந்தது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

வின்னியைத் திருமணம் செய்துகொண்டு நீண்ட காலமாகத் தவிக்க விட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு காரணமாக, அவரை விட்டுக்கொடுக்காமல்தான் இந்த விவகாரங்களில் பேசிப்பார்த்தார் மண்டேலா. ஆனால், ஒரு கட்டத்தில் அவராலும் அதைச் சரியென்று நியாயப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனவே, அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.  

மண்டேலாவும் வின்னியும் 1996இல் மணவிலக்கு பெற்றனர். நெல்சன் மண்டேலா 2013 டிசம்பரில் மரணித்தது, அதற்கு நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு வின்னி மரணித்தது வரையிலான சம்பவங்களைப் புத்தகம் விவரிக்கிறது. மண்டேலா படுத்த படுக்கையாகி மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த நாள்களில், வின்னி அவரைப் பார்க்க வந்ததை மிகவும் உருக்கமாக சித்தரித்திருக்கிறார் நூலாசிரியர். சிறையிலிருந்தபோது அன்பொழுக வின்னிக்கு மண்டேலா எழுதிய கடிதங்களிலிருந்து சிலவற்றை அவர் நினைவுகூர்ந்திருப்பது படிக்கும்போது கண்ணீரைப் பெருக்குகிறது.

மிகத் தீவிரமாக ஆராய்ந்து, சிறப்பான நடையில் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் கோணங்களையும் அற்புதமாக வெளிக் கொண்டுவந்திருக்கிறது. ஒரு திருமணம், அவர்களுடைய நாடு, அவர்கள் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் என்று யாவுமே நூலில் சிறப்பாகவும் அளவாகவும் இடம்பெற்றுள்ளன.

இதை எந்த வகையிலான புத்தகம் என்று இனம் பிரிப்பதும் கடினம். இது ஒரே சமயத்தில் வரலாறாகவும், இருவரின் வாழ்க்கைக் கதையாகவும், அரசியல் விமர்சனமாகவும், புனைவு இல்லாத உண்மையாகவும் திகழ்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டிலோ அரசியலிலோ அக்கறை இல்லாதவர்கள்கூட ஆர்வமுடன் படிக்கும் விதத்திலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளும் விதத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

1

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   1 year ago

அவரவர் தர்ம நியாயங்கள் அவரவர்களுக்கு சரி. இதில் யாரை குறை சொல்வது. விதி வழியா வாழ்வு? அருமையான நடை. நன்றி

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ராமேஸ்வரம் நகராட்சிகர்நாடக மசோதா‘அமுத கால’ கேள்விகள்நெதன்யாஹுகோணங்கி மீதான பாலியல் குற்றச்சாட்டுசி.பி.எம்.வெள்ளியங்கிரி மலைபெரியதோர் துண்டுநிலத்தடி நீர்லித்தியம்சமூகப் பொறுப்புபிம்பம்ஷங்கர்ராமசுப்ரமணியன்மார்கழி மாதம்மக்கள் மொழிவிஷச் சாராயம்தெலங்கானா முதல்வர்வேங்கைவயல்surgeonஉமர் அப்துல்லா ஸ்டாலின்மரபியர்தற்குறிகள்முஸ்லிம் பெண்கள்ஐன்ஸ்டீனின் போதனைகோர்பசேவ் மரணம்அறிவுப் பசிக்கு விருந்தாகட்டும் அருஞ்சொல்’லின் புததமிழ் நடனம்உபநிடதங்கள்இயற்பியல்ஜாதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!