கட்டுரை, சினிமா, கலாச்சாரம், சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்

சமஸ் | Samas
11 Oct 2022, 5:00 am
2

ன் அலுவலகத்தில் ஒரு படம் உண்டு. தெற்கு மேலே இருக்கும்படி அமைந்த ஆசிய வரைபடம். புதிதாக வருபவர்கள் “இது என்ன தலைகீழாக இருக்கிறது?” என்று கேட்பார்கள். “நேராகத்தான் மாட்டியிருக்கிறது. இப்படியும் உலகத்தைப் பார்க்கலாம்” என்று அவர்களிடம் சொல்வேன்.

உலகம் உருண்டையானது என்பதால், உலகைப் பார்ப்பதற்கு இதுதான் சரியான வரைபடத் திசை என்று கிடையாது. அப்படியென்றால், ஏன் வடக்கு மேலே இருக்கும்படியாக உலக வரைபடம் இருக்கிறது? இரண்டு பெரும் அரசியல் நோக்கங்கள் உண்டு: வல்லாதிக்க நாடுகள் மேலே இருப்பதான பார்வையை அது தருகிறது, தேசிய அரசுகள் உருவாக்கியிருக்கும் திட்டவட்டமான எல்லை வரையறையை அது முன்னிறுத்துகிறது.

இதற்கு மாற்றாக ஓவியர் சுபாஷ் ஷா வடிவமைப்பில் நேபாளத்தைச் சேர்ந்த ‘ஹிமால்’ பத்திரிகை ஒரு படத்தை வெளியிட்டது. அது தெற்கு மேலே இருப்பதாக அமைந்த,  தெற்காசியாவிலிருந்து உலகம் விரிவதான, இலங்கை உச்சியில் இருப்பதான வரைபடம். எல்லைகளைத் தீர்க்கப்படுத்தும் அரசுகளைவிடவும், மக்கள் கலவையை மையப்படுத்தும் படம். எனக்கு இதை ரோஜா முத்தையா நூலக இயக்குநரான நண்பர் சுந்தர் ஓராண்டுக்கு முன் பரிசாகத் தந்தார்.

குமரித் தொடக்கம்

குமரி முனை ஓர் அபூர்வமான கலவை முனை. கடல்களின் சங்கமம் பன்மைத்துவத்துக்கான உருவகம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை நீண்ட காலமாக எனக்கு உண்டு. என்னுடைய பல நூல்களின் பணியை அங்கிருந்தே ஆரம்பித்திருக்கிறேன். கன்னியாகுமரியோடு நாடு முடிகிறது என்பது ஒரு பார்வை என்றால், கன்னியாகுமரியிலிருந்து நாடு ஆரம்பிக்கிறது என்பது ஒரு பார்வை. இரண்டுமே சம மதிப்பு கொண்ட உண்மைகள்.

எப்படியும் இந்தியாவுக்குப் பன்மைத்துவத்தையும் கூட்டாட்சியையும் தமிழ்நாடுதான் போதிக்க முடியும் என்று சொல்வேன். இந்தியாவோ எல்லா வகைகளிலும் வடக்கை மையப்படுத்திய சிந்தனையைக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முழுமையாகக் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை சமீபத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. ரூ.20,000 கோடியில் கட்டப்பட்ட இந்தக் கப்பலை இயக்கும் தொடக்க நிகழ்ச்சி கேரளத்தின் கொச்சியில் நடைபெற்றது. அப்போது இந்தியக் கடற்படைக்கான புதிய கொடியையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில், சத்ரபதி சிவாஜியின் கடற்படையை நினைவுகூர்ந்த மோடி  புதிய கொடியையும் அவருக்கு சமர்ப்பித்தார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சிவாஜிக்குப் பல தலைமுறைகள் முந்தைய, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலுவான கடற்படையையும், கடல் தாண்டிய பெரும் வெற்றிகளையும் குவித்திருந்த சோழர்களின் வரலாறு ஏன் மோடியின் நினைவுக்கு வரவில்லை; நிகழ்ச்சி சோழர்கள் ஆளுகைக்குட்பட்டிருந்த இடத்தில் நடந்தாலும்கூட ராஜேந்திர சோழன் எப்படி மறக்கடிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதில் ஏற்கெனவே இருக்கிறது. இந்தியாவின் வரலாறு வடக்கை மையப்படுத்தியது; தெற்கைப் புறந்தள்ளியது.

அறிவுலகம் இதைத் தொடர்ந்து பேசுகிறது. கூடவே வெகுஜன புத்திக்குச் செல்லும்போது மாற்றங்கள் உண்டாவதற்கான சாத்தியம் பிறக்கும். இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அடைந்திருக்கும் வணிக வெற்றியைக் காட்டிலும் எனக்கு முக்கியமாகத் தோன்றியது, வரலாற்றில் முன்னோடி பேரரசுகளில் ஒன்றை நிர்மாணித்த சோழர்களின், தமிழர்களின், தெற்கின் வரலாற்றுச் செழுமையில் துளியையேனும் இது வடக்குக்குக் கடத்தும். “சோழப் பேரரசு எவ்வளவு வல்லமைக்குரியது என்பதை உள்வாங்க நாம் தவறிவிட்டோம்” என்று மகேந்திரா குழுமத் தலைவரான தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கூறியிருப்பது இதன் ஆரம்பப் புள்ளியாக அமையலாம்.

தமிழ்ச் சன்னதம்

திரைப்படம் உயிர்ப்பாக வந்திருப்பதாகப் பலரும் பேசுகிறார்கள். ‘பாகுபலி’ படத்தை எடுக்க ராஜமௌலிக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது; ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஐந்து மாதங்களில் முடித்துவிட்டார் மணிரத்னம் என்பது பேசப்படுகிறது. படத்துக்கு மூலாதாரமான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலும் கச்சிதமான திட்டமிடல்களைக் கொண்டது.

தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புதினம் எனும் வகைமையின் முன்னோடியான கல்கியால் 1950-1953 காலகட்டத்தில் எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ அவருடைய கடுமையான உழைப்பைக் கோரிய ஒரு பெரும் பணி. தமிழில் மட்டும் அல்லாது, ஆங்கிலம் உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அதிகம் விற்கும் இதழாக அந்தக் காலகட்டத்தில்தான் அவருடைய ‘கல்கி’ இதழ் உருவெடுத்துவந்தது. தலையங்கம், கட்டுரைகள், ஏனையோர் படைப்புகள் செம்மையாக்கம், நிர்வாகப் பணிகள் இவ்வளவுக்கும் இடையில், தேய்ந்துகொண்டிருந்த உடலுடன்தான் இந்த நாவலைப் பத்திரிகையில் தொடராக எழுதினார் கல்கி. இந்த நாவல் முடிந்த அடுத்த ஆண்டிலேயே 55 வயதில் கல்கி மறைந்துவிட்டார்.

அன்றைக்கு கல்கிக்குக் கிடைத்த வரலாற்று நூல்கள், தரவுகள் குறைவு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ உள்ளிட்ட ஆங்கில நூல்கள், டி.வி.சதாசிவ பண்டாரத்தாரின் ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’, ஏ.பாலசுந்தரத்தின் ‘சோழன் ராஜராஜன்’ உள்ளிட்ட தமிழ் நூல்கள் இப்படி அவருக்குக் கிடைத்த வரலாற்று நூல்களில் கிடைத்த தகவல்களைப் பழந்தமிழ் இலக்கிய நூல்களோடு ஒப்பிட்டு கிடைத்த புரிதல்களிலிருந்தே தன்னுடைய புனைவுகளை உருவாக்கினார் கல்கி. ‘பொன்னியின் செல்வன்’ போன்ற ஒரு பிரம்மாண்ட திரைப்படம் கூட்டுழைப்பு என்றால், பிரம்மாண்டமான அந்த நாவல் பெருமளவில் தனியுழைப்பு.

இதுவரை தமிழில் அதிகம் விற்ற நாவல் என்பதோடு, தொடர்ந்தும் இன்றுவரை ஒவ்வொரு புத்தகக்காட்சியிலும் அதிகம் விற்கும் நூல்களில் ஒன்றாக ‘பொன்னியின் செல்வன்’ திகழ்வதற்கு முக்கியமான காரணம், தமிழின் ஆட்கொள்ளும் சன்னதம் உறைந்த படைப்பு அது.

ராஜராஜன் எதன் தொன்மம்?

தமிழ் மனம் எதையும் வாரிச் சுருட்டும் ஆற்றல் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு உண்டு. திரைப்படமும் இன்று திருவிழாபோல மக்களால் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம், நாவல் கொண்டிருக்கும் தமிழ் சன்னதவுணர்வை மணிரத்னம் அணி திரைப்படத்துக்கும் கடத்தியிருக்கிறது. மேலும், சமகாலத்தில் அதிகாரம் அற்ற ஒரு சமூகமானது கடந்த காலத்திலிருந்து பெறும் உணர்வுகளைப் படைப்புகளின் உள்ளிருந்து மட்டும் விவரிக்க முடியாது. தமிழ் மன்னர்களில் ராஜராஜனுக்கான தனித்துவம் இதன் வழியாகவே நிலைபெறுகிறது.

ராஜராஜன் என்னவாக இருந்தான், அவனுடைய ஆட்சி எத்தகையதாக இருந்தது, அவனுடைய காலத்தில் அவன் எதிர்கொண்ட எதிரிகள் யார், அவன் கொண்டிருந்த சமூக, அரசியல் பார்வை என்ன? இவை எதுவும் இன்றைய சாமானியத் தமிழனுக்குப் பொருட்டு இல்லை. இன்று ராஜராஜன் ஒரு தொன்மம்.  ஜல்லிக்கட்டு காளைபோலத் தமிழ் உட்புகுந்திருக்கும் ஒரு பாயும் அடையாளம்.

வரலாற்றில் ராஜராஜன் இன்றைய விழுமியங்களோடு பொருந்தாதவனாக இருந்திருக்கலாம்; நாவலில் ராஷ்டிரகூடர்களை எதிர்த்து அவன் சண்டையிடலாம்; திரைப்படத்தில் பாண்டியர்களை எதிர்த்து அவன் சண்டையிடலாம்; இன்றைய தமிழ்ப் பார்வையாளனுக்கு அவனுடைய விருப்ப சுயத்தின் வரலாற்றுப் பிரதிபலிப்பு ராஜராஜன். புனைவில் ராஜராஜனால் எதிர்கொள்ளப்படுபவர்கள் சமகாலகட்டத்தில் இவனை அடக்குமுறைக்குள்ளாக்கி இருக்கும் எதிரிகள். 

மணிரத்னத்தின் முன்னிற்கும் கடமை

இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ விழாவில், தன்னுடைய முதல் நன்றியைக் கல்கிக்குத் தெரிவித்து, உரையைத் தொடங்கியதைப் பார்த்தேன். வரவேற்புக்குரிய மரியாதை. உலகம் தழுவிய படமாக ‘பொன்னியின் செல்வன்’ எடுக்கப்பட்டு, வணிகரீதியாகப் பெரும் வெற்றியையும் குவித்திருக்கும் சூழலில், இதற்கான எழுத்து சார்ந்த பங்களிப்பைக் கல்கியின் குடும்பத்துக்கு மணிரத்னம் செலுத்துவதே அவர் சொல்லில் வெளிப்படுத்தும் மரியாதைக்குச் செயல்பூர்வ அர்த்தம் கொடுக்கும் என்று எண்ணுகிறேன். கல்கியின் எழுத்துகள் பொதுவுடைமை ஆகிவிட்டதால், சட்டபூர்வ நிர்ப்பந்தங்கள் ஏதும் மணிரத்னத்துக்கு இல்லை. அதேசமயம், தார்மிகரீதியாக இதை அவர் செய்வது அவசியம். 

புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’க்கும், மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று இரண்டையும் அறிந்த ஒருவர் கேட்கக்கூடும்; இரு படைப்புகளுக்கும் இடையே அவ்வளவு பெரிய வேறுபாடு உண்டு. ஒருசமயம் மகேந்திரனிடம் உரையாடுகையில், இதைக் கேட்டபோது சொன்னார், “கரு யாருடையது, என் மனதுக்குத் தெரியும் இல்லையா?” 

இயக்குநர் வெற்றிமாறனிடமும் இதே மேன்மையை இன்று காண்கிறேன். அவர் எடுத்தாளும் கதைக்கும், படத்தில் அவர் உருவாக்கும் திரைக்கதைக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும், எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்கு - அடையாள நிமித்தமாக அல்ல; கண்ணியமான தொகை - செல்வதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவர் கையாளும் ‘வாடிவாசல்’ கதைக்காக சி.சு.செல்லப்பாவின் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொகை பெரியது.

நீதிநாயகம் கே.சந்துருவின் வாழ்க்கையிலிருந்தும், எழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கதை என்பதால், ‘ஜெய்பீம்’ படத்துக்கு அவருக்குப் பெரிய தொகையைக் கையளிக்க முன்வந்தது சூர்யாவின் நிறுவனம். சந்துரு வழக்கம்போல அதை மறுத்துவிட்டார். பின்னர் அடையாளபூர்வமாக வெறும் ரூ.100/- பெற்றுக்கொண்டு எழுதிக்கொடுத்தார். சந்துருவின் இந்த மேன்மைக்குப் பதில் மரியாதை செலுத்த முற்பட்டது ‘ஜெய்பீம்’ குழு. 

பழங்குடிகள் வாழ்வைப் பேசும் படம் என்பதால், ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய கதைகளே படமாகி இருப்பதால், தார்மிக அடிப்படையில் அவர்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று இயக்குநர் த.செ.ஞானவேலும், தயாரிப்பாளர் சூர்யாவும் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தனர். சந்துருவின் இந்த முடிவுக்குப் பின்னர் பழங்குடியினருக்கான தொகையை மேலும் அதிகமாக்கினர். விளைவாக ரூ.1 கோடியைப் பழங்குடிகள் சங்கத்தினருக்காகப் பேராசிரியர் கல்யாணியின் கைகளில் கொடுத்தது ‘ஜெய்பீம்’ குழு.

எழுத்தாளர்கள் மீதான மரியாதை இப்படித்தான் தார்மிகரீதியாக நம் சமூகத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அச்சு ஊடகங்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இக்காலகட்டத்தில் ‘கல்கி குழுமம்’ இன்று பல சவால்களை எதிர்கொள்கிறது. சொல்லப்போனால், கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்கி தன்னுடைய உயிரென வளர்த்தெடுத்த ‘கல்கி’ அச்சிதழே நிறுத்தப்பட்டு இணைய இதழாக ஆகிவிட்டது. கல்கிக்கான நன்றியை மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும்; மேன்மையான மனிதர் செய்வார் என்று நம்புகிறேன்.

மொழி எனும் உயிர் நதி

ராஜராஜனுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. ‘பொன்னியின் செல்வன்’ கல்கி சூட்டிய பெயர். குடும்பமாக அரண்மனைப் படகில் காவிரியில் உலவும்போது, குழந்தை அருள்மொழி காணாமல்போவான். அரசனும், அரசியும், துணை வரும் படையும், படகோட்டிகளும் கதிகலங்கித் தேடுவார்கள். குழந்தை கிடைக்காது திகைப்பார்கள். திடீரென்று ஆற்றிலிருந்து இரு கைகளிலும் குழந்தையைத் தூக்கிப் பிடித்தபடி ஒரு பெண் தோன்றுவாள். சுந்தர சோழர் நீந்திச் சென்று அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்ட கணம் பெண் மறைந்துபோவாள். அது காவிரி நதியாகிய பொன்னி. அவள் கொடுத்த செல்வன். இப்படித்தான் அர்த்தப்படுத்தினார் கல்கி. நதியைத் தமிழாகவும் தாயாகவும் காண்பதும் அவரிடம் இருந்தது.

தேய்ந்த உடல் மூலம் தன்னுடைய மரணத்தைக் கிட்டத்தட்ட ஊகித்துவிட்ட கல்கியின் கடைசி விருப்பம், பாலாற்றுத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்; தன் தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதாக இருந்தது. ஊரிலிருந்து ரயிலில் அவர் தாயார் வந்துகொண்டிருந்தார். உற்ற நண்பர்களில் ஒருவர் காரில் பாலாற்றுக்குச் சென்று குடத்தில் தண்ணீர் சுமந்து வந்தார். இருவரும் வந்தடையும் முன்னர் நள்ளிரவில் கல்கியின் உயிர் பிரிந்திருந்தது. விடிந்த பின் வந்த தாயார் கல்கியின் உயிரற்ற உடலைப் பார்த்தார்; நண்பர் கொண்டுவந்த நதிநீர் அவரை நீராட்டுவதற்கு ஆனது. ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயர் ராஜராஜனைக் குறிப்பது மட்டும் அல்ல; அது கல்கியையும் குறிப்பது ஆகும்!

  • ‘குமுதம்’, அக்டோபர், 2022

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


7

6

2



1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Malathipackyaraj   2 years ago

தீர்க்கமான கட்டுரை. ஆழமான எழுத்துக்கள். யோசிக்க வைக்கும், யாரும் சிந்தித்திராத, புதுமையான கண்ணோட்டம் .பொன்னியின் செல்வனாய் கல்கி யை வரித்த விதம் சிறப்பு.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

சமீபத்தில் கொண்டாடப்பட்ட கரூர் புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அதில் இடம்பெற்ற சுமார் 100 அரங்குகளில் குறைந்தது 50 அரங்குகளிலாவது பொன்னியின் செல்வன் புத்தகம் முன்வரிசையில் வைக்கப்பட்டிரிருந்தது. அந்த நாவலை முழுமையாகப்படித்த எனக்கு, புத்தகம் முன் வரிசையில் இருந்தது வியப்பில்லை என்றாலும், அப்பொழுது பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் வேளிவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அச்சூழ்நிலைக்கான கூடுதல் காரணமாக இருந்திருக்கக்கூடும். பொன்னியின் செல்வன் நாவலைத்தழுவிய திரைப்படம் என்றவகையில் மணிரத்னம், கல்கியின் குடும்பத்தினரக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் சுட்டிக்காட்டியது சிறப்பு. பெரும் உழைப்பில் எழுதிமுடித்த மறு ஆண்டே அமர்ர் கல்கி இறந்த செய்தியும்; கடைசி நாட்களில அவருக்கிருந்த ஆசைகளையும், அவை நிறைவேறாமல் போனது குறுத்து அறிந்து மனம் கனத்தது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

வேளாண் புரட்சிகாருண்யம்மூட்டு வலிஇந்திய பிரதமர்வின்னிமார்க்சிஸ்டுகள் செய்த தவறு?அபிராமி அம்மைப் பதிகம்மேட்ரிமோனியல்இந்துக்கள்பிஹாரின் முகமாக தேஜஸ்வி மக்கள்எக்காளம் கூடாதுசஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற முன்னெடுப்புஉலக எழுத்தாளர்மாநிலங்களவைஅரசே வழக்காடிடாஸ்மாக்நடுவர் மன்றம்அணைப் பாதுகாப்பு மசோதாஉதவித்தொகைசமத்துவமின்மைஅதீத வேலைபொருளாதார மந்தநிலைஇரண்டாவது என்ஜின்உடல்நலம்வாசகர் குரல்சிறுதெய்வங்கள்மூன்று அம்சங்கள்கலவிநுரையீரல் நோய்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!