கட்டுரை, அரசியல், கல்வி, சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

உலகின் மனசாட்சியான மாணவர் எழுச்சி

ராஜன் குறை கிருஷ்ணன்
10 May 2024, 5:00 am
0

ரலாறு காணாத அசாதாரண சூழ்நிலை அமெரிக்காவிலும், மேற்குலக நாடுகளிலும் உருவாகிவருகின்றது. காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். பாலஸ்தீனிய விடுதலைக்கான கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளின் அரசுகளோ, அரசியல் கட்சிகளோ, பிற இயக்கங்களோ எதுவும் செய்ய இயலாதபோது உலகின் மனசாட்சியாக மாணவர் சமூகம் கிளர்ந்து எழுந்துள்ளது. அறுபதிகளில் வியட்நாம் போருக்கு எதிராக உருவான மாணவர் கிளர்ச்சி அலைகளை நினைவூட்டுவதுபோல கிளர்ச்சி பரவத் தொடங்கியுள்ளது. 

பாபா சாஹேப் அம்பேத்கர் பயின்ற நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் வியட்நாம் போருக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியதற்காக புகழ்பெற்றது. நான் அங்கே பயின்ற காலத்திலும் பாலஸ்தீனிய விடுதலைக்காக, ஈராக் போருக்கு எதிராக பல கூட்டங்கள், போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன். செல்வாக்கான யூத சிந்தனைக் குழுக்கள் ‘சீரழியும் கொலம்பியா’ (Columbia Unbecoming) என்று ஒரு ஆவணப்படமே எடுத்து குற்றஞ்சாட்டும் வரை சென்றன. 

இப்போது கொலம்பியா நிர்வாகம் போலீஸைக் கூப்பிட்டு முகாமிட்டுள்ள மாணவர்களை வளாகத்திலிருந்து கைதுசெய்து அகற்றும்படிச் செய்துள்ளது. பல்வேறு முன்னணி பல்கலைகழகங்களிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து பரவுகிறது. பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் முகாமிட்டுத் தங்குவது, வகுப்புகளைப் புறக்கணிப்பது, கட்டடங்களை ஆக்கிரமிப்பது, ஊர்வலமாகச் செல்வது, முழக்கமிடுவது போன்றவை போராட்ட வடிவங்கள். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சில பல்கலைக்கழகங்கள் பேச்சு வார்த்தைக்கு இணங்கியுள்ளன. சில அடக்குமுறையைக் கையாள்கின்றன. அமெரிக்க அரசோ இஸ்ரேல் அரசை விமர்சிப்பது என்பதே ‘யூத வெறுப்பு’ (antisemitism) என்ற வகைப்பாட்டில் வரும் எனச் சட்டத் திருத்தத்தைச் செய்கின்றது. ஆனால், மாணவர் கிளர்ச்சி ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும்கூட பரவத் தொடங்கியுள்ளது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

கார்த்திக் வேலு 21 Oct 2023

பிரச்சினை என்ன? 

ஒரு தீவிரவாதிகள் குழு ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்காக, அந்த இனத்தின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு எட்டப்படாத நிலையில், கொடூரமான ஒரு வன்முறைத் தாக்குதலை நடத்துகிறது. அது நிச்சயம் கடும் கண்டனத்திற்குரிய தவறுதான். ஆனால், அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த குழுவைக் கைப்பற்ற, வலுவிழக்கச் செய்ய ஒட்டுமொத்தமாக அந்த இன மக்களை மானாவாரியாகத் தாக்கலாமா, சாதாரண குடிமக்களையெல்லாம் கொன்று குவிக்கலாமா என்பதுதான் இன்று இஸ்ரேல் - காஸா விவகாரத்தில் உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அவ்வாறு ஒரு இன மக்கள் அனைவரையும் தாக்கி அழிப்பது இனப்படுகொலை, ‘ஜெனோசைட்’ (genocide) என்று அழைக்கப்படுகிறது.

காஸா மத்திய தரைக் கடலை மேற்கு எல்லையாகக் கொண்ட 41 கிலோமீட்டர் நீளமும், 6 முதல் 12 கிலோ மீட்டர் அகலமும், 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட சிறிய நிலப்பகுதி. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பரப்பளவு. டில்லியின் பரப்பளவில் கால் பகுதி. இந்த நிலத்தில் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான நாடு உருவானபிறகு நடந்த போரில், அங்கிருந்து வெளியேறி இந்த நிலப்பகுதியில் குடியேறியவர்கள். 

இஸ்ரேல் இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட, ஒரு கோடி மக்கள் வசிக்கும் நாடு. இங்கு யூதர்களே பெரும்பான்மை, அவர்களே முதன்மை குடிமக்கள். இஸ்ரேலுக்கு மேற்கே வெஸ்ட் பாங்க் என்று அழைக்கப்படும் 5,640 சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பில் முப்பது இலட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கிறார்கள். காஸாவிலிருந்து வெஸ்ட் பாங்க் செல்ல இஸ்ரேல் வழியாகத்தான் செல்ல வேண்டும். பாலஸ்தீனிய பகுதிகள் இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும்தான் உள்ளன.

இஸ்ரேல் உருவானதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகளாக பாலஸ்தீனியர்கள் தாங்கள் வாழும் பகுதி தனி நாடாக அங்கீகரிக்கபட வேண்டும் என்று கோரிவருகிறார்கள். விடுதலை கோரிக்கைக்கு அரசியல் தீர்வு காணப்படாத தால்மீண்டும், மீண்டும் வன்முறை இயக்கங்கள் தலையெடுக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் அந்த இயக்கங்களை அழிக்கும் பொருட்டு ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களையும் ஒடுக்கிவருகிறது. சாதாரண குடிமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுவருகிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்

ராமச்சந்திர குஹா 01 Feb 2024

கடந்த இருபதாண்டுகளாக காஸா பகுதியில் ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டுவருகிறது. அந்தப் பகுதி 2007ஆம் ஆண்டிலிருந்து அதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இஸ்ரேலோ ஒட்டுமொத்த காஸாவையும் திறந்தவெளிச் சிறைச்சாலை போல தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இஸ்ரேலின் அனுமதி இல்லாமல் எந்த இறக்குமதி, ஏற்றுமதியும் செய்ய முடியாது. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்தும் பாலஸீதீனியர்களின் அரசியல் சுதந்திரம் அல்லது தன்னாட்சி என்பது சாத்தியமாகவில்லை. 

இஸ்ரேல் ஆதரவு யூதர்கள் சமூகம் அமெரிக்க அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. தொடக்கம் முதலே அமெரிக்காவும், பிற ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவு அளித்துவருகின்றன. ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் யூத இன அழிப்பின் பின்னணியில் இஸ்ரேல் உருவானதால் மேற்கத்திய நாடுகளின் மேலதிக ஆதரவு இஸ்ரேலுக்குக் கிடைத்துவருகிறது. 

தொடக்கத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருந்த அரபு நாடுகளெல்லாம் காலப்போக்கில் அந்தப் பிரச்சினையிலிருந்து விலகிக்கொண்டுவிட்டன. இப்போது இரானும், அதன் பின்னால் உள்ள சீனாவும் ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளன என்றாலும் களத்தில் பாலஸ்தீனிய குடிமக்களைக் காப்பாற்ற அந்த நாடுகளால் எதுவும் செய்ய முடியாது. 

இன்றைய காஸா இனப்படுகொலை

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலினுள் புகுந்து தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது. ஆயிரம் பேர் வரை இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள்; இருநூற்றைம்பது பேர் வரை ஹமாஸால் கைதுசெய்யப்பட்டு கடத்திவரப்பட்டார்கள். இது காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடங்கி வைத்தது. 

வடக்கு காஸாவிலிருந்து பொதுமக்களையெல்லாம் தெற்கே குடிபெயர்ந்து செல்லச் சொன்னது இஸ்ரேல். வடக்கில் நுழைந்து மானாவாரியாகத் தாக்கியது. மக்கள் உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். 

ஹமாஸ் போன்ற தீவிரவாத, ஆயுதம் தாங்கிய குழுவை மக்களிலிருந்து தனிமைப்படுத்தித் தாக்கி அழிக்க முடியாது. அதற்காக ஒட்டுமொத்த மக்களையும் கொன்று குவிப்பதும் சாத்தியமில்லை. பேச்சுவார்த்தை துவங்குவதும், அரசியல் தீர்வினை துரிதப்படுத்துவதும்தான் வன்முறை சுழற்சியினை நிறுத்துவதற்கான ஒரே வழி. 

உலக நாடுகளால் கடந்த எழுபதாண்டுகளில் இஸ்ரேலை பாலஸ்தீனிய விடுதலை, தன்னாட்சி போன்றவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியவில்லை. தன்னுடைய பாதுகாப்பு குறித்த பேரச்சத்தால் முடிவற்ற வன்முறையையே இஸ்ரேல் வளர்த்துவருகிறது. அமெரிக்காவில் உள்ள சனாதன யூதர்களே (Orthodox Jews) இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை ஆதரிப்பதில்லை. 

உலக நாடுகள் ஒருங்கிணைந்து, ஐ.நா மூலமாக, ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வகை செய்வதுடன், ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர்களும் ஒன்றிணைந்த தனிச் சுதந்திர நாடாக வாழ்வதற்கு வகை செய்வதுதான் அறம் சார்ந்த தீர்வாக இருக்க முடியும். மாணவர் கிளர்ச்சிகள் உலகை அந்தத் தீர்வை நோக்கிச் செலுத்துமா என்று தெரியாது. ஆனால், இன்றளவிலேயே மானுடத்தின் மனசாட்சி செத்துவிடவில்லை என்பதை மாணவ சமூகம், கல்விப்புலச் சமூகம் நிரூபித்திருப்பதே மிகப் பெரிய வெற்றி என்றுதான் கூற வேண்டும். 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?
பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்
விதிகளே இல்லாத போர்கள்
இந்தப் பேரவலத்தில் இஸ்ரேலின் பங்கு என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனம்.. அடுத்தது என்ன? தாரிக் பகோனி பேட்டி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


3

1

சைபர் குற்றவாளிகள்நீர் ஆணையம்உற்பத்தி வரிதில்லி செங்கோட்டைபஞ்சாப் முதல்வர்ஸ்பைவேர்மாநில நிதிநிலை அறிக்கைநடவு விரும்பாதவர்களுக்கும் போட்டிபொதுச் சமூகம்ட்ராட்ஸ்கி மருதுஜவஹர்லால் நேருபத்திரிகையாளர்கள்அஸ்ஸாம்samas interviewஎல்.இளையபெருமாள்இந்தியாவின் குரல்கள்டி.வி.பரத்வாஜ் கட்டுரைஉடல் எடை ஏன் ஏறுகிறது?சிந்தனைகள்கொஞ்ச நேரம் வேலையில்லாமல்தான் இருங்களேன்!இன உணர்வுபிரான்ஸ்உபநிஷத்ராய்பரேலிசாவர்க்கரின் இந்து மதச் சீர்திருத்த எண்ணங்கள்நிலவுதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்எம்.ஜி.ராமச்சந்திரன்ம்வாலிமு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!