கட்டுரை, அரசியல், கலாச்சாரம், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு
பாஜகவிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அமைச்சரே...
வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
உணவுத் திருவிழாவைப் பின்னின்று நடத்துகிறது தமிழக அரசு.
வெறுப்பரசியலின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி ஆக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பொதுச் சமூகத்திலிருந்தும், பொது அரங்கிலிருந்தும் நேரடியாக முஸ்லிம்களை விலக்குவதன் குறியீட்டு வெளிப்பாடுகளில் ஒன்றுதான் மாட்டிறைச்சி மீதான தீண்டாமை.
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லை என்று எழுந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக அப்படி ஒரு விழாவே ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுவிட்ட பின்னணியில், சென்னை உணவுத் திருவிழாவில் இதுகுறித்த முன்யோசனைகள் அரசுக்கு இருந்திருப்பது அவசியம்.
சென்னை உணவுத் திருவிழாவில் ஏன் மாட்டிறைச்சிக்கான அரங்கு இல்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறபடி, ஒருவேளை அரங்கு அமைக்க யாரும் அனுமதி கேட்டிருக்காவிட்டாலும், அப்படி ஓர் அரங்கை அமைத்திட அரசே ஏற்பாட்டை முன்னெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், இது உணவு வகைமை தொடர்பானது இல்லை; சமூகப் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக அரவணைப்பு தொடர்பானது. மேலும், சென்னை உணவுக் கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் மாட்டிறைச்சி. அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை சுடச்சுட விருந்து படைக்கும் 'தமிழகத்தின் பீஃப் ஃபுட் ஃபாரடைஸ்' தாதாஷமக்கான் சென்னையில்தானே இருக்கிறது!
சர்ச்சைகள் தவிர்ப்பு நடவடிக்கை இல்லை இது; தேவையற்ற பின்வாங்கல்.
கேள்விகளைத் தவிர்க்க, "நானே பீஃப் சாப்பிடுவேன்" என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுடைய பதில் பொறுப்பற்றது. சிறுபான்மையினர் வாழ்வுரிமை தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பினால், பாஜகவில் உள்ள ஒரு முஸ்லிம் தலைவர் "நான்கூட முஸ்லிம்தான்... இதெல்லாம் ஒரு கேள்வியா!" என்று பதில் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருந்தது அது.
மா.சுப்பிரமணியனிடம் இதை எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் தேவையில்லாமல் பின்வாங்கும் ஒவ்வோர் அங்குலத்திலும் அவர்கள் தானாக முன்னகர்கிறார்கள்!
¶
அடுத்த நாள் பதிவு
இன்றைய தமிழக அரசின் சிறந்த பண்பாக நான் கருதுவது இதைத்தான். அது தன் காதுகளைத் திறந்து வைத்திருக்கிறது. மக்கள் குரலுக்கு செவி சாய்க்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அமைச்சர் மா.சுப்ரமணியனுக்குப் பாராட்டுகள்!
CMOTamilNadu M. K. Stalin Ma Subramanian
1
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.