தமிழ்நாடு எல்லாச் சமூகங்களிலும் எல்லாவற்றிலும் முன்னோக்கி நிற்க வேண்டும் என்ற எண்ணம் நல்லது; எப்போதுமே எல்லாச் சமூகங்களினும் எல்லா விஷயங்களிலும் முன்னோக்கி நிற்கிறோம் என்ற நம்பிக்கை அசட்டுத்தனம். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நினைவுச் சின்ன முன்மொழிவானது பிந்தையதற்கான ஒரு சான்று.
தமிழ்நாட்டின் நெடுநாள் ஆட்சியாளரும், ஆசியாவில் ஜனநாயகரீதியாக ஆட்சி மன்றம் ஒன்றுக்கு மிக நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரருமான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்குத் தலைநகர் சென்னையில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் எண்ணத்தில் பிழை எதையும் காண முடியாது. மறைந்த தலைவர்களின் நினைவைப் போற்ற எவ்வளவோ வழிமுறைகள் உண்டு என்றாலும், நினைவகங்கள் – நினைவுச் சின்னங்கள் நேரடி நினைவுகூரலாகப் பார்க்கப்படுகின்றன.
அப்படி ஒன்றைத் தமிழ்நாடு அரசும் உருவாக்கலாம். இங்கே இந்த நினைவகம் - நினைவுச் சின்னம் எப்படித் திட்டமிடப்படுகின்றன என்பது முக்கியம். இந்த உருவாக்கம் ஒரு சமூகத்தின் கற்பனையோடும் பிணைந்தது. சென்னை மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் நினைவகத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில், ரூ.81 கோடியில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிற பேனா வடிவிலான நினைவுச் சின்னம் உருப்படியான ஒரு யோசனை இல்லை. அடிப்படையில் இவ்வளவு பெரிய ஒரு தொகையை வெற்று அலங்கார வெளிப்பாட்டுக்காக மட்டுமே செலவிடுவதில் எந்த நியாயமும் இல்லை.
கடலோடிகள், எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களில் ஒரு சாராரிடமிருந்து இதுகுறித்து எழுந்திருக்கும் எதிர்க்குரலும் இயல்பானது. உள்ளபடி புதிய கட்டுமானத்துக்காக மதிப்பிடப்பட்டிருக்கிற 8,551.13 சதுர மீட்டர் இடம் ஒரு பெரிய பரப்பு இல்லை; சுற்றுச்சூழல் சார்ந்தும் இந்தக் கட்டுமானம் மட்டும் ஏற்படுத்தவல்ல தாக்கமும் பெரியதாக இருக்க வல்லது இல்லை. ஆனால், ஏற்கெனவே உள்ள போட்டி அரசியல் கலாச்சாரத்தின் நீட்சியாக இது அமையும் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.
மெரினா கடற்கரையில் திமுகவும், அதிமுகவும் சென்ற அரை நூற்றாண்டில் அடுத்தடுத்துப் போட்டி போட்டு வளர்த்தெடுத்திருக்கும் நினைவகங்களின் வெற்று விரிவாக்கம் இதற்கான சாட்சியம். அடுத்து ஆட்சிக்கு வரும் இயக்கமானது போட்டிக்கு அதன் தலைவருக்கு இதைக் காட்டிலும் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முயலும்போதும் மாறி மாறி இது வளரும்போதும் இன்றைக்குக் கடலோடிகளும் எதிர்க்கட்சிகளும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் அஞ்சும் பாதிப்புகள் நிச்சயம் உருவாக்கும்.
கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் வள்ளுவர் சிலை இப்போதைய நினைவுச் சின்னத்துக்கான முன்மாதிரியாக தமிழ்நாடு அரசால் யோசிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. எனில், கருணாநிதியால் நிறுவப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் தமிழ்ச் சமூகத்தின் அறிவடையாளமான வள்ளுவர் சிலையே அதிமுக ஆட்சிக் காலத்தில் எல்லாம் பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படும்போது இப்போது கருணாநிதிக்கு அரசு எழுப்ப எண்ணும் கட்டுமானத்தின் பராமரிப்பு என்னவாகும் என்பதை இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும். தவிர, இப்படி ஒரு பிரம்மாண்ட செலவில் அமைக்கப்படும் வெற்று அலங்கார நினைவுச் சின்னத்திடமிருந்து இளைய சமூகம் என்ன தாக்கத்தைப் பெரிதாகப் பெற்றிட முடியும் என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தத் தருணத்தில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. சிலைகள், நினைவகங்கள், நினைவுச் சின்னங்கள் அமைப்பில் சமகாலத்தில் தமிழ்நாடு வெகுவாகப் பின்தங்கியிருக்கிறது என்பதே அதுவாகும். பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ தலைவர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளின் கலைத்தன்மையுடனோ, நினைவகங்களின் வரலாற்றுத்தன்மையுடனோ ஒப்பிட்டால் மிகவும் கீழான உள்ள நிலையில் நாம் இருக்கிறோம். குறைந்தபட்சம் டெல்லியில் தேசியத் தலைவர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான நினைவகங்கள் அளவுக்குத் தமிழ்நாட்டின் தலைவர்கள் எவருக்கும் நினைவகம் இல்லை.
திமுக – அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தும், இன்றைய தமிழ்நாடு அரசு பெருமை பேசும் ‘திராவிட மாதிரி ஆட்சி’யின் பிதாமகனான பேரறிஞர் அண்ணாவுக்கு, தலைநகரில் ஒரு நினைவு அருங்காட்சியகம் இல்லை என்பது ஓர் அவலமும் வெட்கக்கேடும் இல்லையா?
நம்முடைய தலைவர்கள் எல்லோருக்குமே நல்ல நினைவகங்கள் உருவாக்கப்படுவது அவசியம். குறைந்தபட்சம் டெல்லியில் உள்ள காந்தி, நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் நினைவில்லங்களையும் காந்தி அருங்காட்சியகத்தையும் அண்மையில் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் நினைவகத்தையும் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் பார்வையிட்டு வர வேண்டும்.
அரசு ஒரு விஷயத்தை அறிவித்துவிட்டதாலேயே விமர்சனங்களைக் கடந்தும் அதைச் செயலாக்க முற்பட வேண்டியது இல்லை. ஒரு நினைவிடமானது மறைந்த தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எப்படிப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இப்போது திட்டமிடப்படும் கருணாநிதி நினைவகத்தைக் கட்டமைக்கலாம். இதற்கான மாதிரியை சர்வதேச அளவிலான தலைவர்களின் நினைவகங்களிலிருந்து உருவாக்கலாம். மெரினாவைப் பொருத்த அளவில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா நால்வருக்குமே நினைவிடம் அங்கு உள்ளதால், அவர்கள் வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒரு பிரம்மாண்டமான காட்சியகத்தைக்கூட 'திராவிட ஆட்சித் தலைவர்கள் காட்சியகம்' என்ற பெயரில் அரசு திட்டமிடலாம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இந்த நினைவகத்தைத் தாண்டி, கூடவே அவர் நினைவைப் போற்றும் இன்னொரு காரியத்தையும் இந்த அரசு செய்ய முடியும். தமிழ்நாட்டு ஆட்சி மன்றத்தின் தேவை உணர்ந்து அவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்துக்கு இன்றைய தலைமைச் செயலகத்தை மாற்றி அமைத்திடுவதே அது. சொல்லப்போனால், எந்த ஒரு நினைவுச் சின்னத்தைவிடவும் அவர் மனதுக்கு அணுக்கமான நினைவுகூரலாக அதுவே இருக்கும்!
7
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.