அரசியல், உற்றுநோக்க ஒரு செய்தி 8 நிமிட வாசிப்பு

பஞ்சாப் மனநிலை எப்படி?

டி.வி.பரத்வாஜ்
20 Feb 2022, 5:00 am
0

கொல்கத்தாவில் இருந்து வரும் ‘டெலிகிராப்’ பத்திரிகையின் நிருபர்கள் கடைசி நேரத்தில் வாக்காளர்களின் மனதை அறியவும் தேர்தல் முடிவைக் கணிக்கவும் முற்பட்டு பஞ்சாப் சென்றிருக்கின்றனர். வாக்காளர்களுடன் அவர்கள் நடத்திய உரையாடல் ஆச்சர்யமூட்டுவதாகவும், மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறுவதாக இருக்கிறது என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது. கவனம் கோரும் இந்தச் செய்தியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறது.   

மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ஓராண்டுக்கும் மேலாகப் போராடி, திரும்பப் பெறவைத்த போராட்ட வீரர்களில் ஒருவர் பல்பீர் சிங் ராஜேவால் (78). சம்யுக்த சமாஜ் மோர்ச்சா (எஸ்எஸ்எம்) கட்சி சார்பில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்ராலா தொகுதியில் போட்டியிடுகிறார். பல்பீர் சிங் ராஜேவாலுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது? அதிர்ச்சி தந்திருக்கின்றனர் வாக்காளர்கள். ‘பேராசைக்காரர்’ – ‘இந்த நேரத்திலா தேர்தலில் நிற்க வேண்டும்?’ – ‘முட்டாள்தனம்’ என்றெல்லாம் அத்தொகுதி வாக்காளர்கள் அர்ச்சித்திருக்கின்றனர்.

“கோரிக்கைகளுக்காக நாங்கள் எல்லோரும்தான் தில்லிக்குப் போனோம், ராஜேவாலை யார் தலைவர் ஆக்கினார்கள்” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்கிறார் நில உடைமையாளர் ஹர்ஜீந்தர் பால் சிங். “எங்களுக்கு வெவ்வேறு அரசியல் கட்சிகளிடம் விசுவாசம், இருந்தாலும் விவசாயிகளின் பொதுப் பிரச்சினைக்காக பாஜகவின் சட்டங்களை எதிர்த்துப் போராடினோம்; இப்போது இவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் – அரசியல் அதிகாரத்துக்காக!” என்று பொரிந்து தள்ளினார் இன்னொரு விவசாயச் சங்கப் பிரதிநியான பால் சிங்.

கட்சி சார்பில் போட்டியிட்டாலும் சொந்த நோக்கங்களுடன் தேர்தலில் வாக்களிக்கப்போவதாகப் பலரும் தெரிவித்திருக்கின்றனர். செய்தியாளர்கள் அவர்களிடம், “அப்படியென்றால், பாராட்டுவது ஒருவரை, வாக்களிக்கப்போவது இன்னொருவரையா?” என்று கேட்டிருக்கிறார்கள். “அது அப்படித்தான்!” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பஞ்சாப் கணக்குகள் என்ன? 

தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவில் விவசாய சங்கங்கள் இடையிலேயே ஒருமித்த கருத்து இல்லை. அடுத்து, அப்படிப் போட்டியிடும் அமைப்புகள் கூட்டணி அமைப்பதிலும் பெருவாரியாக வெற்றி கிடைக்கவில்லை. பல விவசாய சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்று அறிவித்துவிட்டன. இத்தகு சூழலில்தான் விவசாய சங்க பிரதிநிதிகள் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

ஆளும் காங்கிரஸுக்குள் நடந்துவரும் கோஷ்டி சண்டைகள் மக்களுக்குச் சலிப்பைத் தந்திருக்கின்றனர். ஏற்கெனவே முதல்வராக இருந்த அம்ரீந்தர் மற்றும் சித்துவுக்கும் இடையிலான சண்டையானது, அம்ரீந்தர் வெளியே போன பிறகு, முடிவுக்கு வந்திருந்தாலும், இப்போது புதிதாக முதல்வரான சன்னிக்கும் சித்துவுக்கும் இடையிலான பனிப் போர் பேசப்படுகிறது.

பாஜக இந்த மாநிலத்தில் ஏற்கெனவே ஒரு சக்தியாகவே இல்லை. இப்போது அம்ரீந்தர் தொடங்கிய கட்சியோடு அது இணைந்து நின்றாலும், அதைப் பொருட்படுத்துவோர் யாரும் இல்லை.  

காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகள் பிரதான எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலி தளத்துக்குச் சென்றடையும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆம்ஆத்மி கட்சி முன்னேறுகிறது.

களத்தில் 14 பேர்

களத்தில் 14 பேர் நிற்கும் சம்ராலா தொகுதிக்குப் பத்திரிகையாளர்கள் சென்றிருக்கிறார்கள். கடந்த இரண்டு முறையாக இங்கு உறுப்பினராக இருந்த அம்ரிக் சிங் தில்லானை காங்கிரஸ் இப்போது நிறுத்தாமல், ரியல் எஸ்டேட் அதிபர் ரூபிந்தர் சிங் ராஜா கில் என்பவரை நிறுத்தியிருக்கிறது. இங்கு சூழல் என்ன?

“இளைஞர்கள் ஆஆகவை ஆதரிக்கின்றனர், படித்தவர்கள் – பெரியவர்கள் காங்கிரஸை ஆதரிக்கின்றனர். அகாலிகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நிலையை எடுக்கின்றனர். எங்கள் கிராமத்தில் ஆஆகவை அகாலிகள் ஆதரிக்கின்றனர். கிராமவாசிகள் ராஜா கில்லை ஆதரிக்கின்றனர். ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அம்ரிக் சிங் இந்தத் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை, அவரை காங்கிரஸ் மாற்றியது சரிதான், இல்லாவிட்டால் இதுவும் ஆஆகவுக்கே போயிருக்கும்” என்கிறார்கள்.

“இதோ இப்போது நிற்கிறீர்களே இந்தச் சாலை, இது 2020-ல் போடப்பட்டது. நாங்கள் எல்லாம் சம்ராலா துணைக் கோட்ட ஆட்சியர் அலுவலகத்தை சாலை கோரி முற்றுகையிட்ட பிறகு, பழைய சாலை மீது புதிய சாலையைப் போட்டார்கள்.  சாலை நெடுகிலும் பார்த்தீர்களா அகலவாட்டில் 1.5 அடிக்கு தார் இல்லாமலேயே நெடுக விட்டுவிட்டார்கள். அந்த ஒன்றரை அடி அகல தாருக்கான பணத்தை யார் கையாடல் செய்திருப்பார்கள் என்று நீங்கள் ஊகித்துவிடலாம்” என்கிறார் ஒரு பெரியவர்.

இதே தொகுதியில் ஆஆக சார்பில் ஜக்ரார் சிங் தயாள்புரா, சிரோமணி அகாலி தளம் சார்பில் பரம்ஜீத் சிங் தில்லான் போட்டியிடுகின்றனர். அகாலிகளைப் பற்றி பல கதைகளைச் சொல்கிறார்கள், இப்போது வெளிப்படையாக அவர்களை ஆதரிப்பவர்கள் குறைவு. ‘அகாலிகள் எடைக்கு எடை தங்கம் போன்றவர்கள்’ என்று கேலியாக சொல்கிறார்கள்.

அகாலிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் சாதி, குடும்ப உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றுக் கட்சி வேட்பாளர்களைத் தொகுதிக்குத் தொகுதி மாற்றி மாற்றி ஆதரிக்கின்றனர். அரசியல் சித்தாந்தம் குறித்து யாரும் அலட்டிக்கொள்வதே இல்லை. அகாலிகள் காங்கிரஸ் அல்லது ஆஆகவை ஆதரிக்கின்றனர். அவ்விரு கட்சிகளும் தங்களுக்கு வாய்ப்பு குறைவான இடங்களில் அகாலிகளை ஆதரிக்கின்றனர்!

விவசாய சங்க வேட்பாளர்களில் மாவர் தொகுதியில் போட்டியிடும் லக்கா சித்தானாவுக்கு சொந்த செல்வாக்கு இருக்கிறது. கட்சிக்கு மக்கள் இடையே வரவேற்பு இல்லை. பல கிராமங்களில் ஜாட் சமூக சீக்கியர்கள் ஆஆகவின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மானைப் பாராட்டுகிறார்கள்; ஆனால் வாக்கு காங்கிரஸ் கட்சிக்குத்தான் என்கிறார்கள். 

யார் முதல்வர் ஆக வேண்டும்?

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யாரை முதல்வராக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது ‘நவ்ஜோத் சிங் சித்து’ என்றே பதில் சொல்லியிருக்கிறார்கள் பலர். பட்டியல் இனத்தவர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் சன்னியைப் புகழ்கின்றனர். ஆனால், இவர்களிலும் பலர் ஆஆகவுக்குதான்  வாக்களிக்கப்போகிறோம் என்று சொல்லியிருக்கின்றனர். 

சம்ராலாவில் ஆலையில் வேலைசெய்யும் தலித் தொழிலாளர் பூஷண் சிங்கிடம், “உங்கள் ஆதரவு சன்னிக்குத்தானே?” என்று கேட்டபோது கோபம் அடைந்தார். “ஏன் தலித்துகளிடம் இப்படியே எல்லோரும் கேட்கிறீர்கள்? நாங்களும் எங்கள் குழந்தைகள் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும், முன்னுக்கு வரவேண்டும் என்றே விரும்புகிறோம். பகவந்த் மானுக்கே எங்கள் ஆதரவு!” என்று வெடித்திருக்கிறார் அவர். “அரசாங்க மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் நாடுவது ஏழைகளான நாங்கள்தான், பணக்காரர்கள் இல்லை!” என்று மேலும் கூறியிருக்கிறார்.

இந்துவான வியாபாரி ஷிவ் குமார், ஆஆகவை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார். “அர்விந்த் கேஜ்ரிவாலை காலிஸ்தானி என்கிறார்கள். குரு கோவிந்த் சிங்கின் காலிஸ்தானை நாங்களும் ஆதரிக்கிறோம், அங்கே அமைதியும் நீதியும் நிலைநாட்டப்படும், காலிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கை அங்கே எடுபடாது” என்கிறார் ஷிவ் குமார். “கேஜ்ரிவால் அயோக்கியர் என்றால் தில்லியில் நல்ல மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களை தரமாக அமைத்த அந்த அயோக்கியத்தனத்தை மற்ற கட்சிகளும் செய்யலாமே?” என்று கேலிசெய்திருக்கிறார்.

ஓடாலன் கிராமத்தில் முதியவர்கள் கூட்டாக அமர்ந்து பேசும் இடத்தைச் செய்தியாளர்கள் சென்றடைகின்றனர். யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் அவர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், எல்லோரும் சேர்ந்து தேர்தலில் நிற்கும் விவசாய சங்க பிரதிநிதிகளை வசைபாடியிருக்கின்றனர்.

“இது தில்லி அல்ல. எங்களுடைய ஒற்றுமைதான் பாஜகவைத் தோற்கடித்தது. விவசாய சங்கப் பிரதிநிதிகள் சங்கத்தோடு தங்களை நிறுத்திக்கொண்டிருந்தால், எந்த அரசாங்கமாக இருந்தாலும் எங்களுடைய கோரிக்கைக்கு செவிமடுக்கும். அரசியலில் போட்டியிட்டு செல்வாக்கை இழந்தால் யார் மதிப்பார்கள்!” என்று கேட்டிருக்கிறார் ராஜ்வீர் சிங்.

“இப்போதும் தில்லியிலேயே முகாமிட்டிருந்தால் கெத்து காட்டி, மேலும் சலுகைகளை வாங்கியிருக்கலாம். அங்கிருந்த வந்த பிறகு வலிமையெல்லாம் கரைந்துவிட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிலேயே 10% பேர்கூட எஸ்எஸ்எம் ஆதரவாளர்கள் அல்ல. கட்சியாகக் களத்தில் வாக்காளர்களைச் சந்திக்க அமைப்பே கிடையாது. எப்படி ஆதரவு திரட்ட முடியும்?” என்று கிராந்திகாரி கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்சன் பால் கேட்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, “தேர்தல் முடிவு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்ற நீண்ட கால போராட்டத்துக்குத் தயாராக வேண்டும்” என்று எஸ்கேஎம் அமைப்பின் சார்பு அமைப்புகள் இப்போதே பொதுக்கூட்டங்களைத் தொடங்கிவிட்டன. ஆக, தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தேர்தலில் பெரும் தாக்கத்தை உண்டாக்குவார்கள் என்ற நம்பிக்கை ஏதும் இல்லை.

பஞ்சாப் தேர்தலில் கட்சிகளின் கொள்கைகள், வேட்பாளர்களின் அரசியல் அனுபவம் ஆகியவற்றைவிட வேறு பல காரணங்களும் முடிவைத் தீர்மானிக்கலாம் என்று தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பது சுலபமல்ல. ஆஆக அரசியல்ரீதியாகப் பலம் அடைந்துவருகிறது என்பது தெரிகிறது. அகாலிகளும் பாஜகவும் களத்தில் துடைத்தெறியப்பட்டால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என்பதைப் போலவே வாக்காளர்களின் பேச்சு அமைந்திருக்கிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


3






அதிகம் வாசிக்கப்பட்டவை

விஞ்ஞானிநுகர்வுமாணவ–ஆசிரியர்நான்கு சாதிகளின் உண்மை நிலைதான் என்ன?மன்னார்குடி அன்வர் கடை புரோட்டாஅரசின் தனி கவனிப்புக்குரிய ‘சிறப்புக் குடும்பம்’உகாண்டாவிளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவுவிஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?கையூட்டுக்குப் பல வழிகள்விரியும் அலைநீலம் புயல்பொதுப் பயணம்ஆண்களைக் காக்க வைப்பதில் அப்படியென்ன அல்ப சுகம்?நாடாளுமன்ற உறுப்பினர்கள்டெல்லி லாபிபக்வந்த் சிங் மான்சட்டப்பேரவைசமஸ் - அதானிவார்த்தை ஜாலம்சுயநிதிக் கல்லூரிகள்அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுமகாராஷ்டிரம்அருந்ததி ராய் அருஞ்சொல்கிராமங்கள்சீவக்கட்டைமனுஷ்யபுத்திரன்அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்வ.ரங்காசாரி அருஞ்சொல்மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் சகோத

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!