தலையங்கம் 4 நிமிட வாசிப்பு

பஞ்சாப் முதல்வர் தேர்வு வியூகம் ஒரு சூதாட்டம்

ஆசிரியர்
27 Sep 2021, 5:00 am
0

பஞ்சாப் முதல்வர் பதவியில் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் மாற்றத்தை இன்னொரு சூதாட்டம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. முன்னதாக முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் - காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இருவருக்கும் இடையில் இருந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சரண்ஜித் சிங் சன்னி ஆச்சரியகரமான ஒரு தேர்வு. ‘பஞ்சாபின் முதல் தலித் முதல்வர் சன்னி; இது தலித்துகளை அதிகாரப்படுத்தும் முடிவு’ என்று காங்கிரஸ் இதற்கு உரிமை கொண்டாடினாலும்,  அப்பட்டமான தேர்தல் உத்தியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

2022-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது பஞ்சாப். எதிர்க்கட்சியான அகாலி தளம் தன்னுடைய வீழ்ச்சியிலிருந்து பெரிதாக மீளாத நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு காங்கிரஸுக்கு நிறைய இருந்தது. உட்கட்சி மோதல் அந்த வாய்ப்பைக் குலைக்கலானது. கட்சியைத் தாண்டியும் மக்கள் இடையே பிரபலமாகிவந்த கிரிக்கெட்டர் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அம்ரீந்தருக்கும் ஒத்துப்போகவே இல்லை. கட்சிக்குள் இருந்தபடியே ஆட்சியை விமர்சித்துவந்தார் சித்து. பதிலுக்கு சித்துவைக் கடுமையாகச் சாடிவந்தார் அம்ரீந்தர். இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு சூழல் மோசம் ஆனது. இருவர் பின்னும் கட்சி பிளவுண்டு அணிவகுத்தது.

காங்கிரஸ் தலைமைக்கு இது பெரும் குடைச்சலான நிலையில்தான் 79 வயதில் இருக்கும் அம்ரீந்தர் முதல்வர் பதவியிலிருந்து விடைகொடுக்கப்பட்டிருக்கிறார்: 57 வயதில் இருக்கும் சித்து அடுத்த சில தேர்தல்களுக்கு உதவுவார் என்று கட்சி நம்பியிருக்கலாம். சித்துவுக்கு நேரடியாக முதல்வர் பதவியை மாற்றிக்கொடுப்பது அம்ரீந்தரின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும்; கட்சியிலிருந்து தன்னுடைய ஆதரவாளர்களோடு ஒருவேளை அம்ரீந்தர் வெளியேறினால், கட்சிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கணக்கில்தான் இடைக்கால ஏற்பாடுபோல சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

முன்னதாக அம்ரீந்தர் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தவர் சன்னி. அம்ரீந்தருக்கு எதிரான அணியில் சித்துவுக்குப் பின் அணிவகுத்திருந்தவர்களில் ஒருவர். பெண் அதிகாரிக்குத் தவறாகக் குறுஞ்செய்தி அனுப்பினார் என்பது உள்பட சில சர்ச்சைகள் சன்னி மீது உண்டு. மாநிலம் தழுவிய செல்வாக்கு ஏதும் அற்றவர். 2022 தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் முகமாக தன் முகம் முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற கணக்கிலேயே சன்னியை முன்மொழிந்திருக்கிறார் சித்து; அந்த அடிப்படையிலேயே அவர் முதல்வர் ஆக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதைத் தாண்டிய இன்னொரு கணக்கு, பஞ்சாபின் ஓட்டரசியல் கணக்கு.

சீக்கியச் சமூகம் தனக்கென்று தனிப் பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் சாதிப் பாகுபாட்டுக்கு அதுவும் விதிவிலக்கு இல்லை. பஞ்சாப் மக்கள்தொகையில் சுமார் 22% அளவுக்கு பங்கு வகிக்கும் சீக்கிய சமூகத்தின் ஜாட் பிரிவினரே பஞ்சாபின் நிலவுடைமை, தொழில், அரசியலதிகாரத்தின் பெரும் பகுதியைக் கையில் வைத்திருக்கின்றனர். 1966-ல் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களில் ராம்கர்ஹியா பிரிவைச் சேர்ந்த ஜெயில் சிங் தவிர, அத்தனை பேருமே ஜாட் பிரிவைச் சார்ந்தவர்கள். 

மூன்று கோடி மக்களைக் கொண்ட பஞ்சாபில் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் தலித்துகள் என்றாலும், செல்வத்திலும், அதிகாரத்திலும் அவர்களுடைய நிலைமை மோசம். இந்திய அளவில் மக்கள்தொகையில், சுமார் 15% பங்கைக் கொண்டிருக்கும் தலித்துகள் மொத்த நிலவுடைமையில் 8.5% பங்கைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், பஞ்சாப் மக்கள்தொகையில் சுமார் 33% பங்கைக் கொண்டிருக்கும் தலித்துகள் மொத்த நிலவுடைமையில் வெறும் 3.5% அளவுக்கே பங்கைக் கொண்டிருக்கிறார்கள். ஆகப் பெரும்பாலானோர் அடித்தட்டு வர்க்கத்தினர்; கூலித் தொழிலாளர்கள். மேலும், ‘தலித்’ எனும் சமூகத் திரட்சியாக அல்லாமல், சிறியதும் பெரியதுமாக 39 சாதிகளாக, வெவ்வேறு பிராந்தியத்தினராகப் பிரிந்து கிடக்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் உள்பட வெவ்வேறு தலைவர்கள் பஞ்சாபில் தலித் அரசியலை ஒரு துடிப்பான சக்தியாக வளர்த்தெடுக்க முயன்றாலும், ஒரு தற்காலிக எழுச்சியோடு அது முடிவுக்கு வந்துவிடுவதே வழக்கமாக இருந்திருக்கிறது.

2022 தேர்தலில் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்க பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணியை அறிவித்தது அகாலி தளம்;  ‘வரவிருக்கும் தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவியில் ஒரு தலித் அமர்வார்’ என்றும் அது அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் சன்னியை இப்போது முதல்வராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ். சீக்கிய சமூகத்தின் ஜாட் பிரிவைச் சேர்ந்தவர் சித்து; தலித் பிரிவைச் சேர்ந்தவர் சன்னி. இருவரும் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வார்கள்; ஒருவேளை ஆட்சியை காங்கிரஸ் தக்கவைத்தால், சித்து முதல்வர் ஆவார்; சன்னி துணை முதல்வர் ஆவார் என்பதே ஏற்பாடு என்கிறார்கள்.

வாக்கரசியல் அடிப்படையில், காங்கிரஸின் முடிவு சமயோஜித உத்தி என்று நியாயப்படுத்துபவர்கள் இருக்கலாம். பஞ்சாபில் ஜாட்டுகளின் கட்சியாகவே பார்க்கப்படும் இடத்தில் அகாலி தளம் இருந்தது என்றால், ஜாட்டுகளின் தலைமையில் செயல்படும் கட்சியாகவே காங்கிரஸ் இதுநாள் வரை இருந்துவந்திருக்கிறது. இப்படியான கணக்குகள் வழியாகவேனும் விளிம்புநிலைச் சமூகத்தினர் அதிகாரம் நோக்கி வர முடிகிறதே என்ற பார்வையில் நாமும் இம்முடிவை வரவேற்கவும்கூட செய்யலாம். தொலைநோக்கில் ஒரு கட்சிக்குள் தீப்போலப் பரவிக்கொண்டிருக்கும் பூசலை எதிர்கொள்ள இத்தகைய உத்திகள் எந்த வகையிலும் நல்ல தீர்வாக இருக்க முடியாது.

காங்கிரஸின் டெல்லி தலைமை இருக்க வேண்டிய பலத்துடன் இருந்தால், இத்தகு உள்கட்சி விவகாரங்களை விவாதித்து கட்சிக்குள் சீரமைப்பைக் கொண்டுவந்திருக்க முடியும். பஞ்சாப் மட்டும் இன்றி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் என்று காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் கடும் பூசல் நிலவ ‘ஸ்தம்பித்திருக்கும் தேசிய தலைமை’ முக்கியமான காரணம். ராகுல் காந்தி உறுதியான ஒரு முடிவை எடுத்துச் செயல்படாத வரை காங்கிரஸுக்கு விடிவே இல்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆஆக இப்போது நரசிம்ம ராவ்: பாரத ரத்னங்கள்லால்பகதூர் சாஸ்திரிசிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு!தான்சானியாவின் முக்கிய நகரங்கள்கீழ் முதுகு வலிசீராக்கம்சார்புநிலைமக்கள்தொகை கணக்கெடுப்புபல்கலைக்கழகம்உரிமையியல்படகுப் பயணம்அருண் நேருபெயர் மாற்றம்தலைவர்சரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புநானும் நீதிபதி ஆனேன்உணவுத் தன்னிறைமரணத்தின் கதைவட கிழக்கு பிராந்தியம்உணவுப் பழக்கம்தம்பி வா! தலைமையேற்க வா!யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்வெற்றிடத்தின் பாடல்கள்ரவி நாயர் கட்டுரைபொருளாதாரச் சுதந்திரம்எண்ணிக்கைமாறிவரும் உணவுமுறைஷேக் அப்துல்லாதமிழ்நாட்டைப் பிரிக்கலாமா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!