சட்டம், இன்னொரு குரல் 6 நிமிட வாசிப்பு
அமைச்சர்கள் அரியாசனத்துக்கு சரியாசனத்தை நீதிபதிகள் கேட்பது முறையா?
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி அவரை நினைவுகூரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தது தமிழக அரசு. அடையார் திரு.வி.க. பாலத்துக்கு அருகேயுள்ள சிவாஜி நினைவு இல்லத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காலை நேரத்தில் நடந்த விழாவுக்குக் கூடிய மக்கள் கூட்டத்தினால் சாலைப் போக்குவரத்துக்குச் சிறிது நேரம் தடை ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பெசன்ட் நகரில் வசித்துவருவதால் நீதிமன்றத்துக்கு அந்த வழியாகத்தான் போக வேண்டும். வாகன நெரிசலில் அவரது வாகனமும் மாட்டிக்கொண்டது.
நீதிமன்றத்தை நீதிபதி அடைவதற்கு அரை மணி நேரம் கால தாமதம் ஆகியிருக்கிறது. விளைவாக ஏற்பட்ட கோபத்தால், தனது புகாரையே நீதிமன்ற நடவடிக்கையாக எடுத்துக்கொண்டு உள்துறைச் செயலருக்கு அறிவிக்கை அனுப்பிய நீதிபதி, காணொளி மூலம் அவரே விசாரணை நடத்தியிருக்கிறார். அரசு செயலர் தவறுக்கு வருத்தம் தெரிவித்த பின்னும் அவரிடம், ‘நீதிபதியைத் தடுத்தீர்கள், அதேபோல் அமைச்சர் வண்டிகளைத் தடுப்பீர்களா?’ என்ற கேள்வியை எழுப்பியவர், ‘நீதிபதிகளுக்கும், அமைச்சர்கள்போல கௌரவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இது தொடர்பில் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். “நடைமுறையிலுள்ள பாதுகாப்பு அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு அமைச்சர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பதே நீதிபதி அவர் வகிக்கின்ற பதவிக்குப் பெருமை சேர்க்கும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
எந்த அந்தஸ்து பெரியது?
எனக்கு, ‘நீதிபதி ஏன் அமைச்சருக்கான அந்தஸ்தைக் கேட்டுப் பெற வேண்டும்?’ என்று தோன்றியது. அமைச்சர் ஒருவரால் நீதிபதிகளின் தீர்ப்புகளில் ஒரு வார்த்தை அல்லது ஒரு கமாவைக்கூட மாற்ற முடியாது. ஆனால், நீதிபதிகள் அமைச்சரின் உத்தரவுகளை ரத்துசெய்யும் அதிகாரம் பெற்றவர்கள். அந்தஸ்து என்பது பதவியை ஒட்டி மட்டும் கிடைப்பது அல்ல.
ராமனின் தூதராகச் சென்ற அனுமனுக்கு, ராவணன் அவையில் இருக்கை அளிக்காவிட்டாலும், தன்னுடைய ஆசனத்தை அனுமன் தானே பொருத்திக்கொண்டார். அனுமனைப் பொறுத்தவரை தான் தூது சென்ற காரியம் முற்றுப்பெற வேண்டும் என்று மட்டுமே எண்ணினார். இது எப்போதும் தொடர்கதை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையானோர் தென் சென்னையில் வசித்துவருவதால் அவர்கள் கடற்கரைச் சாலை வழியாகத்தான் உயர் நீதிமன்றத்தை அடைய முடியும்.
இதற்கு முன்னரும் பல முறை நீதிபதிகளின் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நீதிமன்றத்துக்கு வர தாமதம் ஏற்பட்டிருக்கிறது. 1983-ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் திடீரென்று ஒருநாள் காலை அண்ணா நினைவிடத்தின் முன் ஒன்றிய அரசை எதிர்த்து தர்ணா நடத்தத் தொடங்கினார். கடற்கரைச் சாலை வழியாக நீதிமன்றத்துக்கு வந்த வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டதால், நீதிபதிகளும் கால தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தார்கள்.
காலம் தவறாமைக்குப் பெயர்போன நீதிபதி சத்தியதேவ் அன்றைக்குத் தாமதமாக வர நேர்ந்ததால் கோபமுற்றார். அன்று காலைதான் தனியார் கல்லூரி ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு நகரக் காவல் ஆணையர் தடை விதித்த வழக்கை அவர் முன் நான் வழக்காடவும் வேண்டி இருந்தது. “போக்குவரத்துக்கு இடையூறு கூடாது என்று இத்தகைய போராட்டங்களுக்கு போலீஸார் தடை விதிப்பதில் என்ன தவறு?” என்று என்னிடம் கேட்டார் நீதிபதி சத்தியதேவ். “இன்று காலை முதல்வரின் தர்ணாவால்கூட நீதிபதிகளுக்கே இடையூறு ஏற்பட்டது. சில ஊழியர்கள் நிர்வாகத்துக்கு எதிராக சாலையோரத்தில் போராட்டம் நடத்துவது மட்டும் காவல் துறைக்கு ஏன் இடையூறாகத் தெரிகிறது?” என்று நான் கேட்டேன்.
சத்தியதேவ் சிரித்துக்கொண்டே போராட்டம் நடத்த அனுமதி அளித்தார். எல்லோருமே பாதிப்புக்குளாகிறார்கள் நீதிபதிகள் மட்டுமா போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு கடமையாற்றச் செல்ல முடிவதில்லை? வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், சிறு வியாபாரிகள், மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், படிக்கச் செல்லும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், இப்படி பல தரப்பினருக்கும் இத்தகைய இடையூறுகளால் பாதிப்புக்குள்ளாகவே செய்கிறார்கள். அவர்களையும் பாதிப்பிலிருந்து தப்புவிக்க நீதிபதி ஏதேனும் ஆலோசனை கூறியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
கொல்கத்தாவில் இதேபோல, ஊர்வலங்கள், விழாக்கள் காரணமாக போக்குவரத்து இடையூறுக்குள்ளாவதை முன்வைத்து, ரிட்டுபர்ணா சர்க்கார் தத்தா ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கல்கத்தா நீதிமன்றம், நிகழ்ச்சிகளால் முழுப் போக்குவரத்தும் அடைபடாமல் சாலையின் ஒரு பகுதியைப் போக்குவரத்துக்குத் திறந்து வைக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது (3.5.2018).
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் பெங்களுரைச் சேர்ந்தவர். அடிக்கடி அவர் சாலை வழியாகத் தன் சொந்த ஊருக்குச் சென்று வர நேர்ந்தது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நீதிபதிகளின் வாகனங்கள் செல்லத் தனிப் பாதை அமைக்குமாறு அவர் அரசுக்கு ஆலோசனை கூறியது நினைவுக்குவருகிறது.
நீதிபதிகள் சலுகை கேட்கலான வரலாறு
நீதிபதிகள் எப்போதிலிருந்து அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்து, சலுகை இவற்றையெல்லாம் தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள்? 1991-ல் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.ராமலிங்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடன் இருந்த அவரது மனைவிக்கும் அங்கு சிகிச்சை தேவைப்பட்டது. நீதிபதிக்கு மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தைத் திருப்பி அளித்த அரசு, அவரது மனைவியின் சிகிச்சை செலவை ஏற்க மறுத்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 1993-ம் வருடம் நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எழுதிய நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா, “நீதிபதிகளுக்கும் அமைச்சருக்கான அந்தஸ்தைப் பெறுவதற்கு உரிமை உண்டு. எனவே, அவர்களுக்கு அரசு வாகனங்கள் வழங்குவதோடு, அதில் சுழலும் சிவப்பு விளக்குகள் வைத்துக்கொள்ளவும், தேசியக் கொடியைப் பறக்க விட்டுச்செல்லவும் அனுமதி உண்டு” என்று தீர்ப்பு அளித்தார். மட்டுமின்றி, நீதிபதிகளின் வாகனங்கள் மஞ்சள் கோட்டை மீறினாலும், சிக்னல் விளக்குகளுக்குப் புறம்பாகச் சென்றாலும் காவல் துறை அவர்களைத் தடுக்கக் கூடாது என்றும் விசித்திரமான உத்தரவையும் பிறப்பித்தார்.
இந்த உத்தரவைப் படித்த நண்பர் ஒருவர் என்னிடம் இப்படிக் கேட்டார்: “கடற்கரைச் சாலையில் வேகக் கட்டுப்பாட்டை மீறிக் காலையில் வாகனங்களில் விரைவாக நீதிமன்றம் செல்லும் நீதிபதிகளின் மன்றங்களில் எங்களது வழக்குகள் விசாரிப்பதற்கு ஆண்டுகணக்காகக் காத்திருக்க வேண்டி இருக்கிறது.”
2009 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்குப் பணம் அளிக்க வாகனங்களில் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் விதமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களுக்குக் கால விரயம் ஏற்பட்டதை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. அன்றைக்குப் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றிருந்த ஈ.தர்மாராவ் அந்த நாளிதழின் செய்தியையே சுயமான வழக்காக எடுத்துக்கொண்டு வாகனச் சோதனைகளுக்குத் தடை விதித்தார். இந்த உத்தரவு இரண்டே நாட்களில் ரத்துசெய்யப்பட்டபோதும், பணத்தைப் பதுக்குபவர்களுக்கு அந்த இரண்டு நாட்கள் வசதியானதாக அமைந்துவிட்டது.
நீதிபதிகளே தன் பிரச்சினையை விசாரிக்கலாமா?
நீதிபதி போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரே தன்னுடைய பிரச்சினையை வழக்காகக் கருதி அரசுக்கு அறிக்கை அனுப்பி அதை அவரே விசாரிக்க முடியுமா? இது முக்கியமான ஒரு கேள்வி என்று நினைக்கிறேன்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுநீதிச் சோழனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மணி அடித்த பசுவின் புகாரை விசாரித்து அதனது கன்றைத் தனது மகன் தேரோட்டிக் கொன்றதால் மகனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று இன்று ஒரு சம்பவம் நடந்தால் தந்தையே மகனின் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், எவரும் தன்னுடைய பிரச்சினைக்குத் தானே நீதிபதியாக இருக்க முடியாது என்பதையே நவீனச் சட்டம் அடிப்படை வழிகாட்டலாகச் சொல்கிறது.
இன்றைய சட்ட நடைமுறைகளின்படி நீதிபதியொருவர், தான் அக்கறை கொண்ட பொதுநலன் கருதிய பிரச்சினை ஒன்றை வழக்காக எடுத்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென்றால், அவர் அப்பிரச்சினையைக் கடித வடிவில் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். தலைமை நீதிபதி விருப்பப்பட்டால் அதை சுயமாக எடுத்துக்கொள்ளும் வழக்காகக் கருதி வேறு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்படி உத்தரவிடுவார். இப்படி நடப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் மீது தொடுக்கப்பட்ட புகாரை சுயமாக வழக்காக எடுத்துக்கொண்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், ‘வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நாளிதழ்கள் வெளியிடக் கூடாது’ என்றும், ‘அவ்வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து நீதிமன்றம் நேரில் கண்காணிக்கும்’ என்றும் ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்கும் அதிகாரம் தலைமை நீதிபதியின் உத்தரவின் மூலம் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், நெரிசலில் சிக்கித் தவித்த நீதிபதி நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்து, காணொளி மூலம் உள்துறைச் செயலரை விசாரித்ததுடன், இது போன்ற போக்குவரத்து நெரிசலில் முதல்வரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்துவீர்களா என்று கேட்டதும், நீதிபதிகளுக்கு அமைச்சர்களுக்கான அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கூறியதும் நீதிப் பரிபாலனத்துக்கு அழகல்ல.
அனைத்துத் தரப்பு மக்களுமே போக்குவரத்து நெரிசல் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுநலன் கருதி அப்பிரச்சினையைக் கையில் எடுத்தால், கல்கத்தா உயர் நீதிமன்றம்போல் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சென்றுசேருவதுபோல் நிவாரணம் அளித்திருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் அரசு செயலரைக் கேள்விக்குள்ளாக்கி விசாரிப்பதில் நியாயம் இல்லை. அமைச்சர்களைவிடப் பெரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நீதியரசர்கள், அமைச்சர்களுக்கு சரியாசனம் கேட்டது முறையல்ல!
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
M A Nijamudeen 3 years ago
விளக்கங்கள் அருமை, பயமறியா பதிவுகள்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
V NEELAKANDAN 3 years ago
நீதியரசருக்கு நன்றி. பொதுமக்களின் குரலைப் பல முந்தைய நீதிமன்ற சம்பவங்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு என்பதைப் பொருத்து டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் சமீபத்தில் உதிர்த்த கருத்துகளையும் நீதியரசர் சந்துரு அவர்கள் கட்டுரையின் அடிப்படையில் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
V NEELAKANDAN 3 years ago
நீதியரசருக்கு நன்றி. பொதுமக்களின் குரலைப் பல முந்தைய நீதிமன்ற சம்பவங்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு என்பதைப் பொருத்து டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் சமீபத்தில் உதிர்த்த கருத்துகளையும் நீதியரசர் சந்துரு அவர்கள் கட்டுரையின் அடிப்படையில் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Saravana 3 years ago
I know its weird but I feel so relaxed after reading this article. Because, I had similar questions and concerns about this issue. Thank you Chandru sir. When wrong things condemn by personals from same department, it restrict me to think bad about the whole department. Aram vellattum. Nandri.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.