கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு
ஒகேனக்கல்: கழிவுநீர் அருவி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு இவ்வாண்டுக் கோடையில் இருமுறை சென்றேன். கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்த வாய்ப்பு. புதிய காட்சிகள்; அனுபவங்கள். கருநாடகத்திலிருந்து வரும் காவிரி, தரைப்பகுதியில் உள்ள பரந்த பாறைகளுக்கு இடையே பலப்பல அருவிகளாய்ப் பிரிந்து கொட்டும் கண்கொள்ளாக் காட்சியை இங்கே காணலாம். இது பெருமலைப்பகுதி அல்ல; குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையும் கிடையாது. ஆனால், மக்கள் பெரிதும் விரும்பிவருகிற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. காரணம் நீர்தான்.
நீர் கொள்ளும் பற்பல தோற்றங்களை இங்கே காணலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றம். கர்நாடகாவிலிருந்து நீர் வரத்தைப் பொருத்துத் தோற்றம் உருக்கொள்ளும். மேட்டூர் அணைத் திறப்பைப் பொருத்தும் மாறும். மேலும், நீர் வலிமை எத்தகையது என்பதையும் உணரலாம். ஓரடி பிசகினால் உயிருக்கே ஆபத்து விளையக்கூடும்.
தமிழ்த் திரைப்படங்களில் ஒகேனக்கல் பெறும் இடம் குறித்துத் தனித்த ஆய்வே செய்யலாம். அச்சமூட்டும் சண்டைக் காட்சிகளுக்கும் அழகொளிரும் காதல் பாடல்களுக்கும் ஒருங்கே ஒகேனக்கல் களமாகியுள்ளது. அந்தக் கால ‘அடிமைப்பெண்’ தொடங்கி ‘இணைந்த கைகள்’ வரை ஏராளமான படங்களை அங்கே எடுத்துள்ளனர். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஒகேனக்கல்லை அவ்வளவாகப் படங்களில் காணோம். எனினும் பாறைகளும் அருவிகளும் திரைப்பட நினைவுகளால் அடையாளப்படுகின்றன.
சமையல் சங்கம்
கூத்தப்பாடி என்னும் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் ஒகேனக்கல். ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இச்சுற்றுலாத் தளத்தில் கிராமப் பண்பாடு ஓங்கி விளங்குகிறது. முக்கியமாக உணவு. கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வாழும் கிட்டத்தட்ட ஐந்நூறு பெண்கள் சமையல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சமைக்கும் பெண்களுக்கான சங்கம் செயல்படுகிறது. அவர்கள் சமைக்கும் உணவுக்குப் பெயர் ‘மீன் சாப்பாடு.’ சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்துசேர்ந்ததும் “மீன் சாப்பாடு வேணுமா?” என்று கேட்டு ‘ஆர்டர்’ எடுத்துக்கொள்ளப் பெண்கள் உள்ளனர்.
எத்தனை பேர் என்பதைக் கேட்டு என்ன மீன் வேண்டும், குழம்புக்கு எத்தனை கிலோ, பொரிப்பதற்கு எத்தனை கிலோ என்பதைச் சொல்கின்றனர். கூட்டியோ குறைத்தோ பயணிகள் சொல்லும் முடிவை ஏற்றுக்கொள்கின்றனர். அங்கேயே பிடிக்கும் ஆற்றுமீன் வேண்டுமானால் காலை நேரத்திலேயே செல்ல வேண்டும். இல்லையென்றால் வெளியிலிருந்து வரும் கடல் மீன்தான்.
பயணிகளையே உடன் வந்து வாங்கிக் கொடுக்கும்படி சொல்கின்றனர். பொரிக்கப் பாறைமீனும் குழம்புக்குக் கெளுத்தியும் அவர்கள் பரிந்துரை. வெட்டிய மீன் துண்டுகளை எண்ணி இத்தனை எனத் தெளிவாகக் கணக்கும் காட்டுகின்றனர். சமையலர்களே எடுத்தால் மீன் குறைவாக இருக்கிறது என்றோ துண்டுகள் குறைகின்றன என்றோ புகார் சொல்கிறார்களாம். அதற்காகப் பயணிகளை முன்னிறுத்தியே தேர்வு, வாங்குதல், தொகை தருதல் முதலியவை நடக்கின்றன. சமைப்பதற்கான கூலியையும் பேசிக்கொள்கின்றனர்.
மீன் குழம்பு எனும் அமிர்தம்
பயணியர் அருவிக் குளியலெல்லாம் முடித்துத் திரும்புவதற்குள் மதியச் சாப்பாடு தாயாராகிவிடுகிறது. அங்கே விரிந்து கிடக்கும் பாறைகளுக்கு இடையே இருக்கும் சிறு தரைப் பகுதிகளே சமையல் கூடங்கள். ஒவ்வொரு சமையல் கூடத்திற்கும் மேலே தற்காலிகக் கூரை. நீர்ப் பெருக்கு ஏற்பட்டால் அவ்விடம் எல்லாம் மூழ்கிவிடும் என்பதால் எல்லாம் தற்காலிகம். விறகு அடுப்பு; பொடிகளைக் கொண்டு சாந்து அரைப்பதற்கு உரல். உட்கார்ந்து சாப்பிடப் பாறைகளும் கற்களும் வாகாக இருக்கின்றன. பயணியர் குழுவுக்கு நடுவே சோறு, மீன் குழம்பு, பொரித்த மீன், ரசம் ஆகியவற்றைப் பாத்திரத்தில் வைத்துவிட்டால் போதும். பயணியரே தமக்குள் பகிர்ந்துண்ணலாம். தேவையை இனிய சொற்களாலான அன்போடு கவனித்துக்கொள்கின்றனர்.
மீன் குழம்பின் சுவையைச் சொல்ல ‘அமிர்தம்’ என்பதுதான் பொருத்தமான சொல். விறகு அடுப்பும் உரலும் அச்சுவைக்குக் காரணம் என்று சொல்கின்றனர். நவீன எந்திரங்களை எதிராகப் பார்க்கும் மனநிலையில் இருந்துவரும் கருத்து அது என்றே நினைக்கிறேன். பாறைகளுக்கு இடையே மிக்சி, எரிவாயு ஆகியவற்றைக் கொண்டுசெல்ல வாய்ப்பில்லை. ஆனால், விறகு அடுப்பும் உரலும் பெரும்பாலோருக்கு ஈர்ப்பைத் தருகின்றன. ஆகிவந்த பணக்காரக் கால்கள் எல்லாம் பாறைகளுக்கு இடையே குந்த வைத்துக்கொண்டு மீன் குழம்பைச் சப்புக் கொட்டியும் எச்சில் ஒழுக மீன் துண்டுகளைப் பிய்த்தெடுத்தும் உண்ணுவதைப் பார்க்க ஆனந்தமாகவே இருக்கிறது. வயிறு புடைக்கத் தின்றாலும் நாக்கு இன்னும் இன்னும் என்று கேட்பது ஆச்சரியம். மீன் குழம்பின் செய்முறை அப்படிப்பட்டது. அந்தப் பகுதிக்கே உரிய தனித்தன்மையாக அச்செய்முறை இருக்கக்கூடும்.
ஒருவருக்கு அதிகபட்சம் இருநூறு ரூபாய்க்குள் மீன் குழம்பு, குழம்பு மீன், பொரித்த மீன், ரசம் ஆகியவற்றோடு வயிறாரச் சாப்பாடு. மதியம் முதல் மாலை வரை இந்தச் சாப்பாட்டு வியாபாரம் நடக்கிறது. காலையிலேயே சென்றால் வெளியூர்க்காரர்கள் நடத்தும் சிறுசிறு உணவகங்களில் இட்லி, தோசை முதலியன கிடைக்கின்றன. கிராமத்துப் பெண்கள் கூடைகளில் கொண்டுவந்து வைத்திருக்கும் ராகிக் களி உருண்டைகளுக்குப் பயணியரிடையே நல்ல வரவேற்பு. தருமபுரி மாவட்ட மக்களின் முக்கியமான உணவு ராகிக் களி. களிக்கும் கருவாட்டுக் குழம்புக்கும் எப்போதும் அத்தனை பொருத்தம். கோழிக் குழம்பும் கீரைக் குழம்பும்கூடக் கிடைக்கும். அவரவர் தேர்வு. ஒப்புட்டு (போளி) உள்ளிட்ட உள்ளூர்ப் பலகாரங்களுக்கும் குறைவில்லை.
பெருகும் வேலைவாய்ப்புகள்
பெண்கள் சமையலில் ஈடுபடுவதைப் போல ஆண்கள் இருவகை வேலைகளைச் செய்கின்றனர். அருவிக் குளியல் போடச் செல்லும் பயணியருக்கு எண்ணெய்த் தேய்ப்பு (ஆயில் மசாஜ்) செய்வோர் இருநூறுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எண்ணெய்ப் போத்தலைக் கையில் வைத்துக்கொண்டு பயணியரை அழைக்கின்றனர். எண்ணெய்த் தேய்ப்பு நடப்பதும் பாறைகளுக்கு இடையேதான். உள்ளாடையோடு தம் சீரற்ற உடலைப் பற்றிய உணர்வின்றி எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் ஆண்கள் எண்ணிக்கை மிகுதிதான். இத்தகைய பொதுவெளிகள் ஆண் உடலுக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தின் அடையாளத்தை அங்கே காணலாம். அப்பகுதி இளைஞர்களும் நடுத்தர வயது ஆண்களும் இத்தொழில் செய்கின்றனர்.
ஒகேனக்கல்லில் பயணியருக்கு மிக விருப்பமான விஷயம் படகுப் பயணம். படகு செலுத்துவோர் நானூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கும் சங்கங்கள் உள்ளன. படகுப் பயண நிர்வாகத்தை ஒப்பந்ததாரர் செய்கிறார். ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு படகு செலுத்துவோருக்கு ஒரு தொகையைக் கொடுக்கின்றார். ஒப்பந்தப் பணம் கோடியில் போகிறது என்கிறார்கள். படகுப் பயண நேரம் ஒன்றரை மணி நேரம். ஒரு படகில் நால்வர் இருக்கலாம். ஆயிரத்தைந்நூறு ரூபாய் கட்டணம்.
படகு செலுத்துபவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் இன்னும் அரைமணி நேரம் பயணத்தைக் கூட்டுவதோடு புதுப்புது அருவிகளைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். நீரின் ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்த வகையில் படகுப் போக்குவரத்து நேரம் அமையும். காணும் அருவிகளின் உயரம் மாறும். அருவிகளின் எண்ணிக்கை கூடும்; குறையும். படகில் செல்வோருக்குத் தேவைப்படும் தண்ணீர்ப் பாட்டில், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றைத் தனிப் படகுகளில் பெண்கள் விற்பனை செய்கிறார்கள். படகு செல்லும் வழிக் கரையோரங்களில் பொரித்த மீன் விற்பனை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்களின் மக்களுக்கு பெரும் வேலைவாய்ப்பை ஒகேனக்கல் வழங்குகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னிருந்ததைவிட இப்போது பல மாற்றங்கள். முன்னர் அங்கே தங்குவதற்கு விடுதிகள் ஏதும் இருக்காது. இப்போது பல விடுதிகள் வந்துவிட்டன. பயணியர் வருகைக்குத் தகுந்தவாறு அறை வாடகை மாறும். வார நாட்களில் குறைவு; சனி, ஞாயிறுகளில் கூடுதல். அதுவும் கோடை விடுமுறைக் காலச் சனி, ஞாயிறு என்றால் மிகக் கூடுதல். உணவகங்களும் நிறைய உள்ளன. வெளியில் இருந்துவந்தோர் கடைகளை நடத்துகின்றனர். கிராம மக்களுக்குப் பாறைகள்; வந்தோருக்குக் கட்டிடங்கள். அரசின் தமிழ்நாடு ஹோட்டல் பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
17 Nov 2022
ஆண்களின் ஆக்கிரமிப்பு!
மக்கள் நீராடுவதற்கான அருவி குறைவான பரப்பளவில்தான் இருக்கிறது. அதிலும் மிக எச்சரிக்கையாக நீராட வேண்டும். எண்ணெய்ப் பிசுக்கும் சோப்பு நுரைகளும் ஷாம்புக் காகிதங்களும் கால்களை இடறிவிட வாய்ப்பு அதிகம். அருவிக் குளியலில் ஆர்வமுள்ளோர் ஓரிரவு அங்கிருக்கும் விடுதி எதிலாவது தங்கிவிட்டு விடிகாலையில் அருவிக்கு ஓடுகின்றனர். சுற்றுலாத் தலம் என்றால் மதுவுக்கு இடமில்லாமலா? இரவுத் தங்கல் என்பது பெரும்பாலும் மதுவுக்காகத்தான். அதனால், குடும்பமாக வருவோர் எண்ணிக்கை குறைவு.
கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளியல் வளர்ச்சிக்கேற்பக் கொண்டாட்டத்திற்கான பொதுவெளிகள் இல்லை. கிராமங்களில் கோயில் ஒன்றுதான் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கோயில். அந்தந்தச் சாதியினர் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் பொதுவெளி அது. நகரங்களின் அமைப்பு முறையில் பூங்கா, மைதானம் ஆகியவற்றுக்குப் போதுமான இடம் ஒதுக்கவில்லை. நடப்பவர்களுக்கே இடம் தராத சாலைகள். ஓர் ஓரமாகச் சற்றே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கக்கூட வழியில்லை. இப்போதைக்குப் பெருங்கோயில்களும் மலைப்பகுதிகளுமாகிய சுற்றுலாத் தலங்களே நமக்கிருக்கும் பொதுவெளிகள். இவற்றை நோக்கி விடுமுறை நாட்களில் மக்கள் படையெடுத்துச் செல்கிறார்கள்.
இவையும் பெரும்பாலும் ஆண்களுக்கான சுதந்திர வெளியாக இருக்கின்றன. பெண்களுக்கு ஏதோ ஓர் ஓரம்தான் கிடைக்கிறது. ஆண்கள் மிகக் குறைந்த உடையுடன் நடக்கிறார்கள். முழு உடலையும் காட்டி எண்ணெய்த் தேய்த்துக்கொள்கிறார்கள். எந்த இடத்திலும் உடை மாற்றுகிறார்கள். சிறுநீர் கழிக்க இடம் தேடத் தேவையில்லை. ஆண்கள் தனியாகவும் குழுவாகவும் தங்க அறைகள் கிடைக்கின்றன. படகுப் பயணத்தில்கூடச் சிறிதும் கூச்சமின்றி ஆண்கள் மது அருந்துகிறார்கள். உடல் பற்றிய உணர்வு அற்றுப்போகும் இந்தச் சுதந்திரம் பெண்களுக்குக் கிடையாது. பொதுவெளிகளைப் பெருமளவு ஆண்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
பொதுவெளியை எப்படிப் பயன்படுத்துவது என்னும் உணர்வு நம்மிடம் சிறிதும் இல்லை. சோப்பு, ஷாம்புக் காகிதங்களையும் தண்ணீர்ப் பாட்டில்களையும் எங்கெங்கும் காணலாம். ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் பாதைகளிலும் அருவி நீரிலும் குப்பைகள்; குப்பைகள். ஊராட்சி மிகக் குறைவான குப்பைத் தொட்டிகளையே வைத்திருக்கிறது. அவற்றையும் யாரும் பயன்படுத்துவதில்லை. எந்த இடத்திலும் தூக்கி எறியலாம் என்னும்போது குப்பைத் தொட்டியைத் தேடிச் செல்லும் தேவை ஏன் வருகிறது? ‘பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருக்கிறது’ என்று அங்கங்கே எழுதி வைத்திருக்கிறார்களே தவிர, சிறுதடையும் இல்லை. எல்லோரும் குப்பைகளிலேயே நடக்கவும் புழங்கவும் பழகியிருக்கிறார்கள்.
இது காவிரிதானா?
ஒருநாளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இடத்தில் போதுமான கழிப்பறை வசதி இல்லை, ஏன், கழிப்பறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படகுத்துறைக்குச் சீட்டு வழங்குமிடத்தில் இருக்கும் கழிப்பறை மட்டும்தான். அதற்குள் போக வேண்டாம் என்றுதான் அங்குள்ளோர் அறிவுறுத்துகின்றனர். அத்தனை மோசமாகவும் நாற்றத்துடனும் இருக்கிறது. அருகில் ஆர்ப்பரித்து ஓடும் அருவியும் ஆறும் இருக்கின்றன. ஆனால், கழிப்பறைக்குத் தேவையான தண்ணீர் இல்லை என்றால் என்ன சொல்வது?
நம் மக்களுக்கும் கழிப்பறையைப் பயன்படுத்தும் திறமில்லை. தண்ணீர் ஊற்றுவதில்லை. கழிப்பறைக்கு வெளியிலேயே போய்விடுகிறார்கள். அவ்வப்போது சுத்தம் செய்வதற்கு ஆட்களும் இல்லை. இலவசக் கழிப்பிடம் என்றால் அது பெயரளவுக்குத்தான். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே. ஆண்கள் ஏதேனும் ஒரு பாறைச் சந்தில் நீட்டிவிடுகிறார்கள்.
கிட்டத்தட்டப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துசென்ற அப்பெருவெளியைச் சுத்தம் செய்யும் பணியில் பத்தே பத்துப் பெண்கள் ஈடுபட்டிருப்பதை மறுநாள் காலையில் கண்டேன். நல்ல வருமானம் கொழிக்கும் ஊராட்சி ஏன் இத்தனை குறைவான ஊழியர்களை அமர்த்துகிறது? ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஆபத்தான அருவிக்கு அருகில் இரண்டே இரண்டு காவலர்கள். அருவிக்குச் செல்லும் வழி பாசி பிடித்து வழுக்குகிறது. அசட்டையாகக் கால் வைத்துவிட்டால் அவ்வளவுதான். அருவி நீர் வழிந்தோடும் பாதையில் குழிகள், அறுபட்ட கம்பங்களின் அடிப்பகுதிகள் எல்லாம் இருக்கின்றன. நீர்வரத்துக் குறைவாக இருக்கும் காலத்தில் இவற்றைச் சரிசெய்வது கடினமில்லை. திரளாக மக்கள் கூடுமிடத்தில் சிறுசிறு இடர்களைக் களைவதில் கவனம் செலுத்த வேண்டாமா?
எல்லாவற்றையும்விடக் கொடுமை ஒன்றிருக்கிறது. அருவிக்கு வரும் நீரையும் அருவியிலிருந்து வழிந்தோடும் நீரையும் ஒருநிமிடம் நின்று பார்த்தால் தொலைந்தோம். பெங்களூரு உட்படப் பல ஊர்களின் சாக்கடைக் கழிவுநீர்தான் காவிரி. அந்தச் சாக்கடை நீர் மேலிருந்து ஊற்றுவதால் அருவியாக அர்த்தம் பெறுகிறது. வேகமாகத் தலையில் ஊற்றுவதால் நாமும் தலையைக் காட்டுகிறோம். அதில் ஒருகுடம் நீரை மொண்டு தனியாக வைத்து ஒருவரை ஊற்றிக்கொள்ளச் சொன்னால் குளியலே வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள்.
கர்நாடகக் கழிவுகளோடு நம் கழிவுகளையும் இணைத்து மேட்டூர் அணைக்கும் பல மாவட்டங்களுக்கும் அனுப்புகிறோம். ஓடும் நீரில் எல்லாம் சுத்தமாகிவிடும் என்னும் மூட நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது’ என்றெல்லாம் பழமொழி வேறு. நீரைக் கண்கொண்டு பார்க்காமல் ஒகேனக்கல் அருவியில் நீராடுவோருக்குப் பிரச்சினை இல்லை, ஆம், பெரும்பாலோருக்குப் பிரச்சினை ஏதுமில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.