கட்டுரை, அரசியல், மொழி 10 நிமிட வாசிப்பு

இந்தி எப்படி இந்தியாவை ஆள்கிறது?

பெக்கி மோகன்
29 Sep 2022, 5:00 am
1

ந்தி அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலத்தின் இடத்தை எடுத்துக்கொண்டு நமது தேசிய மொழியாக வளர வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது மீண்டும் மொழி விவாதத்துக்கு  சமூக வலைதளங்களில் உயிர் கொடுத்தது.

இந்தி மொழிக்கான தேவையை எதிர்க்க இந்த முறை எழுந்துள்ள ஒரு வாதம் என்னவென்றால், இந்தி  என்பது கிழக்கிந்திய கம்பெனிக்காக, கல்கத்தாவின் ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் பணிபுரிந்த ஜான் கில்கிறிஸ்ட் என்ற ஸ்காட்டிஷ் மொழியியலாளரால் ‘வடிவமைக்கப்பட்ட ஒன்று’. எனவே, அது ஒருபோதும் இந்தியாவின் தேசிய மொழி ஆக முடியாது என்பதாகும். 

ஹிந்தவியும் குஸ்ரோவும் 

முதல் பிரச்சினை: ஆங்கிலத்தை மாற்ற வேண்டுமா? நிச்சயம் அது முடியாது என நான் நினைக்கிறேன்.

நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்திய அரசு, மொழி அடிப்படையில் ஒரு மேட்டிமைப் பிரிவினரை வைத்துக்கொண்டுதான் செயல்பட்டுவருகிறது.  சம்ஸ்கிருதத்தைவிட மதிப்பு குறைந்ததாகவும் பரஸ்பரம் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்த பிராகிருத மொழிகள், மேட்டிமை வர்க்கத்தினர் மிகப் பெரிய பரப்பளவைச் சேர்ந்த மக்களோடு உரையாட வழிவகுத்தன. டெல்லி சுல்தான்கள் மற்றும் மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் பாரசீக மொழி அந்த இடத்தை வகித்தது, சுதந்திரத்துக்குப் பிறகு அந்த இடம் ஆங்கிலத்தால் பதிலீடு செய்யப்பட்டது. 

ஆங்கிலத்தின் தொடர்ச்சியானது நமது கடந்த கால மேட்டிமைத்தனத்தின் தொடர்ச்சியாகும். உண்மையில், ஓர் உள்ளூர் மொழியை தேசிய மொழியாகத் தேர்ந்தெடுப்பது பெரிய சிக்கலாக இருந்திருக்கும். ஏனெனில் எதுவும் மாறவில்லை: நமது சமூகம் மாறவில்லை, நமது தற்போதைய அரசாங்கத்துக்கு திடீரென்று சமத்துவ எண்ணம் வந்துவிடவில்லை. எனவே, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு எடுக்கும் எந்த ஒரு திடீர் முயற்சியையும் தென்னிந்தியா சந்தேகிப்பது நியாயமானதுதான்.

சரி, இந்தியின் கதை என்ன?

பெரும்பாலான நவீன இந்திய மொழிகளைப் போலவே, இந்தி உண்மையில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான். மராத்தி, வங்காளம், அவதி மற்றும் பிரஜ் போன்ற மொழிகளின் ஆதாரப்  பதிவுகளைக் கண்டுபிடிக்க முற்பட்டபோதுதான் இந்தியும்  கண்டறியப்பட்டது. இந்தி டெல்லியின் பேச்சுவழக்கு மொழியாக இருந்தது, அது பெரிதாக மாறிவிடவில்லை. 

இந்தி எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள நாம் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அமீர் குஸ்ரோவின் சில படைப்புகளைப் பார்க்க வேண்டும்: 

"ஓ குஸ்ரோ! காதல் நதி, அதன் நீரோட்டம் முரண்பட்டது,
நதியில் குதிப்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், யார் மூழ்குகிறார்களோ அவர்கள் கடந்துபோவார்கள்."

பாரசீக மொழியுடன் ஒப்பிடத்தக்க இலக்கிய மொழியாக அவரால் சொல்லப்பட்ட ‘ஹிந்தவி’ என்ற மொழியில் குஸ்ரோ எழுதினார். அது அனைத்து வட இந்திய மொழிகளின் வட்டார மொழிகளையும் குறிப்பதாக இருந்தது. ‘ஹிந்தவி’ என்பது இந்தி அல்ல. அது தனித்தனி பிராந்திய மொழிகளான பிரஜ், அல்லது அவதி, அல்லது போஜ்புரி, அல்லது குஜராத்தி, அல்லது பஞ்சாபி, இவற்றில் ஏதோ ஒன்றாக இருந்திருக்கலாம்.

இவை எல்லாவற்றிலும் நாம் இப்போது இந்தி அல்லது உருது என அழைக்கும் தெஹ்லவி மொழிக்கு இடம் சார்ந்த அனுகூலம் இருந்தது, தலைநகரில் பேசப்படும் எந்தவொரு வட்டாரவழக்கும் மக்களால் பெரிதாகக் கருதப்பட்டது. பாரசீகம் அலுவல் மொழியாக இருந்தபோதிலும், ‘தெஹ்லவி வட்டாரவழக்கு’ செழித்து வளர்ந்தது, காலப்போக்கில் அது ஒரு ‘மொழி’ என்று  அங்கீகரிக்கப்பட்டது, அதேநேரத்தில் ஒருகாலத்தில் முன்னணியில் இருந்த, இலக்கியம் கொண்ட மொழிகள் என அங்கீகரிக்கப்பட்டிருந்த பிரஜ் மற்றும் அவதி ஆகியவை மொழிகளாக அங்கீகரிக்கப்படாமல் ‘இந்தியின் வட்டார வழக்குகள்’ என்று ஓரங்கட்டப்பட்டன.

எனது நம்பிக்கை

இந்தி பின்னர் மூத்த மொழியாகக் கருதப்பட்டது. அதன் எலும்புகள் மற்றும் தசைகள் எல்லாம் அப்படியேதான் இருந்தன, ஏனென்றால் அதுதான் ஏற்கனவே 12ஆம் நூற்றாண்டிலேயே 'முழுமையாக' வளர்ந்துவிட்டதே!

பெரியவர்கள் வயது முதிர்ச்சியடைவதால் தோற்றத்தில் பெரிதாக மாறிவிடுவதில்லை. அவர்கள் என்ன செய்ய முடியும், உடைகளை, அல்லது உடைகள் அணியும் ஸ்டைலை அல்லது சிகை அலங்காரத்தை மாற்றலாம், ஆனால் அது அவர்களின் மரபியல் தனமையைப் பாதிக்காத மேலோட்டமான மாற்றம் மட்டுமே. நான் புடவை அணிகிறேன், வேறு ஆடைகள் அணிந்தாலும் நான் அதே நபர்தான். 

இப்படி இந்தி மொழி காலத்துக்குக் காலம் மாற்றிக்கொண்ட அந்த உடைகள் எவை? வார்த்தைகள் அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால்: பெயர்ச் சொற்கள்.

இந்தி அவ்வப்போது மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு பெயர்ச்சொற்களின் புதிய 'அலமாரி'யைப் பெற்றுள்ளது. டெல்லி சுல்தானிய ஆட்சியை நிறுவியவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வருவதற்கு முன்பு, இந்தியின் பெரும்பான்மையான வார்த்தைகளும் உள்ளூர் பிராகிருதச் சொற்களுக்கான (சமஸ்கிருதம் அல்ல!) தற்பவங்களே. ஆனால், அதற்கு முந்தைய அவதாரம் ஒன்று இருந்திருக்கும், அதன் சொற்களஞ்சியமும்கூட சிந்துவெளி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என நான் திடமாக நம்புகிறேன்.  

இந்தி – மலையாளம் - உருது

டெல்லி சுல்தான்களின் ஆட்சியின்போது, இந்தி மொழி சில பாரசீகப் பெயர்ச்சொற்களை எடுத்துக்கொண்டது. சாதாரண நாட்டுப்புற மக்களைவிட மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாரசீக மொழி தெரிந்த குஸ்ரோ போன்றவர்களின் பேச்சில்தான் அது அதிகமாகப் புழங்கியது.

பின்னர், பல நூற்றாண்டுகளாக அது புதிய சமூகச் சூழலுடன் தொடர்புடைய வார்த்தைகளை எடுத்துக்கொண்டது. ஆனால், 1700களில் 'இந்தி ஜுபான்' என்று அழைக்கப்படும் கஜல்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்படத் தொடங்கியபோதுதான், பாரசீக சொற்களஞ்சியத்தின் பெரும் வெள்ளம் அதில் பாயத் தொடங்கியது.

முன்னர், மலையாளத்தில் நம்பூதிரி எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் இதிகாசங்களில் சம்ஸ்கிருத பெயர்ச்சொற்களைச் சேர்த்து 'மணிப்பிரவாளம்' என்ற புதிய கலவை ஒன்றை உருவாக்கியதுபோல, ஹைதராபாத் நிஜாம் அவையில் இருந்த கஜல் எழுத்தாளர்கள் தாராளமாக பாரசீகப் பெயர்ச்சொற்களைச் சேர்க்கத் தொடங்கி புதிய கலவை ஒன்றை உருவாக்கினர்.

இந்த இரண்டுமே சம்ஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் எழுதுவதைத் தவிர்க்கும் முயற்சிகளே தவிர, மலையாளம் மற்றும் இந்தியை மாற்றுவதற்கான நோக்கம் கொண்டவை அல்ல. 1780ஆம் ஆண்டில்தான் முஸ்ஹாபியின் எழுதிய ஒரு பாடலில் இந்த மொழியை அடையாளப்படுத்த ‘உருது’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது:

“மிர் தாகி மிர் மற்றும் மிர்சா சவுதாவின் வாயிலிருந்து 
நான் முதலில் கேட்ட இந்த மொழியை கடவுள் எப்படியாவது காப்பாற்றட்டும்,
ஓ முஸ்ஹாபி! உருது நம் அனைவருக்கும் சொந்தமானது!”

ஆங்கிலேயர்கள் இந்தியில் தமக்கு முன்பு இருந்தவர்கள் விட்டுச்சென்ற அனைத்துத் தடயங்களையும் அழிப்பதில் உறுதியாக இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. அவர்களிடையே ஏற்கெனவே மொழி ஆர்வலர்கள் இருந்தனர், அதேபோல் சம்ஸ்கிருதத்தால் உற்சாகமடைந்திருந்த செவ்வியல்வாதிகள் இருந்தனர். சுல்தான்கள், மொகலாயர்கள் ஆட்சிக்கு முன் இருந்த இந்தியை ‘மீட்டெடுக்கும்’ பணியை அவர்கள் தாங்களே எடுத்துக்கொண்டனர். ஆனால், இந்தி அதன் சொற்களஞ்சியத்தில் சம்ஸ்கிருதத்திலிருந்து அல்ல; பிராகிருதத்திலிருந்துதான் தற்பவங்களாகப் பலவற்றை உள்வாங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் திறமையான மொழியியலாளர்கள் இல்லை. 

ம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாக வார்த்தைகளை எடுத்துக்கொண்ட ஒரே இந்திய மொழி மலையாளம்தான்; வடமொழிகள் எதுவும் அப்படிச் செய்யவில்லை. ஒரு பொருளை சுத்தம் செய்வதற்கு வேதியியலாளர்கள் சுத்திகரிக்கும் ரசாயனப் பொருளை சேர்ப்பதுபோல இந்தியை 'சுத்திகரிக்கும்' முயற்சியில் ஈடுபட்டனர் ஆங்கிலேயர்கள். ஆனால், அவர்களால் நீக்கப்பட்டது அங்கேயேதான் கறையாகத் தங்கியிருக்கிறது என்பதையும் சுத்தமாவதற்குப் பதிலாக அது களங்கமடைந்திருக்கிறது என்பதையும் அவர்கள் காணத் தவறிவிட்டனர். 'சுத்த இந்தி' என அவர்கள் அழைத்தது எந்த விதத்திலும் சுத்தமாக இல்லை. அது இப்போது இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் இணைந்து உருவான வினோத ஜந்துவாகிவிட்டது. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஆங்கிலத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது.

ஆனால், இந்தி மொழியின் ‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ மாறவில்லை. அதில் இன்னும் பெயர்ச்சொற்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன, அது திடீரென்று ஏதோ ஒரு தீவிரமான தன்மையை நோக்கி நம் மொழியைத் தூண்டியது. எந்த மனிதனும் கடவுளாகிவிட முடியாது, ஒரு புதிய மொழியை தோற்றுவிக்க முடியாது. அவர்கள் அறிமுகம் செய்தது பழைய இந்திதான்; ஆனால் அது புதிய, நமக்கு அன்னியமான உடையில் இருந்தது. 

வினோத ஜந்து

மொழியியல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒரு வித்தியாசமான கருத்து உள்ளது, சொற்கள்தான் ஒரு மொழிக்கு மிக முக்கியமான விஷயம் என்று அவர்கள் கருதுகின்றனர். பல்வேறு மொழிகளின் சொற்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் பகிரப்பட்ட வரலாற்றை வெளிப்படுத்திய காலத்திலிருந்தே மொழியியலாளர்கள் இப்படி கருதி வந்துள்ளனர். ஆனால், சொற்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவமானது, மொழிகளின் மரபியலுக்கு அத்தியாவசியமான இலக்கணம் மற்றும் ஒலிகள் போன்ற நிரந்தரமான பிற விஷயங்களைத் தவறவிட்டது. 

இந்தியாவில் வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் ஒரு மொழியை ‘இந்தி’, ‘உருது’, ‘ஹிந்துஸ்தானி’ என்று பிரித்ததில் வெளிப்பட்டது. ஃபோர்ட் வில்லியம் கல்லூரியின் ‘பரிசோதனைக் கூட’த்தில் பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட வினோத ஜந்துவான இந்த ‘இந்தி’ என்பதை வட இந்தியாவிலிருந்த உயர் சாதியினர் தமக்கு ஆதாயம் தருகிறது என்ற காரணத்தால் வரவேற்றனர். இந்தி / உருதுவைப் பற்றிப் பேசும் நவீன மொழியியலாளர்களுக்கு இது குழப்பம் தருவதாக இருந்தது. அவர்கள் இந்தி, உருது இரண்டு மொழிகளும் ஒரே இலக்கண அமைப்பைக் கொண்டவையெனவும், ஹிந்துஸ்தானி என்பது இந்தி மற்றும் உருது மொழிகளின் கலவை மட்டுமே என்றும் கருதினர்.

இந்தி அண்மைக்காலத்தில் தோன்றிய ஒரு புதிய மொழி; எனவே அது தேசிய மொழியாக செயல்படுவதற்கு தகுதியானது அல்ல என்று குற்றம்சாட்டுபவர்கள், புதிய மொழி மட்டுமே தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.

நாகாலாந்தில் ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு மொழி பேசும்; அதேசமயம், அந்த மொழிகளுக்கு இடையே பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அம்மொழிகள்  இருந்தன. எனவே, 'நாகமீஸ்' என்ற புதிய மொழி உருவாகி அந்த மாநில மொழியாக உள்ளது. நாகாமீஸ் ஒரு வணிக மொழியாகத் தோன்றியது, நாகா வணிகர்கள் தங்கள் மலையடிவார கிராமங்களிலிருந்து அசாமியருடன் வணிகம் செய்வதற்காகப் பயணம் செய்தனர். அவர்களால் அது பேசப்பட்டது. காலப்போக்கில் அது வளர்ந்து, நகரங்களில் பிறந்த குழந்தைகள், வெவ்வேறு நாகா சமூகங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த  வாரிசுகள் என உள்ளூர் மக்கள் பேசும் மொழியாக மாறியது. 

இந்தோனேஷியாவிலும், இப்போது தேசிய மொழியாக இருக்கும் ‘பஹாசா இந்தோனேஷியா’ என்று அழைக்கப்படும் மொழி ஆரம்பத்தில் மலாய் என அழைக்கப்பட்டது. அது துறைமுக நகரங்களில் பேசப்படும் கடினமான மற்றும் கையாளத் தயாரான மொழியாகவும், அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. அது தேசிய மொழியாக மாறியபோது, ஒவ்வொரு தீவின் பழைய மொழிகளின் செழுமையையும் அதில் புகுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மலாய் மொழியின் சிறந்த விஷயம் என்னவென்றால், அது புதியதாகவும் எளிதாகவும் இருந்ததுதான்.

எதிர்காலம் கலப்பு மொழிகளா?

இந்தி மற்றும் இந்திய ஆங்கிலத்தின் கலவையான ‘ஹிங்கிலிஷ்’ மீது விளம்பரத் துறை அதிக விருப்பம் கொண்டுள்ளதோடு, அதை தேசிய அளவில் தனது பிரச்சாரங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. எனது இரண்டு மாணவர்களான ரித்திகா கைலா, உதய்வீர் சிங்வி ஆகியோர் இந்த விளம்பரங்களை ஆராய்ந்தனர். ‘ஹிங்கிலீஷ்’ மொழியின் பிரபலத்தையும், பேசுவதற்கு அது எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்பதையும் பார்த்து மாநில அரசுகள் திகைத்துப்போனதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ‘செய்தி ஊடகங்கள், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் 'ஹிங்கிலீஷ்' புழக்கம் அதிகரித்துவருவதால், வழக்கமான உரையாடல்களிலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களிலும் அதன் பயன்பாடு காலப்போக்கில் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதே அவர்களின் முடிவு. 'ஹிங்கிலிஷ்' மட்டுமல்ல. மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் இத்தகைய ‘கலப்பு மொழியின்’ பாதிப்பு கணிசமாக உள்ளது.  அப்படியான காணொளிகளைப் பார்த்தால், அவற்றில் பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகள் உங்களுக்குத் தெரிந்தால் போதும், அவற்றைப் பின்பற்றுவது வியக்கத்தக்க வகையில் எளிதானது என்பதை நீங்கள் காண்பீர்கள்.

எதிர்காலம் இப்படிப் பல கலப்பு மொழிகளைக் கொண்டதாகத்தான் இருக்கப்போகிறது, அந்த மொழிகளைச் சரியாக இல்லாவிட்டாலும் எளிதாக நாம் புரிந்துகொள்ளலாம். நமது சொந்த மாநிலங்களைவிட்டு வெளியில் அடிக்கடி பயணித்தோமென்றால் அந்தக் கலப்பு மொழிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதும் சாத்தியமாகிவிடும். 

நாம் தவறான குற்றச்சாட்டைச் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறோம். மேட்டிமை வர்க்கத்தினருக்கு மட்டுமே சேவை செய்வதாக அல்லாமல் ஒரு தொடர்பு மொழியை அல்லது மொழிகளை நமது நாடு பெற வேண்டுமென்றால் அது எவ்வளவு பழமையானது வலிமையானது எனப் பார்க்கக்கூடாது. அது எவ்வளவு புதியது, கற்றுக்கொள்ள எவ்வளவு எளிதானது, அது ‘பாப் கலாச்சாரத்துக்கும்’, ‘சீரியஸான’ விஷயங்களை ஆராய்வதற்கும் எப்படி சுலபமாக மாறக்கூடியது என்பதே முதன்மையாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அப்படியொரு மொழி கிடைப்பது தானே நடக்கலாம், அல்லது நடக்காமலும் போகலாம்!

© தி வயர்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெக்கி மோகன்

பெக்கி மோகன், மொழியியலர். 'வோண்டரர்ஸ், கிங்ஸ், மெர்ச்சன்ட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் இண்டியா த்ரோ இட்ஸ் லேங்குஜஸ்' (Wanderers, Kings, Merchants: The story of India through its Languages) இவருடைய முக்கியமான நூல்.

தமிழில்: ரவிக்குமார்

4






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

Survival of the fittest என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இந்திக்கு தகுதி இருந்தால் அது வளரட்டும். ஆனால் அரசு எதற்காக செலவு செய்து வளர்க்கவேண்டும். இந்தி வளர்ந்து, கிளர்ந்து வரும்வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கட்டும்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இவர் இல்லை என்றால் எவர் தமிழர்சு.ராஜகோபாலன் கட்டுரைபீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ் அருஞ்சொல் பேட்டிவைசியர்உலக எழுத்தாளர் கி.ரா.வட கிழக்குஞானம்பாலியல் துன்புறுத்தல்நெஞ்செரிச்சல்அப்பாவின் மீசைகரோனா வைரஸ்பிரதிக்ஞா யாத்ராகீழ் முதுகு வலிவெண்முரசுமெய்நிகர்க் காதல்ரத்தக்கொதிப்புவிலையில்லா மின்சாரம் அன்றும் இன்றும்சென்னை மாநகராட்சி மருத்துவக் கல்லூரி சந்தேகத்துக்குரியதுஅசல் அரசமைப்புச் சட்டம்பழங்குடி மக்கள்மோடி - போரிஸ் ஜான்சன்ஃபின்னிஷ் மொழிதலித் இளைஞரின் தன்வரலாறுஉயிர்கள் அச்சத்துடனா?உலக உணவுப் பரிசுஉலக வர்த்தகம்வர்ண தர்ம சிந்தனைதிருப்புமுனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!