கட்டுரை, அரசியல், கலாச்சாரம், மொழி 6 நிமிட வாசிப்பு

இந்தி அரசியலின் உண்மையான பின்னணி

ஜி.என்.தேவி
06 May 2022, 5:00 am
0

ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கவிதை எழுதுவதற்கான சொற்களை ‘இயற்சொல்’, ‘திரிசொல்’, ‘திசைச்சொல்’, ‘வடசொல்’ என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் என்று தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியர்  கூறியிருக்கிறார். வடசொல் என்றால் வடமொழிச் சொற்கள். இந்தச் சொற்கள் வடக்கத்திய ஒலிப் பண்புகளைத் துறந்துவிட்டுத் தமிழ் மொழியின் ஒலிப்பண்போடு ஒலித்தால்தான் தமிழில் பயன்படுத்த முடியும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

மொழிப் பற்று என்பது பண்டைய காலத்தில்ருந்தே திராவிடத் தனித்துவத்தின் அடிநாதமாக இருந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் பிராகிருத மொழி பேசிவந்தவர்களிடமும் இதே போன்ற உணர்வு காணப்பட்டது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிராகிருத மொழியில்தான் மகாவீரர் தமது போதனைகளைச் செய்தார். 18 நூற்றாண்டுகள் கழித்து ஜைன மதச் சான்றோரும் கவிஞரும் கணித மேதையும் தத்துவ ஞானியுமான ஆச்சார்ய ஹேமச்சந்திரா தன் காலத்தில் குஜராத் பகுதியில் சம்ஸ்கிருத மொழிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பிராகிருத மொழிச் சொற்களின் முக்கியத்துவம் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதன் மூலம் குஜராத்தி மொழிக்கு ஒரு புது வடிவத்தையும் அவர் கொடுத்தார்.  காந்தி சுயராஜ்ஜியம் பற்றிய தன்னுடைய சிந்தனைகளை ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலில் முன்வைத்தார். 1909ஆம் ஆண்டு அவர் எழுதிய இந்த நூலைத் தன் தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார். 

இந்தியாவின் மொழி சார்ந்த உணர்வு என்பது சுயராஜ்யத்தின் ஒரு அம்சமாகவே இருந்துவந்துள்ளது. இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும்.

அரசமைப்புச் சட்டத்தில் தெளிவு

இன்றைய இந்தியர் ஒருவருக்கு 2,000 ஆண்டுகள் பழமையான தொல்காப்பியத்தைப் பற்றியோ ஒன்பது நூற்றாண்டுகள் பழமையான தேசினமாமலாவைப் பற்றியோ தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமே இல்லை. ஆனால், நமது குடியரசால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

இந்திய அரசமைப்புச் சட்டமானது இரு விஷயங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது: முதலாவது, இந்தியா என்பது ‘மாநிலங்களின் கூட்டமைப்பு’ என்கிறது. இரண்டாவது, அரசமைப்புச் சட்டத்தை நாடு ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்கள் இடையே தகவல் தொடர்புக்கென அதிகாரப்பூர்வமாக இருந்த மொழியே அவற்றுக்கிடையேயான தொடர்பு மொழியாகத் தொடரும் என்பதாகும்.

மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாறலாம் என மொழிகள் தொடர்பான சட்டப் பிரிவுகள் தெளிவாகக் கூறுகின்றன. சட்டப் பிரிவு 344 (4)இல்  மொழி தொடர்பான சட்டங்களை மேற்பார்வையிட 30 உறுப்பினர்கள் (20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்களும்) கொண்ட குழுவை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொழி தொடர்பான விஷயங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களால் கையாளப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பு கல்வி, கலாச்சாரம் ஆகியவை தொடர்பானது. மத்திய-மாநில உறவைப் பாதுகாப்பது, மொழிவாரிச் சிறுபான்மையினரது மொழி உரிமைகளைப் பாதுகாப்பது, இந்தி மொழியைப் பரப்புவது ஆகியவை உள்துறை அமைச்சகத்தின் பொறுப்புகள். மற்ற மொழிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இந்தியைப் பரப்ப வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய மொழிகளை விழுங்கும் இந்தி

அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சகமும் இந்தி மொழிக் குழுவும் இரு முக்கியமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்: 'கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தி சிறிதாவது வளர்ச்சியைக் கண்டுள்ளதா? அப்படி வளர்ச்சி இருந்திருந்தால், பிற மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்து அது வளர்ந்ததா?'

மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சற்று அலசினால் சுவாரசியமான விஷயங்கள் வெளிவரும். 2011இல் மொத்த மக்கள்தொகையில் 43.63% (52.83 கோடிப் பேர்) இந்தி மொழி பேசுவோராக இருந்தனர். 1971இல்  இது வெறும் 20.27 கோடியாக (மொத்த மக்கள்தொகையில் 36.99%) மட்டுமே இருந்தது. 2001, 2011க்கு இடையிலான பத்தாண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் 2.6%ஆக இருந்தது. இந்திக்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட வங்க மொழியின் வளர்ச்சி எதிர்மறை விகிதத்தில் இருந்தது. 1991இல் 8.30% மக்களால் பேசப்பட்ட இம்மொழி, 2001இல் 8.11% மக்களாலும், 2011இல் 8.03% மக்களாலும் பேசப்பட்டது. அதேவேளையில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் வீதம் 1991இல் 7.87%  ஆகவும், 2001இல் 7.19%  ஆகவும், 2011இல் 6.70% ஆகவும் படிப்படியாகக் குறைந்தது.

மராத்தி மொழியின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். மராத்தி மொழி பேசும் மக்களின் வீதம் 1991இல் 7.45%  ஆகவும், 2001இல் 6.99%  ஆகவும், 2011இல் 6.86% ஆகவும் படிப்படியாகக் குறைந்தது.

தமிழின் வீழ்ச்சி

இந்தியாவின் வாழும் மொழிகளில் மிகத் தொன்மையான மொழியான தமிழின் வளர்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சகமானது கொஞ்சமாவது முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஆனால், தெலுங்கு, வங்கம், மராத்தி போன்றே தமிழ் மொழியின் வளர்ச்சியும் தேய்ந்துபோனது. 1991இல் மொத்த மக்கள்தொகையில் 6.32% ஆக இருந்த தமிழ் பேசுவோரின் சதவீதம் 2001இல் 5.91% ஆகவும், 2011இல் 5.70% ஆகவும் குறைந்தது.

குஜராத்தியும் சம்ஸ்கிருதமும் வளர்கின்றன

பத்தாண்டுகளில் சிறிதாவது வளர்ச்சி அடைந்த ஒரே மொழி குஜராத்தி மட்டும்தான். அதேபோல, சிறிதளவாயினும் வளர்ச்சி பெற்ற இன்னொரு மொழியாக சம்ஸ்கிருதத்தைக் குறிப்பிடலாம். 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது நாட்டிலுள்ள மொழிகள் எத்தனை எனத் திரும்பவும் கணக்கிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது தொகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளின் நிலையும் (இந்தி, சம்ஸ்கிருதம், குஜராத்தி நீங்கலாக) சீரழிந்துள்ளது என்பதுதான் உண்மை. இந்நிலையில் இந்தி வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது இந்தியைத் தவிர பிற இந்திய மொழிகள் தேய்ந்துவருவது பற்றிய கவலையைத் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்தி மொழி வளர்ச்சி எப்படி?

மற்ற மொழிகளின் வளர்ச்சி குறைந்துவரும்போது இந்தி மொழியின் வளர்ச்சி மட்டும் சீராக உயர்ந்ததன் காரணம் என்ன? உண்மையில் இதற்கான காரணம் அரசின் செயல்பாடுகளில் இல்லை; மக்கள்தொகை வளர்ச்சியில் இருக்கிறது!

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது, 52.83 கோடி மக்கள் இந்தி மொழியைப் பேசுவதாகக் குறிப்பிடுகிறது. இவர்களில் இந்தி தவிர கிட்டத்தட்ட ஐம்பது மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். ஐந்து கோடி மக்களால் பேசப்படுவதாகக் கூறப்படும் போஜ்புரி மொழியானது திரைப்படம், இலக்கியம், செய்தித்தாள்கள், பாட்டுகள், நாடகம், அச்சுத் தொழில் எனப் பல துறைகளிலும் மிளிர்ந்துவருகிறது. ஆனால், இம்மொழி பேசுவோரும் இந்தி பேசுபவர்களாகக் கணக்கில் காட்டப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில மக்களும் இந்தி மொழி பேசுவோராகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பவாரி மொழியில்  (மகாராஷ்டிர மாநிலத்திலும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது) பேசுவோரும் இந்தி மொழி பேசுவோராகக் கணக்கிடப்பட்டுள்ளனர். இவர்களில் பவாரி மொழி பேசுவோரால் இந்தியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதுதான் நகைமுரண். 

ஆக, இந்தி பிராந்தியங்களில் அதிகரிக்கும் மக்கள்தொகையும், அந்தப் பிராந்தியங்களில் உள்ள ஏனைய மொழியினரையும் சேர்க்கும் கணக்கெடுப்பும் இணைந்தே இந்தியின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுகின்றன.

ஆகவே, இந்தி மொழி வளர்ச்சி பெற்றுள்ளது என்பதே ஒரு கட்டுக்கதைதான். மேற்சொன்ன மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி பேசுவோரின் பட்டியலுக்குள் சேர்க்காமல் இருந்திருந்தால் இந்தி மொழி பேசுவோரின் எண்ணிக்கை 39 கோடியாகப் பதிவாகியிருக்கும் (2011ஆம் ஆண்டின் மக்கள்தொகையில் இது வெறும் 32% மட்டுமே); இது மற்ற மொழி பேசுவோரின் சதவீதத்தைவிட அவ்வளவு பெரிதாகவும் இருந்திராது.

இந்தியின் உண்மையான நிலை

இந்தி இனிமையான மொழிதான். உலகிலுள்ள சிறிய / பெரிய மொழிகள் பலவும் அப்படியே. இந்தி சினிமாக்களின் மூலம் இந்தியாவுக்குக் கொஞ்சம் புகழும் சிறிது அந்நியச் செலாவணியும் கிடைத்துள்ளன. இந்தி இலக்கியம் மிக வளமானது. ஆயினும் இருக்கும் மொழிகளில் மிகவும் இளைய மொழி இதுதான். மாறாக தமிழ், கன்னடம், காஷ்மீரி, ஒரியா, சிந்தி, நேபாளி, அசாமிய மொழி ஆகியவை இதைவிடப் பழமையானவை. தெரிந்துகொள்ள வேண்டிய மொழி என்று பார்த்தாலும் கலைக்களஞ்சியங்களும் பழமையான இலக்கியங்களும் மிகுந்த தமிழ், கன்னடம், வங்கம், மராத்தி ஆகியவை இந்தியைவிடவும் வளமானவை. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தி ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் தோன்றியது. ஒரு மொழி மெதுவாகத்தான் உருவாகும், வளரும். அவசரச் சட்டங்கள் மூலம் அதை வளர்த்துவிட முடியாது.

அதிக அரசியலும் பொருளாதாரமும்

திடீரென்று இந்தியா ‘இந்தி நாடு’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவதன் காரணம் என்ன? 

இந்தி-இந்து தேசியவாதத்தை இணைக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் அவரை இப்படிச் சொல்ல வைத்திருக்கும் என்று தோன்றவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மைவாத ஜனநாயகம் இதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்றும் தோன்றவில்லை. 

121 கோடி மக்களில் 52 கோடிப் பேர் இந்தியைப் பேசுகின்றனர் என 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மிகையாகக் கணக்குக் காட்டப்பட்டிருந்தாலும் இந்தி மொழி பேசுவோர் மொழிவாரிப் பெரும்பான்மையினர் அல்ல என்பதே உண்மை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தாலும் 69 கோடிப் பேர் இந்தி பேசாதவர்களே; எனவே, இந்தி என்பது பெரும்பான்மையோர் பேசும் மொழியாக இருந்ததும் இல்லை; இனியும் இருக்க முடியாது. அப்படி இருக்கையில் அமித் ஷா ஏன் அப்படிப் பேசினார்?

‘இந்தி பிராந்தியம்’ என்று சொல்லப்படும் இந்தி பேசும் மாநிலங்கள் வரும் 2024 தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும். இந்த மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை என்னும் ஆழமான காயத்துக்குத் தடவும் களிம்பாக அமித் ஷாவின் இந்தப் பேச்சு இருக்கலாம். 

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தலாக இருப்பதைச் சொல்லிப் பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறலாம் என்பதைப் போல, ஆங்கிலத்தைத் தேசவிரோத சக்தியாகக் காட்டுவதன் மூலம் இந்தி பேசும் மக்களின் ஓட்டுகளைப் பெற முடியாது என்பதை அமித் ஷா உணரவில்லைபோல் இருக்கிறது. இது மொழி சார்ந்த மாபெரும் அபத்தம். அதைவிட முக்கியமாக, இது கூட்டாட்சி அரசியலுக்கு எதிரானது. இந்தியாவிற்கு இது தேவைதானா?

ஜி.என்.தேவி

கணேஷ் என்.தேவி, ‘தி பிப்பிள்ஸ் லிங்விஸ்ட்டிக் சர்வே ஆஃப் இந்தியா’வின் முதன்மை ஆசிரியர். பேராசிரியர், எழுத்தாளர். மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் மூன்று மொழிகளில் எழுதுகிறார். இலக்கிய விமர்சனம், மானுடவியல், கல்வி, மொழியியல் மற்றும் தத்துவம் எனப் பல துறைகள் சார்ந்தும் தொண்ணூறு புத்தகங்களை எழுதியும் தொகுத்தும் இருக்கிறார்.


4

3

1
1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கிரிப்டோ கரன்சிஅராத்துஎருமைப் பொங்கல்சமஸ் வடலூர்ரொமான்ஸ்மெக்காலேதிராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைஉள்துறைமாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிதமிழில் அர்ச்சனைதி டான் ஆஃப் எவரிதிங்க்சமந்தா சைதன்யாதலைநகரம்சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்கதவுகளில் கசியும் உண்மைstate autonomydam safety billவிஷ்ணுப்ரியாமுரண்களின் வழக்குஅசோக் வர்தன் ஷெட்டிசாதிவிவசாயிகள் போராட்டம் எப்படித் தொடர்கிறது?அருஞ்சொல் ஸ்ரீதர் சுப்ரமணியம்பாலியல் வண்புணர்வுமுரசொலி செல்வம்உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல்புவியரசியல்மகேஷ் பொய்யாமொழிநடிகைகளின் காதல்தலைச்சாயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!