கட்டுரை, கலை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

சல்மான் ருஷ்டிக்காக ஒரு பிரார்த்தனை

பால் ஆஸ்டர்
14 Aug 2022, 5:00 am
2

இன்று காலை எழுத உட்கார்வதற்கு முன்பு நான் செய்த முதல் காரியம் சல்மான் ருஷ்தியை பற்றி நினைத்துக்கொண்டதுதான். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளாக இதை நான் ஒவ்வொரு நாள் காலையிலும் செய்துவந்திருக்கிறேன்; இப்போது இது என் அன்றாடத்தின் ஒரு பகுதியாகிவிட்டது.

என் பேனாவை எடுத்துக்கொள்வேன், எழுதத் தொடங்குவதற்கு முன்பு, கடலுக்கு அப்பால் வாழும் என் சக நாவலாசிரியரை நினைத்துக்கொள்வேன். அவர் இன்னுமொரு 24 மணி நேரம் உயிர் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். அவருக்குத் தஞ்சமளித்திருக்கும் ஆங்கிலேயர்கள் அவரைக் கொல்வதற்காகத் தேடிக்கொண்டிருப்பவர்களின் கண்ணில் படாமல் அவரை வைத்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். கொலைவெறி பிடித்தவர்கள் ஏற்கெனவே ருஷ்தியின் மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக் கொன்றுவிட்டார்கள், இன்னொருவரைப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பிரார்த்தனைகளெல்லாம் தேவைப்படாத நிலை வர வேண்டும் என்றும், என்னைப் போலவே இந்த உலகின் தெருக்களில் அவரும் சுதந்திரமாக நடமாடும் காலம் வர வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

இந்த மனிதருக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன், ஆனால் இப்படிச் செய்வதன் மூலம் நான் எனக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்பதை ஆழமாக உணர்கிறேன். அவர் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார், அதனால் அவரது வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. புத்தகங்கள் எழுதுவது என் தொழிலும்கூட.  வரலாற்றின் எதிர்பாராத திருப்பங்களும் குருட்டு அதிர்ஷ்டமும் மட்டும் இல்லையென்றால் நானும் அவருடைய நிலையில் இருந்திருப்பேன் என்பதையும் உணர்கிறேன். இன்று இல்லையென்றாலும் நாளை கூட அப்படி ஒரு நிலை ஏற்படலாம்.

நாங்கள் அனைவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்: தனிமைவிரும்பிகளின் ரகசியச் சங்கம், அடைந்துகிடப்பவர்கள், கிறுக்குகள், தாளின் மீது வார்த்தைகளை இடுவதற்காகச் சிறு அறைகளில் தங்களை அடைத்துக்கொண்டு தங்களின் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் ஆண்கள்-பெண்கள்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதற்கான விசித்திரமான வழி இது, இந்த விஷயத்தில் வேறு ஏதும் தெரிவுகள் இல்லாத ஒருவர்தான் இதனை ஒரு வேலையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வார். கடும் உழைப்பைக் கோரக் கூடிய வேலை இது, உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்காது, எவரொருவருக்கும் நேரக் கூடாத ஏமாற்றங்கள் நேரிடும். திறமை வேறுபடலாம், லட்சியங்கள் வேறுபடலாம், ஆனால் தகுதி வாய்ந்த எந்த ஒரு எழுத்தாளரும் உங்களுக்கு ஒரே விஷயத்தைதான் சொல்வார்: ஒரு புனைகதையை எழுத வேண்டுமென்றால் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லும் சுதந்திரம் ஒருவருக்கு இருக்க வேண்டும். நான் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் அந்தச் சுதந்திரத்தை நான் பயன்படுத்தியிருக்கிறேன் – சல்மான் ருஷ்தியும் அப்படித்தான்.  அதுதான் எங்களை சகோதரர்களாக ஆக்குகிறது, அதனால்தான் அவருக்கு நேர்ந்ததை எனக்கு நேர்ந்ததாகவும் கொள்ள வேண்டும். 

அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியாது, ஆனால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும் – குறைந்தபட்சம் அதைக் கற்பனை செய்வதற்கு முயன்றுபார்க்க முடியும். உண்மையில், அவர் வெளிப்படுத்திய துணிவு என்னிடம் இருந்திருக்குமா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அந்த மனிதரின் வாழ்க்கை சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது, எனினும் அவர் எதற்காகப் பிறந்தாரோ அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். ஒரு ஒளிவிடத்திலிருந்து மற்றொரு ஒளிவிடத்துக்குத் துரத்தப்பட்டு, தனது மகனைப் பிரிந்து, பாதுகாப்புக் காவலர்களால் சூழப்பட்டிருக்கும் நிலையிலும் அவர் ஒவ்வொரு நாளும் தனது மேசை முன்னமர்ந்து எழுதுகிறார்.

எவ்வளவு நல்லதொரு சூழலிலும் இப்படி தினமும் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். ஆகவே, அவர் சாதித்திருப்பதையெல்லாம் கண்டு வியந்துபோய் நிற்பதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஒரு நாவல், இன்னொரு நாவலுக்கான திட்டமிடல்; அடிப்படை மனித உரிமையையும் கருத்து சுதந்திரத்தையும் போற்றும் வகையில் அமைந்த பிரமாதமான கட்டுரைகள், உரைகள். இவை எல்லாமே பெரிய விஷயம்தான். ஆனால் எது எனக்கு உண்மையில் வியப்பூட்டுகிறது என்றால் அடிப்படையான இந்தப் பணிகளுக்கு மேலாக, பிறருடைய புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதவும் அவர் நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதுதான்.

அறியப்படாத எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் சில தடவை பின்னட்டை வாசகங்களும் எழுதியிருக்கிறார். அவருடைய நிலையில் இருக்கும் ஒருவரால் தன்னைத் தவிர வேறு யாரையாவது பற்றி நினைத்துப் பார்ப்பது சாத்தியமா? ஆம், ருஷ்திக்கு அது சாத்தியமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால், நம் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் சூழலில் எத்தனை பேர் ருஷ்தி செய்திருப்பதை செய்திருப்போம் என்று எனக்குக் கேள்வி எழுகிறது. 

சல்மான் ருஷ்தி தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது, அவர் தலைக்கு ஃபத்வா அறிவிக்கப்பட்டபோது நம்மிடம் எந்தவொரு தீர்வும் இல்லை. என்னால் ஏதாவது உதவி செய்ய முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மற்றவர்களைப் போல நானும் விரும்புகிறேன். நிராசை உணர்வு அதிகரிக்கிறது, அவநம்பிக்கை ஏற்படுகிறது, ஆனால் வெளிநாட்டு அரசுகளின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு என்னிடம் அதிகாரமோ செல்வாக்கோ இல்லை என்பதால் என்னால்  முடிந்ததெல்லாம் அவருக்காகப் பிரார்த்தனை செய்வது மட்டும்தான். அவர் நம் அனைவருக்கும் சேர்த்து சுமையைச் சுமந்துகொண்டிருக்கிறார், அவரைப்  பற்றி நினைக்காமல் நான் என்ன செய்ய முடியும் என்பதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவருடைய நிலைமையானது என்னுடைய கவனத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளது, எனது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது, நான் அனுபவித்துக்கொண்டிருக்கும் சுதந்திரத்தை அவ்வளவு சாதாரணமாக இனிமேல் கருதக் கூடாது என்ற பாடத்தைப் போதித்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்குமாக அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தன் இயல்பு வாழ்க்கையை மீட்டுக்கொள்வதற்கான போராட்டத்தில் சல்மான் ருஷ்டிக்கு நான் ஆதரவளிக்கிறேன், ஆனால் உண்மை என்னவென்றால் அவரும் எனக்கு ஆதரவளித்திருக்கிறார். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் எனது பேனாவை நான் எடுக்கும்போதெல்லாம் அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

சல்மான் ருஷ்தியைப் பற்றி 29 ஆண்டுகளுக்கு முன் 1993இல் பால் ஆஸ்டர் எழுதி, 'தி ஆர்ட் ஆஃப் ஹங்கர்'  (The Art of Hunger) கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றது இந்தக் கட்டுரை. இன்றும் இது பொருத்தமாக இருப்பது நம் காலத்தின் துரதிர்ஷ்டம். சல்மான் ருஷ்திக்காகப் பிரார்த்திக்கும் நிலைக்கு முடிவு வர வேண்டும் என்பதுவும் பால் ஆஸ்டரின் விருப்பம். இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படும் சூழலில், எழுத்துக்காக எழுத்தாளர்கள் கொல்லவும் தாக்கவும் மிரட்டவும்படும் சூழலில் நமது பிரார்த்தனைகள் மேலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

பால் ஆஸ்டர்

பால் ஆஸ்டர் (Paul Auster). அமெரிக்க எழுத்தாளர். 'தி நியு யார்க் டிரைலாஜி' (The New York Trilogy, 1987), 'தி மியூஸிக் ஆஃப் சான்ஸ் (The Music of Chance, 1990) உள்ளிட்ட இவரது நாவல்கள் புகழ் பெற்றவை.

தமிழில்: ஆசை

2

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   4 months ago

பால் ஆஸ்டர் 29 ஆண்டுகளுக்கு முன் எது நடக்கக்கூடாது என்று தினைத்தாரோ அது நடந்துவிட்டது! தனது உடலின் பல்வேறு இடங்களில் கத்தி காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் சல்மான் ருஷ்டி.. இக்கட்டான இந்த நேரத்தில், அருஞ்சொல் பால் ஆஸ்டரின் கட்டுரையை வெளியிடுவது பொருத்தமானது என்பதற்கு மேலாக, சல்மான் ருஷ்டி அத்துயரத்திலிருந்து விரைவில் மீண்டெழுந்து வர வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட அனைவரின் வேண்டுதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   4 months ago

ருஷ்டி தாக்கப்பட்டது குறித்த முகனூல் பதிவுகளில் ஒரு இஸ்லாமியரின் கண்டனத்தை கூட நான் பார்க்க முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாக இல்லை..ஏனெனில் 1000க்கு 999பேர் இந்த தாக்குதலை வரவேற்கிறார்கள். கருத்து சுதந்திரம் பேசும் கவிஞர் சல்மா, ஆளூர் ஷானவாஸ் எல்லாம் எங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

அறிவொளி இயக்க முன்னோடிமார்ட்டென் மெல்டால்நடைமுறைச் சிக்கல்கள்பொருளாதாரம்சியுசிஇடி – CUCETபோரிடும் கூட்டாட்சிஅருஞ்சொல் ப.சிதம்பரம்அரவணைப்புபிரசாந்த சந்திர மஹலாநோபிஸ்பிராந்திய பிரதிநிதித்துவம்களத்தில் உரையாட வேண்டும்தவ்லின் – அம்ரிதாமுத்துலிங்கம் படைப்புகள்இறப்புஜனரஞ்சகப் பத்திரிகைபிரதமர் இந்திரா காந்திஇறையாண்மைபொருளாதாரக் குறியீடுஹலால்ஆட்சிப் பணியும் மொழி ஆளுமையும்மொரொக்கோஎஸ்.வி.ராஜதுரைகணேசன் வருமுன் காக்கஅமர்த்யா சென்டீம்வியூவர் க்யுக் சப்போர்ட்பிரதமர் உரைஅகரம் அறக்கட்டளைகாந்திய வழியில் அமுல்கொமேனிலீ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!