கட்டுரை, கலாச்சாரம், இலக்கியம், சர்வதேசம் 20 நிமிட வாசிப்பு

வெறியிலிருந்து எப்போது விடுதலை?

அரவிந்தன் கண்ணையன்
15 Aug 2022, 5:00 am
3

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளானார்; மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிவருகிறார் எனும் தகவல் வெளியானவுடன் பெரும் அதிர்வு அலைகள் அமெரிக்காவில் எழுந்தன. உலகம் எங்கும் உள்ள அந்தச் செய்தி சுதந்திர உணர்வாளர்களை, தாராளர்களைக் கடும் துயரத்தில் அது ஆழ்த்தியது. அமெரிக்காவில் நியூ யார்க் மாநிலத்திலுள்ள ஷுடாக்வா (Chautauqua) நகரில், ஒரு கூட்டத்துக்கு வந்திருந்த அவர் ஓர் இளைஞரால் - ஹாடி மடாரால் (24 வயது) தாக்குதலுக்கு உள்ளானார்.

இச்செய்தி என் மனதைக் கிட்டத்தட்ட 30 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. இக்கொலை முயற்சி இன்றைய சூழலில், வெறும் மதவெறி சார்ந்த நிகழ்வாக முடிந்துவிடாது. அமெரிக்க - ஈரானிய உறவுகள் தத்தளிக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், மதம் சார்ந்த மோதல்கள் இந்தியாவில் கூர்மையடைந்துள்ள சூழலில் இதன் அதிர்வுகள் வேறு தளங்களில் இந்தியாவில் எதிரொலிக்கும். கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து வரலாற்றையும் அதன் பின் சமகால விளைவுகளையும் இக்கட்டுரையில் சொல்ல விழைகிறேன். என் பார்வையில்.

புத்தக வெளியீடும் இந்தியாவின் இடையீடும் 

சல்மான் ருஷ்டியின் புத்தகம் வெளிவந்து தடை செய்யப்பட்டபோது நான் பள்ளி இறுதியாண்டில் இருந்தேன். அப்போதைய பதின்மங்களில் அருண் ஷோரி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ராஜீவின் அரசியல், வி.பி.சிங்கின் எழுச்சி ஆகியவை என் தீரா அரசியல் பசிக்கு உணவாகியிருந்த காலம். அதனாலேயே சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் சம்பசமானது, எனக்கு மனதில் பல எண்ணங்களைக் கிளர்ந்தெழச் செய்தது. மேலும் ருஷ்டியும் இந்தியாவில் பிறந்தவர், சம்பவம் நடந்ததெல்லாம் நான் இப்போது வாழும் அமெரிக்காவில் என்பன  கூடுதல் காரணங்கள். 

1988 செப்டம்பர் மாதம் ருஷ்டியின் ‘சாத்தானிக் வெர்சஸ்’ (Satanic Verses) இங்கிலாந்தில் வெளியானது. 1988 அக்டோபர் 5ஆம் தேதி உலகிலேயே அந்நூலைத் தடை செய்த முதல் அரசு இந்தியாவின் ராஜீவ் காந்தி அரசு. அக்டோபர் 19 அன்று ருஷ்டி 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதமெழுதினார். அக்கடிதத்தில் ருஷ்டி தடைக்கு முக்கியக் காரணமானவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சையத் சாஹாபுதீனையும் சல்மான் குர்ஷீதையும் குற்றம் சாட்டி அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் சாடினார். அவர்கள் இருவரும் இன்றிருக்கும் இந்து அடைப்படைவாதத் தலைவர்களுடன் ஒப்பிட்டால் மிகச் சாதாரணர்கள் என்பது ஒரு வகையில் இந்தியா வந்தடைந்திருக்கும் மோசமான மதச் சூழலுக்கு அடையாளம். சாஹாபுதீனூம் குர்ஷிதும் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. புத்தகத்தை வெளியிட்ட 'பெங்குவின் பதிப்பக' இலக்கிய ஆலோசகர் குஷ்வந்த் சிங் அப்புத்தகம் சர்ச்சையை உண்டாக்கும் என்று கூறியதாகவும் அவர் வெளியிட்ட புத்தக மதிப்புரையும் தடைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ருஷ்டியின் நாவல் வெளிவந்தபோது ராஜீவின் அரசு இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை மாறி, மாறி மனம் குளிர்விக்க அரைவேக்காடுத்தனமான, அதேசமயம் மிக அபாயகரமான முடிவுகளை எடுத்து இந்தியாவைத் தத்தளிக்க வைத்துக்கொண்டிருந்தது. அச்சமயத்தில்தான் புதிதாக முளைத்திருந்த விஷ்வ இந்து பரிஷத், ராம ஜென்ம பூமி சர்ச்சையையும் கையிலெடுத்து வட இந்தியாவைக் கொந்தளிக்க வைத்துக்கொண்டிருந்தது. 

இந்தியாவில் பாஜகவையும் இந்துத்துவ மதவாதத்தின் எழுச்சியையும் பற்றி இன்று எழுதும் அநேக ஆய்வாளர்கள், முன்னர் சொன்ன காரணங்களோடு, சுட்டிக்காட்டும் வேறு காரணிகள் அக்காலத்தில் தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பப்பட்ட ராமாயணம் (1987), மஹாபாரதம் (1988) தொடர்கள் ஆகும். அவை இந்தியாவின் காப்பியங்கள், இந்தியர்கள் எல்லோருக்குமானவை என்பதெல்லாம் உண்மையே. அதேசமயம், இந்துக்களுக்கு அவை வெறும் இலக்கிய ஆக்கமோ, தத்துவத் தேடலோ அல்ல; மாறாக அவர்களின் ஆழ்ந்த மத நம்பிக்கைகளின் தூண்களும் ஆகும். அக்காலத்தில் ஓரளவேனும் அறிதலுடன் இருந்த யாருக்கும் அத்தொடர்களின் கலாசாரத் தாக்கம் தெளிவாக நினைவில் இருக்கும். அதே காலத்தில் நேருவின் ‘இந்தியாவைக் கண்டடைதல்’ நூலும் தொலைக்காட்சி தொடர் ஆக்கப்பட்டு, ‘பாரத் ஏக் கோஜ்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டதெனினும் அதன் தாக்கம் மிகச் சொற்பம். 

ருஷ்டி நாவலின் சர்ச்சைக்கு முன்பே ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம் பெண்ணுக்கு வழங்கிய ஜீவனாம்ச உரிமையை ரத்துசெய்து நாடாளுமன்றத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்து, 1985இல் ராஜீவ் அரசு ஒரு சட்டத்தை அமல் செய்தது இந்தியாவெங்கும் அதிர்ச்சி அளித்தது. சுதந்திர இந்தியாவில் இந்துத்துவத்துக்குப் பெரும் எதிர் உத்வேகம் தந்த தருணம் என்றால் அதுதான். இது இந்துக்களிடம் உண்டாக்கிய எதிர்ப்புச் சூட்டைக் குளிர்விக்க அடுத்து, 1986இல் பாபர் மசூதியை ராஜீவ் அரசு திறந்துவிட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளும், பிறகு தொடர்ந்து ராமாயண, மகாபாரத சீரியல்களும், தொடர்ந்து உருவான சூழல்களின் உச்சம்போல அமைந்தது தேர்தல் களத்தில் அருண் கோவில் காங்கிரஸ் மேடைகளில் ராமனாக நடத்திய பிரச்சாரம்.

ராஜீவின் முதிர்ச்சியின்மை, இந்தியாவில் மத  அரசியல் பற்றிய அவருடைய அறியாமை எல்லாமும் கூடியே பாஜகவுக்கு ராஜபாட்டை நடைக்கு வழிவகுத்தன. இச்சூழலில்தான் 1989இல் ருஷ்டி நாவல் வெளிவந்து தடையைச் சந்தித்தது. 

புத்தகத் தடையின் முக்கியத்துவம்

பாஜகவின் எழுச்சியில் ஷா பானோ வழக்குக்கு எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அதே அளவுக்கு  ருஷ்டி நாவலின் தடைக்கும் முக்கியத்துவம் உண்டு. புத்தகத்துக்கு எதிராக, தடை செய்த பின்பும், இந்தியாவில் பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன. மும்பையில் 1989 பிப்ரவரியில் 2,000 முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிர் இழந்தனர்; 50 பேர் காயமுற்றனர். இக்கிளர்ச்சிக்கு முக்கியமான  காரணம் ஈரானின் அதிபர் அயத்தொல்லா கொமேனி, பிப்ரவரி 14 அன்று, ருஷ்டியைக் கொல்வதற்கு ஆணையிட்ட ஃபத்வாதான்.

1988 செப்டம்பர் மாதம், புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் புதிதாகக் குடியேறி இருந்த அநேக முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை இது  ஏற்படுத்தியது. அதன் விளைவாக இங்கிலாந்தில் தொடர்ச்சியாக புத்தக எரிப்புகள், தடை செய்யக் கோரிக்கை, தங்கள் கடவுளை அவமதித்துவிட்டதாக வழக்கு (இங்கிலாந்தில் மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதற்கு எதிராக கிறிஸ்தவத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இருந்த, பெருமளவு பயன் இழந்துபோன சட்டம் இருந்தது) ஆகியவை தொடர்ந்தன. புத்தகங்களை எரிப்பதை நாஜிக்களோடு தொடர்புபடுத்தும் மேற்குலகுக்கு, குறிப்பாக ஹிட்லரை எதிர்ப்பதில் முன்னனியில் இருந்ததாகக் கருதிக்கொள்ளும் இங்கிலாந்துகாரர்களுக்கு ருஷ்டியின் புத்தகத்தை எரிப்பது நாஜித்தனமாகத் தெரிந்தது. இவையெல்லாம் உலகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை கொமேனி பார்த்தார்.

1980 - 1988 வரை நடந்த ஈரான் - ஈராக் போர் யாருக்கும் வெற்றி என்று முடியாமல் ஏதோவொரு தேக்க நிலையில் முடிவடைந்தது. ஈரானின் பொருளாதாரம் வெகுவாக நசிந்த நிலையில் இருந்தது. 1979இல் புரட்சி வெடித்து கொமேனி பதவிக்கு வந்த புதிதில் அமெரிக்க தூதரக அதிகாரிகளை சிறைப் பிடித்து, ஒரு வருடம் பிணைக் கைதிகளாக வைத்திருந்தது மேற்குலகை மொத்தமாக ஈராக் பக்கம் தள்ளியது. நலிவடைந்த பொருளாதாரத்தை நிமிர்த்த போதிய வழிகள் இல்லாத கொமேனிக்கு ருஷ்டி விவகாரம், வரலாற்றில் எப்போதும் நடப்பதுபோல், வகையான திசைத் திருப்பலுக்கு உதவியது. 

இந்த ஃபத்வாவுக்குப் பின் ருஷ்டி பல வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி அதன் பின் அதை பற்றி ‘ஜோசப் ஆண்டன்’ (Joseph Anton) என்ற தலைப்பில் புத்தகமும் வெளியிட்டார் சல்மான் ருஷ்டி. அது அவர் தலைமறைவு வாழ்க்கையின்போது சூடிக்கொண்ட சங்கேதப் பெயர், ஜோசப் கான்ராட், ஆண்டன் செகாவ் ஆகிய இருவரின் பெயர்களில் இருந்து உருவானது. ருஷ்டி அக்காலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரின் கடும் விமர்சகர் என்றபோதும் அரசு அவரைப் பாதுகாத்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ருஷ்டியைக் கைவிட்ட முற்போக்காளர்கள்

2019இல் ‘பிபிசி’ ருஷ்டி மீதான ஃபத்வாவின் 30ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ஓர் ஆவணப் படத்தை வெளியிட்டது. உரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது முற்போக்காளர்கள், லிபரல்கள், எப்படி ருஷ்டி விவகாரத்தில் சறுக்கினார்கள் என்பதே ஆகும். ருஷ்டியே ‘நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்’ (New York Review of Books) பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில், லிபரல் கட்சியை சேர்ந்த மூவரைச் சுட்டி அவர்கள் எப்படி மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தை (ப்லாஃபெமி லாஸ் - Blasphemy laws) இன்னும் விரிவாக்க ஆதரவளித்தார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

ஆவணப் படத்தில் தோன்றும் பீட்டர் தாச்சல் எனும் மனித உரிமையாளர் மேற்குலக முற்போக்காளர்கள் எப்படி ஃபத்வாவை எதிர்க்கும்போதே ஒரு “ஆனால்” சேர்த்து ருஷ்டி எல்லை மீறினார் எனக் கண்டித்ததைச் சுட்டிக்காட்டி இத்தகு முரண்பாடே வலதுசாரிகளுக்கு வழிவகுத்தது என்றார் சல்மான் ருஷ்டி.

தாராளர்களின் சறுக்கல்கள்

கிர்ஜா குமார் எழுதிய புத்தகத்தில், இந்திய முற்போக்காளர்கள் எப்படி சறுக்கினார்கள் என்று பட்டியலிட்டார். இக்பால் மசூத் மத நம்பிக்கையற்ற ருஷ்டி இப்படி எழுதி இருக்கக் கூடாதென்றார். ரபீக் ஸக்காரியா “ருஷ்டி தான் எழுதியது புனைவு என்று சொன்னால் அவர் பொய்யர்” என்றார். ஏ.ஜி.நூரனி, "இஸ்லாமியர் ருஷ்டியின் நாவலுக்கு தடை கோருவதைவிட இழிவாகக் கருதி ஒதுக்கிவிடலாம்" என்று யோசனை சொன்னார். ஜாமிய மில்லியாவில் பணியாற்றிய முஷிருல் ஹசன் ருஷ்டிக்கு மெலிதான ஆதரவு கொடுத்ததற்கே கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்து அவர் உயிருக்கே உத்தரவாதமில்லை என்ற நிலையை உருவாக்கினர். இதில் கல்லூரி அரசியலும் சில பணி சார்ந்த காழ்ப்புகளும் இருந்தன. முஷிருல் ஹசன் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி மிக மழுப்பலாக நழுவினார். 

தாச்சல் சொன்னதுபோல், இந்தியாவிலும் வலதுசாரிகள் இத்தகு தாராளர்களின் சறுக்கல்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் அருண் ஷோரி. அக்காலக்கட்டத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியராக இருந்த அருண் ஷோரி ராஜீவ் அரசுடன் ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மிகப் பெரிய போர் தொடுத்திருந்தார். ஊழலுக்கு எதிரான துணிச்சலான பத்திரிக்கையாளராக, என் போன்ற இளம் வயதினர் பலருக்கு ஹீரோவாக அந்நாளில் இருந்த அவர் தன் காவி நிறத்தை இந்த சமயத்தில் சரியாக வெளிப்படுத்தினார். ‘வாட் அபௌட் தி வெர்சஸ் தெம்செல்வ்ஸ்?’ (What about the verses themselves?) என்ற தலைப்பில் குரானிலும் பைபிளிலும் இருக்கும் வன்முறை தொனிக்கும் மேற்கோள்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில் இந்து மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் இருந்ததாக நினைவில்லை. பின்னர் ஃபத்வாக்கள் பற்றி அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்புடன் கொஞ்சமும் அறிவு நேர்மையில்லாமல் ஒரு புத்தகமே எழுதினார். அது வலதுசாரிகளுக்குப் பெரும் உத்வேகம் அளித்தது.

இன்றுவரை சிறுபான்மையினரை விமர்சித்தால் தாங்கள் குற்றம் சாட்டப்படுவோமோ என்றும் விமர்சனங்களை மதவாத சக்திகள் பயன்படுத்திக்கொள்வார்களோ என்றும் அஞ்சி மௌனமாயிருப்பதையோ அல்லது முட்டுக்கொடுப்பதையோ செய்கிறார்கள் முற்போக்காளர்கள். இது கடைசியில் எதற்கும் உதவாமல் அருண் ஷோரிகள் உருவாவதில்தான் முடிகிறது. விமர்சனங்களை நேர்மையுடனமும் தெளிவுடனும் உரையாடக்கூடிய சாத்தியக்கூறுகளுடனும் முன்வைப்பதே முக்கியம். அடுத்தது சிறுபான்மையினரிடம் நேர்மையான விமர்சனங்களை வைக்க அஞ்சுவது ஒருவகையில் அவர்களை சிறுபிள்ளைத்தனமாக நடத்துவதே ஆகும். அதுவே பெரும்பான்மையினரின் தவறுகளுக்கு  உத்வேகம் அளிப்பதாகவும் ஆகிவிடுகிறது.

இந்துத்துவர்களின் மாய்மாலம்

‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து 'தினமணி'யில் ஆண்டாள் பற்றிய கட்டுரையில் கேசவன் வேலுதாட் எழுதிய ஆய்வைக் குறிப்பிட்டு ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என எழுதப்போய் பெரும் சர்ச்சை வெடித்தது. முடிவில் 'தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆண்டாள் கோயிலுக்குப் போய் நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்டார். இப்படியொரு துராக்கிரதமான செயலுக்கு இந்திய பத்திரிக்கை உலகமே வெகுண்டு எழுந்திருக்க வேண்டும். ஆனால், பேரமைதிதான் பதிலாகக் கிடைத்தது. 

சமீப காலம் வரை இந்து மதத்தைக்கூட விமர்சித்தோ, ஏன் கிண்டலடித்தோகூட, பேசிவிட முடியும். ஆனால், சாதிகளைத் தமிழகத்தில் - இது பிராமணர்களைத் தவிர்த்து என்று புரிந்துக்கொள்ள வேண்டும் - எதுவும் சொல்லிவிட முடியாது. ‘மாதொருபாகன்’ நாவலுக்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் பெரும் அச்சுறுத்தலை ஒரு சாதியினரால் சந்தித்தார். சுஜாதாவின் ஒரு தொடர்கதை ஒரு சாதிப் பெண்ணை கவர்ச்சியாக வர்ணித்ததற்காகவே நிறுத்தப்பட்டதெனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்துத்துவ வளர்ச்சிக்குப் பின் இப்போது இந்து மதம் பற்றிய எந்தச் சொல்லாடலும் ஆபத்தானதுதான். இன்று கமல்ஹாசனால் “காதலா காதலா” மாதிரியான படத்தை, பல முக்கிய கதாபாத்திரங்களிலும் படத்தின் ஆக்கத்திலும் பிராமணர்களே இருந்தபோதிலும், வெளியிட்டுவிட முடியாது. “நாங்கள் என்ன கொலையா செய்தோம்?” என்பார்கள் இந்துத்துவர்கள். பல சமயங்களில் இந்துக்கள் வெறும் விரலசைப்பிலேயே காரியத்தை முடித்துக்கொள்ள முடியும். மேலும் கௌரி லங்கேஷ், தாபோல்கர் ஆகியோரின் கொலைகளை நாம் மறக்க முடியுமா?

இஸ்லாமியரும் விமர்சனங்களை எதிர்நோக்குதலும்

மத அடிப்படைவாதிகள் அல்லாத சாமானியர்களிடையேகூட இன்று, 'இஸ்லாமியர்கள்  மதம் சார்ந்த எந்த மிக மெலிதான விமர்சனத்தைக்கூட ஏற்க மாட்டார்கள். வன்முறையான எதிர்வினையும் நிகழலாம்' என்கிற அபிப்ராயம் நிலவுகிறது.

நபியைச் சித்தரித்த சார்லி ஹெப்டோவின் சித்திரங்களுக்காக அப்பத்திரிகை பணியாளர்கள் கொல்லப்பட்டபோது செய்தியுடன் தொடர்புடைய அச்சித்திரங்களை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் “இஸ்லாம் மீதுள்ள மரியாதைக்காகக் காண்பிக்கவில்லை” என்று சொன்னாலும் எல்லோருக்கும் அது அச்சத்தின் வெளிப்பாடே என்று தெளிவாகத் தெரிந்தது. அந்த உலகளாவிய சர்ச்சை பற்றிய ஓர் அமெரிக்க பல்கலைக்கழகப் புத்தகம்கூட அச்சித்திரங்களை வெளியிடாமல் புத்தகத்தை வெளியிட்டபோது பலர் "இது பல்கலைக்கழக அறிவுச் செயல்பாட்டையே அச்சுறுத்தும் அவலச் சூழல்" என்றனர். 

சமீபத்திய நூபுர் ஷர்மா சர்ச்சையின்போது ஒரு இஸ்லாமியர் (எந்த பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை என்று நினைவில்லை) எழுதிய கட்டுரையில், "நம் சமூகம் இனியும் இப்படி இஸ்லாம் பற்றியோ நபிகளார் பற்றியோ தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டுமா?" என்று கேட்டார். எதிர்வினையே கூடாதென்பதல்ல அவர் வாதம். 

இஸ்லாமியரிடையே சுய விமர்சனமே இல்லையென்று சொல்லிவிடவும் முடியாது. இந்த ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்திலேயே இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் முகநூலில், “உண்மையில் ருஷ்டி மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் இலக்கியப் புலத்தில் இல்லாதவர்கள். வாசிப்புப் பழக்கமற்றவர்கள். அல்லது ருஷ்டியின் படைப்புகளின் ஒரு பக்கத்தைத்தானும் வாசிக்காதவர்கள். அல்லது ருஷ்டி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள். கடும் போக்காளர்களால் உணர்ச்சியூட்டப்பட்டவர்கள்” என்று எழுதினார். பலர் இஸ்லாமியர்கள் இதற்காக அவரைக் கடிந்துக்கொள்ளவும் செய்தார்கள். 

இந்திய - இஸ்லாமிய சமூகத்தின் எதிர்வினைகள் குறித்து ஓர் அவதானிப்பை முன்வைக்க விழைகிறேன்.

ருஷ்டி விவகாரத்துக்கு 6 வருடம் முன்புதான் 1983இல் அசாமில் நடந்த தேர்தலின்போது நெல்லியில் 2,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். அசாம் அமைதி உடன்படிக்கை 1985இல் கையெழுத்தானபோது ராஜீவ் அரசு குற்றஞ்சாட்டப்பட்ட சொற்பமான வழக்குகளையும் ரத்துசெய்தது. காஷ்மீருக்கு சிறப்பதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து, குடியுரிமைச் சட்டம், அயோத்தியா தீர்ப்பு இவை எதற்கும் இஸ்லாமியர் வன்முறைப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் மிகப் பெரிய சத்தியாகிரகப் போராட்டமே முன்னெடுத்தார்கள். ஆனால், நூபுர் ஷர்மாவின் பேச்சுக்கும், அதுபோன்ற பிற தருணங்களிலும், வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வேற்றுமைக்கான காரணம் தெரியவில்லை. 

இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். ருஷ்டி, 9/11 போன்று இந்தியாவுக்கு வெளியிலான பிரச்சினைகளில் இந்திய இஸ்லாமியர்கள் மதத்தை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும்போது ஒரு சராசரி இந்துவானவன் இஸ்லாமியர்களின் இந்த தேசம் கடந்த, மதம் சார்ந்த, அக்கறையினைக் கேள்விக்குறியோடுதான் எதிர்கொள்வான். இன்று இதன் இன்னொரு பக்கமாக கடல் கடந்த இந்துத்துவம் உருவெடுத்திருப்பதோடு ஒப்பிட்டால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலருக்கு அமெரிக்க இந்துத்துவர்கள் ஓர் அச்சுறுத்தும் சூழலையே உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. ஆனால், இந்திய இந்துக்கள் பிந்தியதைக் கணக்கில் கொள்வதில்லை. 

ருஷ்டி மீதான தாக்குதலுக்கு ஈரானிய பத்திரிக்கைகளில் சில மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றன. சிலர் இந்நிகழ்வு ஈரானை பாதிக்கும் என்றும் அஞ்சுகின்றனர். இது ‘ஈரானை மேலும் தனிமைப்படுத்தும்’ என்கிறார் ஒரு முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி. 

கொலை முயற்சியும் சர்வதேச தாக்கமும்

கொலை முயற்சி சார்ந்த சர்வதேச தாக்கத்தைப் பார்க்கும் முன் கொஞ்சம் வரலாற்றை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஜான் காஸ்வினியனின் (John Ghazvinian) ‘அமெரிக்கா அண்டு ஈரான்: ஏ ஹிஸ்டரி, 1720 டு தி பிரசென்ட்’ (America and Iran: A History, 1720 to the Present) புத்தகம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இருக்கும் மிக நீண்ட வரலாற்றைப் பேசுகிறது. 1790களில் தாமஸ் ஜெபர்ஸனும் ஜான் குவின்ஸி ஆடம்ஸும்  ஜனாதிபதிகளாக ஆனார்கள்; பெர்ஷியாவின் வரலாற்றை அமெரிக்காவை வழிநடத்த உதவும் வழிகள் இருக்குமா என்பதற்காகத் தேடிப் படித்தார்கள். 1919இல் டெஹ்ரானில் அமெரிக்காவுக்கு ஆதரவாகக் கிளர்ச்ச்சிகள் நடந்துள்ளன. அப்படிப்பட்ட உறவில் இருந்து அமெரிக்க சி.ஐ.ஏ. நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு, கொமேனியின் மேற்குலக எதிர்ப்பு என்று உறவுகள் பாதாளத்துக்குச் சென்றன. 

மத்தியக் கிழக்கு நாடுகளில் கனிம வளத்துக்காகவும் தங்கள் காலனியாதிக்கத்துக்காகவும் மேற்குலகம் தாயக்கட்டை விளையாடியதை எலிஸபத் தாம்ஸன்  ‘ஹவ் தி வெஸ்ட் ஸ்டோல் டெமோகிரஸி ஃப்ரம் தி அரப்ஸ்: தி சிரியன் காங்கிரஸ் ஆஃப் 1920 அண்டு தி டிஸ்ட்ரக்சன் ஆஃப் இட்ஸ் ஹிஸ்டாரிக் லிபெரல் – இஸ்லாமிக் அல்லையன்ஸ்’ (How the West Stole Democracy from the Arabs: The Syrian Congress of 1920 and the Destruction of Its Historic Liberal-Islamic Alliance) புத்தகம் பேசுகிறது. சிரியாவில் பிரான்ஸும் பிரிட்டனும் எப்படி அங்கு ஜனநாயக மரபுகள் மலர்வதைக் குழி தோண்டி புதைத்தனர் என்று விவரிக்கிறார்.

உலகத்துக்கே தேவைப்படும் கனிம வளம் கொட்டிக் கிடப்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு சாபக்கேடுதான். இச்செய்திகளை நாம் கொஞ்சம் நினைவில் நிறுத்திதான் மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய மரபுகளையும் அவற்றின் சிக்கல்களையும் புரிந்துகொள்ள வேண்டும். 

சல்மான் ருஷ்டியைக் கொல்ல முயன்ற ஹாதி மடார்,  நியூ ஜெர்ஸியைச் சேர்ந்தவர். அமெரிக்கக் குடியுரிமை உடையவர். மடார் கிட்டத்தட்ட 6 மணி நேரம் பயணித்து ஷுடாக்வா நகரில் நடைபெறும் ருஷ்டியின் நிகழ்வுக்குச் சென்று திடீரென்று மேடை மீதேறி 10 முறை ருஷ்டியின் கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தினார். ஐந்து பேர் கஷ்டப்பட்டுதான் அவரை ருஷ்டியிடமிருந்து பிரித்துக் கைப்பற்றினர். இது திட்டமிட்ட கொலை முயற்சி என்று தெளிவாகத் தெரிகிறது. மேலும், மடாரின் வயதை வைத்துப் பார்க்கும்போது அவர் ருஷ்டியின் நாவல் வெளியானபோது கொமேனேயின் ஃபத்வா வெளியானபோதோ பிறக்கவேயில்லை. அப்படியென்றால் அந்த ஃபத்வாவால் உந்தப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், இவர் ஈரானிய அடிப்படைவாதத்துடன் ஒத்துப்போகிறவராக இருந்தார் என்று தெரியவந்திருக்கிறது.

இந்த இடத்தில் சில சர்வதேச கோணங்களைப் பார்போம். ஈரானின் அணு ஆராய்ச்சியானது, பல காலம் மேற்குலக நாடுகளால், குறிப்பாக அமெரிக்காவால், அச்சத்தோடு பார்க்கப்பட்டது. ஒருமுறை ஈரானின் அணு உலையைக் கணிணி மூலம் கட்டுடைத்து செயலிழக்கச் செய்தனர் அமெரிக்காவும் இஸ்ரேலும். 2016இல் பராக் ஒபாமா ஈரானுடன் அவர்கள் அணு ஆராய்ச்சியைக் கட்டுபடுத்தும் ஒப்பந்தத்தைச் சொந்த கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு இருந்தபோதும் கையெழுத்திட்டார். பின்னர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தைக் குப்பையில் போட்டார். ஈரானியர்களும் அதைத்தான் விரும்பினர். ஜோ பைடன் பதவியேற்றதும் மீண்டும் அந்த ஒப்பந்தத்துக்கு உயிர் கொடுக்க நினைத்து முயற்சிகளை முடுக்கிவிட்டார். இத்தருணத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததோடு அமெரிக்க மண்ணிலேயே நடந்துள்ளது மிகப் பெரிய பின்னடைவு. 

ஈரானிய அரசைச் சார்ந்தவர்கள் டிரம்ப் அரசில் முக்கிய பாதுகாப்பு பொறுப்பில் இருந்த ஜான் போல்டன், மைக் பாம்பேயோ ஆகிய இருவரையும் கொலை செய்ய முயல்கிறார்கள் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் சொல்கின்றன. ருஷ்டி மீதான தாக்குதலையும் இப்பின்னணியில் பார்த்தால் இதன் சர்வதேச கோணங்கள் எப்படி விரிகின்றன என்று புரியும். 

இனி என்ன?

விசாரணையும் வழக்கும் நடக்கும்போதுதான் ஹாதி மடாரின் உண்மையான நோக்கங்கள் தெளிவாகும். இஸ்லாமிய சமூகம் எப்படி இதனை எதிர்கொள்கிறார்கள் எனப் பலரும் உற்றுநோக்குகிறார்கள். ஈரானிலும் சீர்திருத்தவாதிகள் இருக்கிறார்கள், இந்திய இஸ்லாமியருள்ளும் வன்முறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். இக்குரல்கள் வலுப்பெற வேண்டும்.

இதை ஏதோ வலதுசாரி அரசியலுக்கு பயந்தோ வேறு எதையும் நிரூபிப்பதற்காகவோ இஸ்லாமியர் செய்யத் தேவையில்லை. அதுவல்ல நோக்கம். அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் சமீபத்தில் வலுப்பெற்றிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளிடமிருந்து கிறிஸ்தவத்தைக் காக்க வேண்டும், அதுபோல  இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் இந்துத்துவத்திடமிருந்து இந்து மதத்தை மீட்க வேண்டும்.

நான் தனிப்பட்ட முறையில் இறை நம்பிக்கையாளனல்ல. ஆனால், என் தந்தையின் மூலம் இறை நம்பிக்கையின் மேன்மைகளை மறுக்காதவன் மதங்களின் அளப்பரிய பண்பாட்டு பங்களிப்புகளை மறுக்காதவன். அந்த வகையில் மத அடிப்படைவாதிகளிடமிருந்து மதங்களைக் காப்பதும் இன்றியமையாத கடமையென்றும் நம்புகிறேன்.

அது சாதி வெறியோ, மத வெறியோ, தேசிய வெறியோ - எது ஒன்றின் மீதான பற்றும் - சக மனிதர் மீதான வெறுப்புக்கு வித்திடும் அளவுக்குத் தீவிரமாகும்போது அது தனக்கான ரத்த பலியைக் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். ருஷ்டி மீதான ஃபத்வா 34 வருடம் கழித்து அவரை வீழ்த்த முயன்றதெனினும் இதற்கு முன்பே அப்புத்தகத்தின் ஜப்பானிய மொழிப்பெயர்ப்பாளர் கொல்லப்பட்டதையும் வேறொரு பதிப்பாளர் தாக்கப்பட்டதையும் நாம் மறக்கக் கூடாது. கூடவே அந்த ஃபத்வாவினால் நடந்த கிளர்ச்சிகள் உயிர் இழந்தது எல்லோரும் இஸ்லாமியர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமியர் ஓர் ஆங்கிலேயர் எழுதிய நூலுக்காக தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

ஷுடாக்வா என்ற பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது ராபர்ட் பிர்ஸிக்கின் ‘ஜென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டர்சைக்கிள் மெயின்டனென்ஸ்’ (Zen and the Art of Motorcycle Maintenance) புத்தகத்தில்தான். அன்று முதல் அந்நகருக்கு செல்ல வேண்டுமென ஆசைப்பட்டேன். இப்போதோ அந்நகரின் பெயரை கூகிளில் போட்டாலே இந்தக் கொலை முயற்சி பற்றிய செய்திகள்தான் வருகின்றன.

அமெரிக்கா எழுத்தாளர்களுக்குப் புகலிடமாக இருப்பது பற்றிதான் ருஷ்டி பேசவிருந்தார்.  இரண்டாம் உலகப் போரின்போதும் அதன் பின் அலெக்ஸாண்டர் ஸோல்சினிட்சின் போன்றவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த நாட்டில் அதுவும் இலக்கியம் பண்பாடுகளைப் பேணும் நியூ யார்க் மாநிலத்தில் ருஷ்டி தாக்கப்பட்டிருப்பது சோகம். இதே நியூ யார்க் மாநிலத்தில்தான் நியூ யார்க் நகரின் பூங்காவில் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் லென்னன் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு துயரமான ஒற்றுமை!

குறிப்புகள்: 

1. https://www.facebook.com/arvindkannaiyan/posts/pfbid0r1qzRPuPe2zz239feEanrPURVZAmSF4m5zi1fjTZSJUV38NcXfwpG8xovBqavaPWl 
2. https://en.wikipedia.org/wiki/The_Satanic_Verses_controversy#1988 
3. https://www.thehindu.com/news/national/rajiv-gandhi-govt-decision-to-ban-rushdies-book-was-justified-taken-for-law-order-reasons-natwar-singh/article65765097.ece 
4. https://www.opindia.com/2022/08/salman-rushdie-rajiv-gandhi-india-first-country-ban/
5. https://en.wikipedia.org/wiki/Syed_Shahabuddin 
6. https://en.wikipedia.org/wiki/Mohd._Ahmed_Khan_v._Shah_Bano_Begum 
7. https://www.theguardian.com/books/2009/feb/14/salman-rushdie-ayatollah-khomeini-fatwa 
8. https://www.theguardian.com/books/2012/sep/14/looking-at-salman-rushdies-satanic-verses 
9. https://www.indiatoday.in/magazine/society-the-arts/books/story/19951130-book-review-arun-shourie-world-of-fatwas-807981-1995-11-30 
10. https://www.csmonitor.com/1992/0505/05042.html 
11. https://www.nytimes.com/1988/10/19/opinion/india-bans-a-book-for-its-own-good.html 
12. https://apnews.com/article/e403d028139bda7dd8c054545c0cf063 
13. https://en.wikipedia.org/wiki/Ramayan_(1987_TV_series) 
14. https://en.wikipedia.org/wiki/Mahabharat_(1988_TV_series) 
15. https://en.wikipedia.org/wiki/Bharat_Ek_Khoj 
16. https://en.wikipedia.org/wiki/Bible_Ki_Kahaniyan 
17. https://www.theguardian.com/books/2012/sep/14/looking-at-salman-rushdies-satanic-verses 
18. https://www.upi.com/Archives/1989/02/24/Police-fired-Friday-on-2000-Moslems-rioting-in-Bombay/6389604299600/ 
19. https://en.wikipedia.org/wiki/Iran_hostage_crisis 
20. https://www.nybooks.com/articles/1989/03/02/the-book-burning/ 
21. https://www.google.com/books/edition/The_Book_on_Trial/n-KUICFfA00C?hl=en&gbpv=1&kptab=getbook&bsq=mushirul%20hasan 
22. https://www.csmonitor.com/1992/0505/05042.html 
23. https://www.nytimes.com/1989/02/27/world/new-york-muslims-pledge-more-protests-on-rushdie-s-book.html 
24. https://indianexpress.com/article/opinion/columns/ayodhya-ram-temple-bhoomi-pujan-destination-janmasthan-6541313/ 
25. https://www.youtube.com/watch?v=42iV2U_nsfY 
26. https://en.wikipedia.org/wiki/Peter_Tatchell 
27. https://www.facebook.com/jiffry.hassan.31/posts/pfbid037thnm4vtDkUsSbSAhPDBxpbdkPZMFrhtTKcjDySr7xHjHMLHNRMbqkBrmRYFGLctl 
28. https://www.aljazeera.com/news/2022/8/13/iran-lebanon-reaction-to-salman-rushdie-attack 
29. https://contrarianworld.blogspot.com/2018/01/andal-vairamuthu-and-people-gone-berserk.html 
30. https://www.nytimes.com/2022/08/13/nyregion/rushdie-video-stabbed-ny.html 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பில் இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.


5

2




1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Rathan Chandrasekar   2 years ago

Any Compromise with Religious Fundamentalism for political gains is bound to end in Grave Danger.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

எப்படிப்பட்ட பார்வையை, புரிதலைத் தருகிறது இந்த அட்டகாசமான கட்டுரை! அருஞ்சொல் தரத்தில் முன்னணியில் உள்ளது, அச்சில் வெளியாக வேண்டும். இந்த கட்டுரை சில முக்கிய பாடங்களைக் கற்றுத் தருகிறது. ஒரு அரசுக்கு மத அடிப்படைவாதிகளின் (பெரும்பான்மை, சிறுபான்மை) மனம் குளிர்விக்கும் வேலையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.பொதுமக்கள் சார்பில் இதைச் சொல்கிறேன். சிறுபான்மை மதத்தை விமர்சிக்க முயலும் முற்போக்காளர்களின் தயக்கத்துக்கான காரணத்தைச் எடுத்துக் காட்டி எதற்காக அந்த தயக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது அருமை! இஸ்லாமிய சமூகம் பாதிக்கப்படும்போது(குடியுரிமைச் சட்டம், அயோத்தியா தீர்ப்பு) பொறுப்புடன் சத்தியாக்கிரக வழியில் போராடுபவர்கள் சக இஸ்லாமியர் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட, நெஞ்சுரம் மிக்க, தலைமைப் பண்பு கொண்ட மனிதர்கள்.. நூபுர் ஷர்மா விவகாரத்தில், சல்மான் ருஷ்டி விஷயத்தில் வன்முறையைக் கையில் எடுத்தவர்கள் சக இஸ்லாமியர் முக்கியமில்லை,மதத்தின் மீதான பிம்பமே முக்கியம் என்று கருதும் அடிப்படைவாதிகள் என்று புரிந்து கொள்ளலாம். மிகச் சரியாக சொல்கிறீர்கள்.. தமிழகத்தில் பிராமண சாதியைத் தவிர்த்து மற்ற எந்த சாதியையும் நேர்மையாக விமர்சிக்கச் சுதந்திரம் இல்லை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

இது ஒரு cycle. அறிவியல் வளர்ச்சிக்கு பின் நீண்டகாலம் இடதுசாரிகள் செல்வாக்குடன் இருந்தார்கள், ஒட்டுமொத்த உலகிலும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நுகர்வுவெற்றி எளிதா?காலை உணவுத் திட்டம்காங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லஅரசமைப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறோம்?c.p.krishnanநுகர்வு உறுப்புவிரிவாக்கம்காமெல் தாவுத்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்மாவோயிஸ்ட்மணிப்பூர் முதல்வர்மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்கட்டணமில்லாப் பயணம்அயோத்திதாச பண்டிதர்கெவின்டர்ஸ் நிறுவனம்நவீன் பட்நாயக்சேகர் குப்தா கட்டுரைஎரிகிறது மணிப்பூர்; வேடிக்கை பார்க்கிறது அரசுஒரு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வணக்கம்வறட்சிபேரினவாதம்வெற்றிடத்தின் பாடல்கள்லவ் டுடேகாதுவலிக்குக் காரணம்!பஸ் பாஸ்பெரும்பான்மைவேலைவாய்ப்பில் கூட்டல்களைவிடக் கழித்தல்களே அதிகம்கல்வியும் வாழ்வியலும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!