இலக்கியம், புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

இப்போது உயிரோடு இருக்கிறேன்

இமையம்
30 Jan 2022, 5:00 am
1

கித்துக்கொள்ள முடியாத எழுத்து என்று சொல்வதா அல்லது தாங்கிக்கொள்ள முடியாத எழுத்து என்பதா? இமையத்தின் சமீபத்திய எழுத்துகள் அப்படி ஓர் இடத்தை நோக்கித்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன. நோயாளிகள் மத்தியில் நம்முடைய கையாலாகத்தனம் நமக்குள் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி இதை வாசித்து முடிக்கும் ஒருவருக்கு நிச்சயம் எழும். ஐந்து வயதுக் குழந்தை சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்படும்போது எதைக் கொண்டுதான் இந்த வாழ்வில் அதை அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்? ஆனால், நம்முடைய சமூகச் சூழல் அவர்களை மேலும் வதைக்கிறது. நம்முடைய பாராமுகம் மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. முகத்தைத் திருப்பிக்கொள்வது தீர்வே இல்லை என்பதையே இமையத்தின் படைப்புகள் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. இமையத்தின் சமீபத்திய நாவலான ‘இப்போது உயிரோடு இருக்கிறேன்’ பல இடங்களில் நிலைகுலைய வைக்கிறது. நாவலிலிருந்து ஒரு முக்கியமான பகுதியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்கு இங்கே தருகிறது!      

 

ச்சை நிற பேண்ட்டும், கவுனும் போட்டுக்கொண்டிருந்த ஒருவர் நான்கு மணிக்கு வந்து, ‘‘அஞ்சு மணிக்கு ரெடியா இருங்க” என்று சொல்லிவிட்டுப் போனார். ‘‘குளிச்சிடுப்பா” என்று அப்பா சொன்னார். சரி என்று தலையைக்கூட ஆட்டாமல் குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டேன்.

பல் விளக்குவதற்காக பிரஷ்ஷையும் பேஸ்டையும் எடுத்தேன். பிரஷ்ஷைப் பிடிக்க முடியாத அளவுக்குக் கை நடுங்கிக்கொண்டிருந்தது. சிரமப்பட்டுத்தான் பற்களை விளக்கினேன். தண்ணீர் குழாய்களுக்கான திருகுகளைத் திறந்துவிட்டேன். அறைக்குள் இருந்ததைவிட இப்போது உடலின் நடுக்கம்  அதிகரித்திருந்தது. சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு பக்கெட்டில் நிறையும் தண்ணீரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்கள் இருட்டிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. பேன்ட், சட்டையைக் கழற்றிப் போடுவதற்கே சிரமப்பட்டேன். ஜக்கை எடுத்து தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக்கொள்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது.

நடுக்கத்தால் ஜக்கிலிருந்த தண்ணீர் பாதி கீழேதான் கொட்டியது. ஒவ்வொரு முறை மொண்டு ஊற்றும் போதும் பாதித் தண்ணீர்தான் தலையில், உடம்பில் பட்டது. சோப்பு போடும்போது ஐந்து முறைக்கு மேல் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்துவிட்டது. கையிலிருந்த சோப்பு நழுவிக் கீழே விழுந்த ஒவ்வொரு முறையும், ‘‘எனக்கு ஏன் சிறுநீரகம் செயலிழந்தது?” என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்வி எழுந்த உடனே எனக்கு அழுகை வந்தது, என்னுடைய முகம் எப்படி இருக்கிற என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

கண்ணாடியைப் பார்த்தேன். லேசான கறுப்புத்துணியால் போர்த்திவிட்டதுபோல் தெரிந்தது. அந்த அளவுக்கு ஆவி படிந்திருந்தது. முகம் சுத்தமாகத் தெரியவில்லை. கண்ணாடியில் படிந்திருந்த ஆவியில் குறுக்கும்நெடுக்குமாகக் கோடுகளைக் கிழித்து என்னுடைய முகத்தைப் பல துண்டுகளாக்கிப் பார்க்கலாமா? ஆவியில் என்னுடைய பெயரை எழுதிப் பார்க்கலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே மேலேயிருந்து கீழாக ஒரு கோடும் கிடைமட்டமாக ஒரு கோடும் கிழித்தேன். நடுங்கிக்கொண்டிருந்ததால் கண்ணாடியில் கோடு நேராக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தது. பெயருக்குக் குளித்துவிட்டு வெளியே வந்தேன்.

‘‘தல துவட்டலியா? ஈரமா இருக்கே” என்று சொன்ன அப்பா, ‘‘துண்டக் கொடும்மா” என்று கேட்டார். துண்டை தமிழரசி அப்பாவிடம் கொடுக்காமல் தானே வந்து துவட்டிவிட்டாள். ‘‘விடு. நான் பாத்துக்கிறன்” என்று சொல்லத்தான் நினைத்தேன். வாயைத் திறந்து சொல்ல முடியவில்லை. பேன்ட், சட்டை என்று கொடுத்தாள். ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டேன். சீப்பை எடுத்துக்கொண்டுவந்து எனக்குச் சீவிவிட ஆரம்பித்ததும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. கோபத்தில், ‘வேண்டாம்’ என்பதுபோல தலையை மட்டும்தான் ஆட்ட முடிந்தது. ‘கொடு நான் சீவிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை. பூட்டு போட்டதுபோல வாய் மூடிக்கொண்டிருந்தது.

குளித்தாயிற்று, பேன்ட் சட்டையும் போட்டாயிற்று, தலையும் சீவியாயிற்று,  அடுத்து என்ன செய்ய வேண்டும்? ‘அஞ்சு மணிக்கு ரெடியா இருங்க' என்று சொல்லிவிட்டுப்போன ஆள் எப்போது வருவார்?  

உடனே எனக்குச் செத்துவிட வேண்டும் என்று தோன்றியது. செத்துவிட்டால் மருத்துவமனைக்குப் போக வேண்டாம். மணிக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டாம். கொத்துக்கொத்தாக மாத்திரைகள் சாப்பிட வேண்டாம். ஊசிபோட்டுக்கொள்ள வேண்டாம். சுடுகாட்டை நினைவுபடுத்துகிற ஐ.சி.யு.வில் தனியாகப் படுத்திருக்க வேண்டாம்.

எங்களுடைய தெருவிலிருந்த பிள்ளைகள், பெண்கள், ஆண்கள், பாட்டிகள் முதலியார் தெருவிலிருந்த, பிள்ளைமார், செட்டியார் தெருவிலிருந்தபிள்ளைகள், பெண்கள், ஆண்களின் முகங்கள் நினைவுக்கு வந்தன. வாராவாரம் மறக்காமல் வந்து, ‘மரச் சீப்பக் கொடு’ என்று அம்மாவிடம் கேட்கும் சிவகலைப் பாட்டி நினைவுக்கு வந்தாள். என்னுடன் படித்துக்கொண்டிருந்த பையன்களின் முகங்கள், ஆசிரியர்களின் முகங்கள் என்று ஒவ்வொரு முகமாக நினைவுக்கு வந்தன.

என்னுடைய ஊரிலிருந்த குறத்திக் குளம், பாப்பாத்தி குளம், ஓடைக் கரை, களத்தடித் திண்டு, பிள்ளையார் கோயில் மானியம், கழுதை ஓடை, அக்கரகாரத்து ஏரி, எங்களுடைய வீட்டுக்குப் பின்னாலிருந்த பலா மரம், மொட்டைக் கிணறு என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. அவற்றையெல்லாம் மீண்டும் பார்ப்பேனா? ஒரு காரணமும் இல்லாமல் எனக்குச் சாவுபற்றிய எண்ணம் வந்தது.

எனக்குத் தெரிந்து எங்களுடைய ஊரில் இறந்துபோன வயதானவர்கள், குழந்தைகள், பத்துப் பதினைந்து வயதுப் பிள்ளைகளைப் பற்றியெல்லாம் யோசித்துப்பார்த்தேன். எங்களுடைய ஊரில் வயதானவர்கள் இறந்தால்தான் வீட்டின் முன் சாவுப் பந்தல் போடுவார்கள். சங்கு ஊதுவார்கள். சேகண்டி அடிப்பார்கள். வீட்டிலிருந்து பிணம் சுடுகாடு போகும்வரை வாணவெடி விடுவார்கள். கைக்குழந்தைகளோ, பத்துப் பதினைந்து வயது பிள்ளைகளோ இறந்துவிட்டால் வீட்டின் முன் சாவுப் பந்தல் போட மாட்டார்கள். சேகண்டி அடிக்க மாட்டார்கள். சங்கு ஊத மாட்டார்கள். வாணவெடியும் விட மாட்டார்கள். பாடையும் கட்ட மாட்டார்கள். நீண்ட மூங்கில் குச்சியின் நடுவில் வெள்ளைத் துணியைத் தூளிபோல், தூங்குகிற குழந்தையைப் படுக்க வைப்பதுபோல் பிணத்தை வைத்து முன்னும்பின்னுமாக இருவர் மட்டும் தூக்கிக்கொண்டு போவார்கள்.

அறுவைச் சிகிச்சையின்போது நான் இறந்துவிட்டால் பாடையைத் தூக்கிக்கொண்டு போவார்களா? மூங்கில் கழியில் வெள்ளைத் துணியைக் கட்டித் தூக்கிக்கொண்டு போவார்களா? 

அப்பாவும் தமிழரசியும் எனக்குப் பக்கத்தில்தான் இருந்தார்கள். ஆனாலும், நான் தனியாக இருப்பதுபோல் இருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் போகும்போது பயப்படக் கூடாது, முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. எப்போதும்போல முகத்தை வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தேன். என்னுடைய திட்டமெல்லாம் குளிக்கும்போதே, அடுப்பின் புகை காணாமல் போவதுபோல் போய்விட்டது.

என்னுடைய உடம்பு நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘‘ஒக்காருப்பா” என்று அப்பா சொன்னார். மறுபேச்சு பேசாமல் படுக்கையில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். நின்றுகொண்டிருந்தபோது மனதில் கொஞ்சம் தெம்பு இருந்தது மாதிரி தெரிந்தது. படுக்கையில் உட்கார்ந்த பிறகு, மனதிலிருந்த தெம்பு சுத்தமாகப் போய்விட்டது. உடலிலிருந்த நடுக்கம் கூடிவிட்டது. கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டிருப்பதே அச்சமாக இருந்தது.அதனால், மூடிக்கொண்டேன். இடது கையைத் தமிழரசி பிடித்துக்கொண்டாள். ‘கைய விடு’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால், சொல்லவில்லை.

தமிழரசியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பார்த்தால் நான் பயந்துகொண்டிருப்பது தெரிந்துவிடும் என்பதால் கண்களைத் திறக்காமலேயே உட்கார்ந்துகொண்டிருந்தேன். ‘‘சென்னிமல முருகா, முருகான்னு சொல்லு” என்று தமிழரசி சொன்னதும் நான் கண்களைத் திறந்து தமிழரசியைப் பார்க்க முயன்றேன். முடியவில்லை. அப்போது வலது கையை அப்பா அழுத்திப் பிடித்துக்கொண்டது தெரிந்தது. நான் கண்களைத் திறந்து பார்க்கவில்லை.

எனக்குச் சிறுநீரகம் செயலிழந்து நான் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, என்னைப் பார்ப்பதற்காக வந்தவர்களெல்லாம், ‘ஒனக்கு ஒண்ணும் ஆவாது. கவலப்படாத’ என்று ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆரம்பத்தில் எனக்குச் சாக்குப்போக்குகள் பிடித்திருந்தன. நாளாகநாளாக அந்தப் பேச்சுகள் எல்லாம் சலித்துவிட்டன. பிறகு, சாக்குப்போக்குகளைக் கேட்கும்போது கோபம் வர ஆரம்பித்துவிட்டது. ஆனால், இப்போது வந்து யாராவது சாக்குப்போக்குச் சொன்னால் பரவாயில்லை என்று தோன்றியது. அப்பா, தமிழரசியைத் தவிர வேறு யாரும் இல்லாததால் எனக்கு நானே சாக்குப்போக்காகச் சொல்லிக்கொண்டேன். ‘ஒண்ணும் ஆவாது.’

‘‘அம்மாவப் பாக்கணுமா?” என்று அப்பா கேட்டார். அப்போதும் நான் கண்களைத் திறந்து பார்க்காமலேயே உட்கார்ந்துகொண்டிருந்தேன். வெளியே போக வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. எங்கே போவது என்ற கேள்வி வந்த மறுநிமிடமே எங்கே நான் போனாலும் சாப்பாட்டு டப்பாவுடன், தண்ணீர் பாட்டிலுடன், மாத்திரை டப்பாவுடன்தான் போக முடியும். சாப்பாடு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் ஓட்டிவிடலாம். ஆனால், மாத்திரை இல்லாமல் இருக்க முடியாது.

மருத்துவமனையில் சேர்ந்து டயாலிசிஸ் செய்ய ஆரம்பித்த பிறகு, வீட்டை விட்டுக் கிளம்பும்போது சாப்பாட்டு டப்பாவை, தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வர மறந்தாலும், மாத்திரை டப்பாவை மட்டும் எடுத்துக்கொண்டு வர அம்மா மறக்க மாட்டாள். சாப்பிடுவதற்கு முன் வாந்தி வராமல் இருப்பதற்கான மாத்திரையைப் போட்ட பிறகுதான் சாப்பிட முடியும். மாத்திரையைப் போட மறந்துவிட்டால் வாந்தி வந்துவிடும். வாந்தி வந்துவிட்டால் க்ரியாட்டினின் அளவு கூடிவிடும். க்ரியாட்டினின் அளவு கூடிவிட்டால் கை கால்கள், முகம் வீங்கிவிடும். வயிறு உப்பிவிடும். வயிற்றில் நீர் சேர்ந்துவிட்டால் டியூப் வழியாகத்தான் எடுக்க வேண்டும். 

கதவைத் திறந்துகொண்டு மாமாவும் அத்தையும் வந்தார்கள். மாமாவையும், அத்தையையும் பார்த்ததும் என்னுடைய கையை விட்டுவிட்டு, ‘‘அம்மாவப் பாத்திட்டு வர்றன்” என்று சொல்லிவிட்டு அப்பா வெளியே போனார்.

‘‘சாமி கோயிலு திருநீறு” என்று சொல்லி எதையோ என்னுடைய நெற்றியில் அத்தை பூசிவிட்டாள். என்னுடைய முதுகில் மாமா தடவிக்கொடுத்தார். ‘‘ஏம்ப்பா டென்ஷனா இருக்க?” என்று கேட்டார். ‘‘பயப்படாத” என்று அத்தை சொன்னாள். எதற்கும் நான் பதில் சொல்லாமல் ஊமை மாதிரி உட்கார்ந்துகொண்டிருந்தேன். அப்போது முன்பு வந்துவிட்டுப்போன ஆள் வந்து நீல நிற கவுன் ஒன்றைக் கொடுத்து, ‘‘மாத்திக்கச் சொல்லுங்க. ஜட்டி, அரணாக் கயிறு, செயினு, மோதரம்னு எதுவும் இருக்கக் கூடாது. ரெடியா இருங்க. அஞ்சி நிமிஷத்தில வந்திடுறன்”
என்று சொல்லிவிட்டுப் போனார்.

‘‘மாத்திக்கப்பா” என்று மாமா சொன்னார். நான் படுக்கையை விட்டுக் கீழே இறங்கி பேண்ட், சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு கவுனை மாட்டிக்கொண்டேன். மலேரியா காய்ச்சல்காரனுக்கு நடுங்குவதுபோல கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிற்பதற்குச் சிரமமாக இருந்தது. பின்பக்கமாக இருந்த நாடாவைக் கட்டிவிட்டாள் தமிழரசி. அம்மாவினுடைய அறையிலிருந்து அப்பா வந்ததும், மாமாவும் அத்தையும், ‘‘அம்மாகிட்ட போறம்” என்று சொல்லி என்னுடைய தலையைத் தடவிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவர்கள் வெளியே போய் ஒரு நிமிஷம் கூட ஆகியிருக்காது, பச்சை நிற உடையணிந்திருந்த ஆள் வந்து, ‘‘ரெடியா, போவலாமா?” என்று கேட்டார். அப்பா, ‘‘போவலாம்” என்பதுபோல் தலையை ஆட்டினார். ‘‘சாமி கும்புடுறதின்னா கும்புட்டுக்குங்க” என்று அந்த ஆள் சொன்னார். 

‘‘பாட்டியக் கூப்புடு” என்று அப்பா சொன்னார். உடனே விர்ரென்று தமிழரசி அம்மாவின் அறைக்குப் போன வேகத்திலேயே பாட்டியை அழைத்துக்கொண்டு வந்தாள். ‘‘குல தெய்வம் கோயிலுக்கு வேண்டியிருக்கன். குடும்பத்தோடு வந்து மொட்ட போடுறன்னு சொல்லியிருக்கன். நல்லபடியா ஆயிடும். மனசப் போட்டுக் குழப்பிக்காத. கிளி ஜோசியம் பாத்தன். குடுகுடுப்பக்காரன்கிட்டயும் கேட்டன். ஒன்னோட ஜாதகத்தக் காட்டி பண்டாரத்துக்கிட்டயும் கேட்டன். எல்லாரும் ஒரே வாயா நல்லா ஆயிடும், நூறு வயசு இருப்பான்னு சொன்னாங்க” என்று சொல்லிக் கும்பிட்டுவிட்டு என்னுடைய நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டாள். ‘‘சரி, நேரமாவுது” என்று அப்பா சொன்னதும், ‘‘சென்னிமல முருகனுக்கு வேண்டியிருக்கன். நல்லாயிடும்” என்று சொல்லித் தலையைக் கோதிவிட்டுப் பாட்டி வெளியே போனதும், ‘‘போவலாம்” என்று அப்பா சொன்னார். அப்போது அப்பாவின் குரல் ஆறுமாதம் பட்டினி கிடந்த ஆளின் குரல்போன்றிருந்தது. சீருடை அணிந்திருந்த ஆள், ‘‘ஃபைலக் கொடுங்க” என்று சொல்லி எடுத்துக்கொண்டு வெளியே போனார். அடுத்ததாகத் தமிழரசியும், கடைசியாக நானும் அப்பாவும் வெளியே போனோம்.

அறையின் வாசலில் ஸ்ட்ரெச்சர் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்ட்ரெச்சரைக் காட்டி ‘‘ஏறிப் படுத்துக்க” என்று அந்த ஆள் சொன்னார். நான்ஏறி ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டேன். கழுத்திலிருந்து கால்வரை பச்சை நிறத் துணியைப் போர்த்திவிட்டு, முட்டிக்கால்களை ஒட்டியும், நெஞ்சுபகுதியை ஒட்டியும் பெல்ட்டைப் போட்டுவிட்டு, ‘‘போவலாமா?” என்று அந்த ஆள் கேட்டார். சரி என்பதுபோல் அப்பா தலையை ஆட்டியபோது அம்மா என்னிடம் வந்தாள். என்னைப் போலவே அம்மாவும் கவுன் போட்டுக்கொண்டிருந்தாள். இரட்டை சடை பின்னி, இரண்டையும் ஒன்றாக இணைத்துப் பின்மண்டையோடு கட்டியிருந்தாள். தோடு, மூக்குத்தி, வளை யல், தாலி என்று எதுவுமில்லை. 

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுக்கூட இல்லை. அம்மாவைப் பார்ப்பதற்கு வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோல் இருந்தது. பேசவில்லை. தொட்டுப்பார்க்கவில்லை. அழவில்லை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் கண்கள் பூனையினுடையதைப் போன்றிருந்தன. அம்மாவைப் பார்த்ததும் என்னுடைய கண்கள் கலங்கின. உடனே அம்மாவினுடைய உருவம்மறைந்தது. அப்போது ‘‘வந்து ஸ்ட்ரெச்சரில படுங்க மேடம். நேரமாயிடிச்சி” என்று சொன்ன பெண்ணின் குரல் கேட்டது.   அடுத்த நொடியில் அம்மா நடந்துபோகிற சத்தமும் பிறகு, ஸ்ட்ரெச்சரின் சக்கரங்கள் உருள்கிற சத்தமும் கேட்டன. எனக்கு முன்னால் அம்மாவினுடைய ஸ்ட்ரெச்சர் போகிறது என்று நினைத்துக்கொண்டேன். நான் படுத்துக்கொண்டிருந்த ஸ்ட்ரெச்சர் தள்ளப்பட்டதும் வலது பக்கமாக அப்பாவும் இடது பக்கமாகத் தமிழரசியும் வந்துகொண்டிருந்தனர்.

அறுவைச் சிகிச்சை முடிந்து உயிருடன் வெளியே வருவேனா என்ற கவலை வந்ததும். உடம்பு முழுவதும் பயம் பரவி நடுக்கம் எடுத்தது. அப்பா, அம்மா, மாமா, அத்தை, பாட்டி, தமிழரசி என்று எல்லாரும் உயிரோடு இருப்பார்கள். நான் இருப்பேனா என்ற கேள்வி மனதில் தோன்றியதும் என்னையும் அறியாமல் என்னுடைய கால்கள் லேசாக நடுங்குவதைப் பார்த்த தமிழரசி சட்டென்று கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். நெஞ்சின் மீது இருந்த கைகளை அப்பா அழுத்திப் பிடித்துக்கொண்டார். 

லிஃப்ட்டில் ஒன்பதாவது மாடிக்கு வந்தோம். லிஃப்ட்டை விட்டு வெளியே நாற்பது ஐம்பது அடி தூரம் வந்ததும் ஸ்ட்ரெச்சரைத் தள்ளுவதை நிறுத்திவிட்டு சீருடையிலிருந்தவர் மூடியிருந்த கதவைத் தட்டினார். அறுவைச் சிகிச்சை அறையில் இருக்கும் பெண்போல் உடை அணிந்திருந்த ஒருவர்கதவைத் திறந்து என்னுடைய கையிலிருந்த ஐ.டி. பேண்டை சரிபார்த்துவிட்டு, ‘‘ஃபைல் எங்க?” என்று சீருடை அணிந்திருந்தவரிடம் கேட்டார். 

‘‘ஸ்ட்ரெச்சருக்குக் கீழே மாட்டியிருக்கன் மேடம்.”

‘‘ஓகே” என்று சொன்னதும் அந்த ஆள் திரும்பிப் போய்விட்டார். இப்போது அந்தப் பெண் ஸ்ட்ரெச்சரைத் தள்ள ஆரம்பித்தார்.

மருத்துவமனைக்குள் நான் தமிழரசன் இல்லை ‘பேஷண்ட்'. எனக்கான அடையாளம் என்னுடைய பெயரோ உருவமோ இல்லை. 000123360 என்ற எண்தான். 

‘‘என்னமா இத்தன கேசுங்க வரிசயா நிக்குது?” என்று அப்பா வியப்பு மேலிடக் கேட்டார். ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டிருந்த பெண், ‘‘இன்னிக்கி வெள்ளிக்கிழம. முகூர்த்த தேதி. அதனால கேசுங்க அதிகம்” என்று சொன்னார்.

‘‘இத்தன கேசுக்குமா கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் நடக்குது?”

‘‘லிவர், கிட்னி, ஹார்ட் சர்ஜரின்னு இன்னிக்கி மட்டும் பதினாரு கேசுங்க இருக்கு.”

‘‘எல்லாம் ஒரே எடத்திலியேவா நடக்கும்?”

‘‘தனித்தனியாத்தான் நடக்கும்.”

ஸ்ட்ரெச்சர் இருபது முப்பதடி தூரம்தான் வந்திருக்கும். ஸ்ட்ரெச்சரைத் தள்ளுவதை அந்தப் பெண் நிறுத்திவிட்டார்.

‘‘வரிசயா நிக்குற ஸ்ட்ரெச்சரெல்லாம் உள்ளார போன பின்னாலதான் நாம போவ முடியுமா?”

‘‘ஆமாம்.”

இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். மீண்டும் அந்தப் பெண் ஸ்ட்ரெச்சரைத் தள்ள ஆரம்பித்தார். இருபது முப்பதடி தூரம்கூட ஸ்ட்ரெச்சர் வந்திருக்காது. அடுத்த ஒரு கதவு இருந்தது. ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டுவந்த பெண் கதவைத் தட்டியதும், அறுவைச் சிகிச்சை அறையிலிருப்பவர்கள் போட்டுக்கொண்டிக்கும் சீருடையில் இருந்த பெண் கதவைத் திறந்து கேட்டார். ‘‘பேஷண்ட் நேம் என்ன? ஐ.டி. நம்பர் என்ன?”

ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்த பெண் என் பெயரையும் எனக்கான அடையாள எண்ணையும் சொன்னார். சந்தேகப்பட்டது மாதிரி கேள்வி கேட்ட பெண் என்மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டுஎன்னுடைய கையில் போடப்பட்டிருந்த ஐ.டி. பேண்டைப் பார்த்தார். பிறகு, என்னுடைய ஃபைலை வாங்கிப் பார்த்தார். ‘‘ஓகே” என்று சொன்னார்.

‘‘நான் போவட்டுமா சிஸ்டர்?” என்று இதுவரை ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டுவந்த பெண் கேட்டார்.

‘‘ஓகே” என்று இரண்டாவது கதவிடமிருந்த பெண் சொன்னார். இரண்டாவது கதவிடமிருந்த பெண் ஸ்ட்ரெச்சரைத் தள்ளுவதற்கு முன், ‘‘வெளிய வெயிட் பண்ணுங்க, மைக்கில கூப்புடுவாங்க அப்ப வந்தா போதும்” என்று அப்பாவிடம் சொன்னார். அப்போது அப்பாவின் கை என்னை அழுத்திப்பிடித்ததும் தமிழரசி கால்களை அழுத்திப் பிடித்ததும் தெரிந்தது. அப்பாவை,தமிழரசியைப் பார்க்க முயன்றேன். முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டேன். ஒரே இருட்டாக இருந்தது. அந்தப் பெண் ஸ்ட்ரெச்சரைத் தள்ள ஆரம்பித்தார். ஸ்ட்ரெச்சரின் சக்கரங்கள் உருளும் சத்தம் சீராகக் கேட்க ஆரம்பித்தது. ஸ்ட்ரெச்சர் தரையில் போய்க்கொண்டிருப்பது தண்ணீருக்குள் போய்க்கொண்டிருப்பதுபோல் இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரே வெளிச்சமாக இருந்தது. மீண்டும் கண்களை முடிக்கொண்டேன். இருட்டாக இருந்தது!

நூல் விவரம்

இப்போது உயிரோடு இருக்கிறேன்
இமையம்
பக்கங்கள்: 256; விலை: ரூ. 345 
க்ரியா வெளியீடு
புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,  சென்னை - 600 041.
செல்பேசி: 72999-05950; மின்னஞ்சல்: creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in

 

இமையம்

இமையம், எழுத்தாளர். ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’ உள்ளிட்ட பல நாவல்கள், ‘மண் பாரம்’, ‘நறுமணம்’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.


3

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Gandharajan s   5 months ago

நாவலின் தலைப்பில் வாசகனுக்குச் சற்றேனும் ஆறுதல் இருப்பதாகப்படுகிறது...... ஒன்றுமே இல்லை.... எல்லாம் ஒருநாள் செல்லாத பணம் போல்தான்....... கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லையெனினும் அன்புருக ஒரே ஒருசொல்லையாவது உதிர்த்துவிட்டுப்போ... என்று உள்ளத்திடம் சொல்லிக்கொண்டே இருக்கும் ஐயாவின் எழுத்து.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுய பரிசோதனைபிரிவு 356தைவான் தனி நாடாக நீடிக்குமாநாடாளுமன்ற உரை அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைமார்க்ஸியர்விரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டிதற்கொலைமூட்டு வீக்கம்ஏழு மண்டேலாக்கள்செபிஇடதுசாரிகள்தேவை கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிதாமஸ் ஃப்ரீட்மன்திராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டனவா?பத்ரிஅருஞ்சொல் பேரறிவாளன் அற்புதம் அம்மாள்சமஸ் கல்யாணி அருஞ்சொல் பேட்டிநீதிபதி கே சந்துருபிஹாரில் புதிய கட்சிகள்தமிழர் பண்பாடு தமிழ்ப் பண்பாடுஐந்து மாநில தேர்தல்போர்கதைசொல்லல்thiruma interviewமுறையீடுஞாநிதெற்கிலிருந்து ஒரு சூரியன்ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டுசக்திதொல்லை தரும் தோள் வலி!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!