கட்டுரை, அரசியல், சட்டம் 4 நிமிட வாசிப்பு

எந்தச் சட்டம், யாருடைய ஆணை?

ப.சிதம்பரம்
24 Apr 2023, 5:00 am
0

ந்திய அரசமைப்புச் சட்டத்தை முழுதாக இயற்ற இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பிடித்தது, அது 1950 ஜனவரி 26இல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் – முழுமையானது அல்ல என்றாலும் – ஓரளவுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் உள்ள உறுப்பினர்களின் கூட்டு அறிவின் பலத்தால் அது உருவாக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா, பாபா சாஹேப் அம்பேத்கர்தான் என்று பெரும்பாலான மக்கள் அங்கீகரித்துள்ளனர். 

இந்தியக் குற்றவியல் சட்டங்களின் முதுகெலும்பாகத் திகழும் ‘இந்திய தண்டனைச் சட்டம்’ பிரிட்டிஷ் ஆட்சியில் 1860இல் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ்காரர்களால் இயற்றப்பட்ட பல அடிப்படைச் சட்டங்களால் பலமுறை சோதிக்கப்பட்டு பிறகே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அவை இடம்பெற்றுள்ளன; தேவைக்கேற்ப அவற்றில் பல திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. அந்தச் சட்டங்களுக்குத் துணை சட்டங்களாக ‘இந்திய சாட்சியச் சட்டம் 1872’, ‘குற்றவியல் சட்டங்கள் 1973’ சேர்ந்துள்ளன. இந்த மூன்று சட்டங்களுமே இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டவை, மாநில சட்டமன்றங்கள் இவற்றைத் திருத்தலாம், புதிய சட்டங்களை இத்தொகுப்பில் சேர்க்கலாம்.

சட்டம் - ஒழுங்கு என்றால் என்ன?  

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, குற்றவியல் சட்டமும், குற்றவியல் சட்ட நடைமுறையும் ஏழாவது அட்டவணையின் பொது அதிகாரப் பட்டியல் என்று அழைக்கப்படும் - மூன்றாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ‘பொது ஒழுங்கு’ என்பது (சட்டம் – ஒழுங்கு சேர்ந்து) மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் அதாவது இரண்டாவது பட்டியலில், சேர்க்கப்பட்டிருக்கிறது. ‘பொது அமைதி’ என்பதைப் பராமரிக்க வேண்டிய நிர்வாக அதிகாரம், மாநில அரசுகளுக்கே (அரசியல் சட்டக்கூறு 162) தரப்பட்டிருக்கிறது.

சட்டத்தை அமல் செய்யும் அதிகாரத்தை, அதாவது சட்டத்தைப் பயன்படுத்துவதை, சட்டம் மீறாமல் பார்த்துக்கொள்ளப்படுவதை, சந்தேகப்படும் நபர்களைக் காவலில் வைப்பதை, விசாரணை நடத்துவதை, நீதிமன்றம் முன் நிறுத்தி வழக்கு தொடுப்பதை, குற்றத்துக்கேற்ப தண்டிக்க வைப்பதை, தண்டனையை நிறைவேற்றுவதை – சட்டப்படியும் சட்டப்படியான உத்தரவுகள் மூலமும் மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

அரசே வழக்காடி - மத்தியஸ்தர் - நீதிபதி!

ப.சிதம்பரம் 17 Apr 2023

ஆனால், சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, ‘சட்டம் – ஒழுங்கு’ என்பதற்கு ஏறுக்கு மாறாக அல்லது விபரீதமாகப் பொருள்கொள்ளத் தொடங்கிவிட்டார்களா என்றே சந்தேகப்படத் தோன்றுகிறது. ‘சட்டம்’ என்றால் இயற்றப்பட்ட ஒன்று என்றில்லாமல், அமல் செய்கிறவர்கள் எதைப் புரிந்துகொண்டிருக்கிறார்களோ அல்லது எதைச் செயல்படுத்துகிறார்களோ அதுதான் ‘சட்டமா?’ என்ற கேள்வி எழுகிறது; அடுத்து ‘ஒழுங்கு’ என்றால் சட்டப்படியாக ஏற்படுத்தப்படும் ஒழுங்கு என்றில்லாமல், வாய்மொழியாகவோ அல்லது கண் ஜாடையாகவோ, அதிகாரத்தை மனம்போன போக்கில் கையாள்பவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப அமல்படுத்தப்படுவதா என்றும் ஐயமேற்பட்டுள்ளது. ‘சட்டம் – ஒழுங்கு’ என்று எப்போது பேசப்பட்டாலும், ‘எந்தச் சட்டம்?’, “யாருடைய (ஆணைப்படியான) ஒழுங்கு?” என்றே எனக்கு கேட்கத் தோன்றுகிறது.

உலகளாவிய கொள்கைகள்

உலகம் முழுவதுமே, ‘சட்டம்’ என்றால் இயற்றப்படுவது, தார்மிக நெறிகளைக் கொண்டது என்பதுதான் இயல்பு. உலக அளவில், ஜனநாயக நாடுகளில் – ‘சட்டம்’ என்றாலே இவற்றையெல்லாம் மீறக் கூடாது என்பது அனுமானமாகவே பின்பற்றப்படுகிறது:

  • குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரையில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரும் நிரபராதியே (குற்றமற்றவரே).
  • சட்டம் வகுத்துள்ள நடைமுறைகளின்படி அல்லாமல் (இந்தியாவில் அரசியல் சட்டக்கூறு 21) எந்த வகையிலும் ஒருவருடைய வாழும் உரிமையையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது.
  • குற்றவியல் சட்டங்கள் என்பவை எழுதப்பட்ட சட்டங்கள்: குற்றங்கள் எவை என்று அவை விவரிக்கும், குற்றம் தொடர்பான புகார்களை எப்படிப் பதிவுசெய்ய வேண்டும், எப்படி வழக்காட வேண்டும், குற்ற விசாரணை எப்படி நடைபெற வேண்டும், தண்டனைகள் என்ன என்று அதில் இடம்பெற்றிருக்கும்.
  • தகுதிவாய்ந்த நீதிமன்றத்தில், வெளிப்படையான விசாரணையில், வழக்கு நடத்தப்பட வேண்டும்.
  • குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, குற்றமற்றவர் என்று தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், வழக்கில் தானாயோ, தன் சார்பில் ஒருவரை நியமித்தோ வழக்காடவும் உரிமை உண்டு.
  • அரசுத் தரப்பில் வழக்கைத் தொடுப்பவர் நீதிமன்ற அதிகாரியாவார் (பிராசிகியூட்டர்); விசாரணை முகமைக்கு மட்டுமல்ல - குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் சாதகமாக உள்ள அனைத்து அம்சங்களையும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தாக வேண்டும்.
  • குற்றஞ்சாட்டப்பட்டவர் தவறு செய்திருக்கிறாரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு மட்டுமே உண்டு, ‘குற்றவாளி’ என்றால் குற்றத்துக்கேற்ற தண்டனை விதிக்கவும் அவர் அதிகாரம் பெற்றவர்.

சட்டப்படியான ஆட்சி நாடா?

இப்படி உலகம் முழுவதற்குமே பொதுவான சட்ட வரையறைகள் பின்பற்றப்படவில்லை என்றால், அந்த நாட்டை ‘சட்டப்படியான ஆட்சி நடக்கும் நாடு’ என்று அழைக்க முடியுமா? ஆனால் சில நாடுகள் இருக்கின்றன, ‘வழக்கில் சிக்கவைக்க விரும்பும் ஆளைக் காட்டு – அவருக்கேற்ற சட்ட விதியை நான் காட்டுகிறேன்’ என்று கூற! அப்படிப்பட்ட ஆட்சியமைப்பில் ‘சட்டப்படியான ஆட்சி’ நடப்பதில்லை, எதிராளியை அடக்குவதற்காகவே ‘சட்டத்தைப் பயன்படுத்தும் ஆட்சி’ முறைதான் நடைமுறையாக இருக்கும்; ஆனாலும் ‘சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்பார்கள், அவர்களுக்கு அது போதும்.

அப்படிப்பட்ட ஆட்சியமைப்பில் சட்டமானது ஆளாளுக்கு மாறுபடும், வழக்குக்கு வழக்கு மாறும், அவ்வளவு ஏன் - நேற்று கடைப்பிடிக்கப்பட்ட சட்டம் நாளை கடைப்பிடிக்கப்பட மாட்டாது! ‘சட்டப்படியான ஆட்சி’ என்பதற்கும் ‘ஆட்சிக்காகவே சட்டம்’ என்பதற்குமான பெருத்த வேறுபாடு, பார்த்தாலே தெரிந்துவிடும்; இருந்தாலும் அந்த வித்தியாசத்தை வேண்டுமென்றே பார்க்க மறுக்கின்றனர் அல்லது பார்ப்பதற்குள் அழித்துவிடுகின்றனர். சட்டத்தையே மீறும் ஆணை என்றால் – அப்படியும் உண்டு – சட்டத்தைத் தவறாக அமல்படுத்தும் அதிகாரிகள் ஜெர்மனியின் நாஜி ஆட்சியில் செயல்பட்ட அடால்ஃப் ஐக்மேனைப் போல, ‘மேலிடத்து உத்தரவு என்றால் உத்தரவுதான்’ என்று அமல்படுத்துகிறார்கள்.

தண்டிக்கப்படாத செயல்கள்

சட்டப்படியான மெய்யியல் பற்றி இது போதும்; யதார்த்தமான உண்மைகளுக்கு வருவோம்.

  • பேலு கான் என்ற பால் வியாபாரி, ஒரு சந்தைக்கு கால்நடைகளை வேனில் ஏற்றிச் செல்கிறார். ஜெய்ப்பூர் – தில்லி நெடுஞ்சாலையில் பசு குண்டர்கள் வழிமறித்து அவரைத் தாக்குகின்றனர். அந்தத் தாக்குதல் காணொலியாகப் படம் பிடிக்கப்படுகிறது. மருத்துவமனையில் பேலு கான் இறந்துவிடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தேகத்தின் பலனை அளித்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். சில நிமிஷங்களுக்குப் பிறகு அவர்களுடைய ஆதரவாளர்கள், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிடுகின்றனர்.
  • ஒடிஷா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கட், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கிறிஸ்தவர்களின் தேவாலயங்களும் வழிபாட்டிடங்களும் தாக்கப்படுவதாக ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின்றன. உத்தர பிரதேசத்தில் ‘மதமாற்றத் தடைச் சட்டம் 2020’ இயற்றப்பட்ட பிறகு, ‘மதம் மாற்றியதாக’ 507 பேர் மீது வழக்குகள் பதியப்படுகின்றன, ஆனால் வழக்கு நடத்தி இதுவரையில் ஒருவரையும் தண்டிக்கவில்லை.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஜனநாயகக் காவலருக்கான காத்திருப்பு

ப.சிதம்பரம் 09 May 2022

  • இந்து மதப் பெண்களை முஸ்லிம்கள் காதல்செய்து கவர்ந்திழுத்து மதம் மாற்றிவிடுவதாக – ‘லவ் ஜிகாத்’ என்று அதற்குப் பெயரிட்டு – பல மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. உள்துறை இணையமைச்சர் இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கையில், ‘லவ் ஜிகாத்’ என்பதற்கு இந்தியச் சட்டத்தில் விளக்கம் இல்லாததால், அப்படிப் பதிவான வழக்குகள் குறித்து மத்திய விசாரணை முகமைகளிடம் தகவல்கள் இல்லை என்கிறார். 2022 டிசம்பரில் விசுவ இந்து பரிஷத் அமைப்பு ‘லவ் ஜிகாத்’ வழக்குகள் என்று நானூறுக்கும் மேற்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு பட்டியலை வெளியிடுகிறது.
  • பல வழக்குகளில், ‘குற்றவாளி’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட அதீக் அகமது, இந்த ஆண்டு மார்ச் 26இல் நிருபர்களைச் சந்தித்தபோது, ‘காவல் துறையுடனான போலி மோதலில் நான் கொல்லப்பட்டுவிடுவேன்’ என்று உரத்து அறிவிக்கிறார். ஏப்ரல் 16இல் அதீக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும், அலாகாபாத் (புதிய பெயர் பிரயாக்ராஜ்) நகர மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மூன்று இளம் வாலிபர்களால் மிகவும் அருகிலிருந்து துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். கொன்றவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கிவிட்டு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு காவல் துறையினரிடம் சரண் அடைகின்றனர். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அதீக் அகமதின் மகன், உத்தர பிரதேச காவல் துறையினருடனான ‘போலி மோதலில்’ சுட்டுக்கொல்லப்படுகிறார். உத்தர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தில் நடைபெறும் 183வது ‘போலி மோதல்’ அது என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. ‘கடவுள் நீதி வழங்கிவிட்டார்’ என்று பலர் இது குறித்து கருத்தும் தெரிவித்துள்ளனர்!
  • இப்படித் தாக்குதல் நடத்தவும், கொல்லவும், சட்ட விரோதமாக நடக்கவும் எந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது? யாருடைய ஆணைப்படி அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன, காதலிக்கும் இணையர்கள் மீது வழக்குகள் பதியப்படுகின்றன? சட்டப்படியான ஆட்சி என்பதை தலைகீழாகக் கடைப்பிடிக்கும் இந்த நிகழ்வுகளின்போது, பாரத மாதாவையும் கடவுள் ராமரையும் கோஷமிட்டு ஏன் இழுக்க வேண்டும்?

 

தொடர்புடைய கட்டுரைகள்

அரசே வழக்காடி - மத்தியஸ்தர் - நீதிபதி!
வெறுப்பரசியலைத் தடுப்பதில் உங்கள் பங்கு என்ன?
ஜனநாயகக் காவலருக்கான காத்திருப்பு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





விதிகள்மாநில வளர்ச்சிதிரைப்படக் கல்வியாளர்கூட்டுப் பாலியல் வன்புணர்வுபழங்குடிக் குழுக்கள்விலையில்லா மின்சாரம் அன்றும் இன்றும்hindu samasஅடல் பிஹாரி வாஜ்பாய்மாயக் குடமுருட்டிகாவிரி வெறும் நீரல்லபொன்னிக் கரையில் பெண்கள் திருவிழாதேசியத்தின் அவமானம்பொதுவுடமை இயக்கம்கட்டுரைகள்நுரையீரல் அடைப்பது ஏன்?இந்தி மாநிலங்கள்சகோதரத்துவம்சாதி வாக்குகள்அறுவடைசட்ட நிபந்தனைகள்கன்னிமாரா நூலகம்இறுதியில் நீதியே வெல்லும்சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?எழுத்தாளர் கி.ரா.இந்துத்துவ நாயகர்போராட்டம் என்றாலே வன்முறை?சாதியற்ற சமூகம்நவீன இந்திய சிற்பிகள்கிகாகுமன்மோகன் சிங்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!