கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு

ஜனநாயகக் காவலருக்கான காத்திருப்பு

ப.சிதம்பரம்
09 May 2022, 5:00 am
1

சுதந்திர மனிதனாகத்தான் பிறந்தேன் என்று நம்புகிறேன். வெஸ்ட்மின்ஸ்டர் (பிரிட்டிஷ்) ஜனநாயகம் உள்ள நாட்டிலோ, சோவியத் பாணி மையப்பட்ட அதிகார அரசுள்ள நாட்டிலோ, எப்போதும் பூசலும் அமளியும் நிறைந்த முழுமையான சர்வாதிகார நாட்டிலோ பிறப்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும்கூட, இந்த நாட்டில் பறிக்க முடியாத அடிப்படைக் குடியுரிமைகள் சிலவற்றுடன் பிறந்தேன் என்றே நம்புகிறேன்.

என்னுடைய உடலை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்கிற சுய உரிமை, விரும்பிய இடங்களுக்குச் சென்றுவரும் உரிமை, பேச்சு – எழுத்து சுதந்திர உரிமை, என்னுடைய சக குடிமக்களுடன் இணைந்து சங்கங்களை அமைத்துக்கொள்ளும் உரிமை, எனக்காக – என்னுடைய குடும்பத் தேவைகளுக்காக உழைக்கும் உரிமை ஆகியவை தனியுரிமையில் சில.

அரசு என்பது மக்கள் தாங்களாகக் கூடி அமைத்துக்கொள்ளும் அமைப்பு என்பதைத் தாண்டி வேறல்ல. குடிமக்களாகச் சேர்ந்து தங்களுக்கென்று சில சட்ட திட்டங்களை வரையறுத்து அதைச் சாசனமாக அளித்துக்கொள்ளும்போது அதுவே அரசின் அரசமைப்புச் சட்டமாகிவிடுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டதையும் மீறி வேறெதையும் தன்னுடைய உரிமையாகவோ, அதிகாரமாகவோ, கடமையாகவோ அரசால் வலியுறுத்த முடியாது. அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுக்கும் குடிமகன் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாட்டின் குடிநபராகலாம் – அந்த நாடு அவரை ஏற்றுக்கொண்டால்!

முற்றிலும் விவேகமுள்ள ஏற்பாடு

பொதுவாக, அரசும் குடிமக்களும் இத்தகைய விவேகமான ஏற்பாட்டில் இணைந்து ஒத்திசைவுடன் வாழ வேண்டும். ஆனால், இதில் பின்வரும் சூழல்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தை அல்லது வாக்கியம் தொடர்பான புரிதலில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், அதைப் பற்றிய விளக்கமளித்தலில் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்கு விளக்கம் அளிக்கும் உரிமை நீதித் துறைக்கே உண்டு. அதுதான் நீதி வழங்கலுக்கான அனைத்து அதிகாரமும் பெற்றுள்ள அமைப்பு. ஆனால், அது தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்துவது சட்டமியற்றும் மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற அவை அல்லது அவைகள். இவைதான் சட்டமியற்றுவதற்கான அதிகாரம் பெற்றுள்ள ஒரே அமைப்பு. நீதிபதிகள் பெரும்பாலும் நியமன அடிப்படையில்தான் பதவி பெறுகிறார்கள் - எனினும் அந்த நியமனப் பொறுப்பு அரசுக்கே உரியது.

இப்படிப்பட்ட நிர்வாக ஏற்பாட்டில் - எழுதப்பட்ட வார்த்தைக்கும் அதன் பொருளுக்கும் இடையில் மாறுபாடுகள் இருப்பதாக - மோதல்கள் வெடிப்பது உண்டு. சில வேளைகளில், சட்டமியற்ற அதிகாரம் பெற்ற மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பும் நீதித் துறையும் இந்த விளக்கங்களில் கருத்து மாறுபாடுகள் கொள்வது உண்டு. அப்படிப்பட்ட தருணங்களிலும் அந்தக் கருத்து வேறுபாடுகளை நடுநிலையோடு அமர்ந்து பேசி சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதில்தான் முதிர்ச்சி பெற்ற நாகரிகமான நாடுகளுக்கும் பிறவற்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அமெரிக்க விவாதம் 

அப்படியொரு சந்தர்ப்பம் அமெரிக்க நாட்டில் 1973இல் ஏற்பட்டது. நீதிபதிகள் மக்கள் பக்கம் நின்று, பெண்களுடைய அந்தரங்க உரிமைகளை ஆதரித்து தீர்ப்பு வழங்கினர். ‘ரோ எதிர் வேட்’ வழக்கில், கருத்தடை செய்துகொள்ளும் உரிமை, கருவுற்ற தாய்க்குள்ள தன்னுடைய உடல் தொடர்பான அந்தரங்க உரிமை என விளக்கம் அளித்தனர்.

அதேபோல வேறொரு விஷயத்தில் இந்தியாவில் 1976இல் மோதல் ஏற்பட்டது. அன்றைக்கிருந்த அரசின் பக்கம் நீதிபதிகள் நின்றனர். அப்படிச் செய்ததன் மூலம் வாழ்வதற்கான மக்களுடைய உரிமைகளைக்கூட அவர்கள் இரண்டாம் பட்சமாக்கி மக்களுடைய நலனைக் கைவிட்டனர். அது ‘ஏ.டி.எம். ஜபல்பூர் எதிர் எஸ்.எஸ். சுக்லா’ வழக்கு.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள் அல்லது புதைத்துவிடுங்கள் 

‘ரோ எதிர் வேட்’ வழக்கில், ஒரு தாய் தன்னுடைய கருவைச் சிதைக்கும் உரிமை தொடர்பாக சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதே கேள்வி. அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிநபருக்கும் தன்னுடைய அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அந்த உரிமைப்படி, ஒரு கருவை வளர அனுமதிப்பதா அல்லது சிதைத்துவிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தக் கருவைச் சுமக்கும் தாய்க்கு இருக்கிறது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேசமயம் பெண்ணின் அந்தரங்க உரிமைக்கு ஈடாக, அரசின் நலனைக் காக்கும் கடமையும் அரசமைப்புச் சட்டத்துக்கு இருக்கிறது. கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்குள் கருவைச் சிதைத்துக்கொள்ள தாய்க்கு உரிமை உண்டு. மூன்று மாதங்களுக்குப் பிறகு கருவறைக்கு வெளியிலும் கருவின் வளர்ச்சி விரிவுபடுவதால் பிறகு அது குழந்தையாக பிறக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் அரசுக்குள்ள பொறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று தீர்மானித்தது.

‘ரோ எதிர் வேட்’ வழக்கானது அமெரிக்கர்களிடையே அதுவரை இருந்திராத வகையில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி பிளவுபடுத்தியது; சமீப காலத்தில் - டொனால்ட் ட்ரம்ப் அதிபராகி வெவ்வேறு பிரச்சினைகளில் அமெரிக்கர்களைப் பலவாறாகப் பிளவுபடுத்தியது வேறு கதை!

‘ரோ எதிர் வேட்’ வழக்கில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு இனி ரத்துசெய்யப்பட்டுவிடும் 

உச்ச நீதிமன்றத்தின் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள் பழைய தீர்ப்புக்கு எதிராகக் கருத்து கொண்டிருக்கிறார்கள் என்றொரு தகவல் எப்படியோ கசிந்து, இப்போது அமெரிக்கா முழுவதும் பற்றி எரிகிறது. வழக்கில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் தவறானது, அப்படித் தீர்ப்பு வழங்கக் கூறப்பட்ட காரணங்கள் மிகவும் வலுவற்றவை, அந்த முடிவால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் மோசமானவை என்கிற கருத்து இப்போதுள்ள அமர்வில் பெரும்பாலான நீதிபதிகள் இடையே ஏற்பட்டிருக்கிறது.

‘ரோ எதிர் வேட்’ வழக்கின் முந்தைய தீர்ப்பு மட்டும் ரத்துசெய்யப்பட்டால் இனி அது அமெரிக்காவின் குழந்தைப் பிறப்புகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன்பாலினத் திருமண உறவுகளையும் கடுமையாக பாதிக்கும். குடிமக்களின் தனியுரிமையை விரிவுபடுத்தவும் கட்டுப்படுத்தவும் வல்லது என்கிற வகையில் நீதித் துறை அதிகாரம் பெற்றது.

நாடு காத்திருக்கிறது

மக்களுடைய குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் சில முக்கிய வழக்குகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் காத்துக்கிடக்கின்றன அவற்றில் சில:

பணமதிப்பு நீக்க வழக்கு: புழக்கத்தில் உள்ள செலாவணியில் 86 சதவீதத்தை, போதிய முன்னறிவிப்பின்றி செல்லாது என்று ஒருதலைப்பட்சமாக அரசு அறிவிக்க முடியுமா? அப்படிச் செய்ததன் மூலம் உணவு, மருந்து - மாத்திரைகள்கூட வாங்க முடியாமல் மக்களைச் சில நாள்களுக்குத் தவிக்கவிட்டது சரியா?

தேர்தல் நன்கொடைப் பத்திர வழக்கு: யார் தருகிறார்கள் என்று மக்கள் அறிய முடியாமலும் - வரம்பின்றியும் அரசியல் கட்சிகளுக்குப் பெரு நிறுவனங்கள் (வருமானமே இல்லை - இழப்புதான் என்றாலும் வழங்கலாம் என்கிற அனுமதியுடன்!) நன்கொடைப் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஆளுங்கட்சிகளுக்குப் பணம் தர அனுமதித்து, அதன் மூலம் சலுகைசார் முதலாளித்துவத்தையும் ஊழலையும் ஊக்குவிப்பது சரியா?

கோவிட் பெருந்தொற்று கால பொது முடக்கம்: கோவிட் பெருந்தொற்று ஆரம்பக் காலத்தில் மக்களுக்குப் போதிய அவகாசம் தராமல் - தொழில், வியாபாரம், போக்குவரத்து என அனைத்தையும் முடக்கி, மக்களுடைய அனைத்துவித நடமாட்டங்களையும் நிறுத்திய பொது முடக்க அறிவிப்பை அரசு அறிவித்தது சரியா? கோடிக்கணக்கான மக்கள் - அதிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் - தங்குவதற்கு இடமில்லாமலும் உணவு, குடிநீர், மருந்துகள், செலவுக்குப் பணம் இல்லாமலும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப வழியில்லாமலும் மனிதாபிமானமற்று தவிக்கவிடப்பட்டது சரியா?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது கூறு ரத்து: இந்திய ஒன்றியத்துடன் முறையான உடன்படிக்கை மூலம் இணைந்த காஷ்மீர் மாநிலத்தை, மக்களுடைய சம்மதம் இல்லாமலும் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமலும் மத்திய ஆட்சிக்குள்பட்ட இருவேறு பகுதிகளாக உடைக்கவும், மாநிலம் என்கிற அந்தஸ்தைக் குறைக்கவும் முடியுமா?

தேச விரோதம்: அரசை எதிர்த்தோ அல்லது ஏகடியம் செய்தோ கருத்து தெரிவிப்பவர்கள் மீது - இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 124ஏ பிரிவின் கீழ் – தேசத் துரோகக் குற்றம் செய்துவிட்டதாக குற்றம் சுமத்த முடியுமா?

போலி மோதல்களும் புல்டோசர் இடிப்புகளும்: மக்களுடைய எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் போலி மோதல்கள் மூலமும் புல்டோசர்களைவிட்டு வசிப்பிடங்களையும் வர்த்தக நிறுவனங்களையும் இடித்துத் தள்ளியும் ஒடுக்குவது சரியா?

இந்திய அரசின் அடித்தளமாக இருக்கும் அடிப்படை ஜனநாயகக் கூறுகளைத் தாக்க திட்டமிட்டும், உறுதியாகவும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. மக்களிடமிருந்து பிரிக்க முடியாத உரிமைகளையும் சுதந்திரத் தன்மைகளையும் அவர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, கள்ளத்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரிகைச் சுதந்திரத்துக்கான உரிமை அட்டவணையில் 2022இல் இந்தியா 180 நாடுகளுக்கிடையில் 150வது இடத்துக்கு சரிந்துவிட்டது. விழிப்புணர்வும் பொறுப்பும் உள்ள மக்கள் தொடர்ந்து, ‘ஜனநாயகத்தின் விழிப்புணர்வு மிக்க காவலரான’ உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியபடியே இருக்கிறார்கள். மக்களுடைய தனியுரிமைகள் தங்களுக்கான ரட்சகருக்காகக் காத்திருக்கின்றன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

தற்போது உள்ள ஆட்சியில் அவர்களே (நீதிபதிகளே) ரட்சகர் வர காத்திருக்கும் நிலையில்.................

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அம்பானி – அதானிமழைநீர் வெளியேற்றம்இந்திஇந்து மகா சபாபிரதம மந்திரிஹிண்டன்பெர்க்பைஜுஸ்பிராணர் – பிராமணரல்லாதோர் பிளவைக் கூர்மைப்படுத்துகவி.ராம்கோபால் ராவ் கட்டுரைபெரியாறு அணைரத்னகிரிவளரிளம் பருவம்அருஞ்சொல் ப.சிதம்பரம் பேட்டிசாவர்க்கர் அந்தமான் சிறைகொலஸ்ட்டிரால்மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி வழங்கலை சீர்திருதபார்வைஉறுப்பு தான அட்டைஎடப்பாடி கே.பழனிசாமிரத்த தானம்மார்க்கண்டன்பெண்களின் வெயிட்டிங் லிஸ்ட்தொலைத்தொடர்புமுன்விடுதலைதனிமங்கள்Tiruppurதிராவிட அரசியலின் இனவாதம் - ஒரு எதிர்வினைதேசிய பால் துறைபிரதமர் வேட்பாளர்தேசிய குடிமக்கள் பதிவேடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!