கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

அச்சத்தில் அரசு

ப.சிதம்பரம்
10 Oct 2022, 5:00 am
1

ந்திய ரிசர்வ் வங்கிக்கு பெரிய ஏமாற்றம்; 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 16.2%ஆக இருக்கும் என்று, தான் மதிப்பிட்டதைப் போல அல்லாமல், 13.5%ஆகக் குறைந்துவிட்டதே என்று, எஞ்சிய மூன்று காலாண்டுகளுக்கு இந்த வளர்ச்சி வீதம் 6.3%, 4.6%, மீண்டும் 4.6%ஆகவே இருக்கும் என்று இப்போது மதிப்பிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக சராசரி வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று அது எதிர்பார்ப்பது கவனத்துக்குரியதாக இருந்தாலும், உண்மையான பொருளாதார வளர்ச்சி இந்த சராசரியில் இல்லை - வளர்ச்சி வேகம் எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு காலாண்டுக்குப் பிறகும் வளர்ச்சி வேகம் குறைந்துகொண்டே போகப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ‘வர்த்தகம் – வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாடு’ (UNCTAD) என்ற அமைப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022இல் 5.7%ஆகவும் 2023இல் 4.7%ஆகவும்தான் இருக்கப்போகிறது என்கிறது. 

இப்படி ஏற்கெனவே நடந்திருக்கிறது. 2016இல் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 2016-17, 2017-18, 2018-19, 2020-21 ஆகிய நிதியாண்டுகளில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி, முறையே 8.26%, 6.80%, 6.53%, 4.04%, -7.25% (எதிர்மறை) என்று குறைந்தது.

அதேபோல, 2017-18 நிதியாண்டின் நாலாவது காலாண்டுக்குப் பிறகு வளர்ச்சி வீதம் 8.93%, 7.56%, 6,49%, 6.33%, 5.84% (2018-19), 5.39%, 4.61%, 3.28%, 3.01% (2019-20). இந்தப் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து நோக்கினால் தொடர்ச்சியாக நான்கு நிதியாண்டுகளிலும் எட்டு காலாண்டுகளிலும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்திருப்பது புலப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் பாடம்

வலுவான பொருளாதாரக் கொள்கை என்பது எப்போதுமே உடன் கூறப்படும் வாக்கியங்களிலிருந்து புரிந்துகொள்ளப்பட வேண்டும். தாராளக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும்போது சந்தைப் பொருளாதாரமானது நிலையான வளர்ச்சி பெறும், பிற அம்சங்கள் சூழ்நிலைக்கேற்ப இதில் கோக்கப்பட வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ் இந்தப் பின்புலத்தை விளக்கியிருக்கிறார்: “கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகமானது இரண்டு பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொண்டது. முதலாவது கோவிட்-19 என்ற பெருந்தொற்று அடுத்ததாக உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் ராணுவத் தாக்குதல். மூன்றாவதாக, நாம் மிகப் பெரிய அதிர்ச்சியை - சூறாவளியைச் சந்திக்கவிருக்கிறோம். தொழில்வள நாடுகளின் கடுமையான பணக் கொள்கைகளும், அவற்றின் மத்திய (ரிசர்வ்) வங்கிகளால் அதைவிடத் தீவிரமாக மேற்கொள்ளப்படவிருக்கும் வட்டிவீத உயர்வு உள்ளிட்ட கொள்கைகளும்தான் அவை.”

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா திகழும் நேரத்தில், உலக அளவிலான வர்த்தகத்துக்கு அமெரிக்காவின் செலாவணியான டாலரே பிரதானமானதாகக் கையாளப்படும் நிலையில், விவேகமான முடிவு எதுவென்றால் – ‘தலைவனைப் பின்பற்று’ என்பதுதான். அமெரிக்க நாட்டின் பணவீக்க விகிதம் இப்போது 8.3%ஆக இருக்கிறது. இதைச் சீராக்கும் வரையில் வட்டி வீதத்தைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே இருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கி.

இந்திய ரிசர்வ் வங்கி 2022 செப்டம்பர் மாதத்துக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் ‘பொருளாதார நிலை’ விவரிக்கப்பட்டிருக்கிறது.

அதன் அறிமுகம் இப்படித் தொடங்குகிறது: “நாம் இப்போது ஒன்றுக்கொன்று முரணான சாத்தியங்கள் உள்ள காலத்தில் வாழ்கிறோம். உயர்ந்துவிட்ட பணவீக்க விகிதம் – பொருளாதார மந்தநிலையும் உயரக்கூடிய ஆபத்து: பொருளாதார மந்த நிலை – அதிகரித்துவரும் கடன் சுமை: வலுவாகிக்கொண்டே வரும் அமெரிக்க டாலரின் செலாவணி மதிப்பு – உலகின் பிற நாடுகளின் செலாவணிகள் மதிப்பில் சரியும் நிலை: பொருள் – சேவை ஆகியவற்றின் வழங்கலுக்கான சங்கிலித்தொடரில் இறுக்கம் தளர்தல் – வெளிநாடுகளில் நடத்திய தொழிற்சாலைகளை மூடிவிட்டு சொந்த நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்குதல்: அரசுகளின் கொள்கைகளை ஒருங்கிணைத்தல் – உலகளாவியக் கொள்கையைக் கைவிடுதல்: பற்று வரவில் இயல்பு நிலையைக் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்தல் – கடன் வழங்க முடியாத அளவுக்கு நிதியைப் பெறுவதில் அழுத்தங்கள்.”

நெஞ்சுரத்தை சோதிக்கும் சவால்கள்

ரிசர்வ் வங்கியின் அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல; அனைத்து நாடுகளுக்கும் பொருந்துவன. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் இந்த ஆபத்துகளுக்கேற்ப நடவடிக்கைகளை எடுக்காமல், அச்சத்தை மறைக்கும் வகையில் வீராப்பாகப் பேசுவதே கொள்கையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் அடுத்து நான் சுட்டிக்காட்டும் வெவ்வேறு துறைகளில் இந்த அரசு தனது செயல்பாடுகள் மூலம் தேறியிருக்கிறதா, தவறியிருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

பணவீக்கம் (விலைவாசி உயர்வு): ரிசர்வ் வங்கியின் நியதிப்படி பணவீக்க விகிதம் 4% அல்லது அதைவிட 2% குறைவாக இருக்க வேண்டும். சில்லறைப் பணவீக்க விகிதம் கடந்த 24 மாதங்களில் 6%க்கும் அதிகமாகவே தொடர்ந்தது. மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் கடந்த 12 மாதங்களில் இரட்டை இலக்கங்களிலேயே தொடர்கிறது. 

இப்போதைய பணவீக விகிதங்கள்: நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் 7%, மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் 12.37%. பணக் கொள்கையை ஆராய நடந்த உயர்நிலைக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் தாஸ் வெளிப்படையாக உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார், “பணவீக்கம் அடுத்த இரண்டாண்டுகளில் எங்களுடைய இலக்குக்கு நெருங்கி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அதை உறுதியாக செயல்படுத்த முடியாத வகையில் பல்வேறு நிச்சயமற்ற அம்சங்களும் இருக்கின்றன.”

அது என்னவென்றால் பணக் கொள்கையை எவ்வாறு வலுவாகப் பயன்படுத்துவது என்பதில் நிதியமைச்சருக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவேதான் பணவீக்க அளவை நிர்வகிப்பதில் இலக்கை எட்டிவிட முடியாதபடிக்கு நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி)

வர்த்தகத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, முதல் காலாண்டில் 23.9 பில்லியின் டாலர்களாக இருக்கிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இது மதிப்பிடப்பட்டுள்ள ஜிடிபியில் 2.8%. ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதால்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்த வர்த்தகப் பற்றாக்குறை அளவு 149.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துவிட்டது. (ஆதாரம் – ஒன்றிய வணிகம் – தொழில் துறை அமைச்சகத் தரவுகள்). தங்கம் மட்டும் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. லாப – நஷ்டக் கணக்கில் பற்றாக்குறை 65.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

முதல் காலாண்டில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அதிகரித்த ஏற்றுமதி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சரியத் தொடங்கியது. அமெரிக்க டாலர் மதிப்பில் இவை 36.27 பில்லியன், 33.00 பில்லியன், 32.62 பில்லியன். இதே அளவில் ஏற்றுமதி குறைந்து – இறக்குமதி தொடர்ந்து அதிகரித்தால், வெளிவர்த்தகப் பற்றாக்குறை மட்டுமே ஒட்டுமொத்த ஜிடிபியில் 3% என்ற அளவையும் தாண்டி 3.4% என்ற அளவுக்குக்கூட சென்றுவிடும்.

ரூபாய் - டாலர் செலாவணி விகிதம்

நிதியாண்டின் தொடக்கத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாயின் மதிப்பு 75.91ஆக இருந்தது. கட்டுரை எழுதிய தினத்தில் ரூ.81.94. 2022 ஏப்ரல் 1இல் இந்தியா வசம் இருந்த மொத்த அன்னியச் செலாவணிகளின் மதிப்பு 606 பில்லியன் டாலர்கள். செப்டம்பர் 30இல் அது 537 பில்லியன் டாலர்களாகச் சரிந்துவிட்டது. செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிடாமல் இருக்க, ரிசர்வ் வங்கி 69 பில்லியன் டாலர்களைச் செலவிட்டது, இருந்தும்கூட ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு ஆறு மாதங்களில் 8% குறைந்துவிட்டது.

இந்தியாவின் பேரியியல் பொருளாதார அடையாளங்களாக - குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி, அதிகமான பணவீக்கம், மோசமாகிக்கொண்டே வரும் வெளிவர்த்தகப் பற்றுவரவு, சரிந்துவரும் ரூபாயின் செலாவணி மதிப்பு ஆகியவை இருக்கின்றன. 

வரலாற்றில் உள்ளது பாடம்

இந்தியா இப்போது சந்தித்துவரும் சூழல் முன்னுதாரணம் அற்றது அல்ல. 2012-13லும் இதே நிலை இருந்தது. அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எடுத்த ‘பொருளாதாரத் தூண்டல் நடவடிக்கைகள்’ கைகொடுத்தன. அப்போதும் தங்க இறக்குமதி அளவு அபரிமிதமாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கித் தலைவர் பென் பெர்னான்கி வட்டி வீதத்தை அதிகப்படுத்தினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியைவிட்டு விலகிய 2013-14 நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1.7%ஆக குறைக்கப்பட்டது, நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 9.4%ஆக கட்டுப்படுத்தப்பட்டது (2014-15இல் அது 5.9%ஆக மேலும் குறைந்தது), அன்னியச் செலாவணி கையிருப்பு 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்தது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.58.4 ஆக இருந்தது. இதுதான் ‘அன்றைய வரலாற்றின்’ ஒரு பகுதி, வரலாற்றைப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இதில் பாடம் இருக்கிறது! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

உணவுதானிய பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தால் முக்கியமான பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கும். மற்ற பொருட்களின் விலையுயர்வு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அந்நியன்பேருந்துவைத் ராய் கட்டுரைபதிப்பாசிரியர்வர்ணங்கள்ஜான் க்ளாவ்ஸர்ஆழ்ந்த அரசியல் ஈடுபாடுநவதாராளமயம்முடக்கம்மோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்ரத்தக்குழாய்அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17மதிப்பு உருவாக்கல் (Value Creation)சௌத் வெஸ் நார்த்சுபஜீத் நஸ்கர் கட்டுரைஜெயமோகன்கூட்டாச்சிராஜாஜி சமஸ்உயர் வருவாய் மாநிலங்கள்இலவச பயணம்சிக்கிம் அரசுஅராத்துஇந்திய விவசாயம்முதல்வர் பிரேம் சிங் தமங்mk stalinதேர்தல் சீர்திருத்தம்செலின் மேரிவி.பி.சிங் சமஸ்விஜயகாந்த்குழந்தையின்மைப் பிரச்சினை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!