கட்டுரை, சட்டம் 7 நிமிட வாசிப்பு

நீதிபதிகளின் ஊர்மாற்றம் எழுப்பும் கேள்விகள்

கே.சந்துரு
13 Oct 2021, 5:00 am
12

ச்ச நீதிமன்றத்தின் முதல் மூன்று நீதிபதிகளை அடங்கிய கொலிஜியம், சென்ற மாதத்தில் ஏற்கனவே பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்றிவரும் 28 பேரை வேறு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக மாற்றும்படி ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை வழங்கியது. அதில் முதல் கட்டமாக 15 பேரையும், இரண்டாம் கட்டமாக 7 பேரையும் ஊர்மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. ஏனைய ஆறு பேருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. 

ஊர்மாற்ற இலக்கணம் என்ன?

அரசு ஊழியர்களாகப் பணிபுரிபவர்களை ஒரே இடத்தில் பணியாற்றவிடாமல் ஊர்மாற்றம் செய்வது உண்டு. ஆண்டு இறுதியில் தயார் செய்யப்படும் பட்டியலில் சேர்க்காமல் சில ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் ஊர்மாற்றம் செய்வதும் உண்டு. உள்நோக்கம் கொண்ட ஊர்மாற்றமாக இல்லாதவரை பணிமாறுதல் என்பது பழிவாங்குதல் ஆகாது என்றும், அரசு ஊழியர்களின் வேலை நிலைமைகள்படி அவர்கள் ஊர்மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் தொடர்ந்து கூறிவந்திருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பதும் (பிரிவு 214), அந்த நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை எப்படி நியமிக்க வேண்டும் என்பதும் (பிரிவு 217இல்) அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவரை ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்த பிறகு, அவரை வேறொரு மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக ஊர்மாற்றம் செய்வதற்குக் குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசிக்கலாம் என்று பிரிவு 212இல் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏதேனும் ஒரு நீதிபதியின் மீது புகார்கள் வரும் தருணத்தில் அந்த நீதிபதியை அம்மாநிலத்தை விட்டு வேறொரு மாநிலத்திற்கு ஊர்மாற்றம் செய்து அனுப்புவது எப்போதாவது ஒருமுறை நடைபெறலாம்.

ஒன்றிய அரசின் கொள்கை முடிவு  

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும், மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கருதியே வெளிமாநில நீதிபதிகளைக் கொண்டு நிரப்புவது என்று கொள்கை முடிவை ஒன்றிய அரசு எடுத்தது. நெருக்கடி நிலைமைக்குப் பிறகு (1975), ஒவ்வொரு மாநில நீதிமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளை வெளிமாநிலத்திலிருந்து ஊர்மாற்றம் மூலம் கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என்ற புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இம்முறைப்படி, 1994 முதல் முறையாக சென்னையிலிருந்து 5 நீதிபதிகள் மும்பை, கேரளா, பஞ்சாப், தில்லி உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டனர். அதேசமயத்தில், கர்நாடகாவிலிருந்து 4 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றதுடன், அதில் இரண்டு பேர் மூத்த நீதிபதிகளாக ஆனதில் கொலிஜியத்திலும் இடம்பிடித்தனர். இந்த ஊர்மாற்றக் கொள்கையினால் எவ்வித முன்னேற்றமு்ம் ஏற்படாததோடு, பல உயர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக்கப்பட்டது. 

இந்த ஊர்மாற்றக் கொள்கையினால் ஒருகட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பே (முதல் ஏழு நீதிபதிகள் நிர்வாகக் குழுவாக இருப்பார்கள்) வெளிமாநில நீதிபதிகளிடம் சென்றது. மூன்றில் ஒரு பங்கு வெளிமாநில நீதிபதிகள் என்ற ஊர்மாற்றக் கொள்கையை ஒருகட்டத்தில் ஒன்றிய அரசும், உச்ச நீதிமன்றமும் கைவிட்டுவிட்டது. இருப்பினும், சில தனிப்பட்ட நீதிபதிகளை அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லாவிட்டாலும் வேறு சொல்லப்படாத காரணங்களுக்காக வேற்று மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்வது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அவர்களது ஊர்மாற்றங்களுக்குக் காரணம் கூறப்படவில்லை எனினும் நீதிமன்றத் தாழ்வாரங்களில் ஊர்ப் பேச்சுக்களாக கதைக்கப்படும். ஓரிரு முறை பாதிக்கப்பட்ட நீதிபதிகள் ஊர்மாற்றத்தை எதிர்த்து வழக்குப் போட்டும் வெற்றி அடையவில்லை. 

பல கேள்விகளை எழுப்பும் ஊர் மாற்றம் 

ஊர்மாற்றக் கொள்கையை கைவிட்ட போதும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே 28 பேரை ஊர்மாற்றம் செய்ய பரிந்துரைத்ததும், அதில் பெரும்பாலானவர்களை ஊர்மாற்றம் செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டதும் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவின் ஒரு கோடியிலிருக்கும் உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு கோடியிலுள்ள உயர் நீதிமன்றங்களுக்கு ஏன் மாற்றம் செய்யப்படுகிறார்கள்? அதில் சிலருக்கு ஒரு வருடத்திற்குக் குறைவாகவே பதவிக் காலம் இருப்பினும் ஏன் இந்த ஊர்மாற்றம்? அவர்கள் மீது புகார்ப் பட்டியல் இருந்தால் ஏன் அதுகுறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை? ஏன் ஒரு சிலர் சிறிய நீதிமன்றத்திலிருந்து பெரிய நீதிமன்றத்திற்கும், வேறு சிலர் பெரிய நீதிமன்றத்திலிருந்து சிறிய நீதிமன்றத்திற்கும் ஊர்மாற்றம் செய்யப்பட்டார்கள்?

இதன் மூலம் சிலருக்குப் புதிதாக மாற்றத்தில் செல்லக்கூடிய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியலில் உயர் இடங்கள் கிட்டியதனால் கொலிஜியத்தில் இருப்பதற்கான வாய்ப்பையும், அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஊர்மாற்றம் / பதவி உயர்வு மூலம் செல்ல நேர்ந்தால் தற்காலிக தலைமை நீதிபதி பதவிப் பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். ஆனால், ஒரு சிலர் தாங்கள் பதவி வகிக்கும் நீதிமன்றத்தில் ஏற்கனவே பொறுப்பு தலைமை நீதிபதியாக செயலாற்றிவரும் நிலையில், புதிய நீதிமன்றத்தில் முதுநிலைப் பட்டியலில் மிகவும் கீழான ஒரு இடத்தைப்பெறும் சூழு்நிலை ஏற்பட்டுள்ளது. 28 பேர் ஊர்மாற்றப் பட்டியலில் இருந்தாலும், பணி அனுபவத்தின் அடிப்படையில் காணும்போது அதில் ஒரு சிலர் வெகுமதியும், ஒரு சிலர் தண்டனையும் பெறும் சூழ்நிலை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

இதையெல்லாம் தாண்டி பல மாநில உயர் நீதிமன்றங்களில் பாதிக்கும் மேற்பட்ட பணி இடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே இருப்பதனால், இந்த ஊர்மாற்றத்தினால் அம்மாநிலங்களில் நீதிமன்ற பரிபாலனம் குன்றக்கூடிய நிலை உள்ளது. மேலும்,  சிலரது ஊர்மாற்றங்களை உற்று நோக்கும்போது, சொந்த மாநிலத்தில் என்றைக்கும் முதுநிலையில் உச்சத்தை எட்ட முடியாதவர்கள் புதிய மாநிலங்களில் விரைவிலேயே தலைமைப் பொறுப்பை எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதற்கான சூழல் உருவாவதை அறிய முடிகிறது. மேலும், வடமாநிலங்களிலுள்ள (உ.பி., பீகார், பஞ்சாப், அரியானா) நீதிமன்றங்களிலிருந்து பலர் தென் மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்களில் ஊர்மாற்றம் மூலம் வருவதனாலும் விரைவிலேயே முதுநிலைப் பட்டியலில் உயர்ந்த கட்டத்தில் இருப்பதனாலும் அந்த உயர் நீதிமன்றங்களின் தலைமைப் பொறுப்பையும் பிடித்துக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது. ஆக, அண்ணா சொன்னதுபோல், ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!’ என்ற கூற்று உண்மையாக்கிறது.

இரு அதிகார மையங்கள்

நீதிபதிகளின் ஊர்மாற்ற முடிவில் இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. ஒன்று, உச்ச நீதிமன்ற கொலிஜியம். மற்றொன்று ஒன்றிய அரசை ஆளும் பெரும்பான்மையான அரசியல் கட்சி. இந்த இரண்டு தரப்பும் ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்றால், இரு தரப்புகளுக்கும் இடையே சுமுகமான சூழல் வேண்டும். இப்படியான சுமுக சூழல் உருவாகும்போது, சில  நேர்மையான நீதிபதிகள் பழிவாங்கப்படுவதற்கும், அரசை ஆதரித்தவர்கள் வெகுமதி பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பது கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி.

மாற்றம் செய்யப்படக்கூடிய நீதிபதிகளின் கருத்துகளை கேட்டாலும் அதனால் தங்களது முடிவை மறுபரிசீலிக்க வேண்டும் என்ற கட்டாயம் மாற்றுபவர்களுக்கு இல்லை. மேலும் தங்களது முடிவை மட்டுமே அவர்கள் வலைத்தளத்தில் பதிவுசெய்கிறார்களே ஒழிய, முடிவுக்கான அக மற்றும் புற காரணங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 28 பேருடைய வயது, நியமிக்கப்பட்ட தேதி, பணிபுரியும் நீதிமன்றத்தில் முதுநிலை, புதிதாக பதவியேற்கப்போகும் நீதிமன்றத்தில் பெறக்கூடிய முதுநிலை, அந்த நீதிமன்றத்தில் அவர்களுக்கு மேல் முதுநிலைப்பட்டியலில் உள்ள மூத்த நீதிபதிகள் ஓய்வுபெறும் தேதி இவற்றையெல்லாம் கணக்கிட்டால், இந்தப் புதிய ஊர்மாற்றம் பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கின்றது.

சென்னையின் நிலவரம்

முதலில் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தொடங்கலாம். தலைமை நீதிபதிக்கு அடுத்த அந்தஸ்தில் இருப்பவர் நீதிபதி டி.எஸ்.சிவஞானம். அவரை கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு ஊர்மாற்றம் செய்வதை எதிர்த்து இங்குள்ள வருமான வரி வழக்கறிஞர் சங்கம் மனு ஒன்றை அனுப்பியது. அதில் நீதிபதி சிவஞானத்திற்குக் கீழ் நீதிபதிகளாக இருப்பவர்கள் அதிக அனுபவம் இல்லாதவர்கள் என்றும், நீதிபதி சிவஞானம் பல வழக்குகளை பைசல் செய்வதனால் இந்த நீதிமன்றம் திறமையான நீதிபதியொருவரை இழந்துவிடும் என்றும் மனு அளித்தனர். ஆனால், உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தெலுங்கானாவில் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர் எம்.எஸ்.எஸ்.ராமச்சந்திர ராவ். அவர் திறமையான நீதிபதி மட்டுமல்ல. அவருடைய தந்தை, தாத்தா இவர்களெல்லாமும் நீதிபதி பதவிலிருந்து பெயர் பெற்றவர்கள். தெலுங்கானாவில் முதல் நீதிபதியாக இருக்கும் அவர் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் 9வது முதுநிலைப் பட்டியலில் இருக்கும்படி ஊர்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த தவறென்ன? ஏன் அவர் பழிவாங்கப்படுகிறார்? இதற்கு யாரும் காரணம் சொல்லப்போவதில்லை. 

அதேசமயத்தில் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் முதுநிலைப் பட்டியலில் முதலாவதாக இருப்பவர் நீதிபதி ஜஸ்வந்த் சிங். ஒடிஸா நீதிமன்றத்திற்குச் செல்லும் அவர், அங்கும் முதல் நீதிபதியாக இருப்பார். பஞ்சாப் நீதிமன்றத்தில் இரண்டாவதாக இருக்கக்கூடிய ராஜன் குப்தா, பாட்னா செல்கிறார். அங்கு அவர் முதல் மூத்த நீதிபதியாக இருப்பார். அதேபோல், பாட்னாவில் நாலாவது நீதிபதியாக இருந்த அசானுதீன் அமனுல்லா ஆந்திரப் பிரதேச நீதிபதியாக செல்கிறார்; அங்கு முதல் நீதிபதியாக அவர் இருப்பார். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் பாட்னாவில் தொடர்ந்து இருந்திருந்தால் இன்னும் இரண்டு வருடத்திற்கு முதுநிலைப் பட்டியலில் அதே நாலாவது இடத்தில்தான் இருந்திருப்பார். 

இப்படி குஜராத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்துள்ள உபாத்தியாயாவிற்கு இன்னும் ஒரு வருடம் ஐந்து மாதங்களே பதவிக் காலம் உள்ளது. குஜராத்தில் 6வது இடத்தில் இருந்த அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 4வது இடத்தில் இருப்பார். இப்படி சிலருக்கு முதுநிலையில் மூத்த ஸ்தானம் கிடைப்பதற்கும், இவர்களால் ஏற்கெனவே மூத்த ஸ்தானத்தில் இருந்தவர்கள் கீழே தள்ளப்பட்டிருப்பதற்கும் காரணம் என்னவென்று யாருக்கும் தெரியாது. 

அதைவிடக் கொடுமை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 160. அங்கு 68 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. இருப்பினும், அங்கிருந்து 5 நீதிபதிகள் ஊர்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் முதுநிலைப் பட்டியலில் முறையே 1, 22, 23, 44, 75 ஸ்தானங்களில் உள்ளவர்கள். இவர்கள் அநேகமாக ஊர்மாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிமன்றங்களின் முதுநிலைப்பட்டியலில் அதைவிட உயர்ந்த ஸ்தானத்தை எட்டிவிடுவார்கள். அலகாபாத்தில் வரிசை எண். 75இல் இருப்பவர் ஆந்திரப் பிரதேசத்தில் வெகு சீக்கிரத்தில் மூத்த நீதிபதியாக ஆகும் வாய்ப்புள்ளது. 

அலகாபாதின் முதல் நீதிபதியாக இருக்கக்கூடிய எம்.என்.பண்டாரி (இன்னும் அவருக்கு உத்தரவு வரவில்லை) சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஆரம்பத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு (5.7.20 07) அங்கிருந்து ஊர்மாற்றம் செய்யப்பட்டு அலகாபாத் (15.3.2019) சென்றார். அலகாபாதில் இருக்கும் அவரை சென்னைக்கு மாற்றம் செய்வதன் மூலம் அவர் சென்னையில் முதல் நீதிபதியாக இருப்பதுடன், இங்கிருக்கும் தலைமை நீதிபதியை ஊர்மாற்றம் செய்தால் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆகும் வாய்ப்பும் இருக்கிறது.

வட இந்தியர்கள் கை மேலோங்குகிறதா? 

இது இங்குள்ளவர்களிடம் - குறிப்பாக தென் இந்தியர்களிடம் - ஒரு சங்கடவுணர்வை உருவாக்கியிருக்கிறது. ‘இனி பல மாநில உயர் நீதிமன்றங்களிலும் வட மாநிலத்தவர்களே தலைமைப் பொறுப்பிலும், அதற்கு அடுத்த ஸ்தானங்களிலும் பதவி வகிப்பார்கள்’ என்பதே அது. ‘அரசியல் தளத்தில் ஒன்றிய அரசு இதன் மூலம் மறைமுகமாக மாநில அரசுகளை மிரட்டி வைப்பதுடன், தங்களது கொள்கைக்கு விசுவாசமானவர்கள் மூலம் பல வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்’ என்று அவர்கள் தெரிவிக்கும் அச்சத்தை அநியாயம் என்று எவரும் சொல்லிட முடியாது!  

உதாரணமாக, கல்கத்தாவிலிருந்து அரிண்டம் சின்ஹா ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கல்கத்தாவில் 6வது ஸ்தானத்தில் உள்ளார். சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த சில அமைச்சர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டபோது, அவர்களது பிணை மனுக்களை கல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி நடைமுறை விதிப்படி விசாரித்துவந்தார். வழக்கத்தை மீறி அவ்வழக்கை விசாரிப்பதற்கு அங்கிருந்த தலைமை நீதிபதி ஐந்து நீதிபதிகள் அமர்வொன்றை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டபோது, “இது நீதிமன்றத்தின் கௌரவத்தையே குலைக்கும் செயல்” என்றும், “இதன் மூலம் பிணை மனுக்களை ஐந்து நீதிபதிகள் விசாரிக்கும் நடைமுறை அனைவரையும் கேவலப்படுத்தும்” என்றும் தலைமை நீதிபதிக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியவர் இந்த அரிண்டம் சின்ஹா.  இப்போது பெரிய கல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து அவர் சிறிய ஒரிஸ்ஸா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதற்கான காரணத்தை ஊகிப்பது கடினமல்ல. 

இந்த 28 நீதிபதிகளின் ஊர்மாற்றப் பரிந்துரையும், அதை ஒன்றிய அரசு உடனே ஏற்றுக்கொண்டு ஆலோசனை வழங்கிய வேகத்தையும் பார்க்கும்போது இதற்கான காரணங்கள் அறிவிக்கப்படாவிட்டாலும், இதன் பின்னால் இருக்கும்  திரைமறைவு நடவடிக்கைகளை சாதாரண மக்கள்கூட ஊகித்துக்கொள்ளலாம். நீதித் துறையின் சுதந்திரத்தைக் காப்பதற்கு நியமனங்களையும், ஊர்மாற்றங்களையும் கொலிஜியம் நடைமுறை மூலம் நிர்வகித்துவரும் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவருகிறது. வெளிப்படையான அணுகுமுறை ஒன்றுக்கு மாறுவதே நீதித் துறை இத்தகுச் சூழலிலிருந்து விடுபட ஒரே வழி!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.



1





பின்னூட்டம் (12)

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

ஜனநாயகத்தின் தூண்கள் அரிக்கப்பட்டு கொண்டே இருப்பது வேதனையான செய்தி அய்யா.... பதிவுக்கு நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VELMURUGAN   3 years ago

ஐயா, இந்த கட்டுரை மிக பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 222ல் நீதிபதிகளின் ஊர்மாற்றம் பற்றி உள்ளது அது 212 என தவறாக பதிவாகி உள்ளது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

இரா.ப.இராக்கண்ணன்   3 years ago

வஞ்சிக்கப்படும் நீதிபதிகள் யாரிடம் போய் நீதியை தேடுவார்கள்...வேதனை...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

மன்னை. அரவிந்தன்   3 years ago

இந்த இடமாற்றம் பற்றிய செய்தியை படித்த போதே தோன்றிய ஐயத்தை தீர்த்து வைத்தது இந்த கட்டுரை! நன்றி

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Abdul Kareem   3 years ago

அய்யா! தங்களது கட்டுரைகளை இப்போதெல்லாம் தமிழ் இந்துவில் காண முடிவதில்லையே ஏன்?.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

Justice K. Chandru's article is justifiable on many counts; particularly the point of domination of Justices from north in the courts in southern part of India. This could be easily discerned from the approach of the present government at the Center in the matters of language, finance, employment, allocation of Corona vaccines etc. These are the different parts of the RSS's grand scheme of one India, one language, one religion and one culture.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Moorthy   3 years ago

BJP government thinks that we are all fools. People will teach a lesson in next election..

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

நீதிபதி எம்.எஸ்.எஸ்.ராமச்சந்திர ராவ் உட்பட்டவர்களுக்கு நேர்ந்தது நீதித்துறையையே நாணமுறச் செய்யும் இழிசெயல். அரசுத்துறைகளில் காணும் தான்-பிறர் அரசியல் நீதித்துறையிலும் களங்கம் ஏற்படுத்தத் துவங்கியிருப்பதைச் சகிக்க இயலவில்லை. தன் மொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி அசமத்துவத்திற்கான பாதையமைப்பதில் நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல போலும்!

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

நீதிபதிகளை நியமிக்கும் அமைப்புக்கு முன்னாள் நீதிபதிகளை நியமிக்கவேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Kolapppan   3 years ago

//‘அரசியல் தளத்தில் ஒன்றிய அரசு இதன் மூலம் மறைமுகமாக மாநில அரசுகளை மிரட்டி வைப்பதுடன், தங்களது கொள்கைக்கு விசுவாசமானவர்கள் மூலம் பல வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்’ என்று அவர்கள் தெரிவிக்கும் அச்சத்தை அநியாயம் என்று எவரும் சொல்லிட முடியாது! // //நீதித் துறையின் சுதந்திரத்தைக் காப்பதற்கு நியமனங்களையும், ஊர்மாற்றங்களையும் கொலிஜியம் நடைமுறை மூலம் நிர்வகித்துவரும் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவருகிறது.// There you go 🙌🙌!

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அறிவன்   3 years ago

கொலீஜியம் மேற்கொள்ளும் நியமணங்கள் பற்றி ஒன்றிய அரசே சிலகாலம் முன்னர் கொதிப்பு கொண்டிருந்ததாகவும் தலைமை நீதியரசரிடம் பேசியதாகவும் பேச்சுக்கள் நிலவிவந்த சூழலில் இப்போது ஒத்திசைந்து இரு அதிகாரமையங்களும் மாறளங்களைச் செய்கின்றன எனும்போது இதில் இயல்பாகவே கவனம் போகவேண்டும். அடித்துக்கொண்ட இருவர் ‘ஏலே, சமாதானம்லே’ என்றுவிட்டால் அடியோடுவது என்ன என்று கவனிக்கவேண்டும் என்பது இயல்புதானே? அதிலும் கட்டுரையாளர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எனும்போது?!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   3 years ago

அவசரநிலையைவிட மோசமாகவே இன்றைய ஆளும் பா.ஜ.க..அரசு செயல்படுகிறது....தனது கொள்கைகளுக்கு உடன்படாதவர்களை அதிலும் அவர்களே விரும்பாத இந்திய நீதித்துறையை பந்தாடுவது அவர்களுக்கு கைவந்த கலையே

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கர்நாடக இசைமையவாதம்அரவிந்தன்இந்திய அரசியலர்உடல் நலம்தேர்தல் வாக்குறுதிகளில் ‘இலவசம்’ கூடாதா?முகம் பார்க்கும் கண்ணாடிகிறிஸ்துமஸ்சமஸ் - விஜய்ஜீவா விருதுசபாநாயகர் அப்பாவு2024 மக்களவைத் தேர்தல்அ.முத்துலிங்கம் கட்டுரைகரன் தாப்பர் பேட்டிகால் புண்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்samas interviewமாநிலத் தலைகள்பைத்தியக்காரத்தனங்கள்சுசுகி நிறுவனம்சீர்திருத்த நடவடிக்கைசோமநாத்தொழில்நுட்பம்ஐக்கிய நாடுகள் சபைமாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிமனுஸ்மிருதிசமஸ் அருஞ்சொல் சென்னை புத்தகக்காட்சிகே.ஆர்.விஏகாதிபத்தியம்திரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!