கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்புகள்: மோடி அரசு செய்ய வேண்டியது என்ன?

ப.சிதம்பரம்
20 Jun 2022, 5:00 am
3

ரசு என்னை மிகவும் பெருமைப்படுத்தியிருக்கிறது நான் எழுதும் கட்டுரையைப் படித்ததன் மூலம். அதனால், வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்சினையாகிக்கொண்டேவருகிறது என்ற உண்மையை, ஒரு வழியாக ஒப்புக்கொண்டு ஒன்றிய அரசின் வேலைகளுக்கு இனி 10 லட்சம் பேர் வரையில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. மிகச் சில குடும்பங்களைத் தவிர, ஒவ்வொரு குடும்பமும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்தவர்களுக்கு உரிய புதிய வேலை கிடைப்பது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே வேலை பார்த்துவந்த கோடிக்கணக்கானோரும் வேலைகளை இழந்தனர். அதிலும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு 2020-21ஆம் ஆண்டிலும் பிறகு அதிலிருந்து மீண்ட 2021-22ஆம் ஆண்டின் சீரற்ற மீட்சிக் காலத்திலும் இந்தியா சந்தித்த மிகப் பெரிய பொருளாதாரச் சவாலாக, வேலைவாய்ப்பின்மையே திகழ்ந்தது. 

மக்களவைப் பொதுத் தேர்தல் 2014க்கு முன்னால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று அறிவித்தார். இது சாத்தியமில்லை என்று விவரம் தெரிந்த பலர் அப்போதே சுட்டிக்காட்டினர். ஆனால், மோடி பக்தர்கள் ஓங்கி எழுப்பிய ஓங்கார ஒலியில் - அந்த எதிர்ப்புக் குரல்கள் அமுங்கிவிட்டன. அந்தப் பக்தர்களும் மோடி வழங்கிய எல்லா வாக்குறுதிகளையும் மென்று விழுங்கிவிட்டார்கள். ‘வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பண முதலைகளின் கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடப்படும்’ என்பதும் விழுங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று. அப்படி வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களின் கருப்புப் பணம் எவ்வளவு, எத்தனை இந்தியர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கையெல்லாம் யாராவது போட்டுப் பார்த்தார்களா என்பதிலேயே எனக்குச் சந்தேகம் இருக்கிறது.

2019இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள், வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படுவது பற்றிய வாக்குறுதிகளைப் பற்றிப் பேசுவதுகூட நின்றுவிட்டது. மக்களோ இவ்விரண்டு வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை என்று அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தண்டிக்காமல் மன்னிக்கும் போக்குடன் நடந்துகொண்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் திட்டங்களுக்கெல்லாம் புதிய பெயரைச் சூட்டி தங்களுடைய திட்டங்களைப் போல அறிமுகப்படுத்தும் வேலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இறங்கியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது குஜராத் முதல்வராகப் பதவி வகித்தபோது நரேந்திர மோடியால் வெகுவாக ஏளனம் செய்யப்பட்டது. அதுதான் கஞ்சி குடிக்க வழியில்லாத ஏழைகளின் கடைசிப் புகலிடமாக இப்போது ஆகிவிட்டது. இந்தத் திட்டத்தைவிட சிறப்பான மாற்று திட்டத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், மோடி அரசு இந்தத் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அமல் செய்கிறது.

மோசத்திலிருந்து படுமோசத்துக்கு

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பொருத்தவரையில் நிலைமை இப்போது ‘மோசம்’ என்ற நிலையிலிருந்து ‘படுமோசம்’ என்ற நிலையாகிவிட்டது. வேலைவாய்ப்பின்மையை அளவிட உலகம் முழுவதிலும் இரண்டு வழிகளைத்தான் கையாள்கிறார்கள். முதலாவது, நாட்டின் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பது. இரண்டாவது, மொத்தத் தொழிலாளர்களில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது.

இந்தியாவின் மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை இப்போது 43 கோடி. இவர்களில் எத்தனை பேர் வேலையில் இருக்கிறார்கள் அல்லது வேலையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதமாகும். இந்தியாவில் இது 2022 மே மாதம் 42.13%. உலகிலேயே இந்தியாவில்தான் இது குறைவு. அமெரிக்காவில் 63%ஆக இருக்கிறது. இனி செய்வதற்கு வேலையே கிடைக்காது என்ற எண்ணம் காரணமாக கோடிக்கணக்கானவர்கள், வேறு வேலை கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்கக்கூட மனமில்லாமல் விடைபெற்றுவிட்டனர் என்று சிஎம்ஐஇ அமைப்பு கூறுகிறது.

உண்மையை உணர்த்தும் தரவுகள்

சதவீதக் கணக்கில் குடும்பங்களில் வேலைவாய்ப்பு, ஒருவர்கூட வேலையில் இல்லை - 7.8%; ஒருவர் வேலை செய்கிறார் - 68.0%; இரண்டு அல்லது மேற்பட்டோருக்கு வேலை - 24.2%.

இது மட்டுமில்லாமல் 20% பேர் மட்டுமே மாதாந்திர ஊதியம் பெறுகிறவர்கள். 50% பேர் சொந்தமாக வேலை செய்கிறவர்கள். எஞ்சியவர்கள் அன்றாடக் கூலிக்கு வேலை செய்கிறவர்கள்.

சிஎம்ஐஇ நடத்திய நுகர்வோர் பிரமீடு வீடுவாரியான கணக்கெடுப்பின்படி 2021 ஜூனில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர குடும்ப வருவாய் ரூ.15,000. மாதாந்திர நுகர்வுச் செலவு மட்டும் ரூ.11,000. இது மிகவும் அவலமான நிலை. குடும்பத்தில் வேலைக்குப் போகும் அந்த ஒரேயொருவரும் வேலையை இழந்தால் குடும்பம் பட்டினி கிடக்க நேருவதுடன் எந்தச் செலவுகளையும் எதிர்கொள்ள முடியாமல் மேலும் வறுமையில் ஆழ நேரும். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு அப்படித்தான் நேர்ந்தது. பரம ஏழைகள்தான் மிகவும் வேதனைப்பட்டனர். பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைவும் அதிகரித்ததை தரவுகள் உணர்த்துகின்றன.

2014-க்குப் பிறகு எட்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டன, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகின. உற்பத்தியில் தொழிலாளர்கள் பங்கேற்பது குறைந்தது, வேலையில்லாத் திண்டாட்ட அளவும் அதிகரித்தது. இதைப் பற்றி நாங்கள் கரடியாகக் கத்தினோம், அரசு செவி கொடுத்து கேட்கவில்லை. மாறாக மாய்மாலமான புள்ளிவிவரங்களைக் கூறி, வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டதாக மார் தட்டியது. ‘பக்கோடா விற்பதுகூட புதிய வேலைவாய்ப்புதான்…’ என்றுகூட ஒருகட்டத்தில் பேச ஆரம்பித்தது!

பார்த்த மாத்திரத்தில் தெரிவது

இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் கட்டுரையில், ‘ஏராளமான வேலைவாய்ப்புகள் கண் எதிரிலேயே மறைந்திருக்கின்றன’ என்று எழுதினேன். அரசாங்கத்தின் ஆவணங்களின்படி அரசுப் பணிகளில் அனுமதிக்கப்பட்ட – காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை மட்டுமே 34,65,000.

2020 மார்ச் மாத நிலவரப்படி 8,72,243 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அதிலும் குரூப் ‘சி’ பிரிவில் மட்டும் காலியிடங்கள் 7,56,146 (ஆதாரம்: தி இந்து). வேலையில்லாத் திண்டாட்டத்தால் எல்லாப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் பட்டியல் இனத்தவர் – பழங்குடிகள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேர் ஒன்றிய அரசுப் பணிகளில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றால் அது நல்ல தொடக்கம். ஆனால், ஏற்கெனவே காலியிடங்களாக உள்ள இடங்களைக் கழித்துவிட்டால் நிகரமாக 1,27,757 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு!

ஒன்றிய அரசாங்கம் இதற்கும் மேலும் முயற்சிகளை எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை ‘அடையாளம் காண’ வேண்டும், ‘கண்டுபிடிக்க’ வேண்டும் அல்லது ‘உருவாக்க’ வேண்டும்.  ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நூலகர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், பிற துறைப் பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்டுகள் (இயன்முறை மருத்துவர்கள்), ஆலோசகர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை நிலை மருத்துவப் பணியாளர்கள், ஆய்வகத் தொழில்நுட்பர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவாளர்கள், நகரத் திட்டமிடுவோர், கட்டிடக்கலை நிபுணர்கள், வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள், உணவுப் பதப்படுத்தல் துறை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், மீனளம் காப்போர் என்று பணிகளின் வகைகள் ஏராளம்!

வளரும் நாட்டுக்கு இவையெல்லாம் அத்தியாவசியப் பணிகள். இவ்வளவு வேலைவாய்ப்புகள் இருப்பதே அரசுக்குத் தெரியாமல் இருக்கிறது.

அரசாங்கத்துக்கு வெளியேயும் வாய்ப்புகள்

பெரும்பாலான வேலைவாய்ப்புகள் அரசுக்கும் அப்பால் இருக்கின்றன. அவை தனியார் துறையில் உள்ளன. இதுவரை கால் வைத்தே இராத - இந்தியாவைச் சுற்றியுள்ள ஆழ்கடல்கள், இந்தியாவில் ஓடும் ஆறுகள், கோடிக்கணக்கான நீர்நிலைகள், தரிசு நிலங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க முடியும்.

நூற்று முப்பது கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு அவர்களுடைய அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. அவர்களுடைய தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்வதாக இருந்தால்கூட லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியும். தனிப்பட்ட போக்குவரத்து வசதிகளையே எடுத்துக்கொள்ளுங்கள். 24.7% குடும்பங்களுக்கென்று சொந்தமாக காரோ, பைக்கோ, சைக்கிளோகூட கிடையாது. வீடுகளுக்குத் தேவைப்படும் நுகர்பொருள்களையே எடுத்துக்கொள்வோம். வெப்ப மண்டலத்தில் இருக்கும் நம் நாட்டில் வெறும் 24% குடும்பங்கள் மட்டுமே சொந்தமாக ஏர்-கூலர் அல்லது ஏர்-கண்டிஷனர்களை வைத்துள்ளன. இவற்றின் விலையையும் வரிகளையும் குறைத்து வாங்கக்கூடிய அளவுக்கு மலிவாக விற்றால் கோடிக்கணக்கில் இவை விற்பனையாகும். இந்தப் பொருள்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேர்முக – மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும், இவற்றைத் தயாரிக்கும் ஆலைகளின் உற்பத்திக் கொள்ளவு அதிகரிக்கும், மக்களும் வாழ்க்கைத் தரம் உயர்ந்து மகிழ்ச்சி அடைவர்.

வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமே மோடி அரசின் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும், ஆனால் அப்படியில்லை. எட்டு ஆண்டுகளை அது வீணடித்துவிட்டது. தன்னுடைய சமூக – அரசியல் மூலதனத்தைக் கொண்டு இந்திய மக்களைப் பிளக்கவே எட்டாண்டுகளைப் பயன்படுத்தியது. அதனுடைய தவறான கொள்கைகளால் பிளவுபட்டுக் கிடக்கும் இந்தியா பொருளாதாரரீதியாகவும் கடுமையான சேதங்களுக்கு ஆளாகியிருக்கிறது. 10 லட்சம் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகள், காயப்பட்ட மனப் புண்களை ஆற்ற உதவாது, பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதங்களையும் சரி செய்துவிடாது. இந்த நிவாரணங்கள் மிகவும் அற்பமானவை - அதுவும் காலம் கடந்தவை.

தொடர்புடைய கட்டுரை: வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி?

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   9 days ago

2004 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரையிலான 10 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.8% வளர்ந்தது. இது இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிக அதிகமான பத்தாண்டுகள் தொடர் வளர்ச்சியாகும். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களின் விளைவாக 13 கோடி ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு மேலே வந்தார்கள். இதுதான் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் செய்தது

Reply 0 0

Dharrani   7 days ago

thanks for the information.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Dharrani   9 days ago

BJP wasted eight years . O.k. But what congress did before that.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இருவகைத் தலைவர்கள்ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வுபுதுமடம் ஜாபர் அலி கட்டுரைஅமெரிக்கர்கள்ஆசாதிஎல்.ஐ.சி. தனியார்மயம்அவமானம்ஜெயமோகன்சிவசங்கர் பேட்டிபால்ரஜினி சம்பளம்சோனியா காந்திThe Quadஇன்றைய காந்திகள்ஜம்மு காஷ்மீர்LICகுடியுரிமைச் சட்டம்பேரிடர் மேலாண்மைஆலிவ் மரத்தில் காய்க்கும் கணிதம்!பிரிட்டிஷ்எம்.ஐ.டி.எஸ். வரலாறுஇமையம் அருஞ்சொல் 2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுபணமதிப்புநீக்கம்தங்க ஜெயராமன்திமுகயோகியை வீழ்த்துவாரா அகிலேஷ்?உருவக்கேலிமார்ட்டின் லூதர் கிங்வாசகர் கேள்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!