கட்டுரை, தொழில் 7 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி?

ப.சிதம்பரம்
21 Feb 2022, 5:00 am
3

சில நாட்களுக்கு முன்னால், ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. தமிழ்நாட்டு வேலைவாய்ப்பகங்களில் வேலைக்காகப் பெயர்களைப் பதிந்துவிட்டு காத்திருப்போரின் எண்ணிக்கையைப் பற்றியது அது. அதன் ஒட்டுமொத்த எண்ணிக்கை 75,88,359 ஆகும். வயதுவாரியாகப் பார்த்தால், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 17,81,695 பேர், 19-23 வயதுக்குள் 16,14,582 பேர், 24-35 வயதுக்குள் இருப்பவர்கள் 28,60,359 பேர், அதேபோல் 36-57 வயதுக்கு உட்பட்டோர் 13,20,337 பேர், 58 வயதுக்கு மேற்பட்டோர் 11,386 பேர் என்று தெரிகிறது.

இந்த எண்ணிக்கைகள் மனச்சோர்வை ஏற்படுத்துபவை. இவை தமிழ்நாட்டுக்குரியவை என்பது கவனிக்கப்பட வேண்டும். ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி கண்ட மாநிலம் இது; உத்தர பிரதேசமோ, பிஹாரோ அல்ல. தமிழ்நாட்டைவிட அதிக மக்கள்தொகையும், பொருளாதார வளர்ச்சி குறைவாகவும் இருக்கும் அவ்விரு மாநிலங்களிலும் இப்படி வேலைவாய்ப்பகங்களில் பதிவுசெய்ய வேண்டும் என்பது உணர்த்தப்பட்டிருந்தால், அந்த எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்று நினைக்கும்போதே மனம் கலங்குகிறது.

கண்ணுக்குத் தெரியாத வேலைவாய்ப்புகள்

வேலை கிடைக்காதவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எங்கே? அவை நாம் பார்க்கும் இடங்களிலேயே மறைந்து கிடக்கின்றன. 2021 மார்ச் 31 கணக்கீட்டின்படி ஒன்றிய அரசில் மட்டும் 8,72,243 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; அவற்றில் 78,264 பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டன. கிட்டத்தட்ட 8 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன!

வேலைவாய்ப்புகள் எல்லா இடங்களிலும், எல்லாத் துறைகளிலும் உள்ளன; நாம்தான் அவற்றை அடையாளம் காண முயற்சிகளை எடுக்காமல் இருக்கிறோம். சமீபத்தில், இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டியின் உரை அடங்கிய காணொலியைப் பார்த்தேன். அவர் இதயம் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காகவே பல மருத்துவமனைகளை வெவ்வேறு ஊர்களில் தொடங்கி நிர்வகிப்பவர். அந்த மருத்துவமனைகளுக்கு ‘நாராயணா’ என்பது பொதுப் பெயர். அவருடைய அந்தக் காணொலி உரையின் சுருக்கம்:

“கரீபியக் கடலோர நாடுகளுக்குச் சென்றால், அங்கே அமெரிக்காவில் வேலைசெய்வதற்காக மருத்துவர்களைத் தயார்செய்ய 35 மருத்துவமனைகளை நடத்துகின்றனர். ஒரு பெரிய அங்காடி வளாகத்தில் 50,000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கே மருத்துவம் கற்பிக்கின்றனர். அங்கிருந்து மிகச் சிறந்த மருத்துவர்கள் உருவாகின்றனர். இங்கோ நாம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒரு மருத்துவக் கல்லூரியைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்! இது கேலிக்கூத்தாக இருக்கிறது.”

“ஆண்டுதோறும் 100 மருத்துவர்களுக்குப் பயிற்சி தந்து அனுப்ப 140 மருத்துவ விரிவுரையாளர்கள் – பேராசிரியர்கள் தேவையில்லை. இத்தனை ஆசிரியர்கள் – பேராசிரியர்களைக் கொண்டு 1000 மருத்துவர்களைப் பயிற்றுவிக்கும் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவிடலாம். உலகமே மாறிவிட்ட பிறகும்கூட நாம் மாற மறுக்கிறோம்.

“மருத்துவக் கல்வியை நாம் மேட்டுக்குடிகளுக்கானதாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாக வேண்டும் என்று கனவுகூட காண்பதில்லை. இது நாளடைவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும். உலகம் எங்கிலும், மிகச் சிறப்பான மருத்துவர்கள் – அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சூழல் மிகுந்த ஏழைக் குடும்பங்களில் இருந்துதான் படித்து முன்னுக்கு வந்துள்ளனர். அவர்களுடைய வயிற்றில்தான் சாதிக்க வேண்டும் என்ற தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அவர்கள்தான் ஒரு நாளில் 24 மணி நேரமும் சலிக்காமல் வேலை செய்கிறார்கள், மருத்துவத் துறையின் அடிப்படை விதிகளையே மாற்றத் துடிக்கின்றனர்.

ஏன் (இந்தியாவில்) ஒவ்வொரு 12 நிமிஷத்துக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் மகப்பேறின்போது உயிரிழக்க வேண்டும்? ஏன், தினமும் பிறந்த உடனேயே 3 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள்? முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு முன்னதாகவே ஏன் 12 லட்சம் குழந்தைகள் இறக்க நேர்கிறது? இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

“நம் நாட்டுக்கு பெண்மைப் பிணியியல் மருத்துவர்கள் 2 லட்சம் பேர் தேவை; ஆனால் இருப்பவர்களோ ஐம்பதாயிரத்துக்கும் குறைவு. அவர்களில் சரிபாதி மகப்பேறு மருத்துவம் பார்ப்பதில்லை. மயக்கவியல் மருத்துவர்கள் 2 லட்சம் பேர் தேவை; ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்துக்கும் குறைவு. ஊடுகதிரியல் துறையில் 1.50 லட்சம் பேர் தேவை; நம்மிடையே இருப்பவர்களோ பத்தாயிரத்து ஐந்நூறு பேர்தான்.

“இந்தத் தேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவையில்லை, மருத்துவம், செவிலியர் பட்டப்படிப்பு, மருத்துவம் சார் துணை நிலைப் பணிகளுக்கான படிப்புகள் ஆகியவற்றில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தளர்த்திக்கொண்டு, தாராளமாக அனுமதிப்பது அவசியம்.”

தாராள மனமற்ற அரசுகள்

டாக்டர் தேவி ஷெட்டியின் கருத்துப்படி, சுகாதாரத் துறையில் மட்டும் மேலும் சிறிது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிடலாம். இதே போன்ற அணுகுமுறையைத் தீவிரமாக மேற்கொண்டால் கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, ஆறுகள் – நீர்நிலைகள் மேம்பாடு, வனவளம், கால்நடை வளர்ப்பு, வேளாண்மை ஆராய்ச்சி – விரிவாக்கம், உணவுப் பொருள் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிடலாம். அவை தங்கள் பங்குக்கு மேலும் லட்சக்கணக்கான நேர்முக – மறைமுக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.

அரசுகள் மிகவும் மருட்சிமிக்கதாக இருக்கின்றன. அரசுத் துறையிலேயே தேவைப்படும் லட்சக்கணக்கான பணிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அவை அஞ்சுகின்றன. ‘சிறிய நிர்வாகம் – சிறந்த நிர்வாகம்’ என்று தாங்களாகவே உருவாக்கிக் கொண்டுவிட்ட மாய வலையில் அவை விழுந்துவிட்டன. அரசாங்கங்களுக்கு அறிவுப் பஞ்சமும் ஏற்பட்டுவிடுகிறது! டாக்டர் ஷெட்டி சுட்டிக்காட்டியபடி, நாம் கோடிக் கணக்கில் செலவுசெய்து நினைவிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம், நம்முடைய தேவைக்கேற்ப, செயல்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளை தன்னிறைவு காணும் அளவுக்குக் கட்டத் தவறுகிறோம். மருத்துவமனைகள், மருத்துவ சேவைகள் பற்றாக்குறையால் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள். அவர் சுட்டிக்காட்டும் அரசின் கட்டுப்பெட்டித்தனம், செலவு செய்யத் தயங்கும் போக்கு, தவறான வேலைகளுக்குச் செலவு செய்வது ஆகியவற்றை அரசின் ஒவ்வொரு துறையிலும் பார்க்க முடியும். வேலைவாய்ப்புகளை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், இதுவரை கடைப்பிடித்துவந்த அணுகுமுறைகளைக் கைவிடுவதுதான். ஷெட்டி சுட்டிக்காட்டியபடி, 50,000 சதுர அடி பரப்பளவுள்ள இடங்களிலேயே புதிய மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் துணிவு நமக்கு வேண்டும்.

வழக்கத்தை மீறினால் வேலைவாய்ப்புகள்

வழக்கமான நடைமுறைகளை மீறும் துணிச்சல்காரர்கள், பல விஷயங்களுக்காகக் குறை கூறப்படுவார்கள், ஆனால் அவர்களோ அதுவரை கேள்விப்பட்டிராத துறைகளில் நுழைந்து, அதற்கும் முன்னால் இருந்திராத ஒன்றை உருவாக்குவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் சொத்துகளை உருவாக்குவார்கள், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் கண்டுபிடித்துத் தருவார்கள். கோட்டலிப் டையாம்லர், ஹென்றி போர்டு, கென்ஜிரோ டகாயானகி, சாம் வில்டன், ஜான் மிட்செல் அண்ட் மார்ட்டின் கூப்பர் (மோட்டரோலா), ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெஃப் பிசோஸ், மார்க் ஜுக்கர்பெக், எலான் மஸ்க் ஆகியோரைச் சிந்தியுங்கள். அவர்களுடைய புதுவிதமான கண்டுபிடிப்புகளால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின. அவர்களுடைய முயற்சிகளுக்கு முன்னால் அத்தகைய வேலைவாய்ப்புகளே அறியப்படவில்லை.

இந்தியாவின் மிக முக்கியமான தேவை வேலைவாய்ப்புகள். நான் குறிப்பிட்ட துறைகள் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்லவை. ஆசிரியர்கள், நூலகர்கள், கலை - கைத்திறன் ஆசான்கள், பயிற்சியாளர்கள், சோதனைக்கூட தொழில்நுட்பர்கள், மீன் வளர்ப்போர், கால்நடை மருத்துவர்கள், பால் உற்பத்தியாளர்கள், கோழிப் பண்ணையாளர்கள் போன்ற பணிகளை ஆயிரக்கணக்கில் உருவாக்க முடியும். ஒரு முறை வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டால் அதுவே தொடர் விளைவாக அவற்றுடன் இணைந்த இதர வேலைவாய்ப்புகளைப் பெருக்கிவிடும். இதனால் அரசுக்கு வருவாய் உயரும், செல்வம் குவியும், வரி வருவாய் பெருகும், சுற்றுச்சூழல் காக்கப்படும், அறக்கொடைகள் வளரும், கலை இலக்கியங்களுக்கு ஆதரவு வளரும், இப்படிப் பல நன்மைகள்.

வேலைவாய்ப்பு குறித்து இப்போது யார் கவலைப்படுகிறார்கள்? ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நிச்சயம் கவலைப்படவில்லை. அதன் அலுவலகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மோடி அரசின் 2022-23 நிதிநிலை அறிக்கையை அளித்த நிதியமைச்சகம்கூட கவலைப்படவில்லை. 90 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட 157 பத்தி நிதிநிலை அறிக்கையில், வேலைவாய்ப்பு என்ற சொல்லே மூன்று இடங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4

1





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   2 years ago

அருமையான கட்டுரை. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை மிக ஆணித்தரமாகப் பேசியிருக்கிறார்.. ஜெஃப் பிஸோ, ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கும் வேலைகள் உயர் திறன் மக்களுக்கானது. அவற்றால், இந்தியாவில் எல்லோருக்கும் வேலை கொடுப்பது என்பது இயலாத ஒன்று. பொருளாதார அடித்தட்டில் இருக்கும் வெகுஜன மக்களுக்கான நிலையான வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும். அப்ப்டிப்பட்ட வேலைவாய்ப்புகள், வேளாண்மை, ஊரகத் தொழில்கள் என்னும் நுன் தொழில் அலகுகளால் மட்டுமே சாத்தியம். இதற்காகத்தான், காந்தி, அகில இந்திய ஊரக தொழில் கூட்டமைப்பு என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். காதி கிராமத் தொழில்கள் உருவாகி வந்தன. இன்று அவை 1.7 கோடி மக்களுக்கான வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. அதே பின்ணணியில் இருந்து எழுந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு 1,4 கோடி மக்களுக்கான வாழ்வாதாரமாக எழுந்து வந்துள்ளன. எனவே, அரசு, வேளாண்மையில் ஈடுப்பட்டிருக்கும் மக்களுக்கு, அவர்கள் நன்மையை நோக்கும் வணிகச் சங்கிலிகளை உருவாக்க வேண்டும். அதுவே நீண்ட கால நோக்கில், பொருளாதார அடித்தட்டில் இருக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

நீங்கள் சொல்ல மறந்த இன்னொன்று, ஒவ்வொரு கல்லூரிக்கும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கப்படுகின்றன.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

தினமும் பிறந்த உடனே மூன்று இலட்சம் குழந்தைகள்......... ஒரு வருடத்திற்கு என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நிப்பர்அறிவியல் நிபுணர்கள்நல்லகண்ணுநிதியமைச்சர்கொட்டும் பனிவேள்விகுறைந்தபட்ச ஆதார விலைபணமதிப்புநீக்கம்கட்சித் தலைமைசட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுபொதுத் துறைப் பொன்னுலகின் சிற்பிகுவாண்டம் இயற்பியல்தைராய்டுசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்மாஸ்க்வாமுதலுறு விரைவு ஈனுலை: கேள்விகளும் பதில்களும்சேமிப்புதான்சானியாவில் என் முதல் மாதம்தியாகராய ஆராதனாமாநிலங்கள்ரூ.8 லட்சம் வருமானம்பெருநகரங்கள்தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்மதுஅடக்கமான மனிதரின் மிதமான கணிப்புசிமாந்திக் தோவேரா கட்டுரைஎளியவர்களின் நலன் காக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டுவிழிஞ்சம்சிறுநீர்ப்பை இறக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!