கட்டுரை, தொடர், கல்வி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

சுவீடன் அரசுப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி

விஜய் அசோகன்
04 Dec 2022, 5:00 am
1

ரோப்பிய நாடுகளின் ஒன்றியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றச் சட்டத்தில், தாய்மொழி வழியிலான கல்வி முக்கியமான ஒன்று.  நோர்டிக் நாடுகளான சுவீடன், நார்வே, ஃபின்லாந்தில் மேலும் வலுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. 

நார்வே நாட்டில் வசித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் மொழிக்கான பாடங்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை ஈழத் தமிழர்களால் நடந்தது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆதலால், அங்கு வசிக்கும் வரை தாய்மொழிக் கல்விக்கானத் தேடலை ஆய்வு நோக்கில் நடத்தவில்லை. சுவீடன் புலம்பெயர்ந்தபோது, அங்கு இருந்த ஆச்சர்யமூட்டும் தாய்மொழிகளுக்கான கல்வித் திட்டங்கள் வழியாக ஆழமான தேடுதலை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

நவீன உலக ஒழுங்கில், ஆங்கில மொழியால் மட்டுமே சாதிக்க இயலும் என்கிற அசைக்க முடியாத கருத்தாக்கம் காலனியாதிக்கச் சுவட்டில் இருந்து உருவானது என்கிற புரிதல் இதன் பின்னரே எனக்கு ஏற்படத் தொடங்கியது. அதோடு, சீன நாட்டின் பல்கலைக்கழக அனுபவமும் தாய்மொழிக் கல்விக்கான வலுவான கருத்தினை எனக்குள் விதைத்தது.

நார்வேவின் அனுபவமே அனைத்திற்கும் தொடக்கம்

நார்வே நாட்டினில் எங்கள் குழந்தைகள் கருவாகி, பிறந்து, வளர்ந்தக் காலங்களில் மருத்துவர்களும் மழலையர் பள்ளிகளிலும் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவையும் நாங்கள் உணர்ந்தவையும் எங்கள் குடும்பத்தில் தமிழ்மொழி தொடர்பான புத்துணர்வை ஊட்டியது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சுவீடன்: பள்ளிக்கல்வியில் அரசியல் பாடம்

விஜய் அசோகன் 27 Nov 2022

குழந்தைகள் கருவில் இருக்கும் தருவாயில் நார்வே அரசு மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர் உடல்நலச் சோதனை மேற்கொள்வர், கருவில் வளரும் குழந்தை குறித்தும், தாயின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த புரிதலும் தந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சில சோதனைகளின் பொழுதும் தந்தையும் உடன் இருத்தல் அவசியம். 

அப்போது, வீட்டில் மொழி உச்சரிப்புகள் மற்றும் குழந்தையின் வளர்ச்சித் தொடர்பான கேள்விகளுக்கு, “பன்மைக் காலாச்சாரச் சூழலில் வாழ்வதால், குழந்தையின் மனநல வளர்ச்சியில் நேர்மறையான உறுதியினை வளர்க்க தாய்மொழியில் உரையாடுவது அவசியம்” என மருத்துவர்களும், “நோர்வேஜிய மொழி தொடர்பான குழந்தைகளுக்கான பயிற்சியினை மேற்கொள்வது எங்கள் பொறுப்பு; அதற்கு அடித்தளமாக குழந்தைகளோடு வீட்டினில் தாய்மொழியில் உரையாடி, குழந்தையின் அடிப்படைச் சிந்தனைக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும்” எனப் பள்ளியிலும் கற்றுக்கொடுத்தார்கள்.

தாய்மொழியும் குழந்தையின் செயல்பாடுகளும்

குழந்தை பிறப்பதற்கு 10 வாரங்கள் முன்பிருந்தே, ஒலியினை கேட்கத் துவங்குகிறது. பிறந்தது முதலே, தாயின்மொழியின் ஓசையால், தன்னைப் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் கருதுகிறது. இத்தகைய தருணங்களில் இருந்தே, குழந்தையின் தாய்மொழியும் மூளையின் செயல்பாடும் ஒன்றாகிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒலியின் அடிப்படையில் அனைத்தையும் பகுத்துணரத் தொடங்குகிறது. இவ்வுலகில் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கினால், மொத்தமாக 800 விதமான ஒலிகள் உள்ளன. குழந்தை இயற்கை வரம், இத்தகைய 800 ஒலிகளையும் பிரித்து உணரும் ஆற்றல் கொண்டது.

பிறந்தது முதல் இத்தகைய ஆற்றல் உண்டு என்றபோதிலும், குழந்தை பிற மொழியினைக் கற்க, பகுத்துணர, தொடர்ச்சியான மூளையின் செயல்பாடுகளில் வாய்ப்பு உள்ளது எனினும், முதல் ஆறு மாதத்தில் தன்னைச் சுற்றி ஒலிக்கப்படும் மொழியில் இருந்துதான் மூளையின் தொடக்கக்கால செயலோட்டங்கள் உருவாகிறது. அதனாலேயே, பிற மொழியினை கல்வி மொழியாக ஏற்கும் முன்னர், குழந்தையின் அடிப்படை மூளையில் பதிந்துள்ள மொழியின் வழியே தொடக்கக்கால கல்வியின் மூலம் அறிவூட்டுவது நீண்ட கால ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு உகந்ததாகிறது.

இதில் மிகக் குறிப்பாக, குழந்தை பிறந்தது முதலான மூளையின் செயல்பாட்டின்படி, அந்தக் குழந்தையுடன் நேரடியாக உரையாடும் சொற்கள், ஒலி, மொழியில் இருந்துதான் அக்குழந்தை தன் சிந்தனைக்கும், தன் உச்சரிப்பிற்கும், செயல்பாட்டிற்கும் எடுக்கிறது. தன்னுடன் நேரடியாக பேசப்படாத எந்த ஒலியினையும் அது தாய்மொழியின் ஒலியே எனினும் அக்குழந்தையின் மூளையின் செயலோட்டத்தில் இடம்பெறாது.

குழந்தை தனது இரண்டாம் வயதில் இருந்து, தான் பார்க்கும் பொருட்களின் பெயரை, தன் சுற்றத்தார் சுட்டிக்காட்டி தன்னுடன் உச்சரிக்கும் வார்த்தையையும் பொருத்திப்பார்த்து, தனக்குத் தெரிந்த தாய்மொழியோடு தன் வாழ்வின் அனைத்து நொடிகளையும் இணைத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட, இத்தருணத்தில் இருந்து குழந்தை தாய்மொழி வழியே தனது கற்றலைத் தொடங்குகிறது எனலாம்.

இத்தகைய நிலையில் இருந்தே, அக்குழந்தை பள்ளிக்கு வரும் முன் 3,000 சொற்களை மூளையில் பதிந்து வளர்ந்துவருகிறது.

மருத்துவக் கல்வியும் தாய்மொழி மதிப்பெண்ணும்

நார்வேயில் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வு எழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம் / பொறியியல் சேர்க்கைக்கான கூட்டு மதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அதாவது, நார்வே நாட்டில் தமிழ் மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. சமீபத்தில் நார்வே நாட்டில் மருத்துவக் கல்வியியல் சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. அதற்கு மிக முக்கியக் காரணமாக என் அனுபவத்தில் இருந்து பார்த்தால்கூட, எனக்குத் தெரிந்து நான் தமிழாராசிரியராக வகுப்பெடுத்த பலரும் தமிழால் உயர்வு பெற்றவர்களே!

சுவீடனில் நடந்த தமிழ் நேர்முகத் தேர்வு!

இத்தகைய அனுபவம் தந்த பாடத்தில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில், தமிழ்வழிப் பிரிவில் என் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தேன். பிறகு, மீண்டும் சுவீடன் வர வேண்டும் என்ற சூழலில், அவர்களுக்குத் தமிழ் மட்டுமே தெரிந்திருந்தது.

சுவீடன் பள்ளியில் சேரும் குழந்தைகளோடு பள்ளி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் ஆசிரியர்கள் கலந்துரையாடி அவர்களின் எண்ண ஓட்டம், அவர்களின் அன்றைய கல்வியின் நிலை, செயற்பாடுகள் குறித்து அறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கவும் வளர்த்தெடுக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுப்பர்.

சுவீடனிற்குப் புதிதாக வந்திருந்த எங்கள் குழந்தைக்கும் அத்தகைய நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ந்தது, ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் தமிழாசிரியர் துணை கொண்டு, முழுக்க முழுக்க தமிழில் நடந்தது. பிறகு, தமிழ் தவிர வேறு மொழியே தெரியாததால், பள்ளி நிர்வாகம் எங்கள் மகன் ஒருவருக்காக வாரத்தில் ஒருநாள் மாவட்ட நிர்வாக தமிழாசிரியர் கொண்டு சிறப்பு வகுப்பினை தமிழ் வழியில் நடத்தி மெல்ல மெல்ல சுவீடிஷ் மொழி அறிவினையும் பாட அறிவினையும் வளர்த்தெடுத்தார்கள்.

இன்றும்கூட, அரசுப் பள்ளியில் பயிலும் அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் வாரத்தில் ஒருநாள், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறான மாணவ எண்ணிக்கையினைக் கொண்டு, பொது வகுப்பினைத் தமிழ் மொழிப் பாடத்தில் நடத்துகிறார்கள். 

(அடுத்த ஞாயிறு மேலும் பேசுவோம்...) 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
விஜய் அசோகன்

விஜய் அசோகன், ஆய்வாளர். நோர்வே, சுவீடன், அயர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுவீடனில் உள்ள நார்டிக் ஃபோரம் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (Nordic Forum for science and technology) அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். தாய்மொழிவழிக் கல்வி மற்றும் ஐரோப்பிய உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com


4

3

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

சுவீடனில் தமிழ் ஆசிரியர்களுக்கு வேலை. எவ்ளோ பெருமை. தமிழ், தமிழ் நாட்டைத் தவிர எல்லா இடங்களிலும் நன்றாக வாழ்கிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தொழிற்சாலைமயக்கம்ரஷ்ய ராணுவம்g.kuppusamyஅறம் – உண்மை மனிதர்களின் கதைமவுனம்சூத்திரர்திலீப் மண்டல் கட்டுரைபுவியைக் காக்க அக்கறை செலுத்துவோம்சார்லி சாப்ளின் பேட்டிடபுள் சாப்பாடுபெருநகரம்ராங்கோதிருநெல்வேலிஉளவுத் துறை குஜராத் பின்தங்குகிறதுசாவர்க்கர்தமிழக பாஜகதிராவிட இயக்கத்தின் கூட்டாட்சி கொள்கைநக்சல்பாரிமத்திய கிழக்கு நாடுகள்இஸம்ஒன்றிய அரசுநிலம் கையகப்படுத்துதல் எனும் சவால்சிந்து சமவெளிஐஆர்எஃப்வெள்ளப் பேரிடர் 2023அரசுப் பணிசட்டம் என்ன சொல்கிறது?ஐயன் கார்த்திகேயன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!