கட்டுரை, அரசியல், சட்டம் 10 நிமிட வாசிப்பு
தண்டனைச் சட்டம் மாறாதவரை சித்திரவதைகளுக்கு முடிவில்லை
நாம் இப்போது வினோதமான, அதே வேளையில் அச்சமூட்டக்கூடிய காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்திய சமூகம் ‘இருமை அமைப்பு முறை’யால் இயக்கப்படுவதால் அச்சமேற்பட்டுள்ளது. ஒன்று நீங்கள் பெரும்பான்மையினவாதத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது அரசுத் தரப்பு கூறுவதை ஏற்க வேண்டும் என்பதே அந்த இருமை நிலை. இல்லாவிட்டால் உங்களைத் 'தேசத் துரோகி' என்றோ 'ஜிகாதி' என்றோ 'நகர்ப்புற நக்ஸலைட்' என்றோ 'ஐஎஸ்ஐ உளவாளி' என்றோ முத்திரை குத்தி சிறையில் அடைப்பது அல்லது அலைக்கழிப்பது அரசின் நடைமுறையாக இருக்கிறது.
வினோதம் என்னவென்றால், ஏட்டளவில் உலகிலேயே மிகவும் அலங்காரமான - லட்சியவாதத்தோடு விரிவாக எழுதப்பட்ட அரசியல் சட்டம் நம்முடையது. அதே வேளையில், மக்களை அரசு பரந்துபட்ட அளவில் அதன் சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்கும்போது தடுக்க இயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் சட்டங்கள், உச்ச நீதிமன்றத்தின் ஏராளமான முற்போக்கான தீர்ப்புகளில் விளக்கப்படும் பெருமையைப் பெற்றவை. துரதிருஷ்டவசமாக, அரசிடமிருந்து சட்டப்பூர்வமாக எதிர்பார்க்கப்படுபவைக்கும், நடைமுறையில் மக்களிடம் அது சட்டங்களைப் பிரயோகிக்கும் முறைக்கும் பெரிய - விரக்தியை உண்டுபண்ணக்கூடிய - இடைவெளி நிலவுகிறது. இது மிகவும் வேதனை தரத்தக்க இரட்டை நிலையாகும்.
உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளைக் காவல் துறையால் தொடர்ந்து மீற முடிகிறது என்றால், தங்களுடைய கட்சிக்கு உகந்த செயல்களைச் செய்ய ஒத்துழைத்தால் உச்ச நீதிமன்றத்தால்கூட நடவடிக்கை எடுக்க முடியாதபடிக்குத் தங்களுடைய பாதுகாப்பு உண்டு என்று ஆளுங்கட்சி காவல் துறைக்கு அளிக்கும் உறுதிமொழிதான் அதற்குக் காரணம்.
“ஒரு ஜனநாயகத்தின் சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கொள்கைகள் - செயல்களுடன் ஒத்துப்போகும் ஆதரவாளர்களுக்கு அது அளிக்கும் பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதிலிருந்து அல்ல - அதற்கு எதிராகக் கருத்துக் கூறும் அதிருப்தியாளர்களுக்கு அது தரும் பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதிலிருந்துதான் அளவிட முடியும்” என்று அமெரிக்க அரசியல், சமூக சிந்தனையாளர் அப்பி ஹாஃப்மேன் கூறியிருக்கிறார்.
அரசுக்கு எதிராக எப்படிப்பட்ட கருத்துகளைக் கூறினாலும் அவர்களை ஒடுக்குவதில் வேகமாகச் செயல்படும் இந்திய அரசைக் காணும்போது, ‘சுதந்திரமற்ற ஜனநாயகத்துக்கு’ நாம் வேகமாக மாறி வருகிறோம் என்று தெரிகிறது. வரம்பற்ற அதிகாரத்தைப் பெறும் நோக்கில், சட்டத்தையே ஆயுதமாக்கி, தன்னை எதிர்ப்போர் அனைவரையும் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதையே அரசு விரும்புகிறது.
தண்டனையியல் சட்ட நடைமுறை அளித்துள்ள விருப்ப அதிகாரங்கள், ஒருவரைக் கொன்றுவிட்டும்கூட தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை அரசுக்கு வழங்கியிருக்கிறது. அனைத்து விதமான அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளும் ஆட்சியிலிருக்கும்போது இதைக் கையாள்கின்றன. சட்ட விரோதத் தடை நடவடிக்கைகள் சட்டத்தை (யுஏபிஏ) பாஜக அரசு இப்போது தவறாகப் பயன்படுத்துகிறது என்று கூக்குரல் எழுப்புகிறவர்கள், இந்தச் சட்டத்துக்கு 2008-ல் திருத்தம் செய்து 43 டி (5) என்ற பிரிவை அதில் சேர்த்து, இச் சட்டப்படி கைதுசெய்யப்படுகிறவர்களுக்கு ஜாமீன் விடுதலையே கிடையாது என்று கடுமையாக்கியதே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை மறந்துவிட முடியாது.
சீன நாட்டின் ராணுவ வியூக ராஜதந்திரி சுன் சூ ஒரு முறை கூறினார், “ஒருவரைக் கொன்று, பத்தாயிரம் பேரை அச்சப்படுத்து” என்று. இந்திய அரசு இதை சற்றே மென்மைப்படுத்தி, “வழக்கில் ஒருவரை சிக்கவைத்து, பத்தாயிரம் பேரை அச்சப்படுத்துகிறது”.
பிரிட்டிஷ் பாரம்பரியம்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும்கூட, குற்றவியல் நடைமுறைச் சட்ட அமல், 160 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ்காரர்கள் அவர்களுடைய வசதிக்காக, நலனுக்காக அமல்படுத்திய அதே பாணியில் கையாளப்படுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 109-வது பிரிவை எடுத்துக்கொள்வோம். குற்றம் செய்வதற்காகத் தன்னை தலைமறைவாக்கிக்கொள்ளும் ஒருவரைக் காவலில் வைப்பதற்காக 1861-ல் இது கொண்டுவரப்பட்டது. அப்போது இப் பிரிவைச் சேர்த்ததற்கு நியாயம் இருக்கிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டோர், குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டோர், குற்றப் பரம்பரையினர் என்று கருதப்பட்டோர், அயோக்கியத்தனமாகவே நடக்கும் போக்கிரிகள் அப்போது நாட்டில் தடையில்லாமல் உலாவினார்கள்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்த காவல் துறையால் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது. எனவே அவர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கான பிரிவைச் சேர்த்ததை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிகிறது. சந்தேகப்படும்படியான நபரைப் பிடிக்க அது வசதியாக இருந்தது.
சுதந்திர இந்தியாவில் - அதுவும் காவல் துறை இந்த அளவுக்கு விரிந்து பரந்துவிட்ட நிலையில், குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கும்போது இச் சட்டப்பிரிவுக்கு அவசியமே இல்லை. மக்களில் சிலரை காவல் துறையினர் அலைக்கழிக்கவே இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கடைசிநிலைக் காவலர் முதல் அத்துறை அமைச்சர் வரையில் உள்ளவர்களுக்கு இது அதிகாரத்தின் ஊற்றாகவும் விளங்குகிறது. அற்பமான காரணத்தைக் கூறி எவரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கைது செய்து உள்ளே தள்ள முடிகிறது.
இப்படி சாதாரணமான சட்டப் பிரிவு முதல், கொடூரமான சட்டங்கள் வரையில் சட்டப்படியான சித்திரவதைகளுக்கு நம்மிடம் நிறைய சட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக, எந்த நாடும் இத்தனை எண்ணிக்கைகளில் வழக்குகளைப் பதிவு செய்வதே இல்லை! மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக, மதங்களுக்கிடையில் வெறுப்பை வளர்ப்பதாக (பிரிவு 153ஏ, 295ஏ, 505), தேசவிரோதம் (பிரிவு 124ஏ), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) என்று எத்தனை எத்தனை!
வெறும் வார்த்தைகளாலேயே நம்முடைய சமுதாய ஒற்றுமையைக் குலைத்துவிட முடியும் என்றால் நம்முடைய நாடு மிகவும் பலவீனமான சமுதாய ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது என்றே பொருள். அதற்குப் பிறகு நாம் சட்டங்களைப் பற்றியோ அரசைப் பற்றியோ பேசிப் பயனில்லை. செத்த குதிரையை அடிப்பதைப்போலத்தான். அப்படியில்லையென்றால், தனக்கு எதிரானவர்கள் என்று அடையாளம் காண்போரின் குரலை ஒடுக்கவும், செயல்படாமல் அச்சுறுத்தி வைக்கவும்தான் இத்தனைச் சட்டங்களையும் அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று பொருள்.
பெரும்பான்மையின கண்ணோட்டத்தில் தேச விரோதமாகப் பார்க்கப்படும் சொற்களும், செயல்களும் அரசின் முழு பலத்துடன் ஒடுக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் இவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும்.
சிறுபான்மையினரின் இக்கட்டு
இதை ‘போலீஸ் ஆட்சி’ என்று கூறலாம்; ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், காவல் துறையால்தான் மக்களைக் கட்டுப்படுத்த முடிகிறது என்றால் அப்படித்தான் அழைக்க வேண்டும்; தனது மக்களுக்கு எதிராகவே சட்டங்களை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. ஆனால் நாம் ‘போலீஸ் அரசு’ என்ற நிலையைவிட மோசமான கட்டத்துக்குச் சென்றுவிட்டோம். இங்கே சட்ட அதிகாரங்கள், மிகவும் தேர்ந்தெடுத்த இலக்குகள் மீது பயன்படுத்தப்பட்டு அவர்களைச் சித்திரவதைக்குள்ளாக்குகிறது.
காவல் துறையின் செயல்பாட்டை ஆராய்ந்தால், நாடு சுதந்திரம் அடைந்தது முதலே சட்டத்தைத் தூக்கிப்பிடித்து நிறுத்த வேண்டிய காவல்துறை வகுப்புவாதிகளின் கைக்கருவிகளாகவும், ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்பச் செயல்படுபவையாகவும்தான் இருந்துள்ளன.
பெரும்பான்மைச் சமூகம் செய்தது சரியா என்று காவல்துறை எப்போதும் கேள்வி கேட்பதே இல்லை, பெரும்பான்மையினத்தின் வன்முறை தண்டிக்கப்படுவதே இல்லை. எல்லா நேரங்களிலும் வகுப்புக் கலவரங்கள் தோன்றுகின்றன, நம்மைத் தண்டிக்கமாட்டார்கள் என்று கலவரம் செய்வோர்களுக்குத் தெரியும்.
துரதிருஷ்டவசமாக, நம்முடைய மக்களின் அடி மனங்களில் உறங்கிக் கிடக்கும் மிருக உணர்ச்சி தூண்டப்பட்டு, நம்முடனே வாழும் மக்களில் ஒரு பிரிவினர் மீது எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வன்முறைகளை நிகழ்த்தச் செய்கிறது - அரசின் ஆதரவுடன்.
இந்தியாவில் இப்போது வாழும் சிறுபான்மையினர் அஞ்சுவதற்கு ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையின சமூகத்தின் விரோதம், சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்தி மட்டம் தட்ட விழையும் அரசின் மனப்பான்மை ஆகிய இரண்டு அச்சுறுத்தல்களுக்கு இடையே வாழ வேண்டியிருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்தினரின் சுயமரியாதையைக் குலைத்து, அவர்களுடைய கண்ணியத்தைச் சேதப்படுத்தி, தோற்று நிர்க்கதியாகிவிட்டோம் என்கிற உணர்வை அவர்களுக்கு ஊட்டும் வகையில் அரசு செயல்படுகிறது. அத்துடன் வரலாற்றுரீதியாகத் தங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில், பெரும்பான்மையினச் சமூகத்தின் கருணையால்தான் வாழ்கிறோம் என்ற நினைப்பை ஊட்ட அரசு முயல்கிறது.
சிறுபான்மைச் சமூகத்தை கொடுங்கோன்மைக்கு உள்ளாக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரசைப் பார்த்தாலோ அனைவரையும் அரவணைக்கும் சமதர்ம அரசு போல, தார்மிக குதிரையில் பூமியில் கால்கள் படாமல் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிறது!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 எதிரிகளும் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்தத் தீர்ப்புக்கு எதிராக, நான் அறிந்தவரையில் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தாக்கல்செய்யப்படவில்லை. பெரும்பான்மைச் சமூக ஆதரவை இழந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் ஆளும் அரசு மேல்முறையீட்டைகூட தாக்கல் செய்யவில்லை.
உத்தர பிரதேசக் காவல்துறையில் ஹஷீம்புரா என்ற இடத்தில் 42 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் தில்லி உயர் நீதிமன்றம் 31 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட பிறகு 2018-ல் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. “குறிப்பிட்ட சிறுபான்மைச் சமூகத்தை இலக்காக வைத்து, சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகளின் துணையோடு கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பது கவலைதரக்கூடிய அம்சம்” என்று உயர் நீதிமன்றமே தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மலியானா என்ற இடத்தில் 72 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கிலும் 34 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை - வழக்கோ 900 முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு வகுப்புக்கலவரத்திலும் அது 1984-ல் நடந்த தில்லி கலவரமானாலும் 2020-ல் நடந்த தில்லி கலவரமானாலும் சிறுபான்மையினர் அடிவாங்கட்டும் என்றே காவல் துறையினர் நடந்துகொண்டதைப் போலத் தெரிகிறது. அல்லது கலவரத்துக்குப் பிறகு சிறுபான்மைச் சமூகத்தவரைப் பொய் வழக்குகளில் சிக்க வைப்பதே அதன் வழக்கமாக இருக்கிறது.
நீதி வழங்கும் முறையே இங்கு ‘அரசு’
ஹாலிவுட்டில் 1999-ம் ஆண்டு ‘தி மேட்ரிக்ஸ்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் வெளியானது. பாவனையாக உருவாக்கப்பட்ட எதார்த்த உலகில், மனிதகுலமே சிறைப்படுவதுபோல திரைக்கதை. ‘மேட்ரிக்ஸ்’ என்ற புத்திசாலியான இயந்திரம் இதில் முக்கியமான கதாபாத்திரம். மனித உடல்களிலிருந்து ஆற்றலைத் திருடும்போது அது அவர்களுக்குத் தெரியாமலிருக்க, அவர்களுடைய கவனங்கள் சிதறடிக்கப்படும். மேட்ரிக்ஸ் என்றால் என்ன என்று யாருக்குமே புரியாது.
அதில் வரும் மோர்பஸ் என்ற கதாபாத்திரம் அதை விவரிக்கும். “மேட்ரிக்ஸ் என்பது அமைப்பு. அந்த அமைப்புதான் நமக்கு எதிரி. பாவனையான அமைப்புக்குள் இருக்கும்போது எவ்வளவுதான் சுற்றிப்பார்த்தாலும் என்ன பார்க்க முடியும்? யாரை நாம் காப்பாற்ற நினைக்கிறோமோ, அவர்களுடைய எண்ணங்களைத்தான்” என்று மோர்பஸ் விளக்குவார்.
அதுதான் இன்றைய இந்திய நிலையும். இந்திய மக்களை இன்று பெரிதும் அலைக்கழிப்பது இந்திய அரசுதான். அதுவும் எந்த மக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதோ - அதே தண்டனையியல் சட்ட அமைப்பு மூலம்!
ஆல்பிரட் டென்னிசன் சொன்னதுதான் நினைவுக்குவருகிறது, “அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரும், ஆட்சியிலிருந்து போகும், ஆனால் ஆதிக்கம் செலுத்தும் ‘அரசு’ மட்டும் எந்தக் காலத்திலும் நீடிக்கும்!”
© தி வயர்
தமிழில்: வ.ரங்காசாரி
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
ஆல்பிரெட் டென்னிசன் சொன்னது எனக்கு தெரியாது. ஆனால் இதே கருத்தை 2-3 வருடங்களுக்கு முன் வேறு ஏதோ சமூக வலை தளத்தில் எழுதியுள்ளேன். அந்தோணிதாஸ்கள்(இராசாக்கண்ணு) இக்கருத்தை நிரூபிக்கின்றனர். பிரச்சினை என்னவென்றால், தாங்கள் செய்வது தவறு என்பது கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். பி கு. அருஞ்சொல்.காம் is rocking.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.