கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு
மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு (2024), மிகுந்த வலிமையுள்ள எதிர்க்கட்சி 18வது மக்களவையில் உருவாகியிருக்கிறது. 2014, 2019 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெறும் 44, 52 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால் 16வது 17வது மக்களவைகளில் வலிமையான எதிர்க்கட்சி ஏற்படவில்லை, அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் தகுதியைக்கூட பெற முடியவில்லை. பாஜக அல்லாத பிற கட்சிகளும் மிகவும் குறைவான இடங்களில்தான் வென்றிருந்தன.
எதிர்க்கட்சிகளின் குரல்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய எண்ணிக்கையாலும் - குரலோசையாலும் அடக்கிவிட முடிந்தது. (பாஜகவுக்கு தேர்தலுக்கு முந்தைய தோழமைக் கட்சிகள் தவிர, தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்படாமலேயே தோழமைக் கட்சிகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பிஜு ஜனதா தளமும் செயல்பட்டன).
எதிர்க்கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்கள்தானே கிடைத்துள்ளன, இந்நிலையில் நாடாளுமன்றத்தின் புனிதம் காக்க, அனைத்து தரப்பினரின் கருத்துகளும் மதிக்கப்பட எப்படிச் சமநிலையை ஏற்படுத்துவது என்று பாஜக சிறிதும் சிந்திக்கவேயில்லை. இதனால் அவையில் பின்பற்றப்பட்டுவந்த பல ஜனநாயக மரபுகள் கைவிடப்பட்டன. நடுநிலையான பார்வையாளர்கள் பலருடைய கருத்துப்படி, கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்றம் ஜனநாயக உணர்வுடன் செயல்பட முடியாமல் செயலிழந்தது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மக்களவைக்கு 2024இல் நடந்துள்ள பொதுத் தேர்தலானது நாடாளுமன்றத்தின் உயரிய மரபுகளை மீண்டும் புதுப்பிக்க ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சம வாய்ப்பை அளித்துள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வடிவில் மட்டுமல்லாமல், உட்பொருளிலும் இருந்தாக வேண்டும். எதிர்க்கட்சிகள் 236 உறுப்பினர்களுடன் மிகவும் வலிமையுடன் இருக்கின்றன.
‘நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறவிடாமல் முடக்குவதும் சட்டப்படியான நடைமுறைதான், அதுவுமே ஜனநாயகத்துக்கு ஆதரவான செயல்தான்’ என்ற அருண் ஜேட்லியின் கருத்தியலுக்கு எதிர்க்கட்சிகள் விடைகொடுக்க வேண்டும். அது அவருடைய கற்பனை, நாடாளுமன்றம் முறையாக நடைபெற அனுமதிப்பதுதான் சரி.
கவனிக்க வேண்டிய வாக்குறுதிகள்
‘நியாய பத்திரம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 2024 தேர்தல் வாக்குறுதி அறிக்கையை, இதில் எதிர்க்கட்சிகள் பின்பற்றலாம்:
- நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஆண்டுக்கு 100 நாள்கள் நடைபெறும், கடந்த காலத்தில் நிலவிய ஜனநாயக மரபுகள் புதுப்பிக்கப்பட்டு, முழுமையாக பின்பற்றப்படும்.
- வாரத்தில் ஒரு நாள், இரண்டு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பும் பொருள்கள் குறித்து விவாதிப்பதற்காகவே ஒதுக்கப்படும்.
- அவையின் இரண்டு தலைவர்களும் (சபாநாயகர்கள்) அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தாங்கள் இருந்த கட்சியுடனான அரசியல் தொடர்பை துண்டித்துக்கொள்வார்கள், நடுநிலையுடன் அவையை நடத்துவார்கள், ‘சபாநாயகர் - சபையில் பேசக்கூடாது’ என்ற மரபை பின்பற்றுவார்கள்.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் இந்த வாக்குறுதிகளை ஏற்று அப்படியே பின்பற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம். ஆண்டுக்கு 100 நாள்கள் அவை கூட வேண்டும், வாரத்தில் ஒரு நாள் எதிர்க்கட்சிகள் விரும்பும் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும், அவைத் தலைவர்கள் நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்துகளை எதிர்க்க பாஜகவிடம் தகுந்த காரணம் ஏதுமிருக்க வாய்ப்பு இல்லை.
கட்சித்தாவல் தடுக்கப்பட வேண்டும்
‘மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு மட்டும் 370 தொகுதிகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நானூறுக்கும் மேற்பட்ட தொகுதிகள்’ என்று இலக்கு நிரணயித்த நரேந்திர மோடி, அவருடைய செயல்பாட்டாலேயே அப்படி எட்ட முடியாமல் பெருமளவு தொகுதிகளை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது. தேர்தல் வெற்றியைக் கொண்டாடத் தலைவர்கள் விரும்பினர், ஆனால் கொண்டாட்ட மனநிலையில் நாங்கள் இல்லை என்று கூறி பாஜக தொண்டர்கள் மறுத்துவிட்டனர்.
மக்களவையில் பெரும்பான்மை இடங்களை வெல்லத் தவறிய ‘சிறுபான்மைக் கட்சி’ என்ற அடைமொழி, பாஜக தலைவர்களைத் தொடர்ந்து தொல்லை செய்துகொண்டே இருக்கும். எனவே அதிலிருந்து விடுபட, அனைத்து வகை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
நாக்கில் எச்சில் ஊறும் வகையில் அவர்களுக்குக் கையருகில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (4), ஆஆக (3), ஆர்எல்டி (2), ஜேடிஎஸ் (2), ஏஜிபி (1), ஏஜேஎஸ்யு (1), எச்ஏஎம் (1), எஸ்கேஎம் (1) கட்சிகள் உள்ளன. ஜேடியு (12) கட்சிக்குக்கூட பாதுகாப்பில்லை. இவற்றில் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோழமைக் கட்சிகள்தான் என்றாலும் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள, எதையும் செய்யும் பாஜக (மஹாராஷ்டிரத்தில் சிவசேனைக்கு நேர்ந்த கதி நினைவுக்கு வருகிறதா?).
கட்சித் தாவலைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டம் (அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணை), சிறிய கட்சிகள் எளிதில் இரையாகி, பிறகு காணாமலேயே போய்விடக்கூடிய அளவுக்கு நிறைய இடைவெளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க, காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை நேர்த்தியான உறுதிமொழியை அளித்தது.
- கட்சித்தாவல் தடைச் சட்டத்துக்கு வலுவான திருத்தம் கொண்டுவருவோம், சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், அவரைத் தேர்ந்தெடுத்த கட்சியிலிருந்து விலகினாலேயே அவருடைய உறுப்பினர் பதவியும் பறிபோகும் வகையில் சட்டம் திருத்தப்படும்.
எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தச் சட்டத் திருத்தத்தை அவையில் மசோதாவாகக் கொண்டுவர வேண்டும். இந்தத் திருத்தத்தை ஆளுங்கூட்டணி எதிர்த்தால், அது நேர்மையற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது என்பது மக்கள் முன்னிலையில் அம்பலப்பட்டுவிடும்.
வேலைவாய்ப்பு பெருக அழுத்தம்
நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில்தான் பாஜக மிகவும் வலிமையற்றுத் திகழ்கிறது. அரசின் வருவாயைப் பெருக்குவதையோ, செலவுகளைக் கட்டுப்படுத்துவதையோ, அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு முன்னுரிமை தருவதையோ யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், அரசின் எந்தக் கொள்கையாக இருந்தாலும் அது கோடிக்கணக்கானவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், விலைவாசி உயர்வை (பணவீக்க விகிதம்) கட்டுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
இந்த இரண்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறியதால்தான் நாடாளுமன்றத்தில் கணிசமான இடங்களை இழந்திருக்கிறது. பாஜக தன்னுடைய செயல்வழியை மாற்றிக்கொள்ளுமா என்பது குடியரசுத் தலைவர் உரை, நிதிநிலை அறிக்கை ஆகியவற்றிலிருந்து தெரிந்துவிடும்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியும் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள 2024 தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்:
- தொழில் துறையில் ஏகபோகம் (மோனோபொலி), சில முதலாளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை (ஆலிகோபொலி), அரசுக்கு ஆதரவாக இருக்கும் தொழிலகங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும் வாய்ப்பு என்கிற சலுகைசார் முதலாளியம் (குரோனி கேபிடலிசம்) ஆகியவற்றை நாங்கள் (காங்கிரஸ்) கடுமையாக எதிர்க்கிறோம்.
- நாட்டின் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் கிடைக்க வேண்டிய நிதி, வளங்கள், தொழில் செய்வதற்கான வாய்ப்புகள், சலுகைகள் ஆகியவற்றை ஒரு சில நிறுவனங்களோ அல்லது ஒரு சில தொழிலதிபர்களோ மட்டும் தனியுரிமையாகப் பெறுவதை அனுமதிக்க மாட்டோம்.
- ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தரும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு சலுகைகள் அளிப்போம்.
- ஒன்றிய அரசிலும் அரசு நிறுவனங்களிலும் நிரப்பப்படாமல் உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.
- பெருநிறுவனங்கள் வரிச் சலுகை பெறுவதற்கு உதவியாக, புதிய வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தினால் ரொக்க ஊக்குவிப்பு சலுகைகளையும் வழங்குவோம்.
- நகர்ப்புற கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்யவும் புதிதாக உருவாக்கவும் நகர்ப்புற ஏழைகளுக்காகவே நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்துவோம்.
- ஏரி-குளம்-குட்டை போன்ற நீர்நிலைகளைப் பழைய நிலைக்கு மீட்பது, நீர் வளங்களை மீண்டும் புதுப்பிப்பது ஆகிய திட்டங்களுக்கு கல்வித் தகுதியில் குறைந்த, அதிக தொழில்நுட்பம் பழகாத இளைஞர்களைப் பயன்படுத்துவோம். இந்தத் திட்டங்கள் கிராம ஊராட்சி மன்றங்கள், நகராட்சி மன்றங்கள் மூலம் நிறைவேற்றப்படும்.
புதிய சூழலில் எதிர்க்கட்சிகள் தங்களையே அரசாங்கமாக கருதிச் செயல்பட வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அரசை தங்களுடைய செயல்திட்டங்களுக்கேற்ப செயல்பட வைக்க வேண்டும். பெரும் ஆற்றலுடன் அவைக்குத் திரும்பியிருக்கும் எதிர்க்கட்சிகளை, பெரும்பான்மை வலுவுக்கும் குறைவாக உள்ள பாஜக எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்கவே சுவாரசியமாக இருக்கும். எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு.
தொடர்புடைய கட்டுரைகள்
இது மோடி 3.0 அல்ல, மோடி 2.1
2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
மாற்றம் விரும்பிகளுக்கும், விரும்பாதவர்களுக்கும் போட்டி
கட்சித்தாவலைத் தடுக்க என்ன வழி?
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.