கட்டுரை, சட்டம் 7 நிமிட வாசிப்பு
ஆந்திர தலைநகரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதின் பின்னணி என்ன?
ஒரே சமயத்தில் இரு நிகழ்வுகள். பிரதமர் மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிறேன் என்கிறார்; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைநகர் சட்டத்தைத் திரும்பப் பெறுகிறேன் என்கிறார். இரு நிகழ்வுகளிலும் இயற்றப்பட்ட சட்டங்கள் இறந்துபோகின்றன. ஆனால், பின்னணிகளோ வேறு, வேறு!
வேளாண் சட்டங்களின் பின்னணி
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவேன் என்று பிரதமர் மோடி அறிவித்ததைப் போராடும் விவசாயிகளின் வெற்றி என்று ஒரு தரப்பும், வரவிருக்கும் தேர்தல்களில் வெல்வதற்கான உத்தி என்று மறுதரப்பும் கூறிவருகிறார்கள். தலைநகர் டெல்லியைச் சுற்றி ஓராண்டிற்கு மேல் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் தியாகமும், நாடு தழுவிய எதிர்ப்பை ஒட்டி பல மாநிலச் சட்டமன்றங்கள் இயற்றிய தீர்மானங்களுமே மூன்று வேளாண் சட்டங்களின் மரணத்துக்குக் காரணம்.
இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனையுடன் இடைக்காலத் தடை விதித்ததோடு, நிபுணர் குழு ஒன்றையும் நியமித்தது. வழக்கின் இறுதி விசாரணை தொடங்குவதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதோடு, ஒரு வழக்கு விசாரணையின்போது அதையொட்டி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது முறையல்ல என்றும் கருத்து தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள கட்சி தன்னுடைய விருப்பப்படி சட்டங்களை இயற்ற முற்படுகையில், ஏனைய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு வாக்களித்தவர்களின் நலன்களுக்கு அவை விரோதமாக இருப்பின் அச்சட்டங்களை எதிர்த்து, குரல் எழுப்புவதற்கு உரிமை உண்டு.
அதேபோல, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இருப்பின் அவற்றை ரத்துசெய்வதற்கும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. இதற்கெல்லாம் அப்பாற்பட்டும் மக்கள் நினைத்தால் சட்டங்களை மாற்றியமைக்க முடியும் என்ற சரித்திரப் பாடத்தின் அடிப்படையில், போராட்டங்களால் சாகடிக்கப்பட்டதே வேளாண் சட்டங்கள்.
ஆந்திர தலைநகரச் சட்டத்தின் பின்னணி
ஆந்திர பிரதேசத்துக்கு மூன்று தலைநகரங்களை நிர்மாணிக்கும் சட்டம் முதல்வர் ஜெகன்மோகனால் திரும்பப் பெறப்பட்டிருப்பதற்கு, வேளாண் சட்டங்களைப் போல, மக்களுக்கும் அரசுக்குமான போராட்டங்கள் காரணம் இல்லை. இங்கே போராட்டம் நீதிமன்றத்துக்கும், மாநில அரசுக்கும் இடையிலானதாக அமைந்திருந்தது.
தெலுங்கு பேசும் மக்களின் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டதே ஆந்திரப் பிரதேசம். ஆனால் அதிலும் திருப்தியடையாத பகுதியினரால் அம்மாநிலம் இன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் என்று இரு மாநிலங்கள் ஆகிவிட்டன. இப்படிப் பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தின் முதல் ஆட்சியில் பங்கேற்றது தெலுங்கு தேசம் கட்சி.
தெலங்கானாவுடன் ஹைதராபாத் போய்விட்ட நிலையில், ஆந்திரத்துக்காக புதிய தலைநகரத்தை குண்டூருக்கும் விஜயவாடாவுக்கும் இடையில் அமைந்துள்ள அமராவதியில் அமைக்கப்போவதாக முடிவுசெய்தது முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு.
தலைநகருக்காக 33,000 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தியதுடன், மேலும் 50,000 ஏக்கர் நிலங்களைப் பறிக்க முற்பட்டது அப்பகுதி விவசாயிகளிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. தவிர மேற்கிலிருக்கும் ராயலசீமா பகுதி மக்கள் கடற்கரையோர ஆந்திரப் பகுதிகளிலேயே கட்டமைப்புகள் பெருகிவருவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.
இதையெல்லாம் பொருட்படுத்தாத முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு அமராவதி தலைநகரத்தை நிர்மாணிக்க முற்பட்டார். ஏராளனமானோர் அங்கே மனைகளைப் பெற்றனர். அதன் ஒரு பகுதியாக அங்கிருந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் வீட்டு மனைகள் சலுகை விலையில் அளிக்கப்பட்டன.
ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்
ஆட்சி மாற்றம் நடந்தபோது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதன் முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்றார். வெறும் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தெலுங்கு தேசம் எதிர்க்கட்சியானது.
எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களைத் திருப்திப்படுத்துவதாக எண்ணி, ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் என்று அறிவித்த ஜெகன்மோகன் அரசு, இதற்கென்று புதிய சட்டத்தையும் உருவாக்கியது. அமராவதியில் சட்டமன்றம், கர்நூலில் உயர் நீதிமன்றம், விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரம் என்று புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தெலுங்கு தேச கட்சி போராட்டங்களை நடத்தியது. அவற்றிற்குப் போதிய ஆதரவு இல்லாத நிலையில், நீதிமன்றத்தை அணுகியது.
புதிதாகப் பதவியேற்ற ஜெகன்மோகன் அரசு முந்தைய சந்திரபாபு அரசின் முறைகேடுகளை ஆராய முற்பட்டது. இதன் ஒரு பகுதியாக அமராவதி தலைநகரத்திற்காக நிலங்கள் கைகப்படுத்தல் நடவடிக்கைகளிலுள்ள ஊழல்கள் நடந்திருப்பதாகச் சொல்லி ஆராய முற்பட்டது. முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஊழல் தடுப்புக் காவல் பிரிவிற்கு அரசு உத்தரவிட்டது.
இத்தகு சூழலில், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தன்னுடைய பெயருடன், உச்ச நீதிமன்றத்தில் இப்போது பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியின் இரண்டு மகள்களின் பெயர்களும்கூட அந்த அறிக்கையில் உள்ளது என்று குறிப்பிட்டு, அதன் உள்ளடக்கம் வெளியானால் சமூகத்தில் தனது அந்தஸ்து குறைந்துவிடும் என்று உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி அவசரமாக இரவில் உயர் நீதிமன்றத்தைக் கூட்டினார். காவல் துறையால் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை எந்த ஊடகமும் சமூக வலைதளங்களும் வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அடுத்து, தனி நீதிபதி சோமயாஜுலு சிறப்புக் காவல் படை விசாரணைக்கும், அமைச்சரவைத் துணைக் குழு முடிவிற்கும் இடைக்காலத் தடை விதித்தார்.
இதனூடாகவே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பற்றி அவதூறாக தொலைபேசியில் பேசிக்கொண்ட, ஒரு மேனாள் உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் மற்றொருவருக்கும் இடையிலான நடைபெற்ற உரையாடல் குறித்து விசாரணை நடத்தும்படி மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் கேட்டுக்கொள்ளப்பட்டார் (இவர்தான் இப்போது ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் பலரது செல்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மையறியும் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்).
இதையெல்லாம்விட மிக அதிர்ச்சிகரமான விஷயமாக ஓர் உத்தரவை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்தது. ஆட்கொணர்வு மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் ராகேஷ் குமார், உமாதேவி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 1.10.2020 அன்று பிறப்பித்தது அந்த உத்தரவு இதுதான்: “இவ்வழக்கின் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்திற்குப் போதிய உதவியை அரசுத் தரப்பில் அளிக்கவில்லை என்றால், இம்மாநிலத்தில் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்று குடியரசுத் தலைவைருக்கு பரிந்துரைக்க நேரிடும்!”
இரு தரப்புகளுக்கு இடையில் நடைபெறும் ஒரு வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி உயர் நீதிமன்ற நீதிபதிகள் இப்படியொரு உத்தரவை வெளியிட்டது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு செயலாகும்.
இந்தச் சூழ்நிலையில்தான் நீதிமன்ற வரலாற்றில் நடைபெறாத மற்றொரு சம்பவமும் நடைபெற்றது. முதல்வர் ஜெகன்மோகன் 11.10.2020 தேதியில் புகார் கடிதம் ஒன்றை அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதினார். அதில், ‘ஆந்திரத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியிலிருக்கும் என்.வி.ரமணா மீது கூறப்பட்டுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
ஜெகன்மோகன் இந்த விவகாரத்தில், ‘ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் பின்னணியில் இருப்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா; ஆந்திரத்தைச் சேர்ந்த அவரது தலையீடு ஆந்திர உயர் நீதிமன்றத்தின் வழக்குப் பட்டியல் நிர்ணயம் வரை தொடர்கிறது; அவர் சந்திரபாபுவுடன் சேர்ந்துகொண்டு சதியில் ஈடுபட்டிருக்கிறார்’ என்கிற அளவுக்குச் சென்றுவிட்டார். அடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நோக்கி ரமணா நகரவிருக்கும் சூழலில்தான் இவ்வளவும் நடக்கின்றன.
இதைத் தொடர்ந்து, ‘உயர் பதவியில் இருப்பவர்கள் சிலரே நீதிபதிகள் மீது சமூகவலைத்தளத்தில் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து வழக்கு தொடுக்கப்பட வேண்டும்’ என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தால் சிபிஐக்கு உத்தரவிடப்படுகிறது.
இப்படியெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் நடைபெறும் மோதல்களுக்கு இடையேதான் மூன்று தலைநகரச் சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதுங்கிப் பாயும் திட்டமா?
தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, நீதிபதிகள் சத்யநாராயண மூர்த்தி, சோமயாஜுலு அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணையை ஆரம்பித்தவுடனேயே மாநில அரசின் சார்பில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ‘தலைமை நீதிபதி தவிர மற்ற சில நீதிபதிகளுக்கும் அமராவதியில் சலுகை விலையில் வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் இவ்வழக்கை விசாரிக்காமல் தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. அம்மனுவை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையில்தான் ஜெகன்மோகன் அரசு மூன்று தலைகரங்கள் நிர்மாணிக்கும் சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவும், பரவலான கருத்துகேட்புக்குப் பின் புதிய சட்டம் கொண்டுவருவதைப் பற்றி பரிசீலிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதாவது, இனி இந்தச் சட்டம் காலாவதியாகிவிடும் என்பதால், அதுபற்றி மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.
என்ன பேச்சை இது உண்டாக்கியிருக்கிறது என்றால், ஆந்திர அரசின் விருப்பத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அமைந்தால், மேல் முறையீட்டுக்கு அரசு உச்ச நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். ஜெகன்மோகன் அரசு யார் மீது புகார் அளித்ததோ அவரே இப்போது அங்கே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவர்தான் இந்த வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்வார். இந்தச் சட்டத்தின் முடிவு என்னவாகுமோ என்ற கேள்வியே ஜெகன்மோகன் முடிவுக்குப் பின்னணியாக ஊகிக்கப்படுகிறது. ஆக, உச்ச நீதிமன்றத்தில் இப்போது பதவியில் இருப்பவர்கள் ஓய்வுபெற்று, காட்சியிலிருந்து அகன்ற பின் மீண்டும் புதிய சட்டத்தை ஆந்திர அரசு உருவாக்கிக்கொள்ளும் வகைக்கான ஏற்பாடாகவும் இது இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
விஷயம் என்னவென்றால், ஒரே காலகட்டத்தில் இரு இடங்களில் சட்டங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மரணக் குழியில் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், வெளியே சொல்லப்படும் காரணங்களும், பின்னே பேசப்படும் கதைகளும் வேறுவேறாக உள்ளன!
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Sudanthirathasan 3 years ago
காலக் கொடுமை
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
V balasubramaniam 3 years ago
கண்கட்டப்பட்ட தேவதை சிரிக்கிறாள்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.