இன்னொரு குரல் 10 நிமிட வாசிப்பு

ராஜன் குறைக்கு பி.ஏ.கிருஷ்ணன் பதில்

பி.ஏ.கிருஷ்ணன்
10 Nov 2021, 5:00 am
7

சாவர்க்கர் தொடர் கட்டுரைகளுக்கு, ராஜன் குறை கிருஷ்ணன் எழுதியிருந்த எதிர்வினையைப் பார்த்தேன். அதற்கான என்னுடைய மறுவினை இது.

ராஜன் குறை கிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்:

1. சாவர்க்கரைப் பற்றி வரலாற்றுரீதியாக அறிய இப்போது என்ன அவசியம் வந்தது?

2. இத்தொடரின் மூலம் எந்தப் புதிய வெளிச்சமும் பாய்ச்சப்படவில்லை. இது சொல்லும் தகவல்களினால் என்ன கூடுதல் புரிதல் வந்துவிடப் போகிறது?

3. சாவர்க்கர் நல்லவர்தான்; பின்னால் கெட்டுப்போனார் போன்ற தகவல்களைச் சொல்கிறது.

4. இது ஒரு தனிமனிதரைப் பற்றிய வர்ணனை. வரலாற்றின் கொடுங்கோலர்கள் பலர்களும் மேற்குலகில் முதலில் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். இவர்களைப் போன்ற அருவருக்கத்தக்க ஒருவர் மேல் அனுதாபத்தையும் மரியாதையையும் ஏற்படுத்த கட்டுரை முயற்சிக்கிறது.

5. அந்தமான் சிறையில் இருந்த பதான் வார்டர்கள் அவரைக் கொடுமைப்படுத்தியது, அவரது முஸ்லீம் வெறுப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற யூகம் நகைப்பிற்குரியது மட்டுமல்ல; மிக மோசமான திசைதிருப்பலும்கூட.

6. கிருஷ்ணனுடைய நோக்கம் சாவர்க்கர் பாசிஸ்ட், நாஜி மனோநிலை கொண்டவர் என்றால், பெரியாரும் அப்படித்தான் என்று சொல்வது. இந்த அபத்தமான ஒப்பீடு உங்கள் கண்களில் படாமல்தான் நீங்கள் பிரசுரித்தீர்கள் என நான் நம்பவில்லை. கருத்துக்களுக்கு கட்டுரையாளரே பொறுப்பு, ஆசிரியரல்ல என்று நீங்கள் கூற முடியும்தான். ஆனாலும், இந்த ஒப்பீடு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆகையால், சமஸும் பொறுப்பு.

7.  "காந்தியும் தன்னளவில் இந்துக்களை ஒன்றுதிரட்டினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்." அப்படியென்றால் என்ன பொருள் என்று புரியவில்லை. காந்தி எங்கே இந்துக்கள் எல்லாம் ஒன்றுபட வேண்டும் என்று அமைப்பாக்கம் செய்தார்? எப்போது செய்தார்?

8. இதுபோன்ற சாவர்க்கர் மீள்வாசிப்புகளில், அவர் பார்ப்பனர் என்று கூறப்பட்டாலும் ஏன் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இயக்கங்களை மராத்திய பார்ப்பனர்கள் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து கட்டுரை ஆராயவில்லை.

9.   சாவர்க்காரின் கருத்தியலை முக்கியத்துவப்படுத்தாமல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விவாதித்து அதைவைத்து வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் முயற்சியை செய்கிறீர்கள். அது சாவர்க்காருக்கு வாசகர்களிடையே நன்மதிப்பை ஈட்டித்தரும் செயலாகவே முடியும். பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலைதான். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

என்னுடைய பதில்கள்:

1. சாவர்க்கரைப் பற்றி வரலாற்றுரீதியாக அறிய அவசியம் இல்லை என்று இவர் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவை இன்று ஆளும் கட்சியின் கருத்தியல் முதல்வர்களின் ஒருவராக அவர் அறியப்படுகிறார். இப்போதுதான் அவரை முழுமையாகக் காய்தல் உவத்தில் இன்றி அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும், சாவர்க்கரைப் பற்றி குறிப்பிடத்தக்க இரண்டு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன. ஆங்கிலப் பத்திரிகைகள் பலவும் இதுபற்றி விவாதித்துவருகின்றன. என்னிடமே ‘அவுட்லுக்’ பத்திரிகை கேட்டு வாங்கி வெளியிட்டது. தமிழிலும் இப்படி விவாதிக்க வேண்டும் என்று எண்ணி திரு.சமஸ் என்னிடம் கேட்டுக்கொண்டதால் ‘அருஞ்சொல்’லுக்கு இத்தொடரை நான் எழுதினேன். அவசியம் இல்லை என்று வாசகர்கள் நினைத்தால் தொடர் சுவடு தெரியாமல் மறைந்துவிடும்.

2. தமிழ் மக்களிடம் சாவர்க்கரைப் பற்றிப் புரிதலே இல்லை என்பதுதான் உண்மை. இவ்வுண்மையை தொடரின் முதல் கட்டுரை தெளிவாகச் சொல்கிறது. “சாவர்க்கரைத் தூக்கிப் பிடிப்பவர்களும் அவதூறு  செய்பவர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். முதல் தரப்பினர், இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள். இரண்டாம் தரப்பினரில் இன்று பல கட்சிகளையும் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். கஷ்டம் என்னவென்றால், இரு தரப்பினரிலும் பெரும்பான்மையினருக்கு உண்மையான வரலாறு மீது ஈடுபாடு கிடையாது. உண்மையான வரலாறு என்ன? யார் உண்மையான சாவர்க்கர்? மிக எளிய முறையில் இவற்றைப் பற்றி, நான் எழுதலாம் என்றிருக்கிறேன். எனக்கு உறுதுணையாக நின்றவை மூன்று புத்தகங்கள்.” இப்படி எழுதிவிட்டுதான் புத்தகங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத் தவிர சாவர்க்கர் எழுதிய புத்தகங்களிலிருந்தும், ஜோதிர்மயா சர்மா எழுதிய இந்துத்துவா புத்தகங்களிலிருந்தும் பல மேற்கோள்களைக் காட்டியிருக்கிறேன். புதிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறதா இல்லையா என்பதையும் கூடுதல் புரிதல் வந்திருக்கிறதா இல்லையா என்பதையும் வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். என்னிடம் பேசிய அனைவரும் சாவர்க்கரைப் பற்றி இவ்வளவு விரிவாக தமிழில் வந்ததேயில்லை என்றார்கள். தொடரைக் குறித்து வந்திருக்கும் பல பதிவுகளும் அவ்வாறே சொல்கின்றன. போதாதவற்றை அடுத்தடுத்து எழுதுபவர்கள் பூர்த்திசெய்வார்கள்.

3. இத்தொடர் சாவர்க்கரின் வீழ்ச்சியைப் பேசும் தொடர். முழு வீழ்ச்சிக்கு முன் அவர் மீது காந்தி, அம்பேத்கர், போஸ், நேரு, அக்காலத்திய கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பலர் மிகவும் மதிப்பு வைத்திருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. அவர் இந்து மகாசபையின் தலைவர் என்ற முறையில், காங்கிரஸை வசைப்பாடிக்கொண்டிருந்தபோதும் இம்மதிப்பு மாறவில்லை. உதாரணமாக காங்கிரஸ் இயக்கத்தின் மிக முக்கியமான பத்திரிகையான ‘நேஷனல் ஹெரால்டு’  1942-ல் இவ்வாறு சொல்கிறது: ‘நம் காலத்தில் வரலாற்று படைத்த சில மனிதர்களில் அவர் ஒருவர். மக்களை விழிப்படைய வைத்தவர்’  (He is one of the few men of our age who has made history and contributed to (the) reawakening of the people). சாவர்க்கர் மீது விமரிசனங்களை வைப்பது வேறு. வரலாற்றை மறைப்பது வேறு.

4. வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதும்போது, தனிமனிதப் பண்புகளைப் பற்றி எழுதாமல் இருக்கவே முடியாது. பெரியாரைப் பற்றி எழுதும்போது அவர் ராஜாஜியின் நண்பர். தனிப்பட்ட முறையில் நாகரிகமாகப் பழகுவார் என்பதைச் சொல்லாமல் அவருடைய அரசியல் வரலாறு அனேகமாக எழுதப்பட்டதே இல்லை என்று சொல்லலாம்.  ராஜன் குறை ஆதரிக்கும் திமுக பிறந்ததே பெரியார் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவை எதிர்த்துத்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டு இவ்வாறு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. கட்டுரை சாவர்க்கரை காய்தல் உவத்தல் இன்றி உண்மைகளின் அடிப்படையில் அணுகுகிறது. இவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வரலாற்றைத் திரிக்க முடியாது. நான் சொல்வது பொய் என்றோ, தவறு என்றோ நிறுவுவதற்கு ராஜன் குறை முடிந்தால் முயற்சிசெய்யலாம். ஹிட்லர், முசோலினி போன்ற கொடுங்கோலர்களை இவர் குறிப்பிடுவது குறித்து, பத்திரிகையாளர் திரு. அதியமான் ஏற்கனவே பின்னூட்டத்தில் எழுதிவிட்டார். நான் மேலும் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

5. அந்தமான் சிறையில்தான் சாவர்க்கர் மாறினார் என்று சொல்வது நகைப்பிற்குரியது என்று ராஜன் குறை சொல்வது  நகைப்பிற்குரியது. சாவர்க்கர் வாழ்க்கையைப் பற்றி குறைந்தபட்சம் அறிந்தவர்கூட இவ்வாறு சொல்ல மாட்டார்கள்.  அவர் எழுதிய 1857 முதல் சுதந்திரப் போரைப் பற்றிய புத்தகம் 1909-ல் வெளிவந்தது.  இந்து முஸ்லிம் ஒன்றுசேர்ந்து போராடியதைப் பறைசாற்றும் புத்தகம். அவர் ‘இந்தியா பல மதங்களின் வானவில்’ என்று சாவர்க்கர் பேசியதைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். அது காந்தி முன்னிலையில் 24 அக்டோபர் 1909-ல் பேசியது. அதைக் கேட்ட ஆசஃப் அலி சாவர்க்கரை வெகுவாகப் பாரட்டினார் என்பது வரலாறு. 1910-ல் சாவர்க்கர் கைதாகி அந்தமானுக்கு அனுப்பப்படுகிறார்.  திரும்பி 1937-ல் வரும்போது இஸ்லாமியர்களை எதிரிகளாகப் பார்ப்பவராக மாறுகிறார். சிறையில் சாவர்க்கர் இஸ்லாமிய வார்டர்கள் கைகளில் அனுபவித்த துன்பத்தைப் பற்றி விக்ரம் சம்பத் விரிவாக தன் நூலில் எழுதியிருக்கிறார். சாவர்க்கரும் ‘My transportation for Life’ என்று தான் எழுதிய புத்தகத்தில், சிறையில் நடந்தவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். இது அவர் சொல்வது: ‘அங்கு இருந்த இளநிலை அதிகாரிகளும், ஜமேதார்களும் வடிகட்டிய அயோக்கியர்கள். வெறிபிடித்த இஸ்லாமியர்கள் – பதான், பலூச்சி, பஞ்சாபி, சிந்தி இனக்குழுவினர்.  எல்லோரையும்விட அரசியல் கைதிகள்தாம் அவர்கள் கையில் மாட்டிக்கொண்டு துன்புற்றனர் – ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். இவ்வதிகாரிகள் கடினமான வேலைகளைச் செய்யும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினர். கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று அவர்களைப் பயமுறுத்தினர். அவர்களுக்கு எதிராக பல புகார்களை மேலதிரகாரிகளிடம் அளித்தனர். அவர்கள் வாழ்க்கையை நரகமாக்கி, மீளும் ஒரே வழி இஸ்லாமியராக மதம் மாறுவதுதான் என்றனர். வயதில் இளையவர்கள், அறியாதவர்கள் மற்றும் வேறுவழியில்லாதவர்கள் வெகு எளிதாக இவர்கள் வலையில் வீழ்ந்தனர்.” (There the warders, the petty officers, and the jamadars are double-distilled rascals and bigoted Mussulmans -the tribe of Pathans, Baluchis, Panjabis and Sindhees. The political prisoners, of all others, suffer most at their hands, because the bulk of them are Hindus. These officers subject them to the hardest labour, threaten them with the severest punishment and lodge false complaints against them. They thus make their lives a hell for them, and out-and-out tell them to become Mussulmans to escape from these throes. The young, the ignorant and the helpless easily succumb to them). ஆகவே, புத்தகங்களில் சொல்லியிருப்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். எனவே சாவர்க்கரின் மாற்றத்திற்கு சிறை அனுபவமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை மறுப்பது அறியாமையை ஆறத்தழுவிக் கட்டிக்கொண்டிருப்பவர்களால்தான் முடியும்.

6. பெரியாரும் சாவர்க்கரும் கிட்டத்தட்ட ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. சாவர்க்கர் இஸ்லாமியரை வசை பாடியதைவிட பெரியார் பிராமணர்களை அதிகம் வசை பாடியிருக்கிறார் என்பது உண்மை. ‘அருஞ்சொல்’ ஆசிரியர் திரு.சமஸ் என்னிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறவர். ஆகையால், இதைப் பற்றி மேலும் எழுதி அவருக்குச் சங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை.

7. காந்தி இந்துக்களை ஒன்று திரட்டவில்லை என்று வரலாற்றை மறந்தவர்கள் மட்டுமே சொல்ல முடியும். காந்தி பூனாவில் உண்ணாவிரதம் இருந்தது எதற்காக? மதமாற்றத்தை எதிர்த்தது எதற்காக? தீண்டாமையை எதிர்த்தது எதற்காக? காந்தி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்தார் என்பது எவ்வளவு உண்மையோ, அவர் இந்துக்களை ஒன்றுதிரட்ட முயன்றார் என்பதும் அவ்வளவு உண்மை. இந்துக்களை எப்படி ஒன்றுதிரட்ட முயன்றார், இதன் வழியே அவர் எதைச் சாதிக்க முயன்றார் என்கிற இடத்தில்தான் காந்தியும், சாவர்க்கரும் வேறுபடுகிறார்கள்.

8. இந்தத் தொடர் ஆர்.எஸ்.எஸ். பற்றியோ, இந்து மகாசபையைப் பற்றியோ அல்ல. இது சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பார்ப்பனர்கள் ஏன் அதிகமாக இருந்தார்கள் என்பதை நிச்சயம் ஆராயலாம். இப்படி இந்தியாவின் ஒவ்வொரு அமைப்பிலும் யார் யார் அதிகம் இருக்கிறார்கள் என்பதையும் ஆராயலாம். ஆனால், அது இந்தத் தொடரின் நோக்கம் இல்லை. 

9. கட்டுரையை மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தாலும் கட்டுரை முழுவதும் சாவர்க்கர் கருத்தியல்ரீதியாகத்தான் பெரும்பாலும் அணுகப்பட்டிருக்கிறார் என்பது விளங்கியிருக்கும். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் வாசகர்களுக்கு அவரைப் பற்றி முழுப் புரிதல் வேண்டும் என்பதற்காகப் பேசப்பட்டிருக்கிறது. தொடரில் சாவர்க்கர் கடுமையாகவே விமர்சிக்கப்பட்டிருக்கிறார். வரலாற்றை எழுதும்போது எந்தக் கண்ணாடியும் அணிந்துகொண்டு விமர்சனம் செய்ய முடியாது; கூடாது. அடிப்படையில் நான் பிரிவினையை வெறுக்கும், இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும், மத, இனவெறியை அடியோடு ஒதுக்கும் நேருவியன். குறுங்குழுவாதம் பேசுபவனோ அல்லது பேசுபவர்களுக்குத் துணை போகும் கட்சிகளை - அமைப்புகளை - ஆதரிப்பவனோ அல்லன்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   2 years ago

இவர் வேறெப்படி சொல்வார் 😜

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Periyakaruppan   2 years ago

பெரியாருக்கும் சாவர்க்கருக்கும் மட்டுமல்ல, பெரியாருக்கும் ஹிட்லருக்குமே வித்தியாசம் இல்லை. பிராமணர்களை தன் கடைசி பேச்சு வரை கொலை செய்யச் சொன்னவர் அவர். பிராமணர்கள் கொல்லப்படாது இருப்பதன் காரணம் வாய்ப்புக் கிடைக்காததுதான். மத்திய அரசு மிகக் கடுமையாகச் செயல்படும் என்ற பயம் இருப்பதாலதான். பிராமண வெறுப்பை பிராமண எதிர்ப்பு என்று சொல்வது திராவிட இயக்கத்தினர் மனச்சாட்சியை விற்று விட்டுத் திரிபவர்கள் என்பதைக் காட்டுகிறது. . தமிழகம் முழுவதும் இனவெறியை இன்றுவரை விதைத்து வருபவர்கள் திராவிட இயக்கத்தினர். அவர்கள் தொடரை எழுதியவருக்கு வெறி என்று சொல்வதற்குக் கூச்சப்பட வேண்டும்.

Reply 1 11

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   2 years ago

காங்கிரஸ், முஸ்லீம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சவார்க்கரைப் பாராட்டினர் என்றால் அது அவர்களுடைய நேர்மையும் பெருந்தன்மையும் ஆகும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   2 years ago

சாவர்க்கரும் பெரியாரும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் என்பது தனது கருத்து என்று தெளிவாக சொல்லிவிட்ட ஒரு நபரைப் பற்றியும் அவர் இந்தக் கட்டுரையில் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருப்பது தேவையற்றது. இஸ்லாமியர்கள் எந்த சாதிப் படிநிலையை வரலாற்றின் நெடுகிலும் ஒழுகிக் கொண்டு வந்தார்கள்? தீண்டாமையால் இன்னலுற்ற இந்து மதத்தினர் (அவர்கள் இந்துக்கள் என்றே கருதினாலும்) இஸ்லாமுக்கு மாறினார்கள். இந்தியாவில் இஸ்லாமியர் - பார்ப்பனர்கள் இருவரையும் ஒரே நிறையில் வைத்துப் பார்க்கவே முடியாது. சாவர்க்கரின் இஸ்லாமியர் வெறுப்பும், பெரியாரின் பிராமண எதிர்ப்பும் ஒன்றுதான் என்று சொல்லும் ஒருவர், தனது கருத்து வெறியின் உச்சத்தை அடைந்து விட்டார். இந்த விஷயத்தில் எனக்கு ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாக தெரிகிறது. Editorial decision on what to publish and what to avoid is pathetic!

Reply 7 2

Ravikumar   2 years ago

Periyar and Savarkar are not same. Periyar explicitly asked to kill 3% of the population. He echoed blunt racist comments in many places. Savarkar created cultural nationalism and asked other religions to adopt Indian culture and did not expect them to change religion or called for killing people belonging to specific religion.

Reply 1 2

raj dev   2 years ago

Periyar himself denied his intention is not to kill Brahmins fewer times. His sole intention is to make Brahmins give way for other suppressed communities to taste the fruits of democracy. Here Brahmins are an oppressing group whereas Muslims are not. Muslims are given Constitutional safeguards whereas Brahmins are not. That tells the difference.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

முன்னோர்கள் செய்த தவறை முன்னிறுத்தி இன்றைய செயல்களை நியாயப்படுத்துவது சரியான செயலா? கைதிகளை துன்புறுத்துவது பல ஆயிரம் வருடங்களாக நடக்கும் கொடுமைதானே.

Reply 5 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மனித உரிமைபிரிட்டிஷ் இந்தியாஇந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?திட்டங்களும்தத்துவம்குழப்பவாதிகள்சிலம்புநீதிபதி சந்துருசிறை தண்டனைசாலட்ராஜீவ் காந்தி கொலை வழக்குஎடுபடுமா இந்தியா கூட்டணி?பக்கங்களுக்குள் சிக்கித் திணறாத வரலாற்றுப் பெட்டகம‘மற்றும்’ ஏன் ‘And’ ஆகாது?சமஸ் கி.ரா. பேட்டிஆட்சி நிர்வாகம்அறுவடைதிருமூர்த்திவாசகர்கள்தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேபோர் – காதல் – அரசியல் - கள விதிகள்சிறந்த நடிகர்ஜெய்லரும்: வெகுஜன ரசனையின் சீரழிவுகாவிரி நதிசாதி நோய்க்கு அருமருந்துயூத மதம்பர்வேஸ் முஷாரப்: அறிவாளியுமல்லதிருவாரூர் தேர்முரசொலி செல்வம் பேட்டியாத்திரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!