சிறுகதை, கலை 60 நிமிட வாசிப்பு

நோய்ச் சொர்க்கம்

தூயன்
19 Sep 2021, 12:00 am
0

றந்துபோனவரை எப்படித் தொலைந்ததாக உரியவர்களிடம் சொல்வது? நடுவயதுக்காரருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இளைஞனிடம் இன்னொரு முறை விளக்கமாகக் கூறும்படி கேட்டார். “முதலில் இது உடல் உழைப்புக்கான வேலை கிடையாது. அதை முதலில் சொல்லிவிடுகிறேன். மூளைக்கானது. உங்களுடன் பழகியதிலிருந்து நீங்கள் மூளை உழைப்புக்கானவர் என்று தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்தத் தேர்வு.” அவர் தலையசைத்தார். அவன் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டான். “வேலை ஒன்றே ஒன்றுதான். அதைச் செயல்படுத்துகிற இடமும் நபரும்தான் மாறிக்கொண்டிருக்கும்.” சட்டைப்பையிலிருந்து மடித்த காகிதத்தை நீட்டினான். அவர் தெருவிளக்கு வெளிச்சத்தில் வைத்துப் பிரித்தார். அதில் பெயர், வயது, ஊர், முகவரி எல்லாம் எழுதப்பட்டிருந்தன. “இந்த முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டும். அது உங்களுக்கு ரொம்ப சுலபம். சீட்டில் இருக்கும் நபர் இறந்துவிட்டார். எப்படி இறந்தார், எவ்வளவு நாள் இதெல்லாம் தெரியாது. உங்களுடைய வேலை அவர் தொலைந்துபோய்விட்டதாகவும் இப்போது உயிருடன் இருக்கிறாரா என்று வீட்டில் உள்ளவர்களிடம் கேட்க வேண்டும். அவர்களும் தொலைந்ததாகவே நம்புவதுதான் வேலை முடிந்ததாக அர்த்தம். நம்பிக்கை அந்த நிமிஷமே வரலாம் அல்லது அடுத்த நாளோ. ஏன் ஒரு வாரம்கூட ஆகலாம். அவர்களின் சந்தேகத்துக்கு எதிரான எல்லாத் தகவலும் உங்களிடம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். இன்னொன்று, வீட்டில் யாராவது ஒருவர் நம்பினாலே போதும்.” அவன் முடிப்பதற்கும் சைக்கிளில் தேநீர் வந்துசேர்வதற்கும் சரியாக இருந்தது.

நடுவயதுக்காரர் அசந்துதான் போனார். தெருக்கம்பத்துக்குக் கீழ் அப்படியே நின்றுகொண்டிருந்தார். சைக்கிள் வந்ததுகூடத் தெரியாமல் சீட்டின் மேல் பார்வை நிலைகுத்தியிருந்தது. இருவருக்கும் அவன் தேநீரை வாங்கினான். சைக்கிள்காரர் என்ன யோசனை என்று விசாரித்துவிட்டு பீடியுடன் அப்பால் போனார். தேநீர் தம்ளரை இளைஞன் நீட்டியும் நடுவயதுக்காரரின் சிந்தனை நிற்கவில்லை. தேநீரை வாங்காமல் “இந்த சீட்டில் இருக்கிறவர் யார்?” என்று கேட்டார். இளைஞன் உதட்டைப் பிதுக்கினான். எப்படிக் கிடைத்ததெனக் கேட்க நினைத்து பின்பு நிறுத்திக்கொண்டார். வேலை சொல்பவரிடம் அது பற்றி விசாரிப்பது தார்மீகம் இல்லை. ஒருவேளை அவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வேலையிலுள்ள பாதகத்தை விளக்கலாம். அதுவும் செய்ய முடியாது என்கிற பதிலில் இல்லை, பின்னால் நடக்கும் சிக்கல்களுக்காக. உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்ததாகச் சொல்ல முடியும். ஆனால், கண்ணுக்கு முன்னால் இறந்துபோன உடம்புடன் அழுது தீர்த்து, சடங்குகள் சூடி, புதைத்தோ எரியூட்டியோ கடந்துபோய்விட்ட ஒருவரை, தொலைந்துவிட்டார் என்றால் யார்தான் நம்புவார்கள்? நடுவயதுக்காரருக்குத் தலை கிறுகிறுவெனச் சுற்றுவது மாதிரி இருந்தது. ஆறியதைக் குடித்து முடித்துவிட்டு “இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறதே” என்று ஆரம்பித்தார். 

“என்ன சிக்கல்?”

“ஒருவேளை இறக்கவே இல்லை என்றால்?” இளைஞன் ஒருகணம் யோசித்தான் “இறந்துவிட்டதாக நம்பிய பிறகு உங்களது வேலை ஆரம்பிக்கும். அதுவரை காத்திருங்கள். விடாமல் கவனிக்க வேண்டும்.” கவனிப்பு என்கிற சொல்லை உச்சரித்த தொனி அவரைச் சீண்டுவதுபோல் இருந்தது. “சரி நன்றாக யோசியுங்கள். நாளை இதே நேரம் சந்திப்போம்.” நடுவயதுக்காரர் அவனுக்குத் தலையசைக்கக்கூட இல்லை. அதுவே பதில் என்று அவன் நகர்ந்துவிட்டான். சீட்டை மறுபடியும் விரித்தார். கண் எட்டும் தூரம்தான் முகவரி. இப்போது நடந்தால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். நினைவின் விளிம்புக்கு முகம் வந்துவிட்டது. உடற்சதைப் பிதுங்க சைக்கிளை மிதித்தபடி வருவார். சிறு நெரிசலுக்கும் இறங்கிவிடுவார். ஈரத்துடன் அணிந்தது மாதிரி உடல் எப்போதும் வியர்த்திருக்கும். ஆமாம், அவரேதான். இறந்து நான்கைந்து வருடங்கள் இருக்கலாம். கடைத்தெரு நெரிசலுக்குள் ஒடுங்கிப்போன வீடு அது. இறந்தபோதுகூட அவ்வளவாகக் கூட்டமில்லை. அடுத்த சில நாட்களில் அந்த வழியாகப் போனபோது வீட்டில் மனைவியைத் தவிர வேறு யாரையும் காணோம். ஆக, இப்போது இருப்பது வயதான மனைவி மட்டும்தான். காதில் செருகியிருந்த பென்சிலை எடுத்து “மனைவி மட்டும்தான்” என்று குறித்துக்கொண்டதுடன் கிட்டத்தட்ட வேலை முடிந்தது என்று சீட்டை மடித்து வைத்துவிட்டு அப்படியே கடைத்திண்ணையில் படுத்துவிட்டார்.

அவரது கணிப்பு மிகச் சரி. இறந்தது அதே நபர்தான். அவருடைய வயதான மனைவியைத் தவிர இறந்தவருக்கு வேறு யாரும் கிடையாது. ஒத்திகை பார்த்தாலும் எப்படித் தொடங்குவதென்கிற நடுக்கம். வீட்டை அடைவதற்குள் வெகு தூரம் நடந்தது போன்று களைப்பு. மதில் கதவைத் திறந்ததும் புழக்கமில்லாத வீட்டின் வீச்சம். பகலிலேயே கால் இடற வைக்கும் இருள் கவிந்த அறைகள். வெகு நேரம் சத்தம் கொடுத்த பின்பு அரணை ஓடுவது போன்று சிறு அசங்கல் மட்டும் கேட்டது. நிலைப்படி தாண்டி உள்ளே நுழைந்ததும் வயதான உருவம் படுத்திருப்பது தெரிந்தது. இறந்தவரின் பெயரைச் சொல்லிக் கேட்டார். கிழவிக்குக் காதில் சரியாக விழவில்லை. உட்கார்வதற்கு சிறிய மரமுக்காலியைப் போட்டது. கூனுடலை நிமிர்த்த முடியாமல் தூணில் சாய்ந்தவாறு நினைவிலிருந்து யாரையோ துழாவியெடுத்து ஒரு பெயரைச் சொல்லி இன்னாரின் மகனா என்று இழுத்தது. இல்லையென்றாலும் கேட்பது போலில்லை. பிறகு அதுவாகவே மகன் இறந்துவிட்ட செய்தி தெரியுமா என்று ஓசையில்லாத அழுகையுடன் ஆரம்பித்து, இறப்பதற்குச் சில நாள் முன்பு பாத்திரம் கழுவி முடிக்கையில் கீழே விழுந்து இடுப்பு ஒடிந்த இடத்தைக் காட்டியது. மருத்துவமனையில் இருந்ததால் மகனைக் கடைசியில் பார்க்க முடியாமல் போனது என்று அழுகையுடன் விசயத்தை நிறுத்திற்று. உங்களுக்கும் இறந்தது தெரியாதா என்று அவிவேகியைப் பார்க்கும் பரிதாபத்துடன் அண்ணாந்தது முகம். நடுவயதுக்காரர் “தெரியும்” என்றார். பின்பு குரலைக் கனைத்துச் சத்தமாக, தொலைந்து போனவர் எப்படி மகன் சாவுக்கு வந்தார் என்று வீடு அதிரக் கேட்டதும் கிழவி முகத்தில் சன்னமான திடுக்கிடல் மட்டும் ஓடியது. கனத்தக் குரலின் அதிர்வுக்கு ஏற்பட்டிருக்கலாம். கிழவி மறுபடியும் அண்ணாந்து “அவர் வந்தாரா” என்றது சந்தேகமாக. மீண்டும் நினைவுக்கூளத்தைக் கிளறச் சென்றுவிட்டு சில கணங்கள் கழித்துக் கோபத்துடன் கணவர் பெயரைத் திட்டியபடி எழுந்தது. அவர்தான் தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்குள் சொல்லாமல் கொள்ளாமல் மகனை அடக்கம் செய்தவரென்று அதற்காகவே வைத்திருந்த கடந்த கால உதாரணங்கள் சிலதைத் துணைக்குச் சேர்த்து கணவரைச் சபித்துத் தீர்த்தது. சட்டென மூங்கில் தடியை ஓங்கித் தரையில் தட்டி “அந்த மனுஷன் எங்காவது கிடந்து சாகட்டும்” என்று உடல் ஆட்டத்துடன் உள்ளே போய்விட்டது.

“அன்றைக்கே இரண்டு முறை வீட்டிற்குச் சென்று நான் கூறியதை நம்பியதா என்று உறுதிப்படுத்திவிட்டேன். என்னைப் பார்த்ததும் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு இங்கு வராத போ என்று தடியைத் தூக்கி வீசியது. நல்லவேளை மேலே விழவில்லை. ஆனால் யாரோ ஒரு வயதானவர் கிழவி தூக்கி வீசிய தடிக்கு அடி வாங்கிப் போனதாக எச்சரித்தது.” சொல்லி முடித்ததும் நடுவயதுக்காரர் பலமாகச் சிரித்தார். இளைஞனுக்குப் பெரிதாகச் சிரிப்பு வரவில்லையே. வேலை முடிந்ததைக் கேட்டு பிரமித்துவிட்டிருந்தான். வெகு சுலபமாக முடித்துவிட்டாரென்று ஆச்சரியம். எப்படி விலாசத்தை இவ்வளவு பெரிய தெருவுக்குள் தேடி எடுத்திருப்பார் என்பதும் விளங்கவில்லை. ஆனால் முன்னமே நடுவயதுக்காரர் இதைச் சொல்லியிருந்தார், “புதுக்கோட்டையில் நகரத்தின் பதினாறு தெருவில் இருக்கும் அத்தனை பேர்களின் பெயரும் எனக்குப் பரிச்சயம் உண்டு. யாராவது எந்தப் பெயரையாவது சொன்னால் போதும், அவர்களுடைய மொத்த அடையாளமும் விலாசத்துடன் ஞாபகத்து வந்துவிடும். அதே சமயம் வெறும் அடையாளத்தைச் சொன்னால் பெயர் ஞாபகத்திற்கு வரவே வராது.” வித்யாசமானவர்தான். ஆனால் இவருக்கு நேர் எதிரான ஒருவரிடம்தான் இளைஞன் முதன்முதலில் வந்து சேர்ந்தான். அப்போது இளைஞனுக்கு தன்னைப் பற்றி எதுவும் நினைவிலில்லை.

ஆடையகப் பணியாளர்கள் அவனை முதியவரிடம் சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டனர். முதியவருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன வேண்டும் என்றார். அவன் மருண்டதுபோல விழித்தான். சில நிமிடம் கழித்து “உங்கள் பெயர் என்ன?” என்றான் முதியவரிடம். அப்போதுதான் அவருக்கும் தன்னுடைய பெயர் மறந்துபோனது நினைவுக்கு வந்தது. அவர் சற்றுத் தடுமாறி, பதிலுக்கு அவனைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுச் சமாளித்தார். இளைஞன் உளறலுடன் கண் கலங்கி, உடல் கூசுவதுபோல கோணிக்கொண்டிருந்தான். சொற்கள் உடைந்து விழுந்தன. ஆக்ரோஷமாகக் கண்ணீர் வெளியேறியது. நடுங்கும் விரல்களால் கண்ணீரைத் துடைக்கத் தடுமாறினான். முதியவருக்குச் சட்டென்று அவன் பத்து வயது பையனாக மாறிவிட்டதாகத் தோன்றிற்று. “பரவாயில்லை வேண்டாம் விடு” என்று தேற்றினார். சமாதானமானதும் மறுபடியும் முதியவரிடம் “உங்க பேர் என்ன அய்யா?” என்று கேட்டான். “எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க நீயும் அதே கூப்பிடு” என்றார். சந்தோஷமாகத் தலையாட்டினான். 

ஊரடங்கில் ஆடையகத்தை மூடியதிலிருந்து காவலாளிகள் மட்டும்தான் இரவுக்கும் பகலுக்கும் பூட்டிய கட்டிடத்திற்குக் காவலுக்கு வந்துபோய்க்கொண்டிருந்தார்கள். சிப்பந்திகள் யாரும் வேலைக்கு வருவதில்லை. இப்படியொரு சூழலில் இப்போது புதிய ஆள் வேறு. யார் எதற்காக இங்கு கொண்டுவந்தார்கள், என்ன வேலை இருக்கிறது? நெற்றியில் அடித்துக்கொண்டார் முதியவர். பையனும் இடத்தைவிட்டு நகராமல் பிடித்து வைத்ததுபோல அப்படியே நின்றுகொண்டிருந்தான். யாராவது தன்னை அழைக்கிறார்களா எனத் தயாராக உற்று நோக்கியிருந்தான். முதியவர் வாங்கி வைத்திருந்த இரவுணவைக் கொடுத்தார். நன்றாகச் சாப்பிட்டான். அப்போதுதான் வெளிச்சத்தில் தெளிவாக அவனைக் கவனிக்க முடிந்தது. அழக்கூடிய தோற்றம் இல்லை. ஆஜானுபாகுவான உடலமைப்பு. கறுப்பான தோல். குண்டு விழிகள். கத்தரித்த மீசை. அடர்த்தியான தலைமுடி. உடற்பயிற்சியில் இழைத்த தேகம். ஆனால் மருண்டிருக்கிறான். அசட்டுச் சிரிப்பு. அடிபட்ட நாயின் தழைத்த கண்கள். பிழைக்க இறைஞ்சும் முகபாவம். அவனிடம் என்ன உரையாடுவதென்று முதியவருக்குத் தெரியவில்லை. அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். காவலாளிகளுக்கான சிறிய அறையிலேயே இரவுத் தங்கல் ஏற்பாடானது. ஆடையகத்தின் தரைத்தளத்தின் கீழ் இருக்கும் வராந்தாவில் மற்றவர்கள் அளவளாவிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அவனை ஒப்படைத்துவிடலாமென்று இறங்கிச் சென்றார். யாரும் சரியான தீர்வைக் கூறாமல் சம்மந்தமில்லாமல் “அவன் இங்கேயே வேலை செய்யட்டும்”, “அடுத்த வாரம் மேனேஜர் வருவார் கேட்கலாம்”, “இந்த வராண்டாகூட படுக்க நல்லாத்தான் இருக்கு” என்கிற பதிலுடன் தப்பித்துக்கொண்டனர். சாதுர்யத்தைக் கண்டு முதியவர் வாயடைத்துப் போனார். காலையில் அவனை யார் என்று கேட்டாலும் ஆச்சரியமில்லை. முதியவர் உடைமாற்றும் அறைக்குத் திரும்பும்போது இளைஞன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

முதியவரின் வீட்டில் தங்கிய இரண்டாவது வாரம் அவர் ஆடையகத்திற்கு இரவுப் பணிக்குச் சென்றதற்குப் பிறகு இளைஞன் கையடக்க வரைபடத்துடன் நகரைச் சுற்றத் தொடங்கியபோதுதான் நடுத்தரவயதுக்காரரை முதல் முறை சந்தித்தான். எரியாத விளக்கொன்றின் அடியில் சிறிய சிமென்ட் கட்டையில் அமர்ந்திருந்தார். அவர்தான் இளைஞனைக் கூப்பிட்டார். கவனிக்காததுபோல அழைப்பைத் தவிர்த்துக் கடப்பதற்குள் அருகில் வந்துவிட்டார்.

“யாரையோ தேடுறதுபோல இருக்கே.” குரல் கணீரென்றிருந்தது. “இல்லை ஒன்னுமில்லை.” தயக்கத்துடன் நகரப் போனவனை மறித்து “ஏதோ தேடிட்டே தினமும் இந்த வழியா போறீங்க.” பரிவோடுதான் கேட்டார். எப்படித் தவிர்ப்பதென்று புரியாமல் அப்படியே நின்றவன் தங்கியிருக்கிற விலாசத்தை வேறொரு திசையில் காட்டி அவ்விடத்தைச் சரியாக விளக்குவதுபோல சில கணங்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்துக்குள் வேலையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் ”எங்க வேலை பார்க்கிறீங்க?” எனக் கேட்டுவிட்டார். அவன் தடுமாறிவிட்டான். பிறகு அவரே நடுவீதியில் ஏதோவொரு கடையில் பார்த்ததாக நினைவுகூர்ந்தார். அவன் இல்லையென்று தலையாட்டி ஆடையகத்தில் காவலாளியாக இருப்பதாகப் பதிலளித்தான். “ஓ பின்ன ஏன் எதையோ தேடிட்டே போறீங்க?” அவன் “ஒன்னுமில்லை. எல்லாம் வெறிச்சோடியிருக்குது அதான் வேடிக்கை பார்த்துட்டே போறேன்” என்றான். நடந்துகொண்டே வெளிச்சத்திற்கு இருவரும் வந்தார்கள். அவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். தலை கறுப்பும் வெள்ளையுமாகக் கலைந்து, மழிக்காத பத்து நாள் தாடியுடன் அழுக்குச் சட்டையுடனும் அழுக்கு வேட்டியுடனும் இருந்தார். பொதுவாக இவர்களைப் போன்றவர்கள் யாரேனும் வேலைக்கு அழைத்தால் போவார்கள். குறிப்பிட்ட வேலையென்று இல்லாமல் எல்லா வேலையிலும் பொருத்திக்கொள்வது. அதாவது நுணுக்கம் தெரியாது. ஆனால் ஓரளவு பரிச்சயம் இருக்கும். அதோடு வேலை ஒரே நாளில் முடிகிறதாக இருக்க வேண்டும். காரணம் ஒரே இடத்தில் தொடர்ந்து செய்வதாக இருந்தால் வேலைக்காரனின் போதாமை வெளிப்பட்டுவிடும். இதை வெளிப்படையாகவே அவனிடம் தன்னைப் பற்றிக் கூறியபோது அவர் ஒப்புக்கொண்டார். பதிலுக்கு அவனும் தான் வெளியூர் என்றும் தனியாகத் தங்கியிருப்பதாகவும் ஆடையகத்தில் ஏதும் எடுபிடி வேலை இருந்தால் சொல்கிறேன் என்றவன் மறுபடியும் அவர் அவனது அறை விலாசத்தைக் கேட்டதற்கு இன்னுமொரு முறை விளக்கினான். 

“தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அடையாளம், திசை, இடம் இதெல்லாம் நினைவில் நிற்காது. சட்டுனு வழுக்கிடும். ஊர் பெயர் ஆள் பெயர் நம்பர் அப்படித்தான் ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன். இந்தத் தெருவிலுள்ள எல்லாப் பெயர்களும் எனக்குத் தெரியும். நீங்க பெயரைச் சொன்னால் நான் முழு விலாசத்தையும் சொல்லிவிடுவேன்.” அவரது பெருமை அவனுக்குப் புரியவில்லை. கிளம்புவதாகத் தலையசைத்தான். அவர், “மணி பன்னிரண்டு ஆயிடுச்சா? இஞ்சி டீ வரும் சாப்பிடலாம்” என்றார். “இந்த நேரத்திலா?” “ஆமாம். சாமக் காவலாளிகளுக்கென்றே இந்த வீதியில் ஒருத்தர் சைக்கிளில் வருவார். நன்றாக இருக்கும். நாக்கிலிருந்து கரையாது.” அவன் சட்டைப்பையைத் துழாவினான். “பரவாயில்லை நான் வாங்கித் தருகிறேன். நீங்கள் என் விருந்தாளி” என்று நாடக பாணியில் சிரித்தார். சற்றைக்கெல்லாம் சைக்கிள் பெல் சப்தம் தூரத்தில் கேட்க இரண்டு பேரும் வெளிச்சத்திற்கு வந்தார்கள். குள்ளமாக ஒருத்தர் சைக்கிளில் வந்தார். பாடலை முனகியவாறே இருவருக்கும் தேநீரைப் பிடித்துத் தட்டில் வைத்துவிட்டு நடுவயதுக்காரரிடமிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் புகைக்க ஆரம்பித்தார். தொழில் பற்றி வழக்கமான விசாரிப்புகளை இருவரும் பரிமாறிக்கொண்டிருக்கையில் இளைஞன் கிளம்புவதாக நகர்ந்தான். நழுவுவதற்குச் சரியானச் சந்தர்ப்பம்தானென்று அதைப் புன்னைகையில் காட்டி விடை கொடுத்தார் நடுவயதுக்காரர்.

ரடங்கு அறிவித்ததிலிருந்தே வேலைக்கு வர வேண்டாமென்று ஆடையக நிர்வாகம் முதியவருக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆடையகத்தில் முன்பு பதினோரு காவலாளிகள் இருந்தனர். அதில் வெளியூர்க்காரர்கள் ஐந்து பேரை நிர்வாகம் நிறுத்தியது போக எஞ்சிய ஆறில் இருவர் பகல் பொழுதுக்கு, மீதி நால்வர் இரவுக்கு. இரண்டு காரணங்களைக் காட்டி முதியவரையும் நிறுத்த நிர்வாகம் எவ்வளவோ முயன்றது. வயோதிகத்தைக் குறிப்பிட்டதற்கு அவர் சட்டையே செய்யவில்லை. அதோடு “இரவு எப்படியும் தூக்கம் வரப்போவதில்லை. இங்கே இருந்தால் பொழுதாவது போகும். சம்பளம்கூட வேண்டாம்” என்று கூறிவிட்டு அவர்களது பதிலை எதிர்பார்க்காமல் வரத் துவங்கிவிட்டார். இன்னொன்று, முதியவருக்கு இருக்கும் மறதி நோய். வேலை முடித்துத் திரும்புகிறவர் வேறெங்காவது போய்விடுவார் என்கிற அச்சம். அவ்வளவுக்கு நோய் முற்றிவிடவில்லை என்று அவரும் சமாதானம் சொல்லிவந்தார். ஆனால் நினைவு தொலைதல் அதிகமாகிக்கொண்டுதான் இருந்தது. 

ஆடையகத்தில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு வரை பெருநகரத்தில் குடியேறிவிட்ட தன் ஒரே மகள், மருமகன், பேரனுடன் வாரத்திற்கொரு முறையாவது அவர்களோ அல்லது அவரோ அலைபேசியில் இணைவது வாடிக்கை. நினைவு தொலையத் துவங்கிய ஒருசில சம்பவங்களிலேயே அவரும் சுதாரிக்கவே எண்ணினார். ஜனநெருக்கடியில் ஒருநாள் அலைபேசி எங்கோ காணாமல்போயிற்று. பிறகு, கருவூல அலுவலகத்திற்குச் சென்று திரும்புகையில் ஓய்வூதியக் கோப்புகளையும் சில முக்கியக் காகிதங்களையும் தவறவிட்டார். இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்ததுபோலவே இருந்தது. பொருளியல் தேவைகள் நினைவிலிருந்து நழுவும் வரை மறதி தொந்தரவளிக்காதென அவரும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இப்போது தொலைந்தவற்றுடன் மகளின் விலாசமும் அலைபேசி எண்களும் போய்விட்டன. சில நாட்கள் வரை காத்திருந்தார். புதிய வேலை பற்றியும் உறக்கமிழப்புப் பிரச்சினைக்காக மாறிய புதிய தங்குமிடமும் அவர்களுக்குத் தெரியாது. எனவே அவர்களும் தேடி அலைந்துவிட்டுத் திரும்பியிருக்கலாம் என்று சமாதானம் ஆகிவிட்டார்.

இளைஞன் காலையில் எழுந்து ஆடையக வாசலில் தயாராக நின்றான். தயக்கமான புன்னகை, சொல்லி முடிப்பதற்கு முன்பே தயாராகும் வேகம். முதியவர் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகும்போது அவருக்கு வேண்டியதை எடுத்து வைத்தான். நாய்க்குட்டி கால்களைப் பார்த்தபடியே பின்தொடர்வதுபோல ஆடையகத்திலிருந்து முதியவர் கிளம்பியதும் அவனும் சேர்ந்துகொண்டான். வீடு நோக்கி நடந்தார்கள். ஆளரவமற்ற கடைவீதியை வெறித்துப் பார்த்தான். நிறைய கடைத்திண்ணைகளில் இன்னும் இரவு அரட்டையிலிருந்து காவலாளிகள் மீளவில்லை. சிலர் உடலை முறுக்கிக் கிடந்தனர். பொறுப்பற்ற உலகத்தைப் பார்ப்பதுபோல நடந்துவந்தான். ஆடையகத்திலிருந்து முதியவரின் வீடு நான்கு மைல். அலுப்பூட்டாத நடையாக இருந்தது அவனுக்கு. வீட்டைத் தவறவிடாமல் இருக்க அடையாளங்களை முதியவர் பொறுக்கிக்கொண்டே வந்தார். வீடு வந்ததும் அவனது நடையை நிறுத்தினார். பச்சிளம் குழந்தை மலங்க மலங்க விழிப்பது மாதிரி விழிகள் திசைகளில் மோதி அடங்கின. “இதுதான் வீடு” என்றார். நீண்ட தண்டுச்சாவியைப் போட்டுத் திருகி மூங்கில் தடியால் கதவை முட்டியதும் கதவு மெல்லச் சிணுங்கிச் சாய்ந்தது. இரண்டு அடி கீழிறங்கிச் செல்லும் நிலைப் படிக்கட்டுகள், பிறகு ஒரு பெரிய அறை, சற்றுத் தள்ளி மேற்கூரை தாழ்ந்த கூடத்தில் சமையல் திட்டும் கழுவுத் தொட்டியும். அதற்கு மேல் சிறைச் சன்னலைப் போன்று பிறை வடிவக் கம்பியழி துவாரம். பழைய புடைத்த கருப்பு சுவிட்ச்சுகள். இரும்புக் கட்டில் ஒன்று. இளைஞன் சிரித்தபடியே ஆசுவாசமாக அத்தனையும் கவனித்தான்.

இன்னொருவரின் வீட்டினுள் நுழைந்த கூச்சவுணர்வு இருப்பதுபோலவே தெரியவில்லை. நெடுநாட்கள் கூடவே இருந்துவிட்டு ஊருக்குச் சென்று திரும்பியவன் வீட்டைக் கவனிக்கும் பொறுப்புடன் வந்ததும் கழுவாத பாத்திரங்களைக் கழுவியும் கீழே கிடந்த தொலைவியக்கியைத் தொலைக்காட்சியின் தலையில் வைத்தும் காய்ந்த துணிகளைக் கொடியிலிருந்து எடுத்தும் இறைந்திருந்த காய்கறிகளைக் கூடையில் போட்டுவிட்டு வேறெதுவும் செய்ய வேண்டியுள்ளதாவென சுற்றும் முற்றும் பார்த்தான். அவருக்கே ஒருகணம் அவன் இங்குதான் தங்கியிருந்திருப்பானோ என்று குழப்பிற்று. “சமைத்தா சாப்பிடுகிறீர்கள்? குழம்பு கெட்டிருக்கே.” அவர் வாங்கி முகர்ந்துவிட்டு “அப்படியா?” என்றார் புரியாமல். அவருக்கு சமைத்துப் பழக்கமில்லை. ஊரடங்கில் ஓட்டல்கள் மூடிவிட்டதால் வேறு வழியில்லாமல் உண்டான அனுபவம். பழையதைக் கொட்டிவிட்டு விறுவிறுவென சமைக்க என்ன இருக்கிறது என்று தேடி எடுத்தான். ஒன்றிரண்டு தக்காளியும் உருளைக்கிழங்கையும் தவிர அதிகமில்லை. கோதுமை மாவு இருந்தது. அடுப்பில் மண்ணெண்ணெயைச் சரிபார்த்துவிட்டு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை வேக வைத்து, இன்னொரு பக்கம் மாவை உருட்டித் தேய்த்தான். எண்ணெய் தீர்ந்துவிட்டதால் சப்பாத்தியைச் சுட்டு எடுக்க வேண்டியதாயிற்று. நன்றாகவே இருந்தது. முதியவர் மலைத்துவிட்டார். உருளைக்கிழங்கு வெந்து உடையும் மணம் பசியை மூட்டியது. சாப்பிட்டு முடித்ததும் முதியவர் உள்ளங்கையைத் திரும்பத் திரும்ப முகர்ந்தார். “வாசம் போய்விடாது விடுங்கள்” என்றான் கிண்டலாக. முதியவர் விழிகளை உருட்டி “நல்ல மணம்” என்றார். “ராணுவத்தில் இப்படித்தான் கொடுப்பார்கள். சாமான்யமாகப் பசி அடங்காது. இப்போதான் தெரியுது அதுக்குக் காரணம். இந்த உருளைக்கிழங்கு மசியல் மணம்தான்” என்றார். அவன் காதில் வாங்கியவாறே பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்துக்கொண்டிருந்தான். துளிப் பொருக்கு இல்லாமல் பளீரெனப் பாத்திரங்கள் சிரித்தன.

பழைய வேட்டியைக் கயிற்றில் கட்டித் திரையாகத் தொங்கவிட்டதில் அந்தப் பகுதி சமையலறையாக மாறிற்று. அவனுடைய அசையும் உருவம்கூட வேறொரு வீட்டில் இருப்பதாக அவருக்குக் காட்டியது. முதியவரால் பிரத்யட்சமாக நடப்பவை எதையும் நம்ப முடியவில்லை. உள்ளங்கை மணம் அளித்த லகரியில் தூங்கிப்போனார். பிறகு மாலையில்தான் எழுந்தார். வெகுநாட்கள் உறங்கி வேறொரு காலத்திற்குள் விழிப்பது போலிருந்தது. உறக்க லாகிரி விடாமல் மேலும் மேலும் அழுத்திற்று. பையன் இருக்கிறானா என்று திரும்பியவர் திடுக்கென எழுந்து பரபரக்கத் தேடினார். மனம் கொள்ளும் வேகத்திற்கு உடல் அசையவில்லை. கண்ணாடியை அணிந்து கைத்தடி ஊன்றி எழுவதற்குள் சன்னல் பக்கமிருந்து “பார்த்து மெதுவாக” என்று வந்தான். “நல்ல சாப்பாடு காலையில்.” அவன் சிரித்துக்கொண்டு “மதியம் போய்ச் சாய்ந்தரம் வந்துவிட்டது” என்றான். அவர் திடுக்கிட்டு சன்னலுக்கு வெளியே நோக்கி உச் கொட்டினார். “தூக்கத்தில் ரொம்ப உளறினீர்கள்.” அவருக்கு முன்னால் வந்தமர்ந்தான். முதியவர் “அப்படியா” எனக் கேட்டு “ஆழ்ந்த உறக்கம் வாய்த்தால் உளறல் வரும்” என்று எழுந்தார். குளித்துவிட்டு வருவதற்குள் தேநீர் போட்டு வைத்திருந்ததை இருவரும் வீட்டின் மாடியில் நின்று வெறிச்சோடிய சாலையில் காக்கைகள் கூடியிருப்பதைப் பார்த்தவாறு குடித்தனர். அடிக்கடி கேட்கும் அவசரஊர்திகளின் அலறலும் சவ ஊர்வலச் சத்தமும் தவிர புதிய எந்தக் குரலையும் அவன் கேட்கவில்லை. “இந்த ஊர் ஏன் இப்படி இருக்கிறது? ஏதும் சண்டை நடந்ததா?” அவன் கேட்டதும் முதியவர் சிரித்துவிட்டார். அவனுக்குச் சுருக்கமாக, உலகை நோய் போர்த்தியிருப்பதைக் கூறிவிட்டு அது சம்பந்தமாக அவனிடம் வேறு எதுவும் தெரியுமா என்று கேட்டார். வெகுநேர யோசனைக்குப் பின் நெற்றியைச் சொறிந்து உதட்டைப் பிதுக்கினான். அன்றாடப் புழக்கம் தன்னைச் சுருட்டி இழுத்துக்கொண்டதும்கூட பையன் இடத்தைத் தொலைத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது அவருக்கு.

இருட்டுவதற்குள் ஆடையகத்திற்குச் செல்லத் தயாரானவரிடம் இரவுணவைத் தூக்குடப்பாவில் போட்டுக் கொடுத்தான். அவர் சிரித்தவாறே வாங்கி முகர்ந்தார். மூடியை மீறி வாசம் பொங்கியது. டப்பாவைத் திறந்தார். இலையுடன் பறித்த பிச்சிப்பூக்களைப் போன்று இட்லியும் சட்னியும். “எப்போ இதெல்லாம் செய்த?” ஆச்சரியமாகக் கேட்டார். “நீங்க தூங்கும்போது” என்றான். “ரொம்ப சிரமப்பட வேண்டாம். கடையில் வாங்கிக்கிறேன்”. அதற்கு இளைஞன், “இருக்கட்டும் எனக்கும் சமைப்பது பற்றி பெரிய அனுபவம் இருப்பதுபோல தெரியவில்லை. என் கைக்குத் தெரிகிறது அவ்வளவுதான்”. வீட்டைவிட்டு இறங்கும்போது முதியவரிடம் ஒருசில அடையாளங்களைக் கூறி அப்படி ஏதும் இடங்கள் இருக்கின்றனவா என்று கேட்டான். அது அவனுக்கு எஞ்சியிருந்த நினைவு. இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டான். முதியவர் விசாரிப்பதாக உத்தரவாதம் கொடுத்ததுடன் கூடவே வெளியில் எங்கும் போய்விட வேண்டாமென்று எச்சரித்துவிட்டு நகர்ந்தார்.

ஆனால் அன்றைக்கு அவருக்கே அந்த நிலம் புதியதாகப் பட்டது. மழை பெய்தது போன்ற துலக்கம். தெருக்கம்பங்களுக்கு புதிய விளக்குகள் அணிவித்த மாதிரி பளீரென்றிருந்தன. வயதை மீறிய நடை. சில இடங்களில் கைத்தடியும் சுமையானது. யாரையோ அவசரமாகப் பார்க்கப் போகும் வேகம். தன்னை அறியாமலேயே நினைவுகள் கண்டதையும் அசைபோடத் துவங்கிற்று. இளைஞனைப் போல இதற்கு முன்பு யாரையோ இப்படிப் பார்த்த ஞாபகம். இதேபோலத்தான் அவனையும் ஒப்படைத்தார்கள். இரண்டு நாட்கள் வாயில்லாப் பூச்சியாக இருந்தான். இல்லை இல்லை, நேற்று நடந்ததுதான் எப்போதோ நடந்த தோற்றத்தை அளிக்கின்றன. இவன்தான் அவன். மொய்க்கும் எண்ணங்களைக் கலைத்தவாறே ஆடையகம் வந்து சேர்ந்தார். அவன் வீட்டிற்குள்ளே இருந்துகொண்டான். நடுவயதுக்காரரை இரவில் சந்திக்கும் வரை முதல் இரண்டு வாரங்கள் இப்படியே போயின.

இரவு சரியாகப் பன்னிரண்டுக்கு அரை மணிநேரம் முன்னதாக நடுத்தரவயது ஆளை முன்பு சந்தித்த அதே இடத்தில் இரண்டாவது நாள் சந்திக்கும் திட்டத்துடன், ஆனால் வேறொரு திசையிலிருந்து அந்தப் புள்ளிக்குப் போய்ச் சேர முடிகிறதா என்று பரிசோதிக்க வரைபடத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு இளைஞன் கிளம்பினான். இப்போது அந்த ஆள் அவனுடைய மையப்புள்ளி. வீட்டிலிருந்து அரை வட்ட வடிவில் கிளம்பி கடைத்தெரு வீதியின் கிழக்கு மூலையை அடைந்து பின்பு அவர் அமர்ந்திருப்பதற்கு எதிரான திசையில் போய் நின்றான். “என்ன இந்தப் பக்கத்திலிருந்து?” என விசாரித்தார். “நண்பருடன் பேசிக்கொண்டே இப்படி வந்துவிட்டேன்” என்றான். பிறகு வழக்கமான அரசியல் அங்கலாய்ப்புகளை முடித்துவிட்டு அவன் பேசுவதற்காகக் காத்திருந்தார். அவனும் நீண்ட நேரம் மௌனமாகவே அமர்ந்திருந்தான். அவரிடம் எதையோ கேட்க வேண்டுமெனச் சுமந்துவந்ததை எங்கோ தவறவிட்ட தடுமாற்றம் அவனுக்கு. பிறகு அவராகவே பழைய திரைப்படச் சுவரொட்டியைக் காட்டி அதன் பெயர் கிழிபட்டிருப்பதால் “என்ன படம் என்று தெரியவில்லை?” என்று ஆரம்பித்தார். அவனும் ஆமாமென்று ஆமோதித்தான். 

சற்று நேரத்தில் தேநீர் சைக்கிள் வந்தது. “இப்படியே போனால் வேலை இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது சிரமம்.” சைக்கிள் ஆசாமி சலித்துக்கொண்டு இறங்கினார். “ஆமாம் யாரும் கூப்பிட மாட்டார்கள். நாமாக வேலையைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான்.” நடுவயதுக்காரர் அவருக்குப் பதில் சொல்லியபடி இளைஞனிடம் திரும்பி “தம்பி எனக்காக ஒன்று செய்ய முடியுமா? எனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கேட்டார். “நான் எங்க போய்க் கேட்கிறது?” “எங்கேயும் கேட்க வேண்டாம்.” ஒரு கணம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார் “பதினைந்து வயசிலிருந்து வேலை செய்திட்டிருக்கிறேன். தினமும் ஏதாவதொரு வேலை நிச்சயம் இருக்கும். யாராவது எதற்காவது வந்து கூட்டிப் போய்விடுவார்கள். சில சமயம் போன இடத்தில் வேலையில்லாமல் வெறுமனே இருந்ததும் உண்டு. ஒன்று வேலைக்குப் போதுமான ஆள் கிடைத்திருக்கும் அல்லது அந்த வேலை எனக்குத் தெரிந்திருக்காது. உடனே வீட்டிற்குத் திரும்ப மாட்டேன். வேலை முடியும் வரை அங்கேயே நிற்பேன். தெரிந்த வேலையென்றால் என்னைவிட அனுபவஸ்தனாக நுணுக்கமாக யாரும் செய்கிறார்களா என்று கவனிப்பேன். தெரியாததற்கு அப்படி வேடிக்கை பார்ப்பதுகூட அதைத் தெரிந்துகொள்வதுதான் இல்லையா. அப்படி வேடிக்கையில் பொழுது கழிந்தாலும் வேலை செய்யவில்லையென்று தோன்றியதே இல்லை. ஆக, விசயம் வேலை செய்வதல்ல. வேலையைக் கவனிப்பது. ஆனால் இப்படிக் கவனிக்க ஆரம்பித்த பழக்கம் கொஞ்ச நாளில் மூளைக்குள் எதையோ கிளறிவிட்டுவிட்டது. நான் சொல்வது ஏதும் புரிகிறதா?” இளைஞன் சங்கடமாகச் சிரித்தபடி புரிகிறதெனத் தலையசைத்தான். 

“இல்லை உனக்குப் புரியவில்லை. அதாவது, சூதாடுபவரைவிட சூதாட்டத்தைக் கவனிப்பவர்கள்தான் அதிகம் விளையாடுவதாக ஒரு பழமொழி உண்டு. கவனிப்பு என்று சொன்னேனே அது சாதாரணமா இல்லை. ஒரு விளையாட்டைக் கவனிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டது. ஒரே வேலையைப் பத்து பேர் செய்வார்கள். பார்த்தால் ஒரேமாதிரி தெரியும். ஆனால் பத்து பேரும் பத்து விதமாகத்தான் செய்துகொண்டிருப்பார்கள். முதலில் என்னுடைய கவனிப்பு அங்கு யார் திறமையான வேலைக்காரன், யார் போக்குக்காட்டுகிறான் என வேவுபார்ப்பதுபோல இருந்தது. பிறகு ஒருநாள்.” சட்டென நிறுத்திக் குரலைத் தாழ்த்தினார். “அதாவது எல்லா வேலையும் முடியும்போதும் ஒருமுறை சரிபார்ப்பது வழக்கம். அந்தச் சமயத்தில் அதில் ஒரு சிக்கலை வைத்துவிட்டேன். அடுத்த நாள் அதைச் சரிசெய்ய வீட்டுக்காரர் வேறொருவரை அழைக்க வந்தார். முடிச்சு அவிழ்கிறதா என்று தள்ளி நின்று கவனித்தேன்.” 

“சரியானதா?” இளைஞன் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். “எப்படிச் சரியாகும்? ஆகாது. சிக்கல் எங்கு எப்படி வரும் என்று பொதுவான கணிப்பு உண்டு. அதன்படிதான் வேலைக்காரன் அதைப் பார்ப்பான். ஆனால் இது வேற இல்லையா. அவ்வளவு சரியாகக் கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொருத்தராக முயற்சிப்பார்கள். முடிச்சை விட்டுவிட்டு மற்ற எல்லா வழிகளையும் அவிழ்ப்பார்கள். சில சமயம் நானும் போயிருக்கிறேன். ஒரு கட்டத்தில் யாருக்கும் திராணியில்லை என்றான பிறகு நானே சரி செய்துவிடுவேன். சரி செய்வதென்றால் கண்ணுக்குத் தெரியாதவாறு அதுவே நிகழ்ந்தது மாதிரி.” சற்று நிறுத்திவிட்டு “நீ ஒன்றும் பயந்திடாதே. இதெல்லாம் ஒரு விளையாட்டுதான்” என்று உதட்டைச் சுழித்தார். இளைஞன் பயந்துதான் போனான். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். அவர் தேநீரைக் குடித்துவிட்டு காகிதத் தம்ளரை உருட்டி எறிந்தார். வெகுநேரமாக அண்ணாந்திருந்த தெருநாய் ஓடிச்சென்று முகர்ந்துவிட்டு மீண்டும் அண்ணாந்தது. அவர் தொடர்ந்தார். “யாராவது தினப்படிக்குப் பணம் கொடுத்து சாப்பாடு போட்டாலும் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. அதனால் தூக்கமும் அறவே போயிடுச்சு. நானாக ஏதாவதொரு வேலையை முடிக்காலாம் என்றாலும் அதுவும் குறையாகவே இருக்கிறது. இதோ.” எதிரே இருந்த சுவரொட்டியைக் காட்டி “தெரு முழுக்க இப்படி ஒட்டிருப்பதையெல்லாம் கிழித்து சுத்தம் செய்து பார்த்துவிட்டேன். மனதுக்குத் திருப்தியே இல்லை. இது மாதிரி நிறைய செய்து சலித்துவிட்டேன்.” இளைஞன் குறுக்கிட்டு “இப்போ யாராவது உங்களுக்கு வேலை கொடுத்தால் போதும்.” ரகசியத்தைக் கண்டுபிடித்தது மாதிரி கேட்டான். அவர் அவன் தோளைத் தட்டி “அதேதான்” என்று இரண்டு முறை பலமாகத் தட்டி, “அதுக்கு உன்னுடைய உதவி வேண்டும்” என்று அவனை ஏறிட்டார். “நீ எனக்கு வேலை கொடுக்க வேண்டும்.” இளைஞன் நெற்றியைச் சுருக்கினான். “புரியும்படி சொல்கிறேன். தினம் எனக்கு ஏதாவது வேலை கொடுத்துவிட்டுப்போ. நான் அதைப் பார்த்து வைக்கிறேன். மறுநாள் வேறொரு வேலை. அடுத்த நாள் இன்னொன்று. இப்படி தினம் புதுப்புது வேலையைச் செய்ய வைத்தால் போதும்.” அவன் ஏதோ கூறத் தயங்கினான். “உனக்குத் தெரிந்ததைக் கொடு அல்லது தெரியாதென்றாலும் பரவாயில்லை. நான் முயற்சிக்கிறேன். அப்படியாவது திருப்தி ஆகிறதா பார்க்கலாம்.” அவன் அரைமனதுடன் சம்மதித்தான். அவருக்கு மிகுந்த சந்தோஷம். பல முறை நன்றி கூறினார். “ஆனால் இதில் சில விதிமுறைகள் வைத்துக்கொள்வோம். சுவாரஸ்யத்திற்காக இல்லை. அப்போதுதான் எனக்குமே வேலை செய்வது போலிருக்கும்.” அவன் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தான்.

“ஒன்று, கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் நான் செய்திருக்கிறேன். நீ என்ன யோசித்தாலும் நிச்சயம் எனக்குப் புதிதாக இருக்காது. அதனால் எனக்குத் தெரிந்ததாக இருக்கலாம். தப்பில்லை. ஆனால் உனக்குத் தெரிந்ததாக இருக்கக் கூடாது. நீ கைக்காட்டுவதோடு சரி. முடித்த பிறகு நான்தான் அதை உனக்குச் சொல்வேன்.” இளைஞன் சம்மதித்தான். ஆனால் உடனே அப்படியொரு வேலையை அவனால் யோசிக்க முடியவில்லை. நான்கைந்து நாட்கள் அதைப் பற்றிய சிந்தனையைக்கூட அவனுக்குத் தராதவாறு வேறொரு விதிச்சுழலுக்குள் மாட்டிக்கொண்டிருந்தான். அதிலிருந்து தப்பிக்க நடுத்தரவயதுக்காரருக்கு வேலை கொடுக்க வேண்டிருந்தது. 

இரண்டாவது வேலைக்குரிய சீட்டில் இருந்த பெயரைப் படித்ததுமே வக்கீல் என்ற அடைமொழியுடன் அப்பெயரை அவரையறியாமல் உதடுகள் உச்சரித்தன. இறந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. சாலை முழுக்க செண்டிப்பூவும் உதிர்ந்த ரோஜாவும் மணக்க மணக்க இறைந்திருந்தன. அவரும் மலர்ந்த மலர்போலவே இருப்பார். சாயம் பூசிக் கருகருவெனத் தூக்கி வாரிய தலைமுடி. நன்றாக மழித்த முகம். தவளை மூக்கு. பொடி போட்டுச் சாயம் படிந்த நாசி வாசல். பெரிய உதடு. பேசிப்பேசியே தடித்துப் போயிருக்கலாம். கஞ்சி போட்ட கதர் வேட்டி கதர் சட்டை. கீழராஜ வீதியின் நான்காம் தெருவில் இருக்கும் மூலைக் கடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பார். தொடையில் கிடக்கும் பாதத்தைத் தடவிக்கொண்டே பேசுவதைக் கேட்பார். கேட்பாரா அல்லது கால் நகத்தை பிய்த்துப் போடுகிறாரா என்று சந்தேகப்பட வைக்கும். இரண்டு காபி ஆவி பறக்க அடுத்தடுத்துக் குடிப்பது வழக்கம். நேரம் கழித்துக் கிச்சடி வரவழைத்துச் சாப்பிடுவார். கிச்சடிக்குச் சொல்லிவிட்டால் அன்றைக்கே பிரச்சினையைப் பேசித் தீர்க்கிறாரென்று அர்த்தம். தொண்ணுாறு சதவீதச் சில்லரை வழக்குகளை காபிக்கும் கிச்சடிக்கும் நடுவே முடித்துவிடுவார்.

இதுவரைதான் நடுவயதுக்காரருக்குத் தெரிந்திருந்தது. வக்கீல் மகா புத்திவான் அவர் வீட்டில் இருப்பவர்களும் அப்படித்தான் இருப்பார்கள். முதல் வேலைபோல இது சாத்தியப்படாது. இறந்தது ஊரே அறியும். தொலைந்தாரென்றால் சிரிப்பார்கள். பிறகு அதுவே விசித்திர வழக்காகும். பேசாமல் வேலையை மறுத்துவிடலாம். ஆனால் யாராவது ஒருத்தரை நம்ப வைத்தால் போதும் என்கிற வசதி நழுவவிடாமல் பிடித்திருந்தது. அவசரப்பட்டு வக்கீல் வீட்டிற்குச் செல்லாமல் காபி கடைக்கும் வீடு இருக்கும் தெருக்கோடிக்கும் அன்றைக்குப் பூராவும் நடந்துகொண்டிருந்தார். நூலாம்படை தொங்கிய பழைய ஓட்டுத்திண்ணை வீடு. உள்ளே சாமான்கள் கிடந்தன, குடித்தனத்துக்கான கசங்கலே இல்லை. அருகில் விசாரித்ததில் வக்கீலின் பேரன் இருக்கும் விலாசத்தைக் காட்டினார்கள். 

விசித்திரமான இரண்டாவது வேலை எதிர்பாராத விதமாக கத்தி மேல் நிற்பதுபோல முடிந்ததை இளைஞனிடம் நடுநிசித் தேநீரில் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார். “வக்கீலுக்கு இருந்த ஒரே மகன் சிறுவயதிலேயே இறந்துவிட்டான். துணைக்குப் பேரன் மட்டும்தான். பாட்டி இறந்த பிறகு உறவினர்கள் யாரும் உரிமை கோரக் கூடாதென்று வீட்டைப் பூட்டியிருக்கலாம் என்று நினைத்தேன். அது சரியாகத்தான் இருந்தது. பூர்வீக வீட்டிற்குப் போனபோது சொத்து விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருந்த சமயம். அறக்கட்டளையின் பெயர் பேச்சில் அடிபட்டது. தாத்தாவைப் போன்றே பேரன் தொடை மேல் போட்ட காலைத் தடவிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் சென்று தனியாகப் பேச வேண்டும் என்றேன். சட்டையே செய்யாமல் என்னைப் பார்த்தான். காதில் “உங்க தாத்தா தொலைந்து போவதற்கு முன்னாடி சொத்து உங்கக்கிட்ட இருப்பதைத்தான் அவரும் ஆசைப்பட்டார்” என்று சொல்லி முடிக்கவில்லை சரேலென்று காலை வீசி எழுந்தவன் தோளைப் பற்றி உள்ளே கூட்டிப் போனான். எதுவும் பேசாமல் மேலும் கீழும் திக்பிரமையுடன் பார்த்தான். “தாத்தாவைத் தேடி அலைய வேண்டாம் காசியிலதான் இருக்கிறார். நான் அவரோட பழைய நண்பர். சிஷ்யர் மாதிரி. காபி கடையில் பார்த்ததில்லையா?” அவன் எதுவும் பேசவில்லை. என் முகத்தை அதிசயமாக ஒருகணம் ஏறிட்டான். “நம்ப முடியலையா? இன்றைக்குச் சரியான நேரத்துக்கு என்னைய இங்க அவர்தான் போகச் சொன்னார்.” பேரன் சிரிப்பதிலேயே அவன் நம்பிவிட்டான் என்று முடிவுசெய்துவிட்டேன். அலமாரியிலிருந்து காகிதக் கட்டை நீட்டி “ஆமாம் நானும் அதைத்தான் இவங்ககிட்ட சொல்லிட்டுருக்கிறேன். இதை அவர்களிடம் கொடுத்து நீங்கள் சொன்னதை அப்படியே சொல்லுங்கள்” என்றான் கைகளுக்குள் திணித்து.

இளைஞன் அதிர்ச்சியில் திகைத்துப் போய்விட்டான். “சரி அப்புறம் என்ன?” முதன்முறையாகச் சிரித்துக்கொண்டு கேட்டான். “இன்னும் இருக்கிறது” என்று தேநீரை உறிஞ்சியபடி ‘பொறு’ எனக் கையைக் காட்டினார். “அவன் கொடுத்த காகிதக் கட்டை வெளியே இருந்தவர்களிடம் கொடுத்து பெரியவர் கொடுக்கச் சொன்னார் என்றதும் அவர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை. வாங்கிப் படித்தார்கள். அதில் என்ன இருந்ததோ படித்த அத்தனை முகங்களும் கோபத்தில் திரண்டுவிட்டன. வக்கீல் இருக்கிறாரென்று நான் சொன்னது அவர்கள் யார் செவியிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. நின்றுகொண்டிருந்த சின்ன வக்கீல் திடுதிப்பென்று பேரனை அடிக்கப் பாய்ந்தார். “துரோகி நல்லா இருக்க மாட்ட.” ஆளாளுக்கு ஏச ஆரம்பித்தார்கள். பிறகு இழவு வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் கிளம்புவது மாதிரி ஒவ்வொருவராகக் கலைந்தார்கள்” 

“பேரனிடம் மறுபடியும் பேசினீங்களா?”

“ஆமாம். தாத்தாவை எங்கு பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறார்?” என்று அவன் விசாரிக்கும்போது “ஒரு வயதானவர் சம்பந்தமில்லாமல் ஆஜரானார்.” இளைஞன் அவசரமாக “யார்?” என்றான். “நான் பார்க்கவில்லை சொத்து விவகாரத்துக்கு வந்திருக்கிறவராக இருக்கலாம். ஆனால் அதிசயம் என்னவென்றால் வயதானவரும் நான் சொன்னதையே அழுத்தமாகப் பேரனிடம் சொல்லிட்டு விறுவிறுவெனப் படியிறங்கிப் போய்விட்டார். பேரன் மந்திரித்தது மாதிரி என்னைப் பார்த்தான். மிச்சமிருந்த ஒருத்தர் எங்களையே வெறித்துக்கொண்டிருந்தார். எனக்கே அங்கே நடப்பது ஒன்றும் பிடிபடவில்லை. தலை சுத்தியது.” நடுவயதுக்காரர் வயிற்றைப் பிடித்தபடி பலமாகக் கீழே விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். பிறகு கையைப் பின்னால் ஊன்றி வானத்தை அண்ணாந்தவாறு சிரித்தார். 

ந்தியில் ஆடையகத்திற்குச் செல்வதும் காலையில் வீடு திரும்புவதும் இளைஞன் சமைத்துப் போடும் ருசியான உணவுடன் தூங்கிப் போவதுமாக முதியவரின் அன்றாடம் மாறிப் போனது. இரண்டு நாளிலேயே அவர் இதுவரை சாப்பிட்டு வந்த உணவுகளுக்குப் புதிய ருசி குணங்களை அவன் காட்டியிருந்தான். புதிய நாவைத் தைத்துவிட்டதுபோல. இந்த இடைவெளியில் அவன் வந்தபோது கூறிய விலாச அடையாளங்கள் நினைவில் வைக்காததால் மறுபடியும் அவனிடம் கேட்டுப் பார்த்தார். அதற்குள் அது அவனுக்கு மறந்துவிட்டது. அதே சமயம் தானும் நினைவுதொலைதலுக்கு ஆட்பட்டுக்கொண்டிருப்பதை அவனிடம் சொல்வதா வேண்டாமா என்கிற குழப்பம் வேறு (அதுவும் மருத்துவரிடம் காட்டிய சீட்டை வைத்தும் ஆடையகத்தில் மற்ற சிப்பந்திகள் நடந்துகொள்ளும் போதும்தான் தனக்கு அவ்வியாதி இருப்பது பலமுறை அவருக்கு நினைவூட்டப்படுகிறது). சரி ஒருவேளை உண்மையைக் கூறிவிடுவதால் என்ன ஆகும்? ஒன்று, இவரும் என்னைப் போன்றுதான் என்று அவன் சமாதானம் அடையக்கூடும். இரண்டாவது, இரண்டு பேரும் ஒன்றே எனும்போது எதற்கு இங்கு தங்க வேண்டுமென்று வெளியேறிவிடலாம். இளம் வயதென்பதால் இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்பு அதிகம். ஆதலால் முதியவர் அவனிடம் தனக்குக் கூர்மையான ஞாபகம் உண்டு என்பதுபோல காட்டத் துவங்கினார். அதற்காக தினம் ஏதாவது பொய்க் கதைகளைத் தனது வாழ்வனுபவமாக விவரிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டே இரவுப் பணி முடித்துவருவார். கால் இடறியதுபோல எங்கோ அவ்வெண்ணம் நழுவிவிடும். 

அப்படித்தான் அன்றைக்குக் காரமும் புளிப்புமாக வைத்திருந்த மீன் குழம்பைக் கை கழுவும் முன் தட்டில் ஊற்றிக் குடித்தபோது “உங்களுக்குப் பிடித்த பெயர் ஏதாவது இருந்தால் எனக்கு வைத்துவிடுங்கள்.” அவன் அப்படிக் கேட்டதும் முதியவர் சிரித்துவிட்டார். உறப்பு தலைக்கேறியது. ஆனால் அப்படிச் சிரிப்பதே அலாதியாக இருந்தது. அவனும் என்னவென்று விளங்காமல் உதடு விரித்தான். மூக்கில் இறங்கிய காரத்தை உறிஞ்சிவிட்டு “நகராட்சிக் கூடத்தில் பன்றிகளுக்கு இது மாதிரி பெயர் வைப்பார்கள்” என்றார் சம்பந்தமில்லாமல். அவன் முகம் கோணினான். “விற்பனைக்கு ஆகாத பன்றிகளை நன்றாகக் கொழுக்கட்டும் என்று விடுவதும் உண்டு. அப்படி வருடக்கணக்காகக் கிடப்பவைக்கு ஊழியர்கள் பெயர் வைத்துவிடுவார்கள். பிடித்த பெயர், பிடிக்காத பெயர். யாருக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி. நான் சீனப் பெயரை வைத்தேன்.” 

“நீங்களா?” சந்தேகமாகக் கேட்டான்.

”ஆமாம் எல்லாம் வெறுப்புலதான்.” நரைத்த புருவத்தை உயர்த்தி அசடுபோல முதியவர் சிரித்தார். “சீனப் போருக்காகத்தானே அறுபத்தி ரெண்டில் நான் ராணுவத்துல சேரப் போனேன்.” கையைக் கழுவிவிட்டு வந்தவர் சட்டென நின்று பின்பு நடந்தார். அவன் பாத்திரங்களை அடுக்களையில் வைத்துவிட்டுக் கதைக் கேட்கும் ஆர்வத்தில் வந்தமர்ந்தான். முதியவர் சற்றுத் தடுமாற்றத்துடன் கட்டிலில் சாய்ந்தார். பிறகு சிரமத்துடன் கையை எடுத்து ஒரு முறை நன்றாக முகர்ந்தார். “யாரையாவது சுட்டிருக்கிறீர்களா, துப்பாக்கி ரொம்ப கனமா இருக்குமா, எதிரிகிட்ட மாட்டிட்டா?” பதில் சொல்லாமல் “நல்ல மணம்” என்றார். “மில்லில் அரைத்த மிளகாய்த்தூளில் மட்டும்தான் இப்படியொரு காரம் இருக்கும்.” அவன் சலித்துக்கொண்டான். முதியவர் சிரித்தார் “ஆமா ரத்தமும் சதையுமாகக் குண்டடிபட்டு விழுந்து கிடப்பார்கள். சில சமயம் சிதறிக் கிடக்கிற உடல் உறுப்புகள் எல்லாம் ஒரே பெயரில் ஒன்று சேர்த்திடுவோம்.” பிறகு அரைத்தூக்கத்தில் பெரும் போர்க்கதையைக் கூறத் தொடங்கினார். உதடு முணுமுணுப்பின் மீது கண்களை வைத்தபடி அவன் அமர்ந்திருந்தான். அவருடன் ராணுவத்தில் இருந்த நண்பர்கள் இன்னும் இதே ஊரில் இருப்பதாகவும் அவர்களையெல்லாம் பார்த்துப் பல வருடங்கள் ஆனதாகவும் அங்கலாய்த்தார். கதை நண்பன் பக்கம் திரும்பிற்று. ராணுவத்திற்கு ஒப்பாத அவனது உடலமைப்பு, அங்க அசைவில் தோன்றும் நளினம், ஆத்திரத்தில் சில அடவுகள்கூட தெரிப்பதும் இப்போதுகூட பார்த்தால் தெரிந்துவிடும் என்று சொல்லிச் சிரித்தார். “பக்கத்தில்தான் எங்கோ இருக்கிறான். விலாசமும் பெயரும் நன்றாக நினைவில் இருக்கிறது” என இளைஞன் பக்கம் திரும்பி ஒருமுறை உச்சரித்து அலமலந்துகொண்டார்.

மதியம் எழுந்தபோது இளைஞன் வாசல் படியில் அமர்ந்திந்தான். அந்தக் காட்சிகூட எப்போதோ இதற்கு முன்பு நடந்த மாதிரி தோன்றிற்று அவருக்கு. மெதுவாகக் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வரும்போது, துணி துவைத்து காயப்போடாமல் நாறியது. அவரே காயப்போட்டுவிட்டு வந்தார். அடுப்பில் உலை கொதித்துப் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. சத்தம் போட்டார். அவன் ஓடிச்சென்று அமர்த்தினான். கோபமாக, “அப்படி என்னதான் யோசனை” என்று முறைத்தார். “என்னைப் பற்றி ஏதும் விசாரித்திர்களா?” என்றான். அவர் பதில் சொல்லவில்லை. “இப்படியே என்னை வைத்துக்கொள்ளலாம்னு நினைச்சிடாதீங்க.” முதியவர் திடுக்கிட்டுத் திரும்பினார். பிறகு அவரே சமாதானமாகிவிட்டுச் சொன்னார், “கொஞ்சநாள் காத்திருக்கலாம். நிலைமை மாறட்டும். உன்னைப் பற்றித் தெரியாதவரை அது நிம்மதிதான். தெரிந்துவிட்டால் பிறகு அது தொந்தரவாகிடும். இப்படி இருக்கிறதுதான் நல்லது.”

அவனுக்கு முதியவர் சொல்வதைக் காதில் வாங்க இஷ்டமே இல்லை. “வாழ்க்கை அர்த்தமில்லாமல் போய்விடாதா?”

“யார் அர்த்தப்படுத்துகிறார்? யாருக்காக நாம் அர்த்தப்படுத்திக்க வேண்டும்? நீ இங்க இருக்கிறதில ஒரு அர்த்தம் உருவாகியிருக்கிறதே அதையே ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா? இங்க இனி தொலைந்த யாராலையும் கண்டுபிடிக்க முடியாது. எல்லோருமே தொலைந்தவர்கள்தான். தினம் ஏதோவொன்று நம்மைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது. செய்தாக வேண்டிய வேலைகள்தான் நம்மைக் கண்டுபிடித்துப் பத்திரமாக வைத்திருக்கிறது. உனக்கு இதை ஏத்துக்கிறதுல என்ன சிக்கல்?” 

“உங்களால முடியலைனா சொல்லிடுங்க. என்னால் அப்படியெல்லாம் ஏத்துக்க முடியாது. காணாமல்போன ஆடு ஏதோவொரு மந்தையப் பார்த்துவிட்டுத் தன்னுடையதுதென்று சேர்ந்துகிறது மாதிரி இருக்கு நீங்க சொல்றது.”

முதியவர் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. அதன் கூர்மை தெரியாமல் அவன் பிரயோகித்திருப்பதாக நினைத்தார். “வெறும் பெயர் ஊர் தெரிந்தால் போதுமா? அப்படி என்ன அர்த்தத்தை அது கொடுத்திடும். நிறைய பேர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்காம இருக்கிறதலாம் உண்டு. என்னையக் கேட்டா அது சுமைதான்.” இருமியபடியே எழுந்து போனார். முதியவர் அவரை மனதில் வைத்துத்தான் அப்படிக் கூறினார். ஆனால் அவனுக்கு நடுத்தரவயதுக்காரரை நினைவுபடுத்தியது. ஆமாம், அவரும் ஒருமுறைகூட அவருடைய பெயரைச் சொன்னதில்லை. அப்படியொன்று இருப்பதுபோலவும் தெரியவில்லை. யாரும் அவரைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசியதுமில்லை. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமென்கிறத் தனம். அதைவிட வேலையைக் கண்டுபிடிப்பதுதான் அவருக்கு முக்கியம். முதியவரிடம் இளைஞன் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. தன்னுடைய தொலைந்த அடையாளம், நடுத்தரவயதுக்காரர் குறிப்பிட்டது மாதிரி வேலையில் சிக்கலைப் பின்னிவிட்டதுபோல மாட்டிக்கொண்டிருக்கிறது. முடிச்சை அவிழ்ப்பது, ஒன்று அதை முடிச்சிட்டவனாக இருக்க வேண்டும் அல்லது வேறு யாராவது.

பெரியவருக்காகக் காத்திருக்காமல் வீட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என்றுகூட முடிவெடுத்தான். காலையில் முதியவர் வேலையிலிருந்து திரும்புவதற்குள் வீட்டைவிட்டு வெளியேறி வெறிச்சோடிய கடைத்தெருவில் நடக்க ஆரம்பித்தான். ஒன்றிரண்டு ஆட்களைத் தவிர அதிகமான புழக்கம் இல்லை. அந்த ஒரு சிலரும் கண்களைக் கட்டிக்கொண்டு ஜாக்கிரதையுடன் நடப்பது மாதிரி திரிந்தார்கள். முகக்கவசத்துடன் அலையும் முகங்கள் அத்தனையும் அவனுக்கு ஒன்றுபோலவே இருந்தன. கண்களை மட்டும் கொண்ட உருவங்கள். பூட்டிய கடைத் திண்ணையிலும் வீட்டின் ஜன்னல் வழியாகவும் தெரிந்த முகக்கவசமில்லாத முகங்கள் அவனையே அவன் கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தன. இந்தச் சூழலில் நிச்சயமாக அவனால் ஒருவரைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. தொலைந்துபோனால் பிறகு நிலைமை இதைவிட மோசம் ஆகிவிடும். அதனால் இனி வயதானவரை நம்புவது மட்டுமே தனக்கிருக்கும் ஒரே நம்பிக்கை என்று வெளியேறும் முடிவையும் கைவிட்டுத் திரும்பிவிட்டான். 

ஆனாலும் அவனால் வீட்டிற்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. முதியவரின் கைத்தடி அறை மூலையில் கிடந்தது. கொஞ்ச நாளாக அவர் அதைப் பயன்படுத்துவதில்லை. வழி பிறழாமல் இருக்க அதுபோல ஒன்று அவசியம். முதியவரின் துணிப்பையைக் கொட்டித் தேடினான். வரைபடம் கண்ணில் பட்டது. இப்போது அவர் அதிகம் பயன்படுத்துவதில்லை. கடைத்தெரு வீதியின் வரைபடம். பதினாறு நேர்வரிசைக் கட்டங்களும் பதினாறு குறுக்குவரிசைக் கட்டங்களும் எந்த எந்த இடத்தில் வீதி குறுக்குவெட்டாகப் பிரிகிறதென்று பச்சை நிறத்தில் அடையாளமிட்டும் எந்தக் குறுக்குப் பாதைகள் மூலம் சீக்கிரமாக ஓரிடத்தை அடைய முடியும் என்பதற்கு சிவப்பு நிற அம்புக்குறிகளும் இடப்பட்டிருந்தன. முதலில் அதை எவ்வாறு பார்ப்பது என்றே அவனுக்குப் பிடிபடவில்லை. திசைக்காட்டியோ திசைக்குறிப்போ இல்லாததால் காகிதத்தை எந்தப் பக்கம் திருப்பினாலும் ஒன்றுபோலவே காட்டியது. கசங்காமல் அப்படியே அதை வைத்துவிட்டான். படுக்கையில் நேரம் போகவில்லை. பட்டாம்பூச்சியைப் பிடிப்பதுபோல தூக்கம் சட்டென எழுந்தோடியது. மறுபடியும் துணிப்பையை எடுத்தான். வரைபடத்தை இன்னொரு காகிதத்தில் உள்ளபடியே பிரதியெடுத்துக்கொண்டான். மெத்தைக்கடியில் பத்திரப்படுத்தியதற்குப் பிறகு தூக்கம் வராத இரண்டாவது இரவு மீண்டும் எடுத்துப் பிரித்துப் பார்த்தான். வரைபடத்துக்குள் தான் தங்கியிருக்கிற வீட்டைக் கண்டுபிடிக்கலாம் எனத் தேடினான். அதற்கு முதலில் வீட்டுக்கு அருகிலுள்ள அடையாளங்கள் தெரிய வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வந்தான். ஆளரவமில்லை. சுற்றி அடுக்குமாடிகள். அருகில் ஒரு மருத்துவமனையும் பின்னால் ஒரு கோவிலும் சற்றுத் தள்ளி தேவாலயமும் இருந்தன. வரைபடத்திற்குத் திரும்பினான். மருத்துவமனையைத் துழாவினான் அதற்குள் தேவாலயம் கிடைத்துவிட்டது. இரவு என்பதால் திசைக்குழப்பம் வேறு. விரலைத் தேவாலயத்தில் வைத்துத் தோரயமாக நகர்த்தி ஓரிடத்தில் நிறுத்தி இங்குதான் என்று அனுமானித்தான். அது சரிதானா என்று சோதிக்க வேண்டும். அங்கிருந்து நீண்டு செல்லும் பாதை சிறு வளைவில் திரும்பியதும் தேவாலயத்தில் மோதி நிற்கிறது. சரி என்றால் ஒரு முறை சென்று பார்க்கலாமென வரைபடத்துடன் இருளுக்குள் வந்தான்.

கடைத் திண்ணைகளில் உறங்குபவர்களும் உலாத்தும் தெருநாய்களையும் தவிர விளக்கு வெளிச்சம் மட்டும் தனியாக எரிந்துகொண்டிருந்தது. சரியான கணிப்பில் தேவாலயத்தைத் தொட்டுவிட்டு அறைக்கு மீண்டான். ஏதோ புதிரை அவிழ்த்துவி்ட்ட பரவசம். அடுத்து மருத்துவமனை. அதையும் அடைந்துவிட்டதும் அளப்பரிய களிப்பு. இனி வரைபடத்தின் மையத்தைத் தொட்டு மீளும் அடுத்த நடையைத் தொடங்கினான். அதாவது கட்டத்தின் குறுக்குவாக்கில் வயோதிகர் வைத்திருந்த ஏணி வழியே ஏறி, சரியாக நாற்பதாவது நிமிடத்தில் வரைபடத்தின் மையத்தை அடைந்தபோது காகிதத்தை மடித்துவிட்டு கண்ணில் பார்த்த அடையாளங்களுடன் திரும்பியவன் சரியாக நாற்பதாவது நிமிடத்தில் பிசிறில்லாமல் வந்துசேர்ந்தான். இவ்விதம் தினம் இரவுகளில் வரைபடத்தின் கோடியில் இருக்கும் இடத்திற்குச் சென்று விட்டுத் திரும்பிய நான்காவது இரவில் வீட்டை அடைய சில அடி தூரம் மிச்சமிருந்தபோது அந்த நடுவயதுக்காரின் அறிமுகம் கிடைத்தது. 

அவரைச் சந்தித்த நான்காவது இரவு அது. அப்போது அவன் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கத் துவங்கவில்லை. வழக்கமாகத் தன்னுடைய வேலையின்மைப் பிரச்சினையைப் பைத்திய மனதுடன் உளறிக்கொண்டிருந்தார். அவன் ஆர்வமின்றி அமர்ந்திருந்தான். தன்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்று கேட்டுவிடலாமா என்று தோன்றிற்று. ஆனால் அப்படிக் கேட்பது தன்னைப் பலவீனமாகக் காட்டிவிடும் என்று பயந்தான். அன்றைக்கு அதற்கு மேல் அங்கு உட்கார்ந்திருக்க அவனுக்கு வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வரைபடத்தை எடுக்காமலேயே வீடு வரை செல்வதென முடிவெடுத்தான். உடனே கிளம்ப வேண்டும் போலிருந்தது. தேநீர் வரும் வரைகூட காத்திருக்கப் பிடிக்கவில்லை. “நாளை பார்க்கலாம் நேரம் ஆச்சு” என்றதும் நடுவயதுக்காரர் மலங்கமலங்க விழித்தார். அவர் பேசிக்கொண்டிருந்ததற்கு இவ்வளவு நேரம் செவிகொடுக்காதது அப்போதுதான் புரிந்தது. கிளம்பப் போனவனிடம் அவரே முன்னால் வந்து “நான் என்னைப் பற்றியே பேசிட்டிருக்கிறது உனக்கு அலுப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.” அவன் உடனே, “அதெல்லாம் இல்லை. ரெண்டு நாளா சரியான தூக்கம் இல்லை. அதான்” என்று அசௌகரியம் காட்டினான். பதிலுக்கு அவர் “கிழவர் இப்போ நல்லா இருக்கிறாரா” என்று விசாரித்தார். அவனும் முதலில் தலையாட்டியபடி நகர அடியெடுத்து வைத்துவிட்டான். சட்டென ஒரு திடுக்கிடல். முதியவரைப் பற்றி வாய் திறக்கக் கூடாதென வைத்திருந்ததை மறந்து சொல்லிவிட்டேனா என்று குழப்பமானான். சற்றுத் தயங்கி, நல்லாயிருக்கிறார் என்பதுபோல மீண்டும் தலையசைத்துவிட்டு “நான் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேனா?” என்று ஜாக்கிரதையாகக் கேட்டான். அதற்கு அவர், “நானே பாத்திருக்கிறேனே” என்றார்.

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்தத் தெருவில் நான்கைந்து நாட்களாகத்தான் அவன் வந்து போகிறான். ஆனால் முதியவர் எப்போது தன்னைக் கூட்டி வந்தார் என்பது நம்ப முடியவில்லை. இவர் எப்போது பார்த்தார்? வேறு யாரையும் பார்த்துவிட்டு உளறுகிறாரோ? அவர் அதற்குள் “கிழவருக்கு ஞாபக மறதி இருக்கும்போல. தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது சட்டுனு எங்காவது நிற்பதைப் பார்த்திருக்கிறேன். எதையோ வாயில் அதக்குவது மாதிரி அப்படியே அசைபோடுவார். பிறகு நீ வந்து கூட்டிப்போகும் வரை அதே வெறித்த நிலைதான். பார்ப்பதற்கே பயமாக இருக்கும். பாவம் சில சமயம் நாள் பூராவும் உட்கார்த்தி வைத்ததுபோல இருப்பார். யாராவது டீ வாங்கித் தந்தாலும் குடிக்க மாட்டார். வீட்டிலும் அப்படித்தான் இருக்கிறாரா?”

அவர் முடிப்பதற்குள் இளைஞனுக்கு வெலவெலத்துவிட்டது. கண் பஞ்சடைத்தது மாதிரி இருண்டு விலகியது. தலை வெடித்துவிடும்போல் இருக்க நெற்றியைப் பிடித்துக்கொண்டான். நிதானிக்க விடாமல் சறுக்குகிறது. கவனம் பிசகிவிட்டது. அவர் பேசிக்கொண்டே இருந்தார் “ஏதாவது மருத்து மாத்திரை சாப்பிடலாம். ஆனால் இந்த வயதுக்கு மேல என்ன புதிசா மாறிடப் போகுது. பொறுப்பா பார்த்துக்கோ. எங்காவது தொலைந்து போனால் அவ்ளோதான்” இளைஞனுக்கு வியர்த்துவிட்டது. குளிரில் நனைவது மாதிரி உடம்பைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். வயிற்றைக் குமட்டுவதுபோல உருட்டியது. அவர் நிறுத்திய மறுகணம் பிடரியில் அடி விழுந்தது மாதிரி ஆகிற்று. நிலத்தில் கால்கள் நிற்பது போலில்லை. அங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருந்தான். நல்லவேளையாக அலைபேசி ஒலித்ததும் ரகசிய அழைப்பு அது என ஜாடை காட்டிவிட்டு நகர்ந்த சமயத்தில் அவன் ஓடிவந்துவிட்டான். 

வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் கலைத்துப் போட்டான். முதியவரது பெட்டியைக் கொட்டிக் கவிழ்த்தான். சுருட்டிக் கிடந்த துணிக் குவியல்களுக்குள் ஒன்றுகூட அவனுடையதில்லை. புகைக்கும் பீடிக்கட்டு, தலைவலித் தைலம், பழைய பித்தளை சவரத்திருக்கி, கண்ணாடிக்கூடு, மை தீர்ந்த போனாக்கள், எப்போதோ வாங்கி வைத்த திருநீற்றுப் பொட்டலம், ஆடையகத்தின் விலைச் சீட்டுகள் சில, காலி மாத்திரை அட்டைகள், கடைசியாகக் கதவுக்குப் பின்னால் நிற்கும் மூங்கில் தடி (அதை அவர் எடுத்துப் போவதில்லை) என ஒவ்வொன்றும் அவர் பயன்படுத்துபவைதான். கிளறியெழுந்த வீட்டின் அழுக்கு வாடையும் அசந்துவிட்ட உடலின் வியர்வை வீச்சமும் வயிற்றைக் குமட்டியது. கட்டிலில் போய் விழுந்தான். நடுவயதுக்காரரின் வார்த்தையைத் தவிர அங்கு அவன் இருந்ததை நம்புவதற்கு எந்த ஆதாரமும் இப்போது கையில் இல்லை. அந்த வார்த்தையைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான். தொலைந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதற்கும் அல்லது தொலையைவே இல்லை என்றானதற்கும் அவனால் கொஞ்சம் நேரம்கூட சந்தோஷப்பட முடியவில்லை. ஏன் அது இந்த இடமாக இருந்தது என்று விசனப்படத்தான் முடிந்தது. நான்தான் முதியவரைப் பராமரித்தவன் என்றால் இப்போது பராமரிக்கப்படுகிறவனாக எப்படி மாற முடியும். எந்தப் புள்ளியில் இது நிகழ்ந்திருக்கும். அடையாளங்கள் உடலை விட்டு உடல் இடம்பெயர்ந்து மாதிரி. காலத்தை மாற்றிப் போட்டு விளையாடும் விதியை நினைத்து பயந்து போனான். நடுத்தரவயதுக்காரர் சொன்னதன் மேல் துளியும் சந்தேகமில்லை ஏனெனில் அவரே பலமுறை அவனைத் தெருவில் பார்த்ததாகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்படியென்றால் அவனைத் தவிர எல்லோருக்குமே அவன் அங்கிருந்தது தெரியும். ஆக, இப்போது முதியவரின் அபார ஞாபகத்திறனைத்தான் சந்தேகிக்க வேண்டியிருந்தது.

காலையில் பாத்திரங்களை உருட்டிய சத்தத்தில் கண் விழிக்கையில் திரைக்குப் பின்னால் முதியவர் பசியுடன் அலையும் பூனை போன்று சாப்பிட எதையோ தேடிக்கொண்டிருக்கிறார். வீடு, கட்டில், திரை, முதியவர், சன்னல் எல்லாமே நகராமல் உறைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. முதியவர் சமையலறையில் நின்றுகொண்டிருக்கிறார். நான் கட்டிலில் உறங்கி விழிக்கிறேன். இது மாதிரி எப்போதோ நடந்திருக்கிறது என்று திரும்பத் திரும்ப உச்சரித்தான். யாரோ தன்னை உலுக்குவது தெரிகிறது. ஆனாலும் அவனால் உறைந்த காட்சியிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. உறைநிலையிலிருந்து அறுபடுவதையும் உணர முடிகிறது. மெல்ல மீண்டவன் முகத்தை அண்ணாந்தான். முதியவர் “என்ன கனவா?” என்றார். அவன் தலையசைத்தான். முகம் கழுவிப் பல் தேய்த்து வருவதற்குள் தேநீர் ஆறிவிட்டது. வெளியே நின்றுகொண்டிருந்தார். அவரிடம் கேட்டுவிடலாமா? கேட்டால் என்ன சொல்வார்? தெரியாது என்றால் எப்படி நிரூபிப்பது? இல்லவே இல்லையென்றால்? ஏன் அவருடைய நங்கூர நினைவுக்குள் என்னுடைய தொலைந்த காலம் மட்டும் தென்படவில்லை? அல்லது அவர் மறைக்கிறாரா? எதற்காக மறைக்க வேண்டும்? வெறுமனே அவரிடம் நேரடியாகக் கேட்பது என்பது இல்லாதவொன்றை வலுக்கட்டாயமாக நம்ப வைப்பது போலாகிவிடாதா? இரண்டாவது, அவருடைய மறதிக்குள் ஒருவேளை அது அமிழ்ந்து போயிருந்தால் வேறு வழியில்லாமல் அதை அவர் ஆமோதிக்கும் நிர்ப்பந்தம் உருவாகலாம் அல்லது அவர் அதை மறுக்கவும் உரிமை உண்டு. மூன்றாவது, வெளிக்கொணர்வது மட்டும்தான் அதை உயிர்மீட்கும் ஒரே வழி. வேறு வழியே இல்லாமல் அவன் மூன்றாவதையே எடுத்தான். தொலையாததைத் தொலைந்தததாக நம்பிக்கொண்டிருக்கும்போது அது தொலையவில்லை என்று மறுக்க அதே காலத்துக்குள் பத்திரமாக இருக்கும் பிறிதொன்றின் சாட்சி தேவைப்படுகிறது. முதியவரின் சொற்களில்தான் அது இருக்கிறது. அவன் காத்திருந்தான்.

ஆனால் அவருக்கோ அவனைப் பற்றிய எந்த யோசனையும் இல்லை. தினமும் என்ன சமைப்பது அதற்கு எது வேண்டும், எவ்வளவு வேண்டும், எங்கு வாங்குவது, எப்படிக் கிடைக்கும், எந்தச் சேர்மானம் நன்றாக இருக்கும் என்பது மட்டுமே முதியவரின் சிந்தனையில் இருந்தது. அலைந்து திரிவதற்கும் அவர் அசரவில்லை. உதாரணத்திற்கு, ஒவ்வொரு குழம்பும் தனித்தனிச் சுவையில் காரமாகவும் ரத்தச் சிவப்பாகவும் இருக்க வேண்டுமென்றால் குடமிளகாயையும் நீளமிளகாயையும் தனித்தனியாக வாங்கி அரைத்தால்தான் வரும் எனும்போது அந்த வீதியின் எந்த மண்டியில் நயமானது கிடைக்குமென விசாரித்து அரைத்து வந்துவிட்டார். அது மட்டுமில்லாமல் பூண்டு வகைகளை ரசத்திற்கு, குழம்புக்கு, சாம்பாருக்கு, குருமாவுக்கு, சட்னிக்கு எனத் தனித்தனியாகப் பிரித்துக்கொண்டார். பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி வேலை முடித்துத் திரும்பும்போது பையில் எப்போதும் இருக்கும். முதல் நாள் சாய்ந்தரமே அடுத்த நாள் சமையலுக்கானதை எழுதிப் பெற்றுக்கொள்வார். விடிந்ததும் குறிப்பில் முதலில் எதிலிருந்து தொடங்குவது, அது எங்கு கிடைக்கும், அதிலிருந்து அடுத்ததற்கு எப்படி போய்ச் சேர்வது, கடைசியில் எந்த வழியில் திரும்புவதென்கிற சூட்சமமான சித்திரம் ஒன்று தோன்றிவிடும். முதல் இரண்டு வாரம் துண்டுச்சீட்டில் வரைந்து வைத்திருந்தார். பிறகு அதுவும் இல்லை. தன்னிச்சையாக வேலை முடிந்ததும் கால்கள் பரிச்சயமான தடத்தில் விரையத் தொடங்கிவிடும். யாரோ அழைத்துப் போவது போன்று புன்னகைத்தபடி ஒன்றுவிடாமல் வாங்கிவிடுவார்.

கடைவீதியில் நடந்த சம்பாஷனைகளைச் சிதறாமல் சொல்லி முடிக்கும் வரை முதியவர் ஓய மாட்டார். தேவையான இடத்தில் சிரிப்பதும் சுழிப்பதும் உச் கொட்டுவதும் உதடு குவிப்பதுமாக இளைஞன் பாவனைகளைக் காட்டிக்கொண்டிருப்பான். மாறாக முதியவருக்கோ அவனது கைகள் மட்டும் வேலையில் தனிச்சையாக அசைந்துகொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். இரண்டு மூன்று முறை கரண்டிச் சத்தம், சில பரத்தல் அவ்வளவுதான் சமையல். மணக்க ஆரம்பித்ததற்குப் பின்பு அந்தப் பரபரத்தலும் இருக்காது. கொதிக்கும் தாளகதி மட்டும்தான். வீடு முழுக்க சமையல் மணம் குழந்தையாக அடம்பிடிக்கும். எடுத்துக்கொள்ளும் வரை அடங்காது. பிறகு உள்ளங்கைக்கு வந்துவிடும். சேர்மானங்கள் எப்படிச் சமைந்து வரப்போகிறதென முதியவர் கற்பனை செய்து வைத்திருப்பார். ஆனால் ஒரு முறைகூட அது சரியாகப் பொருந்தியதில்லை. சில சமயம் கொதிக்கிறபோது ஊகத்திற்கு அருகில் வந்துகொண்டிருக்கும் கொதிப்பு அடங்கியதும் மாறிவிடும். அவன் எங்கோ மாற்றிவிடுகிறான் என்று நினைத்துக்கொள்வார். ஆனால் அவனைப் பொறுத்தவரை அது பெரிய வேலையே இல்லை என்பதுபோல இருந்தான். அவரிடமிருந்து எப்போது தனக்கானது வெளிப்படும் என்கிற காத்திருத்தல் மட்டும்தான்.

நடுத்தரவயதுக்காரரிடமிருந்து கேட்ட அந்த வார்த்தைகளுக்குப் பிறகு இளைஞன் நோய் பீடித்த சோகையுடன் மாறிவிட்டான். இரவில் வெளியே போவதுமில்லை. அவரைச் சந்திப்பதே அவனுக்கு இப்போது ஒவ்வாமையாகப் பட்டது. மீளாச் சிக்கலுக்குள் தள்ளிவிட்டுவிடுவாரோ என்கிற அச்சம். நான்கைந்து நாட்களாக சரியாகச் சாப்பிடவில்லை. குருவித்தீனியாகக் கொரித்துக்கொண்டிருப்பதாக முதியவரும் அங்கலாய்த்தார். உண்மையில் பசி தூக்கம் இல்லை. இரண்டும் இல்லையென்றால் மூப்பு எய்தி உருவமே மாறிவிடுமென்பதைக் கவனித்தான். வீட்டிலும் இருக்க முடியவில்லை. கால்நடையாகத் திரிந்தாலாவது மனச்சொற்களை நிறுத்த முடியுமென நம்பினான். ஐந்து நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தான். வழக்கமான பாதையைத் தவிர்த்துப் பழைய நகராட்சி அலுவலகம் வழியாக நடையைத் தொடங்கினான். எங்கேயாவது நடுத்தரவயதுக்காரரைச் சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வதெனப் பதில்களைத் துழாவியவாறே கண் முன்னால் தெரிந்த குறுக்குச் சந்தைப் பிடித்து இருளுக்குள் எலிகள் போடும் கோடுகளைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தான். நடை மறுபடியும் ஒரு பிரதான சாலையைத் தொட்டபோது அங்கு மிகப் பெரிய ஆடையகம் தெரிந்தது. தொலைவில் யாரோ ஒருவர் இவனை அழைத்தவாறே ஊதிப் பெருத்த நிழலுருவத்துடன் நடந்துவந்தார். பழக்கமான புன்னகை. அது நிச்சயம் முதியவர் வேலை செய்யும் ஆடையகமாக இருக்க வேண்டும். அய்யாவைப் பார்க்க வந்தேன் என்கிற பதிலைத் தயாராக வைத்திருந்தான். ஆனால் வந்தவர் “அய்யா எப்படி இருக்கிறார்? ரொம்ப நாளாக ஆளையே காணோம்?” என்று கேட்டார். இவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “இங்க வரலையா?” அதற்குள் இன்னொருவர் பெரியவரை வேலையை விட்டு நிறுத்தி ரொம்ப நாள் ஆனதாகக் கூறினார். இளைஞன் திகைத்துப் போய் நின்றான்.

“ஆனால் கிழவர் ஒருநாள் விடாமல் வந்திடுவார். வாடிக்கையா தினமும் ஏதாவது துணிக்கடைத் திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதை உலகக் கதை எல்லாம் பேசிவிட்டு விடிந்ததும் வீட்டிற்குக் கிளம்பிடுவார். நாங்களும் அய்யா எங்கதான் வேலை பார்க்கிறீங்கனு கேட்டா சிரித்துக்கொண்டே இங்கதான் வேறெங்க என்பார். விடாமல் எத்தனை தடவை கேட்டாலும் அதே சிரிப்புதான். வித்யாசமான ஆள். நாங்களும் சரி இருக்கட்டும்னு விட்டுடுவோம்.” இளைஞனால் அவர்களது பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தினமும் வேலைக்குக் கிளம்புகிறவர் வேலையிடத்தைத் தொலைத்துவிட்டு வேறெங்கோ இருந்துவிட்டு வருகிறார். வீட்டிற்குத் திரும்பியதும் இதைக் கேட்டுவிட வேண்டுமென்கிற கோபத்துடன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான். வீட்டை நெருங்க நெருங்க நடை தயங்கி அந்த எண்ணம் ஒரு கட்டத்தில் நீர்த்துப் போயிற்று. ஆமாம் தெரிந்துதான் செய்கிறேன் என்றால்? அன்றாடத்தை அர்த்தப்படுத்த நடுவயதுக்காரருக்குத் தேவைப்படும் வேலை, கிழவருக்குப் பொழுதுபோவதற்காக இருக்கலாம். இளைஞனுக்கு ஒருகணம் உடல் நடுங்கிற்று. வாசல் கதவைப் பிடித்தவாறு நிலைப்படியில் அமர்ந்துகொண்டான். இடது காலில் ஆட்டம் நிற்கவில்லை. சரியாக உட்காராதா அல்லது நடுக்கமா? கால் மூட்டுகளை இறுக்கித் தலையைப் பொத்திக்கொண்டான். காகம் கொத்தத் துரத்துவதுபோல தலைக்கு மேல் கேள்விகள் விரட்டியடிக்கின்றன. எந்தக் கேள்விக்கும் இங்கு பதில் இல்லை. சட்டென்று அவர்களுடைய பேச்சில் குறிப்பிட்ட இன்னொன்று பொட்டு நாளத்துக்குள் வந்து துடிக்கத் துவங்கிற்று. அது, இதை முதியவரும் ஏற்கெனவே சொல்லியும் இருக்கிறார், ஏதோவொரு ஆடையகத்திற்குக் காவலாளியாக இரவுகளில் வருவதுபோல எங்காவது வழியில் இழவு வீடுகளைக் கண்டால் இறந்தவர்களுக்குச் சொந்தம் மாதிரி அல்லது நெருங்கிய நண்பரைப் போன்று சடலம் அடக்கம் செய்யப்படும் வரை ஓரத்தில் நின்றவாறு இழவுக்கு வருபவர்களிடம் துக்கக் கதைப் பேசிக்கொண்டிருப்பாராம். இது மாதிரி ஊரில் அதனதன் ஜாதி மதத்துக்கேற்ப ஆட்கள் உண்டுதான் என்றாலும் கிழவர் மதம் பேதமில்லாமல் போய் நிற்பதுதான் வித்யாசமாகப் படுகிறது என்றார்கள். முதியவரின் வாயால் கேட்டபோது அன்றைக்கு இது வேறொரு அர்த்தத்தில் இருந்தது. இறந்தவர்களுக்குக்குரிய இறுதி மரியாதை அல்லது வாழ்வு பற்றிய புரிதல் என்பதாகத்தான் அவர் சொல்லியிருந்தார். ஆனால் ஏதோவொரு வகையில் வேலையிடத்தைத் தொலைத்துவிடுவதற்கும் இதற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. இளைஞனின் கணிப்புச் சரியாக இருந்தது.

இந்த ஐந்து நாட்களில் இந்த இரண்டு விசித்திர நடவடிக்கையை ஆயிரம் தடவையாவது கற்பனைக்கும் தர்க்கத்துக்கும் இடையில் வைத்துச் சரிபார்த்திருப்பான். ஒரு வாரம் நடுநிசி நண்பரைச் சந்திப்பதையும் தவிர்த்துவிட்டான். அவர் கேட்டிருந்த வேலைப் பிரச்சினையும் மறந்தே போனது. மனச் சொற்கள் ஓய்ந்தபாடில்லை. ஒரு பக்கம் தினமும் முதியவர் சமையலுக்கானதை வாங்கிவருவதும் ருசியை மெச்சியபடியே உறங்கிவிடுவதும் பிறகு மாலையில் அடுத்த நாள் சமையல் பற்றி விசாரிப்பதுமாகக் காலத்தைச் சுருட்டிக்கொண்டு அதனுள் ஓடிக்கொண்டிருந்தார். உற்று கவனித்தால் அவருடன் பேசுவதற்கே அவனிடம் நேரமிருக்கவில்லை. இல்லை அவர்தான் அதைக் கொடுக்கமால் வைத்திருக்கிறார். சில சமயம் சாப்பாட்டைப் பற்றிப் பேசும்போது சமைத்ததைக் கொண்டுபோய்க் கொட்டிவிடலாம் என்றுகூட தோன்றும். அப்படியே இடைமறித்து வேறு விசயம் பேசினாலும் அவர் காதில் விழவே செய்யாது. அவன் முடிக்கும் வரை காத்திருந்து அவ்வளவையும் ஒதுக்கிவிடுவதுபோல நிறுத்தியதிலிருந்து மறுபடியும் தொடங்குவார். ருசி தலைக்கேறினால் ஏதாவது பழையதைக் கிளறி ஒப்பித்தால்தான் அடங்கும்போல என்று அவர் காதுபடவே முணுமுணுத்தான். திட்டுவதைச் சட்டையே பண்ணாத இளைஞன் மாதிரி சிரித்துக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு அவராகவே பூண்டையும் வெங்காயத்தையும் சோழிகளைப் பொறுக்கி வைப்பதுபோல குழம்புக்கு உரித்து வைத்திருந்தார். “என்ன செய்கிறீர்கள்?” அவன் கோபமாகக் கேட்டான். “வத்தல் குழம்புதானே?” என்றார் சந்தேகமாக. அவனுக்கு சமைக்க இஷ்டமே இல்லை. வெறும் வத்தல் குழம்புடன் அப்பளம் மட்டும் பொரித்து வைத்தான். முதியவர் அப்பளத்தை உடைத்து குழம்புடன் பிசைந்து ரசனையாகச் சாப்பிட்டார். மூக்குக்கண்ணாடிக்குள் தொட்டி மீன்களாகக் கருவிழிகள் உருண்டுகொண்டிருந்தன. உண்மையில், சாப்பிடும்போது மட்டுமே தத்ரூபமான ஓவியம்போல அவரது முகத்தில் ஒவ்வொன்றும் புடைத்தெழுகின்றன. சிலசமயம் ருசி அடங்காவிட்டால் சாப்பாடு அவனுக்கு இருக்கிறதா என்றும் பார்ப்பதில்லை. அன்றைக்கும் அப்படித்தான் காலி செய்து முடித்தார். 

சாப்பிட்டு முடித்ததும் ஆசுவாசமின்றி கட்டிலில் பொத்தென்று விழுந்தவர் அப்படியே மேற்கூரையை அண்ணாந்துகொண்டிருந்தார். இளைஞன் இழவு வீட்டில் நிற்பதைப் பற்றிப் பேச்சைத் துவக்கினான். செவிமடல் மயிர்ச் சுருளை இழுத்துவிட்டவாறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். அவனும் பாத்திரம் கழுவுவதுபோல அவரை உற்று கவனித்துக்கொண்டிருந்தான். சற்றைக்கெல்லாம் பெருமூச்சு எழுந்தது. கோடுபோல செவி வரை கண்ணீர் வழிய, கைகளைக் கோத்து மார்பில் வைத்திருந்தார். காற்றில் யாரிடமோ பேசும் முக பாவனை. யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு சொல்கூட எழவில்லை. இளைஞன் திடுக்கிட்டுப் போனான். பலமுறை உடலை உலுக்கிய பிறகே முதியவர் பிரக்ஞை மீண்டார். குடிக்கத் தண்ணீர் கொடுத்து மெல்ல உடலை நிமிர்த்தி இயல்புக்குக் கொண்டுவர நேரம் ஆயிற்று. ஆனாலும் தலை தன்னிச்சையாக ஆடுவது நிற்கவில்லை. ஈரம் சொட்ட நனைந்திருந்தார். துடைக்கத் துடைக்க வியர்வை ஊறிக்கொண்டிருந்தது. பிறகு அவராகவே மெல்லத் தணிந்தார். உடலைத் துடைத்துவிட்டுத் தலையணையில் சாய்த்து உட்கார்த்தி வைத்தான். இறந்து போன நண்பர்களின் ஞாபகம் வந்ததாக முணுமுணுத்தார். இளைஞன் அவர் ஆசுவாசம்கொள்வதற்குள் “அதற்காகத்தான் இறந்த வீடுகளுக்குப் போகிறீர்களா?” என்றான். அவர் பதில் சொல்லவில்லை. தொங்கிய தலையை இன்னும் கீழே இறக்கினார். அவனும் விடுவது போலில்லை. மறுபடியும் அதைக் கிளறுவதில் குறியாக இருந்தான். “இறந்தவர் வீட்டில் யாரை அப்படித் தேடுகிறீர்கள்?” என்றான். முதியவர் அவனை அச்சத்துடன் நோக்கினார். அவனுக்கு இன்னும் மனம் அடங்கவில்லை. அதற்கு அவர் சொன்னார் “நெருங்கிய நண்பர்கள் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஏதோவொன்று நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. அதாவது இறந்தது என்னமோ இப்போ நடந்தது போலிருக்கிறது.” மூக்கை உறிஞ்சித் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார். “அதாவது இறந்து போனது நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் எதையோ நான் செய்யாததுபோல உறுத்துகிறது. எனக்கென்னமோ துக்கம் விசாரிக்காததால் அந்த இறப்பை நினைவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோனு படுகிறது. அதாவது ஞாபகம் வைத்துக்கொள்ள ஒரு சாட்சி வேண்டும். அவ்வளவுதான். இன்னொரு விசயம் துக்கமே கேட்காதபோது அது இழந்தவர்களுக்கும் ஒரு சாட்சி இல்லாமல் செய்து அவர்களையும் நம்ப முடியாமல் கொண்டுபோய் நிறுத்திவிடும். பிறகு அவர்கள் அந்தக் கணத்திலிருந்து வெளியேறாமலே இருப்பார்கள். துக்கம் கேட்டல் பரஸ்பரம் இருவருக்குமே அங்கு ஓர் உயிர் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளத்தான்.” முதியவர் சொல்லி முடித்துவிட்டு மோவாயைத் தேய்த்தார். இளைஞனுக்குப் பொறுமை கொள்ளவில்லை. எச்சில் விழுங்க முடியாமல் அடைத்திருந்தது. “சரி துக்கம் விசாரித்தால்தான் அது சரியாகும் என்றால் அதைச் செய்யுங்கள். யார் யார் அப்படி விடுபட்டவர்கள்?” இளைஞன் நிறுத்தியதும் உடனே பதில் சொல்ல முடியாமல் சில கணங்கள் கழித்து வரிசையாக நான்கைந்து பெயர்களைச் சில அடையாளங்களுடன், ஆனால் சரியான விலாசத்துடன் சுயபிரக்ஞையின்றி கூறத் தொடங்கினார். சன்னதம்போல உளறலில் தெறித்த சொற்களைக் கவனத்தில் நிறைக்க முடியவில்லை என்றாலும் அதிலொன்றில் இளைஞனின் அடையாளத்தையொத்த ஒரு ஆகிருதியும் இருந்தது. இளைஞன் விதிர்த்துப் போனான். மறுகணம் உயிர் மீண்டதுபோல புன்னகைத்தான். உடனே எண்ணங்கள் பரபரத்தன. சாவி கிடைத்துவிட்டது. தொலைத்த தடமும் தெரிகிறது. இனி இதை என்ன செய்வதென்றுதான் பிடிபடவில்லை. முதியவரிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் “தேடிப் பிடிக்கலாம். வேண்டுமென்றால் நானும் வருகிறேன்” என்றான் அவசரமாக. அதற்கு முதியவர் “வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன். நாளைக்கு விலாசத்தை விசாரித்துவிட்டுப் போய் பார்க்கிறேன்” என்று பேச்சை சட்டென நிறுத்திவிட்டார். ஆனால் அது அவரைச் சமாதானப்படுத்தவில்லை. அவனுக்குத் தெரியாமல் யாரெல்லாம் அவ்வாறு துக்கம் கேட்டலில் விடுபட்டிருக்கிறார்களென யோசிக்க ஆரம்பித்தார். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. உண்மையில் இது இளைஞனிடம் தன் அதீத ஞாபகத்தைக் காட்டிக்கொள்ளக் கூறிய கதையா அல்லது தனது நிஜமான நினைவா என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும். 

சாயங்காலம் வேலைக்குக் கிளம்பும் முன்பே அடுத்த நாள் காலையில் துக்கம் விசாரிக்கப் போவதால் வீடு திரும்பத் தாமதமாகலாம் என்றார். அவனும் சரியென்று சம்மதித்துவிட்டு விலாசம் நன்றாகத் தெரியுமா என்று அவரது வாயால் அதைக் கேட்டுப் பெற்றுக்கொண்டான். அவர் தலை மறைந்த மறுகணம் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. வௌவாலாக வீட்டிற்குள் மோதிமோதிச் சுழன்றான். முதியவரைப் பின்தொடர்வதுதான் அவனுடைய முதல் திட்டமாக இருந்தது. ஆனால் அது வெறுமனே நடப்பதை வேடிக்கை பார்க்கத்தான் செய்யும். அவனுக்கு வேண்டியதெல்லாம் தான் தொலைத்ததை முதியவரின் தொலைத்ததிலிருந்து மீட்டெடுப்பது. அதற்கு முதலில் முதியவரை அவர் தொலைத்ததை நம்ப வைக்க வேண்டும். அதாவது இறந்துவிட்டவர்கள் அனைவரையும் இருப்பதாக நம்ப வைத்தால் மட்டுமே தனது இருப்பையும் நம்புவார். நடுவில் தேவை ஒரு சாட்சி. அவனுக்குச் சட்டென பொறி தட்டியது. நடுநிசி நண்பரைச் சந்திக்க அவசரமாகக் கிளம்பினான். இப்படித்தான் இளைஞனுக்கும் நடுத்தரவயதுக்காரருக்குமான வேலைத் துவந்தம் துவங்கிற்று.

மூன்றாவது வேலைக்குரிய பெயரை வாங்கிப் பார்த்ததும் நடுவயதுக்காரருக்கு மனப்பலகையில் உடனே ஒரு சித்திரம் உருவாயிற்று. இஸ்லாமியர், கம்யூனிஸ்டுகாரர், தடித்த கண்ணாடி, நிறைய படித்தவரைப் போன்று முகபாவம். ஆமாம் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் ஓரமாக நின்றபடி பேச்சை உற்றுக் கவனிப்பார். பேச அழைத்தால் மறுத்துவிட்டுச் சற்று நகர்ந்துகொள்ளும் தயக்கம். அவர்களுடைய கூட்டத்தில் ஆட்களை நினைவில் வைப்பது சிரமமிருக்காது. மூன்று மாதங்களுக்கு முன்புகூட கடைவீதியில் பார்த்த ஞாபகம். விசித்திரம் என்னவென்றால் இறந்ததாக அவராலே நம்ப முடியவில்லை.

வீட்டிற்குள் சென்றபோது அந்தப் பெண்ணும் அப்பாவுக்குத் தெரிந்தவர் யாரோ துக்கம் கேட்க வந்திருப்பதாகத்தான் நினைத்தாள். பிடரியில் கிடந்த முக்காட்டைச் சரி செய்து அமர்ந்தாள். பெரிய நெற்றி, நல்ல களை. மழை மேகம் மாதிரி அழுது கருத்த விழிகள். இறந்து ஒருசில நாட்களோ வாரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். வீடே பேரமைதியில். நெஞ்சை அடைக்கும் மௌனம். மிகப் பெரிய வீட்டில் வெளிச்சமும் இருளும் கூடத்திலும் மூலையிலும் வசதியாக நிறைந்திருந்தது. அறைக்குள் யாரோ விம்முகிறார்கள் அல்லது அப்படித்தான் தோன்றுகிறதா? உள்ளே யாரையோ அழைத்தாள் அந்தப் பேரிளம் பெண். தேநீர் போடச் சொல்லும் சமிக்ஞை. இறந்துபோன சம்பவத்தை ஓயாது சொல்லியிருப்பாள். எப்படித் தொடங்குவதென நடுத்தரவயதுக்காரர் முதன்முறையாகத் தடுமாறினார். அவள்தான் ஆரம்பித்தாள், “அப்பா நன்றாகத்தான் இருந்தார்” என்றதும் கண்களைத் தழைத்துவிட்டு நோக்கினாள். ஒரு துளி புறப்பட்டது. இருக்கையின் விளிம்புக்கு வந்தவர் அவள் தொடங்குவதற்குள் “அப்பாவைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்களா? நானும் நிறைய இடத்தில் விசாரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம் யாராவது கண்டுபிடித்து விடுவார்கள். முதலில் உங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

அவள் சிரித்துவிட்டாள். துளிர்த்த ஈரம் சொட்டியது. மூக்கை உறிஞ்சி மெல்லியதாக உதடுகளை மட்டும் வளைத்தாள். நொந்துகொள்ளும் சிரிப்பு. பெரிய தம்ளரில் வந்த தேநீரைக் காட்டி “குடிங்க” என்றாள். “என்னுடைய அப்பாவும் அவரோடு ஆஸ்பத்திரியில் பக்கத்துக் கட்டிலில் இருந்தார். உங்க அப்பா தொலைந்து போனதுக்கு இரண்டு நாளைக்குப் பின்னாலதான் அப்பாவை வீட்டுக்கு அனுப்பினாங்க. இப்போ உடம்பு தேறிட்டு வருது. உங்களைப் பற்றி நிறைய சொன்னார் அதான் வந்தேன்.” நடுவயதுக்காரர் முடிப்பதற்குள் அவளுக்குச் சிரிப்பும் அழுகையுமாக மூக்கும் உதடும் திசைக்கொரு புறம் சுழித்துத் தடுமாறின. பிறகு கைக்குட்டையில் மூக்கை உறிஞ்சி மேசையில் போட்டு “உங்களுக்கு யார் வேண்டும்?” குரல் இடறிற்று. குரல் திம்மென விழுந்தது. முதன்முறையாக அவருக்கே அச்சம் ஏற்பட்டது. தைரியத்தை வரவழைத்து மீண்டும் தொலைந்ததைக் கூற எத்தனிப்பதற்குள் “அப்பா இறந்துவிட்டார்” என்றாள் பொட்டில் அடித்ததுபோல. “உங்களுக்கு ஏதும் வேண்டுமா?” என்று தேநீர் வைத்தவளை அழைத்தாள். இவர் பதறி “இல்லை இல்லை. அப்படியெல்லாம் இல்லை.”

“அப்புறம் ஏன் தொந்தரவு செய்றீங்க. தயவுசெய்து கிளம்புங்கள்.” முக்காடை இழுத்துவிட்டு எழப் போனவளிடம் “உங்ககிட்ட அவர் இறந்ததாக யார் சொன்னது?” எனக் கேட்டு அமர்த்தினார். அவள் மருத்துவமனையின் பெயரைக் கூறினாள். “உடம்பக் கொடுத்தாங்களா?” அவள் இல்லையென்றாள். “நீங்க பார்க்காமல் எப்படி யாரோ சொன்னதை நம்ப முடியும்?” அவள் உடல் துவண்டுவிட்டிருந்தது. அவர் தான் சேகரித்த தகவல்களை அவள் நம்பும்படி திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார். சில கணங்களுக்குப் பிறகு அவள் முகம் சற்று தெளிந்தது, “மாமா நகராட்சி மயானத்தில் பார்த்தபோதும் மச்சான் மாதிரியே இல்லை. மச்சான் மாதிரியே இல்லை. யாரோ மாதிரி இளைத்துப் போயிட்டார்னு சொன்னார். நானும் பார்க்காதது ஒரு வகையில் நல்லதுனு இருந்துட்டேன். சில நேரம் எனக்கும்கூட அது வேற யாரோவாக ஏன் இருக்கக் கூடாதுனு தோன்றும். இறந்தவர் பாவம் யாருடைய அப்பாவாகவோ இருந்துவிட்டு போகட்டுமே. நேற்று இதே நேரம்தான் ஒரு வயதானவர் அப்பாவைக் கேட்டு வந்தார். நான்தான் கதவைத் திறக்கல. அப்பாவுக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆஸ்பத்திரி வாடையே பிடிக்காது. கிளம்பி வந்தாலும் வந்துடுவார். இதுதான் அவர் உட்கார்ந்து புத்தகம் படிக்கிற இடம். நான்தான் காபி போட்டு தருவேன். நேற்றும் அவருக்கும் சேர்த்தே போட்டேன். உடுத்துன சாரம்கூட அழுக்குக்கூடையில் அப்படியே கிடக்குது. சிலதை மட்டும் துவைத்து சிலதை இருக்கட்டுமென்று விட்டுவிட்டேன். சீப்பில் சில வெள்ள முடி ஒட்டியிருக்கு. வாசித்து முடிக்காத புத்தகம் நிமிர்த்தப்படாமல் குப்புறக் கிடக்கிறது. தோட்ட வேலைகளும் பாக்கி.” ஜன்னலை எட்டி “மண்வெட்டி இப்படிக் கிடந்தா கத்துவார். துரு ஏறிடும்.” உள்ளே அழைத்து மண்வெட்டியைக் கழுவி வைக்க ஏவினாள். “அப்பா பொழுதுக்கும் யாரிடமாவது பேசிட்டே இருப்பார். காபி போட்டு மாளாது. எத்தனை பேருக்கு போடுவது நீங்களே சொல்லுங்க?” அவள் ஆதுரத்துடன் கேட்டாள். நடுவயதுக்காரர் கிளம்புவதாக எழுந்தார். வாசல் வரை வந்தவள் இரும்புக் கதவைச் சார்த்தும்போது “அப்பாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

இளைஞன் அவருடைய வருகைக்காகக் காத்திருந்தான். இனி மிச்சமிருப்பது தன்னுடைய அடையாளம் மட்டுமே. முதியவர் தன்னைத் தேடிக்கொண்டு நாளைக்கு இதோ இதே இடத்திற்கு வந்து நிற்பார். அப்போது நடுநிசி நண்பர் அவரிடம் நான் உயிருடன் இருப்பதைத் தெரிவிப்பார். என்னைப் பற்றிய எல்லாத் தகவலையும் நண்பர் தேடியெடுத்திருப்பார். அதைக் கொண்டு முதியவரை நம்ப வைப்பார். முதியவரிடமும் நிச்சயம் அதற்குப் பதில் இருக்கும். ஒழுங்கு குலையும் பின் தெளியும். ஒரு புள்ளியில் இருவரும் வந்து நிற்பார்கள். அந்த இடத்தில் என்னுடைய அடையாளம் கிடங்கிலிருந்து வெளியே எடுத்துப் போடப்படும். இளைஞன் நம்பிக்கையோடு இருந்தான். ஆனால் முதியவர் காலையில் வந்ததிலிருந்து மிச்சமிருக்கும் துக்கக் கேட்டலைப் பற்றிப் பேச்சை எடுக்கவே இல்லை. பதிலாக முந்தைய நாள் சாய்ந்தரம் இஸ்லாமிய நண்பரின் வீட்டிற்குப் போனதைச் சொல்ல ஆரம்பித்தார். “அவனுடைய மகள் மட்டும் இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள்.”

இளைஞன் “எதற்கு” என்று வேகமாகக் கேட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஏது என்று பதறிவிட்டேன். இவ்வளவு நாள் நான் இறந்ததாக நினைத்திருக்கிறாள். அவள் மட்டுமில்லை. என்னுடைய ஸ்நேகிதனும்தான். ரொம்ப நாளாக என்னைப் பார்க்காததால் அப்படி முடிவெடுத்துவிட்டார்கள்போல. வெகுநேரம் ஆகியும் பிரமை பிடித்ததுபோலத்தான் இருந்தாள். நான் ஆவி இல்லனு சத்தமாகச் சொன்னேன். அழுத முகத்தோடு சிரிக்கிறாள். பாவம். மறுபடியும் மறுபடியும் நான் எங்கே போனேன் ஏன் அப்பாவைப் பார்க்க வரவில்லைனு கேட்டாள். நான் இங்கேதான் இருந்தேன்னு சொன்னதற்கு இல்லை நீங்கள் எங்கேயோ தொலைந்து போயிருப்பீர்கள். அதான் உங்களை இறந்துவிட்டதாக நம்பிட்டோம். தெரிந்திருந்தால் எப்படியாவது தேடிப் பிடித்திருப்போம். உங்க வீட்டிலும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருப்பார்களாக்கும் பாவம் என்று முகம் கூம்பினாள். நான் அதுக்கு, “இல்லை நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன். ஒரு பையன் என்னைப் பார்த்துக்கிறான்.” சொன்னதும் சந்தோஷப்பட்டாள். தொலைந்தவர்களை இறந்துவிட்டதாக மனம் ஒப்புக்கொள்ளாதபோது கண்ணில் பார்க்காமல் இறந்து போனவர்களைத் தொலைந்ததாக நம்புவது சரிதானே என்றாள். எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் நேரம்தான் பேசினோம். “என்னால சாப்பிட முடியல. இந்த ருசி இல்லை. காரம் குறைவு. சாய்ந்தரத்தில் வைக்கிற இறால் குழம்புக்குத் தனி மணம் வந்துடுது இல்லையா?” புருவத்தைத் தூக்கிச் சரிதானே என்பதுபோல காட்டிக் கேட்டார். அவன் அமைதியாக இருந்தான். “கடைசிக் காலத்தில் இந்த நாக்கிற்கு வந்த வாழ்க்கையைப் பாரேன். அப்படித்தானே?” அவர் பலமாக அவன் தோளை உலுக்கிச் சிரித்தார். பிறகு படுக்கையில் சாய்ந்தவாறு பேசத் தொடங்கினார் “.நல்ல ருசியில் ஒரு தருணம் உருவாகிறது. அதுமாதிரி சில தருணங்களுக்கென்றே பிரத்யேகமான ருசி உண்டு. இரண்டும் கச்சிதமாகப் பொருந்திவிட்டால் அப்படியே ஆழத்தில் கிடந்து போகும். அழியாது. அதே தருணம் மறுபடியும் வாய்க்காது. ஆனால் அதே ருசி அந்தத் தருணத்தைத் திருப்பிக் கொண்டுவந்துவிடும்.” 

உறங்கியதே அவனுக்குத் தெரியவில்லை. சில கணங்கள்தான் அப்படியே உறைந்தது போலிருந்தது. ஆனால் பல மணிநேரம் தூங்கிவிட்ட அசதி. அந்தித் தூக்கத்திற்குரிய தெளிவின்மையும் அழுத்தியது. எழுந்தபோதுதான் இவ்வளவு நேரம் முதியவரின் கட்டிலில் படுத்திருந்ததைக் கவனித்தான். புதிய பழக்கம் விசித்திரமாகப் பட்டது. முதியவர் ஏதும் சமைக்கிறாரோ என்று அழைத்துப் பார்த்தான். அவர் இருப்பதாகத் தெரியவில்லை. கொடியில் அவருடைய சீருடை இருந்தது, ஆனால் செருப்பும் மூங்கில் தடியும் வேட்டியும் இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தான். சாலையின் கடைசிப் புள்ளி வரை யாரும் தென்படவில்லை. தெருவின் கடைக்கோடி வரை இரண்டு முறை சென்று திரும்பினான். அந்திச் சாய்ந்த மறுகணம் விறுவிறுவென இருள் மண்டிவிட்டது. ஒவ்வொரு ஆடையகமாகத் தேடிச் சலித்துப் போனான். முதியவர் எங்குமே வரவில்லை என்றார்கள். வீட்டிற்குத் திரும்பும்போது நடுத்தரவயதுக்காரரை வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் அதே நேரத்தில் போய் நின்றான். அவர் அடுத்த வேலைக்குத் தயாராகக் காத்திருந்தார். தனக்கும் அவருக்கும் என்ன துவந்தம் என்று புரியவே நேரம் ஆயிற்று. எதுவும் பேசாமல் வெறுமனே அமர்ந்திருந்தான். வழக்கத்தைவிட நேரம் கழித்தும் அவன் போகாமல் இருப்பது அவருக்கும் புதிதாகப் பட்டது. தேநீர்க்காரருடன் மூன்று வேளையிலும் நடந்த சுவாரசியங்களைப் பரிமாறிக்கொண்டிருந்தது அவனைச் சற்று ஆசுவாசப்படுத்தியது. இருவரிடமிருந்து விடைபெறும்போது இளைஞன் கொடுக்கப்போகும் அடுத்த வேலையை எதிர்பார்த்து அவனை நோக்கினார். பசியில் வாடியது போன்ற முகத்துடன். அவன் நான்காவது வேலையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

சீட்டைத் தரும்போது இளைஞன் முகம் கன்றிப் போயிருந்ததை நடுவயதுக்காரர் அவதானித்தார். பழைய களை இல்லை. உடம்பில் வயதேறிய தளர்வு. கைத்தடி இல்லாத நடை போன்ற தடுமாற்றம். நிலத்தை நோக்கியவாறே நடந்து போனான். இன்னொன்று, நான்காவது வேலைக்குரிய விலாசத்தை அங்கு வைத்துதான் அவன் எழுதினான். வேலை தருவதில் அலுப்பு ஏற்பட்டிருக்கலாம். காரணம் வேலை செய்பவரிடம் இருக்கும் சுவாரசியம் சொல்பவரிடம் இருக்காது. ஆனால் பிரச்சினை வேறொன்றாக இருந்தது, 

இந்த முறை சீட்டில் பெயர் இல்லை, விலாசமும் தெளிவில்லை. பதிலாக வயது - 75, உயரம் - ஆறு அடிக்கு இரண்டு அங்குலம் குறைவு, உடலமைப்பு - சதுரக்கண்ணாடி, முன் வழுக்கை, குனிந்த நடை. அடையாளங்களைக் கோத்து உருவத்தை சிருஷ்டிக்க வேண்டும். கிட்டத்தட்ட வயதானவர்கள் அனைவரும் இதே அடையாள வரிசையில் இருந்தனர். வழக்கமான பாணிக்கு மாறாக உருவத்திலிருந்து பெயரை எடுக்க முடியாமல் தடுமாறினார். எடுத்த முயற்சிகள் சரிந்தன. எல்லாக் குழந்தைகளும் தவழ்ந்துகொண்டிருக்கையில் தேடுவதை எப்படிக் கண்டுபிடிப்பது? விலாசமும் அவ்வாறே கலைத்துப் போடப்பட்டிருந்தது. திசை, முக்கம், திருப்பம், தண்ணீர்க் குழாய், பள்ளம், உடைந்த தெருக்கம்பம், துரு ஏறிய இரும்புக் கதவு. முக்கியமாக இந்த முறை வேண்டுமென்றே தவிர்த்தது போன்று எதிலும் பெயர் இல்லை. நடுவயதுக்காரர் மிரண்டுவிட்டார். அதிகமில்லை. சில கணங்கள்தான். பிறகு எங்கு போய் ஒளிந்துகொள்கிறதென்று பார்க்கலாம் என அடையாளக் குறிப்புகளை உருவங்களுடனும் விலாசங்களுடன் பொருத்த தொடங்கினார். சரியான விலாசத்தைக் கண்டுபிடிக்க இரண்டு இரவுகள், ஒரு பகல் ஆயின. 

கீழ நான்காம் வீதியும் தெற்கு முதல் வீதியும் தொட்டுத் திரும்புமிடம். இரும்புக் கதவைத் திறந்ததும் மாடிப்படி. படிக்கட்டு தெற்கில் ஏறி வடக்கில் திரும்புகிறது. பூச்சுப் பெயர்ந்த சுவர். ஏறியதும் சட்டென முகத்துக்கு முன்னால் வந்து நிற்கும் சாத்தப்பட்ட பழைய தேக்குக் கதவு. கொண்டிதான் அழைப்பு மணி. தட்டிவிட்டுக் காத்திருந்தார். யாரும் குடியிருப்பதுபோல் தெரியவில்லை. கீழ் வீட்டைவிட மாடிவீடு மிகச் சிறியது. இரண்டு அறைதான் இருக்கும் என்று கணித்தார். நுழைந்ததும் இறங்கிச் செல்வது போன்று நிலைப்படி. கோயிலுக்கும் மேலுள்ள சுதைக் கட்டிடம் மாதிரி முகப்பு. ஓரமாகச் சிறிய காலியிடம் வீட்டின் முதுகு வரை நீண்டு முடிகிற இடத்தில் சாத்தப்பட்ட மரச் சன்னல். கீழே உணவுத் துணுக்கள் கிடந்தன. ஆக, சமையற்கூடமாக இருக்கலாம். துணுக்குகள் இன்னும் உலர்ந்துவிடவில்லை. வயதானவர்கள் யாரோ உள்ளே இருக்கிறார்கள். மூன்றாவது சீட்டைப் போலவே இந்த வீட்டில் இருந்தவரும் இறந்து இன்னும் துக்கம் காய்ந்திருக்காதென ஊகித்தார். இந்த முறை எப்படித் தொடங்குவது என்கிற முன்தயாரிப்பு ஏதுமில்லை. வேலை பழகிவிட்டது. சன்னல் வழியாக அழைத்தார். வெகுநேரம் கழித்து பதில் வந்தது. “யார் வேணும்?” கிணற்றுக்குள்ளிருந்து கேட்கும் அளவிற்கு.

சட்டெனக் குரலை ஊகிக்க முடியவில்லை. பெயர் வேறு இல்லாததால் அவரமாக “அய்யா இல்லையா?” என்று பொதுவாகக் கேட்டார். என்ன பதில் வரப்போகிறதென்று ஆர்வத்துடன் தலையைச் சன்னலுடன் இன்னும் சாய்த்து ஒட்டினார். “சத்தமாகப் பேசுங்க. காதுல விழல. அய்யா இல்லையா?” சன்னலுக்குள் கைகளைக் குவித்து பலமாகக் கத்தினார். பதில் வந்தது. “வீட்டில் இல்லை வெளியே போய்விட்டார். வந்தா சொல்றேன். உங்க பெயர்?” என்றதும் நடுவயதுக்காரர் ஆடிப்போய்விட்டார். வயதான குரல் போலில்லை. யாரோ இளம்வயதுக்காரன். மறுபடியும் குரல் அதே பதிலைச் சொல்லிக்கொண்டிருந்தது. நடுவயதுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. நெற்றியைத் தேய்த்தார். என்ன செய்வதென்று குழப்பம். “சரி நாளைக்கு வரேன்” என்று குரலுக்குக் கேட்டது பற்றிய அக்கறையின்றி வீட்டின் முன்புறம் வந்தவர் மரக்கதவு திறந்திருக்கிறதா என்று தள்ளினார். இறுக்கமாகச் சாத்தப்பட்டிருந்தது. பிறகு கீழே இறங்கி வெறிச்சோடிய சாலையில் நடக்கத் துவங்கினார்

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தூயன்

தூயன், தமிழ் எழுத்தாளர். புதுக்கோட்டையைப் பின்னணியாகக் கொண்டவர். ‘இருமுனை’, ‘டார்வினின் வால்’ சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.
பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கும்மிருட்டின் தனிமனம்கோர்பசேவ்: கலைந்த கனவாசமூகப் பாதுகாப்புபெண் அடிமைத்தனம்ஜி-20 உச்சி மாநாடுஅருஞ்சொல் பாலசுப்ரமணியம் முத்துசாமிகாலவெளியில் காந்திதொழில் சாம்ராஜ்ஜியம்மாநகர போக்குவரத்துகழிவுவளர்ச்சியடைந்த பிராந்தியங்கள்யூரிக் அமிலம் குற்றங்களும்ashok selvan keerthiபாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்கலைஞரின் முதல் பிள்ளைதைவானை ஏன் இணைத்துக்கொள்ள துடிக்கிறது சீனா?சாட்சியச் சட்டம்இன ஒதுக்கல்அரசியலதிகாரம்வலுவான கட்டமைப்புமகிழ்ச்சிமூலிகைகள்தாதுப் பொருள்உறக்க மூச்சின்மைபொதுத் தேர்தல்கோவிட்அப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுஒடிஷாவன்முறைக் களம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!