கட்டுரை, நூல் விமர்சனம் 10 நிமிட வாசிப்பு

ஆணின் விந்தணு பூஜ்ஜியத்துக்குப் போகிறதா?

தூயன்
07 Nov 2021, 5:00 am
2

யுவால் நோவா ஹராரி ‘சேப்பியன்ஸ்’ நாலில் ‘மனிதன் விரைவிலேயே நியண்டர்தால் போன்ற அழிந்த உயிரனத்தையும், செயற்கை நூண்ணறிவுத் திறனால் அதிமனிதனையும் உருவாக்கும் வல்லமையையும் பெற்றுவிடுவான்’ என்று குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் ‘சூழலையும், உணவு உற்பத்தியையும், நகரங்களையும், பேரரசுகளையும் நியமித்து வெற்றி கண்ட மனிதன், தனிமனித நலனை மேம்படுத்த முயற்சிக்கவில்லை’ என்றும் முடித்திருப்பார். 

அறிவியலர், பேராசிரியர் ஷனா ஸ்வானின் ‘கவுன்டவுன்’ (Count Down) புத்தகத்தை வாசித்து முடிக்கையில் ஹராரி கூறுவது நிச்சயம் நினைவுக்கு வருகிறது. மனித குலத்தின் இருப்பு இன்னும் எத்தனை வருடத்திற்கு பூமியில் இருக்கப்போகிறது என்கின்ற அச்சத்தையும் அழிந்துகொண்டிருக்கும் தனிமனித உடல் நலன் மீதான அக்கறையையும் ஸ்வானின் ஆய்வு நம்மிடம் உருவாக்குகிறது. 

2045-க்குள் ஓர் ஆணின் விந்தணு எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து பூஜியத்திற்குப் போய்விடும் என்கிற அவரது அறிக்கையை அவ்வளவு எளிதாக நாம் புறந்தள்ளிவிட முடியாது. நியூயார்க்கின் ‘லாக்டவுன்’ தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டிதான் புத்தகம் மீதான கவனத்தைத் திருப்பியது. அதில், ‘ஸ்பெர்மகெடான்’ (Spermageddon) என்கிற சொல்லை அவர் பயன்படுத்தியிருப்பார். ‘ஸ்பெர்மகெடான்’ என்றால் விந்தணு எண்ணிக்கை சுழியத்தை அடைதல் என்று பொருள். 

குழந்தையின்மையும் விந்தணு குறைபாடும் உலகமயமாக்கலின் தொடக்கத்திலிருந்தே நாம் அதிகம் கேள்விப்படும், அனுபவிக்கும் பிரச்சினை. சேலம் சித்த வைத்தியசாலையிலிருந்து உயரிய மருத்துவப் பெருநிறுவனங்கள் வரை இப்பிரச்சினையை ‘முதன்மையான தொழில் சேவை’யாகவே நம் நாட்டில் நடத்துகின்றன. 

ஆண்களின் விந்தணுக் குறைபாட்டிற்கு சுயஇன்பத்தில் தொடங்கி ஜீன்ஸ்பேன்ட் வரை அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டுவிட்டன. பெண்களுக்கும் விரைவிலேயே ருது எய்துதல் இளமையிலேயே மார்பக வளர்ச்சி, சினைப்பை நீர்க்கட்டிகள் என்று நிறைய சிக்கல்கள் கருவுற தடையாக உள்ளன. அவர்களுக்கும் இப்படி ஏடாகூடமாக ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஸ்வானின் புத்தகம் இப்பிரச்சினைகளை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து முழுமையாக விளக்கியிருக்கிறது.

யார் இந்த ஸ்வான்?

ஷனா ஸ்வான் உலகின் முக்கியமான சூழலியல் மற்றும் இனப்பெருக்கத்  தொற்றுநோயியல் நிபுணர். 30 வருடங்கள் இத்துறையில் தனது ஆய்வை நிகழ்த்தியிருக்கும் ஸ்வானின் 200-க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதுமுள்ள பத்திரிகைகள், ஊடகங்களில் வெளிவந்துள்ளன. விந்தணு, கருமுட்டை இவ்விரண்டின் உருவாக்கம், வளர்ச்சிதை மாற்றம், எங்கு அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் எவ்வாறு உருவாகின்றன என்று தீவிரமாக ஆராயப்பட்ட நூல்தான் ‘கவுன்ட்டவுன்’. 

புத்தகம் நான்கு பகுதிகளாக உள்ளது. முதல் இரண்டு பகுதிகள், இனப்பெருக்கம் மற்றும் பால்வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையும், அவற்றைப் பாதிக்கும் சூழலியல், வாழ்வாதார மற்றும் சமூகவியல் காரணிகளையும் பேசுகிறது; கடைசி இரண்டு பகுதிகள், சிறியளவில் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் எவ்வாறு முழு உடலையும் ஆக்கிரமித்து வேதியியல் மாற்றத்தைச் சிதைக்கின்றன என்று பேசுகிறது.

ஸ்வான் இதில் நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்குலைக்கும் வேதிப்பொருள் (Endocrine Disrupting Chimicals (EDCs)) பற்றிப் பேசுவது முக்கியமானது. இனப்பெருக்க அறிவியல் துறையில் தீவிரமாகப் பேசப்படும் சொல்லாகவே இன்று இது மாறிவிட்டிருப்பதற்கு ஸ்வானின் ஆய்வே காரணம்.

நம் உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள் என இருவகை உண்டு. கண்ணீர், வியர்வை, சளி, உமிழ்நீர், பால் போன்றவை நாளமுள்ள சுரப்பியின் வழியாகவும், பிட்யூட்டரி, தைராய்டு, விந்தகம், சூலகம் போன்றவை நாளமில்லாச் சுரப்பி மண்டலத்திலும் இயங்குகின்றன. இவற்றில் கணையம், கல்லீரல் இரண்டு மட்டும் இரு சுரப்பிகளாகவும் செயல்படுகின்றன. உடலின் வளர்சிதை மாற்றங்கள் தொழில் செயற்பாடுகளைக் கட்டுபடுத்துவது இந்த நாளமில்லாச் சுரப்பிகள்தான். சுருக்கமாகச் சொல்வதென்றால், தன்நிலைக் காத்தலைப் பராமரிப்பத்தபடி  நோய்த் தடைக்காப்பு மண்டலமாகவும் உடலுக்கு இச்சுரப்பிகள் முக்கியப்  பங்காற்றுகின்றன.

அண்டகமும் விந்தகமும்

மனித உயிரின் இனப்பெருக்கத்திற்கு அவசியமான இரண்டு இனப்பெருக்கச் சுரப்பிகள் (அண்டகம், விந்தகம்) இதன் கீழ்தான் இயங்குகின்றன. இச்சுரப்பிகளில் ஏற்படும் சிறிய பாதிப்பே பெரியளவில் இனப்பெருக்க செயல்பாடுகளில் மாற்றத்தை விளைவிக்கின்றன. ஸ்வானின் ஆய்வு இந்தச் சுரப்பிகளில்தான் தொடங்குகிறது.

குழந்தையின்மைப் பிரச்சினை உலகம் முழுக்க பெருந்தொற்றுபோல கிளம்பத் தொடங்கிய புத்தாயிரமாண்டில், ஸ்வான் ஆய்வியல் பரிசோதனைகள் தீவிரமடைந்திருக்கின்றன. விந்தணுவின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதன் செயலின்மை, குறைபாடான விந்தணுக்கள் என ஒவ்வொன்றாக அவர் ஆராய்ந்திருக்கிறார். 

விந்தணு, ஒற்றைத் தலையும் சின்னஞ்சிறிய உடலும் நீண்ட வாலும் கொண்ட ஓர் உயிரி. தவளையின் தலைப்பிரட்டை நிலையையொத்த அமைப்பு. ஒரு மில்லிலிட்டர் விந்தில் சராசரியாக 1.5 முதல் 3.9 மில்லியன் அவளவிலான விந்தணுக்கள் இருக்கும்.

விரைப்பும் வெளியேற்றமும் 

கருமுட்டையை நோக்கி மீன்போல நீந்தி, வேகமாகச் சென்றடையும் ஒற்றை விந்தணுவே ஒரு புதிய உயிரியாக உலகிற்கு வருகிறது. ஒருவகையில் மைதானத்தில் நடக்கும் பந்தயம் மாதிரித்தான். வூடி ஆலனின், ‘எவரிதிங் யு ஆல்வேஸ் வான்டட் டு நோ அபௌட் செக்ஸ்’ (Everything you always wanted to know about sex) படத்தில் செக்ஸ் ஹார்மோன் தூண்டப்படுவதும், விந்தணு வெளியேறுவதும் ஒரு விண்வெளி ஆய்வு மையத்தில் நடப்பதுமாதிரியும், ஆண் குறி விறைப்பு எய்துவது மிகப் பெரிய கதவு ஒன்றை அலிபாபா நாற்பது திருடர்கள் படத்தில் திறக்கும் குண்டர்கள்போல சிலர் வேகமாக இழுத்து நிறுத்துவதுமாதிரியும் காட்டப்படும். விறைப்புக்கான வேலை முடிவதற்குள், உடனே திரவநீர் சுரப்பதற்கான சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதும், ஆண்குறி இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் குண்டர்கள் அதிகாரமையத்தின் அவசரப்படுத்தலைக் கண்டு சலித்துக்கொள்வதும், விந்தணு தோற்றத்திலிருக்கும் உயிரிகள் (எல்லோரும் விந்தணு மாதிரி வெள்ளை ஆடையில் வாலுடன் இருப்பர்- அதில் வூடி ஆலனும் ஒருவர்) ஒவ்வொன்றாக பாராசூட்டிலிருந்து குதிப்பதுமாதிரி ஆண் குறியிலிருந்து வெளியேறுவதை ஆலன் காமெடியாகச் சித்தரித்திருப்பார்.

உண்மையில் நம் உடலின் வேதியியல் மாற்றங்கள் தேர்ந்த திட்டமிடலுடன் சரியான இயக்கத்தில் நியூரான்களின் துரிதப் பக்குவத்தில் இப்படித்தான் நடக்கின்றன என்பதை நாம் கற்பனைசெய்துகொள்ளலாம். 

 

நூல் வெளிக்கொணரும் உண்மைகள்

1973 - 2011 காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் நிகந்த குறைபாடுகளை ஸ்வான் கண்டறிந்திருக்கிறார். அவை கடந்த இருபது வருடங்களில் இருந்ததைவிட 59% குறைந்திருப்பதும் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இன்னும் வேகமாக குறைந்துவிட வாய்ப்பிருப்பதாகவும் ‘கவுண்டவுன்’ நூலில் விளக்குகிறார். 

நாம் முழுக்க முழுக்க வேதிப்பொருட்களுடன் புழங்கத் தொடங்கிவிட்டோம். குளிக்கும் ஷாம்புவிலிருந்து தினம் பணம் எடுக்கும் ஏடிஎம் வரை பிளாஸ்டிக் பொருட்களை நூகராமல் இருப்பதில்லை. நம் உடலின் தவிர்க்கவியலாத ஒன்றாக நெகிழிகள் மாறிவிட்டன. ஸ்வானின் ஆய்வறிக்கையானது, நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்குலைக்கும் வேதிப் பொருட்கள் (EDC), நமது உபயோகத்தில் நீக்கமற நிறைந்திருப்பதைப் பேசுகிறது. டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பிளாஸ்டிக் சுற்றப்பட்டவை, அழகு சாதானங்கள் என அனைத்திலும் பேலேட் (Phthalate) மற்றும் பைபினால் ஏ (Bispenol-A) எனும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

'பேலேட்' நாம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் இருக்கிறது. சிகை அலங்காரம், வாசனை திரவியம், நகப்பூச்சி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பெண்களின் கருமுட்டை வளர்ச்சியைத் தடைசெய்வதில் பேலேட்டின் பங்கு இருக்கிறது. முறையற்ற மாதவிடாய் சுழற்சியிலிருந்து திடமான கருமுட்டைகளை உற்பத்திசெய்வதைத் தடுப்பது என ஆண்களைப் போன்று பெண்களின் இனப்பெருக்கச் செல்களில் இடிசி (EDC) வேதிப் பொருட்களின் பாதிப்பு அதிகம். 

2018-ல் ஸ்வான் நிறைவுசெய்த ஆய்வின்படி, உலகில் முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 67% பெண்கள் மிக விரைவில் (பன்னிரெண்டு வயதுக்கும் குறைவாக) ருது எய்திவிடுவதும், இதுதான் மாதவிடாயின்போது முதிராத கருமுட்டைகளை வெளியிடுகிறது என்றும் தெரியவந்தது.  இது இத்துடன் மட்டும் முடிகிற பிரச்சினை இல்லை என்றும், யாரெல்லாம் விரைவாக ருது எய்துகிறார்களோ அவர்களுக்கு ஆஸ்துமா, மார்பகப் புற்றுநோய், சர்க்கரை போன்ற நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்றும் ஸ்வான் விளக்குகிறார். அதேமாதிரி ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவு என்பது வெறும் இனப்பெருக்கப் பிரச்சினையைச் சார்ந்தது மட்டுமின்றி, அது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுபடுத்தக்கூடியது என்கிற உண்மையும் அதில் இருக்கிறது. 

உயிரின் பால் நிர்ணயத்தைச் சீர்குலைக்கும் திறனும், இந்த நாளமில்லாச் சுரப்பிகளை தாக்கும் வேதிப்பொருட்களுக்கு (EDC) உண்டு என்கிறார் ஸ்வான். அதாவது, அதிக அளவு இதன் உபயோகப்படுத்தும் கருவுற்ற தாயின் மூலம் கருவிலிருக்கும் குழந்தையின் பால் செயல்பாட்டை இவ்வேதிப்பொருட்களால் மாற்ற முடியும். நாளமில்லாச் சுரப்பி செல்களின் தொடர் சங்கிலியில் இவை இணைந்து, 'ஒய்' மற்றும் 'எக்ஸ்' குரோம்சோம்கள் தொடரிணைப்பைக் குலைக்க முடியும் என்கிறார் ஸ்வான். 'டிஸார்டர் ஆஃப் செக்ஸுவல் டெவலப்மென்ட்' (Disorder of Sexual Development - DSD) என்று அறியப்படும் பால் உறுப்புகளின் வளர்ச்சியின்மைக்கு இதுவே காரணம் என்கிறார். 

2050-ல் உலகின் 80% தம்பதிகள் குழந்தைப்பேறுக்காகப் பாதுகாக்கப்பட்ட கருமுட்டைக்கும், விந்தணுவிற்கும் ஏன் கர்ப்பப் பைக்காகவும்கூட மருத்துவத்தை நாட வேண்டியிருக்கும் என்கிறது ‘கவுண்டவுன்’. 

நம்பகத்தன்மை என்ன?

உலகில் எப்படி பருவநிலை மாற்றத்தை முதலில் நம்ப மறுத்தவர்கள், இப்போது அக்கறைகொள்கிறார்களோ அதேமாதிரி இந்த வேதிப்பொருட்களின் (EDC) விளைவின்மீதும் மக்கள் கவனத்தைத் திருப்புவார்கள் என்று ஸ்வான் நம்பிக்கைத் தெரிவிக்கிறார். அதோடு உடலில் எத்தனை சதவீதம் இந்த ‘நாளமில்லாச் சுரப்பிகளை சீர்குலைக்கும் வேதிப் பொருட்கள் (EDC)’ இருக்கின்றன என்று பரிசோதனை செய்து கொள்ளவும் ஆர்வம் காட்டலாம் என்கிறார். பருவநிலை மாற்றத்திற்கும் இனப்பெருக்க செல்களின் சிதைவுகளுக்குமே தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

மார்க்ரெட் அட்வுட் எழுதிய ‘தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்’ நாவலில் ஜில்லியட் குடியரசு கருத்தரிக்கக்கூடிய ஆரோக்கியமான பெண்களை தங்களின் பணிப்பெண்களாக வைத்துக்கொள்வதாகச் சித்தரித்திருப்பார். 1985-ல் அந்நாவல் வெளியானபோது அதை வாசித்தவர்கள் அது வெறும் கற்பனையான டிஸ்டோப்பியா ஃபிக்‌ஷன் (Dystopina Fiction) வகையைச் சார்ந்தது என்று மட்டுமே நினைத்திருக்கலாம். ஸ்வானின் புத்தகத்தை வாசிக்கையில் அத்தகைய டிஸ்டோபியன் உலகம் நிஜத்தில் நிழப்போவதாக உறைகிறது! 

தனது நூலில் இந்த நாளமில்லாச் சுரப்பி சீர்குலைவு வேதிப்பொருளிலிருந்து தப்பித்து இப்புவியில் மனித உயிரை தக்க வைக்கும் வழிமுறைகளையும் சொல்கிறார் ஸ்வான். அவை, ஆரோக்கியமான பழக்கங்கள், உடற்பயிற்சி, இயற்கையான உணவு முறைகள், வேதிப்பொருட்கள் கலக்காத அன்றாட சாதனங்கள்.   

சமீபத்தில் பிபிசி ஊடகத்தில் பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அறிவியல் கொள்கை மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை (IPBES), பூமியில் 1 மில்லியன் உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்றும், 2010ல் இருந்து 2015க்குள் 32 ஹெக்டேர் பரப்புள்ள உயிரிப்பன்மை நிறைந்த அடர்ந்த காடுகள் அழிந்து போய்விட்டன என்றும் தெரிவிக்கிறது. எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் செய்திகள்தான்!  

ஆன்டன்வான் லீவன்ஹாக் 1677-ல் முதன்முதலில் தனது விந்தணுவை நுண்ணோக்கியில் கண்டபோது அதை ‘நீந்திக்கொண்டிருக்கும் விசித்திரமான விலங்கு’ என்று குறிப்பிட்டிருப்பார். அடுத்த நூறு வருடத்தில் அது விசித்திரமான தொன்மையான உயிரியாக மட்டுமே இருந்துவிடும் என்கிற அச்சத்தை அறிவியலாளர் ஷனா ஸ்வானின் வரிகள் ஏற்படுத்துகின்றன!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தூயன்

தூயன், தமிழ் எழுத்தாளர். புதுக்கோட்டையைப் பின்னணியாகக் கொண்டவர். ‘இருமுனை’, ‘டார்வினின் வால்’ சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.


2






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   2 years ago

இரசாயன குப்பை உணவிற்கு நாம் ஏற்றக்கொண்டவைகள் புற்றுநோய், குடல் தொடர்பான நோய்கள் வரிசையில் தலைமுறை இழப்பும் சேர்ந்து விட்டது என்பது பெரும் அச்சத்தை உருவாக்குகிறது. இயக்கமாய்க் கரம் கோர்த்து இந்தக் குப்பை உணவுகளை எதிர்த்து அகற்றுவதும் கூட நம் தலைமுறைக்கு நாம் தரும் பரிசாக இருக்கும். அருஞ்சொல்லுக்கும் தூயவனுக்கும் நன்றி. மகா.இராஜராஜசோழன். chiolan1981@gmail.com

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சலாவுதீன்    2 years ago

நிதர்சனமான உண்மை சமீபத்தில் அதிகரித்திருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களே இதற்கு சான்று.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒரு பயணம்மணிப்பூர்: அமைதியின்மை தொடர யார் பொறுப்பு?முதலாளித்துவம்இன்ஷார்ட்ஸ்சாதி ஒழிப்புஅரிமானம்கி. ராஜாநாராயணன்உலக எழுத்தாளர்ஹமால் மாரி!சமாஜ்வாதி ஜன பரிஷத்நோக்கமும் தோற்றமும்முக்கிய நகரங்கள்ஊடக அரசியல்உக்ரைன் தாய்மொழி - ஆனால் படிக்க வேண்டும்!அமலாக்கத் துறைஜி20 மாநாடுவலதுசாரிரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?பயத்திலிருந்து விடுதலைவேளாண் துறைபகுஜன் சமாஜ்நிர்வாணம்சாவர்க்கர் குறுந்தொடர்பிராணர் – பிராமணரல்லாதோர் பிளவைக் கூர்மைப்படுத்துகலாலு பிரசாத் யாதவ்கௌதம் பாட்டியாஉபிந்தர் சிங்வடிவேலுராஜன் குறை கேள்விக்குப் பதில்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!