கட்டுரை, அரசியல், வரலாறு 4 நிமிட வாசிப்பு

சின்ன விஷயங்களின் கதை

மு.இராமநாதன்
16 Feb 2023, 5:00 am
2

மீபத்தில் கண்டறியாதன சில கண்டோம். ஒரு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரைக் கட்சியின் பொதுக்குழு தேர்வுசெய்தது. அப்படித் தேர்வுசெய்யச் சொன்னது நீதிமன்றம். தேர்வுசெய்த பின் அதற்கு ஒப்புதல் வழங்கியது தேர்தல் ஆணையம். இத்தனை பாடும் ஒரு சின்னத்தைக் காப்பாற்ற. ஏனெனில், சின்னம் முக்கியமானது. 

மறுபுறம், எதிரணித் தலைவர் இறங்கிவந்தார். மாற்று அணிக்குப் பரப்புரை செய்வோம் என்றார். எனில், அது நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது அவர்கள் வேட்பாளரை ஆதரிக்கவில்லை. ஆனால், வேட்பாளரின் சின்னத்தை ஆதரிப்பார்கள். ஏனெனில், அது இரட்டை இலைச் சின்னம். அந்தச் சின்னம் முக்கியமானது. அது எம்.ஜி.ஆர் கண்ட சின்னம்.

இரட்டை இலை சின்னம்

உள்ளபடியே இரட்டை இலை எம்.ஜி.ஆர் ‘கண்ட’ சின்னம்தானா? 

அதன் கதை சுவாரஸ்யமானது. இரட்டை இலை ஆதியில் சுயேச்சைச் சின்னங்களில் ஒன்றாக இருந்தது. 1973க்குப் பிறகு அது அதிமுக வசமானது. அந்த ஆண்டுதான் புகழ்பெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தது. அதிமுகவின் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அதிமுகதான். அது அஇஅதிமுக ஆவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும். திண்டுக்கல் அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது. அது தனி மாவட்டம் ஆவதற்கு இன்னும் 12 ஆண்டுகள் ஆகும்.

இரட்டை இலை எப்படி அதிமுகவின் சின்னம் ஆகியது? 

மாயத்தேவர் மதுரை ஆட்சியரைச் சந்தித்தார். ஆட்சியர் அவரிடம் 15 சுயேச்சைச் சின்னங்களைக் காட்டினார். மாயத்தேவர் இரட்டை இலையைத் தேர்வுசெய்தார். சுவரில் எளிதாக வரையக்கூடிய சின்னம் என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மாயத்தேவரின் தேர்வை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார்.

அப்போது அதிமுக தொடங்கப்பட்டு ஏழு மாதங்களே ஆகியிருந்தன. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்டச் செயலர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் கருணாநிதியின் பக்கம் இருந்தார்கள். ஆகவே, எம்.ஜி.ஆர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தைக் கோரவில்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தையோ தேர்தல் ஆணையத்தையோ அணுகவில்லை. மாறாக ஒரு சுயேச்சைச் சின்னத்தில் களமிறங்கினார். அவருக்குத் தன் செல்வாக்கின் மீது நம்பிக்கை இருந்தது. மேலதிகமாக மக்கள் மீது நம்பிக்கை இருந்தது. தான் சொல்கிற சின்னத்தை மக்கள் நினைவில் நிறுத்தி வாக்களிப்பார்கள் என்று அவர் நம்பினார். அது அப்படியே நடந்தது. அதிமுக அமோக வெற்றிபெற்றது. அடுத்த ஆண்டு கோவை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. பின்னாளில் கல்வி அமைச்சரான அரங்கநாயகத்தை நிறுத்தினார் எம்.ஜி.ஆர். சின்னம்? இரட்டை இலைதான். இரண்டாவது வெற்றி.

இரட்டை இலை அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமானது. எந்தச் சின்னத்தை வெறும் ஒரு அடையாளமாகக் கருதி முதல் தேர்தலை எம்.ஜி.ஆர் நேரிட்டாரோ, அந்தச் சின்னம் அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் வெற்றிக்குமான இலச்சினையாகிப்போனது. அது அவரது நினைவிடத்தின் வாயிலிலும் இடம்பிடித்தது.

இரட்டைக் காளை சின்னம்

எம்.ஜி.ஆரைப் போலவே சின்னத்தைவிட தன்னையும் மக்களையும் நம்பிய இன்னொரு தலைவர் இந்திரா காந்தி. 1951இல் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது நாட்டில் ஐந்தில் ஒருவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். வேட்பாளரின் பெயரைப் படிக்க முடியாத அந்த நாலு பேருக்காகத்தான் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சின்னம் கலப்பையுடன் கூடிய இரட்டைக் காளை. பெரும்பான்மை மக்கள் வேளாண்மையை நம்பியிருந்த காலம். ஆதலால் கட்சி அந்தச் சின்னத்தைத் தெரிந்திருக்கலாம்.

பசுவும் கன்றும் 

காங்கிரஸ் கட்சி 1969இல் பிளவுபட்டது. நிஜலிங்கப்பா, மெரார்ஜி தேசாய், சஞ்சீவ ரெட்டி, காமராஜ் முதலான மூத்த தலைவர்களால் இந்திரா வெளியேற்றப்பட்டார். மக்களவையிலும் பொதுக்குழுவிலும் இந்திராவுக்குத்தான் கூடுதல் ஆதரவு இருந்தது. எனினும் இரட்டைக் காளைக்கு அவர் பெரிதாக மெனக்கெடவில்லை. அந்தச் சின்னத்தை ஆணையம் முடக்கிவிட்டது. இந்திரா தேர்ந்த சின்னம் பசுவும் கன்றும். மூத்தோரின் ஸ்தாபன காங்கிரஸ் தேர்ந்தது இராட்டை நூற்கும் பெண்.

இராட்டைப் பெண் சின்னம்

இராட்டைப் பெண்ணை வட இந்தியத் தலைவர்கள்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள்; அதில் காமராஜருக்குப் பங்கு இருந்திருக்காது; அப்படித்தான் நினைக்கிறேன். முதலாவதாக, அப்போது யாரும் இராட்டை நூற்கவில்லை. தவிர, அந்தப் பெண் ராஜாஸ்தானிய முறையில் முக்காடிட்டிருந்தார். அந்தச் சின்னம் தமிழ் மண்ணிற்கு அந்நியமாக இருந்தது. ஆனால், 1971இல் நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கும், ஸ்தாபன காங்கிரஸ் (காமராஜ்) - சுதந்திரா (ராஜாஜி) கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கும் இராட்டைப் பெண் ஒரு காரணமல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

ஏர் உழவன் சின்னம்

நெருக்கடிநிலையைத் தொடர்ந்து 1977இல் தேர்தல் வந்தது. தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்பாக ஜனதா கட்சியைக் கட்டினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அதன் சின்னம் ஏர் உழவன். ஸ்தாபன காங்கிரஸ், ஜன சங்கம் (இப்போதைய பாஜக), சரண் சிங்கின் லோக் தள், ராஜ் நாரயணனின் சோசலிஸக் கட்சி முதலானவை இணைந்து உருவானதுதான் ஜனதா கட்சி. இந்தக் கட்சிகள் தங்கள் பழைய சின்னங்களைத் துறந்து புதிய சின்னத்தில் போட்டியிட்டன. வட இந்தியா முழுதும் எந்தக் குழப்பமும் இல்லாமல் புத்தம் புதிய சின்னமான ஏர் உழவனுக்கு வாக்களித்தது. அந்த அலையில் இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதியே ஏர் உழவனுக்குத்தான் வாக்களித்தது. தென்னிந்தியாவுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. அது பசுவும் கன்றுக்குப் பெருவாரியாக வாக்களித்தது. 

கை சின்னம்

காங்கிரஸ் கட்சியில் அடுத்த பிளவு 1978இல் வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பிரம்மானந்த ரெட்டி. அவரும் இன்னும் சில தலைவர்களும் இந்திரா செல்வாக்கு இழந்துவிட்டதாக (தப்புக்) கணக்குப் போட்டார்கள். இந்திராவைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். பிரம்மானந்த ரெட்டியின் குழுவினருக்குத்தான் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இந்த முறை பசுவும் கன்றும் முடக்கப்பட்டது.

இந்திரா காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் மூன்று தேர்வுகளை வழங்கியது. யானை, சைக்கிள், கை. இந்திரா எதைத் தேர்வுசெய்தார் என்பது தெரிந்ததுதான். அதே ஆண்டில் புதிய சின்னத்துடன் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார் இந்திரா. மக்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவர்கள் கை சின்னத்துக்குப் பெருவாரியாக வாக்களித்தார்கள்.

சைக்கிள் சின்னம்

இந்திரா தேர்வுசெய்யாத சின்னங்களான யானையும் சைக்கிளும் பின்னாளில் முறையே மாயாவதி, முலாயம் சிங் ஆகியோரின் வசமாகின. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் சைக்கிள் ஓடியது.

நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் 1996இல் ஜெயலலிதாவின் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார் ஜி.கே.மூப்பனார். கையோடு தமிழ் மாநில காங்கிரசைத் தொடங்கினார். திமுகவுடன் உடன்பாடு கண்டார். தமகாவைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தார். கட்சிக்கு ஒரு சின்னத்தையும் பெற்றார். அதுதான் சைக்கிள்.

பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தோடு நேரடியாக மோதியது சைக்கிள் சின்னம். முந்தையத் தேர்தல்களில் கை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள், இந்த முறை கை சின்னத்துக்கு எதிராக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார்கள். மக்கள் எந்தக் குழப்பமும் இல்லாமல் சைக்கிளுக்கு வாக்களித்தார்கள்.

சின்னம் ஓர் அடையாளம்

ஆதியில் இரட்டைக் காளை சின்னம் இருந்தது. அது ஏர் உழவனாகவும் பசுவும் கன்று சின்னங்களாகவும் பிரிந்தன. பசுவும் கன்று கை சின்னமானது, கை சைக்கிள் சின்னமானது, சைக்கிள் மீண்டும் கை சின்னமானது. சின்னங்கள் மாறினாலும் மக்கள் கட்சிகளையும் வேட்பாளர்களையும் புதிய சின்னங்கள் வழி அடையாளம் கண்டு வாக்களித்தார்கள். கடந்த 70 ஆண்டுகளில் இது பல முறை நிரூபணமாகி இருக்கிறது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்கள் ஆதரவை உதய சூரியன் சின்னத்துக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் மாற்றிக்கொண்டார்கள். வட இந்தியர்களின் ஆதரவு தாமரை சின்னத்துக்குக் கிடைத்துவருகிறது. மக்களின் ஆதரவு, கட்சிக்கும் அதன் தலைமைக்கும் அதன் கொள்கைக்கும், கூடவே வேட்பாளருக்குமானது. அதைச் சின்னங்களுக்கான ஆதரவாகச் சுருக்குவது மக்களின் அறிவுடமையைச் சிறுமைப்படுத்துவது ஆகும்.

நான் ஹாங்காங் தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன். வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயரும் கட்சிகளின் பெயரும் இருக்கும். தேர்வுசெய்ய விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிராக உள்ள கட்டத்தில் டிக் அடிக்க வேண்டும். பல வளர்ந்த நாடுகளிலும் இப்படித்தான். இன்று இந்தியாவில் முக்கால்வாசிப் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும். எல்லோருக்கும் கல்வி என்கிற இலக்கை நோக்கி நாம் முன்னேற வேண்டும். அதை அடையும்போது சின்னங்கள் இல்லாத தேர்தல் சாத்தியமாகும். 

அதுவரை சின்னங்களுக்காக மல்லுக்கட்டுவதை அரசியல் கட்சிகள் விட்டுவிட வேண்டும். தங்கள் மீதும் தங்கள் கொள்கைகளின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களே சின்னத்தைக் காட்டி வாக்கு வாங்கிவிடலாம் என்று நம்புகிறார்கள். சின்னம் ஓர் அடையாளம் மட்டுமே. அது மக்களுக்குத் தெரியும். அரசியலர்கள் மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   1 year ago

இந்தியாவில் 65 ஆண்டுகளாக ஒரு கட்சி ஒரே சின்னத்தில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளது! திமுக - உதய சூரியன் …..

Reply 1 2

Login / Create an account to add a comment / reply.

S.Elangovan   1 year ago

கட்டுரையில் உள்ள கருத்திற்கான சில விளக்கங்கள். தேர்தல் ஆணையத்தில் உள்ள சின்னங்களில் இருந்து தான் கட்சிகள் சின்னத்தைத் தேர்வு செய்யவேண்டும். அவர்களாக ஒரு சின்னத்தைப் புதிதாக உருவாக்கி உரிமை கோரமுடியாது. காங்கிரஸ் பிளவுபட்ட போது இந்திரா கட்சிக்கு உரிமை கோரியதால் தான் சின்னம் முடக்கப்பட்டது. 1977ல் ஜனதாவாக ஒன்று சேர்ந்து சரண் சிங்கின் பாரதீய லோக்தள் கட்சியின் சின்னமான 'ஏர் உழவன்' சின்னத்தில் போட்டியிட்டன. பின்னர் அந்தச் சின்னம் பல்வேறு பிளவுகளுக்குப் பிறகும் சுப்ரமணிய சுவாமி நடத்திய ஜனதா கட்சி வசம் இருந்தது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வாய் உலரும் பிரச்சினைதொலைக்காட்சிஇயற்கைசிவாஜி பூங்காஏட்டுக் கல்விபாடநூல் மரபுஇருமொழிஎது தேசிய அரசு!சோழப் பேரரசுஜீவகாருண்யம்நயன்தாரா: இந்திய மனச்சாட்சிகருணாநிதியின் முன்னெடுப்புமாபெரும் தமிழ்க் கனவுஇயற்கை உற்பத்திஇந்தியத் தாய்மொழிகளின் தகைமைமகாலிங்க ஸ்வாமிபசுமைத் தோட்டம்சமஸ் - ஜக்கி வாசுதேவ்சண்முகம் செட்டிமனைவி எனும் சர்வாதிகாரிலக்கிம்பூர் கெரிஉங்கள் சம்பளம்how to write covering letter for job applicationகேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்காபத்து காரணங்கள்தியாகராஜன்நவீன எலக்ட்ரிக் வாகனங்கள்நாள்காட்டிசத்தியமங்கலம் திருமூர்த்தி: முன்னோடி இயற்கை உழவர்வாக்கிங்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!