கட்டுரை, புத்தகங்கள் 18 நிமிட வாசிப்பு

முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

மு.இராமநாதன்
22 Feb 2022, 5:00 am
0

மகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்தளித்திருக்கிறார் தேர்ந்த வாசகரான மு.இராமநாதன். கவனிக்கத்தக்க இந்நூலில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் தொடர்பில் இராமநாதன் எழுதியிருக்கும் அறிமுகக் கட்டுரை முத்துலிங்கத்தின் தனித்துவத்தையும் அவருடைய உலகத்தையும் இளம் வாசகர்கள் அணுக வழிகாட்டுகிறது. ‘அருஞ்சொல்’ தன்னுடைய வாசகர்களுக்கு அந்தக் கட்டுரையை இங்கே தருகிறது.

 

வள் பெயர் பொன்னி. வயது பதின்மூன்று. தொழில்: வேலைக்காரச் சிறுமி. களம்: யாழ்ப்பாணத்துக்கு அருகே ஒரு சிற்றூர். காலம்: ஜார்ஜ் மன்னர் படம் போட்ட ரூபாய்த் தாள்கள் புழக்கத்தில் இருந்த காலம்.  சுருட்டிவிடும் கான்வாஸ் திரைகள்கொண்ட 'ஆஸ்டின்' கார் ஓடிய காலம். அந்த வீடு பொன்னியைச் சுற்றித்தான் இயங்கியது. பாரதியின் சேவகன் போல அவள்தான் வீட்டைப் பெருக்கினாள்; உணவு சமைத்துத் துணி துவைத்து, பாத்திரம் கழுவினாள். அம்மாவின் வேலைகள், அப்பாவின் ஆணைகள், கதை-சொல்லிச் சிறுவனின் ஆக்கினைகள் என்று பலதைச் சமாளித்தாள். எஞ்சிய நேரத்தில் அடுப்படியில், நெருப்புத் தணல் அணைந்துபோன விறகு அடுப்புக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். 

அவர் பெயர் சிவபாக்கியம். வயது 70. தொழில்: இலங்கையில் இருந்தபோது இன்னொருவர் வீட்டுத் தரையைக் கூட்டுவதையும் துடைப்பதையும் மினுக்குவதையும் செய்துகொண்டிருந்தார். களம்: நியூயார்க்கிலிருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகம். காலம்: சமகாலம். அந்தக் காப்பகத்தில் அவருக்கு எல்லா வசதிகளும் இருந்தன. வெளியே போகலாம் வரலாம். கடன் அட்டையில் என்னவும் வாங்கலாம். ஆனால் அவரால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. மகள் திரௌபதிதான் அம்மாவை அமெரிக்கா வருவித்தாள். இப்போது அவள் பெயர் ரிபெக்கா. புலமைப் பரிசிலில் படிப்பதற்காக அமெரிக்கா வந்தவள் பெஞ்சமினைக் காதலித்து மணந்துகொண்டாள். யூத மதத்துக்கு மாறிவிட்டாள். சிவபாக்கியம் வந்தபோது பேரன் ஆப்பிரஹாமிற்கு வயது நாலு. அவனுடைய ஒன்பதாவது வயதில்தான் அம்மாவை இந்தக் காப்பகத்தில் சேர்த்துவிட்டாள் மகள். அதற்கு நிறையக் காரணங்கள். அம்மா யூதர்களுக்குத் தடை செய்யப்பட்ட இறாலைப் பேரனுக்குப் புகட்டிவிட்டாள். கைதவறி விழுந்த உணவை அவளே சுத்தம் செய்தாள்; அதற்கு மகள் வேலைக்காரர்களை நியமித்திருப்பதை மறந்துவிட்டாள். முக்கியமாக மகள் மறக்க விரும்பிய ஒரு பழைய வாழ்க்கையை, அம்மா தன் இருப்பின் மூலம் நினைவூட்டிக் கொண்டிருந்தாள்.

அவள் பெயர் மைமூன். இளம் வயது. காலம்: எழுபதுகளாக இருக்கலாம். களம்: சோமாலியாவில் ஒரு குக்கிராமம். தொழில்: புல்லினாலும் நாரினாலும் இறுக்கிப் பின்னிய குடத்தை முதுகிலே சுமந்து, காட்டுப் பாதையில் எட்டு மைல் தூரம் போய் நித்திய நியமமாக தண்ணீர் பிடித்து வரவேண்டும். விறகு பொறுக்கிச் சமைக்க வேண்டும். சுரைக்குடுவையில் ஒட்டகப் பால் கறக்க வேண்டும். மீதமிருக்கும் பாலைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மைமூன் அலிசாலாவைக் காதலிக்கலாமா என்று தீவிரமாக யோசிக்கிறாள். ஆனால் தொலைதூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்த, அந்த ஊர் குடித்தலைவரும், ஐம்பது ஒட்டகங்களைச் சீராகத் தர முன்வந்தவருமான ஐம்பது வயதுக்காரரை அவள் மறுப்புச் சொல்லாமல் மணந்து கொள்கிறாள். ஏன் என்பது கதையின் முடிவில் தெரியவரும். 

இந்த மூன்று பெண்கள் மீதும் நமது சமூகம் கரிசனத்தோடு நடந்து கொள்ளவில்லை. இது ஒற்றுமை. இவர்கள் வெவ்வேறு கால கட்டத்தின் கதை மாந்தர்கள். வெவ்வேறு வயதினர். தமிழ் இலக்கணப்படி பொன்னி ஒரு பெதும்பை, மைமூன் அரிவை, சிவபாக்கியம் பேரிளம்பெண்.  இவை வேற்றுமைகள். இன்னொரு வேற்றுமையும் இருக்கிறது. அதுதான் முக்கியமானது. கதை நடக்கும் களம். அவற்றின் அயற்தன்மை.

பொன்னியின் கதைக் களம் தமிழ் மண்ணில் தொடங்கி தமிழ் மண்ணில் முடியும். அது தமிழ் வாசகனுக்குப் பரிச்சயமானது. சிவபாக்கியத்தின் வேர்கள் இலங்கையில் பரவி இருந்தாலும், கதை நியூயார்க்கில் நடக்கிறது. அங்கே பேர்ச் மரம் வெள்ளையடித்தது போல இருக்கும். ஆஷ் மரப்பட்டைகள் சாய் சதுரமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறும். ஐந்துகோண மேப்பிள் இலை அவசரமாகவும் ஓக் இலைகள் நிதானமாகவும் நிறம் மாறும். இவற்றோடு தமிழ் வாசகனுக்கு அறிமுகமில்லை. கதையில் ஊடாடி வரும் யூதக் கலாச்சாரமும் அவனுக்கு அந்நியமானது. எனினும், சிவபாக்கியத்தை அவன் அறிவான். அவளது மன அவசங்கள் அவனுக்குப் புரியும். ஆனால் மைமூன் தமிழ்க் கதையுலகுக்குப் புதியவள். அவளது ஆடுகளின் மேய்ச்சல் நிலம் புதிது. அவள் தண்ணீர் எடுக்கப் போகும் வழியில் வரும் அகாஸிய முள்மரங்களும், ஆள் உயரக் கத்தாளைகளும் பயந்த சுபாவம் கொண்ட பற்றைகளும் புதியவை. ஒரு வறட்சிக் காலத்தில் வழிப்போக்கர்களாக வந்த ஒரு தாயும் அவளது குழந்தையும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் அலைந்து திரிந்து குர்ரா மரத்தின் நிழலில் உயிரைவிட்ட கதையை அவன் இதற்கு முன்பு கேட்டிருக்க மாட்டான். மைமூன் ஒரு ஐம்பது வயதுக்காரனை மணக்கச் சம்மதித்ததின் பின்னுள்ள நியாயம் அவனுக்குப் புதிதாக இருக்கும். 

முத்துலிங்கத்தின் கதைகள் இந்த மூன்று களங்களாலும் ஆனவை. அவரது கதைகளின் வெளி இப்படியான மூன்று உலகங்களால் ஆனது என்றும் சொல்லலாம். இரண்டாம் வகைக் கதைகள் அயலில் நடப்பவை. அதனால் அயற்தன்மை உடையவை. எனில் அதில் வரும் தமிழ்க் கதை மாந்தர்கள் கதையைத் தமிழ் வாசகனுக்கு  நெருக்கமாக்குகிறார்கள். ஆனால் மூன்றாம் வகைக் கதைகள் அயல் நாடுகளில் அயல் நாட்டு மாந்தர்களால் செலுத்தப்படுபவை. அவை களனாலும் மாந்தர்களாலும் அயற்தன்மை பெறுகின்றன. எனில், தமிழ் மண்ணில் தமிழ் மாந்தர்கள் பங்குபெறும் முதல் வகைக் கதைகளிலும் ஓர் அயற்தன்மை உள்ளது. அது காலம். முத்துலிங்கத்தின் முதல் வகைக் கதைகள் காலத்தால் முந்தியவை. இப்படி மூன்று வகைக் கதைகளும் காலத்தாலோ இடத்தாலோ அயற்தன்மை பெறுகின்றன. இது ஆசிரியர் தனக்குத் தானே வருத்திக்கொண்ட சவால். ஆனால் அப்படியொரு கயிற்றில் நடக்கிற யத்தனம் தெரியாமல் கதையைக் கொண்டுசெல்கிற லாவகம் இந்த வித்தைக்காரரிடம் இருக்கிறது.   

சத்யஜித் ரேயின் சரிதத்தை எழுதிய ஆண்ட்ரூ ராபின்சன் இப்படிச் சொல்கிறார்: ‘படைப்பு உருவான காலம், படைப்பு உருவான இடம் இரண்டையும் மேதை அழித்து விடுகிறான்’. இதன் பொருள் இடமும் காலமும் படைப்பில் இராது என்பதல்ல. அவை இருக்கும். துலக்கமாகத் தெரியலாம். தெரியாமலும் போகலாம். ஆனால் அவற்றை மீறி மேதையின் படைப்புகள் வாசகப் பரப்பில் நிலைத்திருக்கும். அது ‘ப’ வடிவ இரும்புத் தண்டை ஆஸ்டின் காரின் முன் துளையில் நுழைத்து பலம் கொண்ட மட்டும் சுழற்றி காரை ஸ்டார்ட் செய்கிற காலமாக இருந்தாலும், வேரோடு பிடுங்கிய சோளப் பயிர்களை அசைத்து அயலூர்காரர்களை வரவேற்கும் சோமாலியாக் கிராமமாக இருந்தாலும், நீரினங்களில் செதில் உள்ளவற்றை மட்டுமே உண்ணும் யூதக் கலாச்சாரமாக இருந்தாலும், அந்தக் கதைகளின் அயற்தன்மை தெரியாமல் அவற்றை  முத்துலிங்கத்தால் தமிழ் வாசகனுக்குப் பரிமாற முடிகிறது. ஆகவே அவை வாசகப் பரப்பில் நிலைக்கின்றன; கிளாஸிக் படைப்புகள் ஆகின்றன.

**

அ.முத்துலிங்கத்தின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவரைப் பற்றிய அறிமுகம் இப்படித் தொடங்குகிறது: “1937 சனவரி 19-ல் இலங்கை கொக்குவில் கிராமத்தில், அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்குப் பிறந்தவர்.” விஞ்ஞானம் படித்தார். சார்டட் அக்கவுண்டண்ட் ஆனார். தனது முதல் கதையை 1958-ல் எழுதினார். கலாநிதி கைலாசபதியால் தூண்டுதல் பெற்றார். 1964-ல் 'அக்கா' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். ஈழ இனப்பிரச்சனை காரணமாக சியோரா லியான் சென்றார். உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையிலும் முக்கியப் பொறுப்புகள் வகித்தார். ஆப்பிரிக்காவிலும் மேற்காசிய நாடுகளிலும் பணியாற்றினார். ஆனால் அந்தப் பணிக்காலத்தின் பெரும் பகுதியில் அவர் கதை எழுதவில்லை. அந்த அனுபவங்களை எல்லாம் ஒரு கருமியைப் போல் சேமித்துக்கொண்டிருந்தார். நீண்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு 1994-ல் தனது சேகரத்திலிருந்தவற்றைச் செலவாக்கத் தொடங்கினார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘திகட சக்கரம்’ (1995). அடுத்து வெளியானவை: ‘வம்ச விருத்தி’ (1996), ‘வடக்கு வீதி’ (1998). அதுகாறும் வெளியான கதைகள் 41. ஆனால் இந்தத் தொகை நூலில் அவற்றிலிருந்து இடம்பெறுவது ஒரு கதைதான் (‘ஒட்டகம்’). 

அந்த 41 கதைகளில் பல மாணிக்கங்கள் உள்ளன. “குழந்தமையின் பார்வை வழியாக ஒரு சமூகக் கொடுமை அல்லது குடும்ப அவலம் விவரிக்கப்படும்போது அது கூடுதலான அழுத்தத்தோடு மனதில் பதிகிறது” என்று பாவண்ணனால் சிலாகிக்கப்பட்ட ‘அக்கா’ அவரது ஆரம்ப காலக் கதைகளில் முக்கியமானது. 1997-ல் 'இந்தியா டுடே' இதழில் வெளியான ‘விசா’, இலக்கியச் சிந்தனையால் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டது. ‘வம்ச விருத்தி’ தொகுப்பு தமிழ் நாடு அரசின் பரிசையும், ‘வடக்கு வீதி’ தொகுப்பு இலங்கை அரசின் சாகித்திய விருதையும் பெற்றவை. எனினும் முத்துலிங்கத்தின் ஆரம்பகாலச் சிறுகதைகள் பொங்கித் ததும்புபவை,  நிறைந்து வழிபவை. எனில், புத்தாயிரமாண்டிற்குப் பிறகு அவர் எழுதிய கதைகள் அடர்த்தியானவை, செறிவானவை, வார்த்தை வார்த்தையாய் வரி வரியாய்ச் செதுக்கப்பட்டவை. அவரது  ‘தொடக்கம்’ என்கிற கதையில் சேகர் பால்கான் என்று ஒரு பறவை வரும். ரஷ்யாவின் வடகிழக்கு மூலையில் இருந்து குளிர்கால ஆரம்பத்தில் இது புலம் பெயரும். தெற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் பறந்து வந்து வசந்தம் வரும் வேளைகளில் திரும்பிவிடும். ஐயாயிரம் மைல்கள் இதற்கு ஒரு பொருட்டல்ல. சூரியனையும், நட்சத்திரங்களையும் வைத்து திசையறிந்து செல்லும். சரி கணக்காக வந்து கணக்காகத் திரும்பிவிடும். முத்துலிங்கத்தின் 2000-க்குப் பிறகான கதைகளும் அப்படித்தான். அவை இலக்கை நோக்கிச் சரி கணக்காகப் பயணிக்கும். கதை கட்டுச் செட்டாக இருக்கும்.  

2000-ல் முத்துலிங்கம் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அது முதல் கனடாவில் வசித்துவருகிறார். அவரது பணி ஓய்விற்கும் படைப்பின் செழுமைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை. அவரது படைப்பின் உச்சம் என்று ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ (காலச்சுவடு பதிப்பகம், 2001) தொகுப்பைச் சொல்லலாம். 2003-ல் அவர் எழுதிய கதைகளின் எண்ணிக்கை 75 ஆனது. ‘அ.முத்துலிங்கம் கதைகள்’ (தமிழினி, 2003) எனும் தலைப்பில் அவை நூலாகின. அடுத்தடுத்து வெளியான தொகுப்புகள்: ‘அமெரிக்கக்காரி’ (காலச்சுவடு பதிப்பகம், 2009), ‘குதிரைக்காரன்’ (காலச்சுவடு பதிப்பகம், 2012), ‘பிள்ளை கடத்தல்காரன்’ (காலச்சுவடு பதிப்பகம், 2015), ‘ஆட்டுப்பால் புட்டு’ (நற்றிணைப் பதிப்பகம், 2016), ‘இங்கே நிறுத்தக் கூடாது’ (நற்றிணைப் பதிப்பகம், 2019) அகியவை. 1958 முதல் இதுவரை முத்துலிங்கம் எழுதிய கதைகள் 150ஐத் தாண்டும். இவற்றிலிருந்து சராசரியாக ஆறில் ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை இந்தத் தொகை நூலில் இடம் பெறுகின்றன.

முத்துலிங்கம் அடிப்படையில் சிறுகதைக்காரர். எனில், இரண்டு நாவல்களும் எழுதியிருக்கிறார். முதலாவது, ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ (உயிர்மை பதிப்பகம், 2008). சுயசரிதைத் தன்மையுடையது. இதில் 46 அத்தியாயங்கள் உள்ளன. இவற்றைப் 46 சிறுகதைகளாகப் படிக்கலாம். தொடர்ச்சியாகப் படித்தால் நாவலாகிவிடும். அடுத்தது, ‘கடவுள் தொடங்கிய இடம்’ (விகடன் பிரசுரம், 2014). ஈழத் தமிழர்கள் சிலர் அகதிகளாக இடம் பெயர்ந்த கதைகளைச் சொல்வது. இதையும் சிறுகதைகளாகப் படிக்கலாம். எனில் இவை இரண்டையும் நாவல் என்று ஆசிரியரே வகைப்படுத்திவிட்டதால் இந்தத் தொகை நூலுக்காக இவை கணக்கில் கொள்ளப்படவில்லை. 

இவரின் கட்டுரைகள் பலவும் புனைவின் சாயல் கொண்டவை. இவரது கட்டுரைத் தொகுப்புகள் வருமாறு: ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ (தமிழினி, 2005), ‘பூமியின் பாதி வயது’ (உயிர்மை பதிப்பகம், 2007), ‘அமெரிக்க உளவாளி’ (கிழக்கு பதிப்பகம், 2010), ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ (உயிர்மை பதிப்பகம், 2011), ‘தோற்றவர் வரலாறு’ (நற்றிணைப் பதிப்பகம், 2016). இந்தத் தொகுப்புகளுக்குள்ளும் சிறுகதைகள் பரக்கக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் தலையில் கட்டுரை என்று ஆசிரியரே எழுதிவிட்டதால் அவையும் இந்தத் தொகை நூலின் கணக்கில் வரவில்லை. 

**

இந்தப் பின்னணியில் இந்தத் தொகை நூலில் இடம் பெறும் முத்துலிங்கத்தின் மூன்று விதமான உலகங்களையும் சற்றே நெருங்கிப் பார்க்கலாம். இலங்கையில் தொடங்கி இலங்கையில் முடியும் கதைகளுக்கு ஆட்டுப் பால் புட்டு, மகாராஜாவின் ரயில் வண்டி முதலான கதைகள் எடுத்துக்காட்டுகளாக அமையும். அரிசிமாவையும் உளுத்தம்மாவையும் சரிசமமான விகிதத்தில் கலந்து குழைத்து முதலில் புட்டு அவிக்கவேண்டும். அதை இறக்கியவுடன் சூடாக்கிய ஆட்டுப் பாலில் கிளறி சர்க்கரை சேர்த்து சுடச்சுடச் சாப்பிட்டால் அதன் ருசியே தனி என்பது சிவப்பிரகாசத்தின் அபிப்பிராயம். அதற்காகவே கொழும்பில் பணியாற்றும் அவர் ஒவ்வொரு மாதமும் யாழ்தேவியைப் பிடித்து யாழ்ப்பாணம் வந்துவிடுவார். யாழ்ப்பாணத்தில் அவருக்குத் தோட்டம் இருக்கிறது. அங்கேதான் அவரது மனைவி ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கிறார். அதில் ஒரு ஆடு திருடு போகிறது. பின்னர் கிடைத்தும் விடுகிறது. கள்ளன் உள்ளூர்க்காரன்தான். அவனை விட்டுவிடச் சொல்கிறார் சிவப்பிரகாசம். ஆனால் போலிஸ் அவன் மேல் வழக்குப் போடுகிறது. வழக்கின் காரணமாக கள்ளனைப் போலவே சிவப்பிரகாசத்துக்கும் இன்னல்கள் நேர்வதை மீதிக் கதை விவரிக்கிறது. இந்தக் கதை தமிழ் மண்ணில் நடந்தாலும் காலத்தால் அயற்தன்மை பெறுகிறது. ‘கதை நடந்தது சிலோனில்தான், ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்யும் முன்னர்’ என்கிற முதல் வரியிலேயே கதை நிகழும் காலத்திற்கு வாசகனைக் கொண்டுபோய்விடுகிறார் ஆசிரியர்.

அடுத்து, இரண்டாம் வகைக் கதைகள். இவை அந்நிய மண்ணில் நடப்பவை. தமிழ் மாந்தர்கள் இடம் பெறுபவை. முத்துலிங்கத்தின் பல கதைகள் இந்த வகைமையில் வரும். 

இந்தக் கதைகளில் அகதிகள் வருவார்கள், அகதிகளாக ஆக முடியாதவர்களும் வருவார்கள். அவர்கள் தத்தமது நாடுகளிருந்து துரத்தப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள். நாடற்றவர்கள். ஒரு நாட்டைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். லோகிதாசன் துப்பரவுப் பணியாளன் (‘கறுப்பு அணில்’). ரத்ன ஒரு பரிசாரகி (‘மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்’). இலங்கையில் வாங்கிய கடனை அடைக்க ஒரு தொழிற்சாலையிலும் ஓர் அங்காடியிலுமாக இரண்டு வேலைகள் பார்ப்பவன் லோகநாதன் (‘பிள்ளை கடத்தல்காரன்’). இவர்கள் கனடாவிற்கு வந்த பிற்பாடு அகதிக் கோரிக்கை வைத்தவர்கள். மூவரிடமும் கைவசம் உள்ள ஆங்கிலச் சொற்களைப் போலவே காசும் குறைவு. தனிமையும், குளிரும் வாட்டும் ஊரில் தங்களைப் பொருத்திக்கொள்ளப் படாதபாடு படுகிறவர்கள். இவர்கள் எறிகணைகளிலிருந்தும் குண்டு வீச்சுகளிலிருந்தும் முள்வேலி முகாம்களிலிருந்தும் தப்பிப் பிழைக்க வெளிநாட்டுக்கு வந்தவர்கள்.

இந்தக் கதைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்களும் வருகிறார்கள். ஒரு ஜெர்மன் நிறுவனம் ஆப்பிரிக்காவில் செயல்படுத்தும் உள்கட்டுமானப் பணியை மேற்பார்க்கும் தமிழ் அதிகாரி காருக்குறிச்சியின் ரசிகர் (‘விருந்தாளி’). 23ஆம் மாடியில் அலுவலகம் இருக்கும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் எண்சீர் விருத்தமும் பாயிரமும் யாப்பருங்கலக் காரிகையும் அறிந்தவர் (‘தொடக்கம்’). லண்டனில் மகப்பேறு மருத்துவத்தில் விசேடப் படிப்பு (MRCOG) படித்த டாக்டர் நியூ பவுண்லாண்டில் பணியாற்றுபவர். (‘ஆதிப்பண்பு’)

இந்த இரு சாரருக்கும் இடையிலான முரண், சைமனை மூச்சு முட்டச்செய்கிறது (‘நிலம் என்னும் நல்லாள்’). அவன் இயக்கத்தில் இருந்தவன். போர் முடிந்ததும், அவனது அப்பா நிறையப் பணம் செலவழித்து மகனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனைத் தாய்லாந்து வழியாக கனடாவுக்கு எடுப்பிக்கிறார். கனடாவில் பெற்றோர் வசிக்கும் வீடு அவனைத் திகைக்கச் செய்கிறது. பளிங்குத் தரை. மரவேலைப்பாடுகள். சுழன்று ஏறும் படிக்கட்டுகள். சுவிட்ச் போட்டுத் திறந்து மூடும் திரைச் சீலைகள். அவனால் அத்தனை படாடோபத்தைத் தாங்க முடியவில்லை.   

இரண்டாம் வகைக் கதைகளில் ‘அமெரிக்காரி’யாக எத்தனை முயன்றாலும் மாற முடியாத இலங்கைக்காரி மதி வருகிறாள். ஆனால் பத்மாவதி அப்படியானவள் அல்லள் (‘ஐந்தாவது கதிரை’). கனடா வந்த பிறகு அவள் குதிக்கால் வெடிப்பில் ஒட்டியிருந்த செம்பாட்டு மண் முற்றிலும் மறைவதற்கு சரியாக ஆறுமாதம் எடுத்தது. ஆனால் அவள் அடியோடு மாறுவதற்கு ஆறு வாரம் கூட எடுக்கவில்லை. 

முத்துலிங்கத்தின் மூன்றாம் வகைக் கதைகள் முக்கியமானவை. அந்நிய மண்ணில் அந்நிய நாட்டு மனிதர்கள் மட்டும் இடம்பெறும் தமிழ்க் கதைகள் அவை. புவியீர்ப்புக் கட்டணம், நாளை, தீர்வு முதலிய கதைகள் இந்த வகைமையில் வரும். ‘புவியீர்ப்புக் கட்டணம்’ ஒரு மேலை நாட்டில் நடக்கிறது. ‘நாளை’ ஒரு சபிக்கப்பட்ட யுத்த பூமியில் நடக்கிறது. ‘தீர்வு’ ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இந்தக் கதாபாத்திரங்கள் யாரும் தமிழ் பேசுகிறவர்கள் அல்லர். ஆனால் கதை தமிழ் பேசுகிறது. அது தமிழ் வாசகனுக்கு நெருக்கமாகவும் இருக்கிறது. 

'மயானப் பராமரிப்பாளர்' மூன்றாம் வகைக் கதைக்கு எடுத்துக்காட்டாக அமையும். இதில் ஒரு கதைசொல்லி வருகிறான். அவன் கதையில் ஒரு பாத்திரம்தான். ஆனால் கதையில் அவன் ஆற்றுவது ஒரு கட்டியங்காரனின் பணியை. அவன் இலங்கைக்காரனாக இருக்கலாம். இந்தியனாக இருக்கலாம். அமெரிக்கனாக, ஆப்பிரிக்கனாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி ஒரு பொதுப்புள்ளியில் ஆசிரியரால் அவனை நிறுத்த முடிகிறது. கதையில் வரும் அப்பா அமெரிக்கர். அவர் செய்யும் தொழில் ஒரு தமிழ் வாசகன் அறிந்திராதது. ஆனால் அந்தத் தொழிலின் வாயிலாக அவர் எட்டும் சமநிலை தமிழ் வாசகனுக்குப் புரியக்கூடியது. அம்மா ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரது சதிகளும் தமிழ் வாசகனுக்குப் புதியவை.  ஒரு விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி போகிறது. நீண்ட பயணம். இடையில் சர்வதேசத் தேதிக்கோடு வருகிறது. அதில் ஒரு சனிக்கிழமை காணாமல் போகிறது. கதையில் வரும் சிறுமிக்கு மனிதர்கள் வரைந்த இந்தக் கோடும் அவர்களின் சூழ்ச்சியும் புரியவில்லை. அடக்கமாட்டாமல் அவளுக்கு கண்ணீர் பெருகுகிறது. ஒரு சர்வதேசக் கதையை வாசகனின் தோளில் கைபோட்டுக்கொண்டு சொல்லி முடித்து விடுகிறான் முத்துலிங்கத்தின் நவீனக் கட்டியங்காரன்..

**

முத்துலிங்கத்தின் கதைகளில் சொல்லப்பட்ட வரிகளுக்கிடையில் வாசகன் உய்த்து உணர்ந்துகொள்ள ஏதுவாக விடப்பட்டிருக்கும் சொல்லப்படாத வரிகளும் இருக்கும். ‘தாழ்ப்பாள்களின் அவசியம்’ அப்படியான கதை. மகனைப் பார்க்கக்  கனடா வரும் அம்மாவுக்கு அங்கே நம்பமுடியாத பல விசயங்கள் இருக்கின்றன. மகன் வசிக்கும் வீட்டின் வெளிக்  கதவிற்குத் தாழ்ப்பாள் இல்லை. படுக்கையறைக்கும் குளியலறைக்கும் பூட்டு இல்லை. குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லை. வெளிக்கதவிற்குத் தாழ்ப்பாள் இல்லாததால் அம்மாவிற்குக் கெட்ட கனவுகள் வருகின்றன. பழைய சாமான் கடையில் இரண்டு தாழ்ப்பாள்களை வாங்கிப் பூட்டிய பிறகுதான் அம்மாவுக்கு நித்திரை வருகிறது. மகனுக்கு அம்மாவிடம் சில வருத்தங்கள் இருக்கின்றன. வீட்டிற்கு வரும் பிராச்சாரகர்களை அம்மா அனுமதிக்கிறார், அவர்களுக்குப் பாசத்தோடு பணிவிடை செய்கிறார். "வீட்டுத் தொலைபேசியில் வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம், விற்பனைக்காரர்களும் நன்கொடை யாசிப்பவர்களும்தான் வீட்டுத் தொலைபேசியில் அழைப்பார்கள்" என்கிறான் மகன். ஆனால் அம்மாவால் வீட்டுக்கு வரும் அழைப்புகளை எடுக்காமல் இருக்க முடிவதில்லை. குளிர்பானப் பெட்டியை பூட்டக் கூடாது, கதவுகளைத் திறக்கக் கூடாது, விருந்தினரை உள்ளே அழைக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடுகளை அம்மாவால் ஏற்க முடியவில்லை. அவர் ஊருக்குத் திரும்பி விடுகிறார். இந்தக் கதையில் அம்மா தாழ்ப்பாள் வேண்டும் என்கிறார். மகன் வேண்டாம் என்கிறான். இதுதான் கதையில் காணக் கிடைக்கிறது. ஆனால் உண்மையில் அம்மாவின் மனம் விசாலமானது. அது அன்பாலும் கனிவாலும் நிரம்பியது. மகன் விருந்தினர்களை அனுமதிப்பதில்லை. தொலைபேசி அழைப்புகளைப் பொருட்படுத்துவதில்லை. அவன் மனம் மூடுண்டு இருக்கிறது. அதில் தாழ்ப்பாள் இடப்பட்டிருக்கிறது. இப்படிக் கதையை வாசிக்கும் சாத்தியத்தையும் ஆசிரியர் வாசகனுக்கு அளிக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வாசகன் இப்படியான சொல்லப்படாத வரிகளைக் கண்டுணர முடியும். 

கதை யாருடைய பார்வைக் கோணத்தில் சொல்லப்படுகிறதோ அவருக்கு எதிரான கூற்றையும் கதைக்குள்ளே பொதிந்து வைக்கிற சாகசத்தை ஆசிரியர் சில கதைகளில் நிகழ்த்துகிறார். ஒரு சதுரமைல் பரப்பைக் கொண்ட கனடாவின் ஒரு மாஅங்காடியில் தொடங்கும் கதை ‘ஐந்தாவது கதிரை’. இது தங்கராசாவின் பார்வைக் கோணத்தில்தான் சொல்லப்படுகிறது. மனைவி பத்மாவதியோடு அவர் நடத்தும் மெளனப் போராட்டமும், அவள் மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுமாக விரியும் அந்தக் கதையில், அவரது குறைகளையும் வாசகன் தொட்டுணர முடிகிறது. கனடாவின் சிறைச்சாலை ஒன்றிலிருந்து குடிவரவு அதிகாரிக்கு கணேசரட்னம் எழுதுகிற கடிதம்தான் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’. தனது நியாயங்களை அவன் அடுக்கிக்கொண்டேவருகிறான். என்றாலும் அவன் இழைக்கும் குற்றமும் வாசகனுக்குத் தெரிந்துவிடுகிறது. ‘தில்லையம்பலப் பிள்ளையார் கோவி’லில் வரும் சிறுவனின் சாமர்த்தியமான பேச்சுக்குப் பின்னால் இருக்கும் கள்ளமும் விஷமும் சதியும் வாசகனுக்குப் பிடிபடுகிறது. பிரதிக்கு எதிரான வாதங்களையும் பிரதியின் கூற்றுக்குள்ளேயேதான் வைத்திருக்கிறார் ஆசிரியர்.

***

முத்துலிங்கம் தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தொண்ணுறுகளிலேயே கணினியையும் (‘கம்ப்யூட்டர்’) வையக விரிவு வலையையும் (‘தொடக்கம்’) தனது கதைகளுக்குள் கொண்டுவந்தவர். அவரது கதைகள் பலவற்றிலும் கணினி இடம்பெறும். அவன் விநோதினியிடமிருந்து ஒரு பதிலுக்காகக் காத்திருக்கிறான். அதற்கு ஆசிரியர் சொல்லும் உவமை இது: ‘கணினியில் மின்நுனி ஒளிர்ந்து ஒளிர்ந்து அடுத்த வசனத்துக்குக் காத்து நிற்பது போலக் காத்து நின்றான்’ (‘அது நான்தான்’). அமண்டா அதி விரைவாகத் தட்டச்சு செய்வாள். ஆசிரியர் அதை இப்படிச் சொல்கிறார்: ‘மரங்கொத்திகள் கொத்துவதுபோல 101 விசைகளில் அவள் விரல்கள் வேகமாக ஒடின’ (‘சூனியக்காரியின் தங்கச்சி’). மதியின் விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அது ஆசிரியரிடமிருந்து இப்படி வெளிப்படுகிறது: ‘அவளது விரல்கள் வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதைப் பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையைத் தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான்’ (‘அமெரிக்கக்காரி’). தங்கராசா நிரல் எழுதுவதில் வலு கெட்டிக்காரர்.  Backspace விசையை ஒடித்துவிட்டு கணினி நிரல் எழுதும் வல்லமை படைத்தவர் (‘ஐந்தாவது கதிரை’).

முத்துலிங்கத்தின் வாசகப்பரப்புக்கு இந்த நவீனத்துவம்தான் காரணம் என்பது சிலரின் கருத்து. அவரது கதைகளில் உள்ள சுவாரசியம்தான் அவரை தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது என்பது பரவலான கருத்து. அவரது கதைகளில் பயிலும் பகடிக்கும் நமுட்டுச் சிரிப்பிற்கும் ரசிகர்கள் பலர். முத்துலிங்கம் தமிழ் மண்ணின் பாடுகளைக் குரலை உயர்த்தாமல் சொல்வது பலருக்குப் பிடித்திருக்கிறது. 

அவரது கதை வெளி கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகிறது. புலம் பெயர்ந்து வாழ்பவர்களில் தங்கள் பிறந்த மண்ணின் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்கிறவர்கள் உண்டு. புலம் பெயர்ந்த மண்ணின் அடையாளங்களைச் சுவீ்கரித்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிலிருந்தும் தங்களுக்கு வேண்டுவனவற்றை எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிற்கும் இடையில் ஊசலாடுபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் முத்துலிங்கம் இலக்கியமாக்குகிறார். அது வாசகர்களை ஈர்க்கிறது. 

ஆக, முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. புலம் பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையாளச் சிக்கலும் இருக்கிறது. தமிழ் இருக்கிறது. சர்வ தேசியம் இருக்கிறது. அவரது எழுத்துகள் வாசகனைக் கண்ணியப்படுத்துகிறது. இவை எல்லாவற்றையும்விட நான் முக்கியமாகக் கருதுவது அவரது கதைகளில் உண்மை இருக்கிறது. இந்த நம்பகத்தன்மை, இந்தத் தொகை நூலில் உள்ள கதைகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாசகர்களின் மனதிற்கு நெருக்கமாக வைத்திருக்கும்.

##

புவியீர்ப்புக் கட்டணம்
காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள்
காலச்சுவடு பதிப்பகம் (ஜனவரி 2022)
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்
தொகுப்பாசிரியர்: மு. இராமனாதன்
அச்சு நூல் விலை: ரூ. 325
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/u0baau0bb5u0bafu0bb0u0baau0baau0b95-u0b95u0b9fu0b9fu0ba3u0bae_944/

அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B09RG2139H

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


1

1





வந்தே பாரத்காசிமகளிர் சுய உதவிக் குழுக்கள்பிரதமர் வேட்பாளர்பெட்ரோல் டீசல் விலை உயர்வுகொச்சிஆல்-ரவுண்டர்பேரறிவாளனுக்கான கொண்டாட்டம்: அபாயகரமான தமிழகத்தின்dawnகாலம் மாறுகிறதுஔவையார்ஏறுகோள்கனடாகுடும்ப அரவணைப்புமார்க்ஸிஸ்ட் கட்சிபிராட்மேன் தரம்உலகின் மனசாட்சியான மாணவர் எழுச்சிவட மாநிலத்தவர்கள்வர்ண ஒழுங்குஒலிப்பியல்பற்றாக்குறைதென்னைஜெயலலிதாவின் அணுகுமுறைகேட் தேர்வுஆளுங்கட்சிட்ரம்ப்காந்தி செய்த மாயம் என்ன?கூடாதாஆண் பெண் உறவுபட்ஜெட் 2022

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!