கட்டுரை, கலாச்சாரம், வரலாறு 10 நிமிட வாசிப்பு

ஆவணப்படுத்துவதில் அலட்சியம்

மு.இராமநாதன்
19 Jul 2022, 5:00 am
0

வணம் என்பது தமிழ்ச் சொல். ஆவணப்படுத்தல் என்பதும் தமிழ்ச் சொல்தான். ஆனால், அது ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டுத்தான் தமிழுக்கு வந்திருக்க வேண்டும். ஏனெனில், ஆவணப்படுத்துவதில் நமக்கு அக்கறை மட்டு. நம்மில் நிலவும் இந்தப் போதாமையை நினைவுகூர்கிற விதமாக எனது சமீபத்திய சிகாகோ பயணம் அமைந்துவிட்டது. 

இந்த நகரம் அடுக்ககங்களுக்குப் பெயர்போனது. நகரின் பிரதான அடுக்ககங்கள் அமைந்திருக்கும் சாலைகள் வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துப் போகிறார்கள். ஒவ்வொரு அடுக்ககத்தின் கதையையும் வழிகாட்டி விவரித்தார். கூடவே அவை அமைந்திருக்கும் தெருவின் பெயர்களையும் அவற்றின் பெயர்க்காரணத்தையும் விளக்கினார். நகரின் உருவாக்கத்தில் பங்காற்றிய அரசியலர்கள், செயல்பாட்டாளர்கள் கவிஞர்கள், பாதிரியார்கள் என ஆளுமைகள் பலரின் பெயரால் அந்தத் தெருக்கள் அறியப்படுகின்றன. அப்படியல்லாத தெருக்களும் இருந்தன. ‘கிராண்ட் அவென்யூ’ (Grand Avenue) அவற்றில் ஒன்று. 

நகரின் முதல் மேயர், நகரைப் புகழ்த்திச் சொன்ன வாசகத்திலிருந்து இது எடுக்கப்பட்டது என்றார் வழிகாட்டி. ‘ஆஷ்லேண்ட் அவென்யூ’வின் (Ashland Avenue) பெயர்க்காரணம் 1871ஆம் ஆண்டில் நிலைகொள்கிறது. அந்த ஆண்டு நகரம் பெரும் தீ விபத்துக்குள்ளானது. நகரம் மிக விரைவாக புனரமைக்கப்பட்டது. அதாவது, நகரம் சாம்பலில் இருந்து உயிர்தெழுந்தது, அதன் நினைவாக இந்தத் தெருவுக்கு சாம்பலின் ‘ஆஷ்’ (ash) பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்றார் வழிகாட்டி. எனக்கு நாடகசாலைத் தெரு நினைவுக்கு வந்தது. 

நாடகசாலைத் தெரு

நாடகசாலை என்கிற வசீகரமான பெயரைக் கொண்ட தெரு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறது. எழுபதுகளில் எங்கள் குடும்பம் அந்தத் தெருவில் வசித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாவை முப்பதும் செப்பிய கோதை பிறந்த ஊர். எல்லா ஊர்களையும்போல அங்கேயும் மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மாதா கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு முதலானவை இருந்தன. காந்தி, ராஜாஜி, நேருவின் பெயர்களில் தெருக்கள் இருந்தன. மதுரை சாலை, சாத்தூர் சாலை, ராஜபாளையம் சாலை என்று சிலப் பிரதான சாலைகள் அவை போகுமிடத்தின் பெயரைத் தாங்கி நின்றன. பஜார் தெரு, பஜனை மடத் தெரு, சன்னதித் தெரு என்று சில காரணப்பெயர் பூண்டிருந்தன. ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு அகன்ற வீதிகள் வழியாகத்தான் ஆடிப்பூரத் தோரோட்டம் நடக்கும். அவை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ரத வீதிகள் என்று அறியப்பட்டன. 

இப்படியான தெருப் பெயர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஆனால், நாடகசாலைத் தெரு என்கிற பெயர் வேறு எந்த ஊரிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே அறிந்தவர் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ஒரு பள்ளி மாணவனின் கேள்வியைப் பலரும் பொருட்படுத்தவில்லை. என்னால் பெயர்க்காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. பின்பொரு நாள் ஒரு தும்பு கிடைத்தது.

நாடகசாலைத் தெருவின் நடுவில் ஒரு மண்டபம் இருந்தது. அதைச் சுற்றித்தான் தெரு அமைந்திருந்தது. வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் ஆண்டாளும் ரெங்க மன்னாரும் அந்த மண்டபத்துக்கு வருவார்கள். மண்டபத்தைச் சுற்றி ஓர் அகழி இருந்தது. அதில் நான் தண்ணீரைப் பார்த்ததில்லை. ஆனால், தண்ணீர் நிரப்பினால் மண்டபத்துக்குள் குளுமையாக இருக்கும்.

முன்னொரு காலத்தில் அப்படி நிரப்பியிருக்கலாம். கோடையின் தகிப்பைத் தணித்துக்கொள்ள ஆண்டாளும் மன்னாரும் அங்கு வந்திருக்கலாம். பின்னர் அதுவே வழமையாகி இருக்கலாம். மண்டபத்தின் வாயில் தூணொன்றில் கூப்பிய கரங்களோடு ஒரு சிலை இருந்தது. எதிர் வீட்டு கிருஷ்ணசாமி அது திருமலை நாயக்கரின் சிலை என்றார். இந்த மண்டபத் திருப்பணியைச் செய்ததும் அவர்தான் என்றார். நான் கேட்டுக்கொண்டேன். பிற்பாடு மறந்துபோனேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயிருந்தேன். அரச குடும்பத்தினரின் வசிப்பிடம், அந்தப்புரம், அரச மண்டபம், பல்லக்குச் சாலை, ஆயுத சாலை என்று பார்த்துக்கொண்டே வந்தேன். அடுத்து வந்தது நாடகசாலை. அதில் நிகழ்த்து மேடையும் பார்வையாளர் அரங்கும் இருந்தன.

எனக்குப் பொறி தட்டியது.  இந்த அரண்மனையையும் இங்குள்ள நாடகசாலையையும் கட்டிய திருமலை நாயக்கர்தான் ஸ்ரீவில்லிபுத்தூரின் வசந்த மண்டபத்தையும் கட்டியிருக்கிறார். அங்கே நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். அதன் பொருட்டு அந்தத் தெருவே நாடகசாலைத் தெரு என்று அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எதற்கும் ஆவணங்கள் இல்லை. நான் அடுத்தமுறை ஊருக்கு வந்தபோது கிருஷ்ணசாமியிடம் எனது கண்டுபிடிப்பைச் சொன்னேன். அவர் அசுவாரசியமாகக் கேட்டுக்கொண்டார். அப்படியும் இருக்கலாம் என்று முடித்துக்கொண்டார்.

தொன்மமும் வரலாறும்

வரலாற்றையும் பண்பாட்டு விழுமியங்களையும் நாம் முறையாக ஆவணப்படுத்தவில்லை. அதன் பின் விளைவாகத் தொன்மங்கள் வரலாறாக வேஷம் கட்டிக்கொள்வதும் நடக்கிறது. அதையும் நான் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே பார்த்திருக்கிறேன்.

ஆண்டாள் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது வடபத்திர சயனர் ஆலயம். பள்ளி கொண்ட பெருமாள். இவருக்குத்தான் ஆண்டாள் சூடிக் கொடுத்தாள். இந்த ஆலயத்தின் கோபுரம்தான் தமிழக அரசின் இலச்சினையாக இருக்கிறது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்த ஆலயத்தின் காலம் 1,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பது வல்லுநர்களின் கணிப்பு. ஆனால், நாள்தோறும் ஆலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களுக்கு அப்படிச் சொல்லப்படுவதில்லை. கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையும் அவர்தம் அடிவருடும் தேவிகளான ஸ்ரீதேவியையும் பூதேவியையும், சுற்றிலுமுள்ள சுதைச் சிற்பங்களையும் கற்பூர ஒளியில் பட்டர் விளக்கிச் சொல்வார். 

கடைசியாக இங்கு வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்று முடிப்பார். இதைப் பல முறை கேட்டிருக்கிறேன். பெருமாள் சுயமாகத் தோன்றினார் என்பது ஆலயத்தை உருவாக்கிய மனித யத்தனத்தை மறுதலிப்பதாகிவிடாதா என்று எனக்கு அந்தக் காலத்தில் தோன்றியிருக்கிறது. ஆனால், யாரிடமும் கேட்டதில்லை. 

இப்போது இன்னொன்றும் தோன்றுகிறது. சுயம்பு என்று சொல்வதன் மூலம் ஆலயத்தின் வரலாற்றுக் காலத்தை அறிகிற ஆர்வம் பக்தர்களிடம் மழுங்கடிக்கப்படுகிறது. இதன் பின் விளைவாகத் தொன்மங்களை வரலாற்று நிகழ்வுகளாக மயங்கவும் நேர்கிறது. ராமர் பிறந்த இடமும், ராமர் வழிபட்ட லிங்கமும், ராமர் சேனை கட்டிய பாலமும் வரலாறு ஆகிப்போவது இப்படித்தான். இதற்கான அடிப்படைக் குறைபாடு ஆவணப்படுத்துவதில் நமக்கு இருக்கும் அலட்சியமும் அக்கறையின்மையும்.

இந்தியா - ஆவணமும் அலட்சியமும்

எனில், இந்த அக்கறையின்மை தமிழர்களின் ஏகபோகமில்லை. அது நமது தேசிய குணம். ஆவணப்படுத்துவதில் நிலவும் அலட்சியத்தைப் பொறுத்தமட்டில் நாம் நிச்சயமாக ஒரே நாடுதான்.

இந்திய வரலாற்றின் தொடக்க கால நிகழ்வுகளின் காலமும் வரிசையும் தோரயாமானவை, அதில் நிலவும் நிச்சயமின்மையும் நாம் அறிந்ததுதான். இப்படிச் சொல்பவர் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் (ஏர்லி இந்தியன்ஸ், பென்குயின் புக்ஸ், 2002 - Early Indians, Penguin Books, 2002). கி.மு.2600இன் ஹரப்பா நாகரீகத்திலிருந்து இந்திய வரலாறு தொடங்கிவிடுகிறது. எனில், இதன் தொடக்க காலங்கள் இலக்கியத் தரவுகளிலிருந்தும் புறச் சான்றுகளிலிருந்துமே மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது இவை உத்தேசமானவை, இதன் காலவரிசையை அறுதியாக நிறுவ முடியாது. 

புத்தர் மறைந்த ஆண்டு எது? கிமு 544ஆக இருக்கலாம் அல்லது கிமு 486ஆகவோ, கிமு 483ஆகவோ இருக்கலாம். புத்தர் பிறந்த ஆண்டு? கிமு ஆறாம் நூற்றாண்டு என்றுதான் வரலாற்றாசிரியர்களால் குறிக்க முடிகிறது. மகாவீரர் பிறந்த ஆண்டு? இறந்த ஆண்டு? தெரியாது. அவரது காலம் ஆறாம் நூற்றாண்டு என்கிற கணிப்போடு திருப்தியடைய வேண்டும்.

சீனா - ஆவணமும் அக்கறையும்

ஆனால், நமது அண்டை நாடான சீனாவின் கதை வேறு. அதன் வரலாறு துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. 'ஆதிகாலத்திலிருந்தே ஒழுங்கான சரித்திரங்கள் சீனாவில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன' என்கிறார் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான வெ.சாமிநாத சர்மா (சீனாவின் வரலாறு, மலர் புக்ஸ், புதிய பதிப்பு 2022). அவர் மேலும் சொல்கிறார், “சீனாவின் வரலாற்று நிகழ்ச்சிகளை வருஷவாரியாக, சிலவற்றைக் கிழமைவாரியாகக்கூட அறிந்துகொள்வதற்கு அனுகூலமாக அங்கு சரித்திர ஏடுகள் இருந்தன” என்று. 

ரொமிலா தாப்பர் சொல்வதையும் சாமிநாத சர்மா சொல்வதையும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார் ஷ்யாம் சரண். அவர் பெய்ஜிங்கில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியவர். வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர். சீனப் புத்த பிக்குகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். பா ஹியான் ஹூவான் சுவாங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். முன்னவர் இந்தியாவிற்கு வந்த காலம் கிபி 319 - கிபி 413. பின்னவர் வருகை தந்த காலம் கிபி 629- கிபி 645. இவர்களின் பயணக் குறிப்புகள் விரிவானவை. அவற்றில் தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா முதலான பல்கலைக்கழகங்களைப் பற்றிய பயனுள்ள குறிப்புகளும் இடம்பெறுகின்றன. அதேவேளையில் ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 3,000க்கும் மேற்பட்ட இந்திய பிக்குகள் சீனாவிற்குப் போயிருக்கிறார்கள். எனில், இவர்கள் எதையும் ஆவணப்படுத்தவில்லை என்கிறார் ஷ்யாம் சரண் (ஹவ் சீனா சீஸ் இந்தியா அண்ட் தி வேர்ல்டு, ஜகர்னட், 2022 - How China Sees India and the World, Juggernaut, 2022).

பொறியியலில் போதாமை

ஆவணப்படுத்துவதில் உள்ள போதாமை, வரலாற்றுத் துறையில் மட்டுமல்ல, ஒரு நோயைப் போல எல்லாத் துறைகளிலும் பரவியிருக்கிறது. உள்கட்டமைப்புத் துறையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். மெட்ரோ ரயில் சுரங்கங்கள் நிலத்திற்கு அடியில் வெகு ஆழத்தில் குடையப்படுகின்றன. பெரும்பாலும் சாலைகளின் அடியில் தோண்டப்படும் இந்தச் சுரங்கங்கள், பல்வேறு காரணம் பற்றிச் சில இடங்களில் கட்டிடங்களுக்கு அடியிலும் குடையப்படும். இந்தக் கட்டிடங்கள் ஆழம் குறைந்த அடித்தளங்களின் மீது அமைந்திருந்தால் அவற்றுக்குப் பாதகம் இல்லாமல் சுரங்கம் அமைத்துவிடலாம். 

சில கட்டிடங்கள் மண்ணின் தன்மை காரணமாகவோ, அல்லது அவை பல மாடிக் கட்டிடங்களாக இருந்தாலோ, அவை ஆழ்துளை (pile) அடித்தளத்தின் மீது நிற்கும். வெளிநாடுகளில் கட்டுமானத்திற்கு அனுமதி நல்கும் துறையை அணுகினால் அமைக்கப்பட்ட அடித்தளத்தின் தெளிவான வரைபடங்கள் கிடைக்கும். இந்தியாவின் பல நகராட்சிகளில் பொறியியல் வரைபடங்களுக்கு அனுமதி நல்கும் வழமை இல்லை. சென்னை உட்பட சில நகரங்களில் சமீப காலமாகப் பொறியியல் வரைபடங்கள் பெறப்படுகின்றன. ஆனால், அவற்றில் ஒப்பமிட்டு அனுமதி நல்கும் முறை இப்போதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவை அப்படித்தான் கட்டப்படுகின்றனவா என்று பரிசோதிப்பதும் இல்லை. ஆகவே கட்டிடங்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் அடித்தளங்களைக் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைப்பதில்லை. பல கட்டிடங்களின் உரிமையாளர்கள்கூட அவற்றைப் பேணுவதில்லை.

கட்டிடங்களின் பொறியியல் வரைபடங்களை ஆவணப்படுத்துவதில் உள்ள இந்தக் குறைபாடு மெட்ரோ சுரங்கங்களைத் திட்டமிடுவதிலும் குடைவதிலும் பெரும் சிரமத்தை உண்டாக்குகிறது. அதேவேளையில், சுரங்க ரயில் நிலையங்கள் நேரிடும் சவால் வேறுவிதமானது. இந்த நிலையங்களைச் சாலையை அகழ்ந்துதான் கட்ட முடியும். அப்படி அகழும்போது சாலைக்கு அடியில் உள்ள மழைநீர், குடிநீர், கழிவுநீர்க் குழாய்களையும், மின்சாரத் தொலைத்தொடர்பு கேபிள்களையும் இடமாற்ற வேண்டிவரும். 

வெளிநாடுகளில் எல்லாக் குழாய்கள், கேபிள்கள் குறித்த துல்லியமான விவரங்கள் இருக்கும். ஆகவே, முறையாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். ஆனால், நமது நாட்டில்  சில இடங்களில் குழாய்கள், கேபிள்களைக் குறித்த விவரங்கள் இருக்கும். ஆனால், அவற்றின் ஆழம், வாட்டம், வண்ணம் முதலான தகவல்கள் துல்லியமாகவும் முழுமையாகவும் இராது. நிலத்தை அகழும்போது பல எதிர்பாராத குழாய்களையும் கேபிள்களையும் எதிர்கொள்ள நேரும். இந்தக் குறைபாடுகளைக் குறித்த கவலை பொறியாளர்களிடத்தில் பரவலாகக் காணக்கூடுவதில்லை. ஆதலால் இதைக் களையவேண்டும் என்கிற வேட்கையும் அவர்களிடத்தில் இருபதில்லை. 

இது பொறியாளர்களின் பிழை மட்டுமன்று. நம் சமூகத்தின் கணிசமானோர் ஆவணப்படுத்துவதன் அவசியத்தை உணர்வதில்லை. அதனால்தான் வடபத்ர சயனரின் 1,000 ஆண்டு காலப் பழமை உண்டாக்க வேண்டிய பெருமிதத்தைவிட, அது குறித்த ஆய்வுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட, அவர் சுயம்பு என்கிற தொன்மம் நமக்கு திருப்தி அளித்துவிடுகிறது. 

இதிகாசக் கதைகள் ஏதோ ஒரு புள்ளியில் வரலாறாக மாறிவிடுகிறது. தெருக்களுக்கும் ஊர்களுக்கும் பின்னால் உள்ள வரலாறு குறிக்கப்படுவதில்லை, அவை குறித்த ஆய்வுகளும் இல்லை. உள்கட்டமைப்புப் பணிகள் முறையாக ஆவணப்படுத்தப்படுவதில்லை, அதை மேம்படுத்த வேண்டும் என்கிற அக்கறையும் இல்லை.

இந்த நிலை மாற வேண்டும். நம் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவணப்படுத்தலின் அவசியத்தை முன்னெடுக்க வேண்டும். அரசு இது குறித்த அக்கறையை வளர்த்தெடுக்க வேண்டும். துறை தோறும் இந்தப் பொறுப்புணர்வு பெருக வேண்டும். அரசியலில், அறிவியலில், வரலாற்றில், சமூக பண்பாட்டுத் தளங்களில், என எல்லாத் துறைகளிலும் ஆவணப்படுத்தலின் அவசியம் உணரப்பட வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் மகிமையில்லை. நமது வரலாறு அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போது அவை அறிவுப்புலத்தில் திறமான புலமையென மதிக்கப்படும். வெளிநாட்டார் அதை வணக்கம் செய்வதும் நடக்கும். 

மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐரோப்பிய ஒன்றியம்அப் நார்மல் காதல்மார்கழி மாதம்டி.எஸ்.பட்டாபிராமன்டு டூ லிஸ்ட்ராஜீவ் காந்திஇந்தியக் குழந்தைகளின் இன்றைய நிலைசுறுசுறுப்புபிரிட்டன்இட்லிபயிற்றுமொழிஆர்.எஸ்.நீலகண்டன்ஐஏஎஸ்மம்தாசாதி மறுப்புஇந்திய கிரிக்கெட் அணிஇலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வருமா?கரன் தாப்பர் பேட்டிவாசிக்கும் தமிழகம்பாஜகவின் அரசியல் வெற்றிகளும் வாக்காளர்களின் மதவாதமஆட்சியாளர்மத அமைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினர்எம்ஐடிஎஸ்லிண்டன் ஜான்சன்அம்ருத் மகோத்சவ் மனம்பணிச்சூழல்புதிய தலைவர்சிப்கோ இயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!