கட்டுரை, புத்தகங்கள் 15 நிமிட வாசிப்பு

உங்களில் ஒருவன்

மு.க.ஸ்டாலின்
02 Mar 2022, 5:00 am
2

பெரும் ஆரவாரத்துக்கு இடையே வெளிவந்திருக்கிறது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’. தமிழக அரசியல் தலைவர்களில் அதிகம் பகிரப்படாத வாழ்க்கை ஸ்டாலினுடையது.

இன்றைய தமிழக அரசியல் பரப்பில் உள்ள மூத்தத் தலைவர்களில் ஒருவர் அவர்; பொது வாழ்க்கைக்கு வந்து அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டவர்; ஆனபோதிலும், அவர் கடந்துவந்த பாதை தொடர்பிலான பதிவுகள் அரிது. ‘கலைஞரின் மகன்’ எனும் இரு வார்த்தை அறிமுகம் ஸ்டாலினுக்குப் பெரிய பலம்; அதேசமயம் அது ஒரு பலவீனமும்கூட. ஏனென்றால், இந்த இரு வார்த்தை அறிமுகமே பெரும்பான்மை மக்களுக்குப் போதுமானதாகிவிடுகிறது; அதைத் தாண்டி தெரிந்துகொள்வது அவசியம் அற்றதாகிவிடுகிறது. இது தவிர, தன் வாழ்வைப் பேசும் இயல்பைக் கொண்டவரும் இல்லை ஸ்டாலின். ஆக, அவரைப் பற்றி வெளியே தெரிந்த விஷயங்கள் குறைவு.

இந்தக் குறையைக் களையும் முயற்சியாக இந்நூலைப் பார்க்கலாம். பிறப்பு முதலாக, பள்ளி வாழ்க்கை, அரசியல் நுழைவு, சிறை அனுபவங்கள் என்று ஸ்டாலினுடைய வாழ்வில் 23 வயதுக்குள் நடந்த சம்பவங்கள் இந்த நூலின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. அதிகாரபூர்வ ஆவணம் என்று சொல்லத்தக்க வகையில் புள்ளிவிவரங்களோடும், ஆவணங்களோடும் நூல் வெளியாகியிருப்பது அதன் பலம். வரலாற்று ஆய்வாளர்களுக்கும், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும் முக்கியமான ஒரு நூல் இது. புத்தகத்திலிருந்து முக்கியமான ஒரு பகுதியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்குப் பிரத்யேகமாக இங்கே வழங்குகிறது.        

 

பள்ளி காலம் 

சென்னை அண்ணா சாலையில்தான் அப்போது 'முரசொலி' அலுவலகம் இருந்தது. அதன் எதிரே இருக்கும் பள்ளி, சர்ச் பார்க் பள்ளி. என்னையும் செல்வியையும் அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்குத்தான் தலைவர் நினைத்தார். பள்ளியில் சேர்ப்பதற்காக எங்கள் இருவரையும் அண்ணன் முரசொலி மாறன் அவர்கள்தான் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே எனது பெயரே சிக்கல் ஆனது. 'பையன் பெயர் என்ன?' என்று தலைமை ஆசிரியர் கேட்டார். 'ஸ்டாலின்' என்று சொன்னார் அண்ணன் மாறன். உடனே தலைமை ஆசிரியரின் முகம் மாறியது. சோவியத் தலைவர் ஸ்டாலின் அவர்கள், 1953ஆம் ஆண்டு மறைந்ததன் நினைவாக எனக்கு அவர் பெயரைச் சூட்டியிருந்தார் தலைவர்.

ஸ்டாலின் ஆட்சிக் காலம் என்பது சோவியத் நாட்டில் மிக முக்கியமானது ஆகும். கம்யூனிஸ புரட்சிக்குப் பின் அமைந்த அரசின் தலைவராக லெனின் இருந்தாலும், அவர் குறுகிய காலமே ஆட்சி செய்தார். அதன்பிறகு முழுமையான கம்யூனிச ஆட்சியை நிர்மாணித்து நடத்தியவர் ஸ்டாலின். சோசலிஸம் - கம்யூனிஸம் - பாட்டாளி வர்க்கம் ஆகிய கொள்கைகள் சார்ந்த ஆட்சியாக அது அமைந்திருந்தது. ஆட்சியிலிருந்து மதம் விலக்கப்பட்டது. இது மதவாதிகளுக்குக் கோபம் ஏற்படுத்தியதுபோலும்! அதனால்தான் ஸ்டாலின் என்ற பெயரே மதச்சார்புள்ளவர்களுக்கு ஒவ்வாத பெயராக இருந்தது. அதனைத்தான் அந்த தலைமை ஆசிரியர் பேச்சின் மூலமாக விளித்தாரோ என்னவோ! ‘ஸ்டாலின் என்ற பெயருள்ள மாணவனுக்கு இந்தப் பள்ளியில் இடம் தர முடியாது. பெயரை மாற்றிவிட்டு அழைத்து வாருங்கள்’ என்று அவர் சொன்னதால் எங்களைத் திரும்ப அழைத்துக்கொண்டு வீடு வந்தார் அண்ணன் மாறன்.

தலைவரிடம் இதைச் சொன்னதும் கடுமையாக கோபப்பட்டார். ‘பள்ளிக்கூடத்தை மாற்றுவேனே தவிர, ஸ்டாலின் என்ற பெயரை மாற்ற மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார் தலைவர். ‘ஸ்டாலின் ஒரு புரட்சிவாதி, போராட்டக்காரர், இரும்பு மனிதர். அவரது பெயர்தான் என் மகனுக்கு இருக்க வேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் தலைவர். அதனால், சர்ச் பார்க் பள்ளியில் சேருவது தடைபட்டது. என்னால், தங்கை செல்வியும் அங்கு சேர முடியவில்லை.

கோபாலபுரத்தில் மாண்டிசோரி பள்ளியில் நாங்கள் இருவரும் சேர்க்கப்பட்டோம். ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். ஆறாம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்குத்தான் போக வேண்டும். அருகில் இருக்கும் பள்ளி என்றால், மறுபடியும் சர்ச் பார்க் பள்ளிக்குத்தான் போக வேண்டும். ‘ஸ்டாலின்’ என்ற பெயர் பிரச்சினை மீண்டும் வரலாம். எனவே, வேறு பள்ளியைத் தேடினார்கள். சேத்துப்பட்டில் இருந்த கிறிஸ்தவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் சேர்க்க அண்ணன் மாறன் முடிவெடுத்து தலைவரிடம் தெரிவிக்க, அவரும் அதற்கு சம்மதித்தார்.

அந்தக் காலத்தில் கிறித்துவ மேனிலைப் பள்ளியில் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது. அப்போது சென்னை மேயராக இருந்தவர் மரியாதைக்குரிய குசேலர் அவர்கள். அவரிடம் சொல்லி கிறிஸ்தவ மேனிலைப் பள்ளியில் இடம் கிடைக்க ஏற்பாடுசெய்ய தலைவர் சொன்னார். குசேலர் அவர்கள், ‘நானே பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன்’ என்று சொன்னார்.

அந்தக் காலத்தில் மேயர்கள், மேயருக்கான அங்கியை அணிந்துகொண்டுதான் வெளியில் வருவார்கள். அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள். அதேபோல், மேயர் அங்கியுடன் குசேலர் மிகப் பெரிய செவர்லெட் காரில் பள்ளிக்கு வந்தார். எந்தக் காரைக் கொண்டுவந்தாலும் பள்ளியின் வாசலுக்கு வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு இறங்கித்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும். ஆனால், மேயர் என்பதால் அவரது வாகனத்தை உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.

மேயர் குசேலர், அண்ணன் மாறன், நான் ஆகிய மூவரும் உள்ளே சென்றோம். மேயரே வந்திருக்கிறார் என்பதால் எனக்கு உடனே பள்ளியில் இடம் கிடைத்தது. 'பெயரில் என்ன இருக்கிறது? தமிழ்ப் பையன்தானே?' என்று சொல்லி அந்த தலைமை ஆசிரியர் சேர்த்துக்கொண்டார்.

கோபாலபுரம் வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வரை நடந்து வருவேன். அங்கிருந்து பேருந்தில் பள்ளிக்குச் செல்வேன். ஸ்டெர்லிங் சாலை வரை பேருந்தில் சென்று அங்கிருந்து சேத்துப்பட்டு பள்ளிக்கு நடந்து செல்வேன். தலைவர் அவர்கள் அமைச்சராக ஆன பிறகு பள்ளி மாணவர்கள் வசதிக்காக நாங்கள் ஒரு கோரிக்கை வைத்தோம். பள்ளி செல்லும் காலை நேரம், பள்ளி விடும் மாலை நேரம் மட்டும் ‘29சி’ பேருந்து, பள்ளி வாசல் வரை வந்து திரும்ப வேண்டும் என்று கோரினோம். அதன் பிறகுதான் பள்ளியின் வாசல் வரை பேருந்து வர ஆரம்பித்தது. இதை மனதில் வைத்துத்தான் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணம் ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரான பின் ஆற்றிய எனது முதல் உரையிலேயே நான் குறிப்பிட்டேன். முதல்வர் கலைஞர் அதனைச் செயல்படுத்தினார்.

குளோப் திரையரங்கில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ‘புதிய பூமி’ படம் பார்க்க நானும் என் நண்பன் அப்துல் கரீமும் ஹெர்குலீஸ் சைக்கிளில் அண்ணா சாலையில் சென்றுகொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் சைக்கிளில் இருவர் செல்லக் கூடாது. எனவே, ஸ்பென்சர் அருகே காவலர் ஒருவரால் நிறுத்தப்பட்டோம். இருவரையும் பெயர் கேட்டு எழுதினார் அந்த போலீஸ்காரர். எனது பெயரைச் சொன்னேன். அப்பா பெயரைக் கேட்டார்கள். ‘கருணாநிதி’ என்றேன்! ‘எங்கே வேலை செய்கிறார்?’ என்று கேட்டார்கள். ‘கோட்டையில்’ என்றேன்! ‘என்னவாக இருக்கிறார்?’ என்று கேட்டார்கள். ‘பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கிறார்’ என்றேன்! அதன் பிறகு தான் என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘என்ன தம்பி முன்னமே சொல்லக் கூடாதா?’ என்று சொல்லி எங்கள் இருவரையும் அனுப்பிவைத்தார்.

அப்பா அமைச்சராக இருக்கிறார், பெரிய தலைவர், சினிமாவில் பெரிய ஆளாக இருக்கிறார் என்றெல்லாம் நினைத்துக்கொள்பவனாக நான் இல்லை. அப்படி நினைத்து நான் நடந்துகொள்ளவும் இல்லை.

எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் பூ.ஜெயராமன் அவர்கள். அவரே என்னைப் பற்றி எழுதி இருக்கிறார். “இப்பள்ளியில் ஸ்டாலின் படித்துக்கொண்டிருந்தபோதே கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் - சிறிது காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகிக்கத் தொடங்கினார். ஸ்டாலின் எந்த நேரத்திலும், தான் முதலமைச்சரின் மகன் என்பதுபோல வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. பணிவுடனும் அடக்கத்துடனும் ஆசிரியர்களிடம் பழகினார். தம்முடன் படித்த அனைத்து மாணவர்களுடனும் நட்புறவையும் தொடர்புகளையும் அன்புடன் வளர்த்துக்கொண்டார்” என்று எழுதி இருக்கிறார் தமிழாசிரியர்.

அப்படித்தான் நான் நடந்து கொண்டேன். பள்ளியில் படிப்பு, விளையாட்டு, நண்பர்களோடு அன்பு என இருந்தாலும் எனக்குள் அரசியல் ஆர்வம் என்பது மனதுக்குள் துளிர்த்துக்கொண்டு தான் இருந்தது. அதனை பள்ளிக்கு வெளியில் படிப்படியாகத் தொடங்கினேன்.

அப்போது என் கண் முன் கண்ட ஒரு காட்சி என்னை அரசியலை உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது.

அந்தக் காட்சி...

முதல் காட்சியும் முதல் அதிர்ச்சியும் 

அப்போது எனக்கு 12 வயது!

சோவியத் ரஷ்யா அரசின் அதிகாரப்பூர்வ ஏடான ‘பிராவ்தா’ ஏட்டின் சார்பில் தலைவர் கலைஞரைப் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். பேட்டி மாடியில் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று, தலைவர் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். நான் போனேன். ரஷ்யாவிலிருந்து வந்திருந்தவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார் தலைவர். ‘இவன் என் மகன்; இவன் பெயர் ஸ்டாலின்’ என்று என்னைப் பற்றி அவர்களுக்குச் சொன்னார். ‘இந்திய சோவியத் நட்புறவில் உங்களுக்கு நாட்டம் உண்டா?’ என்று அவர்கள் கேட்டபோது, ‘உறவு கொள்வதை யார்தான் வெறுப்பார்கள்? என் மகன் ஒருவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியுள்ளேன்’ என்று தலைவர் பதிலளித்திருக்கிறார். அதன் பிறகுதான் என்னை அழைத்து அறிமுகம் செய்துவைத்தார்.

நான் என்ன படிக்கிறேன் என்று அவர்கள் கேட்டபோது, தலைவரால் உடனே சொல்ல முடியவில்லை. அந்தளவுக்கு, வீட்டைக்கூட மறந்து பொது வாழ்வில் தன்னை ஒப்படைத்து உழைத்துக்கொண்டிருப்பவராகவே இருந்தார் தலைவர்.

நான் பார்த்த முதல் அதிர்ச்சியான காட்சி அதே ஆண்டில்தான் நடந்தது. ஒருநாள் நள்ளிரவில் கோபாலபுரம் வீட்டுக்குள் காக்கி உடை அணிந்த காவலர்கள் வந்தார்கள். வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்பாக நின்றுகொண்டிருந்தார்கள். தலைவர் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் காவலர்கள். காவல் துறை அதிகாரி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். தலைவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இது மிக நீண்ட நேரமாக நடந்தபடியிருந்தது. தயாளு அம்மா அழத் தொடங்கினார்கள். அதன் பிறகு காவலர்கள், தலைவரையும் சேர்த்து அழைத்துச் சென்றுவிட்டார்கள். 

காவலர்களோடு தலைவரும் அவர்களது வாகனத்தில் சென்றுவிட்டார். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் நானும் அழுதபடி இருக்கிறேன். ‘கைதுபண்ணிட்டு போயிட்டாங்க!’ என்று சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் கலங்கலாக இன்னமும் நினைவில் இருக்கும் வார்த்தைகள். இதுபற்றி நான் வேறு ஏதாவது அப்போது கேட்டேனா என்பது இப்போது நினைவில் இல்லை. அதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க மொழிப் போர்க் களம். 

1965 சனவரி 26 முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியே ஆகிவிடும் என்ற நிலைமைக்கு எதிராக மொழிப் போர்க் களத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தது. 1963ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டு காலமாக அந்தப் போராட்டத்தை நடத்திவந்தது கழகம். அதன் போராட்டக் குழுத் தலைவராகப் பேரறிஞர் அண்ணாவால் கலைஞர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அந்த இரண்டாண்டு கால எழுச்சியின் தொடர்ச்சியாகத்தான் 1965 மொழிப் போராட்டத்தில் மாணவர் சமுதாயம் இறங்கியது.

சனவரி 25 முதல் மார்ச் 15 வரையிலான நாட்களில் தமிழ்நாடே கொந்தளித்து நின்றது. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. எங்கே பார்த்தாலும் தடியடியும், துப்பாக்கிச்சூடும், கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சுகளும் நடந்தன. 40 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அரசாங்கக் கணக்குப்படியே 61 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கணக்கில் வராத உடல்கள் அதிகம்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் காயம் பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அதில் ஆயிரம் பேர் 16 வயதுக்கும் கீழ் உள்ள மாணவர்கள். நான்கு காவலர்கள் உயிர்ப் பலியானார்கள்.

இவை அனைத்துக்கும் மேலாகத் தங்களது தேக்கு தேகத்தை மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோவை பீளமேடு தண்டபாணி, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி ஆகிய தியாகிகள்; தமிழ் காக்கும் போராட்டத்தில் உயிரையே தந்த தியாகிகள்.

உலகில் எந்த இனத்திலும், எந்த மொழிக்காகவும் அதனைக் காப்பதற்காக இப்படி தனது உடலில் தானே தீ வைத்து மரணமடைந்தவர் இல்லை என்ற மகத்தான தியாகத்தைத் தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஏற்படுத்தித் தந்தவர்கள் இவர்கள். 

சிவகங்கையைச் சேர்ந்த மாணவன் இராசேந்திரன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மாவீரனாய் ஆனார் இராசேந்திரன்.

தமிழ்நாட்டின் நிலைமையை மாநிலக் காவல் துறையால் அடக்க முடியாத சூழ்நிலையில் முதன்முதலாக தமிழகத்துக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்தப் போர்க்களத்துக்கு அடித்தளமிட்ட பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உண்டு என்று சொன்னாலும், அதனையும் தாண்டிய ஒரு பெருமை எங்களது குடும்பத்துக்கு உண்டு. 1965 மொழிப் போராட்டத்தைத் தூண்டியதாக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தலைவர் கலைஞர் அவர்களும், அண்ணன் முரசொலி மாறன் அவர்களும் கைதுசெய்யப்பட்டது என்பது எங்களது குடும்பத்துக்குக் கிடைத்த பெருமை ஆகும்.

இப்போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர்கள் அனைவருக்கும் தலைவர்தான் ஊக்க சக்தியாக இருந்தார்கள். ‘முரசொலி’ அலுவலகம் என்பது அவர்களது அறிவிக்கப்படாத அலுவலகமாக இருந்தது. மாணவர் தலைவர்களின் அறிக்கைகள் முழுமையாக ‘முரசொலி’யில்தான் வெளியானது. அன்றைய காங்கிரஸ் ஆட்சியையும், அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்து ‘முரசொலி’ எழுதியது. இட்லர், முசோலினி ஆகியோருடன் முதல்வர் பக்தவத்சலத்தை ஒப்பிட்டு தலைவர் அவர்கள் கருத்துப் படங்களை வெளியிட்டார். 

சிறுவர்களை, காவல் துறை வேட்டையாடுகிறது என்று செய்தி வெளியானது. 'கலவரம் ஏற்படுத்துவதற்காகவே ஆட்களை தயார்செய்து வைத்துள்ளீர்களா?' என்று சட்டமன்றத்திலேயே அமைச்சரை நோக்கி நேருக்கு நேராகக் கேள்வி எழுப்பினார் கலைஞர் அவர்கள்.

இது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்களைக் கோபப்படுத்தியது. ‘கதையளக்கிறார் கனம்’ என்று தலையங்கம் தீட்டினார் கலைஞர். இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் கலைஞரை வளைத்தது காவல் துறை. அன்றைய தினம் இரவு காவல் துறை உதவி ஆணையர் எம்.இராமன் என்பவர், கோபாலபுரம் இல்லம் வந்தார். ‘நாளை வெளியாக உள்ள ‘முரசொலி’யில் என்ன தலையங்கம் எழுதியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘அதனைச் சொல்ல முடியாது’ என்று தலைவர் பதில் சொல்கிறார். ‘அரசாங்கத்தை விமர்சித்து எழுதியிருக்கிறீர்களா?’ என்று கேட்கிறார். ‘சொல்ல முடியாது’ என்று மறுக்கிறார் தலைவர். ‘தெரிந்துகொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது’ என்று அதிகாரி சொல்கிறார். ‘அப்படி உரிமை இருந்தால் எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள்’ என்று தலைவர் கேட்கிறார். தர மறுக்கிறார் அதிகாரி.

இருவரும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள். அதன் பிறகுதான் தலைவரை அழைத்துச் சென்றுவிடுகிறார் அதிகாரி. கைதுசெய்கிறீர்களா, எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று அண்ணன் மாறன் அவர்கள் கேட்டார்கள். அப்போது எந்தப் பதிலும் காவல் துறை சொல்லவில்லை.

எங்கே அழைத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. அனைவரும் அழுதுகொண்டிருக்கிறோமே தவிர, யாருக்கும் எந்தத் தகவலும் இல்லை. மறுநாள் காலையில்தான் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. திண்டிவனம் நகரச் செயலாளர் துரை பேசினார். திண்டிவனம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து ஒருவர் தகவல் தந்ததாகச் சொன்னார். ‘அய்யாவைக் காலையில் போலீஸார் அழைத்து வந்தார்கள். இங்கே சில நிமிடம் வைத்திருந்துவிட்டு அழைத்துப் போய்விட்டார்கள்’ என்று தனக்குத் தகவல் கிடைத்ததாக துரை சொன்னார்.

எந்தப் பக்கமாக வண்டி போனது என்று கேட்டபோது 'திருச்சியை நோக்கி போகிறது' என்று அவர் சொன்னார். அதை வைத்து திருச்சி, மதுரை கழக முன்னணியினருக்குத் தந்தார்கள். அதன் பிறகுதான் பாளையங்கோட்டை சிறையில் தலைவர் அடைக்கப்பட்ட தகவல் கிடைத்தது. வீடே ஒருவிதமான அமைதியாகிவிட்டது. எதையும் புரிந்துகொள்ளும் வயது அது அல்ல எனக்கு. தலைவர் வெளியூர் போயிருக்கிறார் என்பதுபோலத்தான் நாங்கள் இருந்தோம்.

தலைவருக்கு அடுத்ததாக அண்ணன் மாறன் அவர்கள்தான் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். வெளியூர் பிரச்சாரத்துக்கு தலைவர் சென்றுவிட்டாலும், திரைப்படங்களுக்கு வசனம் எழுத தலைவர் சென்றுவிட்டாலும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் அவரே செய்வார். தலைவர் எப்போது திரும்புவார் என்று தெரியாத நிலையில் ‘முரசொலி’ பணிகளும் முழுமையாக அண்ணன் மாறன் அவர்கள் தோளில் சுமத்தப்பட்டன.

தலைவரைப் போலவே அண்ணன் மாறன் அவர்களும் மொழிப் போர்க்களச் செய்திகளை வெளியிடத் தொடங்கினார். இன்னும் சொன்னால், கலைஞரைவிட வேகமாகவும் தலையங்கம் தீட்டத் தொடங்கினார். இந்த நிலையில் 11.3.1965 அன்று 'முரசொலி அலுவகத்துக்குள் காவல் துறை புகுந்து சோதனை நடத்தியது. 

24.3.1965 அன்று தேசப் பாதுகாப்புச் சட்டப்படி அண்ணன் மாறன் அவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். இது எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட அடுத்த நெருக்கடி ஆகும். குடும்பத்தில் நடந்த இந்த இரண்டு கைதுகளும் எனக்கு ஒருவித அதிர்ச்சி நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன.

மற்றவர்கள் குடும்பத்தில் நடக்காத, நம் குடும்பத்தில் நடக்கிற நிகழ்வுகளாக அவை இருந்தது. அப்போதும் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதையும், கழக முன்னணியினர் வீட்டுக்கு வந்து பேசும்போது சொல்லும் செய்திகளும் என்னை அரசியல் விழிப்படையச்செய்தன. உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன்.

சலூன் நாற்காலியில் சுழன்றபடி 

எனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கமும் கோபாலபுரம் முடி திருத்தும் நிலையத்தில்தான் தொடங்கியது. தலைவர் அவர்கள் முதன்முதலாக முதலமைச்சர் ஆனபோது, முடிதிருத்தும் தொழிலாளர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டார்கள். 

தலைவர், முதல்வர் ஆனதற்கான பாராட்டு விழா மாநாடு அது. அதில் கலந்துகொண்ட முதல்வர் கலைஞர் அவர்கள், ‘எனக்குப் பாராட்டு விழா நடத்துவதற்காக நீங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறீர்கள். உண்மையில் உங்களுக்குதான் நாங்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரின் தலைமுடியை மட்டும் திருத்துபவர்கள் அல்ல. இந்த நாட்டின் முடி மன்னரையே மாற்றியவர்கள் நீங்கள்தான்!’ என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சங்கத்தின் சின்னமாகக் கத்திரிக்கோலும் சீப்பும் இருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய தலைவர், ‘நீங்கள் கத்திரிக்கோல் என்றால், நாங்கள் சீப்பு. நீங்கள் சீப்பு என்றால் நாங்கள் கத்திரிக்கோல். அந்தளவுக்கு நமக்குள் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் உண்டு!’ என்றார் தலைவர்.

இது ஏதோ அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக தலைவர் சொன்னது அல்ல. உண்மை அதுதான். திராவிட இயக்கம் வளர்ந்ததே இதுபோன்ற முடிதிருத்தும் நிலையங்களில்தான். தொடக்கக் காலம் முதல் திராவிட இயக்கத்தின் விளைநிலமாக இருந்தவை முடி திருத்தும் நிலையங்கள். திராவிட இயக்க இதழ்கள் அனைத்தையும் வாங்கிவைத்து, பகுத்தறிவு, இன உணர்வு, மொழிப் பற்று ஆகியவற்றின் பிரச்சார மையங்களாக அவை இருந்தன. அவை தலைமுடி திருத்தும் கடைகள் மட்டுமல்ல, நாட்டைத் திருத்தும் கடைகளாக அமைந்திருந்தன.

தலைவருக்கு முடி திருத்துபவராக திருவாரூரில் இருந்தவர் இராமச்சந்திரன். அவரைப் பற்றி தலைவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். வயதானவர் அவர். அவருடைய கடையில்தான் தலைவர் எப்போதும் இருப்பார். முடி வெட்டிக்கொள்வதற்காக எல்லோருக்கும் முன் கடைக்கு தலைவர் வந்துவிட்டாலும், அனைவருக்கும் - முடித்த பிறகு கடைசியில்தான் தலைவருக்கு வெட்டிவிடுவாராம். அதுவரை வருகிறவர் - போகிறவர் அனைவரிடம் கலைஞர் விவாதம் செய்யட்டும் என்பதற்காக அப்படி நடந்துகொள்வாராம் இராமச்சந்திரன்.

எங்கள் தாத்தா முத்துவேலருக்கு உடல்நலமில்லாமல் போனபோது மருத்துவம் பார்க்க வடிவேலு என்பவரை அழைத்து வர தலைவர் சென்றுள்ளார். அப்போது வடிவேலு ஒரு கூட்டத்தின் மேடையில் இருந்துள்ளார். கலைஞரைப் பார்த்ததும், ‘நீயும் பேசு’ என்று சொல்லியிருக்கிறார். என்ன வேலைக்காக வந்தோம் என்பதை மறந்துவிட்டு கலைஞரும் அக்கூட்டத்தில் பேசத் தொடங்கினார். அதற்குள் முத்துவேலர் இறந்த தகவல் அங்கு வந்துவிட்டது. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த வடிவேலு, ‘உங்கள் தந்தையார் இறந்துவிட்டார். ஆகவே பேச்சை நிறுத்துங்கள்’ என்று எழுதிக் காண்பித்தார். இப்படி தந்தை உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல் முடிதிருத்துநர் கூட்டத்தில் கலந்துகொண்டவர் கலைஞர்.

அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் நாகை அம்மைநாதன் என்ற பாடகர் இருந்ததாகவும், அவர் எழுதிய பாடல்களைத்தான் நாங்கள் அதிகம் பாடுவோம் என்றும் தலைவர் சொல்லியிருக்கிறார். எல்லா பாட்டும் முடியும்போதும், ‘அம்மைநாதன் சொற் கேளீர்’ என்று முடியுமாம். அதனைத் தலைவரே பாடிக்காண்பித்திருக்கிறார். இப்படி திராவிட இயக்கத்தை வளர்த்தவை முடிதிருத்தும் நிலையங்கள்தான். 

அந்த வகையில் எனது அரசியலும், சண்முகம் முடிதிருத்தும் நிலையத்தில்தான் தொடங்கியது. அங்கேதான் அடிக்கடி எனது நண்பர்களுடன் கூடுவேன். அப்போது எனக்கு 13 வயது. 1966ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தொடங்கினோம். ஆண்டுதோறும் பொங்கல் விழா, அண்ணா பிறந்த நாள் விழா ஆகியவற்றை நடத்தத் தொடங்கினோம். சிறுகுறிப்பேடு வைத்து, கழக முன்னணியினரிடம் நிதி வசூல் செய்து இந்த விழாக்களை நடத்தினோம். பொங்கல் நாளன்றும், அண்ணா பிறந்த நாளன்றும் காலையில் இனிப்புகள் வழங்கினோம். மாலையில் விழாக்கள் நடத்தினோம். இவை அனைத்தும் கோபாலபுரம் வீட்டு வாசலில்தான் நடக்கும். மூன்று சாலைகளையும் சேர்த்து மேடை அமைத்து நடத்துவோம்.

கோபாலபுரம் வீட்டு வாசலின் இடதுபுறம் கிருஷ்ணன் கோவில் இருக்கும். அதனுடைய வாசலை மறைத்து நான் மேடை போட்டிருந்ததாக தலைவரிடமே எங்களது குடும்ப டாக்டர் கிருஷ்ணன் வந்து புகார் சொன்னார்.

கோபாலபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர்கள் தங்களது வீட்டு வாசலில் நின்றே கிருஷ்ணரை வணங்கலாம். அத்தகைய வசதியாகக்  கோயில் அமைந்திருக்கும். அதனால், சிலர் வாசலில் நின்றபடியே வணங்கும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். நான் மேடை போட்டதால் அது தடைபட்டது. இதனை மனதில் வைத்து தலைவர் அவர்கள் அண்ணா விழாவில் பேசும்போது குறிப்பிட்டார்கள். ‘ஸ்டாலின் கனவில் ஒருநாள் கிருஷ்ணர் வந்தார். எனது பக்தர்கள் அனைவரும் கோயிலுக்குள் வந்து வணங்காமல், தங்கள் வீட்டு வாசலில் வைத்தே வணங்குகிறார்களே என்று வருத்தப்பட்டார். கிருஷ்ணரின் கவலையைத் தீர்க்கவே இப்படி ஸ்டாலின் மேடை போட்டுள்ளார்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அந்தளவுக்கு அந்த வட்டாரத்தின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது கோபாலபுரம் இளைஞர் திமுக. இத்தகைய சிறுசிறு விழாக்கள் நடத்துவது மிகப் பெரிய பயிற்சியாக அமைந்திருந்தது. 1967 தேர்தலில் பிரச்சாரக் களத்தில் அடியெடுத்து வைக்கத் தொடங்கினேன். சைதை தொகுதியில் தலைவர் போட்டியிட்டார். அவர் வாக்குக் கேட்டு வருவதற்கு முன்னதாக மெகா போன் வைத்து குரல் எழுப்பிச் செல்லத் தொடங்கினேன். ‘வாக்களிப்பீர் உதயசூரியன்’ என்று சொல்லிக்கொண்டேசெல்வேன். ‘இதோ கலைஞர் வந்துகொண்டிருக்கிறார், உங்களைத் தேடி வருகிறார் நாடி வருகிறார்!’ என்று அறிவித்தபடியே செல்வேன். இப்படிக் கூட்டத்துக்கு முன் செல்லும்போது பெருமையாக இருக்கும். சைதாப்பேட்டை மட்டுமல்ல, சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் செல்லக் கூடிய வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது.

நிகழ்ச்சிகளை நடத்துவது, அதற்குப் பேச்சாளர்களை வரவழைப்பது, அவர்களுக்கு மரியாதை செலுத்துவது, கூட்டம் சேர்ப்பது, அழைப்பிதழ் அச்சிட்டு வழங்குவது என அந்த விழா முடியும் வரைக்கும் பரபரப்பாக இருப்போம். அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்கள் திடீரென மறைவெய்தினார்கள். அவரது குடும்பத்துக்கு நிதி திரட்டிவந்தார் முதல்வர் கலைஞர். அப்போது கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பிலும் நிதி திரட்டினோம்.

இதையெல்லாம் மனதில் வைத்தே இனமானப் பேராசியப் பெருந்தகை அவர்கள், ‘மாணவப் பருவத்திலேயே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பகுத்தறிவுக் கொள்கைகளில் ஊன்றித் திளைத்து - கல்லூரி மாணவனாக பயின்ற நாட்களில் அண்ணாவின் எழுத்தில் வடிக்கப்பட்ட சிந்தனைத் தேறலையும் - முத்தமிழறிஞர் கலைஞரின் பல்வகை எழுத்துச் சித்திரங்களையும் - நாடக உரையாடல்களையும் தேர்ந்தும் தெளிந்தும் - திராவிட இயக்கத்தில் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் மு.க.ஸ்டாலின்’ என்று எழுதியிருப்பது எனது வாழ்க்கையின் அரிய படப்பிடிப்பு ஆகும்.

கோபாலபுரம் இளைஞர் திமுக நடத்திய காலத்தில்தான் அண்ணாவின் அன்பை நான் அதிகம் பெற்றேன்.

 

நூல் விவரம்

உங்களில் ஒருவன்
தன் வரலாறு (பாகம்-1)
மு.க.ஸ்டாலின்
பூம்புகார் பதிப்பகம்
127 (ப.எண்.63), பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை
தொலைபேசி:
044-25267543

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர். திமுக தலைவர்.


1

3

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Suresh kumar   2 years ago

ஆக அறிவிக்க படாதா முரசொலி யாகியது அருஞ்சொல்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

Satheesh Kumar   2 years ago

மிக அருமை. விரைவில் இந்த நூல் வாங்க வேண்டும்!

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜாதிய சமூகம்மாகாந்தி - அம்பேத்கர்மலம் அள்ளும் வேலைசீனா பறக்கவிடும் இந்தியக் கொடி! விரக்திஸ்டார்ட் அப்தேவி லால்நவீன காலம்சாரிதேர்தல் அறிக்கைசேவா பாரதிவள்ளலார் திருவிளக்குயூட்யூப் சேனல்14 பத்திரிகையாளர்கள்உள்ளடக்கங்கள் மாற வேண்டும்துணை மானியம்சு.ராஜகோபாலன் கட்டுரைஇன்சுலின்அஜீத் பவார்சுதந்திர இந்தியாஜாங் வெய்ஊழல் எதிர்ப்பு பாசிஸத்துக்கான ஆதரவா?: சமஸ் பேட்டிமதகுகள் மாற்றிய பண்பாடுரிலையன்ஸ் முதலீடுசுயாட்சி – திரு. ஆசாத்தேர்தல் ஏற்ற இறக்கங்கள்பிறந்த நாள்முதன்மைப் பொருளாதார ஆலோசகர்P.Chidambaram article in tamil

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!