கோணங்கள், கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 12 நிமிட வாசிப்பு

நன்மாறன்: வாழ்க்கையால் வழிகாட்டிய தோழர்

அ.குமரேசன்
01 Nov 2021, 5:00 am

ப்போது அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்த பேச்சாளர். மற்றவர்கள் அரசியல் மேடைகளிலும் இலக்கிய அரங்குகளிலும் நன்கறியப்பட்டிருந்தவர்கள். அணித் தலைவர்கள் சுற்று முடிந்து, இரண்டாம் நிலைப் பேச்சாளர்கள் வாதிட்ட பின், மூன்றாம் நிலையினர் பேசினார்கள். அதில் ஒருவரின் பேச்சு, நடுவர்  குன்றக்குடி அடிகளாரைக் கவர்ந்தது. அதன் பிறகு, அடிகளார் தனது தலைமையில் நடந்த முக்கியமான பட்டிமன்றங்களுக்கெல்லாம் அந்தப் பேச்சாளரை அணித் தலைவராகவே அழைக்கலானார். அந்தப் பேச்சாளர் யாருமல்ல... நம் தோழர் நன்மாறன்தான்!

மதுரை அருகில் ஒரு கோயில் திருவிழாவையொட்டி, “இந்தியச் சமுதாயத்திற்கு ஏற்ற பாதை காந்தியமே, பெரியாரியமே, மார்க்சியமே” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பட்டிமன்றத்தைக் காண நானும் போயிருந்தேன். “மார்க்சியமே!” அணியில் பேசினார் நன்மாறன். ஏற்கெனவே சொன்னபடி, அவர் கட்சி வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட பேச்சாளர். மற்றவர்கள் புகழ்பெற்ற பேச்சாளர்கள். மூன்றாம் கட்டப் பேச்சாளர்களின் முறை வந்தபோது, காந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் மார்க்சியத்தைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு, “தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி நடக்கும் என்று சொல்கிறீர்களே, அந்தத் தொழிலாளிதான் வேலை முடிந்த பிறகு நல்லா குடிச்சிட்டு கெட்ட வார்த்தை பேசிக்கிட்டு அசிங்கமா தமிழ் பேசிக்கிட்டிருக்கானே!” என்றார். அடுத்து வந்த நன்மாறன், “தொழிலாளிக்கு நல்ல தமிழ் தெரிஞ்சிருந்தால்தான் குடிச்சிட்டு ஆஸ்தான கவியாகியிருப்பானே!” என்றார்.

அன்றைய அரசியல் சூழலில் இதன் பின்னணி சட்டென எல்லோருக்கும் புரிய வெடித்தெழுந்த சிரிப்பலைக்கு மகுடம் வைத்ததுபோல ஒலித்தது, ஒலிபெருக்கியின் வழியே அடிகளாரின் சிரிப்பு. தொடர்ந்து பேசிய நன்மாறன், வர்க்க உணர்வுடன் திரண்டுவிடக்கூடாது என்பதற்காகத் தொழிலாளியை இந்த நிலையில் வைத்திருப்பதேகூட முதலாளித்துவம்தான் என்று எளிமையாகச் சொல்லிவிட்டு மார்க்சியத்தை நிறுவுவதற்கான மற்ற கருத்துகளையும் கூறி நிறைவுசெய்தார். அது குன்றக்குடி அடிகளாரை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய ஒரு தெருமுனைப் பட்டிமன்றம். நடுவர் நன்மாறன். திரைப்படங்களின் தாக்கம் பற்றிய தலைப்பு. பேச்சாளர் ஒருவர், பலர் தங்கள் குழந்தைகளுக்குக் குடும்பப் பெரியவர்களின் பெயர்களையோ, தேசத் தலைவர்களின் பெயர்களையோ சூட்டாமல் நட்சத்திர நடிகர்களின் பெயர்களை வைப்பது பற்றிக் கடுமையாக விமர்சித்தார். தனது தீர்ப்புரையில் நன்மாறன், “அதில் ஒன்றும் தவறில்லை. அவர்களைக் கவர்ந்த கலைஞர்களின் பெயர்களைச் சூட்டுகிறபோது, பிற்காலத்தில் அந்தப் பெயர்களோடு சாதி அடையாளம் ஒட்டாது. அது நல்லதுதானே” என்று சொன்னதோடு, அன்றைய முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களோடு சாதி ஒட்டு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நையாண்டியாகக் குறிப்பிட்டபோது தெருவே விழுந்துவிழுந்து சிரித்தது. “அதை மக்கள் விரும்பவில்லை என்பது ஆரோக்கியமானதுதானே” என்று எளிமையாகக் கேட்டு முடித்தார்.

சங்கச் செயல்பாட்டாளர்களாக நாங்கள் அவரது உரையில் மூன்று ஆக்கப்பூர்வமான விளைவுகளை உணர்ந்தோம். ஒன்று, பொது இயக்கத்தில் ஈடுபட முன்வந்த நாங்கள் ரசிக மனநிலையைப் புரிந்துகொண்டோம்; இரண்டு, நடிகர்களின் ரசிகர்கள் சங்கப் பணிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள்; மூன்று, சாதி உணர்வு பற்றிய உறுத்தலுணர்வு சமூகத்திற்குக் கடத்தப்பட்டது.

அமைப்பு சார்ந்த கூட்டங்களிலும் அவரது இந்த நகைச்சுவை ஆளுமை செலுத்தும். மதுரையில் வாலிபர் சங்கத்திற்கான உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, அது தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல பகுதிகளில், இளைஞர்களிடையே இருக்கக்கூடிய பழக்க வழக்கங்களைக் காரணமாகக் கூறி, அவர்களைச் சங்கத்தில் சேர்க்க மறுப்பதாக ஒருவர் சுட்டிக்காட்டினார். நிறைவுரையாற்றிய நன்மாறன், “அப்படிப்பட்ட இளைஞர்கள் இந்தச் சமூக அமைப்பினால் உருவாக்கப்பட்டவர்கள்தான். சமூகத்தில் உள்ள நல்லது கெட்டதுகளோடுதான் வருவார்கள். இயக்கச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட ஈடுபட அவர்கள் சமூகத்திற்குப் பயனளிப்பவர்களாக உருவாவார்கள். அதை நாம் தடுத்துவிடக்கூடாது. ஆகவே அப்படிப்பட்டவர்களையும் உறுப்பினர்களாகப் பதிவு செய்யுங்கள், அவர்களுக்கு அரசியல் புரிதல்களை ஏற்படுத்துங்கள்” என்றார். பின்னர், “அதற்காக, கிளைத் தலைவர் யாருன்னா கஞ்சா வியாபாரி, செயலாளர் யாருன்னா சாராய வியாபாரின்னு சேர்த்துடாதீங்க” என்று சொன்னாரே பார்க்க வேண்டும்! எந்த அளவுக்குச் சிரிப்போடு சிந்தனையையும் அது கிளர்த்தியிருக்கும் என்று விளக்க வேண்டியதில்லை.

‘மேடைக்கலைவாணர்’ என்று மக்களிடமிருந்து பட்டப்பெயர் பெற்றவரின் நகைச்சுவை வெளிப்பாடுகள், மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கும். ஆகவே, அது அவையோரை மிக நெருக்கமாக உணரவைக்கும். அரிதாகவே, தான் படித்த நகைச்சுவைக் கதைகளைப் பயன்படுத்துவார். அவருடைய பேச்சின் எளிமையோ சொந்த வாழ்க்கை நடைமுறையோடு பிணைந்ததாக இருக்கும்.

கட்சிக்கு நிதி வழங்கலாமே?

இரண்டு ஆண்டுகளுக்கு முன், மதுரை அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெரியவர், பேருந்தில் ஏறியபோது காலிலிருந்து நழுவி விழுந்த செருப்பை எடுப்பதற்காகக் கீழே குதித்தார். அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் என்று அடையாளம் கண்டுகொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரைத் தனது வண்டியிலேயே வீட்டிற்குக் கொண்டுசென்று விடுவதாக முன்வந்தார். “என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது தம்பி, உங்களுக்குக் கட்டுப்படியாகாது” என்று சொன்னதை அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்து, அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் நன்மாறனை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டது தமிழகம் முழுக்கப் பேசப்பட்டது.

சிலர், “கம்யூனிஸ்ட் கட்சி இப்படித்தான் தனது முழுநேர ஊழியர்களை வைத்திருக்கிறதா” என்றுகூட விமர்சித்தார்கள். பின்னர், அந்த விமர்சனங்களுக்கு நன்மாறனே பதிலளித்தார், “கட்சி எங்களுக்குத் தேவையான பாதுகாப்பை எப்போதும் அளித்துவருகிறது. இது எங்களின் இயல்பான வாழ்க்கை முறை. கட்சி ஊழியர்களின் நலனில் அக்கறையோடுதான் இப்படி விமர்சிக்கிறார்கள். அதற்காக நன்றி, நீங்கள் கட்சிக்குத் தாராளமாக நிதி வழங்கி ஊழியர்களுக்கு உதவலாம்” என்று தனக்கே உரிய நடையில் கூறினார். கம்யூனிஸ்ட்டுகளை உண்டியல் குலுக்கிகள் என்று பகடி செய்கிறவர்களுக்குமான பதில் இதில் இருக்கிறது. மக்களுக்காக உழைக்கிறவர்களுக்காக மக்களிடமிருந்து இயக்கமே நிதி கோருகிற மெய்யான மகத்துவம் உண்டியலில் இருக்கிறது.

அமெரிக்க அரசின் அத்துமீறல்களைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம். சிறப்புரைக்கு அழைக்கப்பட்டிருந்த தலைவர் திடீர் உடல்நலக்குறைவால் வர இயலவில்லை என்று பிற்பகலில் தகவல் வருகிறது. கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்த கட்சியின் மதுரை நகர்க்குழு, நன்மாறனை ஆற்றச் சொன்னது. தமிழக, இந்திய அரசியல் நிலைமைகள் பற்றி அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறவர்கள், “இது கடினமான உலக அரசியலாயிற்றே... எப்படிப் பேசப்போகிறாரோ...” என்று வெளிப்படையாகவே கேட்டார்கள். சென்னையிலிருந்து வர இருந்த தலைவரின் பேச்சைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். அவர்களிடம் நிலைமையைச் சொல்லிவிட்டு நன்மாறனைப் பேச அழைத்தார்கள்.

அமெரிக்க நாடு உருவான வரலாற்றில் தொடங்கி, அமெரிக்க அரசின் வர்க்கச் சார்பு, அதன் உலக ஆதிக்க நோக்கம், அதற்குத் தடையாக இருக்கும் அன்றைய சோவியத் யூனியன், அதை முறியடிக்கக் கூட்டாளிகளோடு சேர்ந்து அமெரிக்க அரசு செய்யும் சூழ்ச்சிகள் குறித்து, அருவி போலத் தகவல்களையும் கருத்துகளையும் அவர் பொழிந்தார். அந்த ஒன்றரை மணி நேர அடர்த்தியான உரையின் செய்திகள், அவருக்கே உரிய நகைச்சுவையின் வழியே எளிய மக்களையும் சென்றடைந்தன. முதலில் ஐயப்பட்டவர்கள் இப்போது அவரைத் தோள்சேர அணைத்துக்கொண்டார்கள். மறுநாள், சென்னையிலிருந்து தொலைபேசி மூலம் நன்மாறனுடன் தொடர்புகொண்டு, “உங்கள் பேச்சு பற்றித் தோழர்கள் சொன்னார்கள், நானே வந்திருந்தால்கூட இவ்வளவு எளிமையாகவும் சிறப்பாகவும் செய்திருக்க மாட்டேன்” என்று மனம் திறந்து பாராட்டிய அந்தத் தலைவர் - வி.பி. சிந்தன்.

வாசிப்பு வாசல்

மாணவப் பருவத்தில் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றவர்தான் என்றாலும், நன்மாறனின் இந்தப் பங்களிப்பு பேச்சாற்றல் சார்ந்தது மட்டுமல்ல. அதன் அடிவாரமாக இருந்தது அவருடைய ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம். பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள் முதல், கனத்த புத்தகங்கள் வரையில் ஈடுபட்டுப் படிப்பதிலிருந்து வளர்ந்த வல்லமை அது. வெளியூர் பயணங்களின்போது, அவரது ஜோல்னா பையில் மாற்று உடை இருக்கிறதோ இல்லையோ, புத்தகம் இருக்கும். அது அரசியல் ஆய்வாகவும் இருக்கலாம், இலக்கிய விவாதமாகவும் இருக்கலாம். சங்க இலக்கியம் முதல் நவீனப் படைப்புகள் வரையில் லயித்துப் படிப்பார். அரசியல் களம் போலவே, இலக்கிய உலகில் முன்னுக்கு வருகிற சர்ச்சைகள் அனைத்தையும் அறிந்துவைத்திருந்தார். இந்த வாசிப்புப் பண்பின் தொடர்ச்சியாக, இளம் படைப்பாளிகள் தங்கள் புத்தக வெளியீடுகளை அவரிடம் அளிக்கிறபோது, முழுமையாகப் படித்துவிட்டுக் கடிதம் மூலமாகவோ, தொலைபேசியிலோ தனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பார்.

அவர் தலைமையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய நான், சிலர் எப்படித் தங்களுக்கு மட்டும் வசதி வந்துவிட்டதால் நாடே செழிப்பாகிவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள் என்று விளக்குவதற்காக, அப்போது படித்து வந்திருந்த அரசர்-நாவிதர் கதை ஒன்றைச் சொன்னேன். நிகழ்ச்சி முடிந்தபின் என்னுடன் தனியாகப் பேசிய நன்மாறன், “நாவிதர்கள் ஒரு சமூகமாகவே வாழ்கிறவர்கள். அவர்கள் தங்களைத்தான் விமர்சிக்கிறார்கள் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. ஆகவே, நாவிதர் என்று குறிப்பிடாமலே கதையைச் சொல்லுங்கள், அல்லது கதையை மாற்றுங்கள்” என்றார். எவ்வளவு முக்கியமான பாடம் அது! வெப்பம் மிகுந்த விவாதங்களில்கூட, மறந்தும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தக்கூடிய சொற்களைத் தவிர்த்துவிட்டு, எதிர்க்கருத்துகளைத் திட்டவட்டமாக முன்வைப்பதற்கென நான் மேற்கொண்ட பயிற்சியில் இந்தப் பாடமும் இடம்பெற்றது.

தியாகமல்ல, இயக்க ஒழுக்கமே...

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஒரு நெருக்கடியான தெருவில் ஒரு நெருக்கடியான வீட்டில் குடியிருந்தது பற்றி நிறையவே செய்திகள் வந்திருக்கின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வரக்கூடிய ஓய்வூதியத்தில் வசதியான வீட்டிலேயே குடியிருக்கலாமே என்று பலர் பேசிக்கொண்டார்கள். அவர்களுக்குப் பதிலளித்த நன்மாறன், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுக்கப்படி, எனக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வந்த ஊதியத்தையும் கட்சிக்கே கொடுத்துவிடுவேன். இப்போது வருகிற ஓய்வூதியத்தையும் கட்சிக்கே கொடுக்கிறேன். கட்சி கொடுக்கிற முழுநேர ஊதியருக்கான ஊதியத்திலேயே வாழ்கிறேன். முன்னோடிகள் எங்களுக்கு இப்படி வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார். இப்படியொரு வீட்டில் குடியிருந்ததால் வட்டார மக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும் விளங்கினார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, நலிந்த மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனக்கும் ஒரு வீடு ஒதுக்கக் கேட்டுக்கொள்ளும் மனுவை அளித்ததும் செய்தியானது. அந்தச் செய்தியில் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் தனக்கு வீடு ஒதுக்கக் கோரவில்லை, எளிய குடிமக்களில் ஒருவராகவே கோரிக்கை விடுத்தார்.

தனது மகன்களை ஏதாவது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிடுமாறு நெருங்கிய தோழர்களையும் நண்பர்களையும்தான் கேட்டுக்கொண்டார். ஒருபோதும், தனக்கு நன்கு அறிமுகமான அதிகாரிகளை நாடியதில்லை. இத்தகைய வாழ்க்கையில் அவரும் அவரது இணையரும் மிரட்டலான சோதனைகளையும் கடினமான சூழல்களையும் சந்திக்கவே செய்தார்கள். அப்போதும் கூட, அவர் கேட்டுக்கொண்டால் உதவுவதற்குத் தயாராக அதிகாரிகள் இருந்தார்கள் என்றபோதிலும், தனது சுமைகளைத் தோழமைகளின் தோள்களில்தான் இறக்கிவைத்தார். நிகழ்ச்சிகளுக்காகச் செல்கிற ஊர்களில், தோழர்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறையோடு, அங்கிருக்கிற கட்சி அலுவலகத்தில் தங்கிவிட்டு, அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து மதுரைக்குத் திரும்பிவிடுவார். இந்த எளிமையும் நேர்மையும் தனது சொந்தத் தியாகம் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருந்ததில்லை. அதுவொரு செங்கொடிப் பண்பு. “ஒரு கம்யூனிஸ்ட் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எத்தனையோ தோழர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள். அதன் இயல்பான தொடர்ச்சியாகவே என்னைப் போன்றவர்கள் இருக்கிறோம்” என்பார் நன்மாறன். எல்லா அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் இப்படி இருந்தால் நாடும் சமுதாயமும் எப்படி இருக்கும்! 

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சிறு தொழிலகம் நடத்திவந்தவரான எனது நண்பர் ஒருவர் அவரைச் சந்தித்து தங்களது துறை சார்ந்த பிரச்சினையை அவரிடம் எடுத்துச்சொல்ல விரும்பினார். அந்தப் பிரச்சினை பற்றி நன்மாறன் சட்டமன்றத்தில் பேசி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார். சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு அவரை அழைத்துச்சென்றேன். அவர் அளித்த அறிக்கையைப் பொறுமையாகப் படித்துப்பார்த்த நன்மாறன், “சார், அரசாங்கக் கட்டமைப்புப் பற்றி, மிகையாகக் கற்பனை செய்துகொள்ளாமல், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். சில பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறபோது அரசு கேட்டுக்கொள்ளும், நடவடிக்கையும் எடுக்கும். மற்ற பல பிரச்சினைகள் பற்றி பேசியதோடு நின்றுவிடும். இது அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்றார். ஏமாற்றமடைந்த நண்பரிடம், “நம்பிக்கை இழக்காதீர்கள். வேறு வழியில் அரசாங்கத்தை இதிலே தலையிட வைக்க முடியும்” என்று கூறி, அமைப்பாகச் சேர்ந்து சட்டப்பூர்வமாகவும், தேவைப்பட்டால் பொதுப்போராட்ட வழியிலும் இதைக் கையாளுங்கள்” என்று வழிகாட்டினார். அந்த வழியில்தான் சென்றார் நண்பர்.

எழுத்தும் பேச்சும்

இத்தனை சிறப்பான அணுகுமுறைகள், இத்தனை முக்கியமான உரைகள் --- இவற்றையெல்லாம் எழுத்தாக்கக்கூடாதா-? என்று பலரையும் போல நானும் நன்மாறனிடம் ஒருநாள் ஆதங்கத்தோடு கேட்டேன். “எந்தவொரு பிரச்சினையிலும் வேண்டிய தகவல்களைப் படித்துவிட்டுப் பேச முடிகிறது, எழுத உட்கார முடியவில்லையே...” என்று ஏக்கத்தோடு சொன்னார். “நீங்கள் பலவிதமான நிலைமைகள் பற்றியும் எழுதுகிறீர்கள். அதை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள்” என்று ஊக்குவித்தார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர்.

ஆனால், வேறொரு எழுத்தில் அவருக்கு ஆர்வமும் செயலும் இருந்தது! அதுதான் சிறார் இலக்கியம். பெரியவர்களுக்கே எளிமையாகப் பேசுகிறவராயிற்றே, குழந்தைகளுக்கு இன்னும் எளிமையாகப் பாடல்கள் எழுதினார். அவர் எழுதி வந்த முதல் புத்தகம் கூட, காலம் வெளியீட்டகம் கொண்டுவந்த ‘சின்னப்பாப்பாவுக்கு செல்லப்பாட்டு’ என்ற அவரது குழந்தைப் பாடல்கள் தொகுப்புதான். பின்னர் மாணவர்களும், தொழிலாளர்களும் புரிந்து படிக்கிற வகையில் லெனின், ஸ்டாலின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளிட்ட சில சிறு நூல்களை எழுதினார். குழுக் கூட்டங்களின்போது கிடைக்கிற ஓய்வில், கிடைக்கிற துண்டுத்தாளில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருப்பார். விடைபெறும்போது அதைக் கையில் கொடுத்து, “இதை வெளியிட முடியுமா என்று பரிசீலனை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொள்வார். அது ஒரு அழகான குழந்தைப் பாடலாக இருக்கும். ‘தீக்கதிர்’ நாளேட்டின் ஞாயிறு இணைப்பாகிய ‘வண்ணக்கதிர்’ இதழ் ’குழந்தைகள் பூங்கா’ பக்கத்தில் இப்படி அவருடைய அழகான பல செல்லப்பாட்டுகள் வந்திருக்கின்றன.

உயிர்ப்போடு நடமாடிய ஓர் அருங்காட்சியகம் போல, வரலாற்றியல், மக்கள் வாழ்வியல், அறிவியல், அரசியல், சமூகவியல் என ஏராளமான தகவலறிவையும், கண்ணோட்டங்களையும் கொண்டிருந்த அவர், பிற்காலத்திலாவது அவற்றை எழுத்தாகப் பதிவு செய்திருக்கலாமே என்ற ஏக்கம், அவரது மறைவுச் செய்தி தருகிற அதே இழப்புணர்வைத் தருகிறது. அவர் பதிவு செய்யாவிட்டாலும், தன் வாழ்க்கையே செய்தி என்று வாழ்ந்துவிட்டுப் போன அவரைப் பற்றி இதுவரையில் ஆயிரக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகளும், நினைவுப் பகிர்வுகளும் வெளிவந்துவிட்டன. மக்களின் வாழ்க்கையைப் பற்றி, மாற்றத்திற்கான வேட்கையோடு பேசிவந்தவரின் வாழ்க்கை என்றென்றும் பேசப்படும்.
அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக வங்கிமணியரசன்முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வுசட்டப்பேரவை கூட்டத் தொடர்இராணுவ-தொழில்நுட்பம்வாழ்வின் நிச்சயமின்மைபள்ளிப்படிப்புவேலைக்குத் தடைத கேரவன்ஆர்.எஸ்.நீலகண்டன்பக்கவாட்டு பணி நுழைவுபர்தாஇயான் ஜேக்இயன்முறை சிகிச்சைசென்னை வெள்ளம் 2021ஒரு நிமிடம் யோசியுங்கள் முதல்வரே!துயரப் பிராந்தியம்கடவுள் மறுப்பு writer samasஹார்னிமன்மடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?பெகஸஸ்அச்சமின்றி வாழ்வதற்கான எனது உரிமைபிரிட்டிஷார்மேலாளர் ஊழியர் பிரச்சினைமூளைக்கான உணவுகேரலின் ஆர். பெர்டோஸிபீமாகோரேகாவோன்போர்கள்தணிக்கைச் சான்றிதழ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!