கட்டுரை, வரலாறு, சாவர்க்கர் வாழ்வும், நூல்களும் 12 நிமிட வாசிப்பு

சாவர்க்கர்: இந்து மகாசபை யுகம்

பி.ஏ.கிருஷ்ணன்
04 Nov 2021, 5:00 am
2

சாவர்க்கர் ரத்னகிரியில் இருந்தபோது அவரைத் தேசியத் தலைவர்கள் பலர் சந்தித்தார்கள். காந்தியும் அவரைச் சந்தித்தார். “மார்ச் 1927-ல் ரத்னகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரத்னகிரிக்கு வருவது ஒரு புனித யாத்திரைத் தலத்திற்கு வருவது போன்றது, ஏனென்றால் அங்கு சாவர்க்கர் இருக்கிறார்” என்றார் காந்தி. பின்னால் அவரைச் சந்திக்க அவருடைய இல்லத்திற்குச் சென்றார். இருவருக்கும் இடையே மற்ற மதங்களிலிருந்து இந்து மதத்திற்குத் திரும்பி வந்ததைக் கொண்டாடும் ‘சுத்தி’ சடங்கைப் பற்றிய விவாதம் நடந்தது. காந்தி ‘யாரையும் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு சேரும்படிச் சொல்லக் கூடாது. அவரவர் தாங்களாகத் தீர்மானிக்கப்பட வேண்டியது அது’ என்றார். காந்தியோடு சாவர்க்கர் ஒத்துப்போனார்.

சாவர்க்கரைச் சந்திக்கும் முன்னேயே கிலாஃபத் இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான ஷௌகத் அலியை, காந்தி மார்ச் 1925-ல் சந்தித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமானது. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன்  தொடங்கப்பட்ட ‘இந்து சங்கதன்’ இயக்கத்தை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் கைவிடத் தயாராக இருக்கிறேன் என்று சாவர்க்கர் சொன்னார். அலி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டதும் சாவர்க்கர் பதிலுக்கு, ‘நீங்கள் கிலாஃபத் இயக்கத்தைக் கைவிட வேண்டும்’ என்றார்.

அலி கோபமடைந்து சொன்னார்: ‘அது எப்படி நடக்கும்? வரலாற்றில் இஸ்லாமியர்களால் இந்துக்கள்  எப்போதும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே இருவரை இணையாகப் பார்ப்பது சரியாக இருக்காது. முஸ்லிம்களோடு ஒன்று சேர்ந்து போரிட்டால்தான் இந்துக்களால் சுதந்திரம் பெற முடியும்.’

இருவருக்கும் இடையே விவாதம் பெரிதாக நடந்தது, கடைசிவரையில் ஒருவரோடு ஒருவர் உடன்படவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஒற்றைத்தன்மையின் ஆணிவேர்

காந்தியும் தன்னளவில் இந்துக்களை ஒன்றுதிரட்டினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், அவர் இஸ்லாமியர்களை அரவணைத்து, இந்திய விடுதலையை நோக்கி நகர வேண்டும் என்று எண்ணினார். சாவர்க்கரோ, இஸ்லாமியரை அரவணைத்துப்போவதற்கும் அவர்களுக்கு அடிபணிவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கருதினார்.

இந்த இடத்தில் ஷௌகத் அலியிடம் சாவர்க்கர் சொன்ன ஒன்றைக் குறிப்பிட வேண்டும்: ‘எங்கள் இயக்கம் ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இறைவணக்கம், தாய்நாட்டின் புனிதம் என்ற அடிப்படையில் எல்லோரோடும் கை கோத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.’

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்த சாவர்க்கர் தயாராக இல்லை என்பதும், ஒருவேளை எல்லோரையும் ஒப்புக்கொள்வதாக இருந்தால், எல்லாவற்றையும் ஒன்றாக்குவது என்ற பெயரிலேயே அது நடக்கும் என்ற இடத்தையும் நோக்கி சாவர்க்கர் நகரலாகிவிட்டதை இந்த இடம் உணர்த்துகிறது. இன்றைய பாஜகவின் ஒற்றைத்தன்மைப் பண்புக்கான  ஆணிவேர்களில் ஒருவராக சாவர்க்கர் அமைந்திருக்கிறார் என்பதையும்கூட இதன் வழி புரிந்துகொள்ள முடியும். 

பகத் சிங், அம்பேத்கர் வார்த்தைகள்

இப்படித் தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டதன் வாயிலாகப் பலருடைய நம்பிக்கையையும் குலைத்துவிட்டார் சாவர்க்கர் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், எல்லாத் தரப்புகளிலும் அவரை மதிப்போடு பார்த்தவர்கள் இருந்தார்கள்.

ஆரம்பக் காலத்தில் சாவர்க்கர் கம்யூனிஸ்ட்டுகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். லண்டனில் ‘இந்தியா இல்ல’த்திற்கு லெனினை  அழைத்துக்கொண்டு வந்தவர் கய் ஆல்ஃப்ரெட் என்ற அனார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என்று சொல்லப்படுகிறது. சாவர்க்கரின் தோழரான எம்.பி.டி.ஆச்சார்யா, ஆரம்பக் கால கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவர். வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா இன்னொரு நண்பர்.

பகத் சிங் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவருடைய சிறை நாட்குறிப்பில் சாவர்க்கரின் ‘ஹிந்து பத் பாதஷாஹி’ புத்தகத்தில் இருந்து ஆறு மேற்கோள்களை தன் கைப்பட எழுதியிருக்கிறார். 1926-ல் சாவர்க்கரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நம் கதாநாயகன் சாவர்க்கர் மிகவும் தீவிரமான புரட்சியாளர், அனார்க்கிஸ்ட். கூடவே உலகையும் நேசிப்பவர். புற்களுக்கு ஊறு நேரும் என்று புல்தரையில் நடக்க மறுக்கும் அளவிற்கு உலகை நேசிப்பவர்.’

எம்.என்.ராய் ஏறத்தாழ சாவர்க்கரை வழிபட்டார் என்றே சொல்லலாம். ‘என் கதாநாயகன் சாவர்க்கர்’ என்று சொன்னவர் எம்.என்.ராய். 1938-ல் சாவர்க்கரைப் பார்க்கச் செல்லும்போதுகூட, மேற்கத்திய உடைகளைக் களைந்துவிட்டு வங்கத்துப் பாணியில் உடை அணிந்துகொண்டு சென்றார்.  ‘நிச்சயம் அவர் கால்களைத் தொட்டு வணங்கியிருப்பார்’ என்று எம்.என்.ராயின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் சொல்கிறார்.

இ.எம்.எஸ். தன்னுடைய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், சாவர்க்கருக்குப் புகழ் மாலை சூட்டுகிறார். சாவர்க்கர் இறந்தபோதுகூட ‘ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மிகப் பெரிய புரட்சி வீரர்களில் ஒருவர்’ என்றார் டாங்கே. நாடாளுமன்றம்  அவருக்குப் புகழஞ்சலி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் ஹிரேன் முகர்ஜி.

அம்பேத்கரின் புகழ் மாலை

சாவர்க்கர் ரத்னகிரியில் இருக்கும்போது சாதிக்கும், தீண்டாமைக்கும் எதிராக மிகத் தீவிரமாக இயங்கினார்.

ரத்னகிரி வித்தோபா கோயிலில் தலித்துகள் நுழைவதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது. குறிப்பாக விநாயக சதுர்த்தி நாட்களில். சாவர்க்கர் அதே கோயில் வளாகத்தில் இன்னொரு சிலையை நிறுவி அதை தலித் ஒருவரைக் கொண்டு  திறக்கவைத்தார். 1931 பதிதபாவன் கோயில் என்ற தனிக் கோயில் ஒன்றையும் நிறுவி சங்கராச்சாரியர் ஒருவரை அழைத்து பிராமணர்கள் செய்வதுபோல அவருக்கு தலித் ஒருவரால் பாதபூஜை செய்வித்தார்.

சாவர்க்கர் தலித் பாடகர் ஒருவரைக் கோயிலுக்கு அழைத்து அவரை பஜனைப் பாட்டுகள் பாடவைத்து, அவர் மற்றும் அவருடைய மனைவியின் கால்களைத் தொட்டு வணங்கியதும் சாதி இந்துக்களின் கோபம் உச்சகட்டத்தைத் தொட்டுவிட்டது. “சாவர்க்கர் இந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும். ரத்னகிரி மாவட்டத்தில் அவர் இருக்க அனுமதிக்கக் கூடாது” என்று அரசிடம் மனுக்கள் கொடுத்தனர். 

சாவர்க்கருக்கு அம்பேத்கர்  எழுதிய கடிதத்தில் சொல்கிறார்: “நீங்கள் சமூகச் சீர்திருத்தத் தளத்தில் செய்யும் பணியை நான் பாராட்டுகிறேன். தலித்துகள் இந்து சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்துவிட்டால் மட்டும் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. நான்கு வருணங்களை ஒழித்தால்தான் அது சாத்தியமாகும். இதை உணர்ந்த மிகச் சிலரில் நீங்களும் ஒருவர்.”

சாவர்க்கர் சேர்ந்து உண்பதை ஆதரித்தார். மிகத் தெளிவாக நான்கு வருணங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றார். சாதிகளை ஒழிப்பதுதான் முக்கியம்; அரசியல் விடுதலை முக்கியமல்ல என்றும் சொன்னார். ஆனால், சாதிகள் ஒழிவதற்கு எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும் என்றார். மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் பிராமணர்களோடு சேர்ந்து உணவு உண்பதோடு, தாங்களும் பங்கிகளோடு (துப்புரவுத் தொழிலாளர்கள்) சேர்ந்து உணவு உண்டால்தான் சாதிகள் ஒழியும் என்றார்.

இவ்வளவுக்கு நடுவிலும் சாவர்க்கரின் மனதில் வன்முறை வழிமுறைகள் கனன்றுகொண்டிருந்ததையும் கவனிக்க முடிகிறது.

வன்முறையின் வரலாறு

1929-ல் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி புரந்தரே தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். பகத் சிங் நிறுவிய நௌஜவான் பாரத் சபாவின் முக்கியமான உறுப்பினர் பெயர் யஷ்பால். இவர் பின்னால் குறிப்பிடத்தக்க இந்தி எழுத்தாளராக உருவெடுத்தார். 1929-ல் இளைஞர். இவருக்கு விநாயக சாவர்க்கர் மீதும் அவருடைய மூத்த சகோதரர் பாபாராவ் மீதும் மிகுந்த மரியாதை. காந்தி காலைத் தொட்டுக் கும்பிடக்கூடத் தோன்றவில்லை. ஆனால், பாபாராவ் காலைத் தொட்டுக் கும்பிட்டேன் என்கிறார்.

இவர் பாபாராவை அகோலா நகரில் சந்தித்தபோது அவர் சொன்னதாகப் பதிவுசெய்தது இது: ‘முஸ்லிம்கள் இன்னொரு நாடு உருவாக்க வேண்டும் என்ற பாதையை நோக்கிச் செல்கிறார்கள். இதற்கு வழிகாட்டி ஜின்னா. ஜின்னா இல்லாவிட்டால் இது நடக்காது. எனவே ஜின்னாவைத் தீர்த்துக்கட்டுவதுதான் ஒரே வழி. 50,000 ரூபாய் வரை பணம் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். உங்களால் செய்ய முடியுமா?’ என்று பாபாராவ் கேட்டாராம். யஷ்பால், ‘எங்கள் கொள்கை முற்றிலும் மாறுபட்டது’ என்று மறுத்துவிட்டாராம்.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. பாபாராவ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால், யஷ்பால் பொய் சொல்லியிருப்பாரா என்பதும் தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இது பாபாராவின் தம்பி விநாயக சாவர்க்கருக்குத் தெரியாமல் இருந்திருக்காது.

ஜின்னா கொல்லப்பட்டிருந்தால் இந்தியாவின் வரலாறு மாறியிருக்குமா? இச்சம்பவம் இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது. தனிநபரைக் கொல்வதன் மூலம் தங்களுக்கு அரசியலில் நேரும் தடைகளை நீக்க முடியும் என்று சாவர்க்கர் சகோதரர்கள் 1929-ல் கருதினார்கள் என்பது உண்மையாக இருந்தால், 1948-லும் சாவர்க்கர் அவ்வாறு கருதியிருக்க முடியும்!

இந்து மகாசபையில் நுழைவு

1937-ல் சாவர்க்கர் மீதான தளைகள் நீக்கப்பட்டதும், காங்கிரஸில் சேர சில காங்கிரஸ்காரர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தனர். ரத்னகிரியில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய அவர், ‘இது முழு விடுதலையின் கொடி இதை நாம் என்றும் பறக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்று சொன்னார். மே மாதம் அவர் விடுதலை அடைந்ததை வரவேற்றவர்களில் முக்கியமானவர்கள்: ராஜாஜி, நேரு, சுபாஸ் போஸ். ‘உங்கள் விடுதலையைக் குறித்து மகிழ்ச்சியடையாத இந்தியனே இருக்க முடியாது’ என்று போஸ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அக்டோபர் 1937-ல் சாவர்க்கர் இந்து மகாசபாவில் சேர்ந்தார். அந்த வருடக் கடைசியிலேயே அந்தக் கட்சியின் தலைவரானார். தன் முதல் பேச்சிலேயே இந்தியா ஒன்றுபட்ட நாடு என்று சொல்ல முடியாது. அதில் இரண்டு நாடுகள் இருக்கின்றன. ஒன்று இந்து நாடு, மற்றது முஸ்லிம் நாடு என்றார். ‘தனிமனிதர்களை மதம் இனம் போன்ற அடிப்படைகளில் இந்து ராஷ்டிரம் அடையாளம் கண்டுகொள்ளாது’ என்று கூறிய அவர், ‘இஸ்லாமியர் தேசிய விடுதலை இயக்கத்தில் போராடவில்லை, ஆனால் ஆதாயங்கள் ஏதாவது கிடைத்தால் அவற்றில் பங்கு கேட்பதில் முதலாவதாக நிற்கிறார்கள்’ என்று சொன்னார். ‘முஸ்லிம்களுக்கு இந்தியா மீது பற்று கிடையாது’ என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்து மகாசபைக்கும் காங்கிரஸுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதன் முக்கியமான காரணம், முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கப்பட்டதை காங்கிரஸ் தீவிரமாக எதிர்க்கவில்லை என்பதாக அப்போது சொல்லப்பட்டது. ‘என்னுடைய கட்சி மட்டும்தான் முஸ்லிம்களின் பிரதிநிதி’ என்று ஜின்னா சொன்னதைப் போல, ‘என்னுடைய கட்சி மட்டும்தான் இந்துக்களின் பிரதிநிதி’ என்று சாவர்க்கரும் சொல்லத் துவங்கினார்.

காங்கிரஸ் இப்போது பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. இந்து மகாசபையில் இருப்பவர்கள் காங்கிரஸில் இருக்க முடியாது என்ற முடிவை எடுத்தது.

ஹிட்லர் 1938-ல் ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு இணைத்ததை சாவர்க்கர் வரவேற்றார். “நீங்கள் நாஜி கட்சியை ஆதரிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அவர், “இல்லை. நான் நடுநிலை வகிக்கிறேன்” என்று பதில் அளித்தார்.

தமிழகத்தில் சாவர்க்கர்

சாவர்க்கர் 1940-ல் தமிழகம் வந்தார். மதுரையில் பேசினார். இந்துக்கள் ஒரு தனி இனம் என்றார். கவனிக்க: இனம். பெரியார் திராவிடர்கள் தனி இனம் என்று சொன்னதுபோல!  மனு, கிருஷ்ணர், ராமர் போன்ற வீரர்களிடமிருந்து ஆண்மையுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்வோம் என்றார். ஒருகாலத்தில் நாம் வெல்ல முடியாத இனமாக இருந்தோம். திரும்பவும் வெல்ல முடியாத இனமாக மாறுவோம் என்றார். உச்சமாக, நம் முதல் எதிரி ஆங்கிலேயர்கள்; இரண்டாவது எதிரி முஸ்லிம்கள். நீங்கள் தவறவிட்டால் அவர்கள் வாய்ப்பை எடுத்துக்கொள்வார்கள் என்றார்.

1942 க்ரிப்ஸ் பரிந்துரைகளை இந்து மகாசபை எதிர்த்தது. மாநிலங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமை அளிப்பதை அக்கட்சி வரவேற்கவில்லை. தொடர்ந்து, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை எதிர்த்தார் சாவர்க்கர். இந்த இயக்கம் இந்தியப் பிரிவினைக்குத்தான் வழிவகுக்கும் என்றார். ஆனால், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைக் காங்கிரஸைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் எதிர்த்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள். அம்பேத்கர், சீக்கியர்கள் முஸ்லிம்கள், விவசாய அமைப்புகள் போன்ற பலர் எதிர்த்தார்கள். ராஜாஜி எதிர்த்தார். ஆனால், இந்துக்கள் அனேகமாக காங்கிரஸுடன் இருந்தார்கள்.

பின்னாளில், நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியின் தந்தை என்.சி. சட்டர்ஜி, அந்நாளில் இந்து மகாசபைத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். சக தலைவரான மூஞ்சேயிடம் அவர் சொன்னார்: “இந்துக்கள் அனைவரும் காந்தியின் பின் நிற்கிறார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பின் நிற்கிறார்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொது வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மக்களால் விரட்டப்படுகிறார்கள். சாவர்க்கரின் பேச்சு வங்கத்தில் நம்முடைய இயக்கத்தின் நிலைமையை மிக மோசமாக ஆக்கியிருக்கிறது.”

1942 போராட்டத்தில் இந்து மகாசபை இணையாதது அதற்கு பெரிய பிரச்சினையைத் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில், அது காணாமல்போனதன் காரணத்தின் ஆரம்பம் இதுதான் என்றும் சொல்லலாம்.

ஆர்எஸ்எஸ்ஸுடனான உடன்பாடு

ஆர்எஸ்எஸ்ஸுக்கும் சாவர்க்கரின் இந்து மகாசபைக்கு முதலிலிருந்தே இணக்கம் இருந்தத்தில்லை. ஆர்எஸ்எஸ் ஸ்தாபகரான ஹெட்கேவார், அரசியலில் இறங்க மாட்டேன் என்று கூறிவிட்டார். 1940-ல் அவருடைய மறைவிற்குப் பின் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கையில் எடுத்த கோல்வால்கருக்கும், சாவர்க்கருக்கும் ஒத்துப்போனதாகவே தெரியவில்லை. இயங்காமல் ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ் என்று சாவர்க்கர் கருதினார். ‘ஆர்எஸ்எஸ் தொண்டர் கல்லறையில், இவர் பிறந்தார், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார், எதையும் சாதிக்காமல் இறந்தார் என்று எழுதப்படும்’ என்று சாவர்க்கர் கிண்டலடித்தார்.

சாவர்க்கர் மக்களாட்சிமுறையை ஆதரித்தார். ஒருவருக்கு ஒரே ஓட்டு என்பதையும் ஆதரித்தார். அரசு சாதி, மத, இன வேறுபாடு காட்டாது என்பதில் உறுதியாக இருந்தார். அதேசமயம், முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆதரவாக என்றும் இருக்க மாட்டார்கள், ஏனென்றால் மதவாதம் அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்றும் கூறினார்.

1945-46-ல் சாவர்க்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. 1946 தேர்தலில் அவரால் அதிகம் பங்கேற்க முடியவில்லை. ஏற்றிருந்தாலும் ஏதும் நடந்திருக்காது. இந்து மகாசபை படுதோல்வியை இந்தியா முழுவதும் சந்தித்தது.

சுதந்திரம் வந்தபோது சாவர்க்கர் மூவண்ணக் கொடியையும் காவிக் கொடியையும் தன் வீட்டில் ஏற்றினார். சுதந்திரம் கிடைத்தது அகிம்சையினால் அல்ல, ஆயுதம் தாங்கிப் போரிட்ட விடுதலை வீரர்களால்தான் என்று சொன்னார்.

பிரிவினைப் படுகொலைகளை, காந்தியும் சாவர்க்கரும் வெவ்வேறு விதமாக அணுகினர். காந்தி எல்லாப் படுகொலைகளையும் நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார். ஆனால் சாவர்க்கரின் இந்து மகா சபாவின் தொண்டர்களோ, பழிக்குப் பழி என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் கை ஓங்கி நிற்பதற்குக் காரணம் காந்திதான் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

30 ஜனவரி 1948 நெருங்கிக்கொண்டிருந்தது.

(பேசுவோம்)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   3 years ago

படித்துக்கொண்டிருக்கிறேன்........இன்னமும் ஆர்வத்தை தூண்டுகிறது.......

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Aravinth   3 years ago

Very interesting... Thank you sir.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!பொருளாதார வளர்ச்சியின் பொற்காலம்மீத்தேன்தேர்தல் வாக்குறுதிகள்ராகுலைப் பாராட்டுகிறார் இராணிகாஷ்மீர் சிங்கம்கட்டுமானம்மோனமி கோகோய் கட்டுரைமொழி அரசியல்தில்லுமுல்லுவாஜ்பாய்சந்துரு சமஸ் பேட்டிபின்தங்கிய பிராந்தியங்கள்சமஸ் அருஞ்சொல்நடுவண்மயமாக்குதல்சிறுநீரகக் கல்பகுஜன் சமாஜ் கட்சிசொப்புச் சாமான்கள்விஜயகாந்த்: ஒரு மின்னல் வாழ்க்கைநெஞ்சு வலி அருஞ்சொல்2024 களத்தையே மாற்றிவிட்டது பிஹார் எழுச்சி!டாஸ்மாக்அம்ரீந்தர் சிங்அரிப்புஆண்களை அலையவிடலாமா?எரிகிறது மணிப்பூர்; வேடிக்கை பார்க்கிறது அரசுஅதிகாரப் பரவலாக்கல்உண்மையைச் சொல்வதற்கான நேரம்டாக்டர் கு கணேசன்உள்நாட்டுப் பயணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!