கட்டுரை, சினிமா, அரசியல், கலாச்சாரம், தொழில்நுட்பம் 5 நிமிட வாசிப்பு

சமூக ஊடகங்களில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் நடவடிக்கைகள் எப்படி உள்ளன?

கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக் யு.அஜய் சந்திர வாசகம்
16 May 2024, 5:00 am
0

ரசியல் ஆர்வமுள்ள திரைப்பட நடிகர்கள் தங்கள் நடிப்புத் தொழிலிலிருந்து அரசியலுக்குத் தாவும்போது, அவர்களது ரசிகர்கள் வீரியமான அரசியல் சக்திகளாக மாறும் சாத்தியம் உள்ளது. அத்தகைய ரசிகர்களின் விரிவான சமூக ஊடகச் செயல்பாடுகள் பொது உரையாடலை மாற்றியமைக்கும் சக்தி படைத்தவை என்பதால் அவை கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

தமிழ்நாட்டில் திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. இங்கே திரைப்படம் என்பது அரசியல் களத்தின் மீது செல்வாக்குச் செலுத்துகிறது; அரசியல் வெளியுடன் ஒன்று கலக்கிறது. ட்விட்டர் தளத்தில் தமிழ் திரை நாயகர்களின் ரசிகர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள், திரைத் துறை பேசுபொருளுக்கும், அரசியல் பங்கேற்புக்கும் இடையிலான தவிர்க்கவியலாத ஊடாட்டம் பற்றிய புரிதலை வழங்குகின்றன. 

இதுநாள் வரையில் இணையத்தில் பலரை தொடர்ந்து கிண்டலும், வசைபாடலும் புரிந்துவந்தவர் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக நியமித்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு. அவர் மீது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கெனவே வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில், பிரபல சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் முன்னெடுக்கும் உரையாடல்களின் தன்மை குறித்து ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஹேஷ்டேகுகளின் தொகுப்பு

நடிகர்களின் ரசிகர்கள் மேற்கொள்ளும் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு நாங்கள் ட்விட்டர் தளத்தை எடுத்துக்கொண்டோம். சூழ்நிலையைத் துல்லியமாக அளவிட இது உதவாது என்றபோதும், இது சமூக ஊடகத்தில் ரசிகர்களின் நடவடிக்கைகளை உணர்ந்துகொள்வதற்கான வகையில் பல்வேறு தரப்புகளையும் உள்ளடக்கிய தளமாகத் திகழ்வதால் அதனைப் பயன்படுத்தியுள்ளோம்.

தமிழ்த் திரைப்படம், அரசியல் தொடர்புடைய ட்விட்டர் டிரெண்டுகளைப் பகுத்தாய்வதன் மூலம் திரைப்பட நட்சத்திரங்கள் மீதான தங்கள் பற்றுதலை, சினிமா தொடர்புடைய உரையாடலைப் பயன்படுத்தி, ரசிகர்கள் எப்படி அரசியலில் பங்கேற்கிறார்கள், அரசியல் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள்; பண்பாட்டுச் சார்பையும், அரசியல் செயல்பாட்டையும் ஒன்றிணைத்துக்கொண்டு அதை எப்படிச் சாதிக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிகிறோம்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சமூக ஊடக வலைப்பின்னல்கள் மற்றும் (பொய்த்) தகவல் ஆராய்ச்சிக் குழுவும், சென்னையில் இயங்கும் ‘பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் இந்தியா’ என்ற ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. ரெகன் கே மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வுக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறுகிறோம்.

இதில் 2018 நவம்பர் 26 முதல் 2022 டிசம்பர் 17 வரையிலான காலத்தில் புவியியல்ரீதியாக இந்திய எல்லைக்குள் ஒவ்வொரு அரைமணி நேரமும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த ட்விட்டர் டிரெண்டுகளை முறைப்படியாகத் திரட்டினோம். ஒரு டிரெண்ட் எவ்வளவு காலம் நீடித்திருக்கிறது என்ற அளவுகோலின் அடிப்படையில், ஒவ்வொரு நாளுக்குமான டிரெண்ட் பட்டியலை, பகுப்பாய்வுக்காக இறங்குவரிசையில் தொகுத்தோம்.

இப்படித் தொகுக்கப்பட்ட மொத்தம் 6,138 ஹேஷ்டேகுகளில் 342 ஹேஷ்டேகுகள் தமிழ்நாடு தொடர்புடையவை எனக் குறிப்பாக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 115 அரசியல் தொடர்புடையவை என்றும் 227 அரசியல் தொடர்பற்றவை என்றும் அடையாளம் கண்டோம்.

ட்விட்டர் கணக்குகள், ஹேஷ்டேகுகள் தொடர்பான, ஆய்வின் இந்தப் பகுதியில் தமிழ்நாடு தொடர்புடையவை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எல்லா விதச் சதவீதக் கணக்குகளும், எண்களும் இந்த வட்டார எல்லையுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்பட வேண்டும். இந்த ஹேஷ்டேகுகளுடன் தொடர்புடைய பயனர் பெயர்கள், இந்த ஹேஷ்டேகுகளுடன் எவ்வளவு நேரம் பயனர்கள் நேரம் செலவிட்டார்கள், இவை பயன்படுத்தப்பட்ட கால நேரம், ஐடிகள் (IDs), இணையச் சுட்டிகள் போன்றவை ட்விட்டர் ஏ.பி.ஐ.யை (API) பயன்படுத்திக் கல்வி நோக்கத்துக்காகத் திரட்டப்பட்டன.

கணக்குகள் வகைப் பிரிப்பு

ரசிகர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கும் அரசியல் ஹேஷ்டேகுகளுக்கும் இடையிலான உறவை சரியாகப் புரிந்துகொள்வதற்காக, ரசிகர்களின் கணக்குகளைப் பின்வரும் அடிப்படையில் தொகுத்துக்கொண்டோம்: அஜித் எதிர்ப்பு, விஜய் எதிர்ப்பு, சூர்யா ஆதரவு, அஜித் ஆதரவு, தனுஷ் ஆதரவு, கமல் ஆதரவு, ரஜினி ஆதரவு, சிம்பு ஆதரவு, சிவகார்த்திகேயன் ஆதரவு, விஜய் ஆதரவு, விக்ரம் ஆதரவு, மற்றவை.

அதைப் போலவே அரசியல் ஹேஷ்டேகுகளை இப்படிப் தொகுத்துக்கொண்டோம்: நாதக ஆதரவு, காங்கிரஸ் ஆதரவு, திமுக ஆதரவு, பாஜக ஆதரவு, நாதக எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு, மாநில அரசு எதிர்ப்பு, 2021 மே மாதம் முதல் மாநில அரசு எதிர்ப்பு.

அடிக்கடி எந்த நடிகரின் ஹேஷ்டேக்குடன் கணக்குகள் செயல்படுகின்றன என்கிற அடிப்படையில் ரசிகர்களின் கணக்குகள் அடையாளப்படுத்தப்பட்டன. பிறகு இந்தக் கணக்குகள் அரசியல் ஹேஷ்டேகுகளில் எப்படிப் பங்கேற்கின்றன என்பதை ஆராய்ந்தோம். ட்விட்டர் அரசியல் டிரெண்டுகளின் மீது சில குறிப்பிட்ட ரசிகர் படைகள் எப்படிச் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை ஒப்பிட்டு அறிவதற்காக, அரசியல் ஹேஷ்டேகுகளுடன் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் பல்வேறு நடிகர்களின் ரசிகர் படைகளின் ட்விட்டர் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

விஜய் வரட்டும்… நல்லது!

சமஸ் | Samas 21 Jul 2023

எங்கேஜ்மென்ட் விதங்கள்

வெவ்வேறு திரை நட்சத்திரங்களின் ரசிகர்களை அவர்கள் எப்படித் தொடர்பில் வைத்துக்கொள்கிறார்கள் என்பதை வகைப் பிரித்தோம்.

செல்வாக்கு மிக்கவர்கள் (அதிகபட்சத் தாக்கம் செலுத்துபவர்கள்), ரசிகர்கள் (சுமாரான தாக்கம் உள்ள இடைநிலைப் பயனர்கள்), வழக்கமானவர்கள் (குறைவான தாக்கம் உடையவர்கள்) என்ற இந்த வகைப்பாடு, ரஜினி போன்ற சில நடிகர்களுக்கு ரசிகர்களுடன் எப்படிப் பரந்த இயல்பான நேரடித் தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் மற்றவர்கள் தங்கள் தகவல்களை ரசிகர்களிடம் பெரிய அளவில் கொண்டுசெல்ல இடைநிலைக் கணக்குகளைச் சார்ந்து இருக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது.

ஒவ்வொரு நடிகரைச் சுற்றியும் ரசிகர் மன்றங்கள், சமூகப் பிணைப்புகள் உருவாகும் முறைகளானவை, ட்விட்டர் அரசியல் விவாதப்பொருள்களுடன் உரையாடும் முறையில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலத்தில், திமுக ஆதரவு ஹேஷ்டேகுகளே அதிக முறை டிரெண்டாகியுள்ளன. டிரெண்டான அரசியல் ஹேஷ்டேகுகளில் இவை 24% ஆகும். இந்த ஆய்வுக் காலத்தில் தமிழ் நடிகர் விஜய்க்கு ஆதரவான ரசிகர்களின் கணக்குகளே அதிகம் இருந்தன.

அரசியல் ஹேஷ்டேகுகள் டிரெண்ட் ஆவதில் சினிமா ரசிகர்களே மிகப் பெரிய அளவில் பங்களிக்கிறார்கள். அரசியல் ஹேஷ்டேகுகளில் சினிமா ரசிகர்களின் பங்கேற்பு 55.12% ஆகும். நம் ஆய்வில் மிக அதிகப் பங்கேற்பைப் பெற்ற ஹேஷ்டேகுகளாக அடையாளம் காணப்பட்டவை பாஜக ஆதரவு ஹேஷ்டேகுகள் மற்றும் திமுக எதிர்ப்பு ஹேஷ்டேகுகளே ஆகும். வெளியிலிருந்து நிதியுதவி வருகிற வாய்ப்பு அதிகம் இருப்பதையே இந்தத் தகவல் காட்டுகிறது. மறுபுறம் திமுக ஆதரவு, பாஜக எதிர்ப்பு ஹேஷ்டேகுகளில், தலா ஹேஷ்டேக் பங்கேற்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.

மேலும் 2021 மே மாதம் திமுக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநில அரசுக்கு எதிரான டிரெண்டுகளில் பங்கேற்பு 35.43% அதிகரித்துள்ளது. திமுகவுடன் கூட்டணி வைக்காத கட்சிகளின் நிதியாதரவுடன் இது நடப்பதையே இந்தப் போக்குக் காட்டுகிறது. மாநிலத்தில் ஆளுங்கட்சி எதுவாக இருந்தாலும் (திமுக அல்லது அதிமுக) மாநில ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதையும் இது காட்டுகிறது. ஆனால், தலா ஹேஷ்டேக் பங்கேற்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதை வைத்து ஆராயும்போது, இது மாநில / வட்டார அரசியல் சக்திகளுக்கு ஆதரவாக இல்லாத கட்சிகள் பணம் செலவிட்டு உருவாக்கும் அதிருப்தியாக இருக்கக்கூடும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

எம்ஜிஆரும் ரஜினி, கமல், விஜயும் ஒன்றா?

சமஸ் | Samas 11 Jul 2023

விமர்சகர்களின் ஆதிக்கம்

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்குமே அவர்களுக்கு எதிரான எதிர்மறை விமர்சகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதைத் தரவுகள் காட்டுவதாகத் தெரிகிறது. ட்விட்டர் தளத்தில் பெரிய அளவில் விமர்சகர்கள் இயங்குவதை இது காட்டுகிறது. இந்த விமர்சகர்களுக்கு அடுத்தபடியாக இரண்டு கட்சிக்கும் ஆதரவானவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. திமுக, பாஜக தவிர அதிமுக, நாதக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்பான டிரெண்டுகள், விவாதங்களும் பெரிய அளவில் இடம்பெறுகின்றன.

திரட்டப்பட்ட தரவுகள் நீண்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவ்வப்போதைய நடப்புகள், அரசியல் நிகழ்வுகள் போன்ற புறக்காரணிகளும் ட்விட்டர் டிரெண்டுகள் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசியல் பதிவுகள், அரசியல் உலகில் சினிமா ரசிகர் படைகளின் பங்கேற்பு ஆகியவற்றை நாம் கவனித்த வரையில், அவை சமநிலையில் இருப்பதாகவே தெரிகிறது.

வெவ்வேறு அரசியல் டிரெண்டுகளில், வெவ்வேறு நடிகர்களின் ரசிகர் படைகள் பங்கேற்கும் விதம் தொடர்பான திட்ட விலக்கத்தை (standard deviation) கணக்கிட்டுப் பார்க்கும்போது, மாறுபாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதை நாம் கண்டறிந்தோம். எனினும், பின்வரும் தரவுகள் ஆவலைத் தூண்டுகிறவையாக இருந்தன:

அரசியல் ஆர்வமுள்ள கமல் ரசிகர் கணக்குகளில் (அரசியல் ஹேஷ்டேகுகளில் பங்கேற்கும் கணக்குகள்) 14.78% திமுக ஆதரவு ஹேஷ்டேகுகளில் பங்கேற்றுள்ளன. முக்கிய நடிகர்களின் ரசிகர்களின் கணக்குகளில் இதுவே திமுகவுக்கு ஆதரவான அதிகச் சதவீதப் பங்கேற்பு. அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அஜித் ரசிகர்கள் (14.57%) வருகின்றனர். இன்னொரு பக்கத்தில் பார்த்தால், அரசியல் ஆர்வமுள்ள ரஜினி ரசிகர்களின் கணக்குகளில் மிக அதிக அளவாக, 17.95% கணக்குகள் பாஜக ஆதரவு ஹேஷ்டேகுகளில் பங்கேற்றுள்ளன. இந்தப் பங்கேற்பு மிக அதிகம். பாஜகவுக்கு ஆதரவான பங்கேற்புகளில் இரண்டாம் இடத்தில் வரும் ரசிகர் பட்டாளம் ஒற்றை இலக்கத்தில்தான் வருகிறது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

குக்கீ திருடன்கள்

ஹரிஹரசுதன் தங்கவேலு 13 Aug 2022

அரசியல் திரைப்படங்களும்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தில், அரசியலைவிடத் திரைப்படங்களே அதிகம் விவாதிக்கப்பட்ட பொருளாக இருந்தது. தமிழ்நாட்டில் திரைப்பட நடிகர்களின் அரசியல் வெற்றி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு, ரசிகர்களின் செயல்பாடு என்ற கோணத்திலிருந்து சற்றே தெளிவான விடையை இந்தக் கண்டுபிடிப்புகள் வழங்குகின்றன.

பரபரப்பான சினிமா, ரசிகர் ஆதரவுகளுக்கு இடையில் நடிகர்களின் அரசியல் ஈடுபாடு என்பது தமிழ்நாட்டில் எங்கும் பரவியிருக்கும் கருத்து முரண்கள், விவாதங்கள் நிரம்பிய அரசியல் பண்பின் நீட்சியாகவே நிகழ்கிறது. அந்தப் பண்பே மாநிலத்தின் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது.

ஹிட், லைக், கிளிக் போன்ற சமூக ஊடக அளவீடுகள் நிச்சயமாக ஓர் உரையாடலைக் கட்டமைக்க, கருத்தை உருவாக்க உதவுகின்றன. ஆனால், தேர்தல் போட்டிகள் இன்றளவும் முதன்மையாக, வாக்குச்சாவடி போன்ற அடிமட்டக் களத்திலேயே நடக்கின்றன. ஆர்வமான சமூக ஊடகப் பின்தொடர்வுகள் எந்த அளவுக்கு வாக்குகளாக மாறும் என்பதை மதிப்பிடுவது இப்போதைக்குக் கடினமான செயல். 

எனினும், மற்ற இடங்களிலும் கூறப்படுவதைப் போல, ஒரு கட்சி எந்த அளவுக்கு அரசியல் உரையாடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, அதற்கு எந்த அளவுக்கு வளங்கள் கிடைக்கின்றன, எவ்வளவு ஊக்கமுள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தக் கட்சிக்கு தேர்தல் வாய்ப்புகளும், அரசியல் வெற்றிகளும் கிடைக்கும். இதற்குத் தொலைநோக்கும் அரசியல் உழைப்பும் அவசியம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நீங்கள் லைக் போடும் கருத்து யாருடையது?
விஜய் வரட்டும்… நல்லது!
எம்ஜிஆரும் ரஜினி, கமல், விஜயும் ஒன்றா?
குக்கீ திருடன்கள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக்

கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். தொடர்புக்கு: krvigneshkarthik@gmail.com


1






கட்டா குஸ்திஒழுங்கு வேண்டாமா?லாஸ் ஏஞ்சல்ஸ்அறுவைச் சிகிச்சைபற்றாக்குறை ஏன்?மாநிலப் பாடத்திட்டம்காந்திய சோஸலிஷம்சமஸ் - மு.க.ஸ்டாலின்நவதாராளமயத்தால் அதானிக் குழுமம் அசுர வளர்ச்சி!ஒரு தேசம் ஈராட்சி முறைகாளியம்மன்பிராந்திய சமத்துவம்தேவேந்திர பட்நவீஸ்18 லட்சம் வீடுகள்பொதுத் துறைமோசமான மேலாளர்டாக்டர் கணேசன்பிரதமர் மோடிஊட்டிவெண்ணாறுநுழைவுத் தேர்வுகள்சொப்புச் சாமான்கள்ஸ்ரீதர் சுப்பிரமணியம்ஊழல் தடுப்புச் சட்டம்தெலுங்கு தேசம்வசுந்தரா ராஜ சிந்தியா - அருஞ்சொல்வேலை இழப்பில் இருந்து மீள்வது எப்படி?ஆபாசம்மகமாயிதேசிய பாதுகாப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!