கட்டுரை, சினிமா, அரசியல், சமஸ் கட்டுரை 3 நிமிட வாசிப்பு
விஜய் வரட்டும்… நல்லது!
இந்திய ஊடகங்களின் சலிக்காத விளையாட்டுகளில் ஒன்று, “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவார்களா?” என்ற விவாதம். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர், ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் என்டிஆர் இருவரும் அரை நூற்றாண்டுக்கு முன் அடைந்த அரசியல் வெற்றியும், இவர்கள் ஆரம்பித்த கட்சிகள் இன்னும் செல்வாக்கோடு திகழ்வதும் ஊடக விவாதங்களுக்கு உயிர் தருகின்றன.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, இந்த விளையாட்டில் மக்கள் வெளிப்படுத்தும் சுவாரஸ்யம்.
பயனற்றது என்று எதுவும் இல்லை. மக்களுடைய எண்ணப் போக்குகளைப் புரிந்துகொள்ளவும், கடந்த காலத்தை மீண்டும் திரும்பிப் பார்க்கவும் ஏதோ ஒரு வகையில் உதவுவது இந்த விவாதங்களில் ஒரு பிரயோஜனம். சரி, விஜயின் அரசியல் வருகை தொடர்பாக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் மூன்று கேள்விகளை நாம் இங்கே அணுகுவோம்.
விஜய் அரசியலுக்கு வரலாமா?
தாராளமாக விஜய் அரசியலுக்கு வரலாம். இந்தத் துறையினர்தான் அரசியலுக்கு வர வேண்டும்; அந்தத் துறையினர் வரக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது? எல்லோருமே வரலாம்.
இன்று உலகமே வியக்கும் முன்னோடி சமூக நலத் திட்டமான சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்த எம்ஜிஆர், அரசியலுக்கு வரும் முன் ஒரு திரைக்கலைஞர். இந்தியா கண்ட பொருளியல் மேதைகளில் ஒருவரான மன்மோகன் சிங் 1985இல் சத்துணவுத் திட்டத்துக்கு நிதி கேட்டு எம்ஜிஆர், இந்திய அரசின் திட்டக் குழுவிடம் வந்தபோது, அதன் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தார். சத்துணவுத் திட்டத்தை மன்மோகன் சிங் குறைத்து மதிப்பிட்டார். அதற்கு நிதியுதவி அளிக்க மறுத்தார். பிற்காலத்தில், மன்மோகன் சிங் பிரதமரானபோது அதே சத்துணவுத் திட்டம் இந்தியா முழுவதற்குமானதாகப் பிரதியெடுக்கப்பட்டது.
இந்த விஷயம் சொல்லும் செய்தி என்ன? எந்தத் துறையினரையும் குறைத்து மதிப்பிட வேண்டியது இல்லை.
நடிகர்களின் வருகை அரசியல் சூழலுக்கு நல்லதுதானா?
நல்லதுதான். நடிகர்களை எடுத்த எடுப்பில் அரசியல் தளத்தில் பின்பற்றும் இடத்தில் இருப்பவர்கள் யார் என்றால், பெருமளவில் அரசியலுணர்வும் அரசியலறிதறிதலும் அற்றவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். அதாவது, ஏற்கெனவே களத்தில் உள்ள அரசியல் கட்சிகளால் பெரிய செல்வாக்கையோ ஈர்ப்பையோ உருவாக்க முடியாத தரப்பினர். தங்களுக்குப் பிடித்த நடிகரின் நிமித்தம் அரசியல் களத்தில் இவர்கள் கால் பதிக்கும்போது, இவர்களும் சமூகத்தைக் கவனிக்க வேண்டிய தேவை உண்டாகிறது. சமூகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டியிருக்கிறது. அந்த வகையில், சமூகத்தில் அரசியல் பேசுவோர் எண்ணிக்கை மிகுகிறது.
இது ஒட்டுமொத்த அரசியல் சூழலுக்கு நல்லது. விஜய் சொன்னார் என்று சொல்லி, பெரியார், அம்பேத்கர், காமராஜர் நூல்களைப் பத்துப் பேர் படித்தாலும் அது நல்லதுதானே!
எம்ஜிஆர் போன்று அரசியலில் விஜய் ஜெயிப்பாரா?
தமிழ்நாட்டில் எம்ஜிஆரோடு அவருக்குப் பின் அரசியல் நோக்கி வந்த / வரும் நடிகர்கள் எவரையும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் 1972இல் அதிமுகவைத் தன்னுடைய 55வது வயதில் ஆரம்பித்தார் என்றாலும், அதற்கு முன்னரே கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் அரசியலோடு அவருக்குத் தொடர்பு இருந்தது; காங்கிரஸில் 20 ஆண்டு காலம், திமுகவில் 20 ஆண்டு காலம் எம்ஜிஆர் இருந்தார்.
சினிமாவில் இருந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகளை உரக்கப் பேசுவதிலோ, அரசியல் எதிரிகளைச் சாடுவதிலோ, அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலோ எம்ஜிஆருக்குத் தயக்கம் இருக்கவில்லை. ‘வருவது வரட்டும், மோதிப் பார்க்கலாம்’எனும் துணிச்சலோடுதான் அவர் பயணப்பட்டார். அவருடைய திரைப்படங்கள் பல சமயங்களில் தடைக்கான அச்சுறுத்தலை எதிர்கொண்டே கடந்து வந்தன.
அதிமுகவை 1972இல் ஆரம்பித்தபோது தமிழ்நாடு முழுவதும் 20,000 ரசிகர் மன்றக் கிளைகள் எம்ஜிஆருக்கு இருந்தன. இது அன்றைக்கு ஆளும் கட்சியான திமுகவுக்கு இணையான எண்ணிக்கை. எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டு, சுமார் 20 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்த ரசிகர் மன்றக் கிளைகளைக் கிட்டத்தட்ட ஓர் அரசியல் கட்சி அமைப்பு போலவே எம்ஜிஆர் உருவாக்கியிருந்தார். எம்ஜிஆர் தன்னுடைய திரைப்படங்கள் வழியே ஓர் அரசியலைக் கட்டமைத்தார்; அதோடு திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகும் வரை அவருடைய மன்றங்களில் கணிசமானோர் திமுகவிலும் உறுப்பினர்களாக இருந்தனர் என்பதால், இவர்களுக்கு என்று ஓர் அரசியல் முன்பயிற்சியும் இருந்தது.
சமூகத்தில் ஆழ இறங்கிப் பழகியவர் எம்ஜிஆர். அன்றாடம் பல நூறு பேர்களை அவர் சந்தித்தார். அடித்தட்டு மக்களுடன் அவருக்கு நெருக்கமான உரையாடல் இருந்தது. சமூக இயங்கியல் தொடர்பில் அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது.
எம்ஜிஆருக்குப் பிந்தைய நடிகர்கள் எவரையும் இந்தப் பின்புலத்தோடு நாம் ஒப்பிட முடியாது. அதேசமயம், தேர்தல் வெற்றி – தோல்விகளை மட்டுமே அளவுகோல்களாகக் கொண்டு அரசியலை மதிப்பிட முடியாது. எந்த ஒரு கட்சியும் யாருடைய பிரதிநிதியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது; யாருடைய குரலைப் பேசுகிறது; என்னென்ன கேள்விகளை எழுப்புகிறது என்பது முக்கியம்.
விஜய் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும், நல்லது; வந்த பின் அவருடைய செயல்பாடுகளைக் கொண்டு நாம் மதிப்பிடலாம்!
- ‘குமுதம்’, ஜூலை, 2023
தொடர்புடைய கட்டுரைகள்
எம்ஜிஆரும் ரஜினி, கமல், விஜயும் ஒன்றா?
விஜயின் அரசியல் வருகை: சமஸ் கருத்து
விஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?
3
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
காலா காலத்தில் ரஜினி செய்யத்தவறியதை விஜய் செய்ய ஆசைப்படுகிறார்போலும்! விஜய்யிடமும் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன! அன்று ஒரு "நிதி"யை எம்.ஜி.ஆர். எதிர்த்தார்! இன்று ஒரு "நிதி"யை விஜய் எதிர்க்க முயல்கிறார் போலும்! இல்லையென்றால் நாளை இப்போது கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் இன்னொரு வாரிசு "நிதி"யை யாரால் எதிர்க்கமுடியும்?
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
"இன்று உலகமே வியக்கும் முன்னோடி சமூக நலத் திட்டமான சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது எம். ஜி. ஆர்" அல்ல. அந்த மாபெரும் மனிதர் காமராஜர்! என்ன சமஸ்! நீங்களுமா இப்படி!
Reply 2 0
Prabha Karan k 7 months ago
மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராசர். அதனைச் சத்துணவுத் திட்டமாகக் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.