கட்டுரை, வாழ்வியல், காலவெளியில் காந்தி, ஆளுமைகள் 12 நிமிட வாசிப்பு

சாம் பிட்ரோடா - தொழில்நுட்பமும், சமூக மேம்பாடும்!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
02 Oct 2021, 5:00 am
11

மிழ் வணிக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல், ‘16 வயதினிலே’. அதில் நடித்த நாயகனும், வில்லனும் அடுத்த 30 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்டார்கள். கலை, அதன் காலகட்டத்தின் பிரதிபலிப்பு என்பார்கள். அந்தப் படத்திலும் அது இருந்தது. கதாநாயகன் பெயர் சப்பாணி.  போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. அந்தக் காலத்தில், உலகிலேயே மிக அதிகமாகப் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் இருந்தார்கள்.

பயங்கரவியர்களால் 1984இல் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைசெய்யப்பட, அவர் மகன் ராஜீவ் காந்தி உலகின் மிக இளம் தலைவர்களுள் ஒருவராக, இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். அவருக்குத் தொழில்நுட்பம் மீது அபாரமான பிடிப்பு இருந்தது. இந்தியா 21-ம் நூற்றாண்டுக்குள் நுழைவதற்கு, நவீன தொழில்நுட்பமே வழி என நினைத்த ராஜீவ், அதற்கு மக்களைத் தயாராக்க தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடிவெடுத்தார். தொலைத்தொடர்புத் துறை நிபுணராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சாம் பிட்ரோடாவை, தொழில்நுட்ப இயக்கத்தை முன்னெடுக்க அழைத்தார். 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொழில்நுட்ப இயக்கம், 6 துறைகளில் பங்கெடுக்க முடிவெடுத்தது.

1. கல்வி

2. தடுப்பூசி

3. குடிநீர்

4. எண்ணெய் வித்துகள்

5. தொலைபேசித் துறை

6. பால்வள மேம்பாட்டுத் துறை 

தடுப்பூசித் தொழில்நுட்ப இயக்கம் தொடங்கிய வருடம், உலகின் 60% போலியோ நோயாளிகள் இந்தியாவில் இருந்தார்கள். இந்தியா அப்போது பெரும்பாலான தடுப்பூசிகளை இறக்குமதி செய்துவந்தது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாது, உலகின் மிகப் பெரும் தடுப்பூசி உற்பத்தியாளராக, ஏற்றுமதியாளராக உருவெடுத்திருந்தது இந்தியா. ராஜீவ் காந்தி என்னும் தலைவரின் கனவும், சாம் பிட்ரோடா என்னும் நிர்வாகியின் மேலாண் திறனும் அந்தச் சாதனையின் பின்ணணியில் இருந்தன. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

எங்கிருந்து வருகிறார் சாம் பிட்ரோடா?

பிட்ரோடா, சுகாதாரத் துறை நிபுணரல்ல. அவர் ஒரு தொலைத்தொடர்புத் துறை நிபுணர். ஒடிஸாவில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த அவர், குஜராத்தில் உள்ள மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் முதுகலை படித்தார். பின்னர் அமெரிக்கா சென்று, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் ‘ஜி.டி.இ.’ என்னும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தது பிட்ரோடா வாழ்வின் முக்கியமான திருப்பம்.

 

தான் பிறந்து வளர்ந்த வீட்டின் முன் பிட்ரோடா 

அப்போது தொலைபேசி ஸ்விட்சிங் தொழில்நுட்பங்கள் செயல் திறன் குறைந்தவையாக இருந்தன. அவை பெரும்பாலும் மின் இயந்திரங்கள். ‘ஜி.டி.இ.’ நிறுவனம், மின் இயந்திரங்களை, மின்னணு இயந்திரங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது. மின்னணு இயந்திரங்கள் மின் இயந்திரங்களைவிட ஆயிரம் மடங்கு செயல்திறன் வாய்ந்தவை. பிட்ரோடா அந்த நிறுவனத்தின் மூத்த அறிவியலராக, அத்துறையின் வளர்நுனியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பிட்ரோடாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்தது. பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து, அவற்றுக்கான காப்புரிமைகளைப் பெற்றார். 40 கண்டுபிடிப்புக் காப்புரிமைகளை அவர் அந்நிறுவனத்தில் பணியாற்றுகையில் பெற்றார். ஆனால், அத்துடன் அவர் மனநிறைவடையவில்லை.

இரண்டு அமெரிக்க முதலீட்டாளர்களுடன் இணைந்து, ‘வெஸ்காம்’ என்னும் ஸ்ட்விச்சிங் நிறுவனத்தைத் தொடங்கினார் பிட்ரோடா. அப்போது உலகுக்கு அறிமுகமான மைக்ரோ ப்ராசஸரை, தொலைபேசி ஸ்விட்சிங் சிஸ்டத்துடன் இணைக்கும் பணியில் இறங்கினார். அவர் ஆராய்ச்சியின் இலக்கு, வெறும் தொலைபேசி ஸ்விட்சுகளின் திறன் மேம்பாட்டுடன் நிற்பதாக இல்லை. “தொழில்நுட்பம் வழியே, அதீத மதிப்பு வாய்ந்த விளைவுகளை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தது” என்கிறார் அவர் நண்பர் மது மேத்தா.  

நான்கு ஆண்டுகள் உழைப்புக்குப் பின், ‘580 டிஎஸெஸ்’ என்னும் தனித்துவமான ஸ்விட்சிங் சிஸ்டத்தை உருவாக்கி வெளியிட்டார் சாம். அன்று அமெரிக்காவில் இருந்த எந்த சிஸ்டத்தையும்விட நவீனமானதாக, மேம்பட்ட செயல்திறன் கொண்டதாக அது இருந்தது. ‘ஸ்விட்சிங் சிஸ்டத்தை வடிவமைப்பவர்களின் குரு’ என உலகத் தொலைபேசித் துறையின் தலைவர்கள் புகழும் அளவுக்குத் திறமையாளராக இருந்தார் பிட்ரோடா. 

சில ஆண்டுகள் கழித்து, ‘ராக்வெல்’ என்னும் பெருநிறுவனத்திடம்  விற்கப்பட்டது ‘வெஸ்காம்’. இதில் பிட்ரோடாவின் பங்குக்கு 3.5 மில்லியன் டாலர் லாபம் கிடைத்தது. ‘ராக்வெல்’ நிறுவனத்தில் துணைத் தலைவர் என்னும் உயர் பதவியிலும் அமர்ந்தார். மிகச் சிறந்த வேலை, அரை மில்லியன் டாலர் ஊதியம் என வசதிகள் இருந்தும், பிட்ரோடாவுக்குத் தன்னுடைய தாய்நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார். 

இந்திரா சந்திப்புக்கான போராட்டம்

1981இல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு, ‘தொலைபேசித் துறையை நவீனப்படுத்தும் ஒரு திட்டத்தை ஓய்வு பெற்ற அதிகாரி சரின் என்பவரின் தலைமையில் பிரதமர் இந்திரா காந்தி முன்னெடுக்கிறார்’ என்று செய்தி வெளியிட்டது. தன் நண்பர் ஒருவர் மூலமாக, அவரைச் சந்திக்க, டெல்லி செல்ல முடிவெடுத்தார் பிட்ரோடா. அந்தச் சந்திப்பு அப்போது கூடவில்லை. 

டில்லியில் இறங்கி, சில நாட்கள் தங்கியும் பிரதமரைச் சந்திக்க முடியாமல் திரும்பினார் பிட்ரோடா. இப்படிப் பல முறை டெல்லி சென்று வெறுங்கையுடன் திரும்பினார். பிறிதொருமுறை, பிரதமர் இந்திரா காந்தியின் அப்பாயின்மென்ட் கிடைத்தது. ஆனால், அவர் டெல்லிக்குச் சென்ற பின்பு ரத்துசெய்யப்பட்டது.

இந்திய அரசு இயந்திரம் வேலை செய்யும் விதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள பிட்ரோடா சில லட்சம் டாலர்களைச் செலவிட நேர்ந்தது. ஆனால், ஒவ்வொரு முறை தோல்வியுடன் திரும்பும்போதும், இதைச் செய்தேயாக வேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் மேலும் வலுவடைந்தது. ஒருவழியாக, ராஜீவ் காந்தியின் நண்பர்கள் மூலம் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தொழில்முறைத் திட்டங்களைத் தெளிவான மொழியில் அறிமுகப்படுத்துவதில் வல்லுநர் பிட்ரோடா. அவர் இந்திரா காந்தியைச் சந்தித்த காலகட்டத்தில், இந்தியாவில் தொலைபேசி என்பது செல்வந்தர்களின், அதிகாரிகளின் வீடுகளில் மட்டுமே இருந்த ஓர் ஆடம்பரப் பொருளாக இருந்தது. ஆனால், தொலைத்தொடர்பை அனைவருக்குமான சேவையாகப் பரவலாக்குவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை, மக்கள் நலனை மேம்படுத்த முடியும் என்னும் திட்ட வடிவமைப்பை முன்வைத்தார் பிட்ரோடா. அது பிரதமரை மிகவும் கவர்ந்தது.

தொலைத்தொடர்புத் துறையில் ஒரு பேராட்டம்

அப்படி ஒரு சாத்தியம் உண்டு என்பதே அன்று இந்தியாவில் நம்ப முடியாததாக இருந்தது. அந்தக் காலத்தில், 22 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில் 19 கோடித் தொலைபேசிகள் இருந்தன. 70 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 25 லட்சம் தொலைபேசிகள் மட்டுமே இருந்தன.

இந்த நிலை மாற வேண்டும் என்றால், இந்தியத் தொலைத்தொடர்புத் துறை நம்பிக்கொண்டிருக்கும் மின் இயந்திர ஸ்விட்சிங் சிஸ்டத்தினால் முடியாது. உலகில் அன்று நவீனமாக முன்னெழுந்து வந்துகொண்டிருக்கும் மின்னணு ஸ்விட்சிங் சிஸ்டமே வழி என்பதைத் தரவுகளுடன் வலுவாக முன்வைத்தார் பிட்ரோடா. தொலைத் தொடர்புத் துறையை நவீனப்படுத்த அரசு நியமித்த சரீன் கமிஷனும் இதை ஆதரித்தது.  ஆனாலும், இது தொடர்பான முன்னேற்றம் மிக மெதுவாக நகர்ந்தது.

1983-ம் ஆண்டு, ‘காந்தி’ திரைப்படம் வெளியாகியது. சிகாகோ நகரில், நண்பர்களுடன் சென்று படத்தைப் பார்த்த பிட்ரோடா, அதில் மனம் ஒன்றிப்போனார்.  படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் பிட்ரோடாவை உலுக்கிவிட்டன. கண்களில் நீருடன் அரங்கை விட்டு வெளியே வருகையில், இந்தியா சென்றே ஆக வேண்டும் என முடிவெடுத்துவிட்டிருந்தார். 

தொடர் முயற்சிகளின் காரணமாக, 1984, ஏப்ரல் மாதம், பிட்ரோடாவின் கனவு, ‘சி-டாட்’ (C-Dot) என்னும் அரசு ஆராய்ச்சி நிறுவனமாக உருவெடுத்தது. தொலைத்தொடர்புத் துறைக்குத் தேவையான மின்னணு மற்றும் இதர தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே, ஆராய்ச்சி வழியாக உருவாக்கிக்கொள்வதே இதன் நோக்கம்.

மிகத் தெளிவாக, அதன் உருவாக்கத்தில், ‘இது அரசு நிர்வாகத்துக்கு வெளியே, முற்றதிகாரம் கொண்ட சுதந்திரமான நிறுவனம்’ எனக் குறிப்பிடப்பட்டது. அரசாங்கத்தின் உறைந்து போன நிர்வாக வழிமுறைகளால், சுதந்திரமான ஆராய்ச்சி முறைகள் தடைபடக் கூடாது என்பதே இதன் அடிப்படை நோக்கம். இதை வழிநடத்த அடையாள ஊதியமாக பிட்ரோடா ரூ.1 பெற்றுக்கொண்டார். 

பிட்ரோடா அடிக்கடிச் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு. ‘நட்சத்திரங்களுக்குக் குறி வைத்தால்தான், வீட்டின் கூரையையாவது எட்ட முடியும்!’ ஆகையால், தன் திட்டங்களுக்கு எப்போதுமே அடையக் கடினமான இலக்குகளை முன்வைத்துச் செயல்படுவது அவரது இயல்பு. அதே பாணியில், ‘ரூ.36 கோடி முதலீடு, 36 மாதங்களில், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் மின்னணு ஸ்விட்சுகள்’ என ஒரு இலக்கை பகிரங்கமாக அறிவித்தார். அதற்கான நிறுவன அமைப்போ, வசதிகளோ எதுவுமே இல்லாமல்.

இது அவரைப் பின்னாளில் பெரும் சிக்கலுக்கு ஆளாக்கக் கூடும் என்பதை பிட்ரோடா அப்போது யோசிக்கவே இல்லை. ‘சி-டாட்’ நிறுவனத்துக்காக, மிக இளம் வயதுப் பொறியாளர்களை வேலையில் அமர்த்தினார். வழக்கமாக பிரமிட் போன்ற அதிகார நிர்வாக அமைப்பை விலக்கி, சமத்துவமான குழுக்களை உருவாக்கினார். ஒவ்வொரு குழுவுக்குமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. தேவைப்படும் உபகரணங்கள், சிறு இயந்திரங்களை வாங்கும் முறைகள் எளிமைப்படுத்தப்பட்டன. 

பெரும்பாலான பொருட்கள் அமெரிக்கவில் இருந்தது இறக்குமதி செய்ய வேண்டியிருந்தன. அவற்றை வாங்கி அனுப்ப பிட்ரோடாவின் அமெரிக்க நிறுவனம் உதவி செய்தது. திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்றிருந்த பொறியாளர்களில் ஒருவர் உடல் நலமின்றிப் படுக்கையில் இருக்க வேண்டிய நிலையில், பிட்ரோடாவின் மனைவி, அவரைத் தங்கள் வீட்டிலேயே வைத்துக் கவனித்துக்கொண்டார்.

இப்படியாக ‘சி-டாட்’டின் செயல்பாடுகள், வெற்றுத்தாளில் இருந்து, மெல்ல மெல்ல உருவாகி மேலெழுந்து வந்தன. எந்தத் துறையிலும் ஆராய்ச்சி என்பது, பாதைகளில்லா அடர் வனத்துள், ஒரு இலக்கைத் தேடிப் பயணிப்பதாகவே இருக்கும். தவறுகள் நடக்கும். சென்ற பாதையை மாற்றிக்கொண்டு, மீண்டும் தொடங்கும் நிர்ப்பந்தங்கள் ஏற்படும். அதனால் கால தாமதங்கள் ஏற்படும்.

உலகின் பெரும்பாலான ஆராய்ச்சி நிறுவனங்களில் இது சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படும். ‘சி-டாட்’டிலும் இது ஏற்பட்டது. மூன்று  வருடங்களில் தொடங்கும் என பிட்ரோடா அறிவித்த இலக்கு தவறியது; ஸ்விட்சுகள் உற்பத்தி தொடங்க ஐந்து ஆண்டுகள் ஆகின. ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட ஸ்விட்சுகள் உலகில் அன்று புதிதாய்ப் பிறந்திருந்த தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை. 

இந்தியச் சூழலுக்கேற்ப, குளிர்ப்பதன வசதிகளின்றி கிராமங்களிலும் நிறுவிவிடக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்ய பல இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டன. பல ஆயிரம் கோடிகள் செலவில் வளர்ந்த நாடுகளில் மட்டுமே உருவாக்க சாத்தியமான தொழில்நுட்பம், 50 கோடி செலவில் இந்தியாவிலேயே உருவாகியது. 

இது இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் போக்கையே மாற்றியமைத்தது. 50 ஆயிரம் தொலைபேசிகளை இயக்க, குறைந்தது 6 அடுக்கு மாடிக்கட்டிடமும், 150 ஆட்களும் தேவைப்பட்ட 1960-களின் தொழில்நுட்பம் மாறி, அதில் பத்தில் ஒரு பங்கு இடத்தில், 8-10 பொறியாளர்கள் கணிணி வழியே இயக்கும் ஒன்றாக மாறியது.

இதனால், அதிகத் தொலைபேசித் தொடர்பை உருவாக்க அரசுக்குத் தேவைப்படும் முதலீடு கணிசமாகக் குறைந்தது. அன்றுவரை, மேற்குலகின் பழைய தொழில்நுட்பத்தை அதிக விலையில் இறக்குமதி செய்துவந்த முறை நின்றுபோனது. 

1989இல், ஒரு நாளுக்கு ஒரு கிராம தொலைபேசி இணைப்பகத்தை உருவாக்கத் தொடங்கிய வேகம், 1993இல், ஒரு நாளைக்கு 25 கிராமங்களுக்குத் தொலைபேசி இணைப்பைத் தருமளவுக்கு மாறியது. அடுத்த ஐந்தாண்டுகளில், தரைவழித் தொலைபேசி இணைப்புகள் 400%-க்கு மேல் அதிகரித்தது. கிட்டத்தட்ட 2 லட்சம் பொதுத் தொலைபேசி இணைப்புகள் உருவாக்கப்பட்டு, பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டு, 4 லட்சத்துக்கும் அதிகமான உதிரி வேலைவாய்ப்புகள் உருவாகின. அன்று வரை, வீடுகளில் நலிவுற்ற வாழ்க்கை நடத்திவந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அவை ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக உருவாகி அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியது.

இது பிட்ரோடாவுக்கு மறைமுக எதிரிகளை உருவாக்கியது. உள்ளூர் அரசியல் தரகர்களும், போட்டிகள் இல்லாமல் வணிகம் செய்துவந்த பன்னாட்டு நிறுவனங்களும் பிட்ரோடாவை மனம் முழுதும் வெறுத்தார்கள். அந்தக் காலகட்டத்தில், அரசியல் சூழலும் மாறியது. ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியுற்று, வி.பி.சிங் புதிய பிரதமராகப் பதவியேற்றார். 

பல துறைகளின் தலைவர்கள் மாற்றப்பட்டனர். பிட்ரோடா மாற்றப்படவில்லை. ஆனால், பிரச்சினை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவியேற்ற உன்னி கிருஷ்ணன் வடிவில் வந்தது. ‘சி-டாட்’டில் ரூ.40 கோடி ஊழல் என ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். அது விசாரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அறிக்கையாக வந்தபோது, சில விதி மீறல்கள் இருந்தனவே ஒழிய, ஊழல் எதுவும் இல்லை என நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில், பிட்ரோடாவின் நண்பர்கள் பலர் அவரிடம் இருந்தது விலகிப் போயினர். ஆனால், அறிவுசார் தளத்தில் புகழ்பெற்ற பல அறிவியலர் அவர் சார்பில் நின்றனர். 

ஒருநாள், பிட்ரோடாவின் அலுவலகத்திற்கு ‘கோத்ரெஜ்’ நிறுவனத்தின் தலைவர் எஸ்.பி.கோத்ரெஜ் வந்தார். இந்தச் சந்திப்பிற்காகவே அவர் மும்பையில் இருந்தது டெல்லி வந்திருந்தார். ‘நீங்கள் மிக முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இது போன்ற விஷயங்களில் மனம் தளர வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்’, எனச் சொல்லிவிட்டுச் சென்றார். 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

அறிவொளி இயக்கத்தின் சாதனை  

1987இல், இந்திய அரசு 6 துறைகளில் தொழில்நுட்ப இயக்கங்களைத் தொடங்கி அதன் தலைவராக பிட்ரோடாவை நியமித்ததைக்  கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்ப இயக்கம். 

1980ளின் மத்தியில், அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை ஒரு முக்கியமான பிரச்சினையாக எழுந்துவந்தது. அந்நியச் செலாவணியைக் கோரும் இறக்குமதிப் பொருட்களை ஆராய்ந்தபோது, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடுத்தபடியாக, சமையல் எண்ணெய் மிக அதிகமாக இறக்குமதிசெய்யப்பட்டதை உணர்ந்த அரசு அதைக் குறைக்க முடிவு செய்தது. ஏற்கனவே பால் துறையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தேசிய பால்வள நிறுவனத்துடன் இணைந்து, எண்ணெய் வித்துக்கள் திட்டம் தொடங்கப்பட்டது. விளைவாக, 1986-87இல் 50% ஆக இருந்த இறக்குமதி, 1990இல் கிட்டத்தட்ட நின்றே போனது. 

தொழில்நுட்ப இயக்கத்தில் இன்னொரு முக்கியமான முன்னெடுப்பு, தேசியக் கல்வியறிவு இயக்கம். இது தமிழகத்தில் அறிவொளி இயக்கம் என்னும் பெயரில் இயங்கியது. இதன் வேலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தமிழ்ச்செல்வன், ‘அண்மைக் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் சமூக இயக்கம்’ என்கிறார். 

வேலூர் மாவட்டத்தில் அப்போது 5 லட்சம் பேர் கல்வியறிவில்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களுள் 4 லட்சம் பேரை அந்த இயக்கம், அடிப்படைக் கல்வி பெற்றவர்களாக மாற்றியது. 40 ஆயிரம் பேர் அதில் தன்னார்வலர்களாக இணைந்தார்கள்; அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். தன்னர்வலர்கள் குழுக்களாக இணைந்து கலைநிகழ்ச்சிகளின் மூலம், கல்வியறிவின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் சென்றார்கள். பெண் தன்னார்வலர்களில் பலர், கணவர்களால் கைவிடப்பட்ட்டவர்கள். பலர் கைம்பெண்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த இயக்கம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. 

பாடங்கள் மிக இயல்பாக மக்களுக்குத் தேவையான சொற்களில் இருந்தது தொடங்கின. அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் சொல், ‘பட்டா’ என்பதாகும். பட்டா என்பது ஏழை மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சொல். நிலம், வீடு முதலியவற்றின் உரிமைக்கு அடையாளம் பட்டாதான் என்பதால், ஆர்வத்துடன் அவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

பட்டா, படி என்னும் இரண்டு சொற்களைக் கற்றுக்கொண்ட ஒரு பெண்மணி, பனைமரத்துப்பட்டி என்னும் தன் ஊருக்கான பேருந்தின் பெயர்ப்பலகையில், ப, டி என்னும் இரண்டு எழுத்துகளை மட்டும் படித்து, யூகித்துக்கொண்டு, யாரிடமும் கேட்காமல், சரியாக ஏறி ஊர்சேர்ந்த சாகசத்தை ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் சொன்ன கதை மிகவும் பிரபலம். கல்வியறிவு தந்த உற்சாகம், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் ஆர்வத்தை வளர்த்து, பள்ளிகளில் பிள்ளைகள் சேரும் சதவீதத்தை அதிகரித்தது என்கிறார் செந்தமிழ்ச்செல்வன்.

இதில் பல மாவட்ட ஆட்சியர்கள் மக்களுடன் மக்களுடன் இணைந்து, அதை வெறும் கல்வியறிவு வகுப்பாக மட்டுமே பார்க்காமல், பெண்கள் தற்சார்பு பெறும் இயக்கமாகவும் வளர்த்தெடுத்தார்கள். குறிப்பாக, அன்று ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை ஒரு முக்கியமான முன்னெடுப்பாகச் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது, ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கனும் தங்கச்சி’, என்னும் அறிவொளி இயக்கப் பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று.

ஆறு தொழில்நுட்ப இயக்கங்களும், தெளிவான தொழில்திட்டம், நவீன தொழில்நுட்பம், சரியான முதலீடுகள் வழியாக, அரசு நிர்வாகத் தலையீடுகள் இல்லாமல், இந்தியச் சமூக வெளியில் ஊடுருவி, சமூக மேம்பாட்டின் வினையூக்கிகளாகச் செயல்பட்டன.

ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, மாறிய அரசியல் சூழலில், இனிமேலும் பங்களித்தல் சாத்தியமில்லை என உணர்ந்த பிட்ரோடா, 1994இல் அமெரிக்கா திரும்பினார்.

ஆளுமையின் மறுவருகை

2005இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பின்பேரில், புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய அறிவுசார் ஆணையத்தின் (National Knowledge Commission) தலைவராகப் பொறுப்பேற்று, இந்தியக் கல்வியமைப்பை மேம்படுத்தும் ஆலோசனை உருவாக்கத்தில் ஈடுபட்டார். கல்வி உரிமைச் சட்டம், தொழில்நுட்பக் கல்வி மேம்பாடு, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன உருவாக்கம், தேசிய அறிவுசார் நிறுவனங்கள் மற்றும் நூலகங்களுக்கிடையே தடையில்லா மின்னணுத் தொடர்பு எனப் பல தளங்களில் ஆலோசனைகளை உருவாக்கி அளித்தார்.

பின்னர் 2009இல், தேசிய படைப்பாற்றல் குழுவின் (National Innovation Council) தலைவராகவும், பிரதமரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். 1980-களில், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியபோது, அது மேலும் வளரத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. முக்கியமாக, தொழில்நுட்பத்தில் மிகவும் பின் தங்கிய நாடாக இருந்தது. அந்தக் காலத்தில் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டு, தாயகம் திரும்பி வந்து, இந்தியத் தொழில்நுட்ப வல்லுனர்களை ஒன்றிணைத்து, உலகின் முன்னேறிய தொழில்நுட்ப இயந்திரங்களை இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்க முடியும், என்னும் தன்னம்பிக்கையை இந்தியச் சமூகத்தில் விதைத்தார். 

ஒரிசாவில் சிறு கிராமத்தில் பிறந்தவர் பிட்ரோடா. தன் முயற்சியால் படித்து, பெரும் தொழில்நுட்பவியலராகப் பெரும் பதவிகளை, மிக இளம் வயதில் அடைந்தவர். தன் வாழ்க்கை மேம்பாட்டை மட்டும் முன்னெடுத்திருந்தால், அவர் இன்று அமெரிக்க நாட்டின் மிகப் பெரும் நிறுவனத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்திருக்க முடியும். ஆனால், தன் திறனும், செல்வமும் இந்தியாவின், சாதாரண மனிதரின் மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்னும் எண்ணமே, இந்தியாவுக்குத் திரும்பி, தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை இதற்காகச் செலவிட வைத்தது. நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்பை இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து இந்தியாவிலேயே உருவாக்கும் முனைப்பை அவருக்கு அளித்தது.

பிட்ரோடா உருவாக்கிய நவீனத் தொழில்நுட்பம், துறை மேம்பாட்டோடு நின்றுவிடாமல், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. தொழில்நுட்ப இயக்கங்களானவை தொழில்நுட்பத் தற்சார்பை மேம்படுத்தி, இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தின. ஒட்டுமொத்த சமூக, பொருளாதாரச் செயல்திறனை அதிகரிக்க அவை உதவின. தொழில்நுட்பம் என்பது மனிதரை அந்நியப்படுத்துவதாக இல்லாமல், அவர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்பதே காந்தியின் கொள்கை. அப்படியான திட்டங்களை வடிவமைத்து, வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிட்ரோடாவின் செயல்கள் வழி நவீன உலகுக்கான காந்தியம் வெளிப்படுவதாகவே நான் காண்கிறேன்.

(காலவெளியில் காந்தி - மாதம் ஓர் ஆளுமையை அடையாளம் காண்போம்)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

2





பின்னூட்டம் (11)

Login / Create an account to add a comment / reply.

R SETHU    10 months ago

மிக அருமையான கட்டுரை. இந்தியாவின் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு திரு.சாம் பிட்ராடோ அவர்கள் அடிப்படைக் காரணம் எனத்தெரிந்திருந்த போதிலும், அவர் பட்ட இன்னல்களையும், அவரது விடா முயற்சியினையும், தாய்நாட்டின் மேல் அவருக்கிருந்த அளப்பரிய பிடிமானத்தையும் தெளிவாக அறிந்து கொள்ள வாய்ப்பளித்த கட்டுரை. வாழ்த்துகள் பல🙏

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

India's social and political and economic complexity is the biggest hurdle in its path to development. The story of Sam Pitroda is the standing example to it. But for his steadfastness and love for the country, the miracle that happened through his innovative schemes would not have been possible. Arunchol deserves appreciation for choosing to write about Sam Pitroda, whose contribution to the development of India is immense. Any one who is going to write about India's development, during and post Rajiv Gandhi period would not forget Sam Pitroda.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Bhuvana Gopalan   3 years ago

மிகச்சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள் சார்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

MaalvadiwOn   3 years ago

திறமையும் ஆளுமையும் இல்லாத இயக்கமாக காங்கிரஸ் மக்கள் மத்தியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவரைப் போன்றோர் இயக்கத்தில் முதன்மைப் படுத்தப்பட்டால் ஒரு புதிய மாற்றம் உண்டாகும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Arunachalam Vetrivel   3 years ago

அட்டகாசம். இது மாதிரியான துறை சார்ந்த கட்டுரைகள் எழுதுவதில் தமிழர்களிடையே ஒரு பெரும் வெற்றிடம் இருக்கு. அதை உங்களைப் போன்றவர்கள் நிரப்ப வேண்டும். உங்களுக்கும் ஆசிரியர் சமஸ் ஸூக்கும் அன்பும் நன்றிகளும்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

B Jaikumar   3 years ago

Excellent

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Vasudevan S   3 years ago

அருமை....

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Karthik   3 years ago

தொடருங்கள் நன்றி..

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ravichandran Somu   3 years ago

http://vssravi.blogspot.com/search/label/தலைவர்?m=0

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Ravichandran Somu   3 years ago

Very good article. Dr.Sam Pitroda is my guru… I wrote an article about him in my blog in 2010. Here’s the link - http://vssravi.blogspot.com/search/label/தலைவர்?m=0

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

S.Sivaprakasam   3 years ago

ஆஹா இவர் போன்ற உத்தம காந்தி சீடர்களை இதுவரை தெரியாமல் போய்விட்டதே என்பதுதான் எனது வருத்தம் தொடரட்டும் இவர் போன்ற காந்தி யர்களின் அறிமுகம் இது இன்றைய இளைய தலைமுறைக்கும் ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை அரு ஞ் சொல்லின் ஆசிரியருக்கும் மிக்க நன்றி

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

ஏபிபி - சி வோட்டர்சிமாந்திக் தோவேரா கட்டுரைநான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டிஆறுகள்சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (யுஏபிஏ)மனித சமூகம்சீனியர் வக்கீல்குழந்தைத் திருமணம்செல்வாக்குஜாம்பியாவும் கென்னெத் கவுண்டரும்!பாலசுப்ரமணியன்பொருளாதாரம் இன்னும் இடர்களிலிருந்து மீளவில்லைகிழக்கும் மேற்கும்பேக் பிளேகாங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைமாபெரும் கார்ப்பரேட் மோசடிதுள்ளோட்டம்ஊழல் தடுப்புச் சட்டம்மிஸோக்கள்சோழர் இன்றுடாட்டா குழும நிறுவனங்கள்யாதும் ஊரேதி கேரளா ஸ்டோரிகல்லணைநிகழ்நேரப் பதிவுகள்ஜொஹாரி பஜார்முதல் பதிப்புகள்ராகேஷ் பாண்டேபிரெஞ்சு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!