கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு
ஆளுநரைப் பதவியிலிருந்து விரட்ட முடியும், எப்படி?
இந்தியக் காவல் துறைப் பணி அதிகாரியாகவும் நாகாலாந்து மாநில துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல விஷயங்களில் தனித்துவமானவராக விளங்குகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறார். பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.
அரசமைப்புச் சட்டக்கூறு 200இன்படி பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ‘எவ்வளவு விரைவாக முடியுமோ - அவ்வளவு விரைவாக’ அவற்றுக்கு ஒப்புதல் தர வேண்டும், அல்லது மசோதாவை மீண்டும் பரிசீலிக்குமாறு பேரவைக்கு கோரிக்கை விடுத்து அவற்றைத் திருப்பி அனுப்ப வேண்டும். ‘ஆன்-லைன் ரம்மி’ என்று அழைக்கப்படும் இணையதள வசதி மூலமான சீட்டாட்ட சூதாட்டத்தால் பல ஆயிரம் ரூபாய்களை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்ததாலும் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்ததாலும் தமிழ்நாட்டில் அதைத் தடைசெய்ய அவசரச் சட்டத்தை மாநில அரசு பிறப்பித்தது.
பிறகு அதே அவசரச் சட்டம் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது எந்த முடிவையும் எடுக்காமல் நான்கு மாதங்கள் வரையில் இருந்துவிட்டு பிறகு அதன் மீது சில சந்தேகங்களை எழுப்பி விளக்கம் கேட்டு பேரவைக்கு அனுப்பினார். சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு ‘தலையீட்டு உரிமை’ இருக்கிறதா என்றும் அந்தக் குறிப்பில் கேட்டிருந்தார்.
சட்டப்பேரவையால் முடியாதா?
ஆளுநருடைய எதிர்ப்புகளைப் புறந்தள்ளிய தமிழ்நாடு சட்டப்பேரவை, மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி அவருடைய ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. பேரவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
ஆனால், இதுவரை அதற்கும் அவர் ஒப்புதல் தந்ததாகத் தகவல் இல்லை, எனவே அவருடைய போக்கு குறித்தும் மாநிலத்துக்கு ஆளுநர் என்ற பதவி தேவையா என்பது குறித்தும் பொதுவெளியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்குமாறு தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது, அதுவும் நிலுவையில் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக நடக்கும் ஆளுநர் மீது கடமை தவறியதாக குற்றஞ்சாட்டி அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க மாநில சட்டப்பேரவையால் முடியாதா? குடியரசுத் தலைவரை அவ்வாறு பதவி நீக்கம் செய்ய அரசமைப்புச் சட்டத்தின் 61வது கூறு வழி செய்கிறது, ஆனால் மாநில ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய அப்படி ஒரு சட்டக்கூறு இல்லை. மாநில ஆளுநரை ஒன்றிய அரசுதான் நியமிக்கிறது, குடியரசுத் தலைவர் அனுமதிக்கும் வரை அவரால் அந்தப் பதவியில் நீடிக்க முடியும். அப்படியென்றால் ஒன்றிய அரசுக்கு ஆளுநரின் செயல்கள் திருப்தியைத் தராவிட்டால், அவரை ஐந்தாண்டு காலத்துக்கு நியமித்திருந்தாலும், அடுத்த விநாடியே பதவியிலிருந்து அகற்றிவிட முடியும்.
ஆளுநரையும் பதவியிலிருந்து நீக்குவதற்கு சட்டத்தில் வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசமைப்புச் சட்ட உருவாக்கப் பேரவையிலும் வந்தது. தனக்கு எதிரான சூழலை ஏற்படுத்தி எவரேனும் புகார் செய்தால், எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பதவியிலிருந்து நீக்க ஒன்றிய அரசால் முடியும் என்ற நிலை ஏற்பட்டால் சுயமரியாதை உள்ளவர்கள், தகுதி வாய்ந்தவர்கள் அந்தப் பதவியை ஏற்க முன்வரமாட்டார்கள் என்று கூறி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
1967க்குப் பிறகு...
ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் ஒரே அரசியல் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தவரை இந்த ஆளுநர் பதவி தொடர்பான ஏற்பாடுகள் சரியாகத்தான் இருந்தன. ஆனால், 1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எட்டு மாநிலங்களில் பதவியை இழந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அந்தக் கணத்திலிருந்து ஒன்றிய அரசுக்கும் எதிர்க்கட்சிகளால் ஆளப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே உரசல்கள் வெளிப்படத் தொடங்கின.
அவ்வப்போது நீதிமன்றங்கள் தங்கள் பார்வைக்கு வந்த விஷயங்களில் தலையிட்டு, ஆளுநர் தானாகவே முடிவெடுக்கலாம் என்றாலும் மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது என்று அறிவுரைகள் வழங்கின. ஒரு மாநிலத்தில் அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவுசெய்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சி அவசியம் என்பதற்கான தகவல்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றங்கள் பரிசீலிக்க அனுமதித்து, ஒரு வரையறைக்குள் நீதித் துறை ஆய்வுசெய்யவும் வழிகள் செய்யப்பட்டன.
நிலைமை இன்று வெகுவாக மாறிவிட்டது; பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் அந்தந்த மாநில ஆளுநர்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் மரபுக்கு மாறான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர், அத்துடன் மாநில பல்கலைக்கழக நிர்வாகத்திலும் மரபை மீறிச் செயல்படுகின்றனர்.
மாநில ஆளுநர் என்பவர் தேவைப்படும் பட்சத்தில் மாநில அமைச்சரவைக்கு ‘ஆலோசனைகளை வழங்கலாமே’ தவிர அவரே ‘நடுவர்’ போல செயல்படக் கூடாது. ஆளுநர்களின் இத்தகைய வரம்பு மீறிய செயல்கள் குறித்து எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகள் புகார் செய்தால் - அதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்தினால், ஆளுநரை அந்தப் பதவியிலிருந்து மாநில அரசால் நீக்க முடியாது என்ற நிலையே நிலவுகிறது; இதனால் ஆளுநரின் செயலை எதிர்த்து ஊர்வலம் போவதும், கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்துவதும்தான் ஒரே மாற்று வழி. இப்படிப்பட்ட போக்கு மாநில அரசுகள் சுமுகமாகச் செயல்பட ஒருபோதும் உதவாது.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு உண்டா?
20 Oct 2022
உறுதிமொழி மீறல்
மாநில அரசுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றவோ அல்லது பதவியிலிருந்து அகற்றவோ ஒன்றிய அரசு ஒத்துழைக்காவிட்டால் மாநில அரசுகளுக்கு வேறு வழியே இல்லையா?
ஆளுநர் ரவியே நாகாலாந்திலிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தவர்தான்; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவோ அல்லது அதில் நம்பிக்கை இல்லாமலோ ஆளுநர் செயல்பட்டால் நீதிமன்ற உதவியுடன் அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியாதா? ஆளுநராகப் பதவி ஏற்கும் முன்னதாக அரசமைப்புச் சட்டத்தின் 159வது கூறில் கூறியிருக்கிறபடி பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டும், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். “அரசமைப்புச் சட்டத்தையும் இயற்றப்பட்ட இதர சட்டங்களையும் எனது ஆற்றலுக்கு உட்பட்டவரை பாதுகாப்பேன், பின்பற்றி நடப்பேன், கட்டிக்காப்பேன்” என்று உறுதியளித்துதான் பதவியேற்க வேண்டும்.
இந்த உறுதிமொழியை மீறி ஆளுநர் நடந்தால், நீதிமன்றங்களால் ஏதும் செய்ய முடியாது என்றில்லை.
அரசமைப்புச் சட்ட நியதிகளுக்கு ஏற்ப ஆளுநர் நடக்காவிட்டாலோ அல்லது அரசமைப்புச் சட்டத்தையே கேள்வி கேட்டாலோ, நீதிமன்றங்கள் தலையிட்டு அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்ற முடியும், அல்லது குறைந்தபட்சம் ஒன்றிய அரசை அழைத்து ‘அவர் மீது நடவடிக்கை எடுங்கள்' என்றாவது கூற முடியும். ஆளுநர் தனது பதவிக் காலத்தில் தனக்கிட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தும் அதிகாரம் குறித்து நீதிமன்றத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அல்ல என்று அரசமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவு கூறுகிறது; ஆனால், இந்தச் சட்டத்தின் இரண்டாவது உட்பிரிவு, ‘மாநில அரசுக்கு எதிராக யாராவது தொடரும் வழக்குக்கு இது பொருந்தாது’ என்றும் தெளிவாகக் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்திலேயே ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்த சட்டப் பாதுகாப்பு அவருக்குப் பொருந்தாது, காரணம் அரசமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக நடப்பேன் என்று பதவிப் பிரமாணம் செய்து பதவியை ஏற்றுக்கொண்டுவிட்டு, அதை மீறி நடப்பதால் அவரது பதவியேற்பே அர்த்தமில்லாததாகிவிடுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளைக் குறிப்பிட்டு - அதைத் தவிர மற்றவற்றுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று கூறிக்கூட சிலர் பதவியேற்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
முடிவுக்கு வரட்டும் ஆளுநரி(யி)ன் அநாகரீகச் செயல்பாடுகள்
11 Jan 2023
ஜார்ஜ் பெர்னாண்டஸ் வழக்கு
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலை காலத்தில், டைனமைட் வைத்து நாசவேலை செய்ய முயன்றதாக சோஷலிஸ்ட் தலைவரும் தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது பரோடா சதி வழக்கு தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு பிஹாரின் முசாபர்பூர் மக்களவைத் தொகுதியில் பிறகு வென்றார்.
இந்திரா காந்தி பதவிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்தத் திருத்தம் விரிவாக இருந்தது.
மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பெர்னாண்டஸ், ‘42வது திருத்தச் சட்டம் நீங்கலாக ஏனையவற்றுக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்று கூறினார். பிறகு அவரே மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில் தொழில் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
பதவிப் பிரமாணத்தின்போது வழக்கமான வாசகங்களைத் தவிர்த்தோ, புதிதாக எதையேனும் சேர்த்தோ பதவியேற்பது செல்லாது என்று கூறி, பெர்னாண்டஸுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக பெர்னாண்டஸ் பதவியேற்றபோது கூறியவற்றுக்கு ஆதாரம் தருமாறு அனைத்திந்திய வானொலிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஒலிப்பதிவில் பெர்னாண்டஸ் கூறியது சரியாகப் பதிவாகவில்லை என்பதால் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தெரிவிப்பது என்னவென்றால், அரசமைப்புச் சட்டப்படி பதவியேற்கும் ஒருவர் அரசமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும், அதில் உள்ள எந்தவொரு பகுதியையோ பின்னாளில் திருத்தி சேர்க்கப்பட்ட பகுதியையோ விட்டுவிட்டு நடக்கக் கூடாது.
கேசவானந்த பாரதி வழக்கு
கேசவானந்த பாரதி வழக்கில் (1973), ‘அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 42வது திருத்தத்தின் கீழ் ‘சமத்துவம்’ (சோஷலிசம்), ‘மதச்சார்பின்மை’ ஆகிய கொள்கைகள் சேர்க்கப்பட்டன. எல்லா அரசியல் கட்சிகளுமே இவ்விரு கொள்கைகளிலும் முழு நம்பிக்கை இருப்பதாக தங்களுடைய கட்சியின் அமைப்பு விதிகளில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950’ திருத்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு, ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையே வேம்பாகக் கசப்பது போலத் தெரிகிறது. போகும் இடமெல்லாம் இதைப் பற்றிப் பேசும்போது அரசமைச்சட்ட முகப்புரையில் இதைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்பதுடன், இதற்கு என்ன பொருள் என்று அரசமைப்புச் சட்டத்தில் விளக்கம் இல்லை என்றும் கூறுகிறார்.
அரசமைப்புச் சட்டக்கூறு 366இல் சில வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்ததைத் தவிர, அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள எல்லா வார்த்தைகளுக்கும் பொருள் கூற அது முயற்சிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதல்ல, நீதிபதிகள் அதற்கு விளக்கம் தரும்போது என்ன கூறுகிறார்கள் என்பதே அதற்குப் பொருள் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் (1994) ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தெரிவிப்பது:
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பின் முக்கியத்துவம்
27 Apr 2023
“அரசு தனிநபர் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது, அவருடைய நம்பிக்கையும் மதமும் எப்படிப்பட்டவையாக இருந்தபோதிலும் - மத சுதந்திரத்தையும் வழங்குகிறது, அரசு எந்த ஒரு மதத்தையும் ஊக்குவிக்காது, எந்த ஒரு முதமும் இன்னொரு மதத்துக்கு எதிராகச் செயல்படுவதை விரும்பாது. ஜனநாயகப்பூர்வமாக அரசு வெற்றிகரமாகச் செயல்பட மதச்சார்பற்ற அரசு என்ற கருத்தாக்கம் மிகவும் அவசியமானது. மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகள் செயல்பட அனுமதித்து, வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் ஒருவர் இன்னொருவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்த அனுமதித்தால், ஜனநாயகம் இருக்காது. மதச்சார்பற்ற அரசு அத்தகைய போக்குகளுக்கு முடிவுகட்டி சமூகத்தில் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். ஆக்கப்பூர்வமான கண்ணோட்டப்படி மதம் என்பது மனிதன் தன்னை முழுமையாக வளர்ச்சி பெற அனுமதிக்க வேண்டும், உலகாயதமாகவும் உடல்ரீதியாகவும் மட்டுமல்ல – உலகாயதமற்ற வகையிலும் மதச்சார்பின்மை அற்ற வாழ்க்கையிலும்கூட.”
இப்படிப்பட்ட விளக்கங்களுக்குப் பிறகும்கூட மதச்சார்பின்மை என்றால் என்ன என்று அரசமைப்புச் சட்டத்தில் விளக்கப்படவில்லை என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வருவாரானால், அரசமைப்புச் சட்டத்தை ஏற்க அவர் தொடர்ந்து மறுக்கிறார் என்றும் அவர் ஏற்ற பதவிப் பிரமாணத்தின்படி நடக்கத் தவறுகிறார் என்றும்தான் பொருள். அப்படிப்பட்ட தருணத்தில், ஆளுநர் பதவியிலிருந்து அவரை நீக்குங்கள் என்று அரசமைப்புச் சட்டப்படியான எந்த நீதிமன்றத்தையும் எவரும் நாட முடியும் - ஆளுநரைப் பதவியிலிருந்து நீக்க சட்டத்தில் எந்த வழியும் சொல்லப்படவில்லை என்றாலும்!
தொடர்புடைய கட்டுரைகள்
ரவி – ஸ்டாலின்: இருவரைத் தாண்டி சிந்திப்போம்
ஆளுநர் ரவியின் பேச்சு சரியா?
ஆளுநர் பதவி ஒழிப்பிலிருந்து அரசமைப்புச் சீர்திருத்தம் ஆரம்பிக்கட்டும்
முடிவுக்கு வரட்டும் ஆளுநரி(யி)ன் அநாகரீகச் செயல்பாடுகள்
ஆளுநர் இஷ்டப்படி தாமதிக்க அனுமதிக்கிறதா அரசமைப்பு?
தமிழக ஆளுநரின் அதிகார மீறல்
அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு உண்டா?
கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பின் முக்கியத்துவம்
3
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 1 year ago
மோடி court ல் நீதி எதிர் பார்க்க முடியாது ஐயா.. எல்லாம் அவர் கட்டுபாட்டில்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.