கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

உத்தர பிரதேசம் எப்படி பிமாரு ஆனது?

இந்திரஜித் ராய்
10 Mar 2022, 5:00 am
0

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கேரளம், மேற்கு வங்கம், ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றை விமர்சித்திருந்தார். இதற்கு அரசியல் விமர்சகர்களிடமிருந்தும், பொருளாதார நோக்கர்களிடமிருந்தும் சரியான பதிலடி கிடைத்தது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யை யோகி ஆள்கிறார். அந்த மாநிலத்திலிருந்து வேறுபட்ட சூழலையும் பின்னணிகளையும் கொண்ட பிற மாநிலங்களோடு தேவையற்ற ஒப்பீடு செய்வதற்குப் பதிலாகத் தனது சொந்த மாநிலத்தின் வரலாற்றுரீதியிலான, வளர்ச்சிரீதியிலான பாதையைப் பற்றி அறிந்திருந்தார் என்றால் இந்த சங்கடத்தைத் தவிர்த்திருக்கலாம்.    

சமூக அளவிலான வளர்ச்சியைப் பொறுத்தவரை, ஏனைய பிமாரு மாநிலங்களைவிட மேம்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக உத்தர பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆகவே, பிற மாநிலங்களின் மீது வெறுப்பை உமிழ்வதைவிட சமீப ஆண்டுகளாகத் தனது மாநிலத்தின் மேம்பட்டுவரும் சமூக அளவிலான வளர்ச்சிக் குறியீடுகள் குறித்துப் பெருமிதத்தையும் உத்வேகத்தையும் ஆதித்யநாத் வெளிப்படுத்தி இருக்கலாம். 

பின்புலம்

உத்தர பிரதேசம் 1902இல் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த ஆக்ரா, அவத் மாகாணங்களாக உருவாக்கப்பட்டது. வட இந்தியாவின் சிந்து-கங்கைச் சமவெளிப் பிரதேசத்தில் பரந்துவிரிந்திருக்கும் உத்தர பிரதேசம் காங்கிரஸ் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தின் கேந்திரமாக உருவெடுத்தது. இந்தியா சுதந்திரத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள் தேசிய அரசியலில் தங்களுக்கு உரிய வாய்ப்பை உணர்ந்தார்கள். வங்கப் பிரிவினைக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவில் உத்தர பிரதேசம் மிகப் பெரிய மாகாணமாக உருவெடுத்தது. அந்த மாநிலத் தலைவர்கள் நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக மாநிலத்துக்குள் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது.    

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசியல் ஸ்திரமின்மை உத்தர பிரதேசத்தைச் சீர்குலைத்துவந்தது. 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் எந்த முதல்வரும் அந்த மாநிலத்தில் தங்கள் முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவுசெய்யவில்லை. 1967-க்குப் பிறகு அந்த மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்துக்குப் பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட நிலையில், யாருமே தங்கள் ஆட்சிக் காலத்தை முழுவதுமாக நிறைவுசெய்யாத சூழலில் அரசியல் ஸ்திரமின்மை மேலும் மோசமானது. 2012இல் மாயாவதிதான் உ.பி.யை தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆண்ட முதல்வர் என்ற பெயரைப் பெற்றார்.  

உ.பி.யில் மேல்தட்டு ஜனநாயகம் (1947-2007)

சுதந்திரத்துக்குப் பிறகு முதல் இரண்டு தசாப்தங்கள், நாடு தழுவிய போக்கைப் பிரதிபலிக்கும் வகையில், காங்கிரஸ்தான் உ.பி. அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. அதன் தலைமை முழுவதும் கிட்டத்தட்ட ‘உயர் சாதி’யினரின் கைகளில்தான் இருந்தது. மேலும், காங்கிரஸ் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தக் கட்சியின் தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்களே தவிர தங்கள் சொந்த மாநில மக்களைப் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் அக்கட்சியின் முதல்வர்கள் யாராலும் தங்கள் ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்ய முடியவில்லை. உ.பி. சட்டமன்றத்தில் ‘உயர் சாதி’யினரின் ஆதிக்கமும், மாநில அமைச்சரவையானது கட்சியின் தேசியத் தலைமைக்கே கட்டுப்பட்டிருந்ததும் அந்த மாநிலத்தின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணமாயின. 

உத்தர பிரதேசத்தில் 1967இல் தொடங்கிய அரசியல் ஸ்திரமின்மை வெகுகாலம் நீடித்தது. 1967இல் காங்கிரஸ் ஆட்சியதிகாரத்தை இழந்தது. விவசாயிகள் தலைவர் சரண் சிங்கின் தலைமையிலான பாரதிய லோக் தளம் ஆட்சியமைத்துக் குறுகிய காலத்துக்கு அதிகாரத்தில் இருந்தது. உ.பி.யின் முந்தைய மேல்தட்டு ‘உயர் சாதி’ முதல்வர்களைப்  போலல்லாமல் அந்த வட்டத்துக்கு வெளியிலிருந்து வந்த முதல் முதல்வர் சரண் சிங்தான். எனினும், அவரது அரசு கொஞ்ச காலமே நீடித்தது. காங்கிரஸ் மறுபடியும் ஆட்சியமைத்தது.

அடுத்த இரண்டு தசாப்தங்கள் ஆட்சி அதிகாரம் காங்கிரஸுக்கும் அதன் போட்டிக் கட்சிகளுக்கும் இடையில் ஊசலாடியது. மாநிலத்தின் வெவ்வேறு சமூகங்கள் முன்பைவிட அதிக அளவில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக மாநிலத்துக்குள் குறிப்பிடத்தக்க முதலீடுகள் ஏதும் வராமல் போயின.   

அதேபோல் 1989ஆம் ஆண்டுவரை உத்தர பிரதேச அரசியலில் ‘உயர் சாதி’யினரின் ஆதிக்கம் அசைக்கப்பட முடியாத ஒன்றாக இருந்தது. 1947 முதல் 1989 வரையிலான 12 முதல்வர்களில் 10 பேர் ‘உயர் சாதியினர்’. அவர்கள் அனைவரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். மேல்தட்டுச் சமூகத்துக்கு வெளியிலிருந்து வந்த இரண்டு முதல்வர்களும் காங்கிரஸின் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

உ.பி. அரசியலின் மேல்தட்டுச் சமூகத் தளம் 1989இல் தகர்க்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக ஜனதா தளம் உருவெடுத்தது. முலாயம் சிங் யாதவ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முலாயமின் துணிச்சல் மிக்க, இன்னும் சொல்லப்போனால் அரசியல்ரீதியில் அவருக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய, முடிவுகளுள் ஒன்று அயோத்தியில் இருந்த மசூதிக்கு ஆதரவாக இருப்பது என்பது. அக்டோபர் 1990இல், அப்போது வளர்ந்துகொண்டிருந்த பாஜகவின் தலைமையில் இந்து பக்தர்கள், இவர்களில் பெரும்பாலானோர் ‘உயர் சாதியினர்’, நீதிமன்ற ஆணைகளைப் புறந்தள்ளிவிட்டு, மசூதி இருந்த இடத்தில் திரண்டனர். அதனை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்போகிறோம் என்று அச்சுறுத்தினர்.       

சட்ட விரோதமாக அங்கே கூடியிருந்த பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு, சட்டத்தை முலாயம் நிலைநாட்டினார். அந்த மாநிலத்தில் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த முஸ்லீம் சமூகத்தின் ஆதரவை அவருடைய நடவடிக்கைகள் அவருக்குப் பெற்றுத்தந்தன. அவருடைய யாதவ் சமூகத்தின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அன்றிலிருந்து அந்த மாநிலத்தின் ‘உயர் சாதி’யினர் மத்தியில் அவர் அந்நியப்பட்டுப்போனார்.

சாதி அடுக்கில் கீழ் நிலையில் வைத்துப் பார்க்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்தவர் முலாயம். சான்றிதழ்களைப் பொறுத்தவரை இந்தச் சமூகம் ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ (ஓபிசி) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. முலாயம் தனது ஓபிசி அடையாளத்தை முழுவதுமாக வரித்துக்கொண்டு வெளிப்படையாக அந்தச் சமூகத்தினரின் நலன்களுக்கான ஒரு அரசியலையும் வரித்துக்கொண்டார். இந்தியா முழுவதும் ஓபிசி வகுப்பினருக்கான சமூகநீதி பலன்கள் கிடைப்பதற்குத் தன்னுடைய ஆதரவை முலாயம் தந்தார். இதனால், நாடு தழுவிய அளவில் முக்கியமான ஓபிசி தலைவராக உருவெடுத்தார். உ.பி.யை ஆண்ட முதல்வர்கள் பட்டியலில் முலாயமின் வருகை சமூகப் பன்மைத்துவம் கொண்டதாக ஆக்கியது.       

அவர் 1993இல் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இந்தக் கட்சியானது அந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதியினரின் நலன்களுக்காக நடைபெற்ற சாதி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து உருவான கட்சி. அந்தக் கூட்டணி குறுகிய காலமே நீடித்தாலும் இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தேர்தல் வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தன. 1995இல் மாயாவதி முதல்வராகவும் ஆனார். இதனால், தலித் சமூகத்திலிருந்து வந்த முதல் உ.பி. முதல்வர் என்ற பெயரை மாயாவதி பெற்றார்.  

எனினும், அரசியல் ஸ்திரமின்மை அந்த மாநிலத்தைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது. ஆட்சி அதிகாரமானது சமாஜ்வாதி கட்சி, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் சுழன்றுக்கொண்டிருந்தது. எந்தக் கட்சியும் தங்கள் முழு ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்யவில்லை. 2007இல் பகுஜன் சமாஜ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மாயாவதி ஆட்சியமைத்து 5 ஆண்டுகள் ஆண்டபோதுதான் இந்த ஸ்திரமின்மை முதலில் உடைக்கப்பட்டது. 

புதிய பாதைக் கூட்டணிகள் (2007-17) 

உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றதற்கு சமூகரீதியில் அரவணைத்துப்போகும் கூட்டணிதான் காரணமாகக் கூறப்பட்டுவருகிறது. அதன் போட்டிக் கட்சிகளைப் போலல்லாமல் தலித்துகள், ‘உயர் சாதியினர்’, முஸ்லீம்கள் போன்றோரை உள்ளடக்கிய பல வண்ணக் கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சி உருவாக்க முயன்றது. முலாயம் சிங் யாதவின் தீவிர ஆதரவாளர்களான யாதவ் சமூகத்தினர் நீங்கலாக ஏனைய பிற்படுத்தப்பட்ட சமூகங்களைப் பெரிய அளவில் உள்ளடக்க பகுஜன் சமாஜ் கட்சி முயன்றது. பகுஜன் சமாஜ் கட்சியால் அமைக்கப்பட்ட பல வண்ணக் கூட்டணியானது இந்தியா சுதந்திரமடைந்த முதல் பத்தாண்டுகளில், காங்கிரஸுக்கு ஆதரவுத் தளமாக அமைந்த வெவ்வேறு சமூகங்களின் கூட்டணியைப் பிரதிபலித்தது.  

எனினும், இதில் இரண்டு முக்கிய வேறுபாடுகளை நாம் காணலாம். காங்கிரஸின் மாநிலத் தலைமையானது அக்கட்சியின் தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட்டது. மாயாவதி அப்படியல்ல, அவரே அக்கட்சியின் தேசியத் தலைவர். அவர் தனது வாக்காளர்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். இரண்டாவதாக, காங்கிரஸின் முதல்வர்களெல்லாம் ‘உயர்சாதி’யினர் என்றால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரோ தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தலித் மக்கள், ஏனைய விளிம்புநிலைச் சமூகங்களின் நலனுக்காகப் பாடுபடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி, பிற சமூகத்தினரின் ஆதரவின்றித் தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்பதையும் உணர்ந்தது.

இப்படி அனைத்துச் சமூகங்களையும் அரவணைத்துப்போகும் அதன் நோக்கத்தை ‘சர்வஜன் ஹிதாய், சர்வஜன் சுகாய்’ என்ற தாரக மந்திரத்தின் மூலம் உணரலாம். ‘எல்லோரும் பலனடையட்டும், எல்லோரும் வளம் பெறட்டும்’ என்பது இதன் பொருள்.      

வளர்ச்சி என்பதை பகுஜன் சமாஜ் கட்சி வெகு தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கியது. நகர்ப்புற ஏழைகளுக்காக ஒரு வீட்டுவசதித் திட்டத்தை மாயாவதி அறிமுகப்படுத்தி, செயல்படுத்தியும் காண்பித்தார். ஒரு லட்சம் வீடுகள் வாக்குறுதி அளிக்கப்பட்டதில், முதல்வராக மாயாவதியின் ஆட்சிக் காலம் 2012இல் முடிவடைந்தபோது 90 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. தலித் மக்கள் அதிக அளவில் இருக்கும் கிராமங்களில் குடிநீர், மின்சாரம், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதருவதற்காக ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமொன்றையும் அவர் தொடங்கினார்.  

மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 25 ஆயிரம் கிராமங்கள் இதனால் வளர்ச்சி பெற்றன. மாயாவதியைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட முந்தைய ஆட்சிகளோடு ஒப்பிடும்போது மாயாவதியின் ஆட்சியில் கொஞ்சம் வளர்ச்சி இருந்தது என்று ஒப்புக்கொள்வார்கள்.

விவசாய நிலங்கள் போன்ற சொத்துகளை தலித் மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையிலான அடிப்படை சீர்திருத்தங்களை பகுஜன் சமாஜ் கட்சியால் செய்ய முடியாமல் போனாலும் அதன் வளர்ச்சித் திட்டங்கள் அதுவரை பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருந்த சமூகங்களிடம் சென்றுசேரவே செய்தன. பக்கத்தில் உள்ள பிஹார் மாநிலத்தைப் போலவே, உ.பி.யில் உள்ள பெண்கள் பள்ளிக்குச் செல்லவும் பிற இடங்களுக்குச் செல்லவும் உதவும் வகையில் விலையில்லாத 10 லட்சம் சைக்கிள்களை மாயாவதி வழங்கினார். எனினும், அவர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை ஊழல் குற்றச்சாட்டுகள் திரைபோட்டு மறைத்துவிடவே, 2012 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 

அடுத்து சமாஜ்வாதி கட்சி, முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்தது. சமூகங்களின் அடிப்படையில் கூட்டணி அமைப்பதில் பகுஜன் சமாஜ் அடைந்த வெற்றியை சமாஜ்வாதி கட்சியும் நகலெடுத்துக்கொண்டது. யாதவ்-முஸ்லீம்களின் வலுவான கூட்டணியை அது அமைத்தது, அந்தக் கூட்டணிதான் அந்தக் கட்சியின் சித்தாந்தத்துக்கு அடிப்படையாக இருக்கிறது, கூடவே ‘உயர் சாதி’யினரின் ஆதரவையும் பெற்றது. அகிலேஷின் ஆட்சிக் காலத்தில்தான் உ.பி. சட்டமன்றத்தில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுதந்திரம் அடைந்ததிலிருந்து முந்தைய ஆட்சிக் காலம் வரை இருந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் இருந்தது. கிட்டத்தட்ட மாநிலத்தின் முஸ்லீம் மக்கள்தொகையைப் பிரதிபலிக்கும் விதத்தில் அது இருந்தது.     

எனினும் மாயாவதி அறிமுகப்படுத்திய பல திட்டங்களை அகிலேஷ் ஒதுக்கித்தள்ளினார். அதே நேரத்தில் வீட்டுவசதி மானியங்கள், ஓய்வூதியம், வேலை கிடைக்காதோருக்கு உதவித்தொகை போன்ற பல்வேறு சமூக நலத்திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.  

மேலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பைத் தாண்டிய 15 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அகிலேஷ் வழங்கினார். ஆனால், முதல்வர் பொறுப்பில் அகிலேஷ் யாதவின் உச்சபட்ச சாதனையாக அந்த மாநிலத்திலிருந்து போலியோவை ஒழித்துக்கட்டியதைக் கூறலாம். 2013 அளவில் ஒரு குழந்தைக்குக்கூட போலியோ தொற்று ஏற்படவில்லை, உலகளாவிய சுகாதார மேம்பாட்டில் இது முக்கியமான சாதனை. சமாஜ்வாதி கட்சி தனது சமூகக் கூட்டணியில் முஸ்லீம்களையும் உள்ளடக்கியது, போலியோ தடுப்பு மருந்து தங்களுக்கு எதிரானதாக இருக்குமோ என்ற அச்சத்திலிருந்து அந்த மக்களை விடுவிக்க உதவியது.   

அப்போது இருந்த ஒன்றிய அரசின் சமூகரீதியிலான அடித்தளமானது கடந்த கால காங்கிரஸ் அரசுகளைவிட மிகுந்த பன்மைத்துவம் கொண்டதாக இருந்தது. முன்பு இருந்ததுபோன்ற பலம்வாய்ந்த சக்தியாக அது இல்லை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அமைக்க அது பல கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டியிருந்தது. 2004 - 2009  ஆண்டுகளில் தன் அரசைத் தக்கவைத்துக்கொள்ள அதற்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. 2009இல் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்ட பிறகு அது ஆட்சியைத் தொடர்வதற்கு சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி (பிற மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்) போன்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகள் முன்வைக்கும் வளர்ச்சி சார்ந்த கோரிக்கைகளுக்கு ஐமுகூ அரசு செவிமடுத்தது.  

உ.பி.யில் மேம்பட்டுவரும் குறியீடுகள் (2007 முதல்) 

2007-க்கும் 2017-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் உ.பி.யை ஆண்ட, பல்வேறு சமூகங்களையும் உள்ளடக்கிய கூட்டணியின் விளைவாக ஏற்பட்ட சமூகநல வளர்ச்சியைத்  தெளிவாகக் காணலாம். இதன் விளைவுகளில் பலவும் மாநில அரசானது மக்களுக்குச் சேவைகளைத் திறம்பட வழங்குவதுடன் நேரடியாகத் தொடர்புடையது. இந்தப் பிரிவில் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புகள் 3-4 (என்எஃப்எச்எஸ்) ஆகியவற்றை ஒப்பிடுகிறேன்.   

என்எஃப்எச்எஸ்-3 என்பது 2005-06 ஆண்டுகளில் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டது, அதாவது உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன்பு. என்எஃப்எச்எஸ்-4 தரவுகள் 2015-2016 ஆண்டுகளில் திரட்டப்பட்டவை, அதாவது சமாஜ்வாதி கட்சி ஆட்சியை இழப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நடத்திய, பல்வேறு சமூகங்களையும் உள்ளடக்கிய அரசின் விளைவாக அந்த மாநிலத்தின் சமூக முன்னேற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை உணர்வதற்கு இந்த இரண்டு தரவுத் தொகுப்புகளும் உதவுகின்றன. 

எடுத்துக்காட்டாக, பிறப்பு பதிவுசெய்யப்பட்டிருக்கும் குழந்தைகளுள் 5 வயதுக்கும் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையானது 2005-2006 ஆண்டுகளில் வெறும் 7% என்ற அளவிலிருந்து விகிதாச்சாரப்படி 2015-16 ஆண்டுகளில் 60% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அதன் அண்டை மாநிலங்களில் பிஹார் மட்டுமே இப்படியொரு நிலையை அடைந்திருக்கிறது.   

2005-06இல் ஒட்டுமொத்தக் குழந்தைகளில் வெறும் 6.6% குழந்தைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பிறந்த நிலையிலிருந்து 2015-16-ல் 44% குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் நிலையை உ.பி. அடைந்திருந்தது. 

தடுப்பூசிகள் செலுத்தும் விகிதமும் அதிகரித்தது. இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், பிரசவத்துக்குப் பிந்தைய பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு வந்தார்கள்.

பெண்களின் கல்வி விகிதம் 61% என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பிமாரு மாநிலங்களில் சத்தீஸ்கரைத் தவிர மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட இது அதிகம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கும் பெண்களின் விகிதாச்சாரமும் அதிகரித்திருக்கிறது. இதனால் பிற பிமாரு மாநிலங்களைவிட மேலான ஒரு இடத்தை உ.பி. அடைந்திருக்கிறது.

உ.பி.யில் 2005-க்கும் 2016-க்கும் இடையில் பலவகைப்பட்ட வறுமையானது 68.8% என்ற அளவிலிருந்து 40.8% என்ற அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 28%. மாநிலம் எவ்வளவு பெரியது என்பதையும் சமூகரீதியில் அது எத்தகைய பன்மைத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்கும்போது இது உண்மையிலேயே பெரிய சாதனைதான். 

மேலும், பல்வகைப்பட்ட வறுமையின் தீவிரத்தையும் உ.பி. குறைத்துள்ளது. பிமாரு மாநிலங்களில் ஜார்க்கண்டிலும் உ.பி.யிலும்தான் பல்வகைப்பட்ட வறுமையின் தீவிரம் மிகக் குறைவாக இருக்கிறது.

யோகி உணர வேண்டியது என்ன?

தான் வெறுமனே பாஜகவின் பிரதிநிதி மட்டுமல்ல, உத்தர பிரதேசத்தின் முதல்வர் என்ற இடத்தை உணர்ந்து அன்றைக்கு  ஆதித்யநாத்  பேசியிருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது.  இரண்டு தசாப்தங்களாகத் தன் மாநிலம் அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து அவர் பெருமையாகப் பேசலாம்; கூடவே அதை சாத்தியப்படுத்திய தன் அரசியல் எதிரிகளுக்கு இதில் உள்ள பங்கை அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதன் அடித்தளமாக இருந்த மேல்தட்டு சமூகங்களின் கூட்டணி தகர்க்கப்பட்டதும், பலதரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கும் வகையில் முதலில் பகுஜன் சமாஜ் கட்சியும் அடுத்தது சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்ததும் பல தசாப்தங்களாக நிலவிய பின்தங்கிய சமூக நிலையை வெற்றிகொள்ள உதவின.   

அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியோ சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியோ குறைகளற்றவை என்றும்  சொல்லிவிட முடியாது. ஆனால், ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஒருவர் உ.பி. அடைந்திருக்கும் வளர்ச்சியில் முந்தைய அரசுகளுக்கு உள்ள பங்கை மறுப்பதும் பிற மாநிலங்களுடன் நியாயமற்ற விதத்தில் ஒப்பீடு செய்வதும் அந்த மாநிலம் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் கேலிசெய்வதே ஆகும். இன்னும் செய்ய வேண்டியது ஏராளம். அதனால், ஒன்றுமே செய்யப்படவில்லை என்று ஆகிவிடாது!

இந்திரஜித் ராய்

இந்திரஜித் ராய், யார்க் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர், உலகளாவிய வளர்ச்சி அரசியல் துறை சார்ந்து தொடர்ந்து எழுதுவருபவர்.

தமிழில்: வி.பி.சோமசுந்தரம்

3

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ராம்நாத் கோவிந்த்ஐஏஎஸ் பணிவிதிகளில் திருத்தம்பொன்னியின் செல்வன்அவசரவுதவிநாஜிக்கள்ஜாட் அருஞ்சொல்லண்டன் மேயர் பதவிமென்பொருள்ஜீவா விருதுவேளாண்மைக்கு வருபவர்களை ‘டிஸ்கரேஜ்’ செய்வேன்: பாமயஇந்தியப் பெண்கள்நேர்காணல்விக்கிப்பீடியாராஜாஜிமொழிப்பாடம்மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பதில்?மக்களவைகார்கில் போர்சுதந்திர இந்தியாபரிவர்த்தனைமார்க்ஸ் ஜிகாத்கடல்புக்கர் விருதுஅபிராமி அம்மைப் பதிகம்அழிந்துவரும் ஒட்டகங்கள்பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரைநெட்வொர்க்கிங்தான்சானியா: கல்விதலைநகரம்எஸ். அப்துல் மஜீத்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!