கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 7 நிமிட வாசிப்பு

மோசடிக்கு முடிவு கட்டுவது எப்படி?

ஹரிஹரசுதன் தங்கவேலு
17 Sep 2022, 5:00 am
2

பெங்களூருவில் வசித்துவரும் ஓய்வுபெற்ற மருத்துவர் மாதவ் (60), பணி ஓய்விற்குப் பிறகு தனது மாத வருமானத்திற்காக 2014ஆம் ஆண்டு, ஓய்வூதியக் காப்பீடு ஒன்றை எடுத்துள்ளார். வருடத்திற்கு ரூ.1 லட்சம் பிரீமியம் தொகை செலுத்தினால் மூன்று வருடங்களுக்குப் பிறகு மாதவுக்கு ரூ.6,000 மாத வருமானமாக 2032 வரை கிடைக்கும். இதற்கிடையில் ஆண்டு போனஸ் தொகையும் உண்டு. இதுதான் இக்காப்பீட்டின் முழு விபரம். 2016ஆம் ஆண்டிலிருந்து இத்தொகை பிரதி மாதம் இவருக்குச் சரியாக கிடைத்துதான் வந்திருகிறது. ஆனால், கடந்த வாரம், தனது வாழ்நாள் சேமிப்புப் பணம் ரூ.90 லட்சத்தை மோசடியாளர்களிடத்தில் பறிகொடுத்துத் தவிக்கிறார் மாதவ். 

அதே பெங்களூரு, 40 வயதாகும் மகேஷ், தனது மகளுக்காக எடுத்து வைத்திருந்த காப்பீட்டுத் தொகைக்கான போனஸ் பெறும் நேரத்தில், மோசடியாளர்களிடத்தில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்திருக்கிறார். 

பஞ்சாப் தலைநகர் சண்டிகர், 70 வயதாகும் நிர்மல் சிங்கை அவரது 'மெட்லைஃப்' மருத்துவக் காப்பீடுதான் உயிரைக் காப்பாற்றிவருகிறது. ஒவ்வொரு வருடமும் எப்பாடுபட்டாவது அதை நீட்டித்துவிடுவார். அடுத்த முறை அவரால் நீட்டிக்க முடியுமா தெரியவில்லை. காரணம், அவரது இறுதி சேமிப்பான ரூ.10 லட்சத்தை மோசடியாளர்களிடத்தில் இழந்துவிட்டார். இது எல்லாமே கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த மோசடிகள். 

என்ன நடந்தது?

காப்பீடு பெற்றவர்கள் எப்படி தங்கள் சேமிப்பை இழக்கிறார்கள். மருத்துவர் மாதவிற்குச் சில நாட்களுக்கு முன்பு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. அவருடைய காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்றும் 2032ம் ஆண்டு வரை அவருக்கு வர வேண்டிய மாதத் தொகை ரூ.6,000 மற்றும் போனஸ் தொகை ரூ.10 லட்சம் இது அனைத்தையும் சேர்த்து ரூ.30 லட்சமாக இப்போதே பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவிக்க, மகிழ்ச்சியில் உறைந்துபோகிறார் மாதவ். ஏன், எதற்காக என மாதவ் விசாரிக்க, இது ‘இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று அமைப்பு’ (IRDAI) மூலம் முதியோர்களுக்கென அறிமுகம் செய்யப்பட்ட வசதி என்று மோசடியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  

“சரி! இதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?” என மாதவ் கேட்க, இதற்காகவே காத்திருந்தவர்கள் மோசடியைக் கட்டவிழ்க்கத் துவங்கியிருக்கிறார்கள். இப்போது இருக்கும் ஓய்வூதியக் காப்பீட்டை முன்கூட்டியே முடிக்க (Pre Closure) வேண்டும். அதற்கான கட்டணமாக வரப்போகும் ரூ.30 லட்சத்தின் பத்து சதவீதமான மூன்று லட்சத்தை இப்போது செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவிக்க, அதான் ரூ.30 லட்சம் வரப்போகிறதே என்ற நம்பிக்கையில் அவர்கள் கேட்ட பணம் ரூ.3 லட்சத்தை அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியிருக்கிறார். 

அதன் பிறகு மீண்டும் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என்று தான் விட்ட தொகையைப் பெறுவதற்காக இதுவரை அவர்களிடம் ரூ.90 லட்சம் பணத்தை இழந்திருக்கிறார். அதற்கு மேலும் தருவதற்குப் பணம் இல்லாமல் ரூ.2 லட்சம் கடனாக தனது காவல் துறை நண்பரிடம் கேட்க, தான் ஏமாற்றப்பட்டதை அவர் சொன்ன பிறகே உணர்ந்திருக்கிறார் மாதவ்.  

இரண்டாவது சம்பவமான, மகேஷின் நிகழ்வில் அவரது மகளுக்காக அவர் எடுத்த காப்பீட்டின் போனஸ் நான்கு மடங்காக உயர்ந்திருப்பதாக மோசடியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எப்படி என மகேஷ் விசாரிக்க, அவரது காப்பீட்டு பிரீமியம் தொகையைப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ததால் இந்த லாபம் எனவும், டிவிடெண்ட் எனப்படும் இந்த லாபப் பங்கை அவர் உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்க, தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் மகேஷ். 

டிவிடெண்ட் தொகையைப் பெறுவதற்கான ஜிஎஸ்டி வரியை முன்கூட்டியே அரசுக்குச் செலுத்த வேண்டும் என ரூ.3 லட்சம் பணம் கேட்க, மகேஷும் அவர்களது கணக்கிற்குப் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார். வரியை உயர்த்திவிட்டார்கள், பங்குச்சந்தைக் கட்டணம் எனத் தொடர்ந்து ரூ.13 லட்சம் வரை மகேஷிடம் மோசடி செய்திருக்கிறார்கள்.

மூன்றாவாது சம்பவமான சண்டிகர் நிர்மல் சிங்கின் நிகழ்வில் அவர் உயிராக நினைக்கும் மருத்துவக் காப்பீடு இன்று முதல் வேலை செய்யாது. அதை மீண்டும் 20 வருடங்களுக்கு நீட்டிக்க உடனடியாக ரூ.10 லட்சம் செலுத்துங்கள் என மிரட்ட பதறிப்போன சிங், தனது இறுதி சேமிப்புப் பணத்தை மொத்தமாக அவர்களிடத்தில் இழந்திருக்கிறார்.  

சரி, ஏமாற்றப்பட்ட இவர்கள் மூவரும் எப்படி ஒரு செல்பேசி அழைப்பை நம்பி இத்தனை லட்சப் பணத்தை இழந்தார்கள், ஒரு துளிகூட சந்தேகம் வராதா? சுதாரிப்பு இல்லை என நீங்கள் நினைக்கலாம். நமக்கு இதுபோன்ற அழைப்பு வந்திருந்தால், நாமும் நம்பியிருப்போம் என்பதுதான் உண்மை.

காரணம், அழைத்த மோசடியாளர்கள் வசம் இவர்களது பெயர், பாலிசி எண், காப்பீடு திட்ட விபரம், கடைசியாக செலுத்திய பிரீமியம் தொகை, போனஸ் நிறைவு தேதி ஆகிய முக்கிய விபரங்கள் இருந்திருக்கின்றன. இதைச் சொல்லியே காப்பீடு நிறுவனத்தில் இருந்து நாங்கள் அழைக்கிறோம் என நம்ப வைத்திருக்கிறார்கள். மோசடியாளர்கள் கைகளுக்கு இந்த முக்கிய விபரங்கள் எப்படி போனது? காப்பீடு நிறுவனத்தில் பணிபுரியும் யாரேனும் இத்தகவல் கசிவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் காவல் துறை விசாரணை நடந்துவருகிறது. 

நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன:

  1. நாம் எல்லோர் குறித்த பெரும்பாலான முக்கிய தகவல்கள் பொதுவெளியில் கசிந்து கிடக்கின்றன; ஒரு சில பல முயற்சிகளில் அதை எடுத்து மிக அழகாகத் தொகுத்துவிட முடியும். ஆகவே, உங்க பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம், உங்களது பத்தாவது மதிப்பெண் எல்லாம் சரியாகச் சொன்னாலும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்.
  2. டெலிமார்க்கெடிங் அழைப்புகளைத் தவிர, எந்த வங்கிப் பணியாளரும் வாடிக்கையாளரை போனில் தொடர்புகொள்ள மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் பணம் அனுப்பச் சொல்லி கேட்கவே மாட்டார்கள். சிக்கலில் இருக்கிறேன் என்று பணம் கேட்டு நண்பரிடம் இருந்துவரும் உள்பெட்டி செய்தி அனைத்துமே மோசடிதான். பணம் வேண்டும் என்றால் நண்பர்கள் போனில் அழைப்பார்களே தவிர வெறும் செய்தி அனுப்ப மாட்டார்கள். ஒரே வரியில் சொன்னால் செல்பேசியில் வரும் எதையும் நம்பாதீர்கள். நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் பேசுவோம், அல்லது உங்கள் அலுவலகத்திற்கு நானே நேரில் வருகிறேன் எனச் சொல்லுங்கள், எதிர்முனையில் பதிலே இருக்காது.
  3. ஒருவரிடமிருந்து பணத்தை உடனடியாக மோசடி செய்ய வேண்டுமெனில் அவரை யோசிக்கவிடாமல் செய்ய வேண்டும், இதற்கு இரண்டு உத்திகள் போதுமானது. முதலாவது அவருக்கு பயம், பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு இன்றுடன் முடக்கப்படுகிறது, நீங்கள் வருமான வரி ஏமாற்றியதால் கைது நடவடிக்கை துவங்குகிறோம், உங்க நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார், உங்கள் புகைப்படம் வெளியில் வந்தால் மொத்த சமூகமும் சிரிக்கும், உங்கள் குழந்தையைக் கடத்திவிடுவோம் என இதெல்லாம் முதல் உத்தி. சீன லோன் செயலிகளின் கலெக்சன் பணியாளர்கள் இதைவிட மிரட்டுவார்கள், ஆனாலும் அசரக் கூடாது. கடந்து சென்றுவிட வேண்டும். வரம்பு மீறினால் நிச்சயம் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.
  4. இரண்டாவது உத்தி, ஆசையைத் தூண்டுவது. “வன்கொம் சார். உங்க போனஸ் இன்னிக்கி வர்து சார், உங்க பேலன்ஸ் டபுள் ஆயிடுச்சி சார், நீங்கோ லக்கி சார்” என உடைந்த தமிழில் அழைப்புகள் வந்தாலே உஷாராகிவிட வேண்டும். இந்த சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும், இத்தனை லட்சம் உங்களுக்கு சொந்தம் என வரும் அத்தனை அழைப்புகளும் மோசடிதான். நம்மை பணக்காரனாகவோ, அதிர்ஷ்டகாரனாகவோ ஆக்குவதற்காக எந்த நிறுவனமும் துவங்கப்படுவதில்லை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொண்டாலே போதும். உழைக்கும் நிலையில் உடல்நிலை இருந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் எதுவுமில்லை நண்பர்களே. 
  5. ஒருவேளை நீங்கள் மோசடியில் சிக்கிக்கொண்டீர்கள். முதல் முறை பணத்தை இழந்துவிட்டர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது, எத்தனை விளக்கம் கொடுத்தாலும் இழந்ததை மீட்கிறேன் என மீண்டும் மீண்டும் மோசடியாளர்களுக்கு பணம் அனுப்பிக்கொண்டே இருப்பதை நிறுத்துங்கள். இதுவே, நவீன மோசடிகளில் மாறாமல் இருக்கும் ஒரு உத்தி. ‘சிறிய தொகை, இதைத் தந்தால் போதும், முந்தைய தொகையும் சேர்த்து கிடைத்துவிடும்’ எனத் தொடர்ந்து பணம் கேட்டு பெருந்தொகையை மோசடி செய்வது. ஒருமுறை பணம் இழந்துவிட்டால், புகார் தந்துவிட்டு போனது போனதுதான் என காவல் துறை நடவடிக்கைக்காக காத்திருங்கள். அவர்கள் மீண்டும் அழைத்துப் பணம் கேட்டு மிரட்டுவார்கள், கெஞ்சுவார்கள், கோபமூட்டுவார்கள், அவர்களது எண்ணை பிளாக் செய்துவிட்டு கடந்துவிடுங்கள். முதல்முறை இழந்த மன வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், இரண்டாவது முறை, மூன்றாவது என அனுப்ப அனுப்ப மொத்த கையிருப்பும் கரைந்து வாழ்வு விரக்தியாகிவிடும்.
  6. தெரியாத விஷயங்களுக்கு பணம் அனுப்பும்போது, மிக நிச்சயமாக ஒரு நண்பரிடமாவது கேட்டு, அதுகுறித்த ஒரு தெளிவுபெற்ற பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். இக்கட்டுரைகளில் நாம் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகளை, தவிர்க்க வேண்டியவற்றை உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நமது வாழ்வில் கற்றலுக்கு என்றுமே முடிவு இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு நேரும் நிகழ்வுகள் எதையாவது கற்பித்துக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற மோசடிகள் நிகழ்ந்தவிதம் குறித்து தொடர்ந்து வாசிப்பதும், விவாதிப்பதும், பிறருக்கு தெரியப்படுத்துவதும் ஒருவிதக் கற்றலே. இதுவே நமது சமூகத்தை மோசடிகளுக்கு எதிராக விழிப்படையச் செய்யும். இணையம் குறித்த நம் அடிப்படை விழிப்புணர்வு மட்டுமே நவீன மோசடிகளை முறியடிக்கும் ஒரே ஆயுதம். அதை வாசிப்பால் கூர்தீட்டுங்கள் நண்பர்களே!

நன்றி!

(முற்றும்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


2

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். பின்னவர்களின் வலைகளில் சுலபமாக சிக்கிக்கொள்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையானது மனிதனின் பேராசைக்குத தூபம் போடுவது. கட்டுரையில் கண்ட மூவருமே அத்தகைய பேராசையால் பாதிக்கப்பட்பவர்களே.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ramesh Ramalingam   2 years ago

Your articles are always very simple to understand. Thanks for all your effort.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆயில் மசாஜ்பின்லாந்து கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணிசமஸ் செந்தில்வேல்கூடாதாமிகைல் கொர்பசெவ்குதிநாண் உறையழற்சிநிலக்கரி இறக்குமதிஅம்பேத்கர் - அருஞ்சொல்சொத்துரிமைசந்தைதஞ்சைஉதவிப் பேராசிரியர்ராஜன் குறைசிரைக்குழாய்கள்ஜிஎன்சிடிடி (திருத்த) மசோதாமகிழ் ஆதன்பழங்குடிஒபிசிஇனிப்புச் சுவைகொல்வது மழை அல்ல!நயத்தக்க நாகரிகம்புதிய அரசமைப்புச் சட்டம்அபர்ணா கார்த்திகேயன்அழகியல்எருதுகள்எடிட்டிங்ஓய்வுபெற்ற டிஜிபிகள்மக்களவைக் கூட்டத் தொடர்திட்டமிடுதல்நூறாண்டு மழை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!