டெல்லி பேருந்துகளில் ஓட்டுநர் பணியிடங்களில் பெண்களுக்கு உரிய இடம் அளிக்க அந்த மாநில அரசு குவித்திருக்கும் கவனம் நல்ல விஷயம். அதிக பெண் ஓட்டுநர்களைச் சேர்க்க டெல்லி அரசின் திட்டங்கள் பலனளித்தால் நாட்டின் ஏனைய மாநிலங்களிலும், இதுவரை ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவரும் துறைகளில் பெண்கள் இணைந்து நிற்க வழி பிறக்கும்.
டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) தலைவராகவும் இருக்கும் அந்த மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் இது தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் கூட்டியிருந்தார். “பொதுப் போக்குவரத்தில் பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இந்த விஷயத்தில் நிலவும் தடைகளைத் தகர்க்கவே இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கூட்டத்தை அரசு கூட்டியது. ஓட்டுநர் பணிக்கான தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உயரமே பலருக்குத் தடையாக இருப்பதை உணர்ந்தோம். இப்படி என்னென்ன விஷயங்கள் தடைகளாகச் சுட்டப்பட்டனவோ அவை அனைத்தையும் களையத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வி.சரிதா; 2015-ல் இவர் பணியில் சேர்ந்தார்; அவருக்குப் பின் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. ஓட்டுநர் பணிக்கான தகுதிகளில் உயரம் ஒரு தடையாகப் பல பெண்களுக்கும் இருப்பது நீண்ட காலமாகப் பேசப்பட்டுவரும் பிரச்சினை. பிற்பாடு, இந்த அளவு 162 செ.மீ. என்பதிலிருந்து 159 செ.மீ. என்பதாகக் குறைக்கப்பட்டாலும், நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பெரும்பான்மைப் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னொரு முக்கியமான பிரச்சினை, மூன்று ஆண்டுகளுக்குக் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் தகுதிகளில் ஒன்றாகக் கேட்கப்படுவதாகும்; இதை ஓராண்டாகக் குறைக்கும் முடிவை டெல்லி அரசு எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல, உயரத் தடையைக் களைய பேருந்துகளின் வடிவமைப்பில், தளத்தின் உயரத்திலும், ஓட்டுநர் இருக்கைகளின் உயரத்திலும் மாற்றம் கொண்டுவரவும் முடிவெடுத்திருப்பதாக கைலாஷ் கெலாட் தெரிவித்திருக்கிறார். மேலும், நகரத்தின் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களிலும் பெண்களின் பங்கேற்பை உத்வேகப்படுத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதன் ஒரு பகுதியாகப் புதிதாக அனுமதி வழங்கப்படும் 4,000 ஆட்டோக்களில் பெண்களுக்கு 35% ஒதுக்கீட்டை வழங்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த அணுகுமுறை முக்கியமானதாகத் தோன்றுகிறது. சமூகத்தில் வாய்ப்புகளை நோக்கி நகரும் எளியவர்களை மேலே தூக்கி உள்ளணைக்க இத்தகைய கூட்டுச் செயல்முறைச் சிந்தனைதான் நமக்குத் தேவையானதாக இருக்கிறது. உரிய பிரதிநிதித்துவத்தை உருவாக்க இடஒதுக்கீடு, பணிக்கான தகுதி வரையறைகளைக் கொஞ்சம் தளர்த்தும் சாத்தியமுள்ள இடங்களில் தளர்வு, அதையும் மீறிக் கை தூக்கிவிடத் தொழில்நுட்பம் போன்ற அமைப்பின் பலத்தைக் கருவியாகக் கைகொள்ளுதல். வெறும் அடையாளரீதியிலான செயல்பாடு எனும் புள்ளியிலிருந்து உண்மையான மாற்றத்தை முன்னெடுத்தல் எனும் புள்ளிக்கு மாற வேண்டும் என்றால், இடைவெளிகளை நிரப்ப இப்படியான அணுகுமுறையும் அதற்குப் பல தரப்புகளுடனான கலந்தாலோசனையும் அவசியம்.
தமிழ்நாட்டுச் சூழல் இந்த இடத்தில் நினைவுக்குவருவது தவிர்க்க முடியாததாகிறது. ஆசிய அளவில் முதல் பெண் ஓட்டுநர் நியமனம் நடந்த மாநிலம் இது. 1993-ல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக நியமிக்கப்பட்ட வசந்தகுமாரி, 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில் கணிசமான பெண் ஓட்டுநர்கள் இங்கே உருவாகியிருக்க வேண்டும். அது நடக்காமல் போக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்திடாததே காரணம். வசந்தகுமாரியேகூட கடைசி ஆண்டுகளில் நிறையக் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார். இன்றைய தமிழ்நாடு அரசானது, ‘பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணிக்கக் கட்டணம் கிடையாது’ என்று அறிவித்திருப்பது மெச்சத்தக்க ஒரு முன்னுதாரணம். ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் பெண்களும், பெண்களின் முன்னேற்றத்தில் பயணங்களும் எத்தகைய பங்காற்ற முடியும் என்பதை நன்றாகவே அரசு உணர்ந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, பேருந்துகளில் பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையை உத்வேகப்படுத்தும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும். ஒரு கனரக வாகனத்தைப் பெண் இயக்கும்போது, அது அவருக்கான வேலைவாய்ப்பாக மட்டும் அமைந்திடுவது இல்லை. அந்தக் காட்சியே பல வரலாற்றுத் தடைகளை உடைக்கும் வல்லமையைச் சமூகத்துக்கு வழங்கிடுவதாக அமையும்!







பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Anand Swami 4 years ago
மிக நல்ல கட்டுரை . ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். தற்போதைய தமிழக அரசு ஆவன செய்யும் என நம்புவோம்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ilango Ramasamy 4 years ago
ஒரு கனரக வாகனத்தைப் பெண் இயக்கும்போது, அது அவருக்கான வேலைவாய்ப்பாக மட்டும் அமைந்திடுவது இல்லை. அந்தக் காட்சியே பல வரலாற்றுத் தடைகளை உடைக்கும் வல்லமையைச் சமூகத்துக்கு வழங்கிடுவதாக அமையும்! - முத்தான முடிவு!!!
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.