கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

பெண் ஏன் அடிமையாகிறாள்?

வே. வசந்தி தேவி
08 Mar 2023, 5:00 am
3

ல ஆண்டுகளாக இரு பாலார் படிக்கும் கல்லூரிகளில் உரை நிகழ்த்த அழைக்கும்போது எல்லாம் நான் வழக்கமாகத் தொடங்குவது ஒரு கேள்வியுடன்தான். அரங்கத்தில் ஒருபக்கம் பெண்கள், மறுபக்கம் ஆண்கள். இரு பாலாரும் அருகில் அமர்வதோ, நெருங்கிப் பழகுவதோ அரிதுதான். பெண்களிடம், “உங்கள் வாழ்வின் முக்கியப் பிரச்சினை என்று எதை நினைக்கிறீர்கள்?“ என்று கேட்டால், “திருமணம், வரதட்சணை” எனும் பதில்தான் பெரும்பாலும் கிடைக்கும். ஆண்களிடம், அதே கேள்விக்கு “வேலை” என்றே பதில் வரும். ஆண்களிடம் நான், “பெண்கள் திருமணம் பெரிய பிரச்சினை என்று சொல்கிறார்களே, நீங்கள் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள மாட்டீர்களா?” என்றால், “நாங்கள் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளத் தயார், மேடம்; அவர்கள்தான் எங்களைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்” என்பார்கள்.

“ஏன்? அவர்கள் யாரைத் திருமணம் செய்துகொள்வார்கள்?” 

“நல்ல வேலையில, கவர்ன்மென்ட் வேலையில இருப்பவங்களை, இல்ல நெறய சொத்து இருக்கறவங்களைத்தான் செய்துக்குவாங்க.”  

நான் பெண்களிடம், “அவங்க உங்களைக் கல்யாணம் செய்துக்கறோம்னு சொல்றாங்களே! நீங்க செய்துக்க மாட்டீங்களா?” அநேகமாக பதில் இருக்காது. ஒருவர் இருவர், “எங்க வீட்டில விட மாட்டாங்க.”  பெண்களிடம், “ஏன் வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும்?” “அது எங்கள் சாதியில / குடும்பத்தில பாரம்பரிய பழக்கம்” “உங்க பாட்டி – தாத்தாவெல்லாம் வரதட்சிணை கொடுத்து / வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டார்களா? உங்களுக்குத் தெரியுமா?” மெளனம். ஒரு சிலர், “இல்லை, மேடம்; அவங்கல்லாம் அப்படி செய்துகொள்ளல்லை!” அப்ப, நீங்க ஏன் கொடுக்கணும்?” பதில் இல்லை. உங்கள் பாட்டி / தாத்தாவைவிட நீங்கள் முன்னேறி இருக்கிறீர்களா, இல்லை, பின்நோக்கிப் போயிருக்கிறீர்களா? பதில் இல்லை.    

முப்பது ஆண்டுகளுக்கு முன், சென்ற நூற்றாண்டின் எண்பதுகளின் இடைப்பகுதியில் தொடங்கிய என் ஆய்வினைக் குறித்து எழுத விரும்புகிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஓராண்டு முறையாக ஈடுபட்டு, பின் பல காரணங்களால் தொடர முடியாமல், கைவிட்டேன். அந்த ஆய்வில் புலப்படத் தொடங்கியிருந்த சில உண்மைகள், கண்ணில் தெறித்த சில ஒளிக் கதிர்களைப் பின்தொடர்ந்து சென்றபோது தென்பட்ட சில தொடர்புகள், இவற்றை உங்கள் முன்வைக்கிறேன். மறுக்க இயலாத உண்மைகள் என்று அவற்றுக்கு முத்திரையிட விரும்பவில்லை. இந்த முயற்சியின் நோக்கம் கேள்விகளை எழுப்புவது, விடைகளைத் தருவதல்ல. 

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளின், அவள் மேல் தொடுக்கப்படும் வன்முறைகளின் இறுதி வடிவம் பெண் இனத்தையே அழிக்கும் முயற்சி ஆகும். பெண் சிசுக் கொலை. இக்கொடூரத்தின் பல பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கு, அதன் மூலங்களின் தொடக்கத்தைத் தேடிப்போக வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஆய்வு முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும், அதற்கும் முன்னால், இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று அன்று நான் நினைத்தேன்.

அந்தத் தேடல் எனக்குக் கற்பித்த முதல் பாடம், இக்கொடுமை அப்பகுதி மக்களின் பாரம்பரியப் பழக்கமல்ல. சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான், பல தாக்கங்களின் காரணமாகத் தோன்றி, வெகு விரைவில், விஷம்போல் பரவியது.

தொடக்கம்

இது 1985இல் ‘பெண் குழந்தைகள் ஆண்டு’ என்று அறிவிக்கப்பட்டபோது உசிலம்பட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தத் தாலுகாவில் பெண் சிசுக் கொலை பரவலாக நடப்பதாகப் பத்திரிகைகள் எழுதத் தொடங்கின. ‘இந்தியா டுடே’ பத்திரிகையில், ‘இறப்பதற்காகப் பிறந்தவள்’ (Born to Die) என்ற அட்டைப் படக் கதையால் உந்தப்பட்டு என் கள ஆய்வைத் தொடங்கினேன். இங்கு உங்கள் முன்வைப்பது 1985-1990 காலக்கட்டத்திலான உசிலம்பட்டி. அதற்குத் திரும்பிச் செல்ல வேண்டுகிறேன்.

முதல் அனுபவங்கள்

அதாவது, 1980களின் இடைப்பகுதியில் பெண் சிசுக் கொலைகள் நடப்பதை மறைக்கும் முயற்சி மக்களிடம் கொஞ்சமும் இல்லை. அது ஒரு கிரிமினல் குற்றம் என்ற உணர்வோ, பார்வையோ இல்லை. 1990களில்தான் சிசுக் கொலைக் குற்றங்களுக்காகக் கைதுசெய்வதும், தண்டனை அளிப்பதும் தொடங்கியது. நான் எந்தக் கிராமத்திற்குச் சென்று விசாரித்தாலும், தங்கள் கிராமத்தில் பல சிசுக் கொலைகள் நடந்திருப்பதைத் தயக்கமின்றிச் சொன்னார்கள். “அந்த வீட்டில ரெண்டு கொழந்தைகளைக் கொன்னாங்க; இந்த வீட்டில ஒன்னு; கிராமத்தில மொத்தமா பத்து பன்னிரண்டு இருக்கும்.” 

“ஏன் பெற்ற குழந்தைகளைக் கொல்றாங்க?”

“என்ன செய்யறது? அத பாசமா வளத்து, 17, 18 வயசுல கலியாணம் பண்ண முடியாம, வரதட்சணை கொடுக்க முடியாம, அது அரளி விதையை அரச்சுக் குடிச்சு சாகறதப் பார்க்கறதுக்கு, இப்பவே முடிச்சடலாமுன்னுதான் செய்யறோம்.”

அனைத்துக் கிராமங்களிலும் கிடைத்த பதில் இது ஒன்றுதான்!

வரதட்சணையும், திருமணம் தொடர்பான செலவுகளும்தான் பெண் சிசுவைக் கொல்லக் காரணம். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம்  அவர்கள் வரதட்சணை வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டார்களா என்று கேட்டபோது, “அட! எங்க காலத்தில இதெல்லாம் எங்க இருந்துச்சு? பொம்பள கிடைச்சா போதுமுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!”

“இப்போ… இப்ப மட்டும் ஏன் அப்படியில்லை?”

“இப்பத்தான் எல்லாம் மாறிப்போச்சே!”

“என்ன மாறிப்போச்சு? ஏன் மாறிப்போச்சு?”

வயது முதிர்ந்த ஒரு பெண்: “அப்பெல்லாம் எங்க வீடுகள்ல என்ன இருந்திச்சு? ஒரு கயித்துக் கட்டில் கிடந்தா பெரிசு. இப்பத்தான் என்னென்னமோ வாங்கிப் போடுறாங்களே!”

“உங்க சாதியிலதான் வரதட்சணை வாங்கறப் பழக்கம் முன்னெல்லாம் இல்லையே! இப்ப ஏன் வாங்கணும்?”

“இப்பதானேம்மா எங்க ஊருக்கு நாகரீகம் வந்திருக்கு. நாங்களும் மத்தவங்கள மாதிரி இருக்கணும் இல்லே!”

“மத்தவங்கன்னா?”

“மேல் சாதிக்காரங்க, வசதியானவங்க...”

நாகரீகம் என்றால் மேல் சாதியினரை, சமுதாயத்தில் அந்தஸ்து உடையவரை ‘காப்பி’ அடிக்க வேண்டும்.

வரதட்சணைப் புதுப் பழக்கமாதலால், எந்தக் குடும்பங்களில், எப்பொழுது தொடங்கியது என்று கண்டுபிடிக்க இயலுமா?

கிடைத்த சில பதில்கள்:

“எங்க ஊர் பையன் ஒருத்தன் மதுரையில படிச்சான். அந்த ஊரிலயே பொண்ணு பாத்துக் கலியாணம் நடந்திச்சு. ஒருநாள் அந்தப் பையன் ஊருக்கு வந்தான். டப டபன்னு ஒரு புல்லட்டில வந்தான். ஊர் சனமே கூடி வேடிக்கை பாத்துச்சு. அன்னையில இருந்து எல்லாப் பையன்களும் / பையங்களைப் பெத்தவங்களும் எங்களுக்கும் அப்படிப்பட்ட கலியாணம்தான் வேணும்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.”

தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான சாதிகளில், தலித், மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட சாதிகளில் வரதட்சிணை என்பது பாரம்பரியப் பழக்கம் இல்லை. மாறாக, மாப்பிள்ளை வீட்டில் திருமணச் செலவுகள் ஏற்றுக்கொள்வதும், மணமகளுக்குப் பரிசம் கொடுப்பதும்தான் ஐம்பது ஆண்டுகள் முன்பு வரை வழக்காக இருந்தது.

வரதட்சணை கொடுக்க வேண்டியதில்லை என்றால், அதன் காரணமாகவே பெரும்பாலும் நடப்பதாகச் சொல்லப்படும் பெண் சிசுக் கொலைகளும் அன்று இல்லையா?

அதற்கான விடையை, பெண்ணின் சமூக நிலையைக் குறிக்கும் பாலின விகிதத்தில், 1,000 ஆண்களுக்கு இத்தனை பெண்கள் என்ற கணக்கில், அந்த எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களில் தேடலாம் என்று புறப்பட்டேன். பாலின விகிதம் என்பது பெண்ணின் சமூக அந்தஸ்தை சுருக்கமாக அறிவுறுத்தும் முக்கிய குறியீடாக சமூக - அறிவியல் வழக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பாலின விகிதம் குறைவாக இருப்பது பெண்ணின் தாழ்ந்த நிலைக்கு ஒரு முக்கிய அறிகுறி.

பாலின விகிதம்

உசிலம்பட்டியைப் பற்றிய சில புள்ளிவிவரங்கள் மிகுந்த வியப்பையும், அதிர்ச்சியையும் அளித்தன. குறிப்பாக 1951 முதலாக சென்சஸ் பதிவுசெய்திருந்த பாலின விகிதம் உசிலம்பட்டியின் பல கிராமங்களில் மாறிய போக்குகள் கவனத்தை ஈர்த்தன. உசிலம்பட்டியின் சில கிராமங்களில் பாலின விகிதம் 800க்கும் குறைவாக இருந்ததுடன், 1971லிருந்து 1981க்குள் மிகக் கடுமையாக சரிந்தும் இருந்தது.

அப்படியென்றால், அந்த கிராமங்களில் பெண்ணின் சமூக நிலையை மோசமாக தாழ்த்திய விபரீத மாற்றங்கள் ஏதோ நிகழ்கின்றன; அவை சமீப காலமாகத்தான் நிகழ்கின்றன. ஆகவே, அவற்றிற்கான காரணங்களை சமகாலப் போக்குகளில் தேட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

உசிலம்பட்டி தாலுகாவில் கிராமவாரி பாலின விகிதம் சில முக்கிய அம்சங்களையும், போக்குகளையும் சுட்டிக்காட்டுகிறது. 1981இல் உசிலம்பட்டி தாலுகாவில் பாலின விகிதம் 961; இது மதுரை மாவட்டத்தின் பாலின விகிதமான 989, தமிழ்நாட்டின் 987 ஆகியவற்றைவிடக் குறைவு.

கிராமங்களுக்கிடையே பாலின விகிதம் பெரிதும் வேறுபடுகிறது. சில கிராமங்களில் 900க்கும் கீழாக உள்ளது. சிலவற்றில் 1100க்கும் மேலாக உள்ளது. 

சில எடுத்துக்காட்டுகள்

(அந்தக் கிராமங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என்பதற்காக அவற்றின் பேர் குறிப்பிடாமல் தவிர்க்கிறேன்).

கிராமம்    1981 சென்சஸ் பாலின விகிதம்
           அ               773
           ஆ                    868
           இ                         862
           ஈ                          877
           உ                      895

அடுத்து, மற்ற சில கிராமங்களில் பாலின விகிதம் மிக அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக:

            ஊ                     1147
            எ                     1094
            ஏ                     1080
            ஐ                    1075

முதல் பிரிவு கிராமங்களில் பாலின விகிதம் மிகக் குறைவாக இருப்பதுடன், முந்தைய இருபது ஆண்டுகளில் மிகவும் சரிந்திருக்கிறது.

பாலின விகிதம்  சரிவு   

     

(பத்து 

ஆண்டுகளில்)

 

 (இருபது

ஆண்டுகளில்)

  கிராமம்         1961        1971      1981  1971 - 1981    1961 - 1981
     அ          966       1026        773         253         193
    ஆ          1016         912        868         44         158
     இ       996        907        862        45               134
     ஈ              983       926           877        49               106
     ஐ            994       980             895       85                99 

முதல் கிராமத்தில் பத்து ஆண்டுகளில் 253 எண்ணிக்கை பாலின விகிதம் குறைந்திருப்பது என்பதும், 1981இல் 773ஆக மிகக் குறைவாக இருப்பதும், மக்கள்தொகை கணக்கிலேயே (demography) ஓர் ஆவணமாக இருக்கலாம். இந்த ஒரு எண்ணிற்குப் பின் எத்தகைய கொடூரங்கள், விபரீதங்கள் மறைந்திருக்கின்றன என்பது சிந்தனைக்கும் எட்டாதது.

இவ்விரு பிரிவு கிராமங்களை ஒப்பிட்டால், அவற்றின் பொருளாதார அமைப்பு, இந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றங்கள், அங்கு நிலவும் மதிப்பீடுகள் ஆகியவற்றில் இரு பிரிவு கிராமங்களும் வேறுபடுவது தெரியவருகிறது.

முதல் பிரிவைச் சார்ந்த கிராமங்கள், குறைந்த பாலின விகிதம் கொண்டவை, பெரும்பாலும் நகரங்களுக்கு அருகாமையிலுள்ள, ஓரளவு நல்ல சாலை, போக்குவரத்து வசதிகளும் கொண்ட, பெருமளவு நிலங்கள் நீர்ப்பாசன வசதி கொண்ட, பொருளாதார அமைப்பிலும், சமூக மதிப்பீடுகளிலும் வேகமாக மாறிவரும் கிராமங்கள். இரண்டாம் பிரிவைச் சார்ந்தவை, உயர்ந்த பாலின விகிதம் கொண்டவை, பெரும்பாலும் நகரங்களிலிருந்து விலகி, தூரத்தில் உள்ள, சாலை போக்குவசதிகளற்ற, வறண்ட, வறுமை மிகுந்த, பழம் மதிப்பீடுகளும், ஓரளவு குலக் குழு சமூக மதிப்பீடுகளும் தொடரும் கிராமங்கள்.     

அப்படியென்றால், நவீனமயமாகிவரும் கிராமங்களில் பெண் சிசுக் கொலை நடக்கிறது என்றும், பழமையில் ஆழ்ந்திருக்கும் கிராமங்களில் நடப்பதில்லை என்றும் புரிந்துகொள்ளலாமா?

பழமையில் ஆழ்ந்திருக்கும் கிராமங்களில் சிசுக் கொலை நடப்பதில்லை என்றால், எது அந்தப் பழமை? அதில் பெண்ணின் நிலை ஓரளவு உயர்ந்திருந்தது என்று எண்ணுவதற்கு இடம் உண்டா?

கள்ளர் சமுதாய அமைப்பும் கலாச்சாரமும்

உசிலம்பட்டி தாலுகாவில் வாழும் மக்களில் 80% பிறமலைக் கள்ளர்கள். 1920கள் வரை கள்ளர்கள் பழங்குடியினராகக் கருதப்பட்டனர். சமீப காலம் வரை இவர்களின் சமுதாயக் கட்டமைப்பும், கலாச்சாரமும் தம் தனித்தன்மையை இழக்காமல் தொடந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை இந்தப் பரந்த உபகண்டத்தின் பூகோளப் பரப்பில் தனித்துவம் கொண்ட மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிடாமல், தங்கள் விசேஷ வாழ்முறைகளை, பண்பாட்டைக் கடைப்பிடித்து வாழ வழியிருந்தது.

கள்ளர் வாழ்க்கைமுறை கடந்த அரை நூற்றாண்டில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. ஒதுங்கியிருந்த கள்ளர் உலகம் நவீனமயமாகிவரும் இந்திய தேசிய நீரோட்டத்தில் கலக்கத் தொடங்கியதை ஒட்டி, இந்த மாற்றங்கள் புயலாய்ப் புகுந்து, சுழற்றியடித்தன.

பல சமுதாயங்களில் காலத்தின் நெடிது நீண்ட போக்கில் சாவதானமாக ஏற்பட்ட மாற்றங்கள் கள்ளர் உலகில் ஒரு தலைமுறையில் துரித கதியில் நடந்துவிட்டன. மெல்ல சாப்பிட்டு, நிதானமாக அசைப்போட்டு, தன்மயமாக்கிக்கொண்டு, அடுத்த வேளை உணவை எதிர்நோக்கும் ஆரோக்கிய ஜீவனம் கள்ளர் மக்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை. பெண் சிசுக் கொலை சில சமுதாயங்களில் சில காலக்கட்டங்களில் நடந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஒரு சமுதாயம் திடீர் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்த கட்டங்களில் - படையெடுப்புகள், பஞ்சங்கள் போன்றவை - தப்பிப் பிழைக்கக் கடைபிடித்த உபாயங்களில் பெண் சிசுக் கொலையும் ஒன்று என்று கருத இடமுண்டு.

பழம் கள்ளர் சமுதாயம் சரியத் தொடங்கியது. ஆனால், அந்தச் சரிவு அதன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக, ஒரே சமயத்தில், ஒரே விதத்தில் நிகழவில்லை. சாலைகளும், போக்கு வசதிகளும் கொண்ட, நகரங்களுக்கு அருகாமையில் இருந்த கிராமங்களிலும், வைகை அணை அளித்த வளம் படைத்த கிராமங்களிலும் மாற்றங்கள் ஓரளவு வேகமாக நிகழ்ந்தன. மற்ற கிராமங்களை அதே மாற்றங்கள் சென்றடைய சிறிது காலம் பிடித்தது.

பழங்கலாச்சாரம் 

கள்ளர் சமுதாயத்தின் பாரம்பரிய  நிறுவனங்களும், நெறிமுறைகளும், பழக்க வழக்கங்களும் இந்திய சமுதாயத்தின் மேல் சாதி, சம்ஸ்கிருதமயக் கலாச்சாரத்திலிருந்து - இந்நாட்டின் ஒரே கலாச்சாரம் என்று இன்று அடையாளம் காட்டப்படும் கலாச்சாரத்திலிருந்து - பெரிதும் வேறுபட்டவை. திருமணம் கலைக்க முடியாத புனித நிறுவனமல்ல. மணமுறிவுகள் சாதிப் பஞ்சாயத்துகளால் எளிதில் செய்யப்பட்டதும், ஆண்கள், பெண்கள் இரு பாலருமே பல முறை திருமணம் செய்துகொண்டதும் அத்தகைய வேறுபாடுகளில் சில.

பல முறை திருமணம் செய்துகொண்ட பல பெண்களை அன்று நான் சந்தித்தேன். நாற்பது வயதுக்குட்பட்ட விதவைகளைக் காண்பது அரிது. விதிவிலக்காக இருந்த ஒரு சில விதவைகளும் முற்பட்ட சாதிகளில் இருப்பது போன்ற கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும் ஒருபோதும் உட்படுத்தப்பட்டதில்லை.

பெண்ணுக்குப் பல உரிமைகளும், அந்தஸ்தும் இருந்தன. கள்ளர் சமுதாயம் தந்தைவழிச் சமூகமாக இருப்பினும், தாய்வழிச் சமூகத்தின் சில அம்சங்கள் அதில் கலந்திருந்ததாகக் கருதுவதற்கு இடம் உண்டு. பெண்ணுக்கு ஓரளவு சொத்துரிமை, குறிப்பாக வீட்டை சுவீகரிக்கும் உரிமை இருந்தது. பாரம்பரிய நீதிப் பரிபாலன நிறுவனங்கள், சாதிப் பஞ்சாயத்துகள் தொடர்ந்து வலிமை மிக்கவையாக, மக்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, நவீன நீதி நிறுவனங்களைத் தேவையற்றவையாக ஆக்கியிருந்தன.

கள்ளர் சமுதாயத்தின் சில குலங்களின் (clans) தோற்றம் தொடர்பான கதைகளும், பெண் தெய்வங்களுக்கு இருந்த முக்கியத்துவமும், வாய்வழி வரலாறுகளும் பாரம்பரியச் சமூகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருந்ததற்குச் சான்றுகளைப் பகிர்கின்றன. இரண்டு குலங்கள் அல்லது நாடுகள் பெண்களால் நிறுவப்பட்டதாக வழக்கு உண்டு. ஒன்று ‘கொதிபானை ஒச்சாயியால்’ நிறுவப்பட்ட பாப்பாபட்டி நாடு; மற்றொன்று பேச்சியம்மனால் தொடங்கப்பட்ட கருமாத்தூர்.

இருவரும் பின்னால் தெய்வங்களாக்கப்பட்டு, கள்ளர் கடவுளருள் முதன்மையானவராகத் திகழ்கின்றனர். பெண்களின் வீரம் பற்றிய பல கதைகள் உண்டு. பெண்கள் படைத் தலைமை ஏற்று படையெடுத்துவந்த எதிரிகளை எதிர்கொண்டதாகவும், ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரான எழுச்சிகளில் பங்கேற்றதாகவும், 1919ஆம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்த இறுதிப் போரான பெருங்காமநல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்த போரிலும் (பெருமையுடன் நினைவு கூறப்படும் போர்) பெண்கள் பங்கேற்றதாகவும் கதைகள் வழக்கில் உள்ளன.

இத்தகைய சமூகத்தில் பெண்ணின் நிலை வேகமாக சரிந்து, பெண்ணே வேண்டாம் என்ற மறுப்பு எப்படி நிகழ்ந்தது?

பொருளாதார மாற்றங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டதைப் போன்று, உசிலம்பட்டியிலும் விவசாயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1950களின் இறுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வைகை கால்வாய்கள் தாலுகாவின் சில பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்தையும், அதன் மூலம் ஓரளவு செழிப்பையும் கொணர்ந்தன. அதற்கு முன் உசிலம்பட்டி முழுவதும் அநேகமாக வறண்ட பூமிதான்.

இதில், 1960களுக்குப் பின் உசிலம்பட்டியின் கால்வாய்ப் பாசனம் கொண்ட கிராமங்களில், விவசாய சமுதாயத்துக்குள் ஏற்றத்தாழ்வுகள் உருவாகி இருக்கின்றன. முன்பு பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கர் அளவு சிறிய நிலத்துக்குத்தான் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். இப்பொழுது அந்தக் கிராமங்களில் மத்தியதர விவசாய வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ஏக்கரிலிருந்து, 100 ஏக்கர் வரை சொந்த நிலம் இருக்கிறது. அதேசமயத்தில் பல சிறு விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். சில கிராமங்களில் பெருமளவில் நிலம் வெகு வேகமாகக் கை மாறியுள்ளது.

நிலச் சொந்தக்காரராக இருந்த ஒரு வர்க்கம் நிலத்தை இழந்து, நிலமற்ற கூலி விவசாயி வர்க்கமாக மாறியது. சில கிராமங்களில் மொத்த நிலப் பட்டாக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. முன்பு தலித்துகள்தான் நிலமற்றவர்களாக இருந்தனர். இப்போது கள்ளர்களில் வறிந்தவர்கள் நிலமற்றவர்கள் ஆனார்கள். நீர்ப்பாசனம் உள்ள கிராமங்களில் 1961லிருந்து 1981 வரையிலான இருபதாண்டு காலத்தில் கிராம மக்கள்தொகையில் விவசாயக் கூலிகளின் சதவிகிதம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சியே இல்லாமல் போனது நிலமையை இன்னும் மோசமாக இருக்கிறது.

கள்ளர் சமுதாயத்தின் மேல்மட்டத்தினர் இடையே அந்தக் காலக்கட்டத்தில் பல வகைகளில் செல்வம் குவியத் தொடங்கியது. ஒரு புதுப் பணக்கார வர்க்கம் உருவாகி இருக்கிறது. இவர்களில் பலர் பல வகையான கான்ட்ராக்ட்டுகளை வளைத்துப் பிடித்துள்ளனர். பல வகைப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடுகிறார்கள். சினிமா தியேட்டர், பஸ் கம்பனிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், சாராய வியாபாரம் போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர். முன்பெல்லாம் கள்ளர்களுக்கு வியாபாரம் கைவராது என்ற ஒரு கருத்து நிலவியது. இன்று அது மாறிவிட்டது. புதுப் பணக்காரர் பலர் அருகாமையிலுள்ள நகரங்களுக்கு, குறிப்பாக மதுரைக்குக் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

எனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த மாதிரி கிராமங்கள் இரண்டில் மேல் சொன்ன போக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. இவ்விரு கிராமங்களில் பழம் கலாச்சாரம் பெருமளவு மறைந்துவருகிறது. பல இளைஞர்கள், குறிப்பாக ஆண்கள், அருகிலுள்ள உசிலம்பட்டி, கருமாத்தூர், மதுரை நகர் கல்லூரிகளில் படிக்கின்றனர். பல வீடுகளில் பசையுள்ள வாழ்க்கையின் இலக்கணங்களும், வெளிப்பாடுகளும் நன்கு தெரிகின்றன. இருச் சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிகள், சில வீடுகளில் கார்கள், ஊர் கோயிலுக்கு சமீபத்தில் செய்யப்பட்டிருக்கும் கும்பாபிஷேகம் - இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். வரதட்சணையின், கடுமையும், ரேட்டும், ஓரளவு ஆடம்பரத் திருமணங்களும் புதிய அம்சங்கள்.

பெண்ணின் சமூக நிலையில் மாற்றங்கள்

மேலே விவரித்த மாற்றங்கள் பெண்ணின் சமூக அந்தஸ்தை ஆழமாகப் பாதித்தன. மேலே குறிப்பிட்ட வண்ணம் ஒருபகுதி விவசாயிகள் நிலத்தை இழந்தபோது, ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இழந்தனர். பல கிராமங்களில் 1961லிருந்து 1981 வரை விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்ததில், பெண் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகக் குறைந்துள்ளது. அதன் விளைவாகப் பெண் விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகரித்தது.

கூலியில் ஆண் - பெண் வேறுபாடு அதிகமாக இருந்தது. ஆண்கள் பெறும் கூலியில் 1/3- பங்கிலிருந்து, 1/2 பங்கு வரைதான் பெண்களுக்குக் கிடைத்தது. விவசாயிகளில் பெரும்பாலோர் சொந்த நிலம் உடையவர்களாக இருந்தபோது, குடும்ப நிலத்தில் பெண் செய்த உழைப்பைத் தனியாகக் கணக்கிட முடியாது. அதனால், அவளுக்கு சமூகத்தில் ஓரளவு மதிப்பும், கெளரவமும், அந்தஸ்தும் இருந்தன. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் நிலம் இழந்து, விவசாயக் கூலிகளானபோது, பெண்ணுக்குக் கிடைக்கும் குறை கூலி அவளது தாழ்வை, இரண்டாம் தரத்தை முத்திரையிட்டு, முழக்கியது. அவளது நெற்றியில் சூடு போட்டு, மாற்ற முடியாத தலைவிதி என்று தம்பட்டமடித்தது. பெண் இழிந்தவள், அழிக்கப்பட வேண்டியவள் என்பதைச் சமூகம் ஏற்றுக்கொண்ட மதிப்பீடாக்கியது. 

விவசாயம் தவிர்த்த மற்ற துறைகளில் புதிதாக உருவான வாய்ப்புகள் பெண்ணுக்குக் கிட்டவில்லை. குறிப்பாக, கான்ட்ராக்ட்டுகள், நகர் சார்ந்த வியாபாரம், வர்த்தகச் சூதாட்டம் (speculative trade) போன்ற துறைகள் எல்லாம் பெண்களை ஓரங்கட்டும், புறக்கணிக்கும், பின்தள்ளூம் பொருளாதார மாற்றங்கள் ஆகின. கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று வர வேண்டிய தேவையும், புதிய தொழில்நுட்பங்களையும், திறமைகளையும் பெற வேண்டிய தேவையும் கொண்ட இந்தத் தொழில்களில் புது வாழ்வு தேடுவது பெண்ணுக்கு இயலாததாகியது.

கிராமப்புற வர்த்தக, புதுப் பணக்கார வர்க்கத்தின் மதிப்பீடுகள் பெண்ணின் சுதந்திரத்தை, சுயசார்பை முழுவதும் அழிப்பவை. இந்தப் புதுப் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வெளியில் சென்று உடல் உழைப்பில் ஈடுபடுவது கெளரவக் குறைவு என்று கருதப்பட்டது. இந்தப் பெண்கள் விவசாயம், மற்ற கிராமத் தொழில்கள், கூலி வேலை ஆகியவற்றில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. பெண் வீட்டுக்குள் சிறைப்படுத்தப்பட்டாள்.

மாறும் விழுமியங்கள்

மக்களின் மதிப்பீடுகள் பெரிதும் மாறிவருகின்றன. என் மாதிரி கிராமம் ஒன்றில் கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞர் கூட்டத்துடன் நடந்த உரையாடல்: அவர்களது சாதியின் மதிப்பீடுகளும், பழக்க வழக்கங்களும் இந்து முற்பட்ட சாதியினர் என்று கருதப்படுபவரிடம் இருந்து வேறுபட்டிருப்பதைப் பற்றிய பேச்சு. சாதிப் பஞ்சாயத்துகள் மூலம் எளிதாக விவாகரத்துகள் நடப்பதும், பெண்கள் பல முறை மறுமணம் செய்துகொள்வதும் குறிப்பிடப்பட்டவுடன், அந்த இளைஞர்கள் கோபத்துடன், முகம் சிவக்க, அப்படிப்பட்ட பழக்கங்கள் தங்கள் சாதியில் என்றுமே கிடையாது என்று வன்மையாக மறுத்தனர்.

தாங்களும் மற்ற முற்பட்ட சாதியினரைப் போன்ற கலாச்சாரம் உடையவர்கள்தாம். தங்கள் சாதியிலும் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள மாட்டார்கள். தங்கள் சாதியை இழிவுபடுத்துவதற்கான உள்நோக்கத்துடன் இவ்வாறு வேண்டுமென்றே ‘அவதூறு’ பேசப்படுகிறது என்றனர். இன்று பெண்களுக்கு இத்தகைய உரிமைகள் வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் அவற்றைத் தலைகுனிவாக, கெளரவக் குறைவாக இந்த இளைஞர்கள் கருதுகிறார்கள். இது சம்ஸ்கிருதமயமாதலின் அறிகுறியா? அல்லது உயர்கல்வி அளிக்கின்ற புதிய நெறிமுறைகளா? தங்களது வரலாற்றை, பாரம்பரியத்தை மறுக்கும், மறைக்கும் இத்தகைய முயற்சிகளின் மூலம் என்ன? 

இதே கிராமத்தில் மற்றொரு அனுபவம். மும்முரமாக விவசாய வேலை நடந்துகொண்டிருந்த நேரம். பெண்கள் நாற்று நட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் கரை ஏறிய நேரம் நான் போய்ச்சேர்ந்தேன். பேச்சு தொடங்கியது. ஒரு பெண் தன் மகள் 10ஆம் வகுப்பு படித்திருப்பதாகவும், மாப்பிள்ளை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், பட்டாளத்துப் பையன் ஒருவனுக்கு ரூ.50,000, 30 பவுன் நகையும் கேட்பதாகவும் சொல்லி, “நாங்க எங்கெம்மா போறது?” என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தாள்.

அவர்கள் மீண்டும் வயலில் இறங்கிய பிறகு, ஓர் இளம் பெண் ‘டீசன்’டாக உடை உடுத்தியவள் வந்தாள். அவள்தான் முன்னால் பேசிக்கொண்டிருந்தவளின் மகள் என்று தெரிந்தது. பேச்சுக் கொடுத்தேன். “ஏம்மா, உனக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நிறைய வரதட்சணை கேக்கறதா உங்க அம்மா சொல்றாங்களே. அப்படிக் கொடுத்து கலியாணம் பண்ணிக்கிறது உனக்கு இஷ்டம்தானா?” என்று கேட்டேன். பதில் சொல்லாமல் இருந்தவள், மீண்டும் கேட்ட பிறகு, ஆமாம் என்பதாகத் தலையாட்டினாள். அப்படிப் பெற்றோர்களை வருத்துவது சரிதானா என்று கேட்டதற்கு, “அப்படியில்லேனா நானும் இதுங்களை மாதிரி உழைக்க வேண்டியதுதான்.”

படீரென்று நெற்றிப் பொட்டில் உண்மை தெரித்தது. உழைப்பது கேவலம் என்று இந்த இளம் பெண்ணுக்கு எப்படித் தோன்றுகிறது? அவளது தாயே நிலத்தில் உழைக்கிறாள். அப்படியென்றால், இந்தத் தலைமுறையில் ஏற்பட்ட மதிப்பீடு மாற்றமா? கல்வி கற்றதனால் பெற்ற புதிய மதிப்பீடா? இதுவும் சம்ஸ்கிருதமயமாதலின் அறிகுறியா? 

ஆய்வின் மற்ற இரு கிராமங்கள் முற்றிலும் வேறுபட்டவை. ஒதுக்குப்புறமாக ஒரு கரடின் அடிவாரத்தில், வறண்டு கிடந்த பூமியின் மத்தியில், ஒரு கிராமம். சரியான ரோடு கிடையாது. கஷ்டப்பட்டு போய்ச்சேர்ந்தேன். ஒன்றிரண்டு தவிர அனைத்தும் கூரை வீடுகள். அப்போது காலை பத்து மணி. பல கிராமங்களில் விவசாய வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலம். இந்தக் கிராமத்திலோ, ஊர் மக்கள்  பெரும்போலோர், ஆண்களும், பெண்களும், தெருக்களில், வீடுகளில் மந்தமாக உட்கார்ந்தும், கிடந்தும் இருந்தக் கோலம். இந்த கிராமத்தில் பாலின விகிதம் மிக அதிகம். தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. விவசாயம் வாழ்வளிப்பதாக இல்லை. சாராயம் காய்ச்சுதல் கிராமத்தின் முக்கியத் தொழில். பல முறை திருமணம் செய்துகொண்ட சில பெண்கள்.

ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது. மணமுறிவு வேண்டு என்று பெண் கேட்கிறாள். வயதில் மூத்த பெண்; கணவன் சின்னப் பையன். கொஞ்சமும் பொருத்தமற்ற திருமணம். உறவுவிட்டுப் போய்விடக் கூடாது என்று செய்துவைக்கப்பட்ட திருமணம். பெண் சண்டை போட்ட விதம், தன் மூக்குத்தியின் திருகாணியைத் திருப்பித் தரவில்லை என்று ஆவேசமாக சண்டை போட்டாள். கணவன் ஒரு மூலையில் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். இந்த ஊரில் பெண் சிசுக் கொலை நடப்பதாகத் தெரியவில்லை.

மாதிரி கிராமங்களில் எடுத்த வீட்டுக் கணக்கெடுப்பில் (Household Survey) கிடைத்த விவரங்களைத் தொகுத்தால் வெளிப்படும் சில உண்மைகள்:

நிலமுடைய குடும்பங்களில் பாலின விகிதம் குறைவாகவும், நிலமற்ற குடும்பங்களில் அதிகமாகவும் இருக்கிறது. முதல் பிரிவு குடும்பங்களில் பெண் சிசுக் கொலை நடப்பதாகத் தெரியவருகிறது. அப்படியென்றால், நிலமுடைய குடும்பங்களில் பெண்ணின் மதிப்பு குறைவு என்று கொள்ளலாமா?

தலித் சமுதாயம்

தலித் குடும்பங்களில் கள்ளர் சமுதாயத்தைவிட பாலின விகிதம் அதிகமாக இருந்தது. தலித் மக்களிடையே அன்று பெண் சிசுக் கொலை நடப்பதில்லை என்று தெரியவந்தது. தலித் காலனிக்குச் சென்று விசாரித்தபோது சொல்லப்பட்டது, “எங்கள்ல அதெல்லாம் (பெண் சிசுக் கொலை) கிடையாது. ஆண், பொண் ரெண்டு பேரும் அன்னன்னைக்கு கூலி வேலைக்குப் போனாத்தான் சோறாக்க முடியும்.” இது 1985இல் நடந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதே காலனிக்குச் சென்றபோது, அங்கேயும் வரதட்சிணையும், பெண் சிசுக் கொலையும் தொடங்கி இருந்தன. அரசுசாரா அமைப்புகள் சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் தலித் மக்களிடையேயும் பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றன என்று கூறுகின்றனர். அவர்களிலும், ஆண், பெண் இரு பாலரும் மேல்நிலை பள்ளிகள் வரை இன்று கல்வி கற்கின்றனர். கல்வி அளிக்கும் புதிய விழுமியங்களா இவை?

நிலமுடைய குடும்பங்கள்தான் கூட்டுக் குடும்பங்களாக (joint families) இருக்கிறன. நிலமற்ற குடும்பங்கள் தனிக் குடும்பங்களாக (nuclear families) இருக்கின்றன. நிலமுடைய குடும்பங்களில் சொத்து பிரிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் கூட்டுக் குடும்ப அமைப்பு உருவாகிறது. இது இங்கு மட்டுமல்ல; பரவலாக நாடு முழுவதிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின் பெண் சந்திக்கும் பல துன்பங்களும், அவமானங்களும், வரதட்சணை சார்ந்த எதிர்பார்ப்புகளும் தனிக் குடும்பங்களில் குறைவு.

முன்பு திருமணங்கள் நெருங்கிய உறவில், முறைப் பெண்ணுடன்தான் நடந்தன. இப்போது அசலில் திருமணம். பணத்திற்காக வந்த பந்தம். முறைப் பெண்ணிடமிருந்து விடுதலை பெறப் பணம் கொடுக்க வேண்டும். முன்பு கணவன் வீட்டில் பெண்ணுக்குக் கொடுமைகள் கேள்விப்படாதவை. காரணம், மருமகள் தனது சகோதரனின் மகள், அல்லது வேறு நெருங்கிய உறவு. தான் தூக்கி வளர்த்த குழந்தை. தொட்டிலிலேயே உறுதிசெய்யப்பட்ட திருமணம். இப்போது வேறு வீட்டுப் பெண். பணத்துக்காகவே தோன்றிய உறவு. ஆகவே, கொடுமைகள் தொடங்குகின்றன. நெருங்கிய உறவில் திருமணங்கள் நடக்க வேண்டும் என்பது என் வாதமல்ல.

வைகை கால்வாய் நீர்ப்பாசனம் பெற்ற கிராமங்கள் செழிக்கத் தொடங்கின. இதில் மேலெழுந்த குடும்பங்கள் மற்ற கிராமங்களில் நிலம் வாங்கின. பலர் நகரங்களுக்குக் புலம்பெயர்ந்தனர். தங்கள் வீட்டுப் பெண்கள் நிலத்தில் உழைப்பதை நிறுத்தினர். படிதாண்டாப் பெண்களுக்கு உரிய இலக்கணங்கள் அவளுக்கு விதிக்கப்பட்டன. படிதாண்டும் வாழ்க்கை அளிக்கும் சுதந்திரங்களை அவள் இழந்தாள். அவளுக்கு சாதியிலேயே நல்ல வசதி படைத்த, குறிப்பாக அரசுப் பணியிலோ, வேறு நகர்ப்புற வேலையிலேயோ இருக்கும் மாப்பிள்ளையைத் தேடினர். வரதட்சணை கொடுத்து, மாப்பிள்ளை பிடித்தனர். பெண் சுமையாக ஆரம்பித்தாள்.

என் ஆய்வு முடியும் கட்டத்தில் பெண் சிசுக் கொலை கருக்கொலையாக மாறியது. உசிலம்பட்டியிலும், மதுரையிலும் ‘ஸ்கேன் சென்டர்கள்’ (scan centres) வீதிக்கு ஒன்று முளைத்த வண்ணம் இருந்தன. பெண் கருவிலேயே அழிக்கப்படுகிறாள். சிசுக் கொலையைவிட எளிதாக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆன்மாவைத் தொலைத்த மருத்துவர்களின் உதவியுடன் கருக்கொலை நடந்துவருகிறது.

முடிக்கும் முன்

வரலாற்றின் அனைத்து சமுதாயங்களும் பெண் அடிமைச் சமூகங்கள்தான். ஆனால், பெண் அடிமையின் வடிவங்கள், உக்கிரம், வெளிப்பாடுகள் ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் இருந்தன, இருக்கின்றன. இன்று இந்தியா முழுதும் ஒரே இந்து மதம், ஒரே கடவுள்கள், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே வகைப் பெண்ணடிமை என்று, மிகவும் வேறுபட்ட மக்கள் சமூகங்களை ஒரே அசுரப் போர்வையின் கீழ் அமுக்கி, பன்முகச் செழுமையை அழிக்கும் விபரீதப் போக்குகள் தலைதூக்கி இருக்கின்றன.

இந்தக் கட்டத்தில் பெரும்பாலான சாதியச் சமூகங்கள் தங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, அவற்றில் மனித மாண்புகள் இருந்தது என்றால், அவற்றைக் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக, பெண்கள் பெற்றிருந்த ஓரளவு உரிமைகளும், கண்ணியமும் மீட்டெடுக்கப்பட வேண்டும். நிலத்திலும், காட்டிலும், மேட்டிலும் உழைத்த பெண் படிதாண்டாப் பெண்ணிலிருந்து வேறுபட்டவள்.

கொடிய உழைப்புச் சுரண்டலுக்கும், சாதிய அடிமைத்தனத்துக்கும் அவள் இலக்காகி இருந்தாலும், அவளது உழைப்பு அவளுக்கு ஓரளவு சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் அளித்திருந்தது. அவையும் மறுக்கப்பட்ட நிலையில், இழப்பதற்கு ஒன்றுமில்லாதவளாக நிற்கின்றாள். பெண் சிசுக் கொலையும், கருக்கொலையும் இந்த கதியற்ற நிலையின் வெளிப்பாடுகள்.

மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தினம்

வே. வசந்தி தேவி

வே. வசந்தி தேவி, கல்வியாளர், சமூகச் செயல்பாட்டாளர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்.1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   9 months ago

மிக முக்கியமான கட்டுரை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   9 months ago

பேராசிரியரின் வாதம் முழுதும் உண்மை. No biased view & totally objective arguments. Best article to be published on March 8. Apart from differences all caste Hindus should read this. Perhaps ஆசிரியர் சமஸ் should promote this article more. Truly awesome 👏🏻

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   9 months ago

ஒரு கல்வியாளராக வசந்திதேவி அவர்களின் பணியை அவர் பல்கலைக்கழக வேந்தராக இருந்தபோதும் அதற்கு முன்பும் செய்தவற்றிலிருந்தும், சுந்தர ராமசாமியுடன் நடத்திய உரையாடலிலிருந்தும் அறிகிறோம். இத்தகைய கள அனுபவங்கள் புதிது, அவர் தொடர்ந்து எழுதவேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

இல்லம் தேடிஅரசர்களின் ஆட்சிசில இடதுசாரித் தோழர்களின் எதிர்வினையும்மு.கருணாநிதிஇளைஞர் அணிரிக்‌ஷாமக்களவைத் தொகுதிகள்உணவுப் பற்றாக்குறைசமஸ் - காந்திபுலம்பெயர்ந்தோர் விவகாரம்விஸ்வேஷ் சுந்தர் கட்டுரைஹண்டே - சமஸ் பேட்டிஅயனியாக்கம்இந்திய சுதந்திரம்மருத்துவக் கல்லூரிசைபர் குற்றவாளிகள்வாக்குறுதிகள்தமிழ்நாடு கல்வித் துறையில் முன்னெடுக்கப்பட வேண்டியமாதவ் காட்கில்ஞானவேல் சமஸ் பேட்டிஜி20 மாநாடுமம்தா பானர்ஜிஇயற்கை விவசாயம் தெளிவோம்வலியத் தொடங்கப்படுகிறது வாய்ச் சண்டை!3ஜி சேவைபிஹாரில் புதிய கட்சிகள்திஷா அலுவாலியா கட்டுரைஇந்து தேசியம்குறியீடுஉபநிடதங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!